Friday, February 03, 2006

இருள் கவ்விச் சென்ற வெளிச்சம்

ஒளி அவளாகிச் சிதறுகிறது

அவளை
எடுத்து எடுத்து
எல்லோரும் தம்மை
ஒளியூட்டிக் கொண்டார்கள்

ஒலி அவளாகிச் சிதறுகிறது

அவளை
எடுத்து எடுத்து
எல்லோரும் தம்மை
இசையாக்கிக் கொண்டார்கள்

காற்று அவளாகி வீசுகிறது

அவளை
இழுத்து இழுத்து
எல்லோரும் தம்மை
உயிரூட்டிக் கொண்டார்கள்

மழை அவளாகிப் பொழிகிறது

அவளில்
நனைந்து நனைந்து
எல்லோரும் தம்மை
முகம் பார்த்துக் கொண்டார்கள்

இறுதியாய் ஒர்
மழையற்ற நாளில்
காற்றற்ற வீதியில்
ஒலியற்ற திசையில்
அவளை வாயில் கவ்வியபடி
இருள் நடந்து போனதாய்
பார்த்தவர்கள் சொன்னார்கள்!

8 comments:

பாலு மணிமாறன் said...

கவிதை , நான் பயந்தபடியே புரிந்து கொள்ளப்பட்டிருப்பதில் மிக சந்தோஷங்க செல்வநாயகி...நன்றி!

J S Gnanasekar said...

நல்ல கவிதை.

-ஞானசேகர்

பாலு மணிமாறன் said...

Nandri Sekar

Unknown said...

மீண்டும் மீண்டும் படித்தேன்... வார்த்தைகளுக்கும் வலித்திருக்கும் அவள் வாழ்க்கையைக் கவிதையாய் சுமக்க... இது கவிஞரே உமக்கு வெற்றி...

பாலு மணிமாறன் said...

Nice Comment ... Nandri Dev

நவீன் ப்ரகாஷ் said...

ஒளியானவள்
இசையானவள்
காற்றானவள்
மழையானவள்

யாதுமானவள் !

நுட்பமாக பின்னிய ஆடை வரிகளால் அழகாகிறாள் !

பாலு மணிமாறன் said...

Nandr Naveen

Thangamani said...

நல்ல கவிதை ஒன்றை படித்த உணார்வு மேலிடுகிறது. நன்றி!