Sunday, January 29, 2006

பஸ் நிறுத்தத்தில் பார்த்த கடவுள்



ஒரு பஸ் நிறுத்தத்தில்தான்
கடவுளைப் பார்த்தேன்

அவர் அவரை
அறிமுகப்படுத்தவில்லை
என்னைத் தெரியாதென்றால்
அவர் கடவுளில்லை.

அவர் யாரென்று எனக்கும்
நான் யாரென்று அவருக்கும்
தெரிந்தே இருந்தது

அவரது அன்புப்புன்னகை
ஏதாவது வரம் கேள் என்றது

கேட்பதற்கு மட்டுமா கடவுள்
சும்மா ஏதாவது பேசலாமில்லையா
யோசித்தபடி நின்று விட்டேன்

ஒரு பஸ் வந்தது
இன்னொருமுறை புன்னகைத்து
கடவுள் அதிலேறிப் போய்விட்டார்

வருத்தமாயிருந்தது

நானாவது ஏதாவது கேட்டிருக்கலாம்
அல்லது அவராவது ஏதாவது
பேசியிருக்கலாம்
கடவுளில்லையா அவர்

ஏதேதோ சிந்தனைகளில்
எனது பஸ்ஸிற்குக் காத்திருந்தேன்
இன்னொரு கடவுள் வரலாம் அதில்

3 comments:

சிங். செயகுமார். said...

தினம் ஒரு கடவுள்
மனம் தினம் மாறும்
இவன் அந்த கடவுளை நோக்குறானோ?
நாம் இன்று புதிய தரிசனம் தானே!
இல்லை நம்மை இவன் நினையவில்லை
நினைத்திருந்தால்

நெடு நேரம் பார்த்த என்னை
நொடி பொழுதேனும்
சிறு நகை சிதறி இருப்பான்
பாவம் அவனுக்கு நான்
கொடுத்து வைக்கவில்லை
எனக்கும் அந்த கொடுப்பினை இல்லை
இன்னொரு நாள் இதே வேளை
இதே நிருத்தம்
நிச்சயம்.........

பாலு மணிமாறன் said...

நன்றி சிங்.ஜெயக்குமார் & சிவன்மலை ஐயா!

ஜெயக்குமார், கவிதைகளாக அமையும் உங்கள் விமர்சனங்கள் வியக்க வைக்கின்றன. ஒரு கவிதையைப்பற்றிய பார்வைகள் ஒருவரின் புரிதல் சார்ந்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படிப் பார்க்கையில் உங்கள் புரிதல் சரிதான் சிவன்மலை ஐயா !!

Unknown said...

வந்தாரா கடவுள் அடுத்தப் பஸ்சில்? வித்தியாசமான சிந்தனை.