
நாம்
ஒரு முறை சந்தித்தோம்
முற்றிலும் மூழ்கி விடுவோமோ...
அஞ்சும் அளவு அன்பின் சக்தி
ஆக்கிரமித்தது
உணர்வுகள்
கொப்பளித்து கொப்பளித்து
குளிர்ந்தது
பெருத்த மேகங்களுக்கு
பின்னிருந்து விரல் நீட்டின
நம்பிக்கை ரேகைகள்
சீக்கிரமே
காலத்தின் விரல்களால்
சிதைந்தோம்
திசைகள் மாறிப் பிரிந்தோம்
மேகங்கள் இருண்ட நாளில்
சந்தித்தல் சாத்தியமற்ற
சூழலில்
மீண்டும் ஒருமுறை
முன்னிறுத்தப்பட்டோம்
வாழ்க்கை
அதிசயங்கள் நிகழும் நாட்களும்
அடங்கியதாகவே
இருக்கிறது
தொட்டதும் சுருங்குவது
தொட்டாச்சிணுங்கி மட்டுமா
நீயும் நானும் கூடத்தான்
இதோ
இன்னொருமுறை
பிரிவதற்குத் தயாராக நாம்
இந்தப்பிரிவு
நிரந்தரமற்றதென
சொல்லிக் கொள்கிறோம்
நம் பாதைகள்
இன்னொருமுறை
சந்திக்கலாம்என்றும் கூட
உறுதியானதல்ல
என்றாலும் அது
நடக்கும் என்றே தோன்றுகிறது
காரணம்
கடந்த காலத்தின்
வெற்றிடத்தை
அது மட்டும்தானே
அடைத்துச் செல்ல முடியும்?
நன்றி : "திண்ணை"
எனது இந்தக் கவிதையை பதிப்பித்ததற்காக !