முதல்நாள் முஸ்தபா ஷாப்பிங் சென்டருக்கு அருகில் உள்ள நியூ பார்க் ஹோட்டலில் தங்க வைத்தோம். அறை ஜன்னல் கதவுகளைத் திறந்து அந்தி நேர சிங்கப்பூரைப் பார்த்துக் கொண்டிருந்த அமீரின் கண்களில் பட்டென்று பட்டது இந்தியத் தொழிலாளர்கள்தான். எங்கள் பேச்சு அந்தத் தொழிலாளர்களைச் சுற்றி வந்தது ; அவரகளது கனவைச் சுற்றி வந்தது ; இந்தியாவைச் சுற்றி வந்தது; இறுதியில் இந்திய இளைஞர்களில் வந்து நின்றது. 'இந்திய இளைஞர்களின் மீதும், அவர்களால் உருவாகப் போகும் எதிர்கால இந்தியா மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது' என்று சொன்னேன். அமீரின் கண்களில் ஆழ்ந்த சிந்தனையோட்டம் வெளிப்பட்டது. அந்த ஸ்டேட்மென்டை அவர் மனதளவில் அலசி ஆராய்வது புரிந்தது. 'எனக்கு நம்பிக்கை இல்லை சார்' என்றார் அமீர். அதை நான் எதிர்பார்க்கவில்லை. சற்று அதிர்ந்து விட்டேன். ஆனால், அந்த அவநம்பிக்கைக்கான காரணங்களை அவர் பட்டியலிட்டபோது, புரையோடிப்போன அரசியல் சூழல் பற்றிய கவலையே அதில் அதிகம் வெளிப்பட்டது. அதை, அசுத்தமாகி விட்ட, கூவம் போன்றதொரு அரசியல் கட்டமைப்பை மீறி இளைய தலைமுறை என்ன செய்ய முடியும் என்ற கவலையாகவே எடுத்துக் கொண்டேன். நான் நம்பிக்கை கொள்வதற்கான காரணங்களை எடுத்துச் சொன்னேன். கேட்டுக் கொண்டார். அது ஒரு நட்பார்ந்த, ஆரோக்கியமான கலந்துரையாடலாக இருந்தது. மாற்றுக் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் அமீரின் பண்பு, அவர் மீதான மரியாதையைக் கூட்டியது. தற்போது, இந்திய இளைஞர்களைப் பற்றிய அவரது மதிப்பீட்டில் பெரும் மாற்றங்களை காலம் ஏற்படுத்தியுள்ளதையும் பார்க்கிறேன்.
சிங்கப்பூரில் இருந்த அவரது நண்பர்கள், புலம் பெயர்ந்த பெரும்பாலான உலகத் தமிழர்களின் மத்திய தர வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நட்பை-பொருளாதாரம் சார்ந்து விரிவாக்கிக் கொள்ளும் சினிமாச் சூழலில் இருந்தாலும், பால்ய கால நண்பர்களின் ஆத்மார்த்தமான நட்பின் இதமே அவருக்குப் பிடித்திருந்ததைக் கண்டேன். பணத்தை மட்டுமே பெரிதாகக் கொள்ளாத தன்மை, இயற்கையில் ஏற்படுகிற, ரத்தத்தில் இருக்கிற பண்பு. அது கால ஓட்டத்தில் கூடலாம், குறையலாம் ; ஆனால், அழியாது. சினிமா சார்ந்த சில விஷயங்களை எந்தப் போர்வைகளுமற்றுப் பகிர்ந்து கொண்டார் அமீர். சிங்கப்பூரில் இருந்த நாட்களில் அவர் அழகு சூழ் சுற்றுலாத்தளங்களுக்குச் செல்லாதது ஆச்சரியம். தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் லாரியில் ஏறி பயணம் செய்தது அமீருக்கு மிக மகிழ்ச்சியளித்த விஷயமாக இருந்தது இன்னும் ஆச்சரியமளித்தது. சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களைப் பற்றி பேச்சு வந்தபோது, 'நான் கதைகளைப் படித்து விட்டேன். ஆனால், ஒருவரைப் பற்றி குறிப்பிட்டு விட்டு, இன்னொருவரைப் பற்றிச் சொல்லாவிட்டால், அவர்களது மனம் கஷ்டப்படும். என்ன செய்யலாம்?' என்று கேட்டார். 'நீங்கள் சொல்வதும் நியாயம்தான். வேண்டுமானால், பொதுவாக பெண் எழுத்தாளர்களைப் பற்றி பேசுங்கள்.' என்று பதில் சொன்னேன். அப்படித்தான் வெளியீட்டு விழாவில் பேசினார்.
'எழுதுங்கள்...பெண்கள் அதிக அளவில் எழுதுவதே பெருமைக்குரிய விஷயம். அதுவும் சிங்கப்பூரில் 20 பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார். 'நான் அதிகம் படிப்பதில்லை. ஆனால் மனிதர்களைப் படிக்கிறேன்' என்று குறிப்பிட்டார். உண்மைகள் நிறைந்த அந்தப் பேச்சை அப்படியே ஏற்றுக் கொண்டோம். ராம், பருத்திவீரன் போன்ற படங்களின் மூலம், 'அனைத்துலக அரங்கில் அமீர்' என்ற பெருமைக்குரிய விஷயத்தை குறிப்பிட்டு பாராட்டு வழங்கினோம். 'நான் பொதுவாக யாரோடும் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியதில்லை. ஆனால், இந்த 20 சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்' என்று அமீர் சொன்னது, அந்தப் பெண் எழுத்தாளர்களின் மனதில் இன்னும் பலநூறு கதைகளுக்கான கனவை, எழுதமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கக் கூடும். அமீர் சிங்கப்பூர் மண்ணில் விட்டுச் சென்றது நம்பிக்கையையும், நல்லுணர்வையும். விமான நிலையத்தில் அவரை வழியனுப்பியபோது, சர்வதேசத் தரம்மிக்க தமிழ்ப்படங்களைத் தந்தவர் என்பதையும் மீறி, நல்ல நண்பரைப் பிரிகிறோம் என்ற உணர்வே மேலோங்கி நின்றது. அமீர் இன்னும் பல சர்வதேசத் தரமிக்கப் படங்களைத் தருவார் என்ற நம்பிக்கையோடு, 'யோகி' எப்போது வரும் என்று உலகத் தமிழர்களைப் போல, நாங்களும் காத்திருக்கிறோம் சிங்கப்பூரில்!