
இளையராஜா. இந்தப் பெயர் புகுந்து வெளியேறாத தமிழ் உதடுகள் இருக்க முடியுமா? முடியும் என்று நீங்கள் சொன்னால், உங்கள் வயது பத்துக்குள்தான் இருக்க வேண்டுமென்று எளிதாகச் சொல்லி விடலாம். 70களில் தவழத் துவங்கிய இந்தத் தென்றல் துயர் வியர்வையை துடைக்கும் இசைச் சாமரமாக வீசிக் கொண்டிருக்கிறது இன்னும். இதுவரை எத்தனை ஆயிரம் பாடல்கள். பொங்கி வழிந்த எத்தனை இசைக்கோர்வைகள். ஒரு நொடி மெளனத்திற்குப் பின், திரையில் பல வயலின்களின் ஒலியோடு எத்தனைமுறை இசையாக வெடித்திருப்பார் இவர்; ஒரு சின்ன புல்லாங்குழலின் ஓசையில் எத்தனைமுறை நம் மனதை பிசைந்திருப்பார். இசையின் சர்வதேசக் கூறுகளை கரைத்துக் குடித்திருக்கும் விமர்சகப்புலிகள் இளையராஜாவை எப்படி வேண்டுமானாலும் உரசிப் பார்த்துக் கொள்ளட்டும். ஒரு தமிழக கிராமத்தில் ஜனித்து, உலக கிராமத்தின் பிரஜையாக பயணித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் தமிழர்களுக்கு அவர் தமிழ் அடையாளம்.
நம் மகிழ்ச்சியில், சோகத்தில், தனிமையில், காதலில் ஒரு ஓரமாக இளையராஜா எப்போதும் இருக்கவே செய்கிறார். சந்தனக்கடத்தல் வீரப்பன் நடமாடிய பில்லூர் அணைக்கட்டு காட்டுப்பகுதியில் "கேட்டேளா இங்கே" என்று சிறுவர்களாக குதித்திருந்ததும், "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" என சப்பாணியாக அலைந்திருந்ததும், "பூங்காற்று திரும்புமா" என்று உருகியிருந்ததும், "இஞ்சி இடுப்பழகி" என்று நெகிழ்ந்திருந்ததும், இளையராஜாவின் இசையால் சாத்தியமாகி இருக்கிறது. மேகமூடமான ஒரு சென்னை நாளில், நண்பர்களோடு கூட்டமாக மோட்டர் சைக்கிளில் மெளண்ட் ரோட்டில் பயணித்து தேவி காம்ப்ளக்ஸில் "தளபதி" பட முதல்காட்சியைப் பார்த்து "ராக்கம்மா கையத் தட்டில்" பலநூறு விசில்களுக்கிடையில் பிரமித்திருந்தது ஒரு வண்ணச்சித்திரமாக இன்னும் மாட்டிக்கிடக்கிறது மனச்சுவர்களில். இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு சித்திரத்தை மாட்டி விட்டிருக்கின்றன இளையராஜாவின் இசைக்கரங்கள்.
பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து என்ற ஜாம்பவான்களின் சேர்க்கை தமிழ்த் திரையுலக வரலாற்றில் அற்புத அத்தியாயம். ஒரு 40 கிலோமீட்டர் சுற்றளவில் ஜனித்த அவர்கள் எட்டிய மைல்கள்கள் எத்தனை..எத்தனை! மற்றவர்களைப் போல், நானும் யோசிப்பதுண்டு. அவர்கள் மட்டும் பிரியாமல் இருந்திருந்தால்? இப்படிப்பட்ட ifs and buts உலக சரித்திரத்தில் ஒரு கோடி உண்டு. அந்த ifs and buts - ல் இவர்களும் சிக்கிக் கொண்டது தமிழகக் கலையுலகிற்கு நேர்ந்த பேரிழப்பு.
பாரதிராஜா, வைரமுத்தை நான் ஒருமுறைக்கு மேல் நேரில் சந்தித்ததுண்டு; பேசியதும் உண்டு. ஆனால், இளையராஜாவை சந்தித்ததில்லை. சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் புதல்வி ஜனனியின் திருமணம் மலேசியாவில் நடந்தபோது அதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.சில அடி தூரத்தில்தான் கவிப்பேரரசு வைரமுத்து நின்று கொண்டிருந்தார். அவரையும் அழைத்து அருகில் நிறுத்திக்கொள்ள ஆசைப்பட்டது மனம். அது நடக்கிற காரியமா? இப்போது யோசிக்கும்போது, முயன்று பார்த்திருக்கலாமே என்று தோன்றுகிறது. ஒருவேளை வைரமுத்து ஒத்துக் கொண்டிருந்தால்... ஆனால், பாருங்கள் - இப்படிப்பட்ட ifs and buts இருப்பதுதானே வாழ்க்கையின் சுவாரஸ்யம்? இளையராஜா இன்னொரு சுற்று வருவாரா, வைரமுத்துடன் இணைவாரா என்பதும்கூட இனிமையான Ifs and buts-தான்!