Tuesday, March 15, 2005

சொட்டு சொட்டாய் காதல்!

காதல்...எந்த வயதில் முதல் முதலாய் முளைக்கிறது ?

உலக ஜனத்தொகையில் பாதிப் பேர் அது பதின்ம வயதில்தான் முளைக்கிறது என்று சொல்லக்கூடும். உண்மையும் அதுதானா?

செவ்வக சட்டத்தின் உள்விளிம்புகளைத் தொடமுயலும் சுவர்கடிகார முள்ளாய், சில நாட்களாக இந்தக் கேள்வி மனசில் ஊசலாடுகிறது....

காதல் என்றால் - கனிய வேண்டும்: கசிய வேண்டும்: இறக்க வேண்டும்: பிறக்க வேண்டும்: பசியும், பசியின்மையும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டும்: இதயத்தில் வடியும் வேதனை ரத்ததிலும் சுகம் உணர வேண்டும்: இப்படிப்பட்டவர்களைத் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கைச் சாலையின் ஓரத்திலும் தினம் தினம் சந்தித்தே வருகிறோம்.

காதலைப் பொறுத்தவரை உலகில் ரெண்டே ரெண்டு ஜாதிதான் இருப்பதாகப்படுகிறது. வாழ்க்கையைத் தேடித்தேடி காதலைத் தொலைத்தவர்கள் ஒரு ஜாதி: காதலைத் தேடித்தேடி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் இன்னொரு ஜாதி.

சரி... காதலையும் வாழ்க்கையையும் சேர்த்தே ஜெயித்தவர்கள்? அப்படிப்பட்டவர்கள் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்களாகத்தானே இருக்க முடியும்? :)))

பொள்ளாச்சியில் படித்த காலத்தில், வாடகைக்கு அறையெடுத்து தங்கியிருந்தேன். வீட்டு உரிமையாளரான அந்தச் சகோதரி, பல வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்த ஒரு சந்திப்பில் கேட்டார்...

" ஏன் தம்பி... நீங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதலிக்கவில்லையா "

" இல்லை அக்கா "

" ஏன் தம்பி "

" கல்லூரிக்காதல் மேல் எனக்கு நம்பிக்கையில்லை அக்கா "

" ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்...உங்கள் நண்பர்கள் யாரும் காதலிக்கவில்லையா? "

" ஆமாம். காதலித்தார்கள்... "

" கல்யாணம் செய்து கொண்டார்களா? "

" செய்து கொண்டார்கள்... "

" அப்புறம் ஏன் கல்லூரிக்காதல் மேல் நம்பிக்கை இல்லை என்று சொல்கிறீர்கள்? "

" காதலித்தார்கள் : கல்யாணம் செய்து கொண்டார்கள் : ஆனால் அவன் கல்யாணம் செய்து கொண்டது வேறொருத்தியை ... அவள் கல்யாணம் செய்து கொண்டது வேறொருவனை ! எப்படி கல்லூரிக் காதல் மேல் நம்பிக்கைவரும் சொல்லுங்கள் ? "

அந்தச் சகோதரி ஏதோ பெரிய ஜோக்கைக் கேட்டது மாதிரி வெகுநேரம் சிரித்தார். அப்புறம் கேள்வியின்றி மொளமாகிப் போனார்.

காதல்...எந்த வயதில் முதல் முதலாய் முளைக்கிறது ?

மலை விழுந்த ஒரு மாலையில், காப்பிக்கடையில், சூடான தேனீரைப் பருகியபடி என் நண்பரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

சிரித்தார்.

" ·பிராய்டு படித்திருக்கிறீர்களா? "

" இல்லை..."

" ம்.... என் முதல் காதல் பத்து வயதில் முளைத்தது என்று நினைக்கிறேன்..."

" அடப்பாவி! "

" பதறாதீர்கள் நண்பரே... அது - அதற்கு முன்னாலும் முளைத்திருக்கலாம்! "

" பத்து வயதில் காதல் என்பதெல்லம் சாத்தியமா? "

" இன்னும் அவள் பெயர்கூட ஞாபகம் இருக்கிறது...'பக்கத்து வீட்டு சாந்தி. உன் அப்பன் பேரு காந்தி' என்று அவளது பாடப்புத்தகத்தில் எழுதியதும் கூட. ஒரு கோயில் திருவிழாவில் விளக்கோடு நடந்த அவள் பின்னால் நான்குமணி நேரம் தொடர்ந்து நடந்தபோது, என் மனதில் சிலிர்த்து, சிலிர்த்து விழுந்த உணர்வுக்குப் பெயர் காதலாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்."

" அது வெறும் கவர்ச்சியாகத்தான் இருக்க முடியும்... "

" இந்த வயதுவரை என் வாழ்க்கைக்குள் சில பெண்கள் வந்து போயிருக்கிறார்கள். அவர்களால் இப்படி நீங்காமல் நிறைந்திருக்கும் சிலிர்ப்புகளை நிரந்தரமாக விட்டுச்செல்ல முடிந்ததே இல்லை "

அந்த விளக்கத்திற்குப் பிறகு நான் மொளனமானேன்.

அது அவரது வாழ்க்கை. அவரது காதல் !

ஒரு நீள இரவில் ஆழ யோசித்துப் பாருங்கள்.... காதல் உங்களுக்குள் முளைத்தது எப்போது என்ற உண்மை உங்களுக்குள் புரியலாம்....

எப்போது வருகிறதென்பது முக்கியமில்லை. ஆனால், எப்படியாவது, எங்காவது அது வர வேண்டும்.

இதுவரை உங்களுக்குள் அது முளைத்திருந்தால்... யாராவது ஒருவர் உங்களை காதலித்திருந்தால்... நீங்கள் ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்!

" அட போங்க சார்... காதலைப்பற்றி தெரியும் முன்பே எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது " என்று அலுத்துக் கொள்ளும் கணவர்களே... மனைவிகளே....
நோயின் தாக்கத்தில் எழ முடியாதபடி படுத்தபடுக்கையாக கட்டிலில் கிடந்த ஒருநாளில், நமது வாழ்க்கைத்துணை சுடிநீர் ஒற்றிய துணியில் முகம் துடைத்து மார்துடைத்து கண்ணோடு கண்பார்த்து, கடைசியில் நெற்றியில் கனிவோடு முத்தமிடும்போது... நம் விழியோரம் கசிந்து காதோரம் வழியுமே கண்ணீர்....
அது கண்ணீரா? இல்லை. சொட்டு சொட்டாய் காதல்!


5 comments:

Vijayakumar said...

//காதல்...எந்த வயதில் முதல் முதலாய் முளைக்கிறது ?//

எந்த வயதிலும் முதன் முதலாய் முளைக்கலாம்.

//" பத்து வயதில் காதல் என்பதெல்லம் சாத்தியமா? "//
அறியா பருவத்தில் என்னவென்று தெரியாமல் வருவதும் காதல். சிறுசில் என்னவென்று தெரியாமல் வருவதால் அது இனக்கவர்ச்சி. அதுவே அறிவு வளர்ந்து தெரியும் போது காதல். பத்து வயது காதலுக்கு(இனகவர்ச்சி) பக்கத்து வீட்டு பரிமளாவோ, கூடப்படிக்கும் கோமாளவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. பாடம் சொல்லிக் கொடுக்கும் பாமா டீச்சர் இல்ல பக்கத்து வீட்டு பங்கஜம் மாமியாகக் கூட இருக்கலாம்.

//" ·பிராய்டு படித்திருக்கிறீர்களா? "//
முழுவதும் படித்ததில்லை. சொல்லி கேட்டிருக்கிறேன். பிறந்த உடனே காமமும் ஒட்டிக் கொண்டு பிறக்கிறது என்று சொல்லியிருக்கிறாராமே. ஆண் பிள்ளை அம்மாவிடம் பாசமாக இருப்பதும் பெண் பிள்ளை அப்பாவிடம் பாசமாக இருப்பதும் பாசத்தை தாண்டி இனக்கவர்ச்சியாக காமம் தான் என அடித்துச் சொல்கிறாராமே சிக்மண்ட் பிராய்ட் சொல்லியிருகிறாராமே.

//ஒரு நீள இரவில் ஆழ யோசித்துப் பாருங்கள்....//

//காதல் உங்களுக்குள் முளைத்தது எப்போது என்ற உண்மை உங்களுக்குள் புரியலாம்....//

கர்ப்பத்திற்குள் இருக்கும் போதே. உலகத்தின் மீது காதல் கொண்டததால் தான் உயிர் தாங்கி மண் மீது விழுந்தேன்.

//இதுவரை உங்களுக்குள் அது முளைத்திருந்தால்... யாராவது ஒருவர் உங்களை காதலித்திருந்தால்... நீங்கள் ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்!//

யாவையும் காதலி. நீ ஆசிர்வதிக்கப்பட்டவன். நீ காதலி. நீயே உனக்கு ஆசிர்வதிக்கப்பட்டவன்.

//நோயின் தாக்கத்தில் எழ முடியாதபடி படுத்தபடுக்கையாக கட்டிலில் கிடந்த ஒருநாளில், நமது வாழ்க்கைத்துணை சுடிநீர் ஒற்றிய துணியில் முகம் துடைத்து மார்துடைத்து கண்ணோடு கண்பார்த்து, கடைசியில் நெற்றியில் கனிவோடு முத்தமிடும்போது... நம் விழியோரம் கசிந்து காதோரம் வழியுமே கண்ணீர்....//

காதலை அறியாமல் இருந்ததிற்கான வருத்தக் கண்ணீர். காதலை அறிந்ததிற்கான ஆனந்த கண்ணீர்.

பாலு மணிமாறன் said...

Hmmm... it looks your comments itself make a " katturai" vijay !

Anonymous said...

Kadiasi 4 varigal:Karuthil enakku Muzhu udabadu kidayadhu..eruppinum adhu kavidhai sir!! Varthayil Jaalam vaikkamal Aazham vaithadhu..kanndasanai manasu munnai kondu varudhu...J.Vijay(Venkat)

பாலு மணிமாறன் said...

Nandri Vijay... For your sweet comments !

சினேகிதி said...

Nallathan soduthu kaathal :-)