ஞாபத்தில் ஒட்டுவதில்
வெயிலை வென்று விடுகிறது
மழை.
எத்தனையோ
மழை ஞாபகங்கள்...
வெயில் ஞாபகங்கள்
வெகு சிலவே.
இன்று மழை நாள்.
நீர் விரல்கள்
ஞாபகம் கிளறியது.
புத்தகப்பை தோள்வலிக்க
நீர் தொட்டுப் பார்த்திருந்த
பள்ளிகால மழை...
குடைகீழ் நான் நடக்க
ஓரளவு நனைந்தபடி
வார்த்தைகளோடு
உடன் நடந்த தந்தை...
எதிரெதிர் நிறுத்தங்களில்
நானும் அவளும்.
மழையிடம் மட்டும்
காதலைச் சொல்லியபடி
நான்...
அடந்த ரத்தம் மெலிந்து பரவ
தெருவோர மழையில்
பிணமாய்ப் போன
யார் பெற்ற மகனோ...
ஞாபத்தில் ஒட்டுவதில்
வெயிலை வென்று விடுகிறது
மழை.
குடை மறந்த என்னை
ஜன்னல் -
மழை பார் என்றது.
நனைவதென முடிவு.
அப்புறம் எதற்குக் குடை?
இந்த மழையில்
நடைபாதைப் புற்களே
முளைக்காத போது
முளைக்கவா முடியும் நான்?
நனைவதே நல்லது...
முளைக்கலாம்
சில நினைவுகள்!
4 comments:
Nice.. it was an enjoyable read
நனைவு நினைவுகள்
ஈரமாக பல
நினைவுகளைப்
பொழிந்திருக்கிறது
பாலு !
meena said...
//குடைகீழ் நான் நடக்க
ஓரளவு நனைந்தபடி
வார்த்தைகளோடு
உடன் நடந்த தந்தை//
காட்சி கண்முன்னே!
உங்களின் ஒவ்வொரு கவிதையும்..!!
Nandri Naveeen, Dev & Meena
Post a Comment