Monday, April 24, 2006

"ராசுவைக் கொன்ன பய"

அது 70களின் இறுதி வருடங்கள்.

நாகரிகத்தின் சுவடுகள் கொஞ்சமும் படாத தென்கிழக்குச் சீமையின் ஒரு கிராமத்தில் சிறுவனாக இருந்தான் சிவகுரு. குறும்புக்காரன். மதுரக்காரனுங்களுக்கே உரிய திமிர், தெனாவட்டு, நக்கல் எல்லாம் அவனிடம் எக்கச்சக்கமாக இருந்தது.

அவனது குசும்பை யாராலும் சகித்துக் கொள்ள முடியாத காலத்திலும் சகித்து, அணைத்துக் கொண்டவள் அவனது அப்பத்தா மட்டும்தான். பொறுப்பற்ற கணவனை பொறுத்துக் கொண்ட அவனது தாயால், பொறுப்பற்ற மகனை பொறுத்துக்கொள்ள முடியாமல் போக " நாசமாப்போற போக்கத்த சிறுக்கி மக்களோட சேர்ந்து" சிவகுரு நாசமாவதற்கு முன்னால் ராயப்பன்பட்டியில் கிருத்துவ சாமியாருங்க நடத்தும் ஹாஸ்டலில் போய் சேர்த்து விட்டார்.

அங்குதான் நான் அவனை சந்தித்தேன்.

பாட்டு அவ்வளவு அழகாப் பாடுவான்.அதில் ஒரு சுயம் இருக்கும். அவன் முன்னால் எல்லாத் திறமைகளும் மண்டி போட்டு நிற்பதை எல்லோராலும் உணர முடிந்தது. படிக்கவே மாட்டான், பரிட்சைக்கு ரெண்டு நாள் முன்னாடி உட்கார்ந்து படிச்சு பாஸாகிடுவான். பந்தயம் கட்டினால், ஒரு முழுப்பக்கத்தையும் அரைப்புள்ளி, கால் புள்ளி கூட மாறாமல் மனப்பாடம் செஞ்சு அப்படியே எழுதிக் காட்டுவான்.

அதையெல்லாம் மீறி அவனிடம் ஒரு வித raw குறும்புத்தனம் சுடர் விட்டது. அது எப்படிப்பட்டது என்பதற்கு சில உதாரணங்கள் சொல்கிறேன்...

1.மாலைகளில் பள்ளி முடிந்ததும் 6 மணிவரை எல்லோரும் ஹாஸ்டலை ஒட்டியுள்ள மைதானத்தில் விளையாட வேண்டுமென்பது விதி. பெரும்பாலும் ·புட்பால்தான் தூள் கிளப்பும். ஓரமாய் வாலிபால், பேட்மிட்டன் என விளையாடுவார்கள். சும்மா வேடிக்கை பார்ப்பவர்களும் உண்டு. சிவகுரு ஒரு குட்டி சைக்கிளை வாடகைக்கு எடுத்து வருவான். வேகமாய் ஓட்டுவான். முதுகு காட்டியபடி விளையாடிக் கொண்டிருப்பவன் யாராவது ஒருவனது பின்னால் போனதும், சட்டென்று காலை ஊன்றி எழுந்து கொள்வான். சைக்கிள் அதன் போக்கில் போய்க் கொண்டிருக்க, முதுகு காட்டியிருப்பவனின் தோளைத் தட்டி, " அதோ பார்... சைக்கிள் தானாப் போகுது " என்று சுட்டுவான். முதுகுகாட்டி குழப்பமும், திகிலுமாக சைக்கிளைப் பார்க்க, சுற்றியிருக்கும் கூட்டம் ஓவென சிரிக்கும்.

2. ஞாயிற்றுக்கிழமைகளில் ஹாஸ்டலில் மொத்த கூட்டமும் பக்கத்திலிருக்கும் ஆற்றில் குளிக்கப்போகும். அங்கும் சிவகுருவின் கைவரிசை இருக்கும். யாராவது ஏமாந்த ஆளாய் பார்த்து " தண்ணிக்குள்ள மூக்கைப்பிடிச்சு முங்கி, 100 வரைக்கும் எண்ணிட்டு வெளிய வந்து, "ஆமாம்"னு சொல்லனும்.. உன்னால முடியுமா" என்பான். "ப்பூ...இதென்ன பிரமாதம்" என்று சம்பந்தப்பட்ட ஆசாமி தண்ணீரில் மூழ்கியதும், சிவகுரு 95 வரை எண்ணிவிட்டு, correct timingகோடு " நாந்தானே உன் அக்கா புருஷன்?" என்று கேட்பான். அதற்கு நீரிலிருந்து பந்து மாதிரி வெளிவரும் அந்த அப்பாவி "ஆமாம்" என்று சொல்ல, வேடிக்கை பார்ப்பவர்களின் சிரிப்பொலி பட்டாசு மாதிரி வெடிக்கும்.

3. ஒரு முறை வார்டன் அளவுக்கு மீறி அடித்ததால் கோபப்பட்ட சிவகுரு , வார்டனது அறைக்கதவில் ஒட்டியிருக்கும் "இயேசு ஒரே வழி" என்று ஸ்டிக்கரின் மேல் "இயேசுவுக்கு ஒரே வயிற்று வலி" என்று எழுதி ஒட்டிவிட்டான். ஹாஸ்டலே அல்லோகோலப்பட்டது. கடைசியில் சிவகுரு அடையாளம் காணப்பட்டு, மிகப்பெரிய அளவில் அடி வாங்கினான். அத்தனை அடிக்கும், அலறாமல், கதறாமல் இருந்தான். கடைசியில், கண்ணோரம் ஒரு சொட்டு கண்ணீரை மட்டுமே காண முடிந்தது.

சில மாலைகளில் விளையாட்டு மைதானத்தை ஒட்டியிருக்கும் உயரமான சுவரில் அமர்ந்து கொண்டு, விளையாடுபவர்களை வேடிக்கை பார்த்தபடி, நானும் சிவகுருவும் பேசிக் கொண்டிருப்போம். அப்படி ஒரு மாலையில்தான் அவன் ராசுவைக் கொன்ன கதையை என்னிடம் சொன்னான்...

அந்தக்கதை சிவகுரு second show சினிமாவிற்கு போனதிலிருந்து துவங்கியது.

1970களில் எல்லாம் மதுரை மாவட்டத்தின் கடைக்கோடி ஊரான கூடலூருக்கு கம்பத்திலிருந்து 9 மணிக்கு மேல் பஸ் கிடையாது. 9 மணிக்கு மேல் கம்பத்தில் வந்து இறங்குபவர்கள் ஏறக்குறைய கம்பம்-கூடலூருக்கு இடைப்பட்ட தூரமான 5 கிலோமீட்டரை சைக்கிளிலோ, லாரிகளில் இடம்பிடித்தோ அல்லது நடந்தோதான் போய்ச்சேர வேண்டும்.

புது சினிமாப்படங்கள் எல்லாம் கம்பத்திலிருக்கிற தியேட்டர்களில்தான் ரிலீசாகும். அப்படி ரிலீசாகிற படங்களை கூட்டமாகப்போய் second show பார்த்துவிட்டு கிண்டலும் கேலியுமாக பேசியபடி ஊர் வந்து சேர்வது கூடலூர் இளவட்டங்களின் வழக்கம். தப்பிதவறிக்கூட யாரும் தனியாகப் போவது கிடையாது. காரணம் - இரண்டு ஊர்களுக்கும் மத்தியில் இருக்கிற "முண்டஞ் செத்த ஆலமரம்".

முன்பகை காரணமாக ஓர் ஆசாமி ஓட ஓட விரட்டுப்பட்டு, வீச்சருவாளால் தலை வெட்டப்பட்டு, அப்போதும் ஓடுவது நிற்காமல், தலையற்ற முண்டமாக கொஞ்சதூரம் ஓடி, கடைசியில் அந்த ஆலமரத்தடியில் உயிர்விட்டு, அதே மரத்தில் பேயாக உலாவுகிறான் என்பதுதான் அந்த " முண்டஞ் செத்த ஆலமரத்தின்" தல புராணம். அவன் ஒரு கோபம் தணியாத உக்கிரமான பேய் என்று ஊர் மக்கள் நம்பினார்கள்.

அதெல்லாம் சரி, ஆனால் இந்தக் கதையை யாருமே சிவகுருவிடம் சொல்ல மறந்து போனார்கள்.

இதையெல்லாம் அறியாத சிவகுரு ஒரு ராத்திரியில், தனது படுக்கையில் தலையணைகளை வைத்து செட்டப் செய்துவிட்டு நைஸாக கிளம்பி கம்பத்தில் second show சினிமாவிற்குப் போயிருந்தான். நள்ளிரவைத் தண்டி படமும் முடிந்தது. நமது ஊர்க்காரர்கள் யாராவது அந்தப்பக்கமாக் சைக்கிளில் வந்தால் தொற்றிக் கொண்டு போய்விடலாம் என்று காத்திருந்தான் சிவகுரு. ரொம்ப நேரமாகியும் யாரும் வருவது மாதிரி தெரியவில்லை. பொறுத்தது போதுமென்று நடக்க ஆரம்பித்தான். நிலவற்ற அந்த இருட்டு ராத்திரியில், ரோட்டோரம் தொடர்ந்த தோட்டங்களுக்கு மத்தியில், இரவுப்பூச்சிகளின் ஓசைகளை ரசித்தபடி நடந்துபோன அவனுக்கு ஒரு நேரம் கால் வலிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்றும் தோன்றியது.சரியென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான்.

அது - முண்டஞ் செத்த ஆலமரம்.

நீண்ட விழுதுகள் தொங்கிய அந்த மரத்தின் விழுதுகள் காற்றில் மெல்ல ஆடி சலசலத்து சிவகுருவை " வா... என்னைப் பற்றி ஆடு" என்று கூப்பிடுவது போலிருந்தது. யாராவது அந்தப் பக்கமாக வரும்வரை அந்த விழுதுகளைப் பற்றி ஆடிக்கொண்டிருந்தால என்ன என்று அவனுக்கும் தோன்றியது. எழுந்து, விழுதுகளைத் தாவிப்பிடித்து ஆனந்தமாக ஆட ஆரம்பித்தான்.கொஞ்சம் கொஞ்சமாக வேகம் கூடியது.சட சடத்தன விழுதுகள்.

தூரத்தில் வந்த சைக்கிள்காரன் அதை கவனித்துவிட்டான். அந்த மரத்தில் பேய் இருப்பதுதான் அவனுக்குத் தெரியுமே... குறுகிய உருவமாக அது விழுதுகளைப் பிடித்து பேயாட்டம் போடுவதைப் பார்த்ததும் அவனுக்கு இருதயமே நின்றுவிடும் போலிருந்தது. வாழ்க்கையில் முதல்முறையாக பேயை நேரடியாகப்பார்க்கிறான். பேசாமல் வந்த வழியே திருப்பிப் போய் விடு... என்றது மனம். ஆனால் வீட்டில் அவனுக்கு அவசர வேலையிருந்தது. பேசாமல் சைக்கிளை ஒரே அழுத்தாக அழுத்தி அந்த மரத்தைக் கடந்து விட்டால்..... 1,2,3... அவனது சைக்கிள் வேகமெடுத்தது.

விழுதுகளைப்பிடித்து ஆடிக்கொண்டிருந்த சிவகுருவும், தொலைவில் தெரிந்த டைனமோ விளக்கு வெளிச்சத்தையும், அது தயங்கி இருண்டதையும், மறுபடியும் ஒளிர்வதையும் கவனித்துவிட்டான். அது கட்டாயம் கூடலூர்க்காரனாகத்தான் இருக்க வேண்டும். சைக்கிள் வேகமாக மரத்தை நோக்கி வந்தது. இருட்டுக்கு பழகியிருந்த சிவகுருவின் கண்கள், அது அவர்கள் ஊரைச் சேர்ந்த முடி திருத்துனர் ராசு என்பதைக் கண்டு பிடித்து விட்டது. உடனே " ராசண்ணே" என்று கத்தினான்.

பேய் அவனை சரியாக அடையாளம் கண்டு பிடித்து பேர் சொல்லி கூப்பிட்டதும், ராசுவின் மயிர்க்காள்கலெல்லாம் நட்டுக் கொண்டன. சகல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு இன்னும் வேகமாக சைக்கிளை அழுத்தினான். பேய் விடுவதாக இல்லை. விழுதுகளை விட்டுக் குதித்து, " ராசண்ணே, ராசண்ணே" என்றபடி பின்னால் ஓடி வந்தது. அவன் எவ்வளவு வேகமாக அழுத்தியும் அது விடுவதாக இல்லை.." அண்ணே நிறுத்துங்கண்ணே... நாந்தேன் முத்துசாமி மகன்" என்றும் சொன்னது. முத்துசாமி மகனா?

அவசரமாகத் திருப்பி, பேயின் கால்களைப் பார்த்தான். பேய்க்கு கால் தரையில் படாதே.. இதென்ன கால் பதியப் பதிய ஓடி வருது.? ஒருவேளை முத்துசாமி மகன்தானோ? " ஓடமுடியல, நிறுத்துங்கண்ணே" என்று மறுபடியும் சிவகுரு சொல்ல ராசு சைக்கிளை நிறுத்த, இருவரும் சற்று நேரம் மூச்சு வாங்கினார்கள்.

"ஏலே முத்துசாமி மகன்னு சொல்ற, அந்த ஆலமரத்துல என்னடா செய்ற?" என்று கேட்டான் ராசு. சிவகுரு சினமாவுக்கு வந்த கதையை, நடந்து வந்ததை, நின்றதை, மரத்திலாடியதை எடுத்துச் சொன்னான். " நல்ல காரியம் செஞ்சடா அப்பா.. நல்ல வேளை நான் பயத்திலேயே சாகத் தெரிஞ்சேன். சரி, சரி சைக்கிள்ல ஏறு" என்று சொல்லி அவனை ஏற்றிக்கொண்டு சைக்கிளை மிதிக்கத் துவங்கினான். இருந்தாலும் இது பேயா அல்லது முத்துசாமி மகனா என்று ராசுவால் உறுதியாகத் தீர்மானிக்க முடியவில்லை. பேச்சுக் கொடுத்தபடியிருந்தான்.

ஊர் எல்லையைத் தொடுகிற சமயம், களைப்பினால் அவர்களுக்குள் ஏறக்குறைய பேச்சு குறைந்து நின்று விட்டது. சிவகுருவின் வீடும், ராசுவின் வீடும் Y ஆங்கில எழுத்தின் இருமுனைகளில் இருந்தன. அந்த முனைகளை குறுக்காக இணைக்கும் ஒரு தெருவும் இருந்தது. சிவகுருவோ "எதுக்கு இன்னும் ராசு அண்ணனுக்கு சிரமம்" என்று Y பிரியும் இடத்திலேயே சத்தமில்லாமல் இறங்கிக் கொண்டான். அவன் இறங்கியது ராசுவுக்குத் தெரியாது.

தனது வீட்டில் சைக்கிளை நிறுத்திய ராசு, " ஏய்..முத்துசாமி மகனே எறங்கு" என்றபடி திரும்பிப்பார்க்க, பின்னிருக்கை வெற்றாக இருக்கவும், "அய்யய்யோ... ஆத்தே" என்று அலறி ரத்தம் வழிய சாய்ந்து, சரியாக்க முடியாத காய்ச்சலால் சில நாட்களில் இறந்து போனாராம் ராசு. அன்றிலிருந்து ஊர் முழுக்க சிவகுருவை "ராசுவைக் கொன்ன பய" என்று அழைக்கத் துவங்கியதாம். இது உண்மைதானென்று கூடலூரில் இருக்கிற என் பாட்டி கூட உறுதிபடுத்தினார்.

பள்ளி வருடங்கள் முடிந்ததும், எனக்கும் சிவகுருவுக்குமான தொடர்புகள் குறைந்து விட்டது. ஒரு மலையாளி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சிவகுரு தற்போது சென்னையில் இருப்பதாகக் கேள்வி. அது ஒரு வகையில் நல்லதுதான்.. அங்கு யாரும் அவனை "ராசுவைக் கொன்ன பய" என்று அழைக்கப் போவதில்லை.

31 comments:

மணியன் said...

உங்க நட்சத்திர வாரத்தை தொடங்க அருமையான விறுவிறுப்பான கதை. கலக்குங்க இந்த வாரம்!

பாலு மணிமாறன் said...

Nandri Maniyan !!!!

ஜோ/Joe said...

சுவாரஸ்யமான கதை!
நட்சத்திர வாழ்த்துக்கள்!

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா...மாப்ளேய்... வாழ்த்துக்கள் மக்கா... கலக்குமய்யா...

துளசி கோபால் said...

வாங்க நட்சத்திரமே,

வாழ்த்து(க்)கள்.

ஆரம்பக்கதையே(?) அமர்க்களமா இருக்கு.

ilavanji said...

மொத பதிவே அடிபொளி!

கலக்குங்க நட்சத்திரமே! :)

ramachandranusha(உஷா) said...

super :-)

பரஞ்சோதி said...

வாழ்த்துகள் பாலு,

அட்டகாசமாக எழுதியிருக்கீங்க. என் கிராமத்து நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க.

பாலு மணிமாறன் said...

ஜோ - ரொம்ப நன்றி ஜோ!

பாலபாரதி - உங்க ஆசிர்வாதத்துக்கு நன்றிங்க மாமு!

துளசி கோபால் - உங்கள் அன்புக்கு நன்றி அக்கா!

இளவஞ்சி - அஞ்சித் துவங்கிய எனக்கு நீங்கள் தந்திருப்பது உற்சாகக் கஞ்சி!

ராமச்சந்திரன் உஷா - ரொம்ப நன்றிங்க உஷா !

தாணு said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்! அப்புறம் அந்த ஆலமரம் இன்னும் இருக்குதா? அந்தப் பக்கம் போறப்போ ஆடிப் பார்க்கலாமேன்னுதான்!!!

ப்ரியன் said...

இந்த வார நட்சத்திரமாக மிளிர்வதற்கு வாழ்த்துக்கள் பாலு அண்ணா

அடுத்தபடியாக கதை

அமர்க்களம் படிக்கப் படிக்க சிரிப்பு கட்டுக்கடங்காமல் வந்ததால் என்னடா இந்த பயல் திரைய பாத்து சிரிச்சுகிட்டிருக்கான்னு என் அலுவலக நண்பர்கள் பார்த்தார்கள்..அருமை...

இப்னு ஹம்துன் said...

நல்ல பிரகாசமாக ஆரம்பித்திருக்கிறீர்கள் நட்சத்திர வாரத்தை!
வாழ்த்துக்கள் பாலு!

வசந்தன்(Vasanthan) said...

நட்சத்திரக் கிழமைக்கு வாழ்த்து.

நவீன் ப்ரகாஷ் said...

வேர்களின் ஆழம் விழுதுகளாக தெரிகின்றன பாலு ! கதையினூடே மண்வாசணை!

தொடர வாழ்த்துக்கள் !

நவீன் ப்ரகாஷ் said...

வேர்களின் ஆழம் விழுதுகளாக தெரிகின்றன பாலு ! கதையினூடே மண்வாசணை!

தொடர வாழ்த்துக்கள் !

தருமி said...

வாழ்த்துக்கள்

G.Ragavan said...

அப்பாடியோவ்............ஒரு நல்ல கதையை வாசித்த திருப்தி இருக்கிறது. முழுமையான கதை. முழுமையான முடிவு. வாழ்த்துகள்.

நட்சத்திர வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.

Anonymous said...

hello annan, nanum aloysius student than pativu nalla errku

மஞ்சூர் ராசா said...

இந்த வார நட்சத்திரத்திற்கு
வாழ்த்துக்கள்

பாலு கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறீர்கள். அந்த உங்கள் நண்பரை ஒருமுறை பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள்.கதையின் கருத்திலிருந்து நமது பயம்தான் பேயாக மாறுகிறது என்பதையும் சரியாக விளக்கியுள்ளீர்கள். சின்ன வயதின் எனது சேட்டைகளையும் கொஞ்சம் ஞாபகப்படுத்தியுள்ளீர்கள்.
இந்த வாரம் சிறக்க வாழ்த்துக்கள்.

Ramprasath said...

அருமையான பதிவு.
சிவகுரு-வின் வாழ்க்கை தற்போது எப்படி உள்ளது ?

பாலு மணிமாறன் said...

தாணு - மனிதர்கள் வந்து போய் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அந்த ஆலமரம் அங்கு அப்படியேதான் இருக்கிறது.

ப்ரியன் - சிவகுரு சிரிப்புக்காரன். skylap விழுகிற சமயம்.மொத்த ஹாஸ்டலையும் கூட்டி, வானத்தை காட்டி, எங்கே எங்கே என்று கேட்க வைத்து " அதோ...தெரியுது பார் நிலா" என்று சொல்லி செல்ல அடி வாங்கியவன். சீக்கிரமே அந்த சம்பவம் செந்தில் காமடியாக வந்தது accidental coninisence என்று நினைக்கிறேன்.

இப்னு - ரொம்ப நன்றிங்க இப்னு !

வசந்தன் - வாழ்த்துக்கு நன்றி வசந்தன்

நவீன் - தேசங்கள் தாண்டினாலும் வீசத் தவறுவதில்லை மண்வாசம்!

தருமி - நன்றி சார்!

ராகவன் - உங்கள் எழுத்தை நிறைய வாசித்திருக்கிறேன். அதில் ஒரு 20 % இருந்தால் கூட நான் பாஸாகிவிடுவேன் :)

anonymous - நீங்கள் ஏன் முகம் காட்டக் கூடாது தம்பி அலோசியஸ்?

மன்சூர் ராசா - சிவகுருவின் அண்ணா சென்னையில் இருந்தார். முதலில் சிவகுரு ஒரு போலீஸ்கார பெண்ணை காதலிப்பதாகக் கேள்விப்பட்டேன். அது அப்புறம் மலையாளிப் பெண்ணாக மாறியது. கல்யாணமாகி குழந்தையும் இருப்பதாகக் கேள்வி. சென்னையில்தான் இருக்க வேண்டும். எனக்கும் அவனைப் பார்க்க உங்களைப் போலவே ஆசையுண்டு.

பாலு மணிமாறன் said...

தாணு - மனிதர்கள் வந்து போய் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அந்த ஆலமரம் அங்கு அப்படியேதான் இருக்கிறது.

ப்ரியன் - சிவகுரு சிரிப்புக்காரன். skylap விழுகிற சமயம்.மொத்த ஹாஸ்டலையும் கூட்டி, வானத்தை காட்டி, எங்கே எங்கே என்று கேட்க வைத்து " அதோ...தெரியுது பார் நிலா" என்று சொல்லி செல்ல அடி வாங்கியவன். சீக்கிரமே அந்த சம்பவம் செந்தில் காமடியாக வந்தது accidental coninisence என்று நினைக்கிறேன்.

இப்னு - ரொம்ப நன்றிங்க இப்னு !

வசந்தன் - வாழ்த்துக்கு நன்றி வசந்தன்

நவீன் - தேசங்கள் தாண்டினாலும் வீசத் தவறுவதில்லை மண்வாசம்!

தருமி - நன்றி சார்!

ராகவன் - உங்கள் எழுத்தை நிறைய வாசித்திருக்கிறேன். அதில் ஒரு 20 % இருந்தால் கூட நான் பாஸாகிவிடுவேன் :)

anonymous - நீங்கள் ஏன் முகம் காட்டக் கூடாது தம்பி அலோசியஸ்?

மன்சூர் ராசா - சிவகுருவின் அண்ணா சென்னையில் இருந்தார். முதலில் சிவகுரு ஒரு போலீஸ்கார பெண்ணை காதலிப்பதாகக் கேள்விப்பட்டேன். அது அப்புறம் மலையாளிப் பெண்ணாக மாறியது. கல்யாணமாகி குழந்தையும் இருப்பதாகக் கேள்வி. சென்னையில்தான் இருக்க வேண்டும். எனக்கும் அவனைப் பார்க்க உங்களைப் போலவே ஆசையுண்டு.

பாலு மணிமாறன் said...

பாரதி - மிக நன்றி பாரதி

ராம்பிரகாஷ் - நலமாக இருப்பான் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை ?

மஞ்சூர் ராசா said...

மன்சூர் ராசா அல்ல

மஞ்சூர் ராசா

மஞ்சூர் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரு ஊரின் பெயர்.
மஞ்சு : மேகம்\
மஞ்சூர்: மேகம் சூழ்ந்த ஊர்

சிங். செயகுமார். said...

வாழ்த்துக்கள் நட்சத்திரமே! பேயாட்ட வாரமா ! ..அடிச்சி ஆடுங்க

சிவா said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் நட்சத்திர வாரத்தை சுவாரஸ்யமா கொண்டு போறீங்க பாலு. கதை ரொம்ப நல்லா சொல்றீங்க. கலக்குங்க

அன்புடன்,
சிவா

Anonymous said...

Brother en name aloysius ella puthiya rasu

உங்கள் நண்பன்(சரா) said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!
அருமையான பதிவு.
நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள். தொடருங்கள்

Prabu Raja said...

மென்மையான பதிவுகள் மூலம் நட்சத்திர வாரம் நன்கு சென்றது.

பாலு மணிமாறன் said...

மன்சூர் ராசா - மன்னிக்கனும்! நானும் சின்ன வயதில் நீலகிரியை ஒட்டிய மலைப்பிரதேசங்களான பில்லூர் டேம், பரளி போன்ற இடங்களில் வசித்ததுண்டு!

சிங்.ஜெயக்குமார் - உங்கள் அன்புக்கு நன்றி ஜெயக்குமார்!

பாலு மணிமாறன் said...

சிவா - மிக நன்ன்றி சிவா... தமதமாக பில் இடுவதற்கு மன்னிக்கவும்

சரண் - உங்களுக்கும் அதே மன்னிப்பு உரித்தாகும் சரண்!