Wednesday, February 01, 2006

காலகால மிச்சம்



அங்கு ஒலித்த மொழி
அவனது அல்ல அவளதுமல்ல

முன் பின் முரனென சாத்தியமானதொரு
வாசிப்பின் அனுபவங்களைச் சுமந்து
கடந்தது காலம்

ஒரு மெல்லிய வெளிச்சம் இறந்து கொண்டும்
பிறந்து கொண்டும் இருந்தது

அந்த சாப்பாட்டு மேசையின்
விளிம்போரம் கிடக்கிறது
அவள் மீதம் வைத்த உணவின் காலகால மிச்சம்

கனடாவின் பனிபடர்ந்த மலையினிடை
வெள்ளைக்காரனின் கைபிடித்து நடக்கும் அந்த
சீனப்பெண்ணும் ஓர்நாள் கண்டுவிடக்கூடும்
ஒரு பனிமூடிய மேசையின் விளிம்போரம்
கடந்தகால உணவின் தமிழ் மிச்சம்.

Sunday, January 29, 2006

பஸ் நிறுத்தத்தில் பார்த்த கடவுள்



ஒரு பஸ் நிறுத்தத்தில்தான்
கடவுளைப் பார்த்தேன்

அவர் அவரை
அறிமுகப்படுத்தவில்லை
என்னைத் தெரியாதென்றால்
அவர் கடவுளில்லை.

அவர் யாரென்று எனக்கும்
நான் யாரென்று அவருக்கும்
தெரிந்தே இருந்தது

அவரது அன்புப்புன்னகை
ஏதாவது வரம் கேள் என்றது

கேட்பதற்கு மட்டுமா கடவுள்
சும்மா ஏதாவது பேசலாமில்லையா
யோசித்தபடி நின்று விட்டேன்

ஒரு பஸ் வந்தது
இன்னொருமுறை புன்னகைத்து
கடவுள் அதிலேறிப் போய்விட்டார்

வருத்தமாயிருந்தது

நானாவது ஏதாவது கேட்டிருக்கலாம்
அல்லது அவராவது ஏதாவது
பேசியிருக்கலாம்
கடவுளில்லையா அவர்

ஏதேதோ சிந்தனைகளில்
எனது பஸ்ஸிற்குக் காத்திருந்தேன்
இன்னொரு கடவுள் வரலாம் அதில்

Wednesday, January 25, 2006

சுனாமி ஓசையும், சில கவிதைகளும்

சிப்பிகளும், சிறுநண்டுகளும்
சிறுபிள்ளைகளின் மணல்வீடுகளும்
இருந்த இடம் எது?

நிலா பார்த்து இரவு நுழைந்து
பகலில் வெளிவந்த
மணல்பாதை எது?

காலங்களின் ஓட்டத்தில் -

கடற்கரையில்
கரை பார்த்து நாளாகிறது...
நீர் மூழ்க நிற்கிறது கரை.

ஓசைச் சுனாமியின் ஓலத்தில்
அமிழ்ந்து ஒலிக்கிறது
தமிழ் மூச்சு.

எப்போதேனும்
நீர் மேல் எழும்பி விடும்
நீண்ட மூச்சுக்கள்
மீண்டும் மூழ்கின, மூச்சுத் திணறின...

மெல்லிய பாடலின்
உள்ளிருந்து ஒலிக்கும்
ஒரு உயிர்க்கவிதை!

Monday, January 23, 2006

ஒரு சிங்கப்பூர் (பற்றிய) கவிதை

மாலைக்கும் இரவுக்கும் மத்தியில் ஒரு மயக்க நேரம்.
பழமையும், புதுமையும் பொத்திக்கிடக்கும் தேக்கா
விட்டு புகிஸ் எம்ஆர்டி நோக்கி நடக்கும் கால்கள்....

என்னைக்கண்டதும் சாலையோர புற்களின் சன்ன
முகத்தில் சின்னப்புன்னகை.என்ன என்றது எனது
பார்வை.

முகத்தில் முள்ளாய் முடி. சவரம் செய்ய சமயமில்லையா?
எங்களைப்பார்...முறைதவறாமல் முடிவெட்ட மனிதர்கள்.
உன்னைப்போல் அநாதை இல்லை நாங்கள் - என்றன
புற்கள்.

என்ன இது எள்ளல் என எட்டி நடந்தேன்.சட்டை
தொட்டு சடசடத்தது காற்று.

உசுப்பி விட்டால் ஓட்டமெடுப்பது, இல்லையென்றால்
ஓய்ந்துகிடப்பது, உன்னைப்போல் இல்லை நான்.
களைக்காமல் சுற்றும் கால்கள் எனக்கு. மனிதர்களுக்கு
தீயெரிக்க, மூச்சிரைக்க முழுசாய் என் தயவு தேவை -
என்று காதில் முணுமுணுத்தது.

மூச்சிரைத்தது.முகம் துடைத்து நடந்தேன். சிக்னல்
சிவப்பாய் சிரித்தது.

என்ன அவசரம் ? ஓட முடியாது நீ...உன்னை
ஒழுங்குபடுத்தத்தான் நான். ஒழுங்குபடுத்துதல்
மட்டுமல்ல...பச்சை, மஞ்சள், சிவப்பு என ஒழுங்காய்
இயங்குதல் என் வழக்கம்.நீ எப்படி? - என்று கேட்டு
கண்ணடித்தது.

படபடத்து நடந்து பாலம் தொட்டேன்.பாலத்தின்
பாதம் தொட்டு படபடப்பற்ற அழுக்கு ஆறு. என்னைப்
பார்த்ததும் சலசலத்தது.

ஆறு எனது இயற்பெயர். அழுக்கு ஆறு என்பது
ஆளாளுக்கு என்னை அழுக்காக்கிவிட்டு நீங்கள் இட்ட
புனைப்பெயர்.இருந்தாலும் உங்களையெல்லாம்
சுத்தம் செய்வதே சுகம் எனக்கு - என்று சொல்லி
உடல் சிலிர்த்தது.

வேகமாய் நடந்து தொட்டேன் புகிஸ் எம்ஆர்டி. ரயிலின்
கதவுகள் திறக்கக் காத்திருந்தேன். உச்சத்திலிருந்து
ஒரு சத்தம். மேலே சிசிடிவியின் விழிகள் சிரிப்பாக...

இப்போதாவது என்னைப் பார்த்தாயே...பலபல இனங்கள்
பலபல மனங்கள் தினமும் படிப்பது என் பழக்கம்.
அக்கம் பக்கத்தையோ, அடுத்த வீட்டையோ அணுகிப்
பார்த்ததுண்டா நீ? தான் தவிர்த்து, நாம்
உணர்ந்ததுண்டா? - அம்பாய் என்னிடம் கேள்வி.

வந்து சேர்ந்தது எம்ஆர்டி. நழுவி உள்புகுந்தேன்.
விழுந்த வினாக்களின் வெப்பத்தில் வேர்த்திருந்தது
மனசு. நியாயம் சுட்டது. அமர்தல் நலம் என்றன
கால்கள். வெற்றிருக்கை தேடியது விழி.

அதோ ஒரு இருக்கை... அசந்து அமர விரைந்தேன்.
உற்றுப்பார்த்த இருக்கையின் உதடுகள் என்னிடம்
ஏதோ சொல்ல எத்தனிக்க...எதற்கு வம்பென
பயணம் முழுதும் நின்றே சென்றேன்.!

Sunday, January 22, 2006

"சுனாமி வருவதற்கு முன்னால் கடல் உள்வாங்கும்"



திருச்சி தேசியக்கல்லூரியில் புவி அறிவியல் துறையில் பேராசியராக பணியாற்றி வரும் டாக்டர் அன்பரசு சிங்கப்பூரில் 20 ஜனவரி அன்று நடந்த சந்திப்பில் இந்தத் தகவலைக் கூறினார்.

புருணே நாட்டில் நடக்கும் அனைத்துலக புவி அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளச்செல்லும் வழியில் சிங்கப்பூர் வந்திருக்கும் அவரோடு ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி தோசாக்கானர் உணவகத்தில் தமிழ்நெஞ்சர் போப்ராஜூ என்ற நாகை தங்கராசு ஏற்பாட்டில் நடைபெற்றது. ஏராளமான தமிழ் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.

"பூமி எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதோடு, பொறுமையற்றதாகவும் இருக்கிறது. ஒரு காலத்தில் பூமியில் இருந்த நிலப்பரப்பெல்லாம் இணைந்து ஒன்றாக இருந்தது. இப்போது மாதிரி தனித்தனி கண்டங்கள் எல்லாம் இல்லை. கண்டங்கள் பின்னால் உருவானவை." என்று எளிய விளக்கத்தோடு தனது உரையைத் துவங்கிய டாக்டர் அன்பரசு, நீர், நிலம் பற்றிய பல அறிவியல் தகவல்களை விரிவாக எடுத்துக் கூறினார்.

ஒரு மரக்கட்டை தண்ணீரில் மிதப்பது மாதிரி, பூமிக்குள் இருக்கின்ற மிதகடின திரவத்தின் மீது நிலப்பரப்புகள் மிதந்து கொண்டிருக்கின்றன. வெப்பம் மிகுந்த அந்த திரவத்தின் வெப்பச் சுழற்சி நகரும் போது தன்னோடு நிலப்பரப்புகளையும் நகர்த்திச்செல்கிறது. அப்படி நகர்ந்து செல்லும் இரு நிலப்பரப்புகள் மோதிக்கொள்ளும்போது, பெரிய மலைகள் ஏற்படுகின்றன. இந்தியாவிற்கும் ஆசியாவிற்கும் ஏற்பட்ட மோதலால் பிறந்ததுதான் இமயமலை" என்று குறிப்பிட்டார் டாக்டர் அன்பரசு.

அல்·பிரட் வாக்னர் என்ற ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் 18 ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப்பின் 1930ல், பூமி ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்தது என்று கண்டுபிடித்துச் சொன்னபோது, பெளதீக அறிஞர்கள் பெரிதாக எதிர்த்தார்கள். அப்படியானால், எந்த விசை கண்டங்களை, பூமியை நகர்த்தியது என்று எதிர்கேள்வி கேட்டார்கள். அல்·பிரட் வாக்னர் அந்த காலகட்டத்தில் தீர்க்கமான பதில் சொல்ல முடியாவிட்டாலும், தனது வாதத்திற்கு ஆதரவாக சில விஷயங்களை சொன்னார்.

கண்டங்களின் ஓரங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைந்திருப்பதும், இந்தியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் காணப்படும் ·பாஸில்கள் ஒத்த தன்மையுடையதாக இருப்பதும், கடலால் பிரிக்கப்பட்டிருந்தாலும், வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் காணப்படும் பாறைகள் ஒன்றாக இருப்பதும் தனது கண்டுபிடிப்பை உறுதி செய்வதாகச் சொன்னார் வாக்னர்.

1960களில் யுனெஸ்கோ அமைப்பு ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு குளோபல் சேலஞ்சர் என்ற கப்பலில் பெரிய குழுவை அனுப்பியது. அவர்கள் கடலுக்குள் இமயமலையை விட உயரமான மலைகள் இருப்பதையும், கடலுக்கடியில் நிலப்பரப்பானது நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்தார்கள். மத்தியக்கடல் பகுதியில் 500 டிகிரி செண்டிகிரேடில் கூட சில வகை பாக்டீரியாக்கள் உயிர் வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பு பனியால் மூடப்பட்டிருந்தது. பனிப்பாறைகள் உருகுவது அல்லது நீர் உறைவதை வைத்தே கடல் நீர் மட்டத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படுகின்றன. தற்போது பாலைவனமாக இருக்கிற அரேபியப்பகுதிகள் கூட ஒருகாலத்தில் கடலாக இருந்த பகுதிகள்தான். பூமி நகர்வதும், கடல் நகர்வதும் பூமிக்குள் வெப்பம் இருக்கும்வரை நிகழ்ந்து கொண்டே இருக்கும்."என்று தனது உரையில் குறிப்பிட்டார் டாக்டர் அன்பரசு. பின்பு பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அதிலிருந்து சில விஷயங்கள் : -
  • பூகோள ரீதியாக சிங்கப்பூரைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளும், நாடுகளும் ஒரு அரண்போல் அமைந்திருப்பதால், சிங்கப்பூரை சுனாமி தாக்கும் வாய்ப்பு மிகக்குறைவு.

  • சுனாமி சட்டென்று வந்து விடாது. சுனாமி வருவதற்கு முன் கடல் உள்வாங்கும். பிறகுதான் பேரலையாக வந்து தாக்கும்.

  • பூகம்பம் என்பது பூமி தன்னில் இருக்கிற அழுத்தத்தை வெளிப்படுத்திக்கொள்ளும் செயல்தான். தற்போதைய விஞ்ஞான அறிவை வைத்து எந்த இடங்களை பூகம்பம் தாக்கக்கூடும் என்று மட்டுமே சொல்ல முடியும். எப்போது தாக்கும் என்று சொல்வது சிரமம்.

  • லெமூரியாக் கண்டத்தைப் பற்றி சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை. ஆனால், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பூம்புகார் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

  • மகாபலிபுரத்தில் 7 கோபுரங்கள் இருந்தது வரலாறு. தற்போது ஒன்றுதான் இருக்கிறது. ஆனால் சுனாமி வந்த நேரம் மகாபலிபுரத்தை ஒட்டிய கடல் உள்வாங்கிய போது, மேலும் 2 கோபுரங்களை பார்க்க முடிந்தது.



Thursday, January 19, 2006

"பைண்டு" செய்யப்பட்ட வந்தியத்தேவன்கள்



"தன் முகம் தான் காணக் கிடைக்காதது மனித சிருஷ்டிக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரும் சாபம்" என்று எனது "அலையில் பார்த்த முகம்" என்ற கவிதை தொகுப்பிற்கான முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார் சிங்கப்பூர் நண்பர் அ.முகமது அலி.

சாயலற்ற சங்கதியென்று ஏதேனும் உண்டோ பூமியில்? சாயலற்றதாக வாழ்க்கை நகர்தல் சாத்தியமா?

சாயல்களின் அடுக்குகளாகவே தெரிகிறது என் எழுத்து.

தேவாரம் நகராட்சியின் மல்லிங்கர் கோயில் தெரு பாட்டி வீட்டில் எழுத்துக்கான முதல் சாயல் விழுந்ததாக சல்லடை ஞாபகம். மாணிக்கவல்லி அல்லது ஒரு மாதின் மர்மம் என்ற மக்கிய புத்தகத்தின் நாயகனோடு நானும் குதிரை வண்டிகளில் நாயகியின் காதலுக்காக அலைந்திருக்கிறேன்.

மாக்ஸிம் கார்க்கியின் "தாய்" வைத்துக்கொடுத்த தேனீர், கழட்டப்படாத கம்பளி ஆடைகளுக்குப்பின் கதகதப்போடு இறங்க, பனி இறங்கிக் கொண்டிருந்த கண்ணாடி ஜன்னல்களின் வழி தொலைவில் கால் புதைய நடப்பவர்களை கவலையோடு பார்த்தது ஞாபகம் இருக்கிறது.

இன்னும்கூடக் கொஞ்சம் முன்னால் போகலாம் போல் தோன்றுகிறது....

பில்லூர் அணைக்கட்டு துவக்கப்பள்ளி மதியங்களில் குமுதம் வாங்கி சித்தப்பா வீடு வரை படித்தபடியே நடந்த காலத்தில், கண்ணதாசனின் "விளக்கு மட்டுமா சிவப்பு" நாயகிக்காக போலீஸ் மீது புகையான கோபமிருந்ததாக ஞாபகம். அந்த கதை பற்றி விவாதிக்க முற்படும்போதெல்லாம் ஆறு வித்தியாசங்களை மட்டுமே பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டதும் உண்டு.

கம்பம் பல்லத்தாக்குகளின் தோட்டவெளிகளில் "பைண்டு" செய்யப்பட்ட வந்தியத்தேவன்களும், திருமாவளவன்களும், சோளச்சோறு, வெங்காயம் சகிதம் வயிறுக்குள் இறங்கி வாளோடு எதிரிகளை துவம்சம் செய்திருக்கிறார்கள்.

சுப்ரமணிய ராஜூவின் "அவன்" அவளை ஒரு ரயில்வே கம்பார்ட்மெண்ட்டில் "பார்வையால் மல்லாத்திய போது" தண்டவாளத்திலிருந்த என் மேல் ரயிலேறியது.

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று ஆசைப்பட்டபடியே, சைடில் காதலையும் கவனித்துக்கொண்ட பாலகுமாரனின் நாயகன்கள் மேல் பொறாமையிருந்தது. என்னைப்போல் ஆசைப்படும் அவர்களுக்கு மட்டும் எப்படி எனக்கில்லாத காதலி கிடைத்து விடுகிறது?

மேகம் கவிழ்ந்த ஒரு சிங்கப்பூர் ஜனவரியின் காலையில், விமான நிலையம் விட்டு வெளிவந்ததும், நான் மேற்சொன்னவர்களையும், இன்ன பிறரையும் யோசித்துக் கொண்டிருந்தேன்...என் தம்பி லக்கேஜை கார் டிக்கியில் வைத்துக் கொண்டிருந்தான்.

எதன் சாயலுமற்ற ஏதோ ஒன்று காற்று வெளியிடை காணத்தவித்து உச்சத்தில் பறந்து கொண்டிருந்தது ஒரு பறவை....

Tuesday, December 20, 2005

அன்புச்செல்வன் என்ற மலேசிய எழுத்தாளர்




இடமிருந்து வலமாக - அன்புச்செல்வன், புரவலர் போப் ராஜ், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், நான்

(கடந்த 18 டிசம்பர் 2005 அன்று சிங்கப்பூரில் நடந்த அன்புச்செல்வனின் " திரைப்படங்களின் தாக்கங்கள் " என்ற நூல் வெளியீட்டு விழாவில் இடம் பெற்ற எனது உரை )

அது 90களின் இறுதி வருடங்கள். குறிப்பாகச் சொல்வதென்றால் 1996-97.

பணியின் காரணமாக நான் மலேசியாவில் இருந்தபோது - மலேசிய இலக்கியமும் , இலக்கியவாதிகளும் மெல்ல,மெல்ல அறிமுகமானார்கள். அப்படி எழுத்தின் மூலம் அறிமுகமாகி, ஆற்றல்மிக்க ஒரு இலக்கியவாதியாகவும், ஆடம்பரமற்ற, அன்புமிக்க ஒரு எளிய மனிதராகவும் என்னை ஈர்த்தவர் எழுத்தாளர் அன்புச்செல்வன்.

பால் மரக்காடுகளும், செம்பனைத்தோட்டங்களும் நிறைந்த மலேசிய மண், மனித வாழ்வின் சகல தளங்களிலும் மனிதனை நிறுத்தி, அவனுக்கு வாழ்க்கை நெடுக அனுபவங்களை வழங்கி, முழுமையாக்கித்தான் முடிக்கிறது.
ஒரு இந்தியத் தமிழரோ, இலங்கைத்தமிழரோ அல்லது சிங்கப்பூர் தமிழரோ சந்திக்க முடியாத பிரத்தியேகமான வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியதாகவும் மலேசியத் தமிழரது வாழ்க்கை இருக்கிறது. அவற்றை முறையாக பதிவு செய்வது வரலாற்று அவசியம். அந்தப்பணியை செய்கிற கடமையுள்ளவர்களாக இலக்கியவாதிகள் இருக்கிறார்கள்.

அதிர்ஷ்டவசமாக அத்தகைய பதிவுகளைச்செய்யும் ஆற்றல்மிக்க தமிழ் இலக்கியவாதிகள் மலேசியமண்ணில் இன்றும் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களில் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என சகல முனைகளிலும் ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி, மலேசியத்தமிழ் இலக்கியத்திற்கும், அதன் மூலம் உலகத்தமிழ் இலக்கியத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருப்பவர் அன்புச்செல்வன்.

ஒரு எழுத்தாளன் - பல படைப்புகளின், படைப்பாளிகளின் பாதிப்பில் உருவாகி, வருடங்களில் ஓட்டத்தில் மெதுவாக உருமாறி, இறுதியில் தனக்கென ஒரு சுயத்தை உருவாக்கிக் கொள்கிறான். அப்படி உருவாகிற சுயம், அந்த எழுத்தாளனது சிந்தனை முறையை, சதா உள்ளோடிக் கொண்டிருக்கும் உணர்வுகளை, அவற்றின் பிம்பத்தை வாசகனது முன்னிறுத்துகிறது.

அந்த எழுத்தும் அவனும் வேறு வேறல்ல. அதுதான் அவன்: அவன்தான் அது.

அப்படி ஒரு சுயம் அன்புச்செல்வனது எழுத்துக்கும் இருக்கிறது. அதில் மிக மகிழ்ச்சியான விஷயம் - அந்த எழுத்து பல விஷயங்களிலும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. குறிப்பாக அவரது சிறுகதைகளை படிக்கிற யாருமே அந்த ஆச்சரியதிற்கு உட்படாமல் தப்பிக்க முடியாது. அவருக்கு நடக்கிற, அல்லது அவரைச்சுற்றி நடக்கிற விஷயங்களை அதை விட்டு விலகி நின்று, கிண்டலும்,கேலியுமாக விமர்சனப்பார்வை பார்க்கிற கலை அன்புச்செல்வனது மிகப்பெரிய பலம்.

ஒரு சிறுகதையில் இருதயத்தையும், நுரையீரலையும் காதலிக்கும் மனைவிக்கும் ஒப்பிடுகிறார்:

" இருதயம் காதலி மாதிரி. அடிக்கடி கோவிச்சுக்கிட்டு ஒரு சின்ன இடைஞ்சல் வந்தாலும் எச்சரிக்கை செய்துக்கிட்டே இருக்கும். ஆனா, லிவர் அந்த டைப் இல்ல. அது தாலி கட்டிய மனைவி மாதிரி. தாங்கிற வரைக்கும் சத்தம் போடாம பொறுமையா இருக்கும். ஒரு நிலைமைக்கு மேல போனால் அவ்வளவுதான் "

குறிப்பாக மரணம் பற்றிய பயம் அல்லது எதிர்பார்ப்பு, சற்று வயது முதிர்ந்த எழுத்தாளர்களின் எழுத்தில் எதிரொலிப்பது இயற்கை. ஆனால், மரணத்தை அல்லது மரணமடைந்தவர்களைப் பற்றி எழுதுகிறபோதோ இவரது எழுத்துகளில் "ஒரு சிட்டிகை" நகைச்சுவை உணர்வுவே அதிகமாக வெளிப்படுகிறது.

" கட்டையோடு கட்டையாய் படுத்துக்கிடந்த ராமசாமி வெட்டியானை ரொம்பவும் சோதனை செய்து கொண்டிருந்தான்.1971 வெள்ளத்திலேயே முக்கால் டின் மண்ணெண்ணையில் கதையை முடித்துவிடும் சாமார்த்தியம் படைத்த அனுபவசாலிக்கு இன்றைக்கு எரிச்சலாய் இருந்தது.வேறொரு ஆசாமியாய் இருந்திருந்தால் அடித்துக்கொண்டிருக்கும் இந்த வெயிலிலேயே கருகிப்போயிருப்பான்.இந்த ராமசாமி மூடியிருந்த பெட்டியையும் சாப்பிட்டுவிட்டு வானத்தை நோக்கி சிரித்துக் கொண்டிருந்தான்."

இறந்து, எமலோகத்திற்குப் போன அவனைப்பற்றி சொல்கிறபோது - " செத்துப் போய் விட்டோமே என்ற சோக ரேகையே முகத்தில் படர்ந்திருக்கவில்லை. ஏதோ அடிக்கடி அங்கே வந்து போய்க்கொண்டிருப்பவர் போல மிகவும் தெளிவாக இருந்தார் " என்று குறிப்பிடுகிறார்.

கடந்த 20 ~ 25 ஆண்டுகளில் மனித இனம் மிகப்பெரிய சமூக, கலாச்சார, இன மொழி மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. கனவு என்றால் என்னவென்று தெரியாத பிள்ளைகளுக்கு dreams என்று மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டிய அவலத்தை கால ஓட்டத்தில் நடக்கிற மாற்றமாக ஏற்று வாழ கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த வருத்தத்தை அன்புச்செல்வன் அவரது எழுத்தில் கதையாக, கவிதையாக, கட்டுரையாக அழுத்தமாக பதிவு செய்து வருகிறார்.

நல்ல மனிதர்களின் படைப்புகள் நல்ல இலக்கியமாக மலர்கிறது. அன்புச்செல்வன் படைப்பதெல்லாம் நல்ல இலக்கியமாக இருப்பதன் ரகசியம், அடிப்படையில் அவர் ஒரு நல்ல மனிதர் என்பதுதான். இதை பல சந்தர்ப்பங்களில் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

"விழித்திருக்கும் ஈயக்குட்டைகள்" என்ற இவரது திகில் கதைகள் ,தொடராக மக்கள்ஓசை வார இதழில் வெளிவந்த சமயம், நானும், எனது நண்பர் தண்ணீர்மலையும் அதை கடுமையாக விமர்சனம் செய்தோம். அன்புச்செல்வன் அந்த விமர்சனங்களை தைரியமாக எதிர்கொண்டார். எழுத்தாளர் புண்ணியவான் போன்றவர்கள் அன்புச்செல்வன் எழுதுவது திகில் கதைதான் என்று ஆதரித்தார்கள்.

நானும் என் விமர்சனத்தில் " ஆமாம். இவர் எழுதுவது திகில் கதைதான். ஆனால் யாராவது அதை திகில் கதை இல்லை என்று சொல்லாமல் இருக்க வேண்டுமானால் கதை நடுவே ஆங்காங்கே "திகில், திகில்" என்று போட்டு விடுங்கள். அப்புறம் யாரும் அதை திகில் கதை இல்லையென்று சொல்ல முடியாது. அதையும் மீறி, இல்லையென்று யாராவது சொன்னால், உங்களை ஆதரிக்க ஏதாவது ஒரு புண்ணியவான் இல்லாமலா போய் விடுவார்.." என்று சொல்லி வைத்தேன்.


கொஞ்ச நாட்களுக்கு முன் அந்த புத்தகத்தை நூல் வடிவில் பார்த்தபோது, எனது "அந்த" விமர்சனத்தையும் அன்புச்செல்வன் அவரது நூலில் சேர்த்திருந்ததை பார்த்தேன். அதுதான் அன்புச்செல்வன். அந்த நேர்மைக்கும், எழுத்து ஆண்மைக்குமான வணக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

அன்புச்செல்வனது கதையோ, கட்டுரையோ - எதை படித்தாலும், அதை நீங்கள் முழுமையாக படித்து முடிப்பதற்குள் ஏதாவது ஓரிடத்தில் உங்கள் இதழோரத்தில் மெல்ல ஒரு புன்னகை அரும்புவதை தவிர்க்கவே முடியாது. அத்தகைய அனுபவம் சுஜாதாவின் எழுத்துக்களை, அன்புச்செல்வனது எழுத்துக்களை படிக்கும்போது மட்டுமே எனக்கு நேர்ந்திருக்கிறது. நீங்கள் படித்தால், அந்த அனுபவம் உங்களுக்கும் நேரக்கூடும்.

இன்று வெளியாகும் திரைப்படத் தாக்கங்கள் பற்றிய நூல் அன்புச்செல்வனது எழுத்துப்பயணத்தில் இன்னொரு எல்லைக்கல். இன்னும் அவர் எட்டக்கூடிய எல்லைகள் எவ்வளவோ இருக்கிறது.

குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளில் மலேசியப் பொருளாதரத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களால் மலேசியத்தமிழரது வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களை மையமாக வைத்து அவர் ஒரு நாவலை எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து, இத்தகைய நிகழ்வுகள் மூலம் உலகம் தழுவிய தமிழ் இலக்கியப்பாலத்தை ஏற்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் முயற்சிகள் போற்றத்தக்கது என்பதை தெரிவித்து அமர்கிறேன்.

பாலு மணிமாறன்
18 டிசம்பர் 2005.

Thursday, November 03, 2005

கோடுகள்

ஏதுமற்ற காகிதத்தில் இடும்கோடு
வெற்றைப் பிரிக்கும்
மேலென, கீழென.

தொட வேண்டிய
கோடுகளை நோக்கி ஓடும்
மனித புள்ளிகள்.

விதிக்கோட்டில் நடக்கும்
சாதாரணம்.
தானிடும் கோட்டில்
விதி கூட்டிச்செல்லும் உதாரணம்.

அழிவதில்லை சில கோடுகள்.
மேலும் கீழும் மாறி
தம்மை தற்காக்கும்.
நீளும்.

படி கூட
கோட்டின் குறியீடுதான்.
தாண்டக்கூடாது சீதை.
பத்தினிகளும் அப்படியே!

Sunday, October 30, 2005

போலொரு

தொலைவுகளுக்கப்பால்...
அடிவானின் அடிவயிற்றில்
அருகிருந்த காற்றில் பதுங்கி
எங்கோ இருந்திருக்கிறது.

நெழிவுகளோடும் வளைவுகளோடும்
ஒரு பொழுதின்
திடீர் கணத்தில் வெளிப்பட்ட இசை
புன்னகை இன்பத்தில் புதைத்தது என்னை.

நாட்களில் வாரங்களில்
மேற்பரப்பில் முளைத்து
பனித்துளி சுமந்தேன் நான்.

மதியத்தூக்கத்தின்
எதிர்பாராக் கனவென வருகிறது
எனக்கானதல்ல இசை.
இருந்தாலும் எனக்குமாகிறது...

மனக்கரையின் மணற்பரப்பில்
போகிறது சிரிப்பலைகள்.

Monday, October 24, 2005

நனையத்துணியும் பூனைகள்

இரவின் தூறல் மழை.
நடக்கும் மனிதர்கள்
பிடிக்கும்
குடை.
மரக்குடையற்ற
மதில்மேல்
நனைகிறதொரு பூனை.

பாய பார்க்கிறதா பக்கம்?
அந்தப்பூனை
பார்த்தபடிதான் இருக்கிறது.

மழை பயந்த மனிதர்களை..

கடக்கும் வாகனங்களை
கடைக்கண்ணால் பார்த்தபடி
நடந்தே செல்லும் சீனக்கிழவனை..

கிளைக்கை நீட்டி
கட்டிடங்கள் தொடும் இயல்பில்
முடமான மரங்களை...

இன்னொரு அடைமழையில்
மிதக்கத்தகு சருகுகளை..

அந்தப்பூனை
பார்த்தபடிதான் இருக்கிறது.

தாவக்கூடும் பூனைகள்
அல்லது..
சோம்பல் முறித்தபடி
வேடிக்கை பார்ப்பது கூட
அதன் சுபாவமாய் இருக்கலாம்!