Saturday, January 10, 2009

தாத்தாக்கள் எப்போதுமே போற்றுதலுக்குரியவர்கள்! (நாலு வார்த்தை-037)

பலரையும் போல், தாத்தாவை எப்போதாவதுதான் நினைக்க முடிகிறது. அந்த நினைப்பு, குதூகலிக்கும் சிரிப்புடன் கூடிய அவரது முகத்தைத்தான் முதலில் கொண்டு வரும். உலகின் கவலைகள் மற்றும் களங்கங்களற்ற வெகுளித்தனமான சிரிப்பு அவருடையது. 90 வயதுக்கு மேல், இறக்கும் காலம்வரையிலும் அந்த சிரிப்பை அவர் தக்க வைத்துக் கொண்டார். அந்த வெகுளித்தனமான, கபடமற்ற குணத்தை ஒரு Charector Flaw-வாகப் பார்த்தவர்களும் உண்டு. அதில் முக்கியமான இருவர் - என்னுடை அப்பா மற்றும் சித்தப்பா. அப்பா நுணுக்கமான வார்த்தைகளால், சிறு பார்வைகளால் அதை வெளிப்படுத்துவார். சித்தப்பா எப்போதும் கோபத்தைக் கையிலெடுப்பார். தாத்தாவினுடைய களங்கமற்ற தன்மை கேள்விக்குள்ளாகும் போதெல்லாம் அவரிடமிருந்து வார்த்தைகள் கோபமாக வெளிப்படும். "ஏம்பா...ஏய்...ஏம்பா இப்படி இருக்க?" என்பார். "யார்டா இவன்... எப்படியிருக்கேன்?" என்ற பதில் கேள்வி தாத்தாவிடமிருந்து வெளிப்படும். அடுத்த நிமிடம், சிறு குழந்தைகளிடம் கிண்டலும், கேலியுமாக விளையாடத் துவங்கி விடுவார். சின்னக் குழந்தைகளிடம் கிண்டலும் கேலியுமாக விளையாடுவது 90 வயதுக்கேற்ற செயலல்ல என்பது சித்தப்பாவின் நினைப்பு. தாத்தா எப்போதுமே தன் வயதை உணர்ந்ததில்லை. அப்படி உணர்ந்திருந்தால், 90 வயதுக்கும் மேல்கூட வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தோட்டத்து வேலைகளைச் செய்திருக்கவும் மாட்டார்; குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடி இருந்திருக்கவும் மாட்டார். முதுமைக் காலம்வரை தன்னிலிருக்கும் அப்பாவித்தனத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு மனிதனை அனுமதிப்பதில்லை இந்தச் சமூகம். அந்த அப்பாவித்தனத்தைக் கொலை செய்ய, வார்த்தை வாள்களோடு ஆவேசமாக அலைந்து கொண்டிருக்கிறது. ஆனால் எந்த வாளாலும் என் தாத்தாவின் வெள்ளேந்தித்தனத்தை அவரது மரணம் வரைக்கும் வெட்ட முடிந்ததில்லை.

விடுதியில் படிக்கும் தனிமை - சமயங்களில் சுவாரஸ்யமானது; சமயங்களில் கொடுமையானது. சகதோழனை உறவினர் பார்க்க வரும் ஞாயிற்றுக் கிழமைகள் நம் மனதுக்குள் துயரத்தைக் கொண்டு வந்து விடும். தூரத்து மைதானத்தில் விளையாடிக் கொண்டோ, வேடிக்கை பார்த்துக் கொண்டோ இருக்கையில், குழாய் ரேடியோவில் ஒலிக்கும், 'ஏம்மா, கருவாட்டு கூடை முன்னாடி போ' என்ற சிட்டுக்குருவிப் படப் பாடல் மனதுக்குள் இறங்கி, சோகக்கூடு கட்டிக் கொள்ளும். அப்பா, அப்பா, சகோதர, சகோதரிகளின் நினைவு கண்ணீராக வடிவாகி விடும். ராயப்பன்பட்டி விடுதியில் தங்கி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இது எனக்கு நேர்ந்தது. அடிக்கடி என்னைத் தேடி வந்து ஆறுதல் தருவது தாத்தாதான். அவரது வருகை எப்போது நிகழும் என்றே கணிக்க முடியாது. திடீரென்று பிரசன்னமாவார். என் சகதோழர்கள் பலருக்கும் அவர் பரிட்சயம். ஓடி வந்து "உன் தாத்தா வந்திருக்கார்" என்று சொல்வார்கள். 9 மணிக்கு மேல் பஸ் ஓடாத அந்தக் காலத்தில் அவர் இரவு 11 மணிக்கு விடுதிக்குள் வந்து சேருவார். நாங்கள் தூங்கிப் போயிருப்போம். நான் உறங்கும் அந்த பெரிய ஹாலின் நுழைவாயிலில் நின்று 'மணி...எங்கப்பா இருக்க' என்று குரல் எழுப்புவார். அங்கு படுத்திருக்கும் அத்தனை பேரும் விழித்துக் கொள்வார்கள். நான் கண்ணைக் கசக்கியபடி எழுந்துபோய் அவரிடம் பேசுவேன்.' எப்படி தாத்தா வந்தே...கடைசி பஸ் 9 மணிக்கே போயிருக்குமே" என்பேன்."உத்தமபாளையத்திலிருந்து நடந்தே வந்தேன்பா" என்பார். மனசுக்குள் பொசுக்கென்று கண்ணீர் பொங்கி விடும். 'சரி தாத்தா...இனிமேல் எப்படி ஊருக்கு போறது... இங்கேயே படுத்துத் தூங்கிட்டு. காலையில கிளம்பிப் போ." என்று சொல்வேன். "அடப் போடா புள்ளாண்டான்... நாலே எட்டுல ஊருக்குப் போயிடுவேன்" என்று சொல்லி, என் கையில் முருக்கு, அதிரசம் என்று எதைவாவது திணித்து விட்டு, விருவிருவென்று கிளம்பிப் போய் விடுவார். அர்த்த ராத்திரியில் நானும் என் நண்பர்களும் அதிரசத்தை தின்று கொண்டிருப்போம். தாத்தாவின் அந்த வெள்ளேந்தியான, முரட்டுத்தனமான பாசத்தைப் பற்றி எந்தச் சூழலிலும், யாரிடமும் நான் வெட்கப்பட்டதில்லை. எப்படியிருந்தாலும், Thats my thaththa!

அவர் அடிப்படையில் விவசாயி. நிலம் அவருக்குத் தாய். பூமிமாதா. படியளப்பவள். ஆடு, மாடுகளைக் கூட அவர், 'வாடி...இந்தப் புல்லை சாப்பிடு.' என்றும், சாப்பிடாவிட்டால், 'பாருடா பேராண்டி... சாப்பிடாம அடம் பிடிக்கிறதை... ரொம்பக் கோபக்காரி இவ' என்று பெண்ணாக உருவகித்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். வெள்ளைக்காரன் ஆட்சியில் 'குற்றப்பரம்பரையினர்' கொடுமைக்கு உள்ளான காலத்திலும் அவரை வெள்ளைக்காரன் மரியாதையோடு நடத்தியதற்குக் காரணமாயிருந்த நேர்மையைப் பற்றி அவருக்குள் எப்போதும் இருக்கும் பெருமிதத்தையும் ஆர்வத்தோடு பார்த்திருக்கிறேன். அவருக்குத் தெரிந்ததெல்லாம் நேர்மையாக இருப்பது, கடுமையாக உழைப்பது, தன்வசமிருந்த வெள்ளேந்தித் தனத்தைக் சேதமில்லாமல் காத்திருப்பது மட்டும்தான். எங்கள் வயல், பெரியாற்றின் கரையோரம் இருக்கிறது. மழைக்காலத்தில் மொத்த வயலும், வெள்ளத்தில் நெல் மூழ்கிவிடும். மணல் நிரம்பி விடும். ஆனால், மறுபடியும் அந்த நிலத்தை சீராக்குவதிலோ, மறுபடியும் நெல் விதைப்பதிலோ, மறுபடியும் ஒரு வெள்ளம் வந்தாலும் சோர்ந்து போகாமல் இருப்பதிலோ, தாத்தா, கவலை கொண்டு கண்டத்தில்லை. "உங்க தாத்தன் ஒரே ஆள் போதும். மம்பட்டிய எடுத்தா மண்ணைப் போட்டு ஆத்தையே மூடீடுவாரு." என்று அவர் வயதையொத்த தோழர்கள் கேலி பேசும் போது அவரிடமிருந்து பளிச்சென்று ஒரு புன்னகைதான் வெளிப்படும். விளக்கற்ற இரவுகளில் அவர் தோட்டப் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும்போது பாம்புகள் கடந்து போகும். நான் அலறுவேன். "பயப்படாதப்ப... நாகராஜன்...நம்ம பய.. ஒண்ணும் செய்ய மாட்டன்.' என்பார். நாகராஜன் நம்ம பயலாகத்தான் இருந்திருக்க வேண்டும். 90 வயதுவரை அந்தத் தோட்டதிற்குள் சுற்றித் திரிந்த அவரை அவன் ஒன்றுமே செய்ததில்லையே...

என் தந்தை சென்னையில் பணியாற்றிய காலத்தில், தாத்தா திடீரென்று வருவார்; ஓரிரு நாள் இருந்து விட்டு, திடீரென்று கிராமத்திற்கேத் திரும்பிப் போய் விடுவார்."அவரால தோட்டம், தொரவை விட்டு சும்மா இருக்க முடியாதுப்பா." என்பார் என் தந்தை. தாத்தாவால் 90 வயதுக்கு மேல் கூட சும்மா இருக்க முடிந்ததில்லை. எந்த மகன் வீட்டிலும் ஓய்வு கொண்டு தங்குவதற்கு அவரது மனம் அனுமதித்ததில்லை."மருமகள்கள் எல்லாம் நான் தோள்ல தூக்கிப் போட்டு வளத்த சொந்தக்காரப் பொண்ணுகதான். என்னை உள்ளங்கையில வச்சு தாங்குவாங்கதான். ஆனால்..." என்று சொல்லி நிறுத்திக் கொள்வார் தாத்தா. அந்த ஆனாலுக்குப் பிறகு வார்த்தைகள் எப்போதும் தொடர்ந்ததில்லை. அவரது உலகத்தில் கலெக்டர்களும், வெள்ளைக்காரர்களும்தான் மிக உயர்ந்தவர்கள் - சாமி கூட அதற்கு அடுத்துதான். யாராவது ஒரு பேரனைப் புகழ வேண்டுமென்றால், "அவன் யாரு...சும்மா கலெக்டர் மாதிரியில்ல" என்றுதான் சொல்லுவார். இல்லையென்றால், “சும்மா.. வெள்ளக்காரன் மாதிரி..." பலரது தாத்தாக்களைப் போலவே, இன்று எனது தாத்தாவும் உயிருடன் இல்லை. அவரது நினைவுகள் மட்டுமே அவ்வப்போது தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. கூளையனூரில் மருத்துவனை கட்ட அவர் இலவசமாகக் கொடுத்த நிலமும், அந்த மருத்துவனையில் இருக்கும் அவர் பெயர் பதித்த கல்லும் உள்ளூர் மக்கள் மருத்துவச் சிகிச்சைக்காக வரும்போது கண்ணில் பட்டபடி இருக்கின்றன. அவரற்ற தோட்டத்தில் நாகராஜன்கள் நடமாடி மக்களிடம் அடிபட்டு இறந்து கொண்டிருக்கிறார்கள். அவரைப் பற்றிய பல விஷயங்கள் மறைந்து விட்டன. இருப்பினும், இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது - கடைசிவரை அவரோடு சேர்ந்திருந்த அந்த வெள்ளேந்தியான வெள்ளை மனம்!

Wednesday, January 07, 2009

நம்பிக்கையளிக்கும் தமிழ் இசையுலகம் 2009 (நாலு வார்த்தை-036)

சென்ற வருடத்தில் சிறந்ததாகக் 'கண்களிரண்டால்' பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் சிங்கப்பூர் ஒலி 96.8ன் நேயர்கள். இன்னும் பல விருதுகளைப் பெறப்போகும் 'சுப்ரமணியபுரம்' படத்தின் ஒரு அங்கமான இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர், புதியவரான ஜேம்ஸ் வசந்தன். தொலைக்காட்சிப் படைப்பாளராகத் தன்னை நிருபித்துவிட்ட ஜேம்ஸ், இந்தப் படத்தின் மூலம் மக்கள் ரசனையறிந்த இசையமைப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல இசையமைப்பாளர்கள் புதிதாக வருகிறார்கள்; போகிறார்கள். அவர்களுள் ஒரு சிலர் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள். அந்த ஒரு சிலரில் ஜேம்ஸ் வசந்தனும் இடம் பிடிப்பார் என்று முனைந்து சொல்வதற்கு, மீடியா உலகில் அவர் பெற்றிருக்கும் பல வருட அனுபவமும் காரணமாகிறது. இப்போது வரும் இசையமைப்பாளர்களும் மெதுவாக அடியெடுத்து வைப்பதில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு ஒரு சில படங்கள் என்பதே அவர்கள் பின்பற்றும் தாரக மந்திரம். ஏ.ஆர்.ரஷ்மான் தொடங்கி வைத்த பாணி அது. Quality movies, rather than quantity என்பது திரையுலகின் ஏறக்குறைய நடைமுறையாக உள்ளது. ஒரு காலத்தில் வருடத்திற்கு 10, 15 படங்கள் நடித்துக் கொண்டிருந்த கமல் ரஜினி உட்பட பலரும் இப்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்று நடிக்கத் துவங்கியுள்ளார்கள்.'நான் கடவுள்' ஆர்யாவைக் கொஞ்ச நாளாக ஆளையேக் காணவில்லை.நிற்க.

என்னதான் மெலோடிப் பாடல்கள் மக்கள் மனதில் முதல் இடத்தைப் பிடித்தாலும், குத்துப் பாடல்களே 'நாக்க முக்க, நாக்க முக்க' என்று மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கின்றன. ஒரு காலத்தில் 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே' என்று கும்மி பாடிய குழந்தைகள், இக்காலப் பள்ளி விழாக்களில், அவிழும் ஆடையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அரக்கப் பரக்க விழித்துக் கொண்டு ' நாக்க முக்க, நாக்க முக்க' என்று முக்குகிறார்கள். இது கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாத காலமாற்றம். 'தோழியா, என் காதலியா' என்று மெலடி போட்டாலும், விஜய் ஆண்டணி என்றதும், 'நாக்க முக்க'தான் ஞாபகம் வருகிறது. சில வருடங்களாகத் தரமான பாடல்களை வழங்கி வந்த விஜய் ஆண்டணி 2008ல்தான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார். பல வருடங்கள் நிலைத்து நிற்பதற்கான அடிப்படை இருக்கிறது அவரிடம். இவரது வரிசையில் தேவிஸ்ரீ பிரசாத்தையும் இணைத்துக் கொள்ளலாம். மிஷ்கினுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் சுந்தர் பாபு, 2008ல் மறுபடியும் has hit the bulls eye with 'கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்ன'. சித்திரம் பேசுதடி வெற்றியைத் தொடர்ந்து பெரிதாக ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரது ஓட்டம், மெதுவோட்டமாக இருப்பதன் காரணம் தெரியவில்லை.

வித்யாசாகரின் வாழ்க்கை வரலாற்றில் 2008 சுமாரான வருடம் என்றே குறிப்பிடப்படும். நல்ல இசைக்கலைஞன். நல்ல தமிழ்ப் பாடல்களைக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வமுள்ள கலைஞன். வித்யாசாகர், பரத்வாஜ் போன்ரவர்கள் நிலைத்திருப்பதும், வெற்றிகரமானவர்களாக இருப்பதும் முக்கியம் - நல்ல இசைக்கும், நல்ல தமிழுக்கும் இவர்களிடம் குறைந்தபட்ச உத்திரவாதம் உண்டு. தமிழ்த் திரையுலகம் என்ற எல்லையை விட்டு ஏ.ஆர்.ரஹ்மான் வெளியேறி வெகு நாட்களாகி விட்டன. அவ்வப்போது வருகிறார்; போகிறார். சக்கரக்கட்டி போன்ற படங்கள் அவரது இசையில் வந்து போயின. ஆனால், மக்களின் நாடி நரம்புகளைத் துடிதுடிக்க வைக்கும் மெல்லிசையோ அல்லது வன்னிசையோ அவரது இசைக் கூடத்தின் இடுக்குகளின் வழி வழிந்துவிடவில்லை. சிவாஜியின் வெற்றி மட்டுமே கொஞ்சம்போல இனிப்பு தடவி விட்டுப் போனது நாக்கில். ஏதோ ஒரு இலக்கை நோக்கித் தளராமல் முன்னேறி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. கொஞ்சம் கொஞ்சமாக தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு, சீக்கிரமே அவர் ஒரு இசைச்சிற்பமாக நம் முன் நிற்கக் கூடும். சமீபத்தியச் சிலம்பாட்டம் வரை அவரது ஆட்டம் சிறப்பானதாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "அடுத்து என்ன மாதிரியான இசை பிரபலமாகப் போகிறது என்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பேன்" என்று குறிப்பிட்டார் யுவன். அந்த கவனம், அந்த வேகம், சில வருடங்களின் ஓட்டத்தில் அவரை legend என்ற நிலைக்கு உயர்த்திவிடும் வாய்ப்பிருக்கிறது. கடந்த சில வருடங்களாக யுவனின் இசைப் பயணம் ஆர்பாட்டமற்ற நதி மாதிரி ஓடிக் கொண்டிருப்பதை உற்றுப் பார்ப்பவர்களால் உணர முடியும்.

2008ன் நம்பர் 1 யாரென்றால், பல விரல்களும் ஹாரிஸ் ஜெயராஜை நோக்கி நீள்கின்றன. சமீபத்திய 'கா·பி வித் அனு' நிகழ்ச்சியில் ஹாரிஸ் ஜெயராஜைப் பாராட்டித் தள்ளினார் 'சொல்லாமலே' சசி. FM ரேடியோக்களில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன ஹாரிஸின் பாடல்கள் என்று சொன்னார். அதுவே பலரது கருத்தாகவும் இருக்கிறது. தரத்தில் எந்த விதத்திலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத பாடல்களாக இருக்கின்றன ஹாரிஸின் பாடல்கள். மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களில் 25% தரமானவை என்றால், ஹாரிஸின் பாடல்கள் 80% தரமானவையாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னால் வந்த அவரது பாடல்களை இன்று கேட்டாலும், அவை ஒரு பூவின் புத்துணர்ச்சியோடு நம்மை நோக்கிப் புன்னக்கைக்கின்றன. எந்தப் பாடலிலும், பாடல் வரிகளை மீறி ஒலிப்பதில்லை இசை. வரிகள் பயணிக்கும் வாகனமாகும் இசை, எப்போதுமே மூழ்கடிக்கும் வெள்ளமாவதில்லை. இரைச்சலோடு ஒலிப்பதில்லை இசைக் கருவிகள் ; இனிமையோடும், அர்த்தங்களோடும் அழுத்தமாக மட்டுமே ஒலிக்கின்றன. அந்த அழுத்தம் நம் மனதில் அழிக்க முடியாத வரிகளாகப் பதிந்தும் விடுகின்றன. ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த கொடை. இனி வரும் வருடங்களும் அதை உண்மையென்று நிருபிக்கும். தமிழ்த் திரையுலகின் இசைக்காலம் 2009ல் எப்படி இருக்கும் என்ற யோசனையே பரவசமளிக்கிறது... கூடவே, நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கிறது!

Tuesday, January 06, 2009

நான் தொலைக்காட்சி நடிகனான கதை (நாலு வார்த்தை-035)

ஒரு நாள் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன். டபுள் டெக்கர் பஸ். அதன் மேல் தளத்தில் உட்கார்ந்து கொண்டு, ஓரமாக நகர்ந்து கொண்டிருந்த கட்டிடங்களைப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது நண்பர் முகமது அலியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. "தொலைக்காட்சி நாடகத்தில் ஒரு சின்ன வேடம் இருக்கு. நடிக்கிறீங்களா?"என்றார். அதைப்பற்றி அவர் ஏற்கனவே பேசி இருந்ததால் அது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. பெருமாள் கோயில் கோவிந்தசாமி பிள்ளை கல்யாண மண்டபத்தில் நடந்த சை.பீர்முகம்மதின் 'திசைகள் நோக்கிய பயணம்' நூல் வெளியீட்டின்போது அதைப் பற்றி என்னிடம் சொன்னார். நான் ஏதோ ஜோக்குக்குத்தான் சொல்கிறார் என்று நினைத்துக்கொண்டு 'நாங்க மதுரக்காரங்கள்ல... நடிச்சிருவோம்ல' என்று வடிவேலு பாணியில் சொல்லி விட்டேன். 'சரி, பார்ப்போம்' என்றார். உண்மையாகவே அழைத்து விட்டார்.'சரி, நாடகத்தில் என் கேரக்டர் எப்படி....' என்று இழுத்தேன்.'அதெல்லாம் நல்ல கேரக்டர்தான். கவலைப்படாதீங்க' என்றார்.'இல்லை...என் இமேஜைப் பாதிக்கிற மாதிரி...' என்று இன்னொரு இழுவை. பட்டென்று 'நீங்க என்ன எம்.ஜி.ஆரா?' என்ற மறுகேள்வி அவரிடமிருந்து வந்தது. நாம் பதில் சொல்வதற்குள் 'கவலைப்படாதீங்க...நல்ல கேரக்டர்தான். மீதி விஷயங்களை டைரக்டர் குமரன் பேசுவார்' என்றார். குமரன் தமிழ்த்திரைப்பட அனுபவமுள்ளவர். மிஷ்கின், சசி போன்றவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். பேசினார்.' சின்ன வேடம்தான் சார். ஒரு 5 வயது குழந்தைக்கு அப்பா. உங்களுக்கு மனைவி வேடத்தில் சோனியா நடிக்கிறாங்க' என்றார். அட... முதல்முறையா நடிக்கும்போதே நமக்கு ஒரு ஹீரோயினா?

Peace Centre-ல் இருக்கும் அலுவலகத்துக்கு அழைத்து ஒரு பக்க வசனத்தைக் கொடுத்தார்கள். ஒரு சீனில் மட்டும்தான் டயலாக். அதுவும் கொஞ்சம் புலம்பல், கொஞ்சம் மனைவியிடம் எரிச்சல் படுவது மாதிரி சீன். அடச்சே... அவ்வளவுதானா...'இல்ல சார்...இன்னும் மூணு சீன் இருக்கு. ஒரு பர்த்டே சீன், ஒரு தீபாவளி சீன், கடைசியில கொஞ்சம் புறாவெல்லாம் செத்துக் கிடக்கும். அதைப்பார்த்து அதிர்ச்சியடையிற மாதிரி இன்னொரு சீன்.ஆனால், அதிலெல்லாம் ரியாக்ஷன் மட்டும் காட்டினால் போதும் சார்' என்றார் இயக்குனர். என் வேடம் எப்படிப்பட்டது என்று புரிந்து விட்டது. பத்தோட பதினொன்னு... அத்தோட இது ஒண்ணு!. ஹீரோயின் சோனியாவும் வந்திருந்தார். அவரைப் பார்க்கிறபோது, என்னுடைய சகோதரியைப் பார்க்கிறமாதிரி இருந்தது. ஆனால் அதை அவரிடம் சொல்லவில்லை. சொன்னா, நடிக்கும்போது கெமிஸ்டரி workout ஆகாதில்ல? 'ஞாயிற்றுக்கிழமை ஷ¥ட்டிங் இருக்கு சார்..காலையில உங்க குழந்தையோட பர்த்டே பார்ட்டி சீன். அதுக்கு கொஞ்சம் ரிச்சா டிரஸ் போட்டுக்கங்க. நீங்க டயலாக் பேசுற சீனுக்கு கொஞ்சம் கேஷ¤வல் டிரெஸ் ஓகே..." என்று சொல்லியனுப்பினார்கள். அந்த ஒரு பக்க டயலாக்கை மனப்பாடம் செய்யவே பெரும்பாடாக இருந்தது. வயசாகிடுச்சில்ல... அந்த டிரஸா, இந்த டிரெஸான்னு யோசிச்சு, யோசிச்சு...ஒரு வழியா நாலைந்து செட் துணிமணிகளை எடுத்துத் திணித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை ஷ¥ட்டிங் நடக்கிற இடத்துக்குப் போய் சேர்ந்தேன்.

நான் போனபோது பர்த்டேக்கு ஏற்றவாறு அந்த இடத்தை அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். நானும் பலூனெல்லாம் ஒட்டினேன். நிறைய குழந்தைகள் தம் அம்மாக்களோடும், சிலர் அப்பாக்களோடும் வந்திருந்தார்கள். எல்லாம் பர்த்டே சீனில் நடிக்கதான். கேக் வெட்டும்போது என் அப்பாவாக நடிப்பவர் ஏதோ சொல்ல, மனைவி என்னை முறைக்க, நான் குற்ற உணர்வோடு தலைகுனிய வேண்டுமென்றார் Executive Producer ஆன முகமது அலி. பதட்டத்தோடு அப்படியே நடித்தேன். ஷாட் முடிந்தது. அடுத்த ஷாட்டிற்குப் போய் விட்டார்கள். நான் ஒழுங்க நடித்தேனா இல்லையா என்று சொல்ல ஆளில்லை. மெதுவாக அலியிடம் 'நான் ஒழுங்கா நடிச்சேனா?' என்று கேட்டேன்.'பிரமாதமா நடிச்சீங்க. குற்ற உணர்ச்சி கொஞ்சம் அதிகமோ?' என்றார் நக்கலாக. 'அவ்வ்வ்வ்' என்று வடிவேலு மாதிரி அழனும்போல இருந்தது. யோவ்... ஏன்யா இப்படித் தாளிக்கிறீங்க... அதற்கப்புறம் அந்த சீன், இந்த சீன், நொந்த சீன், வெந்த சீன் என்று ஏதேதோ சீன்கள் எடுத்துக் கொண்டே இருந்தார்கள். நான் நடிக்க வேண்டிய சீனை மட்டும் எடுக்கிற மாதிரி அறிகுறியே காணோம். மற்றவர்களது சீனை முதலில் எடுப்பதற்கு நிறைய காரனங்கள் இருந்தன - குழந்தைகள் சீக்கிரம் போகணும், அவரு சீனியர்...அவர் சீனை முதல்ல முடிச்சிடலாமே, அவருக்கு 7 மணிக்கு டியூட்டி...இப்படி நிறையக் காரணங்கள். ஒரு வழியாக என்னுடைய சீன் வந்தபோது இரவு மணி 8. நான் நடிக்க வந்து 12 மணிநேரமாகி இருந்தது.

நான் டயலாக் பேசியபடி நடந்து வந்து, கப்போர்டைத் திறந்து எதையோ தேடிவிட்டு, டயலாக் பேசியபடி கேமராவை விட்டு exit ஆக வேண்டும். நடித்தேன்."என்னங்க... கவிதையெல்லாம் எழுதுறீங்க... ஒரு நாலு டயலாக்கைப் பேச முடியலையா...மனைவிகிட்ட கொஞ்சம் டென்ஷனாக பேசுங்க.. இன்னும் கொஞ்சம் கோபம், விரக்தி வேணும்". உண்மையிலேயே 12 மணி நேரம் காத்திருந்ததில், எனக்குள் விரக்தி பொங்கி வழிந்தது. மறுபடியும் நடித்தேன். ஷாட் ஓகே. தயங்கியபடி, "எப்படிங்க நடிச்சேன்?" என்று அலியிடம் கேட்டேன். "உண்மையிலேயே நல்லா நடிச்சீங்க. நானே எதிர்பார்க்கல" என்று பதில் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. ஏதோ ஆறுதலுக்காக சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், அந்த நாடகம் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது நண்பர்கள் பலரும் நடிப்பு இயல்பாக இருப்பதாகச் சொன்னார்கள். ஒரு அனுபவம், ஒரு சில நினைவுகள்! என்றாலும், இனிமேல் நடிப்பு, கிடிப்பு பக்கமெல்லாம் தலைவைத்தே படுப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன். அதாங்க, பெரியவங்களே சொல்லிட்டாங்களே...களவும் கற்று மற - ன்னு!

Sunday, January 04, 2009

ராகுல் டிராவிடின் இடத்திற்கு குறி வைக்கும் ஐவர் அணி! (நாலு வார்த்தை-034)



எல்லா நல்ல விஷயங்களும் ஏதோ ஒரு நாள் முடிவுக்கு வரத்தான் செய்கின்றன. அந்த நல்ல விஷயத்தின் பெயர் ராகுல் டிராவிடாக இருப்பினும் கூட. அநேகமாக நியூஸிலாந்து டெஸ்ட் தொடரே அவர் விளையாடும் இறுதித் தொடராக இருக்கக் கூடும். அதில் சிறப்பாக விளையாடி, கங்குலி மாதிரி மதிப்பு, மரியாதையோடு தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க வேண்டுமென்பதே டிராவிடின் விருப்பமாகவும் இருக்கலாம். பந்து எக்கச்சக்கமாக ஸ்விங் ஆகும் நியுஸிலாந்தில் டிராவிட் எவ்வளவு முக்கியம் என்பதை தோனி வலியுறுத்தி இருப்பதை பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். அந்த தேசத்தில் விளையாட அனுபவசாலிகள் அவசியம். இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் ஒவ்வொரு முறையும் மோசமாக மட்டுமே விளையாடி இருக்கிறது. இந்த முறை அந்த கெட்ட பெயரை போக்க சகல வாய்ப்புகளும் தென்படும் சூழலில், அனுபவமிக்க டிராவிட் மிக, மிக அவசியம் என்பதால்தான் அவரை வைத்திருக்கிறார்கள், இல்லையென்றால், இங்கிலாந்து தொடரோடு அவருக்கு 'டாட்டா' சொல்லியிருப்பார்கள் என்று சொன்னால், டிராவிட் ரசிகர்கள் உதைக்க வருவார்கள் - ஆனால், அதுதானே நிதர்சனம்! அதெல்லாம் இருக்கட்டும் சாமியோவ்... அவருக்கு பதிலா விளையாட யாரு இருக்காங்க சாமியோவ்... என்றால், 5 பேர் கை துக்குகிறார்கள்!

முதல் ஆள் நம்ம சுப்ரமணியம் பத்ரிநாத். ரஞ்சி டிராபி உட்பட எல்லா உள்ளூர்ப் போட்டிகளிலும் கலக்கி வருகிறார். ரன்கள், ரன்கள் மட்டுமே அவருக்கு சிபாரிசு செய்து கொண்டிருந்தன கடந்த 4 வருடமாய். இப்போது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வந்திருக்கிறார். அவரது ஆதரவிருக்குமெனில், பத்ரி, குறைந்தபட்சம் 4 வருடமாவது இந்திய டெஸ்ட் அணியில் இருக்க முடியும். அதற்கான எல்லாத் திறன்களும் அவரிடம் இருக்கின்றன. ஆனால், வழங்கப்படும் ஓரிரு வாய்ப்புகளிலேயே சோபிக்க வேண்டிய நிர்பந்தம் அவர் மேல் இருந்து கொண்டே இருக்கும். அடுத்தவர் - ரோஹித் ஷர்மா. ரவிசாஸ்திரியால் தொடந்து promote செய்யப்படுபவர். திறனாளர்களைச் சரியாக அடையாளம் காண்பதில் வல்லவர் சாஸ்திரி. பெரும்பாலான அவரது கணிப்புகள் சரியாகவே இருக்கின்றன. ரோஹித்திடம் ஒருவித lazy elegance இருக்கிறது. அழகான 30 ரன்களைவிட, கஷ்டப்பட்டு சேகரிக்கும் 100 ரன்களை ஒரு அணி விரும்பும். நின்று, நீண்ட நேரம் விளையாட முடியும் என்று நிருபிக்க வேண்டிய நிலையில் ரோஹித் இருக்கிறார். அவர் இந்திய அணியின் நீண்டகால நம்பிக்கை.

சுரேஷ் ரய்னா கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டும், நன்றாக விளையாடியும் வருகிறார். இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதும், வலுவும் அழகும் இணைந்திருப்பதும் ரய்னாவின் பலம். அற்புதமான ·பீல்டர் என்ற விஷயம் கூடுதலாக சில மதிப்பெண்களைப் பெற்றுத் தருகிறது. நீண்ட இன்னிங்ஸ் விளையாடக் கூடியவர் என்றும் நிருபித்திருக்கிறார். இத்தனை positive-களுக்குப் பிறகும், சுரேஷ் ரய்னா ஒரு நாள் விளையாட்டுப் போட்டிகளுக்கு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுவதன் காரணம் தெரியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டால் பட்டென்று பற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கையளிப்பவர். பெங்கால்காரரான மனோஜ் திவாரி 'அச்சம் என்பது மடமையடா' என்று அடித்து விளையாடக்கூடியத் திறன் உள்ளவர். இவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து செய்தியில் இருந்தாலும் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. IPL போட்டிகளில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு ஏமாற்றினார் திவாரி. அது தற்காலிகமென்பதை சமீபத்திய ரஞ்சிப் போட்டி சதத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். Sweep shot-ஐ கடைசி நொடியில் ஸ்லிப் திசையில் late cutஆக மாற்றியடித்தது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. அந்த ஒரு ஷாட்டே சொல்கிறது - அவர் நீண்ட தூரம் செல்வார். ஆனால் வாய்ப்பு எப்போது வரும்?

இந்தப் பட்டியலில் கொஞ்சம் சர்ப்ரைஸாகச் சேருபவர் முரளி விஜய். திடீரென அடித்தது டெஸ்ட் சான்ஸ். அதில் சரியாக விளையாடி இருக்காவிட்டால், மொத்த கேரியரே தொலைந்து போயிருக்கும். ஆனால், அலட்டிக் கொள்ளாமல் விளையாடினார் விஜய். அவரது அடிகளில் தெரிந்த timing வியப்பளித்தது. எல்லா திசைகளிலும் பந்தடிக்கக்கூடிய திறனுள்ளவர் என்பதை நிருபித்து விட்டார். துவக்க ஆட்டக்காரரான விஜய், மத்தியில் ஆடுமாறு சொல்லப்படலாம், காரணம், நிலையாகிக் கொண்டிருக்கும் துவக்க ஜோடியான சேவாக் - கம்பீர். இந்த ஐவரில் முதல்வர் யார் என்பது அடுத்த புத்தாண்டுக்குள் தெரிந்து விடும். இந்த அலசல் இப்போது தேவையா எனத் தோன்றலாம்... ஆனால், முப்பதைக் கடந்த டெண்டுல்கர், லக்ஷ்மண், டிராவிட்டில், யாராவது ஒருவர் இந்த வருடம் வெளியாகத்தான் வேண்டும். அது அநேகமாக டிராவிடாகத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில்.... இந்த ஐவர் அணி உள்ளே வரத் தயாராக இருக்கிறது!

Friday, January 02, 2009

கிராமத்துக்காரனின் நகரப் பொம்மலாட்டம்! (நாலு வார்த்தை-033)

பொம்மலாட்டத்தைப் பற்றிய விமர்சனங்களுக்கும், வெற்றி, தோல்விகளுக்கும் அப்பால், பாரதிராஜா என்ற பெயர் தமிழ் சினிமா சரித்திரத்தில் மிக, மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்றைய தமிழ்ச்சினிமாவை ஆண்டு கொண்டிருக்கும் பாலா, அமீர் உட்பட பல படைப்பாளிகளுக்கு அவரே நம்பிக்கையாக இருந்திருக்கிறார். வழிகாட்டி என்ற வார்த்தைக்குள் அடங்க முடியாதபடி பாரதிராஜா பல கலைஞர்களையும் பாதித்திருப்பது தமிழ்ச் சினிமா வரலாற்றில் அவரது இடத்தை இன்னும் முக்கியமாக்கி விடுகிறது. பல கிராமங்களின் கருப்பு, வெள்ளை கனவுகளுக்கு வண்ணம் பூசிய இந்தக் கலைஞர், காலத்திற்கேற்பத் தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டிருக்கும் அற்புதம் அதிசயிக்க வைக்கிறது. பொம்மலாட்டம் அதற்கான சாட்சியாக பரிணமித்திருக்கிறது.

கலைப் படைப்புகள் அதனைப் படைப்பவனின் வாழ்க்கையிலிருந்தே வார்த்தெடுக்கப்படுகின்றன. உண்மையும்,கற்பனையும் சரியான விகிதத்தில் கலக்கும்போது அதுவே அற்புதமான கலைப்படைப்பாக வடிவம் பெறும். பொம்பலாட்டம் படத்தின் பல காட்சிகளில் வெள்ளை எழுத்துகளில் DIRECTOR என்று எழுதிய வெற்று நாற்காலி காட்டப்படும். அந்த நாற்காலியின் மேலாக ஒலிக்கும் இயக்குனரின் குரல். அந்த நாற்காலி மாதிரியே, நானா படேகர் வெற்றாகி விட, படம் நெடுக SUPER IMPOSE ஆகித் தெரியும் பாரதிராஜாவின் முகம். பிரசித்த பெற்ற அவரது கோபம், mood swings, களிமண்ணிலிருந்து பொம்மை பிடிக்கும் திறன் போன்ற இன்னும் பல, ஒவ்வொரு காட்சியாக வெளிப்பட, நானா படேகர் ஐஸ் கட்டியாக உருகிப் போய் விடுகிறார்; அங்கு பாரதிராஜாவே வெப்பமாகத் தகிக்கிறார். தன்னில் ஒரு பாதியை கலைப்படைப்பாக்கி விமர்சித்துப் பார்க்கும் தன்னம்பிக்கை எத்தனை பேருக்கு இருக்கிறது... இருப்பதும், இப்படி இருந்தால் நல்லதே என்று நினைப்பதுமாக, பொம்மலாட்டத்தில், 'ராணா' ஒரு அற்புதப் படைப்பு.

2006ன் துவக்க மாதத்தின் ஒரு Singapore Pan Pacific Hotel பகலில், பாரதிராஜா என்ற கலைஞருக்குள் தகித்துக் கொண்டிருக்கும் வெற்றி தாகத்தை பக்கத்திலிருந்து பார்த்தேன். அன்று அவர் 'மயிலு' என்ற பெண்ணின் நிஜமுகத்தை இன்னொரு முறை பதிவு செய்யும் ஆசையைச் சொன்னார். அந்த நிஜ மயிலு ஒரு ஸ்ரீதேவி போல் அழகானவளாக இருப்பாளா என்று கேட்கத் தோன்றியது; கேட்கவில்லை. 'குற்றப்பரம்பரை' என்பதே தனது லட்சியப்படம் என்று குறிப்பிட்டார். தென்பாண்டிச் சீமை என்ற பழக்கமான சூழலை பின்னணியாகக் கொள்ளப் போகும் அந்தப் படத்தில் அவர் சாதிப்பார் என்று ஒளிவிட்ட அவரது கண்கள் உறுதி கூறின. எனது கணிப்பு தவறில்லையெனில், அந்தப் படத்தில் பாரதிராஜா நிச்சயம் நடிப்பார். பொம்மலாட்டத்தில் நானா படேகர் நடித்த வேடத்தில் அவரே நடித்திருக்கலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். நடித்திருக்கலாம். அல்லது குரலாவது கொடுத்திருக்கலாம்...முடிந்து போன ஒரு விஷயத்தைப் பற்றி எத்தனை 'லாம்'கள் போட்டு என்ன ஆகி விடப் போகிறது? அந்த காலகட்டத்தில் அவர் மூன்று விஷயங்களைப் பற்றி கொஞ்சம் போல் கவலைப்பட்டார்.முதல் 2 விஷயங்கள் கொஞ்சம் பர்சனல். மூன்றாவது விஷயம், இன்னொரு வெற்றிப் படத்தைப் பற்றி! அந்த மூன்று கவலைகளும் 2008ன் இறுதிக்குள் தீர்ந்திருக்க, அந்த மாபெரும் கலைஞர் 2009ல் இன்னும் புதிய உச்சங்களைத் தொட முயல்வார் என்ற நம்பிக்கை வருகிறது.

பொம்மலாட்டம் படத்தில் பலரும் பல காட்சிகளை சிலாகித்தாலும், ருக்மணியை நானா படேகர் அடையாளம் காணும் பாடல் காட்சியில், ருக்மணியின் துப்பட்டா ஒரு நொடி தாளக் கருவியைத் தடவிவிட்டுப் போகும் அந்த shot - That is Bharathiraja என்று சொல்ல வைத்தது. அது பாரதிராஜாவுக்கே உரிய பிரத்தியேக touch! அமீர், பாலா, செல்வராகவன், சசிக்குமார், மிஷ்கின் கொண்ட இன்னொரு தலைமுறைக்கும் சவால்விடும் படைப்பாக 'பொம்மலாட்டம்' அமைந்திருக்கிறது. பாரதிராஜாவின் அடுத்த படைப்பு எதுவாக இருந்தாலும், அது, இளைய தலைமுறையின் நாடித் துடிப்பையும் உணர்ந்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமையும். ஒவ்வொரு கலைஞனும், ஏதாவது ஒரு காலகட்டத்தில் 'தான், தானாக இருப்பது சரியா...அல்லது அவனைப் போல், இவனைப் போல் மாறணுமா?' என்ற குழப்பமான நிலையைக் கடக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ஆனால், தன் மீதும், தனது படைப்பின் மீதும் நம்பிக்கை வைப்பவனே காலத்தைக் கடந்து நிற்கிறான். பாரதிராஜா எடுக்கும் பாரதிராஜா படத்தைப் பார்க்கவே பாரதிராஜா ரசிகர்களூம், தமிழ்த் திரை ரசிகர்களும் விரும்புக்கிறார்கள் என்பதை பாரதிராஜாவும் புரிந்து கொண்டிருப்பார் - பொம்மலாட்டத்தின் வெற்றி மூலம்!

Thursday, January 01, 2009

புதுவருஷமும், புதுவசந்தமும் (நாலு வார்த்தை-032)

சிங்கப்பூர் இந்தியர்களுக்கென்று இருக்கின்ற ஒரே தொலைக்காட்சி 'வசந்தம்'! சில மாதங்களுக்கு முன்புவரை 'வசந்தம் சென்ட்ரல்' என்றிருந்த அதன் பெயர் இப்போது மாற்றம் கண்டுள்ளது. வாரத்திற்கு 29 மணி நேரமாக இருந்த ஒளிபரப்பு நேரம் 65 மணி நேரமாகவும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. Arts Central, Kids Central போன்ற மற்ற ஒளிவழிகளோடு நேரத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த வசந்தம், தற்போது தனி ஒளிவழியாக இயங்குவதன் மூலம், சிங்கப்பூர் இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கிறது என்று சொல்லலாம். ஸ்டார் ஹப் கேபிள்விஷன் (SCV) வழி, சன் டி.வி மற்றும் விஜய் டி.வியின் நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழும் வாய்ப்பு இருந்தாலும், 'தங்களது பிரச்சனைகளைப் பேசும் தங்களது தொலைக்காட்சி' என்பது சிங்கப்பூர் இந்தியர்களின் நீண்டநாள் கனவு. துவக்க அறிகுறிகள் சரியென்றால், தரமான நிகழ்ச்சிகள் என்ற இலக்கை நோக்கி வசந்தத்தின் பயணம் வெற்றிகரமாகப் போகிறது என்று துணிந்து சொல்லலாம்...

தற்போது அதன் தலைமை நிர்வாகியாக இருக்கிறார் சபநிதா சண்முகசுந்தரம். அவர் பேசுவதை வசந்தம் தொலைக்காட்சியில் சின்ன, சின்ன 'கிளிப்பிங்'குகளாக சில முறை பார்த்திருக்கிறேன். அந்தப் பேச்சில் பளிசென்று தென்படுவது - அழுத்தமும், தெளிவும்! அவர் வசந்தத்தில் பதவியேற்றபின் வருகின்ற நிகழ்ச்சிகளில் அதே அழுத்தமும், தெளிவும் தென்படுவதாகச் சொல்கிறார்கள் நண்பர்கள். நிகழ்ச்சிகளின் தரத்தை உறுதி செய்வதில் அனுபவமும், இளமையும் உள்ள குழுவொன்று சபநிதாவிற்குப் பக்கத் துணையாக இருக்கிறது. திருமதி.விஜயா சரவணன், துடிப்புமிக்க இளைஞரான சரவணன், காமாட்சி அபிமன்னன், கண்ணன் கார்த்திக் போன்றோர் நிகழ்ச்சி நிர்வாகிகளாக இருக்கிறார்கள். அதிகரிக்கப்பட்ட நேரம், புதிய நிகழ்ச்சிகளை பரிச்சித்துப் பார்க்க வாய்ப்பளிக்கிறது. குறிப்பாக நேரடி ஒளிபரப்புகள். 'உடலும், உள்ளமும்', 'அரங்கத்தில் இன்று' என்ற இரண்டும் முக்கிய நேரடி நிகழ்ச்சிகள்.

'உடலும், உள்ளமும்' மருத்துவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி. அழகிய பாண்டியன் வழி நடத்துகிறார். நிறைய நேயர்கள் அழைத்து மருத்துவச் சந்தேகங்களைக் கேட்கிறார்கள். இருதய நோய் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண் அழைக்கிறார்...."டாக்டர் எனக்கு இதயநோய் இருக்கிறது. நான் Wine குடிக்கலாமா?" என்பது அவரது கேள்வி. டாக்டர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆர்வமாகக் கவனிக்கிறேன். டாக்டரின் இதழோரம் சிறு புன்னகை வெளிப்படுகிறது. சொல்கிறார்..."குடிக்கலாம்" "என்ன டாக்டர் இப்படி இப்படி சொல்றீங்க. என்னோட டாக்டர் குடிக்கக் கூடாதுன்னு சொன்னாரே." "குடிக்கலாம்மா...ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு." என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. டாக்டரின் நேர்மையானப் பதிலைப் பற்றி நெடுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் நடந்த 'அரங்கத்தில் இன்று' நிகழ்ச்சியில் டாக்டர் அனந்த நாகேஸ்வரன் பொருளாதாரப் பின்னடைவைப் பற்றி எளிமையான தமிழில் தெளிவாக விளக்கினார். தொலைக்காட்சி பார்ப்பவர்களின் வாழ்க்கையோடு நெருங்கி விடுகின்றன இப்படிப்பட நிகழ்ச்சிகள். இந்த நிகழ்ச்சியை வழி நடத்தும் G.T.மணி நிறைய தயாரிப்போடு வருவதை உணர்கிறார்கள் நேயர்கள். இதே G.T.மணி, 'ஒலி, ஒளி' நிகழ்ச்சியில் நடுவராக அவர் சொன்ன கருத்தொன்று கவனத்தை ஈர்த்தது, 'ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிப் படைப்பாளர் மனதுக்குப் பிடித்தமானவராக மட்டுமல்ல, மரியாதைக்குரியவராகவும் இருக்க வேண்டும்.." விஜய் டி.வியில் 'நீயா, நானா' நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத்தின் முகம் சட்டென்று மனதில் வந்து போனது. ஒரு வாசகமானாலும், திருவாசகம்!

தகவல், கல்வி, பொழுதுபோக்கு, இளையர் நிகழ்ச்சிகள் என பல பிரிவுகளிலும் சம கவனம் செலுத்தி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வருகிறது வசந்தம். தற்போது தொடர் நாடகங்களும் ஒலிபரப்பாகத் துவங்கியுள்ளது. கூடவே தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்ட நாடகங்களையும் ஒலிபரப்புகிறது. சிங்கப்பூர் தமிழ் ஒளிபரப்புத் துறையில் கலைஞர்களும், தொழில் நுட்பத் திறனாளர்களும் அதிக அளவில் உருவானால், சீக்கிரமே, தமிழ்நாட்டு நாடகங்களுக்கான தேவையில்லாத நிலை வரலாம். வசந்தத்தில் - தமிழ்த் திரைப்படங்களோடு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிப் படங்களும் ஒலிபரப்பாக ' பகுத் அச்சா ஹாய்' என்று சம்சாரித்தபடி படம் பார்க்கிறார்கள் பலஇன, மொழி மக்கள். வசந்தம் சென்ட்ரல், வசந்தமாக மாறி கொஞ்ச நாள்தான் ஆகிறது. அதற்குள் சிலர் வசந்தம் மீதான விமர்சனத்தை வைக்க துடிக்கலாம் சிலர். ஆனால், That is too early! இன்னும் ஒரு வருடத்திற்குப் பிறகுதான் வசந்தம் பற்றிய விமர்சனங்களை முன் வைக்க முடியும். அதுதான் நியாயம்! அதுவரை, வசந்தத்தைப் 'பார்த்தாலே பரவசம்' என்று பார்ப்பது மட்டுமே சிங்கப்பூர்த் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் வேலையாக இருக்கும்!!

Wednesday, December 31, 2008

டைரிகள் - எழுதியவை, எழுதாதவை, எழுத இருப்பவை (நாலு வார்த்தை-031)

1997ம் வருட டைரி ஒன்று என்னிடம் இருக்கிறது. தரமான தாளால் செய்யப்பட்டது. இன்று பார்த்தாலும் புதுசாக இருக்கும். அதன் தரமும், அதில் ஒரே ஒரு நாள் மட்டுமே நாட்குறிப்பு எழுதினேன் என்பதுமே அதன் புதுசான தன்மைக்குக் காரணமென்று நினைக்கிறேன். கவிப்பேரரசு வைரமுத்தை எனது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்குமாறு கேட்டு மாமாவுடன் போய் சந்தித்தேன். அந்த ஒரு நாள் நிகழ்வு மட்டுமே டைரியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்குமேல் அந்த டைரியில் எதுவுமில்லை - ஒரு சில வரவு செலவு கணக்குகளைத் தவிர. இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது. எழுதிய சில பக்கங்கள்; எழுதாமல் பல பக்கங்கள். இதுதான் கடந்த வருடங்களில் நடந்தது. இனி வரும் வருடங்களிலும் நடக்கலாம்.

(சமீபத்திய புகைப்படம்)
என்னுடைய தந்தை தினமும் டைரி எழுதுவார். எண்ணூர் அனல்மின் நிலையத்தில் Turbine Maintenance பிரிவில் பணியாற்றிய காலத்தில், தினமும் அவர் வேலைக்கு டைரியோடு செல்வதை ஒரு சிறுவனாகப் பார்த்திருக்கிறேன். அந்த டைரிகளில் எந்திரங்களின் படங்களை dimension-களோடு வரைந்து வைத்திருப்பார். 1960கள் துவங்கி, இப்படிப்பட்ட பல பழைய டைரிகள் அவரிடம் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். 1980களில் அவருக்கு தேக்கடி அணையின் அடிவாரத்தில், தமிழகப் பகுதியில் அமைந்துள்ள லோயர் கேம்பிற்கு பணிமாற்றலானது. அந்தப் புனல் மின் நிலையத்தில் அவர் ஏற்கனவே 1960களின் இறுதியில் பணியாற்றியவர். அந்த வேலை பற்றிய குறிப்புகளடங்கிய பழைய டைரியையும் எங்களிடம் புன்னகையோடு காட்டினார். தேக்கடி அணையிலிருந்து பென்ஸ்டாக் பைப்புகள் என்றழைக்கப்படும் பெரிய குழாய்களின் வழி தண்ணீர் புனல் மின் நிலையத்திற்கு வரும். செங்குத்தாக இறங்கும் அந்த பென்ஸ்டாக் பைப்புகள். அந்தக் குழாய்களின் வழி இறங்கி வரும் நீரை முறைப்படுத்த அதன் வழி நெடுக ஆங்காங்கே valveகளைப் பொருத்தி இருப்பார்கள். ஆனால், அந்த வால்வுகள் பல ஆண்டுகளாக திறக்கவோ, மூடவோபடாமல் ஒரே நிலையிலேயே இருந்து வர, ஆள் நடமாட்டமின்மையால், அவற்றைச் சுற்றி செடிகள் வளர்ந்து அவற்றை மறைத்து விட்டன. ஒரு முறை அந்த வால்வுகளைச் சோதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. என் தந்தை ஒரு இடத்தைக் குறிப்பிட்டு, அங்கும் ஒரு 'வால்வு' இருக்கிறது என்று சொல்ல, மேலதிகாரிகள் இல்லையென்று திடமாக மறுத்திருக்கிறார்கள். கடைசியில் எல்லோரும் ஒரு குழுவாக ஜீப்புகளில் ஏறிப் போய் காட்டுப் பகுதியில் தேடினால்... அவர் சொன்ன இடத்தில் அந்த 'வால்வு' இருந்ததாம். அந்த துல்லியத்திற்கு உதவியது 60களில் எழுதப்பட்ட டைரிக் குறிப்புகள்.

(கீழிறங்கும் பிரமாண்ட குழாய்கள்)

ஒரு நாள் டைரி எழுதும் பழக்கத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, இப்படி ஒரு கவிதை மலர்ந்தது....

ஐந்தரை கண்விழிப்பு/ ஐந்தைந்து நிமிடமாய் எட்டிப்போகும் எழுகை.../ஏதேனும் மிக மறந்து / அலுவலக வாகனம் நாடி / அவசர ஓட்டம்.../அதை முடி, இதை முடி / அதிகார ஏவல்கள் / அது வேண்டும், இது வேண்டும் / தொழிலாளர் தேவைகள்...

அதை முடித்து இதை முடித்து / அதைச் செய்து இதைச் செய்து / எழுதாத டைரியோடு / ஓடியே போகும் ஒரு வாரம்! /

ஞாயிற்றுக்கிழமை நடுநிசியில் / எதேட்சைக் கண்விழிப்பில் / ஏக்கக் கைநீட்டி / என்மனம் துலாவும் / இன்னொரு சனிக்கிழமை சாயந்திரம்!
என்னைப் பொருத்தவரை எழுதாத டைரியோடு ஓடிப் போகும் வாரங்களும், வருடங்களும் அதிகம்.

2009 வருகிறது. ஒவ்வொரு வருடமும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் புத்தாண்டு உறுதிமொழிகளும் கூடவே வந்து விடும். ஓரிரு வாரங்களுக்குள் அந்த உறுதிமொழிகள் மறந்து போவதும் வழக்கம்போல் நிகழக்கூடும். இது ஒரு pessimistic மனோபாவம் என்று தோன்றலாம். ஆனால், பெரும்பாலும் அப்படித்தானே ஆகிறது? இதுவரை படித்த பொன்மொழிகளிலேயே என்னுள் ஆழமாகப் பதிந்து போனது 'மனிதன் - பழக்கத்தின் அடிமை' என்பது. அதை ஆழமாக நம்புவதே அப்படி ஆழமாகப் பதியக் காரணம். இரவு எத்தனை மணிக்குப் படுத்தாலும் காலை 5 மணிக்கு எழுவது ஒரு காலத்தில் கஷ்டமாக இருந்தது. இப்போது பழகி விட்டது. அப்படியென்றால், டைரி எழுதுவதை ஒரு பழக்கமாக மாற்றி, அதற்கு அடிமையாவதும் சாத்தியம்தானே? அதைத்தான் இந்த வருடம் செய்வதாக உத்தேசம். அது மட்டுமே இந்த வருட உறுதிமொழியாகிறது. 2009 டிசம்பர் 31 பதிவில் இதைப் பற்றி எழுத முடிகிறதா... பார்ப்போம்! அனைவருக்கும் அனைத்து நலன்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் இந்தப் புத்தாண்டு!!

Tuesday, December 30, 2008

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை - சில சிங்கப்பூர் கனவுகள் (நாலு வார்த்தை-030)

சிங்கப்பூரில் நிரந்தரவாசிகளாக இருக்கும் இந்தியர்களுக்கு இருக்கும் பொதுவான கனவுகள் இரண்டு. 1.சிங்கப்பூரில் வீடு வாங்குவது. 2.இந்தியாவில் வீடு வாங்குவது. குழந்தை குட்டிகளோடு சிங்கப்பூரின் வசதி வாய்ப்புகளை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், சதா இந்திய நினைவுகளோடு துடித்துக் கொண்டிருக்கும் மனமே இரண்டாவது ஆசைக்குக் காரணமாகிறது. வேலை நிமித்தம் சிங்கப்பூரில் கால் வைத்த மறுநிமிடமே நிரந்தரவாசியாக வேண்டுமென்ற ஆசையும், அது கிடைத்ததும் கடனைக் கிடனை வாங்கி ஒரு வீட்டை வாங்கி விட வேண்டுமென்ற ஆசையும் பலரது மந்திலும் ரெக்கை கட்டிப் பறக்கத் துவங்குகின்றன. நிரந்தரவாசம்- சிலருக்கு சுலபமாகவும், சிலருக்கு மிகுந்த போராட்டத்திற்குப் பிறகும் கிடைக்கிறது. சிலருக்கு அது இறுதிவரை கிடைக்காமலே போவதும் உண்டு.

ஏன் கிடைக்கிறது, ஏன் கிடைக்கவில்லை என்பது பலருக்கும் புரியாத சிதம்பர ரகசியம். ஆனால், சிங்கப்பூரின் நீண்ட காலத் தேவைகளுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டே அவை வழங்கப்படுவதை பலரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்குக் கூட கிடைக்காத நிரந்தரவாசம் ITI படித்த எலக்ட்ரிஷியனுக்குக் கிடைத்து விடுகிறது. நிரந்தரவாசத்துக்காக, ஒரு விக்கிரமாதித்தியனைப் போல மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நம் குடும்பத்தில் யாராவது புண்ணியம் செய்திருந்தால் நம் வாழ்வில் அதிசயங்கள் நடக்கின்றன. இந்தியாவில் டிப்ளமா படித்த பையனொருவன், நான் பணியாற்றிய ஜப்பானியக் கம்பேனியில் Work Permit-ல் எலட்ரிஷியனாக வேலை செய்து கொண்டிருந்தார். பொறுப்பாக வேலை செய்வார். கஷ்டப்பட்டு வேலை செய்தால் மாதம் 700 வெள்ளி சம்பளம் கிடைக்கும். 1999ல் நானொரு அமெரிக்கக் கம்பேனிக்கு வேலை மாறினேன். அங்கு ஒரு எலக்ட்ரிக்கல் சூபர்வைஸர் உடனடியாகத் தேவைப்படுவதாகவும், 2000 வெள்ளி சம்பளம் தருவதாகவும் கூறினார்கள். இந்தப் பையனை சிபாரிசு செய்தேன். ஆனால் 4000 வெள்ளியாவது சம்பளம் தரவேண்டுமென்றேன். அவர்களின் அவசரம் எத்தகையதென்ற ரகசியம் எனக்குத் தெரிந்திருந்தது. அதே சம்பளத்தில் அந்தப் பையனுக்கு வேலை கிடைத்தது. சீக்கிரமே நிரந்தரவாசம் கிடைத்தது. கல்யாணமானது. இன்று அந்தப் பையன் மனைவி, குழந்தைகள், சொந்த வீடு என்று மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆண்டவனது அன்புக் கரங்கள் நம்மை எப்போது தொடுமென்று நமக்குத் தெரியாது. அது தொடும்போது, நிரந்தரவாசம் உட்பட எல்லாமே கிடைக்கும்!

சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் மறுவிற்பனைச் சந்தையில் வீடுகளை வாங்கலாம். சலுகை விலையில் கிடைக்கும் அரசாங்க வீடுகள் குடிமக்களுக்குக் கிடைக்கின்றன. 2 நிரந்தரவாசிகள் சேர்ந்துதான் வீடு வாங்க முடியுமென்பது விதி. அந்த இரண்டாம் நபர் பொதுவாக கணவரின் மனைவியாக இருக்கிறார்கள். 1997-98 ஆசிய நிதி நெருக்கடியின்போது, சிங்கப்பூரில் வீட்டு விலைகள் வெகுவாகக் குறைந்தன. 96ன் துவக்கமெல்லாம் peak period. அப்போது வீடு வாங்கியவர்கள் பெரும் விலை கொடுத்தார்கள். வாங்கி ஆறே மாதத்தில் வீட்டு விலை 10 -20 சதவீதம் குறைந்தால் அவர்களது மனநிலை எப்படி இருந்திருக்கும்? 1998-ல் இருந்து சிங்கப்பூர் வீவக வீடுகளின் (Housing Development Board) விலை கொஞ்சம் கொஞ்சமாக கூடியபடி இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டது. அந்த விலையேற்றம் தற்போது ஒரு சமநிலையை எட்டியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் போகப் போகத்தான் தெரியும். ஆனால் அது வீடு வாங்க வேண்டுமென்ற நிரந்தரவாசிகளின் தாகத்தைக் குறைக்கவில்லை. இந்திய நிரந்தரவாசிகள் சிங்கப்பூரில் வீடுகளை வாங்கினார்கள்; வாங்குகிறார்கள்; இனியும் வாங்குவார்கள்!

வாங்கியாச்சா... உடனே இந்தியாவில் வீடு வாங்கும் அடுத்த கனவு துவங்கி விடுகிறது. "என்னதான் இருந்தாலும், பிள்ளைகள் வளர்ந்த பிறகு, ஊர்லதாங்க செட்டில் ஆகணும்" என்பது அவர்கள் தரும் விளக்கம். அப்படிச் சொன்னவர்களில் யாரும் ஊருக்குத் திரும்பியதாகத் தெரியவில்லை. "ஊர்த் தண்ணி பிள்ளைகளுக்கு ஒத்துக்கவே மாட்டேன்னுதுங்க...குண்டு, குண்டா இருக்க கொசுக்களைப் பார்த்து பிள்ளைங்க அலர்றாங்க.." இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி சிங்கப்பூரில் தொடரும் வாழ்க்கை. சிங்கப்பூர் மண்ணின் மகிமை அப்படி. மறுநடவு செய்யப்படும் மரங்களே இங்கு வலுவாக வேரூன்றி விடுகின்றன. ஆனாலும் ஊரில் வீடு வாங்கும் அல்லது கட்டும் கனவைப் பலரும் கைவிடுவதில்லை. வாங்கிக் கட்டி, வாடகைக்காவது விட்டு விடுகிறார்கள். சொந்தக்காரர்களை அனுபவிக்க விடுபவர்களும், விடுமுறையில் ஊருக்குப் போகும்போது வாடகைக்கு விட்ட வீட்டைப் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விட்டுத் திரும்புபவர்களும் கூடிக் கொண்டிருக்கிறார்கள். சமீப காலத்தில், இந்திய வீட்டுமனைகளை விற்பனை செய்யும் சிங்கப்பூர் நிறுவனங்களும் கூடி இருக்கின்றன. வானொலியில் அவர்களின் கவர்ச்சியான விளம்பரங்களும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அவை, ஊரில் வீடு வாங்கும் இந்தியக் கனவிற்கு எண்ணெய் வார்க்க... ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலுமாக அல்லாடிக் கொண்டிருக்கின்றன பல மனங்கள்!

Monday, December 29, 2008

கம்பன், நடிகர் சிவக்குமாருக்கு நன்றி சொல்ல வேண்டும்! (நாலு வார்த்தை-029)



நேற்று இரவு, டேங்க் ரோடு அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில், கம்பராமாயணத்தை மீள் ஞாபகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை வழங்கியவர் நடிகர் சிவக்குமார். 'கம்பன் என் காதலன்' என்ற தலைப்பில் அவரது இலக்கியப் பேருரைக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. ஏறக்குறைய 800 பேருக்கும் மேல் அவரது உரையை 2 மணி நேரத்திற்கும் மேல் அமைதியாக ரசித்துக் கேட்டார்கள். அந்த அமைதிக்கும் ரசனைக்கும் சிவக்குமாரின் ஆளுமை மிக்க பேச்சே காரணமானது. "உண்மையிலேயே சொல்றேன்... உலகத்தில் எங்கேயும் உங்களைப்போல் ஒரு அருமையான கூட்டம் கிடைக்கவே கிடைக்காது." என்று பேச்சை முடித்ததும், இரண்டு முறை அழுத்தமாகக் குறிப்பிட்டார் சிவக்குமார். அது உதடுகளில் இருந்து உதிர்ந்த ஒப்பனை வார்த்தைகளல்ல; மனதின் ஆழத்திலிருந்து வடிந்த உண்மை வார்த்தைகள் என்பதை அரங்கிலிருந்த அத்தனை பேரும் உணர்ந்து கொண்டார்கள்.


சிங்கப்பூர் போன்றதொரு நவீன தேசத்தில், கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் இன்னும் இரண்டு தலைமுறைக்கு மேல் உயிர்ப்போடு இருக்குமா என்ற கேள்வியை அங்கிருந்த பலரது மனதிலும் இந்தப் பேச்சு எழுப்பியிருக்கக் கூடும். எதிர்மறை பதில்களே விடையாகவும் கிடைத்திருக்கக் கூடும். நிஜத்தில், நாம் இழந்து கொண்டிருக்கும் பண்பாட்டுக் கலாச்சார அடையாளங்களில் இதிகாசங்களும் ஒன்றாகிவிடும் வாய்ப்புகள் அதிகம். அதிகம் புழக்கத்தில் இல்லாத எந்த ஒன்றும் தனது முடிவைத் தானே தேடிக் கொள்ளும் என்ற இயற்கை நியதிக்குள் இதிகாசங்களும் அடங்கி விடுமோ என்ற அச்சம் பலரது மனதிலும் இருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் இந்து அமைப்புகளும், அவை ஏற்பாடு செய்யும் இதிகாச உரைகளும் ஒரு சில தலைமுறைக்கு பலனளிக்கலாம்... அதற்கு அடுத்த தலைமுறைகள்? இளைய தலைமுறையின் தேவைகளும், தேடல்களும் வேறாக இருக்கின்றன. PSP விளையாட்டுகளும், MP3 இசையுலகும், ஆங்கிலத் திரைப்படங்களும், தொலைக்காட்சியும், கல்வி நிலையங்களும், விரைவு உணவகங்களும், நண்பர்களும் எடுத்துக் கொண்ட நேரத்திற்குப் பின் எங்கிருக்கும் இதிகாசத்திற்கான நேரம்? பதின்ம வயதின் இயல்பான பிரச்சனைகளைக்கூட பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத இடைவெளிகளோடு இருக்கும் ஒரு தலைமுறையிடம், பெற்றோர், இதிகாசங்களை எடுத்துச் செல்வது எப்படி?


இருட்டாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில்..புலம்பும் குரல்களை விட, விளக்கேற்றும் விரல்கள்தானே முக்கியம்? சிவக்குமாரின் பேருரை ஒரு விளக்காக அமைந்தது. அவர் கம்பராமாயணத்தில் 100 முக்கியப்பாடல்களை எடுத்துக் கொண்டு, இரண்டு மணி நேரம் சொற்பொழிவாற்றினார். கம்பராமாயணத்தை முதல்முதலாகக் கேட்பவர்களுக்கும் அதன் முழு சாராம்சத்தையும் புரிய வைத்த பேச்சாக இருந்தது அது. தங்கள் பிள்ளைகளோடு அந்த நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்கள், பின்னொரு நாளில் அந்தப் பிள்ளைகளிடம் அதைப் பற்றிப் பேசக்கூடும். இப்படியாக கம்பராமாயணம் இன்னொரு தலைமுறைக்கும் செல்லக்கூடும். பல பத்தாண்டுகளாக சிவக்குமார் ஒரு நடிகராக பெற்றிருக்கும் பயிற்சி, இந்த சொற்பொழிவிற்கு வெகுவாகப் பயன்பட்டதை உணர முடிந்தது. குரலின் ஏற்ற இறக்கங்கள், உடல் பாவனைகள், முக வெளிப்பாடுகள், சீற்றங்கள், சிணுங்கள்கள், காலகாலமாக நாமறிந்த சிவக்குமாரின் குரல் ஆளுமை - இவையெல்லாம் சேர்ந்து மகுடி ஊதிய ஒரு மாலையில், பாம்பாக படமெடுத்து நின்றது பார்வையாளர்களின் கவனம். தலைக்கு மேல கையுயர்த்தி கும்பிட்டு சிவக்குமார் தனது உரையை முடித்ததும் அங்கிருந்த அத்தனை பேரும் 5 நிமிடத்திற்கும் மேல் தொடர்ந்து கை தட்டினார்கள். அது - நான் இதுவரை பார்த்த சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் வேறு எந்த இலக்கியவாதிக்கும் கிடைக்காத பெரிய மரியாதை.

கம்பன் உயிரோடு இருந்திருந்தால் ஓடி வந்து சிவக்குமாரைக் கட்டிக் கொண்டு இந்த உரைக்காக நன்றி சொல்லியிருக்கக் கூடும். கம்பன் - சிங்கப்பூர் மக்களின் கரங்களில் நின்று ஓசையெழுப்பிக் கொண்டிருந்தான். மொத்தத்தில், இந்த நிகழ்ச்சி, சிவக்குமார் என்ற மனிதரைப் பற்றி சிங்கப்பூர் மக்கள் மனதில் இருந்த நல்ல பிம்பத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது. சிவக்குமார் பேசிய பொழுதெல்லாம் அவருக்குள் இருக்கும் நடிகனும் அவரறியாமல் அவருடன் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். போதும் வண்ணத்திரை, போதும் சின்னத்திரை என்று முடிவெடுப்பதற்கும், அந்த முடிவில் உறுதியாக நிற்பதற்கும் திடமனதும், ஒழுங்கும் வேண்டும் - அதை சிவக்குமாரிடம் காண்கிறோம். ஒரு ஓவியராக, இலக்கியவாதியாக தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிக் கொண்டிருக்கும் சிவக்குமாரிடம் அளவற்ற அர்ப்பணிப்பையும், தெளிவையும் கூடவே காண்கிறோம். திட்டமிட்டு செயல்படுவதற்கும், அதில் ஒழுங்கை தொடர்ந்து கடைபிடிப்பதற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது சிவக்குமாரிடம்!

Sunday, December 28, 2008

30 வெள்ளிக்கு வாங்கினால் 130 வெள்ளிக்குப் பேசலாம் - இது தொலைபேசும் காலம்! (நாலு வார்த்தை-028)

பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் சிங்கப்பூரிலிருந்து இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புக் கட்டணம் மிக அதிகம். அந்த நாடுகளில் இருந்து வேலை நிமித்தமாக சிங்கப்பூர் வந்தவர்களுக்கு மாதம் ஒரு முறை அல்லது இருமுறை சொந்த பந்தங்களை அழைத்துப் பேசுவதே மிகுந்த செலவளிக்கும் விஷயமாக இருந்தது. பொரும்பாலானவர்கள் பொதுத் தொலைபேசிகளைத்தான் அதற்காகப் பயன்படுத்தி வந்தார்கள். என்ன கட்டணமாக இருந்தாலும் பரவாயில்லை, பாசத்திற்குரியவர்களின் குரலை கேட்டே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில், மாதச் சம்பளத்தில் 20 - 30 சதவீதத்தை அதற்காக செலவு செய்தவர்களும் உண்டு. அதில் அடியேனும் ஒருவன். இப்போது நிலமை மாறி விட்டது.இன்று ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைத்தொலைபேசியாவது இருக்கிறது. நமது தேவையைப் பொறுத்து, ரசனையைப் பொறுத்து, கைத் தொலைபேசிகளும் வித விதமான வடிவங்களில், வசதிகளில் கிடைக்கின்றன. அலுவலகங்களில், வீதிகளில், பேருந்துகளில், எம்.ஆர்.டிகளில் என்று எப்போதும் கைத்தொலைபேசியோடுதான் வாழ்க்கை நடக்கிறது. ஒரே வீட்டில் வேறு வேறு அறைகளில் இருப்பவர்கள் கூட கைத் தொலைபேசியில் பேசிக் கொள்ளக் கூடிய நிலமை கூட இருக்கிறது. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் தொலைதொடர்புத்துறையில் ஏற்பட்டிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியும், அதன் காரணமாகக் குறைந்திருக்கும் தொலைதொடர்புக் கட்டணங்களும்தான்.

சிங்கப்பூரில், முன்பு சிங்டெல் நிறுவனம் மட்டுமே களத்தில் இருந்தது. இன்றோ ஸ்டார்ஹப், M1 போன்ற நிறுவனங்களும் அதற்குப் போட்டியாகக் களத்தில் இருக்கின்றன. சலுகைகளை அள்ளித் தெளித்து அவர்கள் அறிவிக்கும் புதுப் புதுத் திட்டங்களால், அதனால் குறைந்து கொண்டிருக்கும் கட்டணங்களால், வாடிக்கையாளருக்குத்தான் கொண்டாட்டம். அதா, இதா? எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் சராசரி வாடிக்கையாளர். தொலைதொடர்பு நிறுவனங்களுக்குள் நிலவும் ஆரோக்கியமான போட்டியால், ரொம்ப தூரத்தில் இருந்த நாடுகளும், ஊர்களும், சொந்தங்களும் குறைந்த செலவில் காதுக்கு மிக அருகில் வந்து விட்டன.வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் இந்த நிறுவனங்கள் விளம்பரங்கள் உட்பட புதுப்புது யுக்திகளைக் கையாளுகின்றன. இந்த நிறுவனங்களின் தயவில் தமிழகத்தின் திரை நட்சத்திரங்கள் சிங்கப்பூரிலுள்ள இந்திய ஊழியர்களுக்கு அடிக்கடி தரிசனம் தருகிறார்கள். தூரத்து நட்சத்திரங்களை, நிலா மாதிரி மிக அருகில் பார்ப்பதில் அவர்களுக்கும் மகிழ்ச்சிதான்.தினந்தோறும் வெளிநாட்டுத் தொலைபேசித் தொடர்பைப் பயன்படுத்தும் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். அதன் மூலம் கணிசமாக லாபம் பெறும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அந்த ஊழியர்களை தங்களிடம் தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து முயலுகின்றன.


இப்போது இந்த பெரிய நிறுவனங்களோடு பல சிறிய நிறுவனங்களும் போட்டியில் குதித்து விட்டன. International calling cards என்று அழைக்கப்படும் சர்வதேச அழைப்பு அட்டைகள், call back cards என்று வெகு விலைக் குறைந்த, ஆனால் நீண்ட நேரம் பேசக் கூடிய அழைப்பு அட்டைகள் ஏராளமானவை இப்போது சந்தையில் கிடைக்கின்றன. 8 வெள்ளி கொடுத்து ஒரு அட்டை வாங்கினால் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் இந்தியாவிற்குப் பேச முடியும் என்பதால், விவசாயம், பிள்ளைகளின் படிப்பு, குடும்பப் பிரச்சனைகள், கடன் என்று எல்லா விஷயங்களையும் நிதானமாகப் பேச முடிகிறது. பெரிய நிறுவனங்களும் இந்த போட்டியில் புது வியூகம் அமைத்துக் குதித்திருக்கின்றன. 28 வெள்ளிக்கு வாங்கினால் 128 வெள்ளிக்குப் பேசலாம், 30 வெள்ளிக்கு வாங்கி 130 வெள்ளிக்குப் பேசலாம் என்ற சொல்லும் விளம்பரங்களை சிராங்கூன் ரோடு முழுவதும் பார்க்க முடிகிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் அவற்றின் மேல் நடக்கவே முடிகிறது...


புறாக்களின் கால்களில் கடிதங்களைக் கட்டித் தூது விட்டது அந்தக்காலம். இப்போது பாசமுள்ளவர்கள் வளர்க்கவும், மாமிசப் பிரியர்கள் சமைக்கவும் மட்டுமே பயன்படுகிறது புறா. இன்றைய பொழுது, கால ஓட்டத்திற்கு ஏற்ப நாம் மற்ற மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் முறைகள் நிறையவே மாறி விட்டன. அந்த வகையில் மனித குலத்தை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்வதில் தொலைதொடர்புத்துறை பெரிய பங்கு வகிக்கக்கூடும். தேசம் விட்டுத் தேசம் வந்தவர்கள் தமது உறவினர்களோடு குறைந்த தொடர்பு கொள்ள வாய்ப்பளித்திருப்பதன் மூலம் தொலைவை குறைத்திருக்கிறது தொலைத்தொடர்புத் துறை. சிங்கப்பூரிலிருந்து, சென்னையோ, மதுரையோ - எட்டத் தேவைப்படுவது, இப்போதெல்லாம் சில நொடிகளும், வெகு சில டாலர்களும்தான்!