Thursday, February 24, 2005

திட்டமிடல் (Planning) என்ற கெட்ட வார்த்தை

சமீபத்தில் நடந்த சிங்கப்பூர் இணைய நண்பர்கள் சந்திப்பைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, அதை ஒருங்கிணைத்த எம்கே குமாரின் முயற்சியும், திட்டமிடலும் மனதுக்குள் அடிக்கடி வந்து போனது. கூடவே - திட்டமிடல் எந்த அளவு அவசியம்..எதற்கெல்லாம் அவசியம் என்ற கேள்வியும்!

யோசித்துப் பார்த்தால், நாம் வாழ்க்கையின் பெரும்பாலான நிகழ்வுகளை தெரிந்தோ தெரியாமலோ திட்டமிட்டே வாழ்ந்து வருகிறோம் என்ற உண்மை புரிகிறது. 'பையனை இஞ்சினியராக்க வேண்டும்...பெண்ணை டாக்டராக்க வேண்டும்..' என்று திட்டமிட்டு காய் நகர்த்தும் காய் நகர்த்தும் பெற்றோர் துவங்கி, 'அடுத்த valentines dayக்குள்ள அஜிதாவை எப்படியாவது மடக்கணும் மச்சி ( காதலில்தான்! )..' என்ற லட்சிய நோக்கோடு செயல்படும் கத்திவாக்கம் கார்த்திக் வரை ஏதோ ஒருவகையில் திட்டமிட்டே வாழ்ந்து வருகிறார்கள். அந்த திட்டமிடலின் ஆழத்தை, அகலத்தை, உயிர்தோய்ந்த ஈடுபாட்டைப் பொறுத்து வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப் படுகின்றன.

திட்டமிடல் (Planning) என்ற வார்த்தைக்கு சரியான உதாரணம் சிங்கப்பூர். 1965ல் மலேசியாவை விட்டு வெளியேற்றப்பட்டபோது, பெற்றோரால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பிள்ளையின் தவிப்புதான் இங்கும். பலருக்கும் எதிர்காலம் என்பது குழப்பமானதாகவும், அவநம்பிக்கையூட்டுவதாகவுமே இருந்தது.

லீ குவான் யூ என்ற மாமனிதரின் மனதிலோ வேறு திட்டங்கள். அவருக்கு சிங்கப்பூரின் பல, பலவீனங்களைப் பற்றிய தெளிவிருந்தது; உடனடியாக செய்ய வேண்டிய காரியம் என்ன.. பத்து வருடங்களுக்குப்பின் செய்ய வேண்டிய காரியம் என்ன என்பது பற்றி தீர்க்கமான முடிவிருந்தது; சின்னஞ் சிறிய சிங்கப்பூரை உலகே வியக்கும் நாடாக மாற்றுவதற்கான செயல் திட்டமும் இருந்தது (action plan). இன்று பல பில்லியன் டாலர் அன்னியச் செலாவணி கையிருபோடு, எந்த சோதனையையும் எதிர்கொள்ளூம் தைரியத்தோடு நிமிர்ந்து நிற்கிறது சிங்கப்பூர். All credits goes to honourable Minister Mentor Mr. Lee Kwan yew !

1965ல் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் இதுவரை சாதித்ததை 1947ல் சுதந்திரம் பெற்ற இந்தியாவால் இதுவரை சாதிக்க முடியாதது ஏன்? பதில் வெகு சுலபமானதுதான்...சுதந்திரத்திற்குப்பிறகு இன்றைய தேதிவரை தொலைநோக்கும், திட்டமிடலும், தன்னலமற்ற தலைமையும் ஒருங்கே அமையப்பெற்ற தலைமைத்துவம் உருவாகவில்லை என்பதே அது.
சஞ்ஞய்காந்தியின் மரணம்தான் இந்தியாவிற்கு நேர்ந்த மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்று சில சமயங்களில் தோன்றுவதுண்டு. அவரது நடவடிக்கைகளில் ஒருவித dictatorship தொனியிருந்தாலும், இந்தியாவைப் போன்ற பரந்த, பல்வேறு கலாச்சார, சிந்தனை, பொருளாதார ஏற்ற தாழ்வுள்ள நாட்டிற்கு, அந்தத் 'தொனி', பெருமளவு பயன்பட்டிருக்கக்கூடும். இந்தியாவில் பின்பற்றப்படுகிற அதிகபட்ச ஜனநாயகம் தன் கைகளைக் கொண்டே தன் குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கிறது.

பொது இடங்களில் நினைத்த மாத்திரத்தில், பேன்ட் ஜிப்பை கீழிறக்கி ஏதாவது ஒரு சுவரில் 'சர்ர்ரடிக்கிற' சுதந்திரத்தைத் தரும் ஜனநாயகத்தால், அந்தப் பக்கம் போனால் நாறும் என்பதைத் தவிர, என்ன பயன்? இதைவிட, "இந்த லி·ட் CCTVயால் கண்காணிக்கப்படுகிறது.மீறி சிறுநீர் கழிப்பவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்" என்று எச்சரிக்கிற, தனிமனித சுதந்திரம் - பொதுமனித அத்துமீறலாக மாறாமல் பார்த்துக் கொள்கிற, சிங்கப்பூர் ஜனநாயகம் எவ்வளவோ மேலில்லையா?

இந்தியாவில், அதிகாரத்திலுள்ள சக்திவாய்ந்த மனிதர்களுக்கு 'திட்டமிடல்' என்ற வார்த்தையோடு சரியான பரிட்சயமில்லை. அது இருந்திருந்தால், மற்ற நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் இந்தியா இத்தனை ஆண்டுகள் பின்தங்கி இருக்காது.

1998ல் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னும், வாவாசான் 2020 திட்டத்தின் மூலம், கிபி 2020-ற்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறிவிட முனைப்புடன் முயன்று வருகிறது மலேசியா.அங்கும் லஞ்ச லாவன்யம் இருக்கத்தான் செய்கிறது.தேனெடுப்பவர்கள் கையை நக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்தியாவிலோ தேன்கூடே திருடு போய்விடுகிற அவலநிலை.

சரி நாட்டை விட்டுவிடுவோம்... நம்மைப் பொருத்தவரை தனிமனித திட்டமிடல் எந்த அளவு இருக்கிறது? சுருங்கச் சொன்னால், நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. சிலருக்கு, 'திட்டமிடல்' என்பது ஒரு கெட்ட வார்த்தையாகத் தெரிந்தாலும், பலரும், படிப்பு, வேலை, திருமணம், பிள்ளைப்பேறு, வீடு, கார் என வாழ்க்கையை திட்டமிட்டே வாழ்கிறோம். அந்த திட்டமிடல் ஆழமிக்கதாக் இருக்கிறதா என்பதுதான் சிந்தனைக்குரிய விஷயம்.

சிங்கப்பூரில் துவாஸ் என்ற இடத்தில் புதிய மின்நிலைய கட்டுமானப்பணி நடக்கிறது.375 மெகாவாட் தயாரிக்கும் இரண்டு யூனிட்களை கட்டும் கான்ட்ராக்ட் MHI என்ற ஜப்பானிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அங்குதான் நிஷிகாமி ( Nishigami ) என்ற ஜப்பானிய அதிசயத்தை சந்தித்தேன். அவர்தான் புதிய மின்நிலையத்தின் மொத்த கட்டுமானப்பணியின் திட்டமிடலுக்கும் பொறுப்பாளர்.

அவர் செய்த முதல் வேலை மின்நிலைய கட்டுமானப்பணியில் உள்ள A to Z வரையிலான எல்லா வேலைகளையும் பட்டியலிட்டு, ஒவ்வொரு வேலைக்கும் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டது. அப்படி அடையாளம் காணப்பட்டவர்களிடம் அவர் செய்யச்சொன்ன முதல் வேலை PPSS தயாரிப்பது. Procees Procedure Schedule Sheet என்பதன் சுருக்கமே PPSS. அதில் நீங்கள் செய்யப்போகும் எல்லா வேலைகளையும் வரிசைப்படுத்தி, ஒரு விஷயம் கூட விடாமல், துவக்கம் முதல் கடசிவரை, ஒரு கதை மாதிரி எழுத வேண்டும். ஒரு வேலையை முடிக்க எவ்வளவு நாளாகும், எத்தனை ஆட்கள் + பொருட்கள் + எந்திரங்கள் தேவை, என்னென்ன இடஞ்சல்கள் வரலாம், அப்படி வந்தால் எப்படி சமாளிப்பது - இப்படி எல்லா விவரங்களையும் Excel spread sheetல் ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதி தயாரிக்க வேண்டும். அதை நிஷிகாமி ரிவியூ செய்து, கேள்வி மேல் கேள்விகள் கேட்பார்.

உதாரணத்திற்கு, ஒரு போல்ட் பயன்படுத்துவதாக எழுதியிருப்போம். அதன் நீளமென்ன, குறுக்களவு என்ன, GI materialலா அல்லது stainless steelலா, பொருத்தும் முறை என்ன, டிரில்லிங் மெஷின் பயன்படுத்துகிறோமா, எங்கிருந்து மின்தொடர்பை பெறுகிறோம்... இப்படி பல கேள்விகளை நிஷிகாமி கேட்பார். சம்பந்தப்பட்ட எஞ்சினியர் பதில் சொல்ல வேண்டும். ஒரு PPSS மீண்டும், மீண்டும் திருத்தப்படும். ஆகக்கடைசியில், நிஷிகாமி ஒரு PPSSற்கு ஒப்புதல் அளிப்பத்ற்குள் சம்பந்தப்பட்ட எஞ்சினியர் பல உறக்கமற்ற இரவுகளை கழிக்க வேண்டியிருக்கும்.

இதற்கான பலன் - ஒரு வேலை துவங்குவதற்குமுன்பே அதற்கான எஞ்சினியர், தேவையான எல்லா விவரங்களையும் விரல் நுணியில் வைத்திருப்பார். தனக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு விளக்கிச் சொல்லிவிடுவார். கடைசி உதவியாளருக்குக்கூட தனது வேலையைப்பற்றி ஒரு தெளிவு வந்துவிடும். இதுதான் திட்டமிடல்.பல ஆயிரம் எந்திரங்கள் இருக்கக்கூடிய இடத்தில், ஒரு சின்ன ஆணியை பொருத்துவது எப்படி என்றுகூட சிந்தித்துப்பார்க்கிற ஆழமான திட்டமிடல். இதோ...சாதனை நாட்களில் நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கிறது துவாஸ் மின்நிலைய கட்டுமானப் பணி. ஆழமான திட்டமிடலின் மூலம்,இந்த சாதனைக்கான ஆதார விதையை விதைத்தவர் நிஷிகாமி.

தொலைநோக்கோடு யோசித்து சரியாக திட்டமிடக்கூடிய, திட்டமிட்டபடி செயல்படக்கூடிய, இடையில் தென்படும் தவறுகளை திருத்திக்கொள்ளக்கூடிய, இவரைப்போன்ற தலைவர்கள்தான் இந்திய தேசத்தின் இன்றைய தேவை. தலைவர்கள் கிடக்கட்டும்...ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன் வாழ்க்கையை சரியாக திட்டமிட்டு வாழ்ந்தாலே போதும், தானாக முன்னேறிவிடும் இந்தியா என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

5 comments:

Kasi Arumugam said...

இந்தியா முன்னேற ஒரு வழி, 682 சதுர கி.மீ. அளவுள்ள ஒரு தீவு-ஊரையும் 2,973,190 சது. கி.மீ.- 4000 மடங்குக்கும் மேல் - பரப்புள்ள பல மொழி,இன, பண்பாடு வீச்சுள்ள ஒரு உப-கண்டத்தையும் ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்துவது:-))இதேபோலத் தான் ஹாங்காங்கும்.

ஒரு தெருவுக்கு ஒரு டீக்கடைதான் இருக்கும், அங்கு இரவெல்லாம் கூட விழித்திருந்து வியாபாரம் நடக்கும். அதனால், மற்ற எல்லாரும் தங்கள் தொழிலை வியாபாரத்தை விட்டுவிட்டுடீக்கடை பிசினஸ் மாடலைப் பின் பற்றச் சொல்வது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் 'சிங்கப்பூரைப் பார், ஹாங்காங்கைப் பார்' என்பது. நாம் (இந்தியர்) பார்க்க எத்தனையோ உதாரணங்கள்உண்டு. பிரேசில் போன்றவை. அவற்றிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய உண்டு.

Kasi Arumugam said...

jsri: //காசி, நான் ஹாங்காங்கைப் பார், சிங்கையைப் பார் என்று எங்குமே சொல்லவில்லை. //

ஜெயஸ்ரீ சொன்னதாக நான் சொல்லவில்லை. இந்தப் பதிவின் (பாலு அவர்களின்) பொதுவான தொனி அதுதான். ஆகவே அதை நான் சுட்டினேன். என் மறுமொழி ஜெயஸ்ரீயைக் குறிப்பிட்டு அல்ல.

//நாடோ தனிமனிதனோ திட்டமிடலும், திட்டமிட்டபடியே செயல்படுத்தவேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.//

இதற்கெல்லாம் யாராவது மாற்றுக்கருத்து கொண்டிருக்கமுடியுமா? 1+1=2 என்று ஒப்புக்கொள்ளாதவர்கள் வேண்டுமானால் மாற்றுக்கருத்து சொல்வார்கள்:-)

சஞ்சய் காந்தியை சிலாகிப்பது அவரவர் உரிமை, அந்த உரிமையை நான் மதிப்பதோடு நிறுத்திக்கொள்வது என் எல்லை. அதனாலேயே ஒன்றும் சொல்லவில்லை

Kasi Arumugam said...

// Procees Procedure Schedule Sheet என்பதன் சுருக்கமே PPSS.//

இது சம்பந்தமாக ஒரு பழைய பதிவு

பாலு மணிமாறன் said...

நண்பர்கள் காசி,விஜய்,jsri-ன் பின்னூட்டங்களுக்கு நன்றி.திட்டமிடல் மூலம் பெரிய விஷயங்களைக்கூட எளிதாக சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்துவதே இப்பதிவின் நோக்கம்.

இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் பல கோடி பேர் இன்னும்கூட உணவு, உடை,இருப்பிடம் போன்ற அடிப்படைத்தேவைகள் இல்லாமல் இருக்கும் வேதனை இப்பதிவில் பிரதிபலிக்கக் காரணம் - இந்த தேசம் இன்னும் உயர வேண்டும் என்ற ஆதங்கம்.

இந்தியா சிங்கப்பூரை மாதிரி 4000 மடங்கு பெரியதுதான். ஆனால் இவ்வளவு பெரிய இந்தியாவின் இன்றைய அந்நியச் செலாவணி கையிருப்பு, இவ்வளவு சிறிய சிங்கப்பூரின் அந்நியச் செலாவணி கையிருப்பைவிட பல பில்லியன் டாலர் குறைவு என்பதை அறியும் போது, ஒப்பிடல் தவிர்க்க முடியாமல் போகிறது.

இப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலேசியா, ஏறக்குறைய தமிழ்நாடு சைஸ்தான். சிங்கப்பூரோடு போட்டிபோடும் அதனுடைய வளர்ச்சியை சாத்தியமாக்கியது முன்னாள் பிரதமர் மஹாதீர் முகம்மதின் தொலைநோக்கும் திட்டமிடலும்தான். நாம் வீடுகளை கட்டிப்கொண்டிருக்கிறோம்...மலேசியாவிலோ பெட்டாலிங் ஜெயா, ஷாஆலம் என நகரங்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரேசில் - இந்தியா பின்பற்றத்தக்க மாடலா என்று தெரியவில்லை.

விஜய் சொன்ன மாதிரி, சில தனிமனிதர்களின், அதிகாரத்திலிருக்கிற நேர்மையான மனிதர்களின், சுயமுனைப்பு, "சில" நல்ல திட்டங்களையும், இந்தியாவின் இன்றைய வளர்ச்சியையும் சாத்தியமாக்கி இருக்கிறது.

உங்கள் அலைவரிசையில் இப்பதிவு இருப்பதில் மிக மகிழ்ச்சி jsri. இதில் குறிப்பிடப்பட்டிருக்கிற நிஷிகாமியை, நீங்கள் சொன்ன மாதிரி, துவக்கத்தில் யாருக்கமே பிடிக்கவில்லை.இன்று அவரது திட்டமிடல் பலனளிக்கத் துவங்கிய பிறகோ, அவரை புகழாதவர்கள் யாருமில்லை.

உங்கள் மூவரது பின்னூட்டத்திற்கும் இன்னொருமுறை நன்றி.

சுட்டுவிரல் said...

சமீபத்தில் நான் படித்த நல்ல பதிவுகளில் ஒன்று. நன்றி