Wednesday, March 23, 2005

சிறுகதை : ரகசியமாய் ஒரு கவிதை

இந்த நிமிடம் சிங்கப்பூரில் இருக்கும் சகோதரி துளசி கோபாலை போன ஞாயிறுக்கிழமை சிங்கப்பூர் இணைய நண்பர்கள் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் ஒரு கேள்வி கேட்டார்..."இலக்கியம் என்றால் என்ன?"

வருடம் 2105. சிங்கப்பூரை ஒட்டிய கடற்புரம். அந்தக் கட்டிடம் கடல் நடுவே நாங்கூரமிடப்பட்டிருந்த ராட்சச பலூன் மீது கட்டப்பட்டிருந்தது.

அதன் 160வது தளத்தில் 100 பேர் கூடியிருந்ததார்கள். அது - " போன நூற்றாண்டுத் தமிழர்கள் " என்ற கருத்தரங்கு. வயிற்றைத்தொடும் தாடியோடு ஒரு கண்ணாடி போட்ட அறிஞர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவரைச்சுற்றி மட்டும் விளக்குகள் பீய்ச்சிய ஒளி. மற்றவர்கள் இருட்டில்!

" உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் போன நூற்றாண்டு மனிதர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். இலக்கியம் என்ற ஒரு சங்கதி அவர்கள் வாழ்க்கையில் இருந்திருக்கிறது. அது அவர்களது வாழ்க்கையில் பெரும் பகுதியை சாப்பிட்டிருக்கிறது. "

அடி தன் முன்னால் இருந்த பட்டனைத் தட்ட விளக்குகள் அவன் மீது ஒளிவீச, முன்னால் இருந்த பெரிய திரையில் அகலமாய் அவன் முகம்.

" என்ன சந்தேகம் மகனே? " என்றார் அறிஞர். எல்லோரும் திரையில் தோன்றிய அடியை ஆர்வமாய் பார்த்தார்கள்.

" இலக்கியம் என்றால் என்னவென்று சுருக்கமாக விளக்க முடியுமா ? "

" முடியும் " என்ற அறிஞர் தொடர்ந்து பேசினார். " இலக்கியம் என்பது ஒரு போதைப்பொருள் மாதிரி. எப்படி போதைப் பொருள் மனிதமனதைப் பாதித்து உண்மை வாழ்க்கைக்கு ஒவ்வாத கற்பனை பிம்பங்களை மனதுக்குள் விதைக்கிறதோ, அதே காரியத்தை இலக்கியமும் செய்தது. நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததுபோல் யாராவது ஒருவர் கற்பனை செய்து எழுத, பலரும் அதை படித்துவிட்டு அதில் மனம் ஒன்றிப்போய் கற்பனையான உலகில் வாழ்ந்தார்கள்."

" ஆக இலக்கியம் என்ற விஷயத்தால் எந்த பலனும் இல்லை என்று சொல்கிறீர்கள்? "

" பலனா? இலக்கியம் என்பது போன நூற்றாண்டு மனிதர்களை பிடித்திருந்த நோய் என்றுதான் சொல்ல வேண்டும்."

" அவ்வளவு ஆபத்தான ஒன்றை நம் முன்னோர்கள் ஏன் நேசித்திருக்க வேண்டும் ? " இந்தக் கேள்வியை மகி கேட்டான்.இப்போது வெளிச்சம் அவனிடம், திரையில் அவன் முகம்!

" அவர்கள் நம்மைப்போல் இல்லை. சரியான சோம்பேரிகள். நாம் தினமும் மூன்று மணி நேரம்தான் தூங்குகிறோம். அவர்களோ நாள் ஒன்றுக்கு பத்து மணி நேரம் தூங்கினார்கள். இலக்கியம் அந்த சோம்பேரித்தனத்தை அங்கீகரித்ததால் அது அவர்களுக்குப் பிடித்திருந்தது. "

" சோம்பேறிகள் சிலர் இலக்கியம் என்று ஒன்றைப் படைத்து இன்னும் பலரை சோம்பேறியாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்படித்தானே ? "

" புத்திசாலி. சீக்கிரம் புரிந்து கொண்டாய். " என்று பாராட்டினார் அறிஞர். எல்லோரும் மெலிதாக கைதட்டினார்கள்.

" இப்படிப்பட்ட ஆபத்தான விஷயத்தை அரசாங்கங்கள் எப்படி விட்டு வைத்தன? "

" எது அதிக ஆபத்தானது என்ற கேள்வி எழும்போது அதிக ஆபத்தான விஷயத்தின்மீது தாக்குதல் தொடுப்பதையே அரசாங்கங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தன. போன நூற்றாண்டில் இதைவிட ஆபத்தான பல விஷயங்கள் இருந்ததால் இதை அதிகம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். "

" இதைவிட ஆபத்தான விஷயங்களா? ஏதாவது சிலவற்றை சொல்ல முடியுமா? " என்று கேட்டாள் சகி.

" பலவற்றைச் சொல்லலாம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடி, சினிமா இப்படிப் பல அதி ஆபத்தான விஷயங்கள். அதிலும் சினிமா மிக ஆபத்தான, அபத்தமான விஷயமாக கருதப்பட்டது. சரி, நானே பேசிக் கொண்டிருக்கிறேன். சினிமாவைப் பற்றி உங்களில் யாராவது விளக்க முடியுமா? "

" முடியும்! " என்ற கவி மீது விளக்குகள் விழுந்தன.

" சொல் பெண்ணே... சினிமா என்பது என்ன? "

" அது இலக்கியத்தை விட அதிகமாக மக்களை ஆக்கிரமித்திருந்த போதைப் பொருள். சினிமா என்ற சமாச்சாரம் பல வடிவங்களில் மக்களுக்குத் தரப்பட்டது. அதிலும் தமிழ்ச் சினிமா இருக்கிறதே அது இன்னும் அதிக அபத்தம். தலை மயிர் கலையாமல் 50 பேரை அடிக்கும் கதாநாயகன், அவன் பம்பரம் என்ற பொருளை தொப்புளில் விட மல்லாந்து படுத்திருக்கும் கதாநாயகி...

சினிமாவில் வரும் பாடல்களை வானொலி நிலையங்கள் 24 மணிநேரமும் ஒலிபரப்பி வந்தார்கள். அந்த பாடல்களில் இலக்கிய நயம் இருக்கிறதா இல்லையா என்று வேறு விவாதித்து நேரத்தை வீணாக்கினார்கள். இதுதான் சினிமா மற்றும் அதன் சார்ந்த சுருக்கமான விவரம் "

" நல்லது பெண்ணே... உனது விளக்கம் ஏறக்குறைய சரியாகவே இருக்கிறது " என்று ஒப்புதல் தந்த அறிஞர் தொடர்ந்து பேசினார்.

" தமிழ்ச் சினிமா மட்டுமல்ல. தமிழ் இலக்கியம்கூட அபத்தம் நிறைந்ததாகவே இருந்தது. படைப்பாளிகளைவிட வெட்டி விமர்சகர்கள் அதிகம் இருந்தார்கள். தாங்களும் ஒன்றும் செய்யாமல், மற்றவர்களையும் ஒன்றும் செய்யவிடாமல் தடுத்து வந்த இவர்கள் மிக மிகச் சோம்பேறிகள் "

" இலக்கியத்தில் என்னவெல்லாம் இருந்தது ஐயா? "

" கதை, கவிதை, கட்டுரை என பல வடிவங்கள் இருந்தது. கதையை பலரும் விரும்பிப் படித்தாலும், கவிதையே மனிதர்களது உணர்வுகளை சரியாக வெளிப்படுத்திய வடிவம். "

" உதாரணமாக ஒன்றைச் சொல்லுங்கள் "

" சொல்கிறேன். அதற்குமுன் சிறுவிளக்கம். இன்று ஒரு ஆணும் பெண்ணும் விரும்பினால் அரசாங்கத்திடம் தகவல் சொல்லிவிட்டு இணைந்து வாழலாம். ஆனால் 2005ல் காதல், கல்யாணம் போன்ற சம்பிரதாயங்கள் அதிகம். அதிலும் காதல்... ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்ற சம்பிராதாயத்தில் இணைவதற்கு முன் நிகழ்கிற விஷயங்களை காதல் என்று சொல்லிக் கொண்டார்கள். அப்படி காதலிக்கும் காலங்களில் ஆண் பெண்ணுக்காக ஏங்குவதும், பெண் ஆணுக்காக ஏங்குவதுமான பெருமூச்சுகள் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. இதில் யாராவது ஒருவர் காதலுக்கு மறுப்புச் சொல்லி விட்டால், அது தோல்வியடைவதும் உண்டு.

அப்படி காதல் தோல்வி அடைந்த ஒருவன் தன் காதல் தோல்வி பற்றி மறைமுகமாக குறிப்பிட்ட ஒரு கவிதையைச் சொல்கிறேன் கேளுங்கள்....

காற்று வராத என்று
ஜன்னலைத் திறந்து வைத்தேன்.
காற்று வந்தது....
ஜன்னலைச் சாத்திச் சென்றது! "

அறிஞர் இந்தக் கவிதையைச் சொல்லி நிறுத்தியதும் அங்கு சட்டென்று ஒரு மொளனம் சூழ்ந்தது. அந்தக் கவிதை எல்லோருக்கும் புரிந்தது. அவர்கள் மனதில் புகுந்தது. பிசைந்தது. ' ஓ...இலக்கியம் இவ்வளவு சுவையானதா' என்ற எண்ணம் அவர்களுக்குள் எழுந்தது.

அதற்கப்புறம் அறிஞர் பல விஷயங்களைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அங்கிருந்தவர்களின் மனமோ அந்தக் கவிதையிலேயே லயித்துக் கிடந்தது. " உலக சரித்திரத்தையே மாற்றும் சக்தி இலக்கியத்திற்கு இருந்ததால்தான், ஆபத்து மிகுந்த இந்த போதைப்பொருளை உலக அரசாங்கங்கள் தடை செய்தன. " என்று சொன்னார் அறிஞர்.

அடி அன்றைய தின இரவு சகியை நினைத்து ரகசியமாய் ஒரு கவிதை எழுதினான். அது இப்படித் துவங்கியது....

" அன்பு சகி. என் உயிர் கலந்த ஆக்ஸிஜனே... "

9 comments:

Muthu said...

இதுவும் நல்லாத்தான் இருக்கு.
போன பதிவிலே சென்ற நூற்றண்டு மக்கள் இன்றுள்ளது பற்றி பேசுவதுபோல நான் எழுதியிருந்தேன்.

பாலு மணிமாறன் said...

Thank You for your comments Muthu...i will read that and will give my PInnuuttam!

Vijayakumar said...

பாலு,

நல்ல கற்பனையோடு கூடிய அலசல். இலக்கியம் காலத்தை கடக்கும் அற்புத சக்தி வாய்ந்தது என்பதை கதையின் மூலம் நிரூபிக்கிறீர்கள். அருமை.

ஆனால் ஒரு சந்தேகம் 2105-ம் ஆண்டு எல்லாரும் எந்த மொழியில் பேசிக் கொண்டார்கள். தமிழிலா? இல்லை வேறு மொழியில் "போன நூற்றாண்டு தமிழர்கள்" என்று பேசிக் கொண்டார்களா?

பாலு மணிமாறன் said...

கதை முழுக்க அடுத்த நூற்றாண்டிலும், தமிழும், தமிழ் இலக்கியமும் உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஆசை வெளிப்படையாக ஒட்டிக் கொண்டிருந்ததை பார்த்திருப்பீர்கள் விஜய்...தமிழ் இருந்து, தமிழில்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன்..

நாளைக்கு உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கையில் இன்றைக்கே இட்லிக்கு மாவரைத்து வைத்துவிடும் நம்பிக்கை சிகரங்கள்தானே தமிழர்கள் ?

வசந்தன்(Vasanthan) said...

நல்லாயிருக்கு மணிமாறன். ஆனா இடையில காதல் இல்லாமப் போறதுதான் கொஞ்சம் உறுத்துது.

வீரமணிஇளங்கோ said...

வணக்கம் மணிமாறன்,
உங்கள் எல்லோர்பதிவையும் படித்து,கூட்டம் பற்றி அறிந்துகொண்டேன்.

கதையின் ஆரம்பமே,உங்கள் கற்பனை வளத்தைக்காட்டுகிறது.நங்கூரமிடப்பட்ட பலூனின் மீது அடுக்குமாடிக்கட்டிடம்.....ம்ம்..

யாயு ஞாயும் யாராகியரோ
எந்தையு நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானு நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந்தான் கலந்தனவே.

நேற்றுக்கூட என் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.இந்த சங்கப்பாடலை.


ஆம்,இலக்கியம் காலம் கடந்துநின்றுகொண்டுதானிருக்கிறது.

இனியும் நிற்கும்

பாலு மணிமாறன் said...

நீஙகளும், வசந்தனும் சொல்வது சரிதான் மூர்த்தி. காதல் என்றுமே அழியப்போவதில்லை... அது வெளிப்படும் விதம்தான் கால ஓட்டத்தில் மாறியபடி இருக்கிறது. ' நாதா...ஸ்வாமி ' வகை "ஞான சொளந்தரி" பட கால காதல் வெளிப்பாடுகளுக்கும், ' டேய்....கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா.." வகை இக்கால காதல் வெளிப்பாடுகளுக்கும் எவ்வளவு வித்தியாசம்....? இன்னும் நூறு வருடங்களுக்குப்பிறகு காதல் எப்படி வெளிப்படும் என்பதை யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது...

மூர்த்தி, செல்வநாயகி, வசந்தன் - உங்களது பின்னூட்டங்களுக்கு அன்பும் நன்றியும்!

வாங்க இளங்கோ...கொஞ்ச நேரத்திற்கு முன் தான் உங்களைப்பற்றி நினைத்தேன்...புது மனைவியிடம் இலக்கியமா? ம்ம்ம்

சிங்கை நாதன்/SingaiNathan said...

ரசித்தேன் . நன்று

செந்தில் நாதன்.

எம்.கே.குமார் said...

அறிவியல் புனைகதையா பாலு அண்ணாச்சி?

அதுக்கு "ஆத்தரைசேஷன்" அ.கு அண்ணாச்சிகிட்டே வாங்கிட்டீங்களா? எதுக்கும் 'பாதுகாவல்' கதையை ஒருதரம் படிச்சிடுங்க!

கதையில் "சகி" யைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம். எப்படி இருப்பாளோ அவள்?! ம்ஹ¥ம்!

எம்.கே.குமார்