Thursday, December 04, 2008

மலேசிய மக்கள்ஓசையின் முன்னாள் ஆசிரியர் திரு.குரு (நாலு வார்த்தை-002)

திரு.குருசாமியை எப்போது முதல்முதலாக சந்தித்தேன் என்று ஞாபகமில்லை. சந்தித்தேன். பழகினேன். இருந்த அவர் இல்லாமல் போன வருத்தங்களோடு இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். குருசாமி - மலேசிய வாரஇதழ்களான "வானம்பாடி" "மக்கள் ஓசை" போன்றவற்றின் முன்னாள் ஆசிரியர். சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். சிலர், சில நீக்க முடியாத பிம்பங்களை நம்முள் விட்டுச் செல்வார்கள். அந்த வகையில், குறும்புத்தனம் கலந்த அவரது புன்னகை இன்னும் என்னுள் இருக்கிறது ; இனியும் இருக்கும். அவர் மக்கள் ஓசையில் பணியாற்றிய காலத்தில் எனக்கு "வாரம் ஒரு இளமைக்கதை" எழுதும் வாய்ப்பை வழங்கினார். 15 வாரங்கள் போன அந்த இளமைத் தொடர் "அப்பாவிச் சோழன்" என்ற புனைப்பெயருக்கு மலேசியத் தமிழ் வாசகர்களிடம் பரவலான பார்வையைப் பெற்றுத்தந்தது.

குருசாமி - எழுத்தாளர்களுக்கு வரம்பில்லா சுதந்திரத்தைத் தந்தவர்; வாசகர் கடிதங்களை இலக்கிய தரத்துக்கு உயர்த்தியவர்; எங்கேயும், எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர்; வார்த்தைகள் காயப்படக் கூடாது என்ற கவலைப் பட வைக்கும் தொனியில் பேசுபவர். வழுக்கையில் அவரளவு அழகாக இருந்த வேறு ஒரு ஆண்மகனை நான் இதுவரை சந்திக்கவில்லை. அவரது நகைச்சுவை உணர்வு மிகவும் பிரசித்தம். உதாரணத்திற்கு ஒன்று.

1996ம் வருட ஜூன் மாத மலேசியச் சிறுகதைத் திறனாய்வை காப்பாரில் நானும், நண்பர் தண்ணீர்மலையும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆதிகுமணன் தலைமை தாங்கினார். பல எழுத்தாளர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள். எழுத்தாளர் பீர்முகமதைக் கிண்டலடிப்பதென்றால் குருசாமிக்கு அவ்வளவு ஆசை. குருசாமி மைக்கைப் பிடித்ததும், எதிர்பார்த்தது போலவே அங்கிருந்த சை.பீர்முகமதைப் பற்றி பேசத்துவங்கினார். "ஒரு முறை பீர்முகமது தனது நண்பரைப் பார்க்கப் போனார். அவர்கள் பேசத் துவங்கினார்கள். பீர்முகமது அவரது நண்பரை வாயைத் திறக்க விடவே இல்லை. தானே பேசிக் கொண்டிருந்தார். 'நான் அதை செய்தேன். இதை செய்தேன்' என்று தன்னைப் பற்றியே மணிக்கனக்கில் பேசி நண்பரை தாளித்து விட்டார். பொறுமை இழந்து நண்பர் நெழியத் துவங்கினார். அதைப் பார்த்த பீர் அவரிடம் "ஸாரி, நானே தொடந்து பேசி உங்களை சிரமப்படுத்தி விட்டேன். நீங்கள் வாயைத் திறக்கவே இல்லை. நீங்கள் ஏதாவது பேசுங்கள்" என்று சொல்ல, நண்பர் நிம்மதிப் பெருமூச்சு விட, சை.பீர்முகமது நண்பரிடம் கேட்டாராம், "சரி, சொல்லுங்கள். நீங்கள் என் கதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?".

இனி யார் செய்வார் சை.பீர்முகமதை இப்படிக் கேலி?

No comments: