
நடந்து செல்வது சுகம்.
நேசத்திற்குரியவர்களோடு
கைகோர்த்து நடப்பது அதிசுகம்!
வாழ்க்கை நெடுக...
கை கொடுக்கின்றன கைகள்
ஏதோ சில கைகள்
நட்ட மரங்களின் நிழல் மடிதான்
வெயிலுக்கு வேடந்தாங்கலாகின்றன.
ஏதோ சில கைகள்
பம்பாயில் சுட்ட குண்டுகள்தான்
ரத்தம் குடிக்கும் ராட்சசப் பற்களாகின.
தடுமாறும்போது தடுத்துப்பிடிக்க
கரங்கள் இல்லையெனில்
காயப்படும் முகங்கள்.
கொடுப்பதற்கு கைகள் வேண்டும்.
ஏதும் இல்லையெனில்
இரப்பதற்கும் கைகள் வேண்டும்.
புகைப்படம் எடுப்பதற்கும் கைகள்.
சுவரில் புகைப்படமானவர்களுக்கு
மாலை இடுவதற்கும் கைகள்.
மாலை தொடுப்பதற்கும் கைகள்.
மலரைப் பறிப்பதற்கும் கைகள்.
மலர்ச்செடி நடுபவையும் கைகள்.
மண்ணைத் தொடுபவையும் கைகள்.
ஆறடி மண்ணில்
ஆடி அடங்கியவனின் குழியில்
கடைசியாக கைபிடி மண்ணை
இடுபவையும் கைகள்.
கல்லை கடவுளாய் வடிப்பவை கைகள்.
வடித்த கடவுளைத் தொழுபவைக் கைகள்.
அளவுக்கு மீறி சோதிக்கும் கடவுளைத்
தூக்கி எறிவதும் அந்தக் கைகளே.
கற்கள் எப்போதும் தங்களைக்
கடவுளாக்கச் சொன்னதில்லை.
காரிகையாக்கவும் சொன்னதில்லை.
உண்மையில் அவை கைகளின்
கட்டளைக்குக் கட்டுப்படும்
அடிமைகள்...
படிக்கட்டுகளாய்
கால்மிதி படுவதற்கும் சம்மதிக்கும்
கடைநிலை அடிமைகள்.
ஞாபகத்திற்கும் கைகள் உண்டு.
பழைய நினைவுகளை அவை ஓயாமல்
அழித்துக் கொண்டே இருக்கின்றன.
கனவுகளுக்கும் கரங்கள் உண்டு.
சிதறிக் கிடக்கும் பழைய நினைவுகளை
சேகரித்து அவை எரித்துக் கொண்டே
இருக்கின்றன!
எல்லா இடங்களையும் எட்டிப் பார்க்க
எந்தக் கைகளாலும் முடிவதில்லை.
அம்மாவின் கைகளில் குழந்தைக் குளியல்.
மணமாகிவிட்டால் மனைவி கையால்
அக்கறைக் குளியல்.
இடைபட்ட காலத்திலோ...
இடது, வலது - இரண்டு கைகளுக்கும்
எட்டாத இடமாகவே இருக்கிறது
முதுகின் மத்தி!
காதல்வயப்பட்டவர்கள் சொல்லும்
பொய்களையெல்லாம் கவிதையாக
வரிசைப்படுத்தும் வகையிலும்..
காதலில், கைகள் முக்கியம்.
உலகத்தில் ஆகச் சிறந்த கைகள் எவை?
அருசுவை உணவு தரும் அந்தக் கைகளா..
அழுகை துடைக்கும் ஆதரவுக் கைகளா...
உடுக்கை இழக்கையில் ஓடிவரும் கைகளா...
கொடுத்துச் சிவந்த வள்ளலின் கைகளா...
உழுது சிவந்த உழவனின் கைகளா...
உறுபிணி அகற்றும் கருணைக் கைகளா...
பேரிடர் துயரில் உதவும் கைகளா...
இப்படி வரிசை கட்டின கைகள்.
இறுதியில் உணர்ந்தேன்...
தன்னலம் மறந்து, பிறர்நலம் காக்க
பட்டென்று நீள்வது எந்தக் கைகளோ
அந்தக் கைகளே உயர்ந்த கைகள்.
உற்றுப் பார்ப்போம்.
எந்தக் கைகள்.. இந்தக் கைகள்?
No comments:
Post a Comment