Monday, February 06, 2006

பிரியங்கா சோப்ராவிடம் ஏன் பேசவில்லை?


சில மாதங்களுக்கு முன் ஒரு நாள்.

சிங்கப்பூரில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் தேசிய நூலகத்திற்கு ஒரு வேலையாகப் போக வேண்டியிருந்தது. போயிருந்தேன்.

அன்று அதன் நுழைவாயிலில் வழக்கத்துக்கு மாறான பரபரப்பு...கூட்டம். ஒரு ராட்சசக் கிரேனும், ரி·ளெட்டர்களும், டிராலிகளும், கேமராக்களும், தொப்பையில் தொப்பி ஆசாமிகளும்...அட, சினிமா ஷ¥ட்டிங்.


நான் சினிமா ஷ¥ட்டிங் பார்த்ததில்லை. அல்லது அதிகம் பார்த்ததில்லை. வந்த வேலையை கொஞ்சம் ஒத்தி வைத்து, ஒரு இந்திய ஆர்வத்தோடு என்ன நடக்குது என்று பார்த்திருந்தேன். என்னை மாதிரியே, சீன, மலாய் ஆண் பெண்களும் பார்த்திருக்க... விசாரித்தேன்.

இந்திப்படமாம். ஹீரோ - ஹிர்த்திக் ரோஷன். ஹீரோயின் - பிரியங்கா சோப்ரா.

வெகு சூடான அந்த தினத்தில் கோட் சூட்டுடன் ஒரு பியானோவை பிரித்து ஹிர்த்திக் மேய்ந்து கொண்டிருக்க, அவரோடு கன்னம் உரசினார் பிரியங்கா. ஒல்லியாக, உயரமாக இருந்தார்.

ஷாட் முடிந்ததும், என் பக்கமாக நடந்து வந்து, ஒரு 5 அடி தூரத்தில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டார். சுற்றி யாருமே இல்லை. எல்லோரும் என்னைப் போலவே அவரை தொலைவில் நின்று பார்த்திருந்தார்களே தவிர, நெருங்கி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்தத் தனிமை பிரியங்காவிற்கே சங்கடமாக இருந்திருக்க வேண்டும். சுற்றி பார்வையை ஓட விட்டார்.

எனக்குள் ஒரு குரல் " அட போப்பா... போய் பேசு" என்கிறது. ஆனால் கால் நகர்ந்தால்தானே? தற்செயலாய் கொண்டு போயிருந்த டிஜிட்டல் கேமராவில் பிரியங்காவை ஒரு படம் கிளிக்கினேன். ·பிளாஷ் வெளிச்சத்திற்கு திரும்பிப் பார்த்தார்.அதற்குள் கைத் தொலைபேசி கிணுகிணுக்க... "ஹலோ" என்று சொல்லி, தொலை பேசியவரிடம் பிரகாசமானார்.அந்தப் பேச்சு 20 நிமிடத்துக்கும் மேல் நீநீண்டது...

எனக்கு என் வேலை காத்திருந்ததது.தொலைவில், பியானோவை தடவிக்கொண்டிருந்த ஹிர்த்திக்கை இன்னொரு முறை பார்த்து விட்டு, நடக்கத் துவங்கினேன்.

ஆனாலும், அன்றைய தின தூக்கத்திற்கு முன், நான் ஏன் பிரியங்காவிடம் குறைந்தபட்சம் ஒரு ஹாயாவது சொல்லியிருக்கக் கூடாது என்ற கேள்வி மனசுக்குள் எழுந்தது. அதானே... ஏன் சொல்லியிருக்கக் கூடாது? எது என்னைத்தடுத்தது ?

இப்படி யோசித்தபடி கொஞ்சநேரத்தில் தூங்கிவிட்டேன்.
இன்னொரு நாள்...இன்னொரு சம்பவம்...ஞாபக அடுக்குகளில் இன்னொரு பக்கம்!

5 comments:

Amar said...

பிரமாதம்!
பிரியங்கா உங்க பக்கம் பாக்கும் போது போட்டோ எடுத்து இருக்க கூடாதா? ;)

பாலு மணிமாறன் said...

:))))))))))))))

- யெஸ்.பாலபாரதி said...

இன்று தான் முதல் முறையாக தங்களின் வலைப் பக்கத்திற்கு வருகிறேன்.

நீங்கள் செய்த நல்ல காரியங்களின் பட்டியளில் இதனையும் சேர்த்து விடுங்கள் மணி.

பொதுவாக நம்மில் பலர் திரை நட்சத்திரங்களுக்கு(இந்திய கிரிக்கெட் வீரர்களும் இதில் அடக்கம்) கொடுக்கும் மதிப்பில் ஒரு பாதி கூட மற்ற துறை சார்ந்தவர்களுக்கு கொடுப்பதில்லை.

உண்மையில் மற்ற துறையினரை விட இவ்விருதுறையினரும் தான் மக்களால் நிறைய சம்பாதிக்கிறார்கள். அப்படி இருந்தும் இவ்விருதுறையினரும் பொது மக்களின் நலனில் எவ்வளவு அக்கரை காட்டுகிறார்கள் என்பது.... உள்ளங்கை நெல்லிக்கனி.
அதனால்... நீங்கள் பெருமை பட்டுக்கொள்ளலாம்.

வாழ்த்துக்கள்.
தோழன்
பாலா

பாலு மணிமாறன் said...

நன்றிங்க பாலபாரதி...உங்கள் கருத்துக்களில் உடன்பாடு உண்டு எனக்கும். அதனால்தான் சிங்கப்பூரில் அவ்வளவாக பிரபலமாகிவிடாத நல்ல கவிஞர் நா.முத்துக்குமாரை சிங்கப்பூருக்கு கூப்பிட்டிருக்கிறேன் - இலக்கியக் கூட்டம் நடத்த.

வருகிற பிப்ரவரி 25 அன்று, இந்தப் பதிவில் சொல்லப்பட்டிருக்கிற அதே தேசிய நூலகத்தில் தமிழ் இலக்கியம் பற்றிப் பேச இருக்கிறார் முத்துக்குமார்.

பாலு மணிமாறன் said...

Nandri dreamz