Friday, December 05, 2008

சுப்ரமணிய ராஜூவும், தனுஷ்கோடி மாமாவும்! (நாலு வார்த்தை-004)

எல்லாம் மங்கலாகத்தான் ஞாபகம் இருக்கிறது. சுப்ரமண்ய ராஜூவின் கதைகள். ஏறக்குறைய 20 - 25 வருடங்களுக்கு முன்பு வாசித்தது. அதை வாசித்தது கம்பத்து தாத்தா வீட்டில். கம்பத்திலிருந்து உத்தமபாளையம் போகும் வழியில் தோட்டத்திற்கு மத்தியில் இருக்கிறது தாத்தா வீடு. அந்தத் தோட்டத்தில் வாழை, கரும்பு, சோளம் என்று காலத்திற்கேற்ப பயிர் செய்யப்படும். தோட்ட மத்தியில் அகன்ற, ஆழமான கிணறு உண்டு. நாலைந்து மாமாமார்களும் உண்டு. மதுரை பாஷையில் சொல்வதென்றால் - ஒவ்வொருத்தரும் பாசக்கார பயலுவ.

தனஷ்கோடி மாமா புத்தகங்களை பைண்டு செய்வதில் வல்லவர். அவர் பைண்டு செய்து வைத்திருந்த சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் புத்தகங்கள் அறிமுகம் செய்த உலகத்தை தோட்டத்து வரப்புகளில் உட்கார்ந்தபடி, காக்காய்களின் இடைவெளிவிட்ட கரைதல் களுக்கிடையில் படிப்பது சுகமான அனுபவமாக இருந்தது. கடலில் பாய்மரக் கப்பல்களில் பயணிப்பதும், எதிரிகளிடம் வாளைச் சுழற்றுவதும், இளவரசியின் வனப்பை தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்து பிரமிப்பதும் சாத்தியமானது. தனஷ்கோடி மாமாவின் கால் சற்று ஊனம். தாங்கித் தாங்கிதான் நடப்பார். அவ்வப்போது வலிப்பு வருமென்று சொல்வார்கள். நான் பார்த்ததில்லை. ஒருநாள் தனுஷ்கோடி மாமா கிணற்றில் விழுந்து இறந்து போனார். யாருமற்ற ஒரு வெயில் நாளில் கிணற்றருகில் நின்று கொண்டிருந்தபோது, வலிப்பு வர, உள்ளே விழுந்தவர் காப்பாற்ற ஆளின்றி இறந்து விட்டாரென்று சொன்னார்கள். அவரது மரணத்தை விட, அந்த மரணம் நேர்ந்த விதம் நீண்டநாள் வலித்தது.

அவரது மரணத்திற்குப்பின் ஒரு விடுமுறை நாளில் அவரது பெட்டியை குடைந்து கொண்டிருந்தபோதுதான் சுப்ரமண்ய ராஜுவின் சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது. சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் புத்தகத்திற்கிடையில் அது எப்படி வந்தது அல்லது ஏன் வந்தது என்ற கேள்வி அந்தக் கதைகளில் பயணித்த தருணங்களின் எழுந்து கொண்டே இருந்ததது. அது வேறு உலகம். சந்தன வாசனையும், வியர்வை வாசனையும் சமவிகிதத்தில் கலந்து நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும் உலகம். நுணுக்கங்களும், நுணுக்க மீறகளை அனுமதிக்கும் விதிகளும் நிறைந்த உலகம். அதை தனுஷ்கோடி மாமா படித்திருப்பாரா என்று வெகுநாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன்.

அதேபோல் - வெகுநாட்களுக்குப் பிறகுதான் தெரிந்து கொண்டேன், சுப்ரமண்ய ராஜூவும் ஒரு ஸ்கூட்டர் விபத்தில் இளம் வயதிலேயே இறந்து விட்டாரென்று.

2 comments:

குப்பன்.யாஹூ said...

சுப்பிரமணிய ராஜு பற்றி மாலன், பாலகுமாரன் எழுதி படிசுர்க்கேன், ஆனால் அவர் எழுதிய புத்தகங்கள் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

நன்றி நண்பரே.

புத்தகம் தலைப்பு, பதிப்பகம் வெளியிடவும்,


குப்பன்_yahoo

பாலு மணிமாறன் said...

நன்றி.

நான் குறிப்பிட்டது போல, சுப்ரமணிய ராஜூவின் கதைகளைப் படித்து ஆண்டுகளாகி விட்டது. மறுவாசிப்பு செய்யவில்லை. காலச்சுவடு, கிழக்கு பதிப்பகம், உயிர்மை போன்ற பிரபல பதிப்பகங்களில் ஒன்று அவரது மொத்த சிறுகதைகளையும் வெளியிட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அது - சிங்கப்பூர் நூலகங்களில் கட்டாயம் இருக்க வேண்டும். தேடிக் கண்டுபிடித்து கட்டாயம் விவரம் சொல்கிறேன்.

வாசகனை, மயக்கும் மோகினி மாதிரி பிடித்துக் கொள்ளும் மாயக்கரங்கள் சுப்ரமணிய ராஜூவுக்கும், மலேசிய எழுத்தாளர் எம்.ஏ.இளஞ்செல்வனுக்கும் உண்டு. பீடிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே புரியும் அனுபவம் அது.