Sunday, December 07, 2008

"நாம்" சிங்கப்பூர் காலாண்டிதழ் (நாலு வார்த்தை-006)


சிங்கப்பூர் சிறிய நாடு. இங்கு வாழும் தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், "தமிழ்முரசு" என்ற நாளிதழ் 50 ஆண்டுகளாக இயங்குவதற்கு அது ஒரு தடையாக இருக்கவில்லை. தமிழவேள் கோ.சாரங்கபாணியால் துவங்கப்பட்டது தமிழ்முரசு. தற்போது Singapore Press Holdings (SPH) என்றழைக்கப்படும் பொதுக்குடையின் கீழ், ஆங்கிலம், சீனம், மலாய் மொழி பத்திரிக்கைகளைப் போல் வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் இயங்கி வருகிறது. சினிமா சார்ந்த "இந்தியன் மூவி நியூஸ்" சிங்கப்பூரில் நீண்டநாள் தாக்குப் பிடித்திருக்கும் இன்னொரு தமிழ் மாதப் பத்திரிக்கை. இவற்றைத் தவிர மற்ற பத்திரிக்கைகளால் நிலைத்து நிற்க முடியவில்லை - அவ்வப்போது தோன்றி மறையத்தான் முடிந்தது. இந்திரஜித்தால் துவங்கப்பட்ட "திசைகள்" மாத இதழ் தரமானதாக இருந்தாலும் நிலைக்க முடியாமல் போனதற்கு, தரத்திற்கும் மேல், இன்ன பிற விஷயங்கள் தேவைப்பட்டது காரணமாக இருக்கலாம்.

இன்றைய சிங்கப்பூர்ச் சூழலில் ஒரு தமிழ் காலாண்டிதழ் நடத்துவதற்குக் கூட தொலைநோக்கும், திட்டமிடலும், தளராத மனதிடமும், வலுவான பொருளாதாரமும் தேவைப்படுகிறது. எல்லா செயல்களின் வெற்றிக்குப் பின்னும் இருக்கும் அடிப்படைப் பண்புகள்தான் இவை. பத்திரிக்கையில் அக்கறை கொண்டு தொடர்ந்து பங்களிக்கக் கூடிய திறன்மிக்க எழுத்தாளர்கள், பன்முகத்தன்மை கொண்ட படைப்புகள், ஈர்க்கின்ற வடிவமைப்பு, உள்ளூர் மக்கள் அந்த பத்திரிக்கையோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு, தமிழ் அமைப்புகளின் ஆதரவு, விளம்பரதாரர்களின் அரவணைப்பு, தீவிரமான விநியோகக் கட்டமைப்பு போன்றவற்றின் மீது கட்டப்படுகிறது ஒரு பத்திரிக்கையின் வெற்றி. இந்த வரையறைக்குள் அடங்கும் தமிழ்ப் பத்திரிக்கைகள் சிங்கப்பூரில் இருக்கின்றனவா? அவை வரும் வாய்ப்பிருக்கிறதா? காலத்தின் கைகளில் பதில்.

சின்னபாரதி, பாண்டித்துரை போன்ற இளைஞர்கள் சிங்கப்பூரில் தனிச்சுற்றாக, நண்பர்களுக்காக, "நாம்" என்ற காலாண்டிதழை நடத்துகிறார்கள். மற்றவற்றைப் பற்றி யோசிப்பதற்கு முன்னால், அவர்களது இலக்கியத் துணிச்சலைப் பாராட்டுவது அவசியம். "ஏதேனும் ஒரு இலக்கு அல்லது போக்கிடம் இல்லையென்றால், ஏன் நடக்க வேண்டும்?" என்பது இந்திரஜித்தின் கேள்வி. இலக்கிருக்கிறது - எனவே, இந்த இளைஞர்கள் நடக்கிறார்கள். சிங்கப்பூர், மலேசியா, இந்தியா என்று மூன்று நாடுகளின் பங்களிப்பால், ஒரு Rojak மாதிரி சுவைக்கிறது "நாம்" இதழ். அய்யப்ப மாதவன் போன்ற அனுபவசாலிகளின் எழுத்து அரவணைக்கிறது என்றால், அறிவுநிதி போன்ற இளைஞர்களின் எழுத்து நம்பிக்கையளிக்கிறது. மலேசியத் தமிழ் இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இருப்பவர்களில் மிக முக்கியமானவரான கே.பாலமுருகன் "நாம்" இதழோடு கை கோர்த்திருப்பது ஆரோக்கியமான சூழல்.

நாம் 3வது இதழில் "அவர்கள் தங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் போகும் வழியைப் பார்த்து பிரமிப்புடன் அதைப் பின்பற்ற முயற்சிக்கின்றனர். என்ன செய்ய வேண்டுமென்றால், தான் தானாக இருக்க முயற்சித்தாலே போதுமானது." என்ற வரிகள் இருக்கின்றன. அற்புதமான வரிகள். உண்மைதான்...அவனாக இவனாக இல்லாமல், அவன் வழியில் இவன் வழியில் செல்லாமல், நாம் நாமாக இருப்பதுதானே நமக்கு சுகம்? இவர்கள் வெகுதூரம் செல்வார்கள் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன. நாமும் நீட்டுகிறோம் ஆதரவுக்கரம்!

11 comments:

geevanathy said...

////இவர்கள் வெகுதூரம் செல்வார்கள் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன.////

வாழ்த்துவோம் அவர்கள் பணி தொடர....
நல்ல பதிவு நன்றி பாலு மணிமாறன்

பாலு மணிமாறன் said...

சிறு பத்திரிக்கைகளை நீடித்து நடத்துவதில் உள்ள சிக்கல் உலகம் அறிந்த ஒன்று. அதனால், இப்போது நம்பிக்கையை மட்டுமே வெளிப்படுத்த முடிகிறது. உங்கள் பகிர்விற்க்கு நன்றி தங்கராசா ஜீவராஜ்...

கோவி.கண்ணன் said...

"நாம்" இந்த காலாண்டின் இதழை பாண்டி துரை எனக்கு வழங்கினார். பல பகுதிகளில் இருந்த தமிழர்கள் எழுதிய இலக்கிய தரம் வாய்ந்த பலகட்டுரைகள் அதில் இருந்தன.

நல்ல முயற்சி ! "நாம்" இலக்கிய குழுவினருக்கும், எடுத்துச் சொல்லும் உங்களுக்கும் பாராட்டுகள் !

பாலு மணிமாறன் said...

Nandri கோவி.கண்ணன்...

பாண்டித்துரை said...

என்ன அண்ணா ஒரே அதிரடியா இருக்கிறது!
சும்மாக கலக்கலகாக இருக்கிறது ஒவ்வொரு பதிவும்

நாம் இதழ் பற்றிய தங்களின் பகிர்வுக்கு நாம் நண்பர்கள் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றிகள்

பாலு மணிமாறன் said...

You, guys are doing a fair Job Thambi. Keep Going .. still there are miles to go !

Anonymous said...

நாம் படைப்புக்கள் அத்தனையும் அருமையாக இருக்கின்றன நன்றி.
அவர்கள் இளஞ்செடிகள் .இருந்தும் வீரீயம்.உங்களைப் போல் அன்புஊற்றுக்கள்
கிடைத்தால் விருட்ஷமாய் ஊரோடி,நாடோடி,உலகோடும் ‘நாம்’வேர்கள்.
வாழ்த்துவோம் அவர்களை ,உங்களுக்கும் நன்றி.

பீஷான்
கலா

பாலு மணிமாறன் said...

Nandri For Your Comments Kala!

பாலு மணிமாறன் said...

Nandri For Your Comments Kala!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நாம் படைக்கும் நம் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!
இதுவரை இரண்டு பிரதிகள், பாண்டித்துரை எனக்கு வழங்கி இருக்கிறார்.
அவருடைய முயற்சிக்குப் பாராட்டுக்கள்!
நாம் பற்றிய தங்கள் பதிவுக்கு நன்றி!!
அன்புடன்,
ஜோதிபாரதி.

பாலு மணிமாறன் said...

Thanks a lot for your comments ஜோதிபாரதி....

We can support "Naam" by writing in it. Give it a try ! :)))