Saturday, March 05, 2005

ரொம்ப லேட்டாய் + லேட்டஸ்டாய் ஒரு பதிவு !

சிங்கப்பூரில் நடைபெற்ற 'மாலன்' மற்றும் 'ஆர்.வெங்கடேஷ்' புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு நானும் போயிருந்தேன்.மாலனைப் பார்த்தேன்.பேசவில்லை. அவர் அடுத்தவர்களிடம்பேசுவதை பார்ப்பதே போதுமானதாக இருந்தது.

பொது நிகழ்ச்சிகளில் நேரம் கடைபிடித்தல் சிங்கப்பூரின் அடிப்படைப் பண்பு. ஏழு மணி நிகழ்ச்சி என்றால் ஏழுமணி. ஒன்பது மணிக்கு முடியுமென்றால் - முடியும்! அல்லது முடித்து
விடுவார்கள்.

கொடுத்த காலத்தில் பேச்சை முடித்துக் கொள்ளும் அந்தப் பண்பை ' புஷ்பலதா' மற்றும் 'அழகிய பாண்டியனிடம்' பார்க்க முடிந்தது. தயாரிப்பு, கொஞ்சம் மெனக்கெடல் இருந்தால் இது எல்லோருக்கும் சாத்தியம் என்று தோன்றுகிறது..

முனைவர் சுப.திண்ணப்பனின் உரை சற்று அல்லது 'மிக சற்று' நீண்டு போய், உதுமான்கனிக்கு
ஒதுக்கப்பட்ட நேரத்தை சாப்பிட்டுவிட, 'நான் பேச நினைத்ததை எல்லாம் சுப.திண்ணப்பன்' அவர்களே பேசிவிட்டார். நன்றி.வணக்கம்.' என்றுகூறி தன் பேச்சை சுருக்கிக் கொண்ட
உதுமான்கனியின் நகைச்சுவை அனைவரும் ரசித்த விஷயம். ( உதுமான்கனி வழக்கறிஞர்.
எனவே, காசு கொடுத்தால்தான் பேசுவார் - என்று மாலன் அவரை கிண்டலடித்தது பின்னால்
நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த சில நாட்களிலேயே உதுமான்கனி மரணமடைந்ததது மிகப்பெரிய சோகம் )

நிகழ்ச்சியை வழிநடத்திய நெப்போலியன், மாலன் - ஒரு புதுமைப்பித்தனைப் போல், தி.ஜாவைப்போல், ஜெயகாந்தனைப் போல் ( இன்னும் பல போல்... ) சிறப்பாக எழுதுவதாக குறிப்பிட்டார்.எனக்கென்னவோ மாலன் - மாலனைப் போல் சிறப்பாக எழுதுவதாகத் தோன்றியது.இதையே நெப்போலியனிடமும் சொன்னேன். சிரித்தார்.

தனது கதைகளை விட, கட்டுரைகளே சமூகத்தில் நிறைவான பாதிப்பை உண்டாக்கி இருப்பதாகச் சொன்னார் மாலன். ' எழுத்துதான் முக்கியம்...எழுத்தாளன் அல்ல' என்பது இன்னொரு முக்கியகருத்து.

இந்த நிகழ்வில் சிங்கப்பூர் தமிழ்முரசின் முன்னாள் ஆசிரியர் வை.திருநாவுக்கரசை பார்க்க நேர்ந்தது.கூடவே - முன்னாள் 'ஞாயிறு முரசு' பற்றிய ஞாபகங்களும் வந்தன.

சில வருடங்களுக்கு முன்புவரை, ஞாயிறு முரசுக்கென்று சுளையாக தனிப் பக்கங்கள். நிறைய இலக்கிய வாய்ப்புகள்.கூடவே கொறிக்க கொஞ்சம் சினிமா. சேலை கட்டிய பெண் மாதிரி கவர்ச்சியாக இருக்கும்அது. இக்கால ஞாயிறு முரசில் அந்த தனிப்பக்கங்களைப் பார்க்க முடியவில்லை. கதை வருகிறது.கவிதை வருகிறது.அதை ஒட்டியே ஈமச்சடங்கு செய்திகளூம் வருகிறது....

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் வழக்கமான சிங்கப்பூர் இலக்கிய நிகழ்வுகளில் தென்படாத
பல புதிய முகங்களைப் பார்த்தேன். அவர்களில் பலர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கான சகல
அடையாளங்களோடு பின் இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் அல்லது
உட்காராமல் நின்று கொண்டிருந்தார்கள்.

இவர்கள் நல்ல தமிழ் இலக்கியங்களுடனானதங்கள் தொடர்புகளை நீடித்து வந்தாலும், வேலை, வீடு, குடும்பம், நண்பர்கள், இணையம்,சன் டி.வி, அவ்வப்போது யூசூன் தியேட்டரில் தமிழ் சினிமா என்ற வட்டத்துக்குள் சுருங்கிவிட்டார்களோ என்ற ஆதங்கம் வந்தது. ஆழ யோசித்தால், சிங்கப்பூரின் அடுத்த தலைமுறைஇலக்கியத்திற்கு இவர்களும், இவர்களது பிள்ளைகளும் கணிசமாக பங்களிக்கப் போகிறார்கள்என்று தோன்றுகிறது. பங்களித்தார்களா என்பதைக் காலம் சொல்லும்.

மறுநாள் ஆர்.வெங்கடேஷின் 'நேசமுடன்' நூல் வெளியீடு. தாமதமாகத்தான் போனேன். வேலை முடிந்த கையோடு, வியர்வையோடு, ஷ¥வில் அடர்ந்து படிந்த தூசோடு, டெக்ஸி எடுத்து அங்கு போய் சேர - இலக்கிய ஆர்வம்தான் காரணம். ( இலக்கியவாதிகள் ஆளையும், கூடவே காலையும் பார்க்கிறார்கள் )

நான் போனபோது வெங்கடேஷ் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

'படைப்பிலக்கியம் மட்டுமே என் வேலை. விமர்சனங்களுக்கு, எதிர்வினைகளுக்கு, பதில் வாதம் செய்ய எனக்கு நேரம் இல்லை. பா.ராகவன் சம வயது நண்பன். தலையணை, தலையணையாக புத்தகம் போட்டு விட்டான்.உறங்காமல் இன்னும் இன்னும் எழுதவேண்டுமென்ற தவிப்பு எனக்குள் இருக்கிறது.' என்று சொல்லிய வெங்கடேஷிடம், எதிர்வினை, அது, இது பற்றியெல்லாம் யோசிக்காமல் நிறைய கேள்வி கேட்டார்கள். அவரும் பதில் சொன்னார்.

உண்மையில் எனக்கு வெங்கடேஷின் எழுத்துகள் பற்றி அவ்வளவாகத் தெரியாது அல்லது ஒன்றுமே தெரியாது. இந்த நூல் வெளியீடு அவரைப் பற்றிய அல்லது அவரது எழுத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தந்தது.'நேசமுடன்' கட்டுரைத் தொகுப்பை மாதிரி, வாழ்க்கை என்பது கூட புதிய புதிய அறிமுகங்களின் தொகுப்புதனே?

எம்.கே.குமார் ஒரு கேள்வி கேட்டார்.

'இப்போது நிறைய வலைப் பூக்கள் வருகிறது. இப்படிஒவ்வொருவரும் ஒரு வலைப்பூவாக திறந்து கொண்டே போனால், அதன் அடுத்த நிலைஎன்ன?' இதற்கான பதில், வேறு திசைகளை சுற்றிவிட்டு கேள்வியின் உயிர்நாடியைத்தொடாமல் ஓய்ந்து போனது. ' ஒரு ஊரில் ஒரு இட்லிக்கடை என்றால் ஓகே. ஆனால்ஒவ்வொருவனும் தன் வீட்டு வாசலில் ஒரு இட்லிக் கடையை திறந்துவிட்டால் வியாபாரம்எப்படி? அவனவன் சுட்ட இட்லியை அவனவன் சாப்பிட்டுவிட்டு உட்கார வேண்டியதுதானா?'என்ற எம்.கே.குமாரின் ஆதங்கம் யோசனைக்குரியது.

இந்த நிகழ்வில் சிங்கப்பூர் டி.வி 'வசந்தம் சென்ட்ரலின்' துணைத் தலைவர் முகம்மது அலியும் கலந்து கொண்டார்.சமீபத்தில் சிங்கப்பூர் வந்திருந்த நடிகர் கமல்ஹாசனோடு அவர் நடத்திய பேட்டி தரமிக்கதாக இருந்தது.

கமல்ஹாசன் என்பது அனுபவங்கள் கொட்டிக் கிடக்கும் பூக்கூடை. சரியான கேள்விகள். தூண்டுகோல் மாதிரியான துணைக் கேள்விகள். சுடர் விட்டார்கமல்ஹாசன். சுடர்விட வைத்தார் முகம்மது அலி.

முகம்மது அலி மட்டும் தமிழகத்தில் இருந்திருந்தால், ' இன்னொரு ரவி பெர்னாட்' என்று பேசப்பட்டிருப்பார் அல்லது ரவி பெர்னாடை 'இன்னொரு முகம்மது அலி' என்று சொல்லும் சூழலை உருவாக்கி இருப்பார்.ஏராளமான திறமைகள் இந்த இளைஞரிடம் கொட்டிக்கிடக்கிறது.

இரண்டு புத்தக வெளியீடுகள்...இரண்டு அனுபவங்கள்...ஞாபக அடுக்குகளில் இன்னும் சில
பக்கங்கள்!

Thursday, March 03, 2005

உடைந்து மிதக்கும்...


நேற்றை மறக்கும் இன்று.

நாளைகள் இன்றை மறக்கும்.

இழப்பவை மட்டுமே
இருந்து விடுகின்றன நெஞ்சில்.
இருப்பவை மறந்து விடுகின்றன.

மறந்தவற்றை வரிசைப்படுத்தி
வாசித்துப் பாருங்கள்...
மறக்காதவை ஆகிவிடும்.
வரிசைப்படாதவை மட்டுமே
மறந்தவை ஆகின்றன.

மறந்தும் மறவாதநிலை இருப்பதுண்டா?
இருக்கலாம்.

அவனுக்கும் இவனுக்குமான நிகழ்வுகளில்
அவனதை இவனும்
இவனதை அவனும் மறப்பார்கள்.
எதிரில் பார்க்கையில் சிரிப்பார்கள்.
வசதிக்கேற்ப மறப்பதுதான் வாழ்க்கை.

அவனுக்கும் இவளுக்குமான நிகழ்வுகளில்
அவனதை இவளும்
இவளதை அவனும் மறப்பதில்லை.
மறந்ததாய் சொல்வார்கள்.
பொய்யாக வாழ்வதும்தான் வாழ்க்கை.

அவர்களுக்கும் இவர்களுக்குமான
நிகழ்வுகளில்
அவர்களதை இவர்களும்
இவர்களதை அவர்களும் மறப்பதுண்டு.
மன்னிப்பதேயில்லை.
விழிப்போடு வாழ்வதும்தான் வாழ்க்கை.

எனவே அன்பர்களே.....
இதுவரை படித்ததை இப்போதே மறக்கலாம்.....
இது மறதியால் எழுதிய கவிதை.!

Wednesday, March 02, 2005

போன்சாய் செடியாகிப்போன தமிழ் ஆலமரம்

இப்படிச் சொல்லி வேதனைப்பட்டவர் பிரபல மலேசியத்தமிழ் எழுத்தாளர் சை.பீர்முகம்மது. சிங்கப்பூரில் நடந்த " கடற்கரைச்சாலையில் கவிமாலை " நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய விரிவான உரையை நண்பர் பனசை நடராஜன் பதிவு செய்தார். அதை அப்படியே உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்......


கவிமாலை (26/02/2005)

மாதந்தோறும் இறுதி சனிக்கிழமையன்று நடைபெறும் ‘கடற்கரைச்சாலை கவிமாலை’ நிகழ்ச்சி இம்மாதமும் ‘கம்போங் கிளாம்’ சமூக நிலையத்தில் பிப்ரவரி 26 அன்று நடைபெற்றது.

தொடக்கவுரை ஆற்றிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு.பிச்சினிக்காடு இளங்கோ, கவிமாலைக்கு பார்வையாளர்களாக வந்த பலர் இன்று நல்ல கவிஞர்களாக வளர்ந்திருப்பதுடன், ஆசியான் கவிஞர் திரு.க.து.மு.இக்பால் அவர்களின் பயிற்சியின் காரணமாக ‘மரபுக் கவிதை’ எழுதும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறந்த மூத்த படைப்பாளிகளுக்கு கவிமாலை சார்பாக ‘கணையாழி விருது’ வழங்கப் படுவதையும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அடுத்து, கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளயும், படித்து ரசித்த கவிதைகளயும் பகிர்ந்து கொண்டனர்.

தமிழக எழுத்தாளர் டாக்டர்.ஹிமானா சையத் அவர்களை அறிமுகப் படுத்திப் பேசிய ஆசிரியர் ப.திருநாவுக்கரசு, ‘தமிழில் நாற்பத்தைந்து நூல்கள் எழுதியுள்ள இவரது படைப்புகள் இலங்கையிலும், கேரளாவிலும் பாடத்திட்டத்தில் உள்ளன’ என்றார்.

சமூக சேவைக்காகவே எழுதுகிறேன் என்று தொடங்கிய திரு,ஹிமானா சையத், ‘தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சுக்கோ உன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ..’ எனத் தொடங்கும் பாடலைப் பாடி பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்.

‘ஒண்ணுமில்லா மாப்பிள்ளைக்கு
ஒரு லட்சம் கைக்கூலி..!
உன்னுடைய அப்பன் ஆத்தா
சொத்து பத்து எல்லாம் காலி..

உலகம் உன்னை பத்தி
உசத்தியா பேச வேணும்!
அதுக்கு ஒரே வழி கல்விதான்
அவசியம் நீ செல்ல வேணும் பள்ளிதான்!”


என்ற சிந்திக்க வைக்கும் வரிகளுக்கு சொந்தக் காரரான இவர் ஐநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளும் எழுதியுள்ளார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை தந்திருந்தார் மலேசிய எழுத்தாளர் திரு. சை.பீர்முகமது. மலேசிய எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும், துணைத்தலைவராகவும் இருந்தவர். ‘கைதிகள் கண்ட கண்டம்’ என்ற பயண நூலையும், ‘வெண்மணல்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘பெண்குதிரை’ என்ற நாவலையும், ‘மண்ணும் மனிதர்களும்’ என்ற வரலாற்றுத்தொடரையும் எழுதியுள்ளார். தனது முகில் பதிப்பகம் மூலமாக மலேசிய எழுத்தளர்களின் ஐம்பது ஆண்டுகால சிறுகதைகளை ‘வேரும் வாழ்வும்’ என்ற தலைப்பில் மூன்றுத் தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

‘உண்மைகளை ஒப்பனையின்றி உரக்கச் சொல்லும் தன்மையினால் அதிகமாக நேசிக்கப் படுகிற, வாசிக்கப்படுகிற, விமர்சிக்கப் படுகிற, ஆனால் ஒதுக்க முடியாத எழுத்துக்கள் இவருடையது’ என்று திரு பீர்முகமதுவை அறிமுகப் படுத்திப் பேசினார் சிங்கை எழுத்தாளர் திரு.பாலு மணிமாறன்.

‘முன்பெல்லாம் பெண்கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரிதாக இருந்தார்கள். ஆனால் இன்று நிறைய பெண்கள் சிறப்பாக எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ எனத் தன் உரையைத் தொடங்கினார் திரு பீர்முகமது.

"ஒவ்வொரு என்ணூறு ஆண்டுகளிலும் தமிழ் இலக்கிய உலகம் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் தொடங்கும் என்ணூறு ஆண்டுகள் தமிழுக்கு சிறப்பானதாக இருக்கும். இணையத்தின் மூலமாக அசுர வளர்ச்சி கண்டு வரும் தமிழ், தற்போது கைப்பேசியிலும் குறுஞ் செய்தியாக வலம் வரத்தொடங்கி விட்டது. இருபத்ததையாயிரம் பேர் மட்டுமே படிக்கும் இடிசு என்ற ஹீப்ரு மொழிப் படைப்பு நோபல் பரிசு பெறுகிறதென்றால் எண்பது நாடுகளில் பரவிக் கிடக்கும்எம்மொழியாம் செம்மொழித் தமிழ் எப்படி அழியும்?" என்ற கேள்வியினால் நல்லதொரு நம்பிக்கையை விதைத்தார். அதே சமயம் தமிழர்களிடம் இருக்கும் தாழ்ந்த குணங்களையும் பட்டியலிட்டார்.

‘அன்று முதல் இன்று வரை தமிழ் இலக்கியங்களைப் பற்றிய சரியான மதிப்பீடுகள் இல்லை. ஓலைச்சுவடிகளை ஆற்றில் வீசி எறிந்து, எதிர்த்து வருபவையே நல்லவை என்று நம்பிய நம் முன்னொர்களின் அறியாமையால் எத்தனை நிகரற்ற நூல்கள் அழிந்தனவோ?
இன்றும் தமிழிலிருந்து தோன்றிய தெலுங்கு, கன்னடம், மலையாளமொழிப் படைப்புகளெல்லாம் பல ஞானபீட விருதுகள் பெற்றிருக்க நம் தமிழ் மொழியில் திரு.அகிலனுக்கு மட்டுமே கிடைத்ததற்கு என்ன
காரணம்? அவருக்கு விருது வழங்கப் பட்டதை எதிர்த்து சுமார் இரண்டாயிரத்து என்ணூறு எதிர்ப்புக் கடிதங்கள் தமிழர்களிடமிருந்து போனதுதான். அதனால்தான் ஆலமரமாக தழைக்க வேண்டிய தமிழ் இலக்கிய உலகம் ‘போன்சாய்’ என்ற தொட்டிச் செடியாகச் குறுகி விட்டதோ?’ என்றார் வேதனையுடன்.

ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டுக் கறுப்பின எழுத்தாளன், சிறைச்சாலையில் கழிவறைக்காகிதத்தில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ என்ற நாவலை எழுதினான். பறிமுதல் செய்யப்பட்டு ஒன்றுமில்லை எனத் திருப்பித் தரப்பட்ட வெள்ளையரின் நிறவெறிக்கெதிரான அந்த நாவல் பெரியதொரு மறுமலர்ச்சியை மாற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியது.அதுபோன்று சுயமாக, நீங்களாக சிந்தித்து எழுதும் படைப்புகளே உங்களை அடையாளப் படுத்தும். அதற்கு ‘உழைத்து உண்மையாக எழுதுங்கள்..

ராவணனை எல்லோரும் வில்லனாகப் பார்க்கையில்....

‘இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த
நான் என்ன செய்வேன்?

என்று சீதையைப் பார்த்து ராவணன் சொல்வதாகக் கவிதை புனைந்ததால்தான் கவிக்கோ அப்துல் ரகுமான் கவனிக்கப் பட்டார். மரம் பேசுவது போலான கவிஞர் வாலியின் கவிதையில்

‘நம்மைக் கொண்டு
எத்தனை சிலுவைகள் செய்கிறார்கள்..
ஆனால் அவர்களுக்குள்
ஒரு இயேசுவைப் படைக்க முடிய வில்லையே!’

போன்ற வித்தியாசமான சிந்தனைதான் இன்று எழுத்தாளர்களுக்குத் தேவை.

மலேசியாவை விட சிங்கப்பூர் எழுத்தாளர்கள் சிறப்பாக எழுதுகிறீர்கள். தமிழ்முரசு லதா எழுதிய ‘தீவெளி’ கவிதை நூலின் சிறப்புகளைப் பற்றி மலேசியாவில் ‘தென்றல்’ பத்திரிக்கையில் ‘சிந்தையே என் சித்தமே’என்ற பகுதியில் எழுதியுள்ளேன். மேலும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்குமான இலக்கிய உறவுகளை வலுப்படுத்த வேண்டும். சிங்கப்பூரில் பிறந்த இளைஞர்களையும் படைப்பாளிகளாக்க வேண்டும்’ என்று தன் விருப்பத்தையும் ஆலோசனைகளையும் தெரிவித்தார்.

‘முதலில் நான் மனிதன், அடுத்து நான் தமிழன், இறுதியாகத்தான் என் மதத்தைச் சார்ந்தவனாக அடையாளப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன்’ என்றார் முத்தாய்ப்பாக.

‘சுமை’ என்ற தலைப்பில் கவிஞர்கள் எழுதி வந்த கவிதைகளில் திரு.கருணாகரசு, திரு.திருமுருகன், திருமதி.மீரா மன்சூர் ஆகியோரின் கவிதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டன. கவிஞர்கள் அருண்கணேஷ், சேவகன் இருவரும் இம்மாதப் பரிசுகளை வழங்கியிருந்தனர்.

அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார் திரு பிச்சினிக்காடு இளங்கோ. நல்லதொரு தமிழ் நிகழ்ச்சிக்கு திரளாக வந்திருந்தோரைக் காணுகையில் மெல்லத் தமிழ் இனிச் சாகாது.. உலகம் உள்ள வரை தழைத்து வாழும்! என்றேத் தோன்றியது.

- பனசை நடராஜன், சிங்கப்பூர்-

Tuesday, March 01, 2005

பாவாடை தாவணியில் பார்க்க முடியுமா?

பொதுமேடைகளில் உற்சாகமிகுதியால் கங்கைஅமரன் அள்ளிக் கொட்டும் அபத்தங்கள் உலக பிரசித்தம். ஆனால் அவரிடமிருந்து மண்டைக்குள் மணியடிக்கும் அற்புதமான வரியொன்று வெளிப்பட்டதை பத்திரிக்கைகளில் படித்தேன்.

இசையமைப்பாளர் தேவா வீட்டுக் கல்யாணம். மேடையில் பாட்டுக்கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது...பாடகர் " பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? " என்று உருகிக் கொண்டிருக்கிறார்...அதைக்கேட்டுவிட்டு மேடையேறும் கங்கைஅமரன் மைக்கைப் பிடித்து, அந்த வரியை கொஞ்சம் மாற்றிப் பாடுகிறார்..." பாவாடை தாவணியில் பார்க்க முடியுமா? "...வேடிக்கையாகத்தான் பாடுகிறார்...ஆனால் அந்த வரி, நாகரிக வேகத்தில், மாற்றுக்கலாச்சாரங்களின் தாக்கத்தில், சுயமிழந்து கொண்டிருக்கும் நமது இனத்தின் முகவரி காட்டும் வரியாக உரத்து ஒலிக்கிறது.....

யோசிக்கிறேன்...."ஆட்டோகிராப்" கதாநாயகன் அரைடிரவுசரில் காதலித்த, தாவணி அணிந்து, மாரணைத்த புத்தகங்களோடு நடந்து திரிந்த எம்மினப் பெண்கள் எங்கே?

என்பதுகளின் இறுதிவரை பெரும்பாலான தமிழ்நாட்டுப்பள்ளிகளில் பெண்களுக்கான சீருடை பாவாடை தாவணியாகத்தான் இருந்ததது. இன்று- மிகப்பல பள்ளிகளில் சுரிதார் அணிந்தே பள்ளிக்கு வருகின்றன தமிழ் சிற்பங்கள்! எப்படி வருகிறது என்பதை உணரமுடியாமலே வந்துவிடும் இரவு மாதிரி, தாவணிகளை உருவிக்கொண்டு நிற்கிறது சுரிதார்,ஜீன்ஸ் மற்றும் பிற சங்கதிகள்.

தாவணிக்கு மட்டுமா இந்த நிலை ... வேட்டி மட்டும் என்ன வாழ்கிறதாம் ? அரசியல் கட்சிகளின் தயவால், வேட்டிகள் - கரைகளோடும், கழுவ முடியாத கறைகளோடும் பிழைப்பு நடத்துகின்றன. மற்றபடி எஞ்சிய தமிழ் மக்கள்ஸ் " நாங்க பேண்ட் சட்டைக்கு மாறி ரொம்ப நாளாச்சு. நீங்க ? " என்று கேட்டபடி கார்பரேட் உலகிற்குத் தக்கபடி தங்களை உருமாற்றி விட்டார்கள்.

எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்... ஏன் நிகழ்ந்தது ?

யோசித்துப்பார்த்தால் - பரிணாம வளர்ச்சியால் இல்லாமல்போன மனிதவால் மாதிரி இந்த ஆடைகள் இடமற்றுப் போய்க்கொண்டிருக்கும் உண்மை புரியும். பெண்கள் அடுப்பூதும் நிலை உடைத்தெரிந்து, படிப்பதற்கும், வேலைக்கும் வந்த பிறகு, பாவாடை தாவணி, சேலை போன்ற ஆடைகளை அணிவதில் இருக்கும் நடைமுறை சங்கடங்கள் இந்த மாற்றத்திற்கு முதல் காரணம். இயல்பாகவே நம் மரபணுக்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் வேற்றுக் கலாச்சார மோகமும், பல ஆண்டுகள் போராடியும் பெரியாரால்கூட மாற்றிவிட முடியாத நம்மைப் பற்றிய நமது தாழ்வான மதிப்பீடுகளும் - இன்னொரு காரணம்.

கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில், முடிந்த மட்டும், பிடிவாதாமாக பழைய மரபுகளை கட்டிக்காப்பதற்கும், கட்டி அழுவதற்கும், நாமென்ன மலையாளிகளா? வெள்ளைக்கார பில்கேட்ஸிக்கு பக்கத்திலிருக்கும் தமிழர்கள் இல்லையா .... அதான் - மாறிட்டோம் !

"பாவாடை தாவணி / சேலையைப்போல் பெண்களை அழகாக, அதே சமயம் கவர்ச்சியாகக் காட்டக் கூடிய ஆடையை இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அமெரிக்கர்கள் / ஐரோப்பியர்களால் வடிவமைக்கவே முடியாது " என்று நம்மின ஆண்கள் நினைப்பது, நம்மினப் பெண்களுக்குத் தெரியும் என்றே தோன்றுகிறது. சமீபத்தில் சிங்கப்பூர் இந்திய சமூகம், சிங்கப்பூரின் புதிய பிரதமர் லீ சியான் லூங்கிற்கு விருந்தளித்தபோது, ஏறக்குறைய 80 சதவீதப் பெண்கள் சேலையணிந்து வந்து அந்த நினைப்பு சரியென்று நிரூபித்தார்கள்.

இப்படியாக - கோயில்களும், திருவிழாக்களும் கொஞ்சம் போலாவது காப்பாற்றிவரும் வேட்டி, பாவாடை, தாவணி, சேலை போன்ற நமது பாரம்பரிய பண்பாட்டு, கலாச்சார அடையாளங்களை மேலும் காப்பாற்ற டாக்டர் ராமதாசு, தொல்.திருமாவளவன் போன்றவர்கள் ஏதாவது செய்தால், ஆதரவுக்கரம் நீட்ட நாமெல்லாம் தயார்தான். ( அதற்காக, சேலைகட்டி நடிக்காத ஜூலியா ராபர்ட்ஸின் படங்களைத் திரையிடும் திரையரங்குகளின் முன் எங்கள் கட்சி ஆட்களும், தமிழ் வலைப்பதிவர்களும் தீக்குளிப்பார்கள் என்றெல்லாம் சொல்லி விடாதீர்கள் ஐயா! )

என்னாலான இன்னொரு யோசனை - வரும் மே மாதம், வெயில் மண்டையைப் பிளக்கும் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம், " சேலை அழகுராணி / தாவணி அழகு ராணி 2005 " போன்ற போட்டிகளை நிறைய நடத்தலாம். அதன் மூலம் நமது பாரம்பரிய ஆடைகள் மீது நிறைய விழிப்புணர்ச்சியும், பார்ப்பவர்களது கண்களுக்கு குளிர்வுணர்ச்சியும் ஏற்படுவது நிச்சயம், நிச்சயம் நிச்சயம் !!!!

Monday, February 28, 2005

ஏதேனும் விட்டுச்செல் !

முதுகு வளைந்த கேள்விக் குறிகள்
மதிக்கப்படுவதில்லை.

நிமிர்ந்த ஆச்சரியக் குறிகளை
தென்றல் கூட முறித்து விடும்.

நிழல் என்ற அடைப்புக்குறிக்குள்
புல்கூட வளர்வதில்லை.

மரணம் என்ற முற்றுப் புள்ளியை
விரும்பியது யார் ?

நீ வினாக்குறியா ?
ஆச்சரியக்குறியா ?
அல்லது அடைப்புக்குறியா ?

ஏதாவது ஒன்றாய் இருக்கலாம்.
தப்பில்லை.

கூட்டலும் கழித்தலும்தான்
வாழ்க்கை.

சமன் செய்து பார்க்கையில்
மீதமாக வேண்டாம் பாவங்கள்.

வெற்று என்ற பெயரும் வேண்டாம்...
முற்றுப் புள்ளியாயேனும்
முடிந்து போ !