Tuesday, December 20, 2005

அன்புச்செல்வன் என்ற மலேசிய எழுத்தாளர்
இடமிருந்து வலமாக - அன்புச்செல்வன், புரவலர் போப் ராஜ், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், நான்

(கடந்த 18 டிசம்பர் 2005 அன்று சிங்கப்பூரில் நடந்த அன்புச்செல்வனின் " திரைப்படங்களின் தாக்கங்கள் " என்ற நூல் வெளியீட்டு விழாவில் இடம் பெற்ற எனது உரை )

அது 90களின் இறுதி வருடங்கள். குறிப்பாகச் சொல்வதென்றால் 1996-97.

பணியின் காரணமாக நான் மலேசியாவில் இருந்தபோது - மலேசிய இலக்கியமும் , இலக்கியவாதிகளும் மெல்ல,மெல்ல அறிமுகமானார்கள். அப்படி எழுத்தின் மூலம் அறிமுகமாகி, ஆற்றல்மிக்க ஒரு இலக்கியவாதியாகவும், ஆடம்பரமற்ற, அன்புமிக்க ஒரு எளிய மனிதராகவும் என்னை ஈர்த்தவர் எழுத்தாளர் அன்புச்செல்வன்.

பால் மரக்காடுகளும், செம்பனைத்தோட்டங்களும் நிறைந்த மலேசிய மண், மனித வாழ்வின் சகல தளங்களிலும் மனிதனை நிறுத்தி, அவனுக்கு வாழ்க்கை நெடுக அனுபவங்களை வழங்கி, முழுமையாக்கித்தான் முடிக்கிறது.
ஒரு இந்தியத் தமிழரோ, இலங்கைத்தமிழரோ அல்லது சிங்கப்பூர் தமிழரோ சந்திக்க முடியாத பிரத்தியேகமான வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியதாகவும் மலேசியத் தமிழரது வாழ்க்கை இருக்கிறது. அவற்றை முறையாக பதிவு செய்வது வரலாற்று அவசியம். அந்தப்பணியை செய்கிற கடமையுள்ளவர்களாக இலக்கியவாதிகள் இருக்கிறார்கள்.

அதிர்ஷ்டவசமாக அத்தகைய பதிவுகளைச்செய்யும் ஆற்றல்மிக்க தமிழ் இலக்கியவாதிகள் மலேசியமண்ணில் இன்றும் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களில் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என சகல முனைகளிலும் ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி, மலேசியத்தமிழ் இலக்கியத்திற்கும், அதன் மூலம் உலகத்தமிழ் இலக்கியத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருப்பவர் அன்புச்செல்வன்.

ஒரு எழுத்தாளன் - பல படைப்புகளின், படைப்பாளிகளின் பாதிப்பில் உருவாகி, வருடங்களில் ஓட்டத்தில் மெதுவாக உருமாறி, இறுதியில் தனக்கென ஒரு சுயத்தை உருவாக்கிக் கொள்கிறான். அப்படி உருவாகிற சுயம், அந்த எழுத்தாளனது சிந்தனை முறையை, சதா உள்ளோடிக் கொண்டிருக்கும் உணர்வுகளை, அவற்றின் பிம்பத்தை வாசகனது முன்னிறுத்துகிறது.

அந்த எழுத்தும் அவனும் வேறு வேறல்ல. அதுதான் அவன்: அவன்தான் அது.

அப்படி ஒரு சுயம் அன்புச்செல்வனது எழுத்துக்கும் இருக்கிறது. அதில் மிக மகிழ்ச்சியான விஷயம் - அந்த எழுத்து பல விஷயங்களிலும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. குறிப்பாக அவரது சிறுகதைகளை படிக்கிற யாருமே அந்த ஆச்சரியதிற்கு உட்படாமல் தப்பிக்க முடியாது. அவருக்கு நடக்கிற, அல்லது அவரைச்சுற்றி நடக்கிற விஷயங்களை அதை விட்டு விலகி நின்று, கிண்டலும்,கேலியுமாக விமர்சனப்பார்வை பார்க்கிற கலை அன்புச்செல்வனது மிகப்பெரிய பலம்.

ஒரு சிறுகதையில் இருதயத்தையும், நுரையீரலையும் காதலிக்கும் மனைவிக்கும் ஒப்பிடுகிறார்:

" இருதயம் காதலி மாதிரி. அடிக்கடி கோவிச்சுக்கிட்டு ஒரு சின்ன இடைஞ்சல் வந்தாலும் எச்சரிக்கை செய்துக்கிட்டே இருக்கும். ஆனா, லிவர் அந்த டைப் இல்ல. அது தாலி கட்டிய மனைவி மாதிரி. தாங்கிற வரைக்கும் சத்தம் போடாம பொறுமையா இருக்கும். ஒரு நிலைமைக்கு மேல போனால் அவ்வளவுதான் "

குறிப்பாக மரணம் பற்றிய பயம் அல்லது எதிர்பார்ப்பு, சற்று வயது முதிர்ந்த எழுத்தாளர்களின் எழுத்தில் எதிரொலிப்பது இயற்கை. ஆனால், மரணத்தை அல்லது மரணமடைந்தவர்களைப் பற்றி எழுதுகிறபோதோ இவரது எழுத்துகளில் "ஒரு சிட்டிகை" நகைச்சுவை உணர்வுவே அதிகமாக வெளிப்படுகிறது.

" கட்டையோடு கட்டையாய் படுத்துக்கிடந்த ராமசாமி வெட்டியானை ரொம்பவும் சோதனை செய்து கொண்டிருந்தான்.1971 வெள்ளத்திலேயே முக்கால் டின் மண்ணெண்ணையில் கதையை முடித்துவிடும் சாமார்த்தியம் படைத்த அனுபவசாலிக்கு இன்றைக்கு எரிச்சலாய் இருந்தது.வேறொரு ஆசாமியாய் இருந்திருந்தால் அடித்துக்கொண்டிருக்கும் இந்த வெயிலிலேயே கருகிப்போயிருப்பான்.இந்த ராமசாமி மூடியிருந்த பெட்டியையும் சாப்பிட்டுவிட்டு வானத்தை நோக்கி சிரித்துக் கொண்டிருந்தான்."

இறந்து, எமலோகத்திற்குப் போன அவனைப்பற்றி சொல்கிறபோது - " செத்துப் போய் விட்டோமே என்ற சோக ரேகையே முகத்தில் படர்ந்திருக்கவில்லை. ஏதோ அடிக்கடி அங்கே வந்து போய்க்கொண்டிருப்பவர் போல மிகவும் தெளிவாக இருந்தார் " என்று குறிப்பிடுகிறார்.

கடந்த 20 ~ 25 ஆண்டுகளில் மனித இனம் மிகப்பெரிய சமூக, கலாச்சார, இன மொழி மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. கனவு என்றால் என்னவென்று தெரியாத பிள்ளைகளுக்கு dreams என்று மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டிய அவலத்தை கால ஓட்டத்தில் நடக்கிற மாற்றமாக ஏற்று வாழ கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த வருத்தத்தை அன்புச்செல்வன் அவரது எழுத்தில் கதையாக, கவிதையாக, கட்டுரையாக அழுத்தமாக பதிவு செய்து வருகிறார்.

நல்ல மனிதர்களின் படைப்புகள் நல்ல இலக்கியமாக மலர்கிறது. அன்புச்செல்வன் படைப்பதெல்லாம் நல்ல இலக்கியமாக இருப்பதன் ரகசியம், அடிப்படையில் அவர் ஒரு நல்ல மனிதர் என்பதுதான். இதை பல சந்தர்ப்பங்களில் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

"விழித்திருக்கும் ஈயக்குட்டைகள்" என்ற இவரது திகில் கதைகள் ,தொடராக மக்கள்ஓசை வார இதழில் வெளிவந்த சமயம், நானும், எனது நண்பர் தண்ணீர்மலையும் அதை கடுமையாக விமர்சனம் செய்தோம். அன்புச்செல்வன் அந்த விமர்சனங்களை தைரியமாக எதிர்கொண்டார். எழுத்தாளர் புண்ணியவான் போன்றவர்கள் அன்புச்செல்வன் எழுதுவது திகில் கதைதான் என்று ஆதரித்தார்கள்.

நானும் என் விமர்சனத்தில் " ஆமாம். இவர் எழுதுவது திகில் கதைதான். ஆனால் யாராவது அதை திகில் கதை இல்லை என்று சொல்லாமல் இருக்க வேண்டுமானால் கதை நடுவே ஆங்காங்கே "திகில், திகில்" என்று போட்டு விடுங்கள். அப்புறம் யாரும் அதை திகில் கதை இல்லையென்று சொல்ல முடியாது. அதையும் மீறி, இல்லையென்று யாராவது சொன்னால், உங்களை ஆதரிக்க ஏதாவது ஒரு புண்ணியவான் இல்லாமலா போய் விடுவார்.." என்று சொல்லி வைத்தேன்.


கொஞ்ச நாட்களுக்கு முன் அந்த புத்தகத்தை நூல் வடிவில் பார்த்தபோது, எனது "அந்த" விமர்சனத்தையும் அன்புச்செல்வன் அவரது நூலில் சேர்த்திருந்ததை பார்த்தேன். அதுதான் அன்புச்செல்வன். அந்த நேர்மைக்கும், எழுத்து ஆண்மைக்குமான வணக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

அன்புச்செல்வனது கதையோ, கட்டுரையோ - எதை படித்தாலும், அதை நீங்கள் முழுமையாக படித்து முடிப்பதற்குள் ஏதாவது ஓரிடத்தில் உங்கள் இதழோரத்தில் மெல்ல ஒரு புன்னகை அரும்புவதை தவிர்க்கவே முடியாது. அத்தகைய அனுபவம் சுஜாதாவின் எழுத்துக்களை, அன்புச்செல்வனது எழுத்துக்களை படிக்கும்போது மட்டுமே எனக்கு நேர்ந்திருக்கிறது. நீங்கள் படித்தால், அந்த அனுபவம் உங்களுக்கும் நேரக்கூடும்.

இன்று வெளியாகும் திரைப்படத் தாக்கங்கள் பற்றிய நூல் அன்புச்செல்வனது எழுத்துப்பயணத்தில் இன்னொரு எல்லைக்கல். இன்னும் அவர் எட்டக்கூடிய எல்லைகள் எவ்வளவோ இருக்கிறது.

குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளில் மலேசியப் பொருளாதரத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களால் மலேசியத்தமிழரது வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களை மையமாக வைத்து அவர் ஒரு நாவலை எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து, இத்தகைய நிகழ்வுகள் மூலம் உலகம் தழுவிய தமிழ் இலக்கியப்பாலத்தை ஏற்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் முயற்சிகள் போற்றத்தக்கது என்பதை தெரிவித்து அமர்கிறேன்.

பாலு மணிமாறன்
18 டிசம்பர் 2005.

Thursday, November 03, 2005

கோடுகள்

ஏதுமற்ற காகிதத்தில் இடும்கோடு
வெற்றைப் பிரிக்கும்
மேலென, கீழென.

தொட வேண்டிய
கோடுகளை நோக்கி ஓடும்
மனித புள்ளிகள்.

விதிக்கோட்டில் நடக்கும்
சாதாரணம்.
தானிடும் கோட்டில்
விதி கூட்டிச்செல்லும் உதாரணம்.

அழிவதில்லை சில கோடுகள்.
மேலும் கீழும் மாறி
தம்மை தற்காக்கும்.
நீளும்.

படி கூட
கோட்டின் குறியீடுதான்.
தாண்டக்கூடாது சீதை.
பத்தினிகளும் அப்படியே!

Sunday, October 30, 2005

போலொரு

தொலைவுகளுக்கப்பால்...
அடிவானின் அடிவயிற்றில்
அருகிருந்த காற்றில் பதுங்கி
எங்கோ இருந்திருக்கிறது.

நெழிவுகளோடும் வளைவுகளோடும்
ஒரு பொழுதின்
திடீர் கணத்தில் வெளிப்பட்ட இசை
புன்னகை இன்பத்தில் புதைத்தது என்னை.

நாட்களில் வாரங்களில்
மேற்பரப்பில் முளைத்து
பனித்துளி சுமந்தேன் நான்.

மதியத்தூக்கத்தின்
எதிர்பாராக் கனவென வருகிறது
எனக்கானதல்ல இசை.
இருந்தாலும் எனக்குமாகிறது...

மனக்கரையின் மணற்பரப்பில்
போகிறது சிரிப்பலைகள்.

Monday, October 24, 2005

நனையத்துணியும் பூனைகள்

இரவின் தூறல் மழை.
நடக்கும் மனிதர்கள்
பிடிக்கும்
குடை.
மரக்குடையற்ற
மதில்மேல்
நனைகிறதொரு பூனை.

பாய பார்க்கிறதா பக்கம்?
அந்தப்பூனை
பார்த்தபடிதான் இருக்கிறது.

மழை பயந்த மனிதர்களை..

கடக்கும் வாகனங்களை
கடைக்கண்ணால் பார்த்தபடி
நடந்தே செல்லும் சீனக்கிழவனை..

கிளைக்கை நீட்டி
கட்டிடங்கள் தொடும் இயல்பில்
முடமான மரங்களை...

இன்னொரு அடைமழையில்
மிதக்கத்தகு சருகுகளை..

அந்தப்பூனை
பார்த்தபடிதான் இருக்கிறது.

தாவக்கூடும் பூனைகள்
அல்லது..
சோம்பல் முறித்தபடி
வேடிக்கை பார்ப்பது கூட
அதன் சுபாவமாய் இருக்கலாம்!

Friday, October 21, 2005

ஒளியும் இரவு

யாரும் பார்க்காமல் அழியலாம்

சூரியச்சூட்டில்
ஈரமிழந்து உதிரலாம்

அசலை தொலைத்த சாயலில்
இன்னொரு சாயல்
விழுந்துமிருக்கலாம்

நிலவொளியில்
இரவில்

கடற்கரை மணலில்

வளைவெளி நண்டுகள்
விளையாடுகையில்

ஒளியும் இடமாய்
உருமாறலாம்

உனதான, எனதான
காலடித்தடங்கள்!

Monday, October 17, 2005

எழுதாத நினைவின் வரிகள்

எனக்காக வருந்தாதீர்கள் -
வாழ்க்கையை பூரணமாய் வாழ்ந்தவன் நான்.

எனக்கான இரங்கல் கூட்டங்களும் வேண்டாம் -
இயல்பானவர்கள் கூட
போலிமுகம் தரிக்கும் கட்டாயத் தருணங்கள்
அவை.

விட்டு விடுங்கள் -
எனக்கான எந்த மெனக்கெடல்களும்
அவசியமற்றவை.

என்றோ
எப்போதோ
என்னை ஆசையாய் பார்த்திருந்தவனின் -
ஏதோ ஒரு தெரிப்பில்....

எவருமறியாமல் வெளிவந்து
எவருமறியாமல் உள்புகுந்து
சிரிக்கும் சுகம்
போதும் எனக்கு.

உஙகளுக்குக் காத்திருக்கின்றன
உங்களது வேலைகள்!

பசித்திருந்தவன்

உன்னிடம் சொல்வதற்கு ஏதும் இல்லாமல்
நடந்து போகிறவளின் பின்னால்
யாசித்தபடி நடக்கின்றன
வார்த்தைகள்.

நீ யாசிக்கமாட்டாய் என்பதை அறிந்திருப்பவள்
ஏதுமற்ற உன் பாத்திரத்தில்
ஓரிரு வார்த்தைகளையேனும்
பிச்சையிட்டிருக்கலாம்.

இதுவரை -
யாரோ இட்ட பிச்சைகளில்
இல்லாமல் போயிருந்த உணவைத்தேடுவதில்
உன் இளமை போய்விட்டது :
அவள் இடும் பிச்சைக்காக
இருக்கிறது பசி மட்டும்.

அவளோ
உன்னை உண்டபடி போகிறாள்
நடந்து.

Wednesday, August 17, 2005

சாயல்

எதன் சாயலுமற்ற ஏதேனும் ஒன்று
காற்று வெளியிடை காணத்தவித்து
பறந்ததொரு பறவை

கிழக்கில் சிறிதும் மேற்கில் சிறிதும்
வடக்கில் சிறிதும் தெற்கில் சிறிதும்
அலைந்தலைந்து ஓய்ந்து அமர்ந்ததொரு
மரக்கிளையின் ஆடாக் கிளைகள்
அசைவற்ற ஓய்வின் சாயலில்
ஓய்ந்த்திருப்பதாகக்கண்டு
சிலிர்த்தது சிறகு

இருட்டின் சாயலில்
கீழ் நீண்டதொரு நிழல்
இறகின் சிலசதவீத
நிறச்சாயலுமதற்கு

இருட்டின் நிழல் முகமும்
அழுக்கின் கிழிதுணியும்
போலொரு கிளை மேனி
இலைநீட்டி கையேந்தலென
அவள் நிற்கிறாள் ஏந்தி

கடந்து நடந்து நின்று திரும்பி
மேலும் கீழும் பைதடவி
சில்லறையற்ற பத்து ரூபாய்
அவளுக்கிட்டு விரைகிறான் அவன்
சாயலற்ற கடவுளின் சாயலில்.

Saturday, July 23, 2005

அலையில் பார்த்த முகம்

ஒரு மழைநாளின் மனிதச்சகதியில்
நடக்கிறது மண்.

அதிகாலை பூஜையின் பாடலுக்கு
அவரால் வாசிக்கப்படுகிறது
ஒரு ஆர்மோனியப்பெட்டியும்
வீணையும்.
மரியாதானே உன்பெயர்?

கிணற்றின் இருள் மறைவில்
கருத்தப்பாண்டியின் மேகம்
அவனினின்று
காற்றாகிறது.

துவைத்து உலர்கிறது துணி.
கொங்கை குலுங்கிய ராணி
வாய் சிவந்து அழுக்காகிறாள்.

ஆற்றிலும் வருகிறது அலை
ஒவ்வொரு முறையும்
இழுத்துச் செல்கிறது ஏதேனும்.

Friday, July 22, 2005

அவனது கவிதைகள்

நடுவிலிருந்து
கடைசியிலிருந்து
எப்படியிருந்தோ
துவங்கிவிடுகின்றன
அவனுக்கான
அவனது கவிதைகள்.

அவனைக் கேட்காமலே
தம்மைத் தாமே
எழுதியும் கொள்கின்றன.

அவன் உடுத்தி விடும்
ஆடைகளையெல்லாம்
கழற்றி எறிந்துவிட்டு
ஒரு குழந்தை மாதிரி அவை
நிர்வாணமாய் சிரிக்கின்றன.

சில நடக்கும்,
சில நடனமிடும்
சின்ன சில்மிஷங்களோடு
ஓய்ந்து போகும் சில.

ஒரு வரியோடு
படுத்தே கிடப்பதுண்டு
சில சோம்பேறிக் கவிதைகள்.

வந்த சுவடின்றி வந்துவிட்டு
வனப்புக் காட்டி, உயிர்ப்பித்து
சதையோடும், வளைவோடும் சரசமாடி
கலந்துவிட்டுப் போகும் சில
காமுகிக் கவிதைகள்.

அறைவதும் உண்டு சில.
தெளிய சில நாள் பிடிக்கும்.
தெளிந்ததாய் நினைக்கையில்
மறுபடியும்
உச்சிமயிர் பிடித்து உலுக்கும்.

இப்படித்தான் என்றில்லை...
நடுவிலிருந்து
கடைசியிலிருந்து
எப்படியிருந்தோ
துவங்கிவிடுகின்றன
அவனுக்கான
அவனது கவிதைகள்.


Thanks to : " Thinnai "

Tuesday, July 19, 2005

இடைவெளிகள்

கண்களில் அரும்பி
இடைவெளி விட்டு
இதழ்களில் பூக்கிற
புன்னகைதான் அழகு !

நட்புக்கும்
இடைவெளிகள் நல்லது.
அது
நல்லதை அசைபோட
அழுக்கை அகற்ற
அவகாசம் தருகிறது...

தெருவென்ற பெயரில்
இடைவெளிதான்
எதிரெதிர் வீடுகளுக்கிடையில்
காதல் கரம் நீள
காரணமாகிறது...

தொட்டுக்கொள்ளும்
தூரத்தில் இருந்தாலும்
இடைவெளி விட்டுஅமர்கிறது
கெளரவக் காதல்.

பெரிய இடைவெளிக்குப்பின்
பிறக்கின்ற கவிதையின்
நீள விரல்கள்
நெஞ்சம் தொடுவதை
கவனித்ததுண்டா?

இரண்டு குழந்தைகளுக்கு
இடையில் மட்டுமல்ல -
புன்னகை, நட்பு
காதல், கவிதையென
பலவற்றிலும்
இடைவெளி என்பதே
இனிய விஷயம்..!

Saturday, April 30, 2005

சாமிகிட்ட கேட்ட வரம்

சாமிகிட்ட கேட்பதற்கு எத்தனையோ வரங்கள் நினைப்பில். எல்லா வரமும் தருமா சாமி? தெரியவில்லை. குறைந்தபட்சம் இதைத் தந்தாலாவது தேவலை...!!!

Image hosted by Photobucket.com


சாமி...

வேலை அவசரத்தில்
சிகப்பு சிக்னல் பரிதவிப்பில்
பச்சை விளக்குக்கு
பதற்றமாய் பார்த்திருக்க....
வயிற்றுப் பிழைப்புக்கு
முகம் முன்னே கரம் நீட்டும்
குருட்டு மனிதனின் இருட்டுக்குள்
கரையாமல் மறையாமல்
ஏதேனும் ஈகின்ற
இளகிய மனம் எனக்குத்தா!

Thursday, April 28, 2005

பார்ப்பதற்கு மட்டுமான டைரிகள்

டைரிகள் - எழுதவதற்காக மட்டுமல்ல... எழுதாமல் இருப்பதற்கும்தான். எப்போதும் எழுதிய பக்கங்களை விட
எழுதாத பக்கங்களே ஏராளமாய் பேசுகின்றன என்னிடம்!


Image hosted by Photobucket.com

ஐந்தரை கண்விழிப்பு
ஐந்தைந்து நிமிடமாய்

எட்டிப்போகும் எழுகை...
ஏதேனும் மிக மறந்து
அலுவலக வாகனம் நாடி
அவசர ஓட்டம்...
அதை முடி, இதை முடி
அதிகார ஏவல்கள்
அது வேண்டும், இது வேண்டும்
தொழிலாளர் தேவைகள்...

அதை முடித்து இதை முடித்து
அதைச் செய்து இதைச் செய்து
எழுதாத டைரியோடு
ஓடியே போகும் ஒரு வாரம்!

ஞாயிற்றுக்கிழமை நடுநிசியில்
எதேட்சைக் கண்விழிப்பில்
ஏக்கக் கைநீட்டி என்மனம் துலாவும்
இன்னொரு சனிக்கிழமை சாயந்திரம் !


Wednesday, April 27, 2005

ஓவியங்களில் தொங்கிய சுவர்

மெளனம் ஓவென்று கூச்சலிடும் தருணங்களில் - கூச்சல்கூட கண்களுக்கு மெளனமாய்த் தெரிகிறது.ஒரு மெளனமிட்ட கூச்சல் வடிகிறது இப்படி.....

Image hosted by Photobucket.com

வார்த்தைக்கும் வரிகளுக்கும்
அர்த்தங்கள் வெகுசிலவே.
மௌனம் -
ஆயிரம் வகையில் அர்த்தப்படும்.

அதிகம் பேசுபவனிலும்
ஆழ்ந்து மெளனிப்பவனிடமே
அச்சம் வருகிறது.

மெளனமாய் இருப்பதால்தான்
மோனாலிசா ஓவியம் மதிக்கப்படுகிறது.
மெளனம் -
ஓவியங்களின் பொதுமொழி.

நாய்கூட
பிடிக்காதவர்களை மட்டுமே குரைக்கிறது.
பிடித்தவர்களோடு பேசும் அது
நக்கியபடி மெளனமொழி!

நம் ஊர் சாமிகளும் பேசியதேயில்லை.
சாமியாடிப் பேசும் நம்மைப்பார்த்து
மெளனமாய்...
புன்னகை மட்டுமே செய்கின்றன.

பதின்மவயதில் பார்த்த ஒரு பெண்
இறுதிவரைக்கும் மெளனித்தே போனதனால்
இன்றுவரை அவளுக்கு
ஆயிரம் குரல் பொருத்தி
அழகு பார்த்திருக்கிறேன்....

பலநூறு முறை பேசியதுண்டு அப்பா...
கடைசி நாற்காலியில்
மெளனித்த அவர் மட்டும்
இன்னும் நெஞ்சில் புகைப்படமாய்!

ஊர்விழிக்கா காலையில் விழித்த மனம்
வாழ்க்கை வருடுகையில்
சத்தமில்லா மெளனமே சந்தோஷம்.

இப்போதும்.....
என் ஜன்னலுக்கு வெளியே
விரிந்து கிடக்கிறது இரைச்சல்.
மனசுக்குள்
நிறைந்து கிடக்குது மெளனம்!

Tuesday, April 26, 2005

தமிழகத்திற்கு அப்பால் உதிர்ந்த ஒரு நட்சத்திரம்

இரங்கல் கூட்டமென்றால் சோகம் சொட்டச்சொட்ட உட்காரத்தான் வேண்டுமா?சிங்கப்பூரில் நடந்த உதுமான்கனிக்கான நினைவுக் கூட்டத்தில் இந்த பாரம்பரிய இந்திய மரபை உடைத்து "இன்று ஒரு மகிழ்ச்சியான நாள்" என்று அறிவித்தார் அருண்மகிழ்நன்.
Image hosted by Photobucket.com
புன்னகையோடு மேடையில் பேசும் உதுமான்கனியின் படம்

சுனாமி உலகைத் தாக்கிய அதேவேளை சிங்கப்பூர் தமிழர்களை சுனாமியாய் தாக்கியது உதுமான்கனியின் மரணச்செய்தி. ஒரு தொலைக்காட்சி போட்டிநிகழ்ச்சியில் நடுவராய் இருந்த அவர், நிகழ்ச்சி முடிந்ததும் மாரடைப்பால் காலமானது பலராலும் நம்ப முடியாத விஷயமாக இருந்தது. அவர்கள் மனம் முழுக்க நிரம்பியிருந்த கேள்வி - " நேசத்திற்குரியவர்களின் மரணத்தை நம்பவே முடிவதில்லை. பாசத்திற்குரிய நீ எப்படிப் போயிருப்பாய்?". சில நல்லவர்களின் மரணத்தில்தான், மரணத்தின் வலிமை அடிக்கடி ஞாபகப்படுத்தப் படுகிறது. இப்போதெல்லாம் மாரடைப்பும் மரணமும் வயது பார்த்தா வருகிறது....

நம் வாழ்க்கை முழுக்க பவபேர் வந்து போனவண்ணம்தான் இருக்கிறார்கள்...ஆனான் ஒருசிலரால் மட்டுமே, வாழ்க்கை முழுக்க நினைத்து மகிழத்தக்க நினைவுகளை விட்டுச்செல்ல முடிக்கிறது. சிஙக்ப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாளராக இருந்து, மொத்த சிங்கப்பூர் தமிழ் சமூகத்தின் இதயத்தில் இடம் பிடித்திருந்த புன்னகை மன்னன் , " உங்கள் அன்பன் " உதுமான்கனி அப்படிப்பட்டவர்களில் ஒருவர்.

கடந்த 13/04/05 அன்று சிங்கப்பூர் வுட்லாண்ட்ஸ் வட்டார நூலகத்தில் உதுமான்கனியை நினைவுகூறும் நிகழ்ச்சிக்கு அவரது நண்பர்கள் "வசந்தம் சென்ட்ரல்" முகம்மது அலி, "ஒலி 96.8" அழகியபாண்டியன் போன்றோர் முன்னெடுத்து ஏற்பாடு செய்திருந்தார்கள். நூலகவாயிலில் சின்ன வயதுமுதல் உதுமான்கனி எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. ஏறக்குறைய 2000 புகைப்படங்களைப்பார்த்து, அவற்றில் சரியான சிலவற்றை தேர்ந்தெடுத்து, அதை அழகான தொகுப்பாக்கி இருந்தார் நூலக அதிகாரியான "புன்னகை" புஷ்பலதா.

நவீன உலகின் சகல வசதிகளும் உள்ள அந்த நூலக அரங்கின் மையத்திரையில் "உங்கள் அன்பன்" உதுமான்கனி என்ற எழுத்துக்களோடு புன்னகையித்தபடி உதுமான்கனியின் பிரமாண்ட புகைப்படம். மேடையில் ஒரே ஒரு ரோஸ்ட்ரம் மட்டும் போட்டிருக்க எல்லோரும் கீழ் இருக்கைகளில் இருந்தார்கள்.

சிங்கப்பூர் media corp நிறுவனத்தைச் சேர்ந்த சபா முத்து நடராஜன் " எப்போதும் உண்மையை உரக்கப் பேசுபவர் : எல்லோரையும் சமமாக நடத்துபவர் " என்று உதுமான்கனியைப்பற்றி சொல்லிவிட்டு எழுத்தாளர் மா.அன்பழகனை பேச அழைத்தார்.

"நட்புக்கு இலக்கணம் வகுத்துப்பழகிய நண்பனே" என்று துவங்கிய அன்பழகனின் கவிதை, அவர்களுக்கிடையில் இருந்த நட்பு, சமூகத்தின் மீதும், குடும்பத்தின் மீதும் உதுமான்கனி கொண்டிருந்த நேசம், தேசங்களின் எல்லை கடந்து மனிதர்களைத்தொட்ட அவரது ஆளுமை என்று, உதுமான்கனியின் பலபரிணாமங்களையும் பற்றிப்பேசியது. மாலை நேரங்களில் நண்பர்களை சந்தித்து இலக்கியம் பேசி மனதை இலகுவாக்கிக் கொண்ட உதுமான்கனியின் உத்தியைச் சொன்ன அன்பழகனது கவிதையின் ஒருவரி, உதுமான்கனியின் ஆளுமையை முழுமையாகப் படம் பிடித்தது. அது - "ஆண்களும் அவரைக் காதலித்தார்கள்" என்ற வரி.

அவருக்கு அப்புறம் பேசவந்த அருண் மகிழ்நன்தான் " இன்று ஒரு மகிழ்ச்சியான நாள்" என்று சொன்னார்.அதற்கான காரணமும் சொன்னார். "இந்த இறப்பில் ஒரு பிறப்பு இருக்கிறது... ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியை நடத்தி, உதுமான்கனியின் பெயரில் பரிசு வழங்க முடிவாகி, அதற்கான நிதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.

"மறைந்த எழுத்தாளர் நா.கோவிந்தசாமியின் பிரதான சீடர் உதுமான்கனி. ஆனால் நா.கோவிந்தசாமிக்கு 5ம் ஆண்டு இரங்கல் கூட்டம் நடத்தியபோது 'இறந்தவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை' என்று சொல்லி அதற்கு வரமறுத்தவர் உதுமான்கனி. இப்படி தன்னைப்பற்றியும், தான் சார்ந்த சமூகம் பற்றியும் அவருக்கு தீவிரக்கருத்துகள் இருந்தது. பல்வேறு திறமைகள் உதுமான்கனிக்கு இருந்தது. ஆனால், ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளராக அவர் ஆற்றிய பணி பெரியது.சிங்கப்பூரில் அவரை மிஞ்சிய தொலைக்காட்சி அறிவிப்பாளர் யாரும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியும்" என்று குறிப்பிட்டார் அருண் மகிழ்நன்.

"என் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் எல்லாம் நான் உதுமான்கனியிடம் ஆலோசனை கேட்கத்தவறியதில்லை" என்று சொல்லி தன் பேச்சைத்துவங்கிய சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சியின் தலைவர் முகம்மது அலி, சிறுவயதில் தான் உதுமான்கனி என்ற பிரமாண்டத்தைப் பார்த்து வியந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

"டி.வி உலகம் ஒரு மாயை என்பதுதான் அவர் எனக்கு வழங்கிய முதல் அறிவுரை. என்னைப்பற்றி அவர் மற்றவர்களிடம் 'கனவுலகில் சஞ்சரிப்பவன்' என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்.உண்மைதான். ஆனால் அந்த கனவுலகோடு அவரிடம் போகும்போது, அந்த கனவுலகை குலைத்துவிடாமல், நிதர்சனங்களை எடுத்துக் கூறுவார். என் வாழ்க்கையின் பல கட்டங்களில் நான் விரும்பிப்படித்த புத்தகம்- உதுமான்கனி. அவரிடம் நகைச்சுவை உணர்வு என்ற பெரிய சொத்து இருந்தது. அது பலரையும் அவரிடம் ஈர்த்தது. ஒரு போட்டியென்றிருந்தால், தான் மட்டுமல்ல, தன்னோடு சேர்ந்து மற்றவர்களும் ஜெயிக்க வேண்டுமென்று நினைக்கிற பரந்த மனதுடையவர் அவர். சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த இணைய எழுத்தாளர் வெங்கடேஷின் புத்தக வெளியீட்டில் பேசியபோது " உதுமான்கனி, அருண்மகிழ்நன் - இருவரும் இருக்கும் மேடையில் எனக்குப் பேசப்பிடிக்காது என்று நகைச்சுவையாக குறிப்பிட்டேன். ஆனால் அது அவரைக் காயப்படுத்தி விட்டதோ என்று இப்போது கலங்குகிறேன்... " என்று சொல்லி நிறுத்த, அவரது விழியோரம் துளிர்த்த கண்ணீர் , அந்த வார்த்தைகள் நெஞ்சின் ஆழத்திலிருந்து வருவதை சொல்லி நின்றது.

அதன்பின் சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி வசந்தம் சென்ட்ரல் ஒளிபரப்ப இருக்கும் நிகழ்ச்சியை திரையிட்டுக் காட்டினார்கள்....

1978 துவங்கி உதுமான்கனி அறிவிப்பு செய்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், அவரைப்பற்றி மற்றவர்கள் சொன்ன கருத்துகள், பல்வேறு விஷயங்களைப் பற்றி உதுமான்கனியே பகிர்ந்து கொண்ட கருத்துகள் போன்றவை அத்தொகுப்பில் இடம் பெற்றிருந்தது. தற்போது தமிழகத்தின் SCVயில் பணியாற்றும் ஹேமாமாலினி, 'சின்னவயதில் எங்கள் வீட்டில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அதில் வரும் ஆடல், பாடலைப் பற்றி பேச மாட்டார்கள்.... உதுமான்கனியின் தமிழைப்பற்றிதான் பேசுவார்கள்.' என்று சொல்லியிருந்தார்.

இறுதியாகப் பேசிய சிங்கப்பூர் தமிழ் வானொலி 96.8ன் தலைவர் அழகிய பாண்டியன், நண்பர்கள் ஒன்று சேர்ந்து உதுமான்கனி நினைவு கட்டுரைப்போட்டிக்காக 15,000 சிங்கப்பூர் வெள்ளி நிதி சேர்த்திருப்பதாகவும், அது SINDA என்றழைக்கப்படும் Singapore Indian Development Assosaition கட்டுப்பாட்டில் இருக்குமென்றும் குறிப்பிட்டார். இப்படிப்பட்ட முயற்சிகள் புதிய புதிய உதுமான்கனிகளை சிங்கப்பூருக்கு பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையோடு வெளிவரும்போது, கண்ணில் பட்ட முகம்மது அலியிடம் " உதுமான்கனி விட்டுச்சென்றிருக்கும் வெற்றிடத்தை உங்களால் நிரப்ப முடியும் " என்று உளமாரச் சொன்னேன்...அப்போது அவரது கண்கள் மறுபடியும் கலங்கியது !

Friday, April 22, 2005

வார்த்தைச்சித்தரின் வார்த்தை விளையாட்டு

சுகிசிவம் தனது சமீபத்திய சன் டி.வி பேச்சில் - மருதூர் அரங்கராசன் அவர்கள் "ஒற்றுப்பிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி" என விரிவாக எழுதியிருக்கும் இலக்கண நூலைப்பற்றி குறிப்பிட்டார்.

அந்தச்செய்தி - 1980களின் இறுதியில் சென்னை, புரசைவாக்கம், சர்.முத்தையாச் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மருதூர் அரங்கராசன் அவர்களிடம் நான் தமிழ் மாணவனாக இருந்தபோது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது.

எங்கள் பள்ளிக்கு ஒருமுறை வார்த்தைச்சித்தர் வலம்புரிஜான் பேச வந்திருந்தார். அவர் "தாய்" வார இதழின் ஆசிரியராக இருந்த சமயம் அது. எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர். எந்த ஊரில் அல்லது பள்ளியில் கண்டிப்பான தலைமையாசிரியரை மாணவர்கள் விரும்பியிருக்கிறார்கள்?

வலம்புரிஜானை அறிமுகப்படுத்திப் பேசிய தலைமை ஆசிரியர், அவரை " தாய்க்குத் தாய் " என்று பாராட்டாகச் சொல்லிவைக்க, அடுத்து பேசவந்த வலம்புரிஜான் " உங்கள் தலைமையாசிரியர் மிகவும் நாகரிகமானவர். எங்கே என்னை ஒரு பாட்டி அளவிற்கு வயதானவன் என்று சொன்னால் நான் மனம் வருந்தப்பட்டு விடுவேனோ என்று எண்ணி, "தாய்க்குத் தாய்" என்று நாசுக்காக அழைக்கிறார். அப்படியென்றால் அவர் நாகரிகமானவர்தானே?" என்று பேசி ஒரே வாராக வார...

மாணவர்கள் அடைந்தது - ஆனந்தம். தலைமையாசிரியர் முகத்தில் வழிந்தது - ......... ( அதை நீங்களே யூகிச்சுக்கங்க ! )

Thursday, April 21, 2005

எழுத ஏதுமில்லை

இரவுக்கு வெளிச்சம் தருவது நிலவு மட்டுமா....உறவுகளும் ஒளியூட்டலாம் நடந்து!

Image hosted by Photobucket.com

நேற்றிரவு பூங்கா....
நட்சத்திரங்கள், நான்
நிறையாத இருள்
விழி வருட நிலா
மனம் வருட அவள்..!

முடிந்து போயின வருடங்கள்....
கடந்தகால அவளை
கவிதையாக்கும் உத்தேசம்!

இறந்த காதலுக்கு
எதற்கு இனிக் கவிதை...
வருடம் ஒருமுறை வரும்
திவசமா அது?
யோசிக்கிறேன்.

இல்லாமல் போவது இறப்பு.
என்னிலிருந்து அவள்
இல்லாமல் போனதுண்டா?

நிலவில் நிலைக்குத்தும் விழிகள்
நடந்து நடந்து யோசிக்கும் மனம்.

எதுவும் எழுதாமல்
எழுந்து நடக்கின்றேன்...
நிழலோடு நடந்தது வெளிச்சம்!


இடைவெளிகள்

பயணம் போகின்ற பாதையில் படுகின்ற விஷயங்கள் எப்போதும்
இன்ன பிற சிந்தனைக்கு இட்டுச்சென்றே விடுகின்றன

Image hosted by Photobucket.com


கூர்ந்து கவனியுங்கள்...
கண்களில் அரும்பி
இடைவெளி விட்டு
இதழ்களில் பூக்கிற
புன்னகைதான் அழகு !

நட்புக்கும் இடைவெளிகள்
நல்லது.
அது
நல்லதை அசைபோட
அழுக்கை அகற்ற
அவகாசம் தருகிறது...

தெருவென்ற பெயரில்
இடைவெளிதான்
எதிரெதிர் வீடுகளுக்கிடையில்
காதல் கரம்நீள
காரணமாகிறது...

தொட்டுக்கொள்ளும்
தூரத்தில் இருந்தாலும்
இடைவெளி விட்டு
அமருவதுதான்
காதலில்கெளரவம்...

பெரிய இடைவெளிக்குப்பின்
பிறக்கின்ற கவிதையின்
நீள விரல்கள்
நெஞ்சம் தொடுவதை
கவனித்ததுண்டா?

இரண்டு குழந்தைகளுக்கு
இடையில் மட்டுமல்ல -
புன்னகை, நட்பு
காதல், கவிதையென
பலவற்றிலும்
இடைவெளி என்பதே
இனிய விஷயம்..!


Wednesday, April 20, 2005

மரணம் பற்றி ஆதிகுமணன் சொன்ன நகைச்சுவை

மலேசிய தோட்டப்புறங்களில் யாராவது மரணமடைந்து விட்டால், கோலாலம்பூரில் இருக்கும் தமிழ் தினசரிகளின் தலைமை அலுவலகங்களை தொலைபேசியில் அழைத்து தகவல் தந்து விடுவார்கள். மறுநாள் இறந்தவரின் ஊர், பெயர், எந்த தோட்டத்தைச் சார்ந்தவர் என்பது உட்பட விரிவான செய்தி பத்திரிக்கையில் வந்து விடும்.

ஒருநாள் காலை ஆதிகுமணன் அவரது மலேசிய நண்பன் நாளிதழ் அலுவலகத்திற்கு போனபோது, ஒரு பெரியவர் அவரைப் பார்க்க நீண்ட நேரமாக காத்திருப்பதாகச் சொன்னார்களாம்.ஆதி அவரை சந்தித்து " நீஙக யாரு?" என்று கேட்டாராம். அதற்கு அந்தப் பெரியவர் " இன்னைக்கு பேப்பர்ல செத்துட்டதா செய்தி போட்டிருக்கீங்களே - ராமசாமி - அந்த ராமசாமி நாந்தேன் " என்றாராம். அதிர்ந்து போன பத்திரிக்கை ஆசிரியர் ஆதிகுமணன் நடந்த தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டதோடு, அந்த மன்னிப்பு கேட்கும் சங்கதியை மறுநாளே மலேசிய நண்பனில் வெளியிட்டு விடுவதாகச் சொன்னாராம்.

ஆனால் அந்தச் செய்தியோ இப்படி வெளியாகி விட்டதாம் " மிகவும் வருந்துகிறோம். ராமசாமி இறக்கவில்லை. இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்." !!

Monday, April 18, 2005

இந்த மானிட சாதிகளில்....

உங்கள் ஊரில் எத்தனை சாதி இருக்கிறது?

சிங்கப்பூரில் இருக்கிற இந்த சாதியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.... அந்த ஜாதி - ஊரில் நில,புலன்களை விற்றோ...கடன் வாங்கியோ, மனைவியின் தாலி உட்பட எல்லா நகைகளையும் அடகு வைத்தோ - சிங்கப்பூர் ஏஜெண்டிற்கு பணம் கட்டி, சிங்கப்பூர் வந்து இரவு,பகல், ஞாயிறு, திங்கள் பாராமல், உழைத்து உயிர் தேயும் நம்பிக்கையாளர்கள் சாதி!

அவர்களது நம்பிக்கை - ஒவ்வொறு நாளும் மேற்கில் அஸ்தமனத்தை மட்டுமே கண்டு வரும் எனக்கு, ஒரு நாள் எனக்கும் கிழக்கில் விடியும் என்பதே!

ஓரளவு பணம் சேர்த்து, நிலபுலம் வாங்கி, வீடு கீடு கட்டி, தொழில் கிழில் செஞ்சு, வாழ்க்கையில் நானும் நாலு பேர் மதிக்க வாழ வேண்டுமென்ற வைராக்கியத்துடன், கட்டிய மனைவியின் காதல் நினைவுகளுடன், சிரிக்கும் பிள்ளையின் சிந்தனையுடன் வாழும் இவர்களது வாழ்க்கை பயணத்தை துயரங்கள் மட்டும்தான் தொட்டுச் செல்லும் என்று யார் சொன்னது... அவ்வப்போது இப்படி சிரிக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு இருக்கவே செய்கிறது......


Image hosted by Photobucket.com

போன தீபாவளியை இவர்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்று கேட்டேன்.அவர்கள் இப்படித்தான் கொண்டாடினார்களாம்...........

வீட்டுக்கு வெளித் தெரியும்
எதிர் புளோக் ஜன்னலில் எரியும்
எலக்ட்ரானிக் பல்புகளைத் தவிர
தீபாவளி சேதி சொல்ல ஏதுமில்லை
இவ்விடம்.


விடுமுறையில்லா உழைப்பு ஞாயிறுகள்
டாலராகி,ரூபாயாகி, பட்டாசாகி
வெடித்துச் சிதறுகையில்
பயந்து சிரிக்கும் பத்து வயது மகளின்
போன வருட முக ஞாபங்களோடு
சன் டி.வி முன்னால்
சத்தமில்லாமல்
எங்கள் தீபாவளி தினம் !

ஒரு மேசையில் மீந்திருந்த பெண்ணின் இதயம்!

என்னோடு பணிபுரிந்து பிரிந்த, ஒரு மலாய் இனப்பெண்ணின் மேசையை தற்செயலாக பார்த்தபோது கிடைத்த ஒரு மனப்பதிவு....

Image hosted by Photobucket.com

அவள்
பதிலற்ற சிந்தனைகளுக்குள்
தனித்திருப்பவளாகவும்
மெளனித்திருப்பவளாகவும் தோன்றுகிறாள்...


அவள்
ஆசைகளாலும் அச்சத்தாலும்
மெல்ல அடித்துச் செல்லப்படுபவளாய்
இருக்கிறாள்....


மெல்லிய சிறகுகளை விரித்து
கனவுகளின் நிழல்களைச் சுமந்தபடி
பறக்கும் அவள்...
முறிபடும்போது -
ஒரு துளிநீரை கடலுக்குத்தருபவளாய்
தெரிகிறாள்.


ஓவென்று கொட்டும் மழையாய்
சோகக்கண்ணீர்
அவளின் எண்ணங்களை
கழுவிச் செல்கிறது.
கொத்தான ஒளிக்கற்றை
அலைகளோடு இசைந்து வடிகிறது.


அதோ...
அங்கொருவன்
தனித்துமிருக்கிறான்...
மெளனித்துமிருக்கிறான்!Tuesday, April 12, 2005

ஆதிகுமணன் என்றொரு மலேசியநண்பன்

மலேசிய மக்களின் நேசத்திற்குரிய மலேசிய நண்பன் நாளிதழின் ஆலோசனை ஆசிரியர் ஆதிகுமணன் மறைந்து விட்டார். தமிழ்உலகம் திறன்மிக்க தன் செல்லப்பிள்ளைகளில் ஒன்றை இழந்து நிற்கிறது.

இந்தியத்தமிழனான நான், 1996-97ம் வருடங்களில் மலேசியாவில் பணிபுரிந்தபோது ஆதிகுமணன் என்ற அற்புதமனிதரை அறிந்து கொள்ள வாய்ப்புக்கிடைத்தது. உலகில் முதல் முதலாக தமிழ் எழுத்தாளர்களுக்கென்று தனியாக ஒரு கட்டிடம் வாங்கி, அந்தக்கட்டிடத்தின் திறப்பு விழாவை கோலாலம்பூர் பக்கமிருந்த பத்துகேவ்ஸில் நடத்தியபோது மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவரான ஆதிகுமணனை முதல்முதலில் பார்த்தேன்.

பளிச்சென்ற புன்னகை, சினேகம் ததும்பும் கண்கள், இளமை கொப்பளிக்கும் துள்ளல் நடையென வெள்ளை வேட்டி சட்டையில் நடந்துவந்த ஆதிகுமணன் சட்டென்று மனசுக்குள் போய் உட்கார்ந்து கொண்டார். அவரை சந்தித்த ஒவ்வொருவருக்கும் அந்த அனுபவம் வாய்த்திருக்கும். அந்த விழாவில் தெளிவான உறுதிமிக்க குரலில் அவர் பேசப்பேச, அந்த மனிதர் ஏன் வெற்றியாளராக, எல்லோராலும் விரும்பப்படுபவராக இருக்கிறார் என்ற உண்மை பிடிபடத் துவங்கியது.

ஆதிகுமணனின் இயற்பெயர் குமணபூபதி. அவரது தந்தை பெயர் ஆதிமூலம். அவரும் திராவிட இயக்கங்களில் பிடிப்புள்ள ஒரு தமிழ்த் தொண்டர்தான். தமிழ்நாட்டின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு மலேசியாவின் தமிழ்மலர் நாளிதழில் துணையாசிரியராக பணியில் சேர்ந்தபோது குமணபூபதி-ஆதிகுமணன் ஆனார். கொஞ்ச காலத்திற்குப்பின் வானம்பாடி என்ற வார இதழின் ஆசிரியராக பொறுபேற்றார். அந்த வார இதழின் விற்பனை சாதனை அளவை எட்டுவதற்கு கவர்ச்சிமிக்க ஆதிகுமணனின் எழுத்தும், அவரது அயராத போராட்ட உணர்வும் காரணமானது. ஒரு தமிழ் வார இதழ் 40 ஆயிரம் பிரதிகள் விற்றது இன்றும் மலேசியாவில் சாதனையாகக் கருதப்படுகிறது.

காலம் அவரை வானம்பாடியிலிருந்து வெளியேற்றி, தமிழ் ஓசையின் பொறுப்பாளராக்கியது. அதிகார வர்க்கத்தின் நிர்பந்தங்களுக்கு, கண்முன் கட்டி தொங்க விடுப்படும் ஆசை கேரட்களுக்கு சலனப்படாமல், நேர்மையான பத்திரிக்கையாளராக ஆதிகுமணன் சந்தித்த சோதனைகள் ஏராளம்.ஒரு கட்டத்தில் தமிழ்ஓசையும் இழுத்து மூடப்பட்டது. சோர்ந்தா விடும் சிங்கம்?

சிலிர்தெழுந்து ஆதிகுமணன் எழுப்பிய கோட்டைதான் " மலேசிய நண்பன் " நாளிதழ்.
அதன் துவக்ககாலம் முதல், இன்றுவரை மலேசியநண்பன் - மலேசியத்தமிழ் சமூகத்திற்காக, அதன் உரிமைகளுக்காக, விழிப்புணர்வுக்காக, வாழ்க்கை வளமைக்காக குரல் கொடுக்கும் போர்வாளாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வார ஞாயிறும், ஆதிகுமணன் " ஞானபீடம்" என்ற தலைப்பில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். மலேசிய மக்களிடையே சின்னப்பொறியாக விழுந்து, காட்டுத்தீயாக பிரபலமடந்த பகுதி அது.

ஒரு தனிமனிதராக, தன்மீது பாசமுள்ள தம்பிகளின் துணையோடு தமிழ் சமூகத்திற்காக ஆதிகுமணன் சாதித்த விஷயங்கள் ஏராளம்.
ஒருமுறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் சரவணன் என்ற தமிழ் இளைஞர் பெருநடை ( long distance walking ) பிரிவில் மலேசியாவிற்கு தங்கப்பதக்கம் வாங்கித்தந்தார். அவர் தமிழர் என்ற காரணத்தாலோ என்னவோ, அரசில் அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. பொங்கியெழுந்த ஆதகுமணன் தனது பத்திரிக்கையில் இது பற்றி எழுத, ஆயிரமாயிரமாய் அள்ளிக் கொடுத்தார்கள் நம் மக்கள். ஒரு தரமான காரை சரவணனுக்கு வாங்கித் தந்து, அதில் அவரை கோலாலம்பூர் வீதிகளில் பவனி வரச்செய்து அழகு பார்த்துதான் ஓய்ந்தார் ஆதிகுமணன்.

இன்னொரு சம்பவமும் நினைவில் இருக்கிறது.....

1997-ல் மலேசிய அரசாங்கம் சீனர், மலாய்காரர், இந்தியர் என பல இனத்தவரும் அடங்கிய குழு ஒன்றை எவரெஸ்டில் ஏற அனுப்பி வைத்தது. முதல் முறையாக நடக்கும் மலேசிய முயற்சி என்பதால், பத்திரிக்கைகள் அந்தக்குழுவின் ஒவ்வொரு அடியையும் விரிவாக எழுதி பரபரப்பூட்டின. மக்களும் ஆர்வமாக அந்தக்குழு எவரெஸ்டில் ஏறிவிடுமா என்று கவனித்து வந்தார்கள். உயரம் கூடக்கூட ஒவ்வொருவராக கழண்டு கொள்ள, குழுவின் அடர்த்தி குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் எவரெஸ்டை எட்டி மலேசியக் கொடியை நட்டது 2 பேர். மோகன் தாஸ் மற்றும் மகேந்திரன். இரண்டு பேருமே தமிழர்கள். எவரெஸ்டை எட்டி சாதனை செய்தது தமிழர்கள் என்ற விஷயம் தெரிந்ததும், மொத்த ஆர்பாட்டமும் அடங்கிப் போய்விட, அவர்களுக்கு விழா எடுத்து தங்கச்சங்கிலி போட்டு பாராட்டி அழகு பார்த்ததும் ஆதிகுமணன்தான்.

சமீபத்தில் இலங்கையின் கரையோரங்களை சுனாமி அரித்தபோது, சத்தமின்றி நீண்டது ஆதிகுமணனின் நேசக்கரம். எங்கெல்லாம், எப்போதெல்லாம் தமிழர்கள் துயர் அடைகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்காக துடித்தது ஆதிகுணனின் இதயம்.

ஒரு வருடத்திற்கு முன்பு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உலகப்பத்திரிக்கையாளர்களை சந்திக்க முடிவு செய்தபோது, மலேசிய நண்பன் சார்பில் சுகுமாரன் ( அக்கினி ) இலங்கை சென்றார். ( அவரை பிரபாகரன் தனித்து சந்திக்க வாய்ப்பளித்தது பற்றி சுகுமாரன் பின்னாளில் தன் கட்டுரையில் குறிப்பிட்டார் ).

மலேசியாவில் எந்த ஒரு தமிழ் நூல் வெளியீட்டு விழாவும் பெரும்பாலும் இரண்டு பேர் தலைமையில்தான் நடக்கும். ஒருவர் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரான டத்தோஸ்ரீ சாமிவேலு, இன்னொருவர் மக்களின் நேசத்திற்குரிய ஆதிகுமணன். இவர்கள் இருவருமே தலைமையேற்பதோடு நின்று விடாமல், கணிசமான தொகை தந்து தமிழ் நூல் அச்சிடும் செலவை ஈடுகட்டி தமிழைக்காக்கும் புரவலர்களாக இருந்தது மலேசிய இலக்கிய உலகம் அறிந்த ரகசியம்.

ஆதிகுமணனை மிக அணுகிப்பார்க்கிற வாய்ப்பு அவ்வப்போது எனக்கு வாய்த்ததுண்டு. ஒவ்வொருமுறையும் அவர் மீதான மரியாதையை அதிகரிக்க வைத்த சந்திப்புகள் அவை. எழுத்தின் மூலம் எனக்கும் அவருக்கும் பரிட்சயம் இருந்தாலும், சை.பீர்முகம்மதின் "பெண்குதிரை" மற்றும் " கைதிகள் கண்ட கண்டம்" நூல் வெளியீட்டு விழாவில்,ஆதிகுமணன் தலைமை தாங்கிய விழாவில், எனக்கும் இடம் கிடைத்தபோதுதான் - அது அணுக்கமானது. காப்பாரில் நான் முன்னின்று நடத்திய மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதந்திர சிறுகதைத் திறனாய்வில் அவரை மறுமுறை சந்தித்தேன். அதன்பின் எந்த நிகழ்வில் சந்தித்தாலும் என்னை பெயர் சொல்லி அழைத்து அன்பு பாராட்டினார் ஆதிகுமணன்.

1997ன் இறுதியில் கோலாலம்பூர் செந்தூல் செட்டியார்கள் மண்டபத்தில் "எங்கே நீ வெண்ணிலவே" என்ற எனது சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடந்தது. ஆதிதான் தலைமை தங்கினார். அன்று அவர் ஆற்றிய உரை இன்னும் என் ஞாபகத்தளங்களில் ஊடாடிக்கொண்டே இருக்கிறது.

பின்பு 1998ல் நான் பணி நிமித்தம் சிங்கப்பூருக்கு மாற்றலாகி வந்து இங்கு நிரந்தரவாசியாகி விட்டாலும், மலேசிய இலக்கிய உலகினுடனான உறவு நீடித்தே வந்தது. ஒருமுறை, ஒரு மலேசிய மாதஇதழுக்காக அவரை பேட்டி கண்டேன். பலருக்கும் கிடத்திராத வாய்ப்பு அது. அரசியல், இலக்கியம், தனி வாழ்க்கை என பரந்து விரிந்த அப்பேட்டியில் எதையும் ஒழித்துப் பேசவில்லை அவர். அந்தப்பேட்டி நெஞ்சுரமிக்க, நேர்மைத்திறன் மிக்க ஒரு பத்திரிக்கையாளரை எனக்கு அறிமுகப்படுத்தியது. ஆதிகுமணன் என்ற மனிதர்மீது எனக்கிருந்த மரியாதை இன்னும் அதிகமானது.

சிங்கப்பூரில் தங்கிவிட்டதால் சமீபகாலங்களில், ஆதிகுமணனனோடான தொடர்புகள் குறைந்து விட்டாலும், பத்திரிக்கைகள் வாயிலாக அவரைப்பற்றி தொடர்ந்து வாசித்தே வந்தேன்.சமீபத்தில் சிங்கப்பூர் வந்திருந்த மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது, ஆதிகுமணன் சீரியஸாக நோய்வாய்ப்பட்டு அதிலிருந்து மீண்டு விட்டதாகக் கூறினார். அப்பாடா என்ற உணர்வு ஏற்பட்டது. ஆதிகுமணன் இல்லாத மலேசியாவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்னால். ஆனால், விதியின் கரவலிமையை வென்றது யார்?

இன்று ஆதிகுமணன் என்ற சாதனை சரித்திரம் தன் பக்கங்களை நிறைவு செய்து கொண்டது. " விழுந்தாலும் விதையாக விழ வேண்டுமென்று " ஆதிகுமணன் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த அற்புத மனிதர் தான் விழுவதற்கு முன்பே ஏராளமாக விதைத்துவிட்டார் என்பதே உண்மை. அந்த விதைகள் தமிழ் இலக்கிய மலராக, செடியாக, கனி கொடுக்கும் மரங்களாக மலேசியாவெங்கும் பரவிக் கிடப்பதை வரலாறு பதிவு செய்து கொண்டிருகிறது....இனியும் பதிவு செய்யும். அந்தப்பதிவின் பக்கமெல்லாம் ஆதிகுமணன் பெயர் இருக்கும்!

Saturday, April 09, 2005

நம்பிக்கைதாங்க வாழ்க்கை!!!

இணைய தளத்தின் பக்கங்களில்
பார்வை ஊர்வலம்...

மதிய உணவுக்குப்பின்
எம் எம் எஸ் அனுப்பி அவளோடு
பகிர்ந்து கொண்டேன் காதல்.

தரைவழி ஜோகூர் வான்வழி கூச்சிங்
பயண சீட்டுக்காய் சிங்போஸ்ட்* வாசலில்
செலவு சிலநிமிடம்.

மார்ச் மாதம் முதல் படுக்கையில் படுத்தபடி
டெலிவிஷன் திரைவழி
பங்கு பரிவர்த்தனைஉத்தேசம்.

ஒருநாள் கடந்து அலுவலகம் முடிந்து
வீதி நடக்கையில் மனசு கேட்டது....
இன்றாவது -
டோடோவில்**
முதல்பரிசு எனக்கென நல்ல சீட்டெடுக்குமா
சிராங்கூன் கூண்டுகிளி ?


*சிங் போஸ்ட் - சிங்கப்பூர் தபால் நிலையம்
** டோ டோ - சிங்கப்பூர் லாட்டரி

Thursday, April 07, 2005

இந்திய ஆண்களுக்கு மீசை அவசியமா?

நேற்று சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி வசந்தம் சென்ட்ரலில் "அக்னி" என்றொரு தொடர் ஒளிபரப்பானது. மீசையில்லாத ஜெய்கணேஷ் என்ற இளைஞர் ஆண், பெண் என்று எல்லோரிடமும் மைக்கை நீட்டி " ஆண்களுக்கு மீசை அவசியமா? " என்று கேட்டுக் கொண்டிருந்தார். பதில்களை சுவாரஸ்யமாக கவனித்தேன் - முக்கியமாக பெண்களின்!

அவர்களின் பதில்கள் வெவ்வேறாக இருந்தது.

ஒருவர் பெண் சொன்னார் - ' மீசை என்பது ஆண்களுக்கு அவசியம். மீசை வைத்த ஆண்கள்தான் பார்க்க manly-யாக இருப்பாங்க. அவங்களைப் பார்க்கும்போதுதான் ஓ.கே. இந்த ஆள் நமக்கு பாதுகாப்பாக இருப்பார்னு ஒரு secured feeling வரும்" என்று. மீசை வைத்தவர்கள்தான் man மீசையில்லாதவர்கள் boys என்று கொசுறாக இன்னொரு விளக்கமும் சொன்னார். ஏனோ எனக்கு புஷ்ஷ¤ம், சதாமும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.

மீசை இல்லாமல் இருப்பதுதான் இன்றைய fashion. ஆண்கள் மீசை இல்லாமல் இருப்பதே better. என்பது ஒரு பதின்ம வயது அம்மணியின் கருத்து.

ஆண்களின் கருத்தும் வெவ்வேறாகத்தன் இருந்தது.

பெரும்பாலான இளையர்கள் " அப்பா, மீசை வச்சாதான் இந்திய ஆணுக்கு அழகுன்னு சொல்றார். அது அந்தக்காலம் ... எங்களுக்கு மீசை இல்லாமல் இருக்கத்தான் பிடிக்குது " என்று மீசையில்லாமல் சொன்னார்கள்.

ஒருவர் மட்டும் மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான் பரம்பரையின் மிச்சம் மீதி மாதிரி, கடைசிவரை எக்காரணம் கொண்டும் மீசையை விட்டுதரவே மாட்டேன் என்று சொல்ல, பேட்டியெடுத்த ஜெய்கணேஷ் " மீசையை எடுக்கா விட்டால் வேலையே காலிங்கிற சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வீங்க " என்று கேட்க, " வேலையை விட்டுடுவேன். இன்னொரு வேலை கிடைக்காதா என்ன ? என்று திருப்பிக் கேட்டார் கூலாக. அதைக்கேட்டதும் எனக்கு மெய்யும் சிலிர்த்தது, கூடவே மீசையும் சிலிர்த்தது.

மீசை பற்றிய எனது அனுபவங்கள் பலவிதம். பதின்ம வயதில் ஒருமுறை மொட்டையடித்து, மீசையெடுத்துவிட்டு வீட்டுக்குப் போக, என் தங்கைகள் பயமின்றி என்னுடன் பேச 2 வாரம் ஆச்சு. சிங்கப்பூருக்கு வந்த பிறகு மீசையோடு சிலவருடங்கள், மீசையின்றி சில வருடங்கள் என்று இருந்து பழகியதில் ஒரு விஷயம் தெரிந்தது - சீனர்கள், ஜப்பானியர்கள் போன்ற மாற்று இனத்தவர்கள் மீசையில்லாத இந்தியர்களையே அதிகம் விரும்புகிறார்கள். முத்து படத்தில் நடித்த மீனாவை ஜப்பானியர்களுக்கு பிடித்ததற்கு அதுதான் காரணம்.:))

சிங்கப்பூர், மலேசியாவில் இருக்கிற மலாய், சீன இனப் பெண்களுக்கு ஷாருக்கான், அமீர்கான் போன்ற ஆசாமிகள் மீது இருக்கும் லயிப்புக்கு மீசையற்ற அவர்களது மொழுக் முகமும் ஒரு காரணம் என்று உணர முடிகிறது. இந்த இரண்டு நாடுகளிலும் அரசியலில் இருக்கிற நம்ம ஆட்கள் மீசை என்ற விஷயத்தை வெகு ஜாக்கிரதையாக தவிர்க்கிறார்கள். மீசை நம்மை மற்ற இனத்தவரிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிற அதே வேளை, அந்நியப்படுத்தியும் விடுகிறது என்ற யதார்த்தமே அதற்குக் காரணம்.

அதே சமயம் மலேசியாவில் இருக்கிற நமது தமிழ் இளைஞர்கள் மீசையை இழந்துவிடாமல் ஆசையாய் அதை வளர்ப்பதை அதிசயித்து பார்த்திருக்கிறேன். " அது எப்பிடிலா மைக் மீசையை எடுக்கிறது...அதானே நம்ம அடையாளம் " என்பது அவர்களில் பலரது எண்ணம். மீசை இங்கு ஒரு இனத்தின் முகவரியாக இருக்கிறது.

வெளிநாட்டுச்சூழலை விடுங்க... இந்தியாவில்?

முன்னாடியெல்லாம், குமுதம், ஆனந்த விகடனில் கல்லூரி மாணவர்கள் குரூப் ·போட்டோ வரும் போது அதில் மீசையில்லாத தமிழ்க்குடி மகனை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேட வேண்டும். இப்போ? நீங்களே சமீபகால குமுதம், ஆனந்த விகடனை எடுத்துப் பாருங்களேன்....

சரி... " இன்றைய இந்திய ஆண்களுக்கு மீசை தேவையா, இல்லையா ?" உங்களை சாலமன் பாப்பையாவாக நினைத்துக் கொண்டு, சொல்லுங்கள் பார்ப்போம் தீர்ப்பை !

Wednesday, April 06, 2005

கதவின் சில ஜன்னல்கள்

சில நிமிடங்களுக்கு ஒருமுறை வந்துபோகும்
எம்.ஆர்.டி ரெயிலென வந்துபோகும் உன் நினைவுகள்....
ஒவ்வொரு முறையும் நீ இறங்கிக் கொள்கிறாய்
நான் ஏறிக்கொள்கிறேன்.

உட்கார்ந்தோ, நின்றோ
கர்ப்பிணிப் பெண் அல்லது முதியோருக்கு இடம் தந்தோ
சமமாக சாலைகளில் ஓடி, ஏதாவது நிறுத்தத்தில்
தேங்கிப்போகும் எஸ்.பி.எஸ் பஸ்ஸை
பார்வையால் பிசைந்தபடியோ...
அப்பயணம் நிகழ்ந்து விடுகிறது.

இன்னும் சிறிது நேரத்தில்
எவள் ஆங்கிலக் குரலிலாவது வந்துவிடலாம்
நானிறங்கும் ' நெக்ஸ்ட் ஸ்டாப் '.

இம்முறைவழக்கம் போல் நீ இறங்கிக்கொள்வாய்
வழக்கம் மாறி நானும் இறங்கிக் கொள்வேன்...
எம்.ஆர்.டியின் மூடிய கதவுகளுக்குப்பின்
அந்த மலாய்ப் பெண்ணின் படுதாமறைவில்
போகும்நம்மை பார்த்தபடி
நடந்து போவோம் நாம்!

Friday, April 01, 2005

சில நகர்வுகள்

முதல் நகர்வு
ஒரு முள் தைக்கும் மறுபடி மறுபடி ...
ஒரு தற்செயல் நிகழும் அடிக்கடி..
நிழல் தரும் சொற்பந்தல்.

அடுத்த நகர்வு
பதின்ம வயதுகளின் கூட்டில் நுரையும்
மலட்டு வார்த்தைகள்.
நுனிவிரல் ஓடும் இடைச்சாலை.
தொலைநோக்கும் விழி
விரல் நோக்கும் மனம்.

இன்னொரு நகர்வு
அழுத்தக்காற்றில் அலையும் குளிர்.
தூரச்சதுரம் துப்பிய இருள் வெளிச்சம்
படரும் வெகுவெளி.
சொல்லாத சொல்லில்
தீயாகும் காது மடல்.

இறுதி நகர்வு
அறைக்குள் தனித்திருந்தது இருள்.
குளிரில் குளிக்கும் வெப்பம்.
விடுதலை, தேடல், வினாக்கள், விடைகள்
ஓசை, அதிர்வு, உறங்கும் மதி.
அழுகையா அது?

போவதற்கு முன்..
நீண்டநாள் துக்கமாய்
நானிருந்து என்ன பயன்?
பிறக்கின்ற எல்லாம் ஓர்நாள் இறக்குமெனில்
பிறக்காமல் இறப்பதில் பிழையில்லை.
கோபமில்லை உன்னிடம்: கவலையுண்டு.
பொல்லாதது அம்மா உலகம்
பார்த்துக்கொள் உன்னை பத்திரமாய்.Thursday, March 31, 2005

இக்கவிதையைப் படிக்கலாம்: கண்ணீர் வேண்டாம்!

துளிர்த்துக் கொண்டே இருக்க
நீ விடிந்து கொண்டே இரு.

வளர்ந்து கொண்டே இருக்க
என்னைப் பிடுங்கி நடு.

வாழ்ந்து கொண்டே இருக்க
உன் கைக்குட்டையை பரிசளி.

தேய்ந்து கொண்டே இருக்க
என்னை நிலவாக்கி
நிமிர்ந்து பார்.

நெகிழ்ந்து கொண்டே இருக்க
விழிக்குளத்தில் தேக்கு
ஒரு துளி நீர்.

நடந்து கொண்டே இருக்க
உன் வாயால் ஒரு
கவிதை சொல்.

கிழிந்து கொண்டே இருக்க
என்னை குப்பையாக்கு.

வடிந்து கொண்டே இருக்க
உன்னை தாளாக்கி
என்னை எழுது.

தெரிந்து கொண்டே இருக்க
வினாவாக என்னை
மாற்றிக் கொள்.

மறந்து கொண்டே இருக்க
நீ நானாகி விடு.

இறந்து கொண்டே இருக்க
இன்னொரு முறை சிரி.

இதில் எதையும் செய்ய இயலாதா?
அப்ப சரி....
மரியாதையாய் என்னை
காதலித்து விடு !

Wednesday, March 30, 2005

நாய்களும் நடை பழகும் காலை

கொடிநீள் கழிவுநீர் ஆடியில்
நொடிக்காற்றில் நீட்சியாகும்
வேர்ஹவுஸ் விளக்குச்சித்திரம்.....

பதிவற்ற சுற்றுச்சுவர் முத்த நினைவில்
எட்டிக்கிடக்கும் ஒளிப்படுகையை
இருள் அணைத்துப் பார்த்தபடி
மரமுதிர்ந்து கிடக்கும் ஒரு மயிர்ச்சிறகு.

வியர்வை நடும் நகர்வில்
எட்டி எட்டி நடந்தபடி
நீண்ட உயிர் நோக்கும்
சீனக்கிழவியின் தளர்கால்கள்.

இரவு அடங்க
இருக்கிறது இன்னும் நேரம்!
ஜன்னல் திரைச்சீலைகளின்
பின்அதிர இயங்கும் அது.

கசியும் வெளிச்சத்தை இழுத்துமூடும்
காண்டோ வீட்டு சீன முதலாளி
பிலிப்பினோ பணிப்பெண்ணிடம் சொல்கிறான்...

'மறந்து விடாதே...
காலை ஐந்திற்கு அலாரம் வை.
நாயும், நீயும் நடை பழக வேண்டும்'

Monday, March 28, 2005

ஒரு பணிப்பெண்ணின் சமையலறை மெட்டுகள்


Image hosted by Photobucket.comஒரு சல்லடை பிரயோகத்தின் பின்னும்
விரல் தாண்டி உதிரியாக
இசைக்குதிரையின் அங்கத்திலிருந்து
சிதறிய கீதச்செதில்கள்.
அவகாசம் கடந்த மெட்டின் படம்
சமையலறைச் சுவரில் தொங்குகிறது.

அடுப்புச்செயலெரித்த மெளனஎந்திரம்
பழைய இசைத்தொட்டியில்
விரல் அலைக்கிறது.

வரிகள் மழுங்கிய பாடல்களோடு
அவனும் அவளும் காற்றாகி
மலை முகடுகளில், கரட்டுப்புழுதியில்
தேனுண்ணும்
வண்ணத்துப்பூச்சிகளின் பூவில்
நாக்கு நீட்டி தேனும் உண்கிறார்கள்.

பயனீட்டாளனின் கதவழைப்புக்கு
திறந்து சிந்த
சேமிப்பில் இன்னொரு செயற்கைப்பூ!

Saturday, March 26, 2005

நடுநிசிக்கு முன்


இருப்பிலிருந்து தீர்ந்தது ஒன்று.

நிறைய செலவுகள், வெற்றிடங்கள்...
கணக்குப் புத்தகத்தில்
மெலிந்து கிடக்கிறது வரவு.

டெக்ஸியில் கைபிடித்து கீழிறங்கி
புளோக் லி·ப்டிற்குக் காத்திருக்கும்
அவனுக்கும் அவளுக்கும்
செலவளிக்கக் கொஞ்சம்
மீதமிருக்கலாம்.

சன் டிவியின்
ஒலிக்காத மெட்டிக்காக
விழித்துக் கிடக்கலாம் காதுகள்!

வெயில் காய்ந்த துணிகள்
இரவு மழைக்கு மிக பயந்து
ஜன்னல் எம்பி உள்குதித்து
கொடிக்கம்பில் மூச்சுவிடும்.

அந்த இருட்டு மூலை புற்கள்
பேசிக் களைத்திருக்க....
அதிலமர்ந்த அவ்விருவர்
அவ்வப்போது பேசியும் கொண்டனர்.

ஹாகார்ட் சென்டர் மேசை
பீர்போத்தலில் நுரைத்த பீர்
டிவியில் கோல்விழும் போதெல்லாம்
குழியில் விழுந்து சாகிறது.

ஞாபகப் படுக்கையில்
புரண்டு படுத்தபடி மனசு.
விழித்தும் உறங்கியும்
நினைவுகளற்றே நீள்கிறது இரவு.

Wednesday, March 23, 2005

சிறுகதை : ரகசியமாய் ஒரு கவிதை

இந்த நிமிடம் சிங்கப்பூரில் இருக்கும் சகோதரி துளசி கோபாலை போன ஞாயிறுக்கிழமை சிங்கப்பூர் இணைய நண்பர்கள் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் ஒரு கேள்வி கேட்டார்..."இலக்கியம் என்றால் என்ன?"

வருடம் 2105. சிங்கப்பூரை ஒட்டிய கடற்புரம். அந்தக் கட்டிடம் கடல் நடுவே நாங்கூரமிடப்பட்டிருந்த ராட்சச பலூன் மீது கட்டப்பட்டிருந்தது.

அதன் 160வது தளத்தில் 100 பேர் கூடியிருந்ததார்கள். அது - " போன நூற்றாண்டுத் தமிழர்கள் " என்ற கருத்தரங்கு. வயிற்றைத்தொடும் தாடியோடு ஒரு கண்ணாடி போட்ட அறிஞர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவரைச்சுற்றி மட்டும் விளக்குகள் பீய்ச்சிய ஒளி. மற்றவர்கள் இருட்டில்!

" உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் போன நூற்றாண்டு மனிதர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். இலக்கியம் என்ற ஒரு சங்கதி அவர்கள் வாழ்க்கையில் இருந்திருக்கிறது. அது அவர்களது வாழ்க்கையில் பெரும் பகுதியை சாப்பிட்டிருக்கிறது. "

அடி தன் முன்னால் இருந்த பட்டனைத் தட்ட விளக்குகள் அவன் மீது ஒளிவீச, முன்னால் இருந்த பெரிய திரையில் அகலமாய் அவன் முகம்.

" என்ன சந்தேகம் மகனே? " என்றார் அறிஞர். எல்லோரும் திரையில் தோன்றிய அடியை ஆர்வமாய் பார்த்தார்கள்.

" இலக்கியம் என்றால் என்னவென்று சுருக்கமாக விளக்க முடியுமா ? "

" முடியும் " என்ற அறிஞர் தொடர்ந்து பேசினார். " இலக்கியம் என்பது ஒரு போதைப்பொருள் மாதிரி. எப்படி போதைப் பொருள் மனிதமனதைப் பாதித்து உண்மை வாழ்க்கைக்கு ஒவ்வாத கற்பனை பிம்பங்களை மனதுக்குள் விதைக்கிறதோ, அதே காரியத்தை இலக்கியமும் செய்தது. நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததுபோல் யாராவது ஒருவர் கற்பனை செய்து எழுத, பலரும் அதை படித்துவிட்டு அதில் மனம் ஒன்றிப்போய் கற்பனையான உலகில் வாழ்ந்தார்கள்."

" ஆக இலக்கியம் என்ற விஷயத்தால் எந்த பலனும் இல்லை என்று சொல்கிறீர்கள்? "

" பலனா? இலக்கியம் என்பது போன நூற்றாண்டு மனிதர்களை பிடித்திருந்த நோய் என்றுதான் சொல்ல வேண்டும்."

" அவ்வளவு ஆபத்தான ஒன்றை நம் முன்னோர்கள் ஏன் நேசித்திருக்க வேண்டும் ? " இந்தக் கேள்வியை மகி கேட்டான்.இப்போது வெளிச்சம் அவனிடம், திரையில் அவன் முகம்!

" அவர்கள் நம்மைப்போல் இல்லை. சரியான சோம்பேரிகள். நாம் தினமும் மூன்று மணி நேரம்தான் தூங்குகிறோம். அவர்களோ நாள் ஒன்றுக்கு பத்து மணி நேரம் தூங்கினார்கள். இலக்கியம் அந்த சோம்பேரித்தனத்தை அங்கீகரித்ததால் அது அவர்களுக்குப் பிடித்திருந்தது. "

" சோம்பேறிகள் சிலர் இலக்கியம் என்று ஒன்றைப் படைத்து இன்னும் பலரை சோம்பேறியாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்படித்தானே ? "

" புத்திசாலி. சீக்கிரம் புரிந்து கொண்டாய். " என்று பாராட்டினார் அறிஞர். எல்லோரும் மெலிதாக கைதட்டினார்கள்.

" இப்படிப்பட்ட ஆபத்தான விஷயத்தை அரசாங்கங்கள் எப்படி விட்டு வைத்தன? "

" எது அதிக ஆபத்தானது என்ற கேள்வி எழும்போது அதிக ஆபத்தான விஷயத்தின்மீது தாக்குதல் தொடுப்பதையே அரசாங்கங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தன. போன நூற்றாண்டில் இதைவிட ஆபத்தான பல விஷயங்கள் இருந்ததால் இதை அதிகம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். "

" இதைவிட ஆபத்தான விஷயங்களா? ஏதாவது சிலவற்றை சொல்ல முடியுமா? " என்று கேட்டாள் சகி.

" பலவற்றைச் சொல்லலாம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடி, சினிமா இப்படிப் பல அதி ஆபத்தான விஷயங்கள். அதிலும் சினிமா மிக ஆபத்தான, அபத்தமான விஷயமாக கருதப்பட்டது. சரி, நானே பேசிக் கொண்டிருக்கிறேன். சினிமாவைப் பற்றி உங்களில் யாராவது விளக்க முடியுமா? "

" முடியும்! " என்ற கவி மீது விளக்குகள் விழுந்தன.

" சொல் பெண்ணே... சினிமா என்பது என்ன? "

" அது இலக்கியத்தை விட அதிகமாக மக்களை ஆக்கிரமித்திருந்த போதைப் பொருள். சினிமா என்ற சமாச்சாரம் பல வடிவங்களில் மக்களுக்குத் தரப்பட்டது. அதிலும் தமிழ்ச் சினிமா இருக்கிறதே அது இன்னும் அதிக அபத்தம். தலை மயிர் கலையாமல் 50 பேரை அடிக்கும் கதாநாயகன், அவன் பம்பரம் என்ற பொருளை தொப்புளில் விட மல்லாந்து படுத்திருக்கும் கதாநாயகி...

சினிமாவில் வரும் பாடல்களை வானொலி நிலையங்கள் 24 மணிநேரமும் ஒலிபரப்பி வந்தார்கள். அந்த பாடல்களில் இலக்கிய நயம் இருக்கிறதா இல்லையா என்று வேறு விவாதித்து நேரத்தை வீணாக்கினார்கள். இதுதான் சினிமா மற்றும் அதன் சார்ந்த சுருக்கமான விவரம் "

" நல்லது பெண்ணே... உனது விளக்கம் ஏறக்குறைய சரியாகவே இருக்கிறது " என்று ஒப்புதல் தந்த அறிஞர் தொடர்ந்து பேசினார்.

" தமிழ்ச் சினிமா மட்டுமல்ல. தமிழ் இலக்கியம்கூட அபத்தம் நிறைந்ததாகவே இருந்தது. படைப்பாளிகளைவிட வெட்டி விமர்சகர்கள் அதிகம் இருந்தார்கள். தாங்களும் ஒன்றும் செய்யாமல், மற்றவர்களையும் ஒன்றும் செய்யவிடாமல் தடுத்து வந்த இவர்கள் மிக மிகச் சோம்பேறிகள் "

" இலக்கியத்தில் என்னவெல்லாம் இருந்தது ஐயா? "

" கதை, கவிதை, கட்டுரை என பல வடிவங்கள் இருந்தது. கதையை பலரும் விரும்பிப் படித்தாலும், கவிதையே மனிதர்களது உணர்வுகளை சரியாக வெளிப்படுத்திய வடிவம். "

" உதாரணமாக ஒன்றைச் சொல்லுங்கள் "

" சொல்கிறேன். அதற்குமுன் சிறுவிளக்கம். இன்று ஒரு ஆணும் பெண்ணும் விரும்பினால் அரசாங்கத்திடம் தகவல் சொல்லிவிட்டு இணைந்து வாழலாம். ஆனால் 2005ல் காதல், கல்யாணம் போன்ற சம்பிரதாயங்கள் அதிகம். அதிலும் காதல்... ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்ற சம்பிராதாயத்தில் இணைவதற்கு முன் நிகழ்கிற விஷயங்களை காதல் என்று சொல்லிக் கொண்டார்கள். அப்படி காதலிக்கும் காலங்களில் ஆண் பெண்ணுக்காக ஏங்குவதும், பெண் ஆணுக்காக ஏங்குவதுமான பெருமூச்சுகள் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. இதில் யாராவது ஒருவர் காதலுக்கு மறுப்புச் சொல்லி விட்டால், அது தோல்வியடைவதும் உண்டு.

அப்படி காதல் தோல்வி அடைந்த ஒருவன் தன் காதல் தோல்வி பற்றி மறைமுகமாக குறிப்பிட்ட ஒரு கவிதையைச் சொல்கிறேன் கேளுங்கள்....

காற்று வராத என்று
ஜன்னலைத் திறந்து வைத்தேன்.
காற்று வந்தது....
ஜன்னலைச் சாத்திச் சென்றது! "

அறிஞர் இந்தக் கவிதையைச் சொல்லி நிறுத்தியதும் அங்கு சட்டென்று ஒரு மொளனம் சூழ்ந்தது. அந்தக் கவிதை எல்லோருக்கும் புரிந்தது. அவர்கள் மனதில் புகுந்தது. பிசைந்தது. ' ஓ...இலக்கியம் இவ்வளவு சுவையானதா' என்ற எண்ணம் அவர்களுக்குள் எழுந்தது.

அதற்கப்புறம் அறிஞர் பல விஷயங்களைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அங்கிருந்தவர்களின் மனமோ அந்தக் கவிதையிலேயே லயித்துக் கிடந்தது. " உலக சரித்திரத்தையே மாற்றும் சக்தி இலக்கியத்திற்கு இருந்ததால்தான், ஆபத்து மிகுந்த இந்த போதைப்பொருளை உலக அரசாங்கங்கள் தடை செய்தன. " என்று சொன்னார் அறிஞர்.

அடி அன்றைய தின இரவு சகியை நினைத்து ரகசியமாய் ஒரு கவிதை எழுதினான். அது இப்படித் துவங்கியது....

" அன்பு சகி. என் உயிர் கலந்த ஆக்ஸிஜனே... "

Tuesday, March 22, 2005

சிங்கப்பூர் இணைய நண்பர்கள் கூட்டத்தில் நான் கொறித்தவை


துளசிகோபால் 'இலக்கியம் என்றால் என்ன?" என்று ஒரு கேள்வி கேட்டு கூட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார். அதற்கு ரமேஷ் நீண்ட விளக்கமளித்தார். அந்த விளக்கத்தின் இறுதியில் நான் புரிந்து கொண்டது இதுதான். ' நீங்கள் எழுதுவதெல்லாம் இலக்கியமென்று நினைத்துக்கொண்டு இருந்து விடாதீர்கள். அதே சமயம், உங்கள் எழுத்தை யாராவது இலக்கியமில்லை என்று சொன்னால் துவண்டு விடாதீர்கள்."

யோசித்துப்பார்த்தால், வாசித்த எழுத்தை ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் கூட ஞாபகம் வைத்துக்கொள்ள முடிந்தால், வாசித்தபோது நிகழ்ந்த சிலிர்ப்பை, பரவசத்தை, சோகத்தை, கோபத்தை, தவிப்பை, இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நினைவூட்ட முடிந்தால் - அது நல்ல எழுத்து, நல்ல இலக்கியம் என்று தோன்றுகிறது. வாழ்க்கையை வெகு எளிமையாகச் சொன்ன இரு வரிகள் ஞாபகத்தில் வருகிறது..." பொழுது மலச்சிக்கல் இல்லாமல் விடிகிறதா? பொழுது மனச்சிக்கல் இல்லாமல் முடிகிறதா?" - சொன்னது ' வடுகபட்டி பாட்டி'

நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு நண்பர் ட்டய்லெட்டைத் தேட, இன்னொருவர் இருளில் இருந்த ஒரு குட்டி கட்டிடத்தைச் சுட்ட, கடைசியாக ஒருவர் சொன்னார், " வாழ்க்கைன்னா அதில் ஒரு தேடல் இருக்கனுங்க" அதானே...!

இந்த சந்திப்பில் ரமேஷின் ஓவியங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. " ராக்கம்மா கையைத் தட்டு பாட்டின் துவக்கத்தில் ஒரு வயலின் பிட் வரும். அதை எடுத்துவிட்டாலும் பாட்டு பாட்டுதான். ஆனால், அதில் ஒரு முழுமை உணர்வு இருக்காது. அப்படி விடுபடாத முழுமை உணர்வைத் தருவதுதான் ஓவியம்" என்றார் ரமேஷ். கூடவே - ஒரு அழகான, (ஜெயந்தி சங்கருக்கு மிகவும் பிடித்திருந்த) 'மீரா' ஓவியத்தை துளசி கோபாலுக்கு பரிசுமளித்தார்.

உங்கள் எழுத்தின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் ஒருநாள் அது அம்பலமேறும் என்ற ரம்யா நாகேஸ்வரனின் கருத்து யோசிக்க வைத்தது.

துளசிதளத்தின் பின்னூட்டத்தில் சொன்ன மாதிரி, தொடர்ந்து சாப்பிட்டு ஆதரவு தந்தது நான்தான்.நாலு ரவுண்ட் கேசரி, மூணு ரவுண்ட் கேக், தலா ரெண்டு பெக் ஆரஞ்சு + 7up , கடைசியா ஒரு பெக் டீ....கிறுகிறுத்துப் போச்சு...

அன்பு, இந்தியாவிலிருந்து புதிதாக சில புத்தகங்கள் வந்திருப்பதாகவும், ஆனால் தன் துணைவியார் ' பழைய புத்தகங்கள் வெளியே போனால்தான், புது புத்தகங்களுக்கு வீட்டுக்குள் இடம் என்று சொல்லி விட்டதால், வந்த புத்தகங்களை மற்றவர்களுக்கு வாசிக்கத் தருவதாகச் சொன்னார். சிலர் ' அதனாலென்ன... நாங்கள் permanentஆ எங்கள் வீட்டில் வைத்து ஆதரிக்கிறோம்' என்று பெரிய மனதோடு சொல்ல, அன்பு அன்பாக ( ? ) சிரித்தார்.

ரமேஷின் அனுபவம் வேறு மாதிரியாம். அவர் சமீபத்தில் ஒரு புத்தகம் வாங்கினாராம்.அவர் வீட்டுக்குப் போன எம்.கே.குமார், அதை புரட்ட்ப் பார்த்து விட்டு, ' அட.. இந்தப் புத்தகத்துக்கு போயா இந்த விலை' என்று போட்டுத்தாக்க, இதுபோன்ற money mattersஐ sharpaaக கவனித்துவிடும் தனது மனைவி தன்னை தாளித்து விட்டதாக சொல்லி சிரித்தார். ' ஏதோ என்னாலான உதவி ' என்று சொல்லி வீரப்பா சாயலில் சிரித்தார் குமார்.

தமிழில் மொழி பெயர்ப்புகளைப் பற்றி நீண்ட நேரம் பேசிய ஈழநாதனும், ரமேஷிம் கடைசியில், என்னிடம் மொழிபெயர்ப்புகளைப் பற்றி கேட்டு வைக்க, ' சா.கந்தசாமி...சாகித்திய அகாதமி...நவீனத்தமிழ் சிறுகதைகள்...அது இது'வென்று தத்து பித்தினேன். ஆனாலும் திரு.சா.கந்தசாமி அவர்கள் இதுவரை ஏதும் மொழிபெயர்க்காமல் இருந்தால் immediateடாக ஏதேனும் மொழி பெயர்த்து என்னை காப்பாற்றுமாறு இந்தப் பதிவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

ரமேஷின் பேச்சு, காலச்சுவட்டில் விமர்சனக் கட்டுரை படிக்கிற உணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. இனிமேல் அவர் நிறைய எழுதக்கூடும்.

'இலக்கியம் என்றால் என்ன' என்று கேட்ட துளசியக்கா, அருள்குமரன் கைதொலைபேசியில் புகைப்படம் எடுத்தபோது அடக்கமாக போஸ் கொடுத்த துளசியக்கா...ம்ம்ம்...அவருக்கும் அவரது எழுத்துக்கும் அதிக வித்யாசமில்லை. இரண்டுமே இயல்பானவை, வெள்ளேந்தியானவை...

Monday, March 21, 2005

வீட்டுக்கு அனுப்பீடாதீங்க சாமிகளா!

போன பதிவான 'ஜெயிக்குமா இந்தியா, தோற்குமா பாகிஸ்தான்" பற்றி - 'ரெண்டுமே ஒன்றுதானே, குழப்பம் ஏன்? ' என்று கேட்டார் வசந்தன். விளக்கினேன். அந்த விளக்கத்தின்படி பார்த்தால், கொல்கத்தா டெஸ்டில் இந்தியா வென்றிருக்கிறது.

கொல்கத்தா டெஸ்டின் நிஜ ஹீரோ யாரென்றால் - ஒரு விநாடிகூட யோசிக்காமல், தினேஷ் கார்த்திக்கை நோக்கி விரல் நீட்டுவேன். இந்த டெஸ்டின் துவக்க தினத்தன்று, இந்திய அணியில் கார்த்திக்கின் நிலை என்பது 'திக்,திக்' சங்கதிதான். ஒருவேளை கார்த்திக் இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன் அடித்து இந்திய அணி தோற்றுமிருந்தால், இந்த நிமிடம் அவரை தயவு தாட்சண்யமின்றி தூக்கியிருப்பார்கள். பாவம், பார்திவ் படேலும் எவ்வளவு நாள்தான் மூட்டை முடிச்சுகளோடு வீட்டில் காத்திருப்பார். தன் மீது திணிக்கப்பட்ட pressure-ஐ கார்த்திக் என்ற பதின்ம வயது இளைஞன் சமாளித்த விதம்தான் அவரை ஹீரோ என்று விரல் சுட்ட வைக்கிறது.

கொல்கத்தா டெஸ்டில் எடுத்த 93 ரன்கள் மூலம், தோல்வி பயமில்லாத, ஹர்பஜன் சிங், கயி·ப், யுவராஜ்சிங், சேவாக் போன்ற இளைய தலைமுறை இந்திய கிரிக்கெட்டர்கள் வரிசைசயில் கார்த்திக்கும் சேர்ந்திருக்கிறார். You can't keep a goodman down என்று சொல்லுவார்கள். கார்த்திக் அந்த ஜாதி. எல்லா கிரிக்கெட் ஷாட்ஸீம் அவருக்கு எளிதாக கை வருகிறது. பார்க்க சலிப்பில்லாத அழகும் நளினமும் நிறைந்த பேட்டிங். இன்றையதினம் கார்த்திக்கின் confidence உச்சத்திலிருப்பதற்கு, யூனுஸ்கானை அவர் ஸ்டெம்பிங் செய்த விதமே சாட்சி. Welldone Kaarthick!

லக்ஷ்னண் ஏமாற்றமளித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில், விழியை ஒட்டி அடிபட்டு வீங்கிய முகத்துடன், இந்திய அணியின் வெற்றிக்காக அடித்தாடி ரன் எடுத்த சுயநலமற்ற லக்ஷ்மணை இந்திய அணியை விட்டு drop செய்யக்கூடாது என்று தேர்வுக்குழுவை சலாம் வைத்து கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது. ஆண்மையோ, பெண்மையோ அற்ற ரெண்டும் கெட்டான் மைதானங்களில் சதமடித்து என்ன பயன்? நீங்கள் எடுக்கும் ரன்கள் அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். திராவிட் எடுத்த 2 சதங்களைப்போல, லக்ஷ்மண் எடுக்கும் ரன்கள் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கவோ அல்லது வெற்றி பெற வைக்கவோ எப்போதும் உதவியிருக்கின்றன.

உலகக் கிரிக்கெட்டில் இரண்டு Robotsகள் தற்போது உபயோகத்தில் இருக்கின்றன. ஒன்றின் பெயர் - கிளன் மெக்ரத். இன்னொன்று ... நம்ம அனில் கும்ளே. ராத்திரி 12 மணிக்கு தூக்கத்தில் எழுப்பி, ' அழகா ஒரு flipper போடுங்க சார் ' என்று கேட்டால், போட்டே விடுவார் ஆசாமி. முடிந்தால் விக்கட்டும் எடுத்து விடுவார். இந்த 34 வயது இளைஞரின் பந்து வீசும் திறன் ஆண்டுகளின் ஓட்டத்தில் கூராகி, உச்சம் தொட்டிருக்கிறது. இன்னும் 3 வருடமாவது அவர் இந்திய அணிக்காக உருப்படியாக விளையாட முடியும். ' யோவ்... உனக்கு வயசாயிருச்சு...இளைஞர்களுக்கு வழிவிடு...போய் வேற வேலையப் பாரு ' என்று ஏதாவது ஒரு தேர்வுக்குழு வீட்டுக்கு அனுப்பாமல் இருக்க, ஆண்டவன் அருள் புரியட்டும்.

கொல்கத்தா டெஸ்டின் கடைசி மதியம்தான் ஹர்பஜனின் பந்துவீச்சில் பழைய சூட்டைப் பார்க்க முடிந்தது.பெங்களூர் கிரிக்கெட் டெஸ்டில் இவர் முழுமையாக ஜொலிக்கக் கூடும். ஆனால் எனக்கென்னவோ, சமீபகாலமாக கட்டை மன்னராகி இருக்கும் டெண்டுல்கர் அதிரடிக்கப் போவதும், பாலாஜி மறுபடியும் பாகிஸ்தானை முடக்கப் போவதும் நடக்கப் போவதாகத் தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க ?

Wednesday, March 16, 2005

ஜெயிக்குமா இந்தியா ? தோற்குமா பாகிஸ்தான்?

ஈடன் கார்டன் மைதானத்தில் கொஞ்சம் போல் இருக்கிற புல்லும் மாட்ச் துவங்கும் முன் மொட்டையடிக்கப்படும் என்று தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். கங்குலி கொல்கத்தா 'மண்ணின்ம மைந்தர்'. அவர் சொல் கட்டாயம் அம்பலம் ஏறும். கங்குலிக்கு எப்படிப்பட்ட ஆடுகளம் பிடிக்கும் என்பதை எங்கள் கூளையனூர் பாட்டிகூட சொல்லி விடுவார்.ஈடன் கார்டன் மைதானம் முதல் நாளிலிருந்தே ஸ்பினாகத் துவங்கலாம் என்பதே உண்மை.

மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தப் போவதாகச் சொல்கிறார் கங்குலி. அது கப்ஸா. ரெண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் ( பாலாஜி, பதான் ) ரெண்டு சுழல் பந்து வீச்சாளர்கள் ( கும்ளே, ஹர்பஜன் ) என்பதுதான் இந்திய அணி வியூகமாக இருக்கும்.

பேட்டிங்கில் அதிக மாற்றமிருக்க வாய்ப்பில்லை. கார்த்திக்கின் இடம் மட்டுமே கொஞ்சம் " திக், திக் ".ஒருவேளை அவர் இந்த டெஸ்டில் சதமடித்து பர்திவ் படேல் போன்றவர்களின் வயிற்றில் தீயை வார்க்கலாம். அவரது பேட்டிங்கில் " கிளாஸ்" தெரிகிறது. ஆனால் அதை மட்டும் வைத்து போட்டிமிக்க இந்திய அணியில் குப்பை கொட்டுவது கஷ்டம்.

பாகிஸ்தான் பந்துவீச்சு டேனிஷ் கனிரியாவையே நம்பியிருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் அவரை நொறுக்க முற்படுவார்கள். அவுட்டும் ஆவார்கள். கடைசியில் கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு இந்திய அணிக்கே சாதகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அவர்களது பேட்டிங் தன்னம்பிக்கையின் உச்சத்தில் இருகிறது.அப்துல் ரசாக் மொகாலி டெஸ்டில் போதுமான அளவு கட்டை வைத்து விட்டதால், இந்த முறை விளாசித்தள்ளக் கூடும். இந்தியாவைப் பொறுத்தவரை அவரே ஆபத்தான பேட்ஸ்மேன். பாகிஸ்தானோ சேவக்கைப் பார்த்து பயப்படுகிறது. ஆனால், எனக்கும் ஓரளவு ஜோசியம் சொல்ல முடியுமானால், இந்த டெஸ்டில் லக்ஷ்மண்தான் கதாநாயகனாவார் என்று சொல்வேன். போன டெஸ்டில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஹர்பஜன்சிங்கும் உயிர்ப்புடன் பந்து வீசுவார்.

கொஞ்சம் இழுபறியாக இருந்தாலும், இறுதியில் இந்தியாவே வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. பெறும் என்றே நீங்களும் நினைப்பீர்கள். பாழாப்போன பாகிஸ்தான் அணி என்ன நினைக்கிறதோ? :)))))

Tuesday, March 15, 2005

சொட்டு சொட்டாய் காதல்!

காதல்...எந்த வயதில் முதல் முதலாய் முளைக்கிறது ?

உலக ஜனத்தொகையில் பாதிப் பேர் அது பதின்ம வயதில்தான் முளைக்கிறது என்று சொல்லக்கூடும். உண்மையும் அதுதானா?

செவ்வக சட்டத்தின் உள்விளிம்புகளைத் தொடமுயலும் சுவர்கடிகார முள்ளாய், சில நாட்களாக இந்தக் கேள்வி மனசில் ஊசலாடுகிறது....

காதல் என்றால் - கனிய வேண்டும்: கசிய வேண்டும்: இறக்க வேண்டும்: பிறக்க வேண்டும்: பசியும், பசியின்மையும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டும்: இதயத்தில் வடியும் வேதனை ரத்ததிலும் சுகம் உணர வேண்டும்: இப்படிப்பட்டவர்களைத் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கைச் சாலையின் ஓரத்திலும் தினம் தினம் சந்தித்தே வருகிறோம்.

காதலைப் பொறுத்தவரை உலகில் ரெண்டே ரெண்டு ஜாதிதான் இருப்பதாகப்படுகிறது. வாழ்க்கையைத் தேடித்தேடி காதலைத் தொலைத்தவர்கள் ஒரு ஜாதி: காதலைத் தேடித்தேடி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் இன்னொரு ஜாதி.

சரி... காதலையும் வாழ்க்கையையும் சேர்த்தே ஜெயித்தவர்கள்? அப்படிப்பட்டவர்கள் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்களாகத்தானே இருக்க முடியும்? :)))

பொள்ளாச்சியில் படித்த காலத்தில், வாடகைக்கு அறையெடுத்து தங்கியிருந்தேன். வீட்டு உரிமையாளரான அந்தச் சகோதரி, பல வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்த ஒரு சந்திப்பில் கேட்டார்...

" ஏன் தம்பி... நீங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதலிக்கவில்லையா "

" இல்லை அக்கா "

" ஏன் தம்பி "

" கல்லூரிக்காதல் மேல் எனக்கு நம்பிக்கையில்லை அக்கா "

" ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்...உங்கள் நண்பர்கள் யாரும் காதலிக்கவில்லையா? "

" ஆமாம். காதலித்தார்கள்... "

" கல்யாணம் செய்து கொண்டார்களா? "

" செய்து கொண்டார்கள்... "

" அப்புறம் ஏன் கல்லூரிக்காதல் மேல் நம்பிக்கை இல்லை என்று சொல்கிறீர்கள்? "

" காதலித்தார்கள் : கல்யாணம் செய்து கொண்டார்கள் : ஆனால் அவன் கல்யாணம் செய்து கொண்டது வேறொருத்தியை ... அவள் கல்யாணம் செய்து கொண்டது வேறொருவனை ! எப்படி கல்லூரிக் காதல் மேல் நம்பிக்கைவரும் சொல்லுங்கள் ? "

அந்தச் சகோதரி ஏதோ பெரிய ஜோக்கைக் கேட்டது மாதிரி வெகுநேரம் சிரித்தார். அப்புறம் கேள்வியின்றி மொளமாகிப் போனார்.

காதல்...எந்த வயதில் முதல் முதலாய் முளைக்கிறது ?

மலை விழுந்த ஒரு மாலையில், காப்பிக்கடையில், சூடான தேனீரைப் பருகியபடி என் நண்பரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

சிரித்தார்.

" ·பிராய்டு படித்திருக்கிறீர்களா? "

" இல்லை..."

" ம்.... என் முதல் காதல் பத்து வயதில் முளைத்தது என்று நினைக்கிறேன்..."

" அடப்பாவி! "

" பதறாதீர்கள் நண்பரே... அது - அதற்கு முன்னாலும் முளைத்திருக்கலாம்! "

" பத்து வயதில் காதல் என்பதெல்லம் சாத்தியமா? "

" இன்னும் அவள் பெயர்கூட ஞாபகம் இருக்கிறது...'பக்கத்து வீட்டு சாந்தி. உன் அப்பன் பேரு காந்தி' என்று அவளது பாடப்புத்தகத்தில் எழுதியதும் கூட. ஒரு கோயில் திருவிழாவில் விளக்கோடு நடந்த அவள் பின்னால் நான்குமணி நேரம் தொடர்ந்து நடந்தபோது, என் மனதில் சிலிர்த்து, சிலிர்த்து விழுந்த உணர்வுக்குப் பெயர் காதலாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்."

" அது வெறும் கவர்ச்சியாகத்தான் இருக்க முடியும்... "

" இந்த வயதுவரை என் வாழ்க்கைக்குள் சில பெண்கள் வந்து போயிருக்கிறார்கள். அவர்களால் இப்படி நீங்காமல் நிறைந்திருக்கும் சிலிர்ப்புகளை நிரந்தரமாக விட்டுச்செல்ல முடிந்ததே இல்லை "

அந்த விளக்கத்திற்குப் பிறகு நான் மொளனமானேன்.

அது அவரது வாழ்க்கை. அவரது காதல் !

ஒரு நீள இரவில் ஆழ யோசித்துப் பாருங்கள்.... காதல் உங்களுக்குள் முளைத்தது எப்போது என்ற உண்மை உங்களுக்குள் புரியலாம்....

எப்போது வருகிறதென்பது முக்கியமில்லை. ஆனால், எப்படியாவது, எங்காவது அது வர வேண்டும்.

இதுவரை உங்களுக்குள் அது முளைத்திருந்தால்... யாராவது ஒருவர் உங்களை காதலித்திருந்தால்... நீங்கள் ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்!

" அட போங்க சார்... காதலைப்பற்றி தெரியும் முன்பே எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது " என்று அலுத்துக் கொள்ளும் கணவர்களே... மனைவிகளே....
நோயின் தாக்கத்தில் எழ முடியாதபடி படுத்தபடுக்கையாக கட்டிலில் கிடந்த ஒருநாளில், நமது வாழ்க்கைத்துணை சுடிநீர் ஒற்றிய துணியில் முகம் துடைத்து மார்துடைத்து கண்ணோடு கண்பார்த்து, கடைசியில் நெற்றியில் கனிவோடு முத்தமிடும்போது... நம் விழியோரம் கசிந்து காதோரம் வழியுமே கண்ணீர்....
அது கண்ணீரா? இல்லை. சொட்டு சொட்டாய் காதல்!


Monday, March 14, 2005

பாலாஜி என்ற கறுப்புப்புயல்

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து முடிந்த மொகாலி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தன் முழுத்திறனையும் வெளிப்படுத்தி இந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்த்த கள்வனாகியிருக்கிறார் லக்ஷ்மிபதி பாலாஜி.

கறுத்த நிறம், ஒல்லியான தேகம், அழகென்று சொல்லிவிட முடியாத ஓட்டம், கையை விசுக்கென்று சுற்றி பந்து வீசும் திறம் - இப்படி பாலாஜி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கியபோது, 'இன்னும் எத்தனை நாளைக்கோ..' என்ற சந்தேகக்கண்ணோடு பார்த்தவர்கள்தான் நிறையப்பேர். அதற்கேற்ற மாதிரி, மேற்கிந்தியத்தீவு அணி வீரர்கள் அவரது பந்து வீச்சை விளாசித் தள்ளிவிட, ' ரஞ்சி டிராபிப் போட்டியில் புலி மாதிரி பந்து வீசுபவர்கள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எலி மாதிரி பந்து வீசுகிறார்கள்' என்று கிண்டலடித்தார் அமித் மதூர் என்ற விமர்சகர்.

பலரும் இனி பாலாஜி அவ்வளவுதான் என்று முடிவு செய்திருக்க, ' குறித்துக் கொள்ளுங்கள்...இவர் இன்னும் பல வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடுவார்' என்று ஆருடம் கூறினார் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத். இன்று - பாலாஜி அவரது நினைப்பை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பாலாஜி,4 ஓவர்களில் 44 ரன்களைத் தந்ததும் ஏறக்குறைய ஒருவருடம் இந்திய அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். இந்த ஒரு வருடத்தில் இர்பான் பதானின் இடதுகை பந்துவீச்சும், அவரது இளமையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துக் கொள்ள, சென்னையின் ஒரு மூலையில், ஆரவாரமின்றி தனது திறனை கூராக்கிக் கொண்டிருந்தார் பாலாஜி.

ஸ்ரீநாதின் பந்துவீச்சை மாதிரியே, ஆடுகளத்தில் பட்டு உள்திரும்பி, விக்கெட்டைநோக்கி சீறிப்பாயும் பந்துகளே பாலாஜியின் பலம். ஆனால் 2004ல் பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் கிரிக்கெட் உலகம் ஒரு புதிய பாலாஜியைப் பார்த்தது. விக்கெட்டைவிட்டு விலகிச்செல்லும் பந்துகளை அநாயசமாக வீசப் பழகியிருந்தார். அவரது ஓட்டத்தில் ஒழுங்கும், நளினமும் கூடியிருந்தது. பாலாஜியின் மணிக்கட்டை விட்டுவரும் பந்துகள் எப்படித் திரும்பும் - உள்ளேயா அல்லது வெளியேயா என்று பந்தடிப்பவர்கள் திகைத்தார்கள்.

நெஹ்ரா, அகர்கர் போன்ற அனுபவசாலிகள் ஓரமாய் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க, 3 டெஸ்ட் போட்டிகளில் 12 பாகிஸ்தான் விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்லோரும் பயந்து கொண்டிருந்த சோயப் அக்தரை ஆறுக்கு தூக்கியடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது இன்னொரு உபரிச்சம்பவம். இருட்டரையில் விளக்கேற்றியது மாதிரியான பளிச்சென்ற பாலாஜியின் புன்னகைக்கோ பாகிஸ்தான் முழுக்க ஏராளமான ரசிகர்கள்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை...பாகிஸ்தானிலிருந்து திரும்பிய கொஞ்சநாளில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுடன் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்த நாட்களில் இந்தியாவிற்கு விளையாடிய ஜாகிர்கான், பதான், நெஹ்ரா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுமே இடது கைக்காரர்களாக இருக்க, பாலாஜியின் வலதுகைப் பந்துவீச்சின் இழப்பை உணர்ந்தது இந்திய அணி, - குறிப்பாக கேப்டன் கங்குலி.

கங்குலிக்கு பாலாஜி மேல் ஏராளமான நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் மொகாலி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாலாஜிக்கு இடம் வாங்கித் தந்தது. அதில் அவர் எடுத்த 9 விக்கெட்டுகளும், 34 ஓட்டங்களும் அந்த நம்பிக்கை சரிதான் என்று நிருபித்திருந்தாலும், 'அந்த' ஐந்தாம் நாள் காலையில் மட்டும் பாலாஜி இன்னும் "ஒரே ஒரு " விக்கெட்டை எடுத்திருந்தால், இந்த நிமிடம் - அவர்தான் ஹீரோ! மேடும் பள்ளமும் நிறைந்ததுதானே வாழ்க்கை?

எது எப்படியோ, மொகாலி கிரிக்கெட் டெஸ்டில் பக்க வாத்தியமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாலாஜி, முழுக்கச்சேரியும் நடத்தியிருப்பது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை, குறிப்பாகத் தமிழ் கிரிக்கெட் ரசிகர்களை "ஓ" போட வைத்திருக்கிறது. மொத்தத்தில் பாலாஜியின் பந்து வீச்சைப் பற்றி இப்படித்தான் சொல்ல வேண்டும்... இது முடிவல்ல, ஆரம்பம் !

Tuesday, March 08, 2005

விதைகளும் சிதைகளும்!

முளைப்பதற்கே பிறக்கிறது விதை.
தழைப்பதும், கிளைப்பதும் பின்விளைவுகள்!

மக்கி மண்ணோடு போவதெல்லாம் சிதை.
மூடிய மண் விலக்கி
சிலிர்த்து சிரிப்பதுதான் விதை.

ஆக்க விதைகள் சில.
அழிவு விதைகள் சில.

புல்லாங்குழலின் இருண்ட நாசி வழி
புகுந்து வரும் காற்று...
போகும் வழியெங்கும் இசை விதைக்கும்.

இரவில் நிலா முளைக்க
பகல் முழுக்க
வெளிச்சம் விதைக்கும் சூரியன்.

பூமி சூழ்கொண்ட நெருப்பு விதை
வெடித்துச்சிதறி கடல்கை நீட்டி
அரித்துச் செறித்த உயிர்கள் எத்தனை?

சிங்கள நெஞ்சங்களின் வெறுப்பு விதைகளில்
வடிந்ததெல்லாம் தமிழ் ரத்தம்.

ஆக்க விதைகள் சில.
அழிவு விதைகள் சில.

முளைத்த விதைகள் நாம்.
நாம் விதைக்க, அவை முளைக்க
காத்திருக்கிறது காலம்.
நம் கையில் என்ன விதை?

Monday, March 07, 2005

சில்க்குடன் ஒரு பேட்டி ( கற்பனையில்தான்! )

எங்கள் வாலிப வானத்தில் விளக்கெரித்த நிலா நீங்கள். இருந்த நீங்கள் இல்லாமல் போனதால் - நிலவின்றி நாங்கள் இருளாகிப் போனது தெரியுமா உங்களுக்கு ?
தெரியும். இருந்தாலும் என்ன...தீபங்களும், தீக்குச்சிகளும், ஏன்...மின்மினிப் பூச்சிகளும் கூட, இரவுக்கு வெளிச்சமூட்ட முடியும்.


புரியவில்லையே....

சில்க் என்ற சங்கதி தமிழ்ச் சினிமாவில் தற்காலிகம். கவர்ச்சி என்பதோ நிரந்தரம். நானில்லாவிட்டாலும் இன்னொருவர் விளக்கெரிப்பார்.இறப்பதற்கு முன் என்ன நினைத்தீர்கள் ?
இன்னும் கொஞ்சநாள் இருந்துதான் பார்ப்போமே என்று நினைத்தேன்...


பிறகு ஏன் மனதை மாற்றிக் கொண்டீர்கள்?
மனம் ஏற்கனவே மரணமடைந்திருக்க, உடலுக்கு எதற்கு உயிர்?·


இப்போது என்ன செய்கிறீர்கள் ?
ரம்பா, ஊர்வசி, மேனகையோடு இந்திரன் சபையில் என்னையும் இணைத்து விட்டார்கள். பூலோகத்தில் பாமரர்களை நடனத்தால் பரவசப்படுத்திய எனக்கு, மேலோகத்தில் தேவர்களைத் திருப்திபடுத்தும் உத்தியோக உயர்வு.


பகல், இரவு - இந்த இரண்டில் உங்களுக்குப் பிடித்தது எது?
பகல் என் உடல் மீது வெப்பம் பொழிந்தது. இரவில் என் மனம் வேதனை வெப்பத்தால் உருகி வடிந்தது. எனவே, இரண்டின் மீதும் இச்சையில்லை எனக்கு.


இச்சை என்றதும்தான் ஞாபகம் வருகிறது. கச்சை கட்டிய உங்களது கட்டழகு உடல் மீது இச்சை கொண்டு, காதல் பிச்சை கேட்டலைந்த காளையர்கள் பற்றி....
பச்சையாக சொல்வதென்றால்.... பரிதாபத்திற்குரியவர்கள்!·


கற்பைக் பற்றி உங்கள் கருத்தென்ன ?
ஆண்களுக்கும் மிக அவசியமான ஒன்று.


இன்னொரு பிறவியெடுக்கும் எண்ணம் உண்டா?
உண்டு. ஆனால் அதில் ஆணாய் மட்டுமே அவதரிப்பேன்.

ஏன்?
அவர்களுக்குத்தானே சேலைகளும் கிடையாது... துகிலுரிப்பும் கிடையாது.


எங்களுக்கு ஏதேனும் செய்தி சொல்ல விரும்புகிறீர்களா?
இது மேலோகம். இங்கு கிசுகிசுக்கள் கிடையாது !·

Saturday, March 05, 2005

ரொம்ப லேட்டாய் + லேட்டஸ்டாய் ஒரு பதிவு !

சிங்கப்பூரில் நடைபெற்ற 'மாலன்' மற்றும் 'ஆர்.வெங்கடேஷ்' புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு நானும் போயிருந்தேன்.மாலனைப் பார்த்தேன்.பேசவில்லை. அவர் அடுத்தவர்களிடம்பேசுவதை பார்ப்பதே போதுமானதாக இருந்தது.

பொது நிகழ்ச்சிகளில் நேரம் கடைபிடித்தல் சிங்கப்பூரின் அடிப்படைப் பண்பு. ஏழு மணி நிகழ்ச்சி என்றால் ஏழுமணி. ஒன்பது மணிக்கு முடியுமென்றால் - முடியும்! அல்லது முடித்து
விடுவார்கள்.

கொடுத்த காலத்தில் பேச்சை முடித்துக் கொள்ளும் அந்தப் பண்பை ' புஷ்பலதா' மற்றும் 'அழகிய பாண்டியனிடம்' பார்க்க முடிந்தது. தயாரிப்பு, கொஞ்சம் மெனக்கெடல் இருந்தால் இது எல்லோருக்கும் சாத்தியம் என்று தோன்றுகிறது..

முனைவர் சுப.திண்ணப்பனின் உரை சற்று அல்லது 'மிக சற்று' நீண்டு போய், உதுமான்கனிக்கு
ஒதுக்கப்பட்ட நேரத்தை சாப்பிட்டுவிட, 'நான் பேச நினைத்ததை எல்லாம் சுப.திண்ணப்பன்' அவர்களே பேசிவிட்டார். நன்றி.வணக்கம்.' என்றுகூறி தன் பேச்சை சுருக்கிக் கொண்ட
உதுமான்கனியின் நகைச்சுவை அனைவரும் ரசித்த விஷயம். ( உதுமான்கனி வழக்கறிஞர்.
எனவே, காசு கொடுத்தால்தான் பேசுவார் - என்று மாலன் அவரை கிண்டலடித்தது பின்னால்
நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த சில நாட்களிலேயே உதுமான்கனி மரணமடைந்ததது மிகப்பெரிய சோகம் )

நிகழ்ச்சியை வழிநடத்திய நெப்போலியன், மாலன் - ஒரு புதுமைப்பித்தனைப் போல், தி.ஜாவைப்போல், ஜெயகாந்தனைப் போல் ( இன்னும் பல போல்... ) சிறப்பாக எழுதுவதாக குறிப்பிட்டார்.எனக்கென்னவோ மாலன் - மாலனைப் போல் சிறப்பாக எழுதுவதாகத் தோன்றியது.இதையே நெப்போலியனிடமும் சொன்னேன். சிரித்தார்.

தனது கதைகளை விட, கட்டுரைகளே சமூகத்தில் நிறைவான பாதிப்பை உண்டாக்கி இருப்பதாகச் சொன்னார் மாலன். ' எழுத்துதான் முக்கியம்...எழுத்தாளன் அல்ல' என்பது இன்னொரு முக்கியகருத்து.

இந்த நிகழ்வில் சிங்கப்பூர் தமிழ்முரசின் முன்னாள் ஆசிரியர் வை.திருநாவுக்கரசை பார்க்க நேர்ந்தது.கூடவே - முன்னாள் 'ஞாயிறு முரசு' பற்றிய ஞாபகங்களும் வந்தன.

சில வருடங்களுக்கு முன்புவரை, ஞாயிறு முரசுக்கென்று சுளையாக தனிப் பக்கங்கள். நிறைய இலக்கிய வாய்ப்புகள்.கூடவே கொறிக்க கொஞ்சம் சினிமா. சேலை கட்டிய பெண் மாதிரி கவர்ச்சியாக இருக்கும்அது. இக்கால ஞாயிறு முரசில் அந்த தனிப்பக்கங்களைப் பார்க்க முடியவில்லை. கதை வருகிறது.கவிதை வருகிறது.அதை ஒட்டியே ஈமச்சடங்கு செய்திகளூம் வருகிறது....

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் வழக்கமான சிங்கப்பூர் இலக்கிய நிகழ்வுகளில் தென்படாத
பல புதிய முகங்களைப் பார்த்தேன். அவர்களில் பலர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கான சகல
அடையாளங்களோடு பின் இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் அல்லது
உட்காராமல் நின்று கொண்டிருந்தார்கள்.

இவர்கள் நல்ல தமிழ் இலக்கியங்களுடனானதங்கள் தொடர்புகளை நீடித்து வந்தாலும், வேலை, வீடு, குடும்பம், நண்பர்கள், இணையம்,சன் டி.வி, அவ்வப்போது யூசூன் தியேட்டரில் தமிழ் சினிமா என்ற வட்டத்துக்குள் சுருங்கிவிட்டார்களோ என்ற ஆதங்கம் வந்தது. ஆழ யோசித்தால், சிங்கப்பூரின் அடுத்த தலைமுறைஇலக்கியத்திற்கு இவர்களும், இவர்களது பிள்ளைகளும் கணிசமாக பங்களிக்கப் போகிறார்கள்என்று தோன்றுகிறது. பங்களித்தார்களா என்பதைக் காலம் சொல்லும்.

மறுநாள் ஆர்.வெங்கடேஷின் 'நேசமுடன்' நூல் வெளியீடு. தாமதமாகத்தான் போனேன். வேலை முடிந்த கையோடு, வியர்வையோடு, ஷ¥வில் அடர்ந்து படிந்த தூசோடு, டெக்ஸி எடுத்து அங்கு போய் சேர - இலக்கிய ஆர்வம்தான் காரணம். ( இலக்கியவாதிகள் ஆளையும், கூடவே காலையும் பார்க்கிறார்கள் )

நான் போனபோது வெங்கடேஷ் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

'படைப்பிலக்கியம் மட்டுமே என் வேலை. விமர்சனங்களுக்கு, எதிர்வினைகளுக்கு, பதில் வாதம் செய்ய எனக்கு நேரம் இல்லை. பா.ராகவன் சம வயது நண்பன். தலையணை, தலையணையாக புத்தகம் போட்டு விட்டான்.உறங்காமல் இன்னும் இன்னும் எழுதவேண்டுமென்ற தவிப்பு எனக்குள் இருக்கிறது.' என்று சொல்லிய வெங்கடேஷிடம், எதிர்வினை, அது, இது பற்றியெல்லாம் யோசிக்காமல் நிறைய கேள்வி கேட்டார்கள். அவரும் பதில் சொன்னார்.

உண்மையில் எனக்கு வெங்கடேஷின் எழுத்துகள் பற்றி அவ்வளவாகத் தெரியாது அல்லது ஒன்றுமே தெரியாது. இந்த நூல் வெளியீடு அவரைப் பற்றிய அல்லது அவரது எழுத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தந்தது.'நேசமுடன்' கட்டுரைத் தொகுப்பை மாதிரி, வாழ்க்கை என்பது கூட புதிய புதிய அறிமுகங்களின் தொகுப்புதனே?

எம்.கே.குமார் ஒரு கேள்வி கேட்டார்.

'இப்போது நிறைய வலைப் பூக்கள் வருகிறது. இப்படிஒவ்வொருவரும் ஒரு வலைப்பூவாக திறந்து கொண்டே போனால், அதன் அடுத்த நிலைஎன்ன?' இதற்கான பதில், வேறு திசைகளை சுற்றிவிட்டு கேள்வியின் உயிர்நாடியைத்தொடாமல் ஓய்ந்து போனது. ' ஒரு ஊரில் ஒரு இட்லிக்கடை என்றால் ஓகே. ஆனால்ஒவ்வொருவனும் தன் வீட்டு வாசலில் ஒரு இட்லிக் கடையை திறந்துவிட்டால் வியாபாரம்எப்படி? அவனவன் சுட்ட இட்லியை அவனவன் சாப்பிட்டுவிட்டு உட்கார வேண்டியதுதானா?'என்ற எம்.கே.குமாரின் ஆதங்கம் யோசனைக்குரியது.

இந்த நிகழ்வில் சிங்கப்பூர் டி.வி 'வசந்தம் சென்ட்ரலின்' துணைத் தலைவர் முகம்மது அலியும் கலந்து கொண்டார்.சமீபத்தில் சிங்கப்பூர் வந்திருந்த நடிகர் கமல்ஹாசனோடு அவர் நடத்திய பேட்டி தரமிக்கதாக இருந்தது.

கமல்ஹாசன் என்பது அனுபவங்கள் கொட்டிக் கிடக்கும் பூக்கூடை. சரியான கேள்விகள். தூண்டுகோல் மாதிரியான துணைக் கேள்விகள். சுடர் விட்டார்கமல்ஹாசன். சுடர்விட வைத்தார் முகம்மது அலி.

முகம்மது அலி மட்டும் தமிழகத்தில் இருந்திருந்தால், ' இன்னொரு ரவி பெர்னாட்' என்று பேசப்பட்டிருப்பார் அல்லது ரவி பெர்னாடை 'இன்னொரு முகம்மது அலி' என்று சொல்லும் சூழலை உருவாக்கி இருப்பார்.ஏராளமான திறமைகள் இந்த இளைஞரிடம் கொட்டிக்கிடக்கிறது.

இரண்டு புத்தக வெளியீடுகள்...இரண்டு அனுபவங்கள்...ஞாபக அடுக்குகளில் இன்னும் சில
பக்கங்கள்!

Thursday, March 03, 2005

உடைந்து மிதக்கும்...


நேற்றை மறக்கும் இன்று.

நாளைகள் இன்றை மறக்கும்.

இழப்பவை மட்டுமே
இருந்து விடுகின்றன நெஞ்சில்.
இருப்பவை மறந்து விடுகின்றன.

மறந்தவற்றை வரிசைப்படுத்தி
வாசித்துப் பாருங்கள்...
மறக்காதவை ஆகிவிடும்.
வரிசைப்படாதவை மட்டுமே
மறந்தவை ஆகின்றன.

மறந்தும் மறவாதநிலை இருப்பதுண்டா?
இருக்கலாம்.

அவனுக்கும் இவனுக்குமான நிகழ்வுகளில்
அவனதை இவனும்
இவனதை அவனும் மறப்பார்கள்.
எதிரில் பார்க்கையில் சிரிப்பார்கள்.
வசதிக்கேற்ப மறப்பதுதான் வாழ்க்கை.

அவனுக்கும் இவளுக்குமான நிகழ்வுகளில்
அவனதை இவளும்
இவளதை அவனும் மறப்பதில்லை.
மறந்ததாய் சொல்வார்கள்.
பொய்யாக வாழ்வதும்தான் வாழ்க்கை.

அவர்களுக்கும் இவர்களுக்குமான
நிகழ்வுகளில்
அவர்களதை இவர்களும்
இவர்களதை அவர்களும் மறப்பதுண்டு.
மன்னிப்பதேயில்லை.
விழிப்போடு வாழ்வதும்தான் வாழ்க்கை.

எனவே அன்பர்களே.....
இதுவரை படித்ததை இப்போதே மறக்கலாம்.....
இது மறதியால் எழுதிய கவிதை.!

Wednesday, March 02, 2005

போன்சாய் செடியாகிப்போன தமிழ் ஆலமரம்

இப்படிச் சொல்லி வேதனைப்பட்டவர் பிரபல மலேசியத்தமிழ் எழுத்தாளர் சை.பீர்முகம்மது. சிங்கப்பூரில் நடந்த " கடற்கரைச்சாலையில் கவிமாலை " நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய விரிவான உரையை நண்பர் பனசை நடராஜன் பதிவு செய்தார். அதை அப்படியே உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்......


கவிமாலை (26/02/2005)

மாதந்தோறும் இறுதி சனிக்கிழமையன்று நடைபெறும் ‘கடற்கரைச்சாலை கவிமாலை’ நிகழ்ச்சி இம்மாதமும் ‘கம்போங் கிளாம்’ சமூக நிலையத்தில் பிப்ரவரி 26 அன்று நடைபெற்றது.

தொடக்கவுரை ஆற்றிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு.பிச்சினிக்காடு இளங்கோ, கவிமாலைக்கு பார்வையாளர்களாக வந்த பலர் இன்று நல்ல கவிஞர்களாக வளர்ந்திருப்பதுடன், ஆசியான் கவிஞர் திரு.க.து.மு.இக்பால் அவர்களின் பயிற்சியின் காரணமாக ‘மரபுக் கவிதை’ எழுதும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறந்த மூத்த படைப்பாளிகளுக்கு கவிமாலை சார்பாக ‘கணையாழி விருது’ வழங்கப் படுவதையும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அடுத்து, கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளயும், படித்து ரசித்த கவிதைகளயும் பகிர்ந்து கொண்டனர்.

தமிழக எழுத்தாளர் டாக்டர்.ஹிமானா சையத் அவர்களை அறிமுகப் படுத்திப் பேசிய ஆசிரியர் ப.திருநாவுக்கரசு, ‘தமிழில் நாற்பத்தைந்து நூல்கள் எழுதியுள்ள இவரது படைப்புகள் இலங்கையிலும், கேரளாவிலும் பாடத்திட்டத்தில் உள்ளன’ என்றார்.

சமூக சேவைக்காகவே எழுதுகிறேன் என்று தொடங்கிய திரு,ஹிமானா சையத், ‘தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சுக்கோ உன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ..’ எனத் தொடங்கும் பாடலைப் பாடி பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்.

‘ஒண்ணுமில்லா மாப்பிள்ளைக்கு
ஒரு லட்சம் கைக்கூலி..!
உன்னுடைய அப்பன் ஆத்தா
சொத்து பத்து எல்லாம் காலி..

உலகம் உன்னை பத்தி
உசத்தியா பேச வேணும்!
அதுக்கு ஒரே வழி கல்விதான்
அவசியம் நீ செல்ல வேணும் பள்ளிதான்!”


என்ற சிந்திக்க வைக்கும் வரிகளுக்கு சொந்தக் காரரான இவர் ஐநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளும் எழுதியுள்ளார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை தந்திருந்தார் மலேசிய எழுத்தாளர் திரு. சை.பீர்முகமது. மலேசிய எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும், துணைத்தலைவராகவும் இருந்தவர். ‘கைதிகள் கண்ட கண்டம்’ என்ற பயண நூலையும், ‘வெண்மணல்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘பெண்குதிரை’ என்ற நாவலையும், ‘மண்ணும் மனிதர்களும்’ என்ற வரலாற்றுத்தொடரையும் எழுதியுள்ளார். தனது முகில் பதிப்பகம் மூலமாக மலேசிய எழுத்தளர்களின் ஐம்பது ஆண்டுகால சிறுகதைகளை ‘வேரும் வாழ்வும்’ என்ற தலைப்பில் மூன்றுத் தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

‘உண்மைகளை ஒப்பனையின்றி உரக்கச் சொல்லும் தன்மையினால் அதிகமாக நேசிக்கப் படுகிற, வாசிக்கப்படுகிற, விமர்சிக்கப் படுகிற, ஆனால் ஒதுக்க முடியாத எழுத்துக்கள் இவருடையது’ என்று திரு பீர்முகமதுவை அறிமுகப் படுத்திப் பேசினார் சிங்கை எழுத்தாளர் திரு.பாலு மணிமாறன்.

‘முன்பெல்லாம் பெண்கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரிதாக இருந்தார்கள். ஆனால் இன்று நிறைய பெண்கள் சிறப்பாக எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ எனத் தன் உரையைத் தொடங்கினார் திரு பீர்முகமது.

"ஒவ்வொரு என்ணூறு ஆண்டுகளிலும் தமிழ் இலக்கிய உலகம் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் தொடங்கும் என்ணூறு ஆண்டுகள் தமிழுக்கு சிறப்பானதாக இருக்கும். இணையத்தின் மூலமாக அசுர வளர்ச்சி கண்டு வரும் தமிழ், தற்போது கைப்பேசியிலும் குறுஞ் செய்தியாக வலம் வரத்தொடங்கி விட்டது. இருபத்ததையாயிரம் பேர் மட்டுமே படிக்கும் இடிசு என்ற ஹீப்ரு மொழிப் படைப்பு நோபல் பரிசு பெறுகிறதென்றால் எண்பது நாடுகளில் பரவிக் கிடக்கும்எம்மொழியாம் செம்மொழித் தமிழ் எப்படி அழியும்?" என்ற கேள்வியினால் நல்லதொரு நம்பிக்கையை விதைத்தார். அதே சமயம் தமிழர்களிடம் இருக்கும் தாழ்ந்த குணங்களையும் பட்டியலிட்டார்.

‘அன்று முதல் இன்று வரை தமிழ் இலக்கியங்களைப் பற்றிய சரியான மதிப்பீடுகள் இல்லை. ஓலைச்சுவடிகளை ஆற்றில் வீசி எறிந்து, எதிர்த்து வருபவையே நல்லவை என்று நம்பிய நம் முன்னொர்களின் அறியாமையால் எத்தனை நிகரற்ற நூல்கள் அழிந்தனவோ?
இன்றும் தமிழிலிருந்து தோன்றிய தெலுங்கு, கன்னடம், மலையாளமொழிப் படைப்புகளெல்லாம் பல ஞானபீட விருதுகள் பெற்றிருக்க நம் தமிழ் மொழியில் திரு.அகிலனுக்கு மட்டுமே கிடைத்ததற்கு என்ன
காரணம்? அவருக்கு விருது வழங்கப் பட்டதை எதிர்த்து சுமார் இரண்டாயிரத்து என்ணூறு எதிர்ப்புக் கடிதங்கள் தமிழர்களிடமிருந்து போனதுதான். அதனால்தான் ஆலமரமாக தழைக்க வேண்டிய தமிழ் இலக்கிய உலகம் ‘போன்சாய்’ என்ற தொட்டிச் செடியாகச் குறுகி விட்டதோ?’ என்றார் வேதனையுடன்.

ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டுக் கறுப்பின எழுத்தாளன், சிறைச்சாலையில் கழிவறைக்காகிதத்தில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ என்ற நாவலை எழுதினான். பறிமுதல் செய்யப்பட்டு ஒன்றுமில்லை எனத் திருப்பித் தரப்பட்ட வெள்ளையரின் நிறவெறிக்கெதிரான அந்த நாவல் பெரியதொரு மறுமலர்ச்சியை மாற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியது.அதுபோன்று சுயமாக, நீங்களாக சிந்தித்து எழுதும் படைப்புகளே உங்களை அடையாளப் படுத்தும். அதற்கு ‘உழைத்து உண்மையாக எழுதுங்கள்..

ராவணனை எல்லோரும் வில்லனாகப் பார்க்கையில்....

‘இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த
நான் என்ன செய்வேன்?

என்று சீதையைப் பார்த்து ராவணன் சொல்வதாகக் கவிதை புனைந்ததால்தான் கவிக்கோ அப்துல் ரகுமான் கவனிக்கப் பட்டார். மரம் பேசுவது போலான கவிஞர் வாலியின் கவிதையில்

‘நம்மைக் கொண்டு
எத்தனை சிலுவைகள் செய்கிறார்கள்..
ஆனால் அவர்களுக்குள்
ஒரு இயேசுவைப் படைக்க முடிய வில்லையே!’

போன்ற வித்தியாசமான சிந்தனைதான் இன்று எழுத்தாளர்களுக்குத் தேவை.

மலேசியாவை விட சிங்கப்பூர் எழுத்தாளர்கள் சிறப்பாக எழுதுகிறீர்கள். தமிழ்முரசு லதா எழுதிய ‘தீவெளி’ கவிதை நூலின் சிறப்புகளைப் பற்றி மலேசியாவில் ‘தென்றல்’ பத்திரிக்கையில் ‘சிந்தையே என் சித்தமே’என்ற பகுதியில் எழுதியுள்ளேன். மேலும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்குமான இலக்கிய உறவுகளை வலுப்படுத்த வேண்டும். சிங்கப்பூரில் பிறந்த இளைஞர்களையும் படைப்பாளிகளாக்க வேண்டும்’ என்று தன் விருப்பத்தையும் ஆலோசனைகளையும் தெரிவித்தார்.

‘முதலில் நான் மனிதன், அடுத்து நான் தமிழன், இறுதியாகத்தான் என் மதத்தைச் சார்ந்தவனாக அடையாளப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன்’ என்றார் முத்தாய்ப்பாக.

‘சுமை’ என்ற தலைப்பில் கவிஞர்கள் எழுதி வந்த கவிதைகளில் திரு.கருணாகரசு, திரு.திருமுருகன், திருமதி.மீரா மன்சூர் ஆகியோரின் கவிதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டன. கவிஞர்கள் அருண்கணேஷ், சேவகன் இருவரும் இம்மாதப் பரிசுகளை வழங்கியிருந்தனர்.

அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார் திரு பிச்சினிக்காடு இளங்கோ. நல்லதொரு தமிழ் நிகழ்ச்சிக்கு திரளாக வந்திருந்தோரைக் காணுகையில் மெல்லத் தமிழ் இனிச் சாகாது.. உலகம் உள்ள வரை தழைத்து வாழும்! என்றேத் தோன்றியது.

- பனசை நடராஜன், சிங்கப்பூர்-

Tuesday, March 01, 2005

பாவாடை தாவணியில் பார்க்க முடியுமா?

பொதுமேடைகளில் உற்சாகமிகுதியால் கங்கைஅமரன் அள்ளிக் கொட்டும் அபத்தங்கள் உலக பிரசித்தம். ஆனால் அவரிடமிருந்து மண்டைக்குள் மணியடிக்கும் அற்புதமான வரியொன்று வெளிப்பட்டதை பத்திரிக்கைகளில் படித்தேன்.

இசையமைப்பாளர் தேவா வீட்டுக் கல்யாணம். மேடையில் பாட்டுக்கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது...பாடகர் " பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? " என்று உருகிக் கொண்டிருக்கிறார்...அதைக்கேட்டுவிட்டு மேடையேறும் கங்கைஅமரன் மைக்கைப் பிடித்து, அந்த வரியை கொஞ்சம் மாற்றிப் பாடுகிறார்..." பாவாடை தாவணியில் பார்க்க முடியுமா? "...வேடிக்கையாகத்தான் பாடுகிறார்...ஆனால் அந்த வரி, நாகரிக வேகத்தில், மாற்றுக்கலாச்சாரங்களின் தாக்கத்தில், சுயமிழந்து கொண்டிருக்கும் நமது இனத்தின் முகவரி காட்டும் வரியாக உரத்து ஒலிக்கிறது.....

யோசிக்கிறேன்...."ஆட்டோகிராப்" கதாநாயகன் அரைடிரவுசரில் காதலித்த, தாவணி அணிந்து, மாரணைத்த புத்தகங்களோடு நடந்து திரிந்த எம்மினப் பெண்கள் எங்கே?

என்பதுகளின் இறுதிவரை பெரும்பாலான தமிழ்நாட்டுப்பள்ளிகளில் பெண்களுக்கான சீருடை பாவாடை தாவணியாகத்தான் இருந்ததது. இன்று- மிகப்பல பள்ளிகளில் சுரிதார் அணிந்தே பள்ளிக்கு வருகின்றன தமிழ் சிற்பங்கள்! எப்படி வருகிறது என்பதை உணரமுடியாமலே வந்துவிடும் இரவு மாதிரி, தாவணிகளை உருவிக்கொண்டு நிற்கிறது சுரிதார்,ஜீன்ஸ் மற்றும் பிற சங்கதிகள்.

தாவணிக்கு மட்டுமா இந்த நிலை ... வேட்டி மட்டும் என்ன வாழ்கிறதாம் ? அரசியல் கட்சிகளின் தயவால், வேட்டிகள் - கரைகளோடும், கழுவ முடியாத கறைகளோடும் பிழைப்பு நடத்துகின்றன. மற்றபடி எஞ்சிய தமிழ் மக்கள்ஸ் " நாங்க பேண்ட் சட்டைக்கு மாறி ரொம்ப நாளாச்சு. நீங்க ? " என்று கேட்டபடி கார்பரேட் உலகிற்குத் தக்கபடி தங்களை உருமாற்றி விட்டார்கள்.

எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்... ஏன் நிகழ்ந்தது ?

யோசித்துப்பார்த்தால் - பரிணாம வளர்ச்சியால் இல்லாமல்போன மனிதவால் மாதிரி இந்த ஆடைகள் இடமற்றுப் போய்க்கொண்டிருக்கும் உண்மை புரியும். பெண்கள் அடுப்பூதும் நிலை உடைத்தெரிந்து, படிப்பதற்கும், வேலைக்கும் வந்த பிறகு, பாவாடை தாவணி, சேலை போன்ற ஆடைகளை அணிவதில் இருக்கும் நடைமுறை சங்கடங்கள் இந்த மாற்றத்திற்கு முதல் காரணம். இயல்பாகவே நம் மரபணுக்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் வேற்றுக் கலாச்சார மோகமும், பல ஆண்டுகள் போராடியும் பெரியாரால்கூட மாற்றிவிட முடியாத நம்மைப் பற்றிய நமது தாழ்வான மதிப்பீடுகளும் - இன்னொரு காரணம்.

கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில், முடிந்த மட்டும், பிடிவாதாமாக பழைய மரபுகளை கட்டிக்காப்பதற்கும், கட்டி அழுவதற்கும், நாமென்ன மலையாளிகளா? வெள்ளைக்கார பில்கேட்ஸிக்கு பக்கத்திலிருக்கும் தமிழர்கள் இல்லையா .... அதான் - மாறிட்டோம் !

"பாவாடை தாவணி / சேலையைப்போல் பெண்களை அழகாக, அதே சமயம் கவர்ச்சியாகக் காட்டக் கூடிய ஆடையை இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அமெரிக்கர்கள் / ஐரோப்பியர்களால் வடிவமைக்கவே முடியாது " என்று நம்மின ஆண்கள் நினைப்பது, நம்மினப் பெண்களுக்குத் தெரியும் என்றே தோன்றுகிறது. சமீபத்தில் சிங்கப்பூர் இந்திய சமூகம், சிங்கப்பூரின் புதிய பிரதமர் லீ சியான் லூங்கிற்கு விருந்தளித்தபோது, ஏறக்குறைய 80 சதவீதப் பெண்கள் சேலையணிந்து வந்து அந்த நினைப்பு சரியென்று நிரூபித்தார்கள்.

இப்படியாக - கோயில்களும், திருவிழாக்களும் கொஞ்சம் போலாவது காப்பாற்றிவரும் வேட்டி, பாவாடை, தாவணி, சேலை போன்ற நமது பாரம்பரிய பண்பாட்டு, கலாச்சார அடையாளங்களை மேலும் காப்பாற்ற டாக்டர் ராமதாசு, தொல்.திருமாவளவன் போன்றவர்கள் ஏதாவது செய்தால், ஆதரவுக்கரம் நீட்ட நாமெல்லாம் தயார்தான். ( அதற்காக, சேலைகட்டி நடிக்காத ஜூலியா ராபர்ட்ஸின் படங்களைத் திரையிடும் திரையரங்குகளின் முன் எங்கள் கட்சி ஆட்களும், தமிழ் வலைப்பதிவர்களும் தீக்குளிப்பார்கள் என்றெல்லாம் சொல்லி விடாதீர்கள் ஐயா! )

என்னாலான இன்னொரு யோசனை - வரும் மே மாதம், வெயில் மண்டையைப் பிளக்கும் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம், " சேலை அழகுராணி / தாவணி அழகு ராணி 2005 " போன்ற போட்டிகளை நிறைய நடத்தலாம். அதன் மூலம் நமது பாரம்பரிய ஆடைகள் மீது நிறைய விழிப்புணர்ச்சியும், பார்ப்பவர்களது கண்களுக்கு குளிர்வுணர்ச்சியும் ஏற்படுவது நிச்சயம், நிச்சயம் நிச்சயம் !!!!