சிங்கப்பூர் வலைப்பதிவர்களின் செம்மையான கட்டுரைகள் அடங்கிய "மணற்கேணி" நூல் பகிர்வு (பகிர்வு என்பதே சரியான பெயராக இருக்கும், ஏனெனில் வெளியீட்டாளர்கள் காசு வாங்க மறுத்தார்கள்) நிகழ்வில் கலந்து கொண்டு வீடு வந்த பின் இந்தப் பகிர்வு.
நிறைய பதிவர்கள் சிங்கப்பூரில் இருந்து குபீரென்று கிளம்பிருப்பது நிகழ்ச்சியைப் பின்னால் இருந்து பார்க்கும்போது புரிந்தது.கையில் கேமரா மற்றும் மடிக்கணினி என்று கலக்கிக் கொண்டிருந்தார்கள். சற்றே ஓய்வில் இருக்கும் பழைய பதிவர்களையும் பார்க்க முடிந்தது - குறிப்பாக, செந்தில்நாதன் மற்றும் அருள் குமரன்.
ஜெயந்தி சங்கர் , சித்ரா ரமேஷ் போன்றவர்களை சற்றே ஓய்ந்திருக்கும் பதிவர்கள் வரிசையில் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை. அவ்வப்போது சிக்சர் அடிக்கும் யுவராஜ்சிங் போல் , அவ்வப்போது பதிவு போட்டு விடும் திறன் இவர்களுக்கு அதிகமாகவே உண்டு.
வேண்டுமானல் பழைய பதிவர்கள் வரிசையில் சேர்க்கலாம். சித்ரா மற்றும் ரம்யா நாகேஸ்வரனின் வீடுகளில் நடந்த பழைய பதிவர் சந்திப்புகளும், அங்கு சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜிகளும் இன்னும் ஞாபகத்தளங்களில் தங்கி இருக்கின்றன. குறிப்பாக ஒரு சந்திப்பில் நடந்த 'தமிழா' நூல் விற்பனையை அதில் பங்கேற்ற் பலரும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை.
அதில் கலந்து கொண்ட அல்வா சிட்டி விஜய் இப்போது எங்கு, எப்படி இருக்கிறார்? சென்னையில் என்றார் குழலி. விஜய்க்கு வலுவான, இலகுவான உருண்டோடும் எழுத்துநடை. எவ்வளவு சாப்பிட்டாலும் செரிக்கும். நித்யானந்தர் பற்றி சுவாரஸ்யமாக ஏதாவது சொல்லி இருப்பார். தேடிப் பார்க்க வேண்டும்.
ஆர்பாட்டமாகத் துவங்கிய அந்தக்கால (ரொம்ப அதிகம் இல்லை ஜென்டில்மேன் 2005கள்தான்) பதிவர்களின் செயல்பாடுகளை நேரில் பார்த்த அனுபவம் எனக்கு இருக்கிறது. வுட்லாண்ட்ஸ் நூலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தாங்கள் செய்யவிருப்பதாக அவர்களிட்ட பட்டியலின் சில காரியங்கள் இன்றும் ஞாபகத்தில் இருக்கின்றன. இப்போது வந்திருக்கும் சிங்கப்பூர் பதிவர்கள் செய்து முடிப்பவர்களாக இருக்கிறார்கள்.நம்பிக்கையளிக்கிறார்கள்.
இவர்கள் வெளியிட்டிருக்கும் 'மணற்கேணி' ஒரு புதிய திசையின் துவக்கம்.