Friday, December 19, 2008

ஒரு செப்டம்பர் மாத காலையும், சில்க் ஸ்மிதாவும் (நாலு வார்த்தை-020)1996ம் வருட செப்டம்பர் மாதக் காலை. தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதா, தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆள்த்துகிறது. எனக்குள்ளும் அந்த அதிர்ச்சி பரவியது. எதிர்பாராமல் நிகழும் மரணங்கள் வாழ்க்கையின் நிலையின்மை குறித்தும், இருப்பு குறித்தும், முன்னுரிமை தர வேண்டிய செயல்கள் குறித்தும் மறுபார்வை செய்யத் தூண்டும் வலுவுள்ளவை. அந்த மரணங்கள் நம் பிரியத்திற்குள்ளவர்களுடையதாக அல்லது அபிமானத்திற்குள்ளதாக அமையும்போது அந்தத் தாக்கம் நீண்ட வடுக்களை விட்டுச் செல்கின்றன. 'சில்க் ஸ்மிதாவுடன் ஒரு கற்பனைப் பேட்டி' என்ற எனது கவிதைப் பதிவின் மீதான நண்பர் ஷானவாஸின் பின்னூட்டம், அந்த செப்டம்பர் மாதக் காலையை மீண்டும் ஞாபகப்படுத்தியது. ஒரு கவர்ச்சி நடனக்காரி என்ற அடையாளத்தையும் மீறி, சில்க் ஸ்மிதா பலரையும் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருப்பதை நம்மில் பலரும் உணர்ந்திருக்கிறோம். பெண்களும் அவரது அபிமானிகளாக இருப்பது ஆச்சரியத்தையும், அதற்கு என்ன காரணம் என்ற துணைக் கேள்வியையும் எழுப்புகிறது. விதவிதமான பிம்பங்களை சில்க் வெவ்வேறு மனிதர்களிடம் விட்டுச் சென்றிருக்கிறார். என்னுள் இருந்த சில பிம்பங்கள் ஒரு கவிதையாக வெடித்தது. அந்தக் கவிதையின் கடைசி வரிகள் இப்படி அமைந்தன...

/பகல், இரவு - இந்த இரண்டில் உங்களுக்குப் பிடித்தது எது? பகல் என் உடல் மீது வெப்பம் பொழிந்தது. இரவில் என் மனம் வேதனை வெப்பத்தால் உருகி வடிந்தது. எனவே, இரண்டின் மீதும் இச்சையில்லை எனக்கு./ /இச்சை என்றதும்தான் ஞாபகம் வருகிறது. கச்சை கட்டிய உங்களது கட்டழகு உடல் மீது இச்சை கொண்டு, காதல் பிச்சை கேட்டலைந்த காளையர்கள் பற்றி.... பச்சையாக சொல்வதென்றால், பரிதாபத்திற்குரியவர்கள்!/ /கற்பைக் பற்றி உங்கள் கருத்தென்ன? ஆண்களுக்கும் மிக அவசியமான ஒன்று./ /இன்னொரு பிறவியெடுக்கும் எண்ணம் உண்டா? உண்டு. ஆனால் அதில் ஆணாய் மட்டுமே அவதரிப்பேன்./ /ஏன்? அவர்களுக்குத்தானே சேலைகளும் கிடையாது... துகிலுரிப்பும் கிடையாது./ /எங்களுக்கு ஏதேனும் செய்தி சொல்ல விரும்புகிறீர்களா? இது மேலோகம். இங்கு கிசுகிசுக்கள் கிடையாது!/ இவையெல்லாம் சில்க்கைப் பற்றி நானாக அவதானித்துக் கொண்ட பிம்பங்களின் பிரதிபலிப்புகள். விரும்பியோ, விரும்பாமலோ, அடுத்தவரின் தனிவாழ்க்கை, அந்தரங்கம் பற்றி நமக்குள் சில தீர்மானங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அந்த அடுத்தவர், ஒரு பிரபலப் புள்ளியாக இருந்துவிட்டால், அவரது அந்தரங்கத்தை ஆடையுரித்து நம் வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்து விடும் வேலையைச் செய்து விடுகின்றன ஊடகங்கள். சமீபத்திய தீவிரவாதம் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, அடுத்தவரின் அந்தரங்கத்திற்குள் அத்துமீறி நுழைவதுகூட தீவிரவாத மனோபாவத்தின் இன்னொரு முகம் என்ற எண்ணம் தோன்றியது. அப்படியென்றால், நடிகர், நடிகைகளின் அந்தரங்கத்தில் சதா மூக்கை நுழைக்கும் வெகுஜனப் பத்திரிக்கைகளையும், சக ஊடகங்களையும் எப்படி வகைப்படுத்துவது?

பத்திரிக்கை தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர் சில்க் ஸ்மிதா. தொடர்ந்து நிகழ்த்தப் பட்ட சிதைவுகளின் மொத்த விளைவாக முடிந்தது சாலிகிராமத்தின் 1996ம் வருட செப்டம்பர் மாதக் காலை. அந்தநாள் வருவதற்குள்...ஆந்திர மாநிலத்தின் இளிரு கிராமத்தில் பிறந்து, வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சில்க் ஸ்மிதாவாக உருவெடுத்த விஜயலக்ஷ்மி ஒரு நெடிய பயணத்தை முடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் சிலநூறு படங்களை நடித்து விட்டார். எல்லாப் படங்களும் அவரது கவர்ச்சியை முதலீடாக எடுத்துக் கொண்டாலும், சில படங்கள் நடிக்கவும் வாய்ப்பளித்தன. மூன்று முகம், மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களில் சில்க் ஏற்றுக் கொண்ட பாத்திரங்களை பலரும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். மூன்றாம் பிறையும், பொன்மேனி உருகுதே பாடலும் தமிழ்த் திரையுலகின் அழியாத சித்திரங்கள். மலையாளத் திரையுலகமும் சில்கிற்கு கவர்ச்சியும், நடிப்பும் சமஅளவில் கலந்த பாத்திரங்களை வழங்கியது. ஒரு பதின்ம வயது இளைஞன், தன்னை விட வயதுகூடிய பெண்களை விரும்பும் கதையம்சம் கொண்ட 'லயனம்' என்ற மலையாளப் படம் கேரளாவில் பெறு வெற்றி பெற்றது. 10 வருடங்களுக்குப்பின் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அங்கும் வசூலை அள்ளியது. அந்த வெற்றிக்கு ஆதாரமாக இருந்தது சில்கின் கவர்ச்சி. ஆனால், அந்தப்படத்தில் நடிந்த சில்க், அபிலாஷா, நந்து என்ற மூன்று நடிகர்களும் தற்கொலை செய்து கொண்ட துர்நிகழ்வை என்னவென்று சொல்வது?

சில்க் ஸ்மிதாவை தற்கொலைக்குத் தூண்டிய விஷயம் எதுவாகவும் இருக்கலாம்...அதைபற்றி ஊடகங்கள் போதுமான அளவில் அலசி ஆராய்ந்து விட்டன. அந்த அலசல்கள் திருப்பித் தரப் போவது எதுவுமில்லை - சில்க் மீதான ஞாபகங்களைத் தவிர. தமிழ்த் திரையுலகில் அவர் விட்டுச் சென்ற இடம் இன்றும்கூட நிரப்பப்படாத நிலையில், இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால்...என்ற யோசனை சில விநோத விடைகளைத் தருகிறது. அந்த 48 வயது சில்க் ஸ்மிதா ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக மாறி, ரஜினி கால்ஷீட்டிற்காக காத்திருக்கக் கூடும் அல்லது சின்னத் திரையில் ராடான் போன்றதொரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கக் கூடும் அல்லது இன்னும் கூட கவர்ச்சி நடிகையாகவே வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடும்... இப்படிப் பல கூடும்களுக்கு வழிவிடும் யூகம் இது. அடப் பாவமே...இருந்திருக்கலாமே என்று நினைக்க வைக்கும் யூகங்கள். சரிதானே, இருந்திருக்கலாமே ஸ்மிதா...

உலகின் அதிவேகத் தமிழர், குணாளன்! (நாலு வார்த்தை-019)1981ம் வருடம். அப்போது திரு.குணாளனுக்கு வயது 39. அந்த வயதில் 400 மீட்டர் தொலைவை ஓடி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் 48.8 விநாடிகள் மட்டும்தான். நம்ப முடிகிறதா? குணாளன், 1968-ம் ஆண்டு மெக்ஸிக்கோ ஒலிப்பிக்ஸில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.38 விநாடிகளில் ஓடி முடித்தவர். 33 ஆண்டுகள் அது சிங்கப்பூரின் தேசியச் சாதனையாக நிலைத்து நின்றது. சிங்கப்பூரின் தடகள சரித்திரத்தில் அவருக்கு ஒரு legendary place இருக்கிறது. தடகளத்தில் மட்டுமல்ல ; தனி வாழ்விலும் ஒரு சாதனையாளராக இருக்கிறார். இன்னும் சாதியே ஒழிந்திராத தமிழ்ச்சமூகத்தில் பிறந்த அவர், தனது மனைவியாகத் தேர்ந்தெடுத்தது ஒரு சீனப் பெண்ணை. இன்று - அவரது பெண் குழந்தைகளும், ஆஸ்திரேலியர் போன்ற வெளி நாட்டினரை மணந்து கொண்டிருக்கிறார்கள். 'நான் ஒரு சர்வதேசப் பிரஜை' என்று சிரித்தபடி சொல்கிறார் குணாளன். எத்தனையோ சாதனைகளுக்குப் பின்னும் அவரிடம் கர்வம் துளிகூட ஒட்டவில்லை. பணிவும் சிரிப்பும் அவருடன் பிறந்தவையோ என்று எண்ண வைக்கும் எளிமையோடு இருக்கிறார்.

பல பெரிய சாதனையாளர்களைப் போல், குணாளனது திறமையும் தற்செயலாகத்தான் அடையாளம் காணப்பட்டது. 17 வயதுவரை எதிர்காலம் என்னவென்று தெரியாத சராசரி மாணவர் அவர். படிப்பு அவருக்குப் பிடிக்கவில்லை.பறக்கும் பட்டாம்பூச்சிகளை விரட்டிக் கொண்டு ஓடுவதும், மரங்களில் ஏறி பழங்கள் பறிப்பதும், எந்த இலக்கும் இன்றி சுற்றித் திரிவதும், தனிமையில் இருப்பதுமே அவருக்குப் பிடித்தது. அப்படி, இப்படி என்று ஒரு வழியாகப் படிப்பை முடித்து, 1961 முதல் ஆசிரியராகப் பணியாற்றத்துவங்கினார். பள்ளி முடிந்தததும், அங்கு மற்ற ஆசிரியர்களோடு அவர் கால்பந்து விளையாடுவது வழக்கம். அப்படி கால்பந்து விளையாடும்போது, ஒருநாள் தற்செயலாக குணாளனைப் பார்த்தார் சிங்கப்பூர் தடகளக் கோச்சான, டான் யெங் யோங். ' இந்த இளைஞன் ஓடும் விதம் அசாதாரணமாக இருக்கிறதே' என்று அவருக்குத் தோன்றியது. குணாளனிடம் பேசினார்; தன்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளச் சொன்னார். 'இந்த வயதிலா..' என்ற குணாளனின் சிறு தயக்கத்திற்குப் பின், பயிற்சி துவங்கியது. இப்படியாக. தனது 21வது வயதில் ஓட்டப்பந்தய வீரராக வளர்சிதை மாற்றம் கண்டார் அவர். துவக்கத்தில், முறையான spikes கூட அவரிடம் கிடையாதாம். நண்பர்கள்தான் ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு ஒரு spike shoeவை வாங்கித் தந்தார்கள். 5 மாதப் பயிற்சியிலேயே 100, 200, 400 மீட்டர்களை சாதனை நேரங்களில் ஓடத் துவங்கினார் குணாளன்.

சர்வதேச அரங்கிலும் அவர் மேல் வெளிச்சம் விழத்துவங்கியது. வருடங்களின் ஓட்டத்தில், பல சிங்கப்பூர் மற்றும் ஆசியான் (ASEAN) ஓட்டச் சாதனைகள் அவரால் மாற்றி எழுதப்பட்டன. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் உச்ச வருடங்கள் சில உண்டு. குணாளனைப் பொறுத்தவரை, 1960களின் மத்தியில், தனது ஓட்டத்திறனின் உச்சத்திலிருந்தார். அந்த காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றில், 2 நிகழ்வுகள் முக்கியமானவை. முதல் நிகழ்வு - 1966ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிச்சுற்று. தங்கப் பதக்கத்தை வெல்லப் போவது யார்? சிங்கப்பூரின் குணாளனா, அல்லது மலேசியாவின் மணி ஜெகதீசனா? ஒட்டு மொத்த ஆசியாவே ஆர்வத்தோடு உற்றுப் பார்த்தது. Photo Finish-ல் மணி ஜெகதீசனுக்குத் தங்கம் போனது. அந்த Photo Finishஐத் தனது கணினியில் சேமித்து வைத்திருக்கிறார் குணாளன். அதைக் காட்டிப் பேசும்போது அவரது குரலில் ஒரு மெல்லிய சோகம் ஒலிப்பதை உணர முடிந்தது. இரண்டாம் நிகழ்வு - 1968ம் ஆண்டு மெக்ஸிக்கோ ஒலிம்பிக்ஸ். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரை இறுதிச் சுற்று. அமெரிக்க, ஐரோப்பிய வீரர்கள் மத்தியில் சீறிப்பாயக் காத்திருக்கும் சின்ன சிறுத்தையாய் குணாளன். அங்குதான் அவர் 10.38 விநாடிகளில் ஓடி சாதனை நிகழ்த்தினார். 33 ஆண்டுகள் நிலைத்திருந்த அந்தச் சாதனையை, 2001ம் ஆண்டு ஷியாம் 0.01 விநாடிகளில் முறியடித்தார்."அதில் எனக்கு வருத்தமில்லை. அந்த ஒரு சாதனையின் மூலம் எனக்கு 33 ஆண்டுகள் விளம்பரம் கிடைத்திருக்கிறது. அது அதிகம்." என்கிறார் குணாளன் சிரித்துக் கொண்டே.

1969 & 1970ம் வருடங்களின் Singapore sports person of the year awardஐப் பெற்ற குணாளன், தனது 33வது வயதில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சீன இனத்தவரான தனது மனைவியின் ஆதரவே தன்னை இந்த அளவு உயர்த்தி இருப்பதாகக் கூறுகிறார். தாத்தா பாட்டி ஆகி விட்ட அவர்களுக்கிடையில் வற்றாத காதல் நதி ஓடிக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் காணாமல் போய் விடுவார்கள். குணாளன், தனது 30களில் கல்லூரியில் சேர்ந்து படித்து, பட்டம் பெற்று, இன்று உதவிப் பேராசியராகப் பணியாற்றுக்கிறார். Functional Anatomy & Exercise physiology பாடம் எடுக்கிறார். அவர் பெற்றிருக்கும் பட்டங்களின் பட்டியல் அவரது பெயருக்குப் பின்னால் நீள்கிறது. இன்றும்கூட அவர்தான் உலகின் அதிவேகத் தமிழராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவேளை, அதிவேக இந்தியராகக் கூட இருக்கக் கூடும். (இணையத்தில் தேடிப் பார்த்ததில் சரியானத் தகவலைப் பெற முடியவில்லை) குணாளனிடம் பேசும்போது, இன்னும் பல குணாளன்கள் தமிழ்ச் சமூகத்திலிருந்து முளைத்து வர வேண்டுமென்ற ஆர்வம் அவரது குரலில் ஒலிக்கிறது. இதோ... இப்போது எனது வரிகளிலும் அது எதிரொலிக்கிறது.

Thursday, December 18, 2008

மலேசியப் பத்திரிக்கைகளும், ஒரு இலக்கியச் செடியும்!(நாலு வார்த்தை-018)

சமீபத்திய மலேசிய வலைப்பதிவாளர்கள் சந்திப்பைப் பற்றிய பதிவில், மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையொன்றின் மீதான விமர்சனத்தைப் பார்த்தேன். அது- மலேசியப் பத்திரிக்கைகளோடு எனக்கிருந்த பழைய தொடர்புகளை ஞாபகப்படுத்தியது. அமரர் ஆதிகுமணனின் முயற்சியில் உருவான மலேசிய எழுத்தாளர் சங்கக் கட்டிடத் திறப்புவிழாவின் போதுதான் அந்தத் தொடர்புகள் துவங்கின. ஆதிகுமணன், மலேசிய நண்பன் நாளிதழின் ஆசிரியராக இருந்தாலும், அதைப் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டது கவிஞர் அக்கினி என்ற சுகுமாரன்தான். இவர் பின்னாளில் இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்து, அந்த அனுபவங்களைத் தொடர் கட்டுரையாக எழுதினார். ஆதிகுமணன் தெளிவான சிந்தனையாளர். மலேசியத் தமிழ் மக்களின் நன் மதிப்பைப் பெற்றவர். எந்த நிர்பந்தங்களுக்கும் வளைந்து கொடுக்காதவர். ஆதி, மலேசிய நண்பன் ஞாயிறுப் பதிப்பில் 'ஞான பீடம்' என்ற தலைப்பில் கேள்வி - பதில் எழுதுவார். அதைப் படிப்பதற்காகவே பலரும் மலேசிய நண்பனை வாங்கினார்கள். 'சூரியன்' மாத இதழ், அப்போதும், இப்போதும் வாசகர்களை மையமாகக் கொண்டு, அவர்களோடு நேரடித் தொடர்பு என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இயங்கி வருகிறது. அதன் ஆசிரியர் ராமதாஸ் மனோகரன் மீது வாசகர்களுக்கு மதிப்பும் மரியாதையும் நேரில் பார்த்திருக்கிறேன்.

மக்கள் ஓசையில் (இப்போது நாளிதழாக வெளி வருகிறது) குருசாமி ஆசிரியராக இருந்தபோது எழுத்தாளர்களுக்கு நிறைய சுதந்திரத்தை வழங்கினார். எழுத்தாளர்களும் அந்த சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்தினார்கள். 96-97-ல் மக்கள் ஓசை இலக்கிய சர்ச்சைகளுக்கு நிறைய இடமளித்தது. அப்போது 'மண்ணும் மனிதர்களும்' தொடரை எழுதிக் கொண்டிருந்த சை.பீர்முகமது, விமர்சன வீச்சின் அனல் தாங்க முடியாமல் எழுத்து வனவாசம் போவதாக அறிவித்தார். எனக்கும், சிறுகதை மன்னர் எம்.ஏ.இளஞ்செல்வனுக்கும் கூட ஒரு இலக்கிய சர்ச்சை நடந்தது. அவரது தயவற்ற விமர்சனம் ஒன்றின் மீது, 'இலக்கியச் செடிகளின் வேர்களில் தண்ணீர் ஊற்றாவிட்டாலும் பரவாயில்லை; தயவு செய்து வெந்நீர் ஊற்றாதீர்கள்' என்று நான் கருத்துரைத்தேன். தற்போதைய தென்றல் வார இதழின் ஆசிரியர் வித்யாசாகர் வரிந்து கட்டிக் கொண்டு இளஞ்செல்வனுக்கு ஆதரவாக எழுதினார்.'ஊனமற்ற எம்.ஏ.இளஞ்செல்வனுக்கு நீங்கள் ஏன் ஊன்றுகோலாக இருக்க ஆசைப்படுகிறீர்கள்' என்று அவருக்கு பதில் எழுதினேன். ஆனால், இதைப் போன்ற சின்னச் சின்ன சர்ச்சைகளை எல்லாம் மீறிய அன்பும், அன்யோன்யமும் எழுத்தாளர்களுக்கிடையில் இருந்தது. நாலைந்து வருடங்களுக்குப் பிறகு மலேசிய எழுத்தாளர் மு.அன்புச்செல்வனை சிங்கப்பூரில் சந்தித்தபோது,'அப்போ இருந்த துடிப்பும், உயிர்ப்பும் இப்ப இல்லைங்க' என்றார்.

ஆதிகுமணனின் மூத்த சகோதரர் இராஜகுமாரன் தன்னை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாத திறமைசாலி. தனது 'நயனம்' வார இதழைத் தரமாக நடத்தி வருபவர். சிங்கப்பூரின் இந்திரஜித் உட்பட பல நல்ல பத்திரிக்கையாளர்களை உருவாக்கியவர். சிங்கப்பூரின் இலக்கிய வரலாற்றிலும், தமிழ்க் கணினி வரலாற்றிலும் குறிப்பிடத்தக்கவரான அமரர் நா.கோவிந்தசாமியோடு ஆழமான நட்பும் அவருக்கு இருந்தது. ஆதிகுமணனின் மரணம் அனைத்து மலேசியத் தமிழர்களைப் போல அவருக்கும் பெரிய இழப்புதான். வடமாலை அவர்களால் நடத்தப்பட்டு வந்த 'அரும்பு' வார இதழ் ஆசிரியர் பி.கே.ராஜன் மறக்க முடியாத பெயர். 'அரும்பு' வாரஇதழ்தான் மலேசியாவில் நடந்த 'சரத்குமார் - நக்மா' சங்கதிகளை வெளிப்படுத்தியது. அதை அப்படியே வெட்டியெடுத்து அட்டைப் படமாக்கி பரபரப்பு கிளப்பியது குமுதம். எப்போதும் 'ஸ்டெடியான' மன்னன் மாத இதழ் பல வருடங்கள் மலேசிய இளைஞர்களின் நாடித் துடிப்பாக இருந்து வருகிறது. தனக்கென்று தனி பாணியை உருவாக்கி அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருபவர் அதன் ஆசிரியர் எஸ்.பி.அருண். இவரது தலையங்கங்கள் வெகு தைரியமானவை. இந்திய சமூகத்தின் நாடித் துடிப்பாக இருந்தவை.அவரது கேள்வி-பதில் அங்கத்தைப் படிக்கையில் ஒரு முறையாவது சிரிக்காமல் இருக்க முடியாது. வலிமையும், இனிமையும் இணைந்த எழுத்துத் திறன் எத்தனை பேருக்கு வாய்க்கிறது?

தற்போது தமிழ்நேசன் ஞாயிறு பதிப்புக்கு பொறுப்பு வகிப்பவர் சந்திரகாந்தம். தமிழ்நேசன் நீண்ட பாரம்பரியமுள்ள நாளிதழ். டத்தின்ஸ்ரீ இந்திராணியின் பராமரிப்பில் இருக்கும் அதற்கென்று பிரத்தியேக வாசகர்கள் உண்டு. தினமும் சிங்கப்பூரில் விநியோகிக்கும் அனுமதி உள்ள ஒரே மலேசியத் தமிழ் பத்திரிக்கை இதுதான். மலேசியாவில் காலகாலமாக பல நாளிதழ்கள்,வார,மாத இதழ்கள் தோன்றியும், மறைந்தும் இருக்கின்றன.மறைந்தாலும்,தமிழ்மலர் போன்ற சில பத்திரிக்கைகள் சில சரித்திரத் தடங்களையும் விட்டுச் செல்கின்றன. மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் நம்பிக்கையளிக்கும் புதிய வரவுகளில் பலரும், இப்படிப்பட்ட பத்திரிக்கைகளின் ஊக்கத்தில் உருவாகி வந்திருப்பதுதான் மலேசியாவின் எதிர்காலத்திற்கு ஜே சொல்ல வைக்கும் முக்கிய அம்சம்..

Wednesday, December 17, 2008

கோலிவுட்டின் கதவுகளைத் தட்டும் மலேசிய, சிங்கப்பூர் கரங்கள் (நாலு வார்த்தை-017)யோகி பி இசைக்குழு. சமீபகாலமாக கோலிவுட்டில் பலராலும் உச்சரிக்கப்படும் பெயர் இது. "மடை திறந்து ஓடும் நதியலை நான்" என்ற ரீமிக்ஸ் பாடல் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ்ச் சினிமா ரசிகர்களை கவர்ந்த இந்த மலேசியக்குழு, இசையுலகில் புதிய அலைகளை எழுப்பி வருகிறது. தங்களுக்கென்று சுய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர்களை கோலிவுட்டில் பலரும் மரியாதையோடு பார்க்கிறார்கள். இவர்களுக்கு முன்னோடி மலேசியா வாசுதேவன். 16 வயதினிலே படத்தில் தன் கலைப்பயணத்தைத் துவங்கிய அவர், தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்திருக்கிறார். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் மனதில் கோலிவுட் கனவை விதைத்தது மலேசியா வாசுதேவனின் வெற்றிப் பயணம்.

சிங்கப்பூரிலிருந்து விமானம் ஏறிப் போய் கோலிவுட்டின் கதவுகளைத் தட்டியவர்கள் பலர். சிலருக்கு அதன் கதவுகள் திறக்கவும் செய்தது. முதல் மரியாதை திரைப்படத்தின் மூலம் 'அந்த நிலாவைத்தான் கையில பிடிச்ச' சிவரஞ்சனி கொஞ்சகாலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். முகமது ர·பி "ஜும்பலக்கா, ஜும்பலக்கா" என்று ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கலக்கியபோது, பலரும் அவரை நம்பிக்கையோடு அண்ணாந்து பார்த்தார்கள். ஆனால் அந்தப் பாடலோடு அவரது இசைப்பயணம் முடங்கிக் கிடக்கிறது. இடையில் என்ன நடந்தது? கோலிவுட்டில் சாதிக்க திறமையைத் தவிர வேறு சில விஷயங்களும் தேவைப்படுகிறதா? இன்றும் விடை சொல்லப்படாத கேள்வி இது. சிங்கப்பூர் பாடகர் இர்பானுல்லாவிடம், கோலிவுட் வாய்ப்புகளைப் பற்றிப் பேசும்போது அவரது குரலில் ஒரு வித விரக்தி வெளிப்பட்டதைப் பார்த்தேன். அந்த முயற்சிகள் சோர்வளிப்பதாகச் சொன்னார். சரோஜா படத்தில் மாடில்டா என்ற சிங்கப்பூர் பெண்ணுக்கு பாட வாய்ப்பளித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அது நம்பிக்கையளிக்கிறது.

அண்ணாமலை, சித்தி போன்ற தொடர்கள் மூலம் சின்னத் திரைக்குள் நுழைந்து சிங்கப்பூர் கலைஞர்கள் சார்பில் பிள்ளையார் சுழி போட்டவர் மஞ்சரி. 'கோலங்களில்' இவரது காலங்கள் கழிந்து விட்டது. பெரியதிரை இவருக்கு பிடிபடவில்லை. சிங்கப்பூர் ஊடகத்துறையில் பெற்ற அனுபவத்தை மூலதனமாக வைத்து தமிழகச் சின்னத்திரையில் நுழைந்து, இன்று தனக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் ஆனந்தக் கண்ணன். தமிழ் பேசுவது தப்பில்லை என்று சிரித்துச் சிரித்தே தமிழகத்திற்குச் சொல்லித் தந்து கொண்டிருக்கிறார் என்பது இவரது சிறப்பு.

ஒலி 96.8ன் மூலம் சிங்கப்பூர் நேயர்கள் பலரையும் கவர்ந்து, மலேசிய வாசுதேவனின் மகன் யுகேந்திரனின் மனதையும் கவர்ந்து, தமிழகச் சின்னத்திரையில் நிகழ்ச்சி படைப்பாளராக வலம் வருபவர், மாலினி என்ற ஹேமாமாலினி.நடன அமைப்பாளர் மணிமாறன், நடிகர் ஜேம்ஸ் துரைராஜ் போன்றவர்கள் தமிழ்த்திரையில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்தாலும், அந்த வேடங்களைப் பெறுவதற்குக்கூட அவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. தமிழகச் சின்னத்திரையில் மதியழகன் போன்ற சிங்கப்பூர் கலைஞர்களுக்கு ஓரளவு வாய்ப்புகள் கிடைத்தாலும், கோலிவுட் என்ற பெருங் கடலில் நீந்த முடியாமல் திரும்பி வந்தவர்களும், அதில் நீந்திக் கரை சேர முடியுமா என்று தயங்கி நிற்பவர்களும் பலர். சமீபத்தில் சிங்கப்பூரின் வசந்தம் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு நேரத்தை அதிகரித்துள்ள சூழலில், தமிழகத்தில் தங்களது திறன்களைக் கூர்தீட்டிக் கொண்ட கலைஞர்கள், சிங்கப்பூரில் அந்த திறன்களை வெளிப்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு சிங்கப்பூர் ரசிகர்கள் மத்தியில் நிறையவே இருக்கிறது.

Tuesday, December 16, 2008

Rags to Riches - ஒரு சிங்கப்பூர்த் தமிழரின் கதை (நாலு வார்த்தை-016)திரு.அப்துல் ஜலீல். அவரது நிறுவனம் MES Group of Companies. இந்த இரண்டு பெயரும் சிங்கப்பூர் இந்தியர்கள் மத்தியிலும் மற்ற இனத்தவர்கள் மத்தியிலும் பிரபலமான ஒன்று. சிங்கப்பூரில் உள்ள ஆயிரமாயிரம் இந்தியர்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது திரு.அப்துல் ஜலீலின் வாழ்க்கைக் கதை. ஒட்டுக்கடை என்றழைக்கப்படும் பெட்டிக்டையில்தான் இவரது வாழ்க்கை துவங்கியது. தாயும், சகோதரிகளும் இந்தியாவில் தங்கிவிட, இவரும், இவரது தந்தையும் சிங்கப்பூரில் தனிமையில். இளம்வயது அப்துல்ஜலீல், கடைகளை சுத்தம் செய்தார்; கார் கழுவினார்; வாசனைத் திரவியங்கள் விற்றார்; டிரைவராகப் பணிபுரிந்தார்; எந்திரங்களைப் பாதுகாக்கும் வாட்ச்மேனாகப் பணிபுரிந்தார். அந்த வாட்ச்மேன் வேலைதான் அவரது வாழ்க்கையை மாற்றியது. எந்திரங்களை maintenance செய்யும் காண்ட்ராக்ட் கிடைத்தது. Piling வேலை நடக்கும்போது சாக்கடைகளை அடைத்துக் கொள்ளும் மணலை அகற்றும் காண்ட்ராக்ட் கிடைத்தது. நிறைய ஆட்களை வேலைக்கு அமர்த்தினார். நிறுவனம் வேகமாக விரிவடைந்தது. சீக்கிரமே, 200 ஆட்கள் 2000 ஆட்களானார்கள். அவர்களை தங்க வைப்பதற்கு சரியான இடமின்றி சிரமப்பட்ட போதுதான் Dormitries தொழிலில் தற்செயலாகக் கால்பதித்தார் திரு.அப்துல்ஜலீல். இன்று அந்தத் தொழில் பரந்து விரிந்து உயர்ந்து, அவரையும் உயர்த்தி நிற்கிறது. இதெல்லாம், நான் அவரைப் பேட்டி காண வாய்ப்பு கிடைத்தபோது, திரு.அப்துல்ஜலீல் சொன்ன விஷயங்கள். அவர் மேலும் சில முக்கியமான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்...

"நாங்கள் கட்டிய முதல் டார்மெட்ரியில் 3000 பேர் தங்க வசதியிருந்தது. அதற்கப்புறம் நிறைய டார்மெட்ரிகள். அந்தத் தொழில் வளர்ந்தது. இன்றும் கூட தொழிலாளர்கள் தங்குவதற்கு அவ்வளவு சுலபமாக இடம் கிடைப்பதில்லை. எங்களது தேவைக்காக தொடங்கிய ஒன்று, ஒரு தொழிலாக மாறி இருக்கிறது. இப்போது எங்களுடைய 4 டார்மெட்ரிகளில் 25000 தொழிலாளர்கள் தங்கியிருக்கிறார்கள். இன்னும் 25000 பேர் தங்க வைக்கக்கூடிய அளவு டார்மெட்ரிகளை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அபுதாபியில் BCAவோடு சேர்ந்து ஒரு டார்மெட்ரி கட்டிக் கொண்டிருக்கிறோம்.ஓமான் நாட்டிலிருந்தும் அழைப்பு வந்திருக்கிறது.ஆனால்,எனக்கு பெரிய ஆசைகளோ, தேவைகளோ கிடையாது. இப்போது இருப்பதே போதுமானது என்று நினைக்கிறேன்.

கடவுள் நம்பிக்கை முக்கியம். சுய ஒழுக்கம் மிக முக்கியம். ஆனால், சமூக சேவையில்தான் நிஜ திருப்தி கிடைக்கும் என்று நம்புகிறேன். என் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். இளம்வயதில், நான் தேர்ந்தெடுத்த நண்பர்களெல்லாம் என்னை விட வயது கூடியவர்கள். அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பேன். அதில் நிறைய அர்த்தமுள்ள விஷயங்கள் கிடைக்கும். இன்று - 50 வயதில், என்னை விட வயது குறைந்தவர்களோடு நட்பாக இருக்க ஆசைப்படுகிறேன். அப்போதுதான் இன்றைய உலக நிலவரங்களை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். எந்த நிலையிலும், நாம் நாமாக இருப்பது முக்கியம். என் பழைய வாழ்க்கையைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வியாபாரத்தில் சிலமுறை நாம் தோற்க நேரலாம். அதற்காக மனம் தளரக் கூடாது. ஒரு நல்ல வியாபாரிக்கு நஷ்டத்திலிருந்து எப்படி மீண்டு வருவதென்று நன்றாகத் தெரியும்.

இளைஞர்களுக்கு அறிவுரை சொல்ல, நான் எப்போதுமே தயார்.பிள்ளைகள் எதை விருப்புகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து அதில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் அவர்களுக்கு அடிப்படை ஒழுக்கத்தைக் கற்றுத் தருவது அவசியம் என்று நினைக்கிறேன்.சிங்கப்பூரில் ஏராளமான வியாபார வாய்ப்புகள் உள்ளன. கழிவுகளை சுத்திகரிக்கும் தொழில் அதிலொன்று. நமது இளைஞர்கள் அதில் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன். நேரம்தான் சிறந்த மூலதனம்.எந்தத் தொழிலைச் செய்தாலும் நம் முழு மனதும் அதில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். நாம் சமூகத்திற்கு என்ன கொடுத்தாலும், கடவுள் அதைவிட பல மடங்கு நமக்குத் திருப்பிக் கொடுக்கக் காத்திருக்கிறார். சிலர் கொடுப்பதற்கான வரம் வாங்கி வந்திருக்கிறார்கள். நான் என்ன சம்பாதித்தாலும், இன்றும் கூட என் ஒரு நாள் செலவு 10 வெள்ளிதான்." பலநூறு மில்லியன் டாலர் மதிப்புள்ள தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபரான திரு.அப்துல்ஜலீலிடம் பேசி விட்டுத் திரும்பியபோது, மூடிக்கிடந்த சில மனக்கதவுகள் பெருத்த ஓசையோடு திறந்து கொண்டன.அந்த கடைசி வரி, திரும்பத் திரும்ப மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Sunday, December 14, 2008

சசிக்கலா மாலா, நீ விட்டதெல்லாம் பீலா...(நாலு வார்த்தை-015)

நீண்ட இடைவெளிக்குப்பின், மறுபடியும் பதிவுகளை இடத் துவங்கிய 10 நாட்களுக்குள், நான் வாழ்ந்திருந்த பழைய இடங்களைச் சார்ந்த இருவர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். எண்ணூரைச் சார்ந்த ஒருவர் இணையத்திலும், இராயப்பன்பட்டி அலோசியஸ பள்ளியில் படித்த ஒருவர் நேரிலும் என்னோடு பேசினார்கள். எண்ணூரைச் சேர்ந்தவர் ETPS கேம்பில் உள்ள திருவள்ளுவர் தொடக்கப்பள்ளியில் படித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். நானும் அங்கு 5ஆம் வகுப்பு படித்தேன். காயத்ரி டீச்சர் எனக்குப் பாடம் எடுத்தார். அதிகம் பேசமாட்டார். ஆனால், அவரிடம் இருந்த பிரம்பு பலமாகப் பேசும். என்னோடு படித்த பர்மா நகர் அழகர், இளங்கோ, சசிக்கலா, லதா, முருகன், முருகனது தங்கை அம்சா, குப்பத்தில் இருந்த தேசிங்குராஜன் ஆகியோர் பெயரளவிலும், இளம் பிம்பங்களாகவும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறார்கள். நண்பரது மின்னஞ்சல் அவர்களையெல்லாம் ஞாபகப்படுத்தியது. அந்த வயதில் நடந்த ஓரிரு சம்பவங்களை இப்போது நினைத்தால் கொஞ்சம் ஆச்சரியமாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது.

மேற்குறிப்பிட்ட நபர்களில் அழகருக்கும், சசிக்கலாவுக்கும் ஆகவே ஆகாது. நான், சசிக்கலா, அழகர், லதா எல்லாம் கொஞ்சம் நன்றாகப் படிக்கிற சாதி. சசிக்கலாதான் கிளாஸ் லீடர். சர்வ அதிகாரம் படைத்த பெண். ஒருமுறை ஏதோ ஒரு தவறுக்காக டீச்சர் எல்லோருக்கும் கொட்டு வைக்கும்படி சொல்ல, வரிசையாக கொட்டிக் கொண்டு வந்த சசிக்கலா, அழகரை மட்டும் சும்மா டங்கென்று வலுவாகக் கொட்ட, வலி தாங்காமல் அழகர் சசிக்கலாவை பளாரென்று அறைய... பள்ளியே ரணகளமானது. ஏனென்ற காரணம் தெரியவில்லை; ஆனால், சசிக்கலாவைப் பிடிக்காத எதிரிகள் நிறையப்பேர் வகுப்பில் இருந்தார்கள். அவர்கள் சசிகலாவைப் பற்றி ஒரு பாட்டையே இயற்றி வைத்திருந்தார்கள். அந்தப் பாட்டு இதுதான் ... "சசிக்கலா மாலா... நீ விட்டதெல்லாம் பீலா" இந்த வரி பள்ளிச் சுவர்களில்கூட ஆங்காங்கே எழுதி வைக்கப்பட்டதாக ஞாபகம். நான் சசிக்கலாவை சரியாக நிமிர்ந்து கூட பார்த்ததில்லை. அந்தக் காலத்தில் பெண்களென்றால் அப்படியொரு வெக்கம். முருகன், சசிக்கலா இருவரது தந்தைமாரும் என் தகப்பனாரோடு பணியாற்றினார்கள். முருகன் என்னைப் போல் வெட்கமெல்லாம் படமாட்டான். அந்த வயதிலேயே அவனுக்கு சசிக்கலாமேல் ஒருவித ஈர்ப்பு இருந்தது. ஒரு முறை சசிக்கலா சாமிக்கு மாவிலக்கு எடுத்து எண்ணூர் வீதிகளில் ஊர்வலம் போனபோது, கவசகுண்டலம் மாதிரி என்னையும் அவனோடு சேர்த்துக் கொண்டு சசிக்கலா பின்னால் சுற்றினான் முருகன்.

காலங்கள் மாறின, காட்சிகள் மாறின. முருகனுடைய அப்பா வேலையை ராஜினாமா செய்து விட்டு, அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போய்விட, அவனது குடும்பம் ஊட்டிக்கு ஜாகை மாறியது. நாங்கள், தேனி மாவட்டம் லோயர்கேம்பிற்கு இடம் பெயர்ந்தோம். சசிக்கலாவின் தந்தை எண்ணூரிலேயே இருந்தார். அந்தக் குடும்பத்தில் நாலைந்து பெண் பிள்ளைகள் என்று நினைக்கிறேன். எல்லோரும் இப்போது குழந்தை குட்டிகளோடு நன்றாக இருக்கக் கூடும். இருக்க வேண்டுமென்று கடவுளை வேண்டுகிறேன். இளங்கோவும், அழகரும் (அழகர் டவுசரில் பட்டன் இருந்தாலும் அதை மாட்டாமல், டிரவுசரின் காதுகளை இழுத்து முடிச்சாகத்தான் போடுவான்) அவர்களது தாயகமான பர்மா நகரில்தான் இருக்க வேண்டும்.

எண்ணூர் அனல் மின் நிலையத்தின் பல குடியிருப்புகளும் இப்படிப்பட்ட பலரையும் பார்த்தவை, பல கதைகளை சுமப்பவை. அதன் காற்றில் பல ஆன்மாக்களின் சுவாசங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. கத்திவாக்கம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு நேர் எதிரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் நாங்கள் குடியிருந்தோம். சிறுமிகளாக இருந்த என் தங்கைகள் கீழே விழுந்து விடக்கூடாது என்ற கவலையில் கூடுதலாக இரண்டு இரும்புக் குழாய்களை பால்கனியில் தடுப்பாக வைத்தார் என் தந்தை.அந்தக் குழாய்கள் இன்றும் அங்கிருக்கக் கூடும். அல்லது எங்களைப் போலவே அவையும் இடம் பெயர்ந்திருக்கக் கூடும்.அந்த வீட்டிற்குக் குடிபோன புதிதில் இரவு நேரத்தில் தூங்க மிகவும் சிரமப்பட்டோம். காரணம் இரவில் பெருத்த ஓசையோடு கடந்து போகும் ரயில்கள். குறிப்பாக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் போகும்போது அந்தக் கட்டிடமே அதிரும். ஆனால், நாட்களின் ஓட்டத்தில் அது எங்களுக்கு பழகிப் போனது ; எங்களை உறங்க வைக்கும் தாலாட்டாகவும் ஆனது! இன்று அந்த நினைவுகளின் தாலாட்டில்.....

சென்னை மாநகரின் நெரிச்சலில் "வாரணம் ஆயிரம்" (நாலு வார்த்தை-014)

அன்புள்ள கெளதம் வாசுதேவ் மேனன்... இன்றுதான் 'வாரணம் ஆயிரம்' பார்த்தேன். படம் வெளியாகி சில வாரங்கள் ஆகியும் சிங்கப்பூர் தியேட்டர்களில் கணிசமான கூட்டம் இருக்கிறது. அயல்நாடுகளின் கலெக்ஷனைப் பொறுத்தவரை கட்டாயம் இது வெற்றிப் படம்தான் என்று நினைக்கிறேன். பத்திரிக்கைகள் உட்பட பல்வேறு ஊடகங்களும் பாராட்டுகளை பஞ்சமின்றி தெரிவித்திருக்கின்றன. சிங்கப்பூர் மக்களின் பாராட்டுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். கெளதம் மேனன் என்ற மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞரும், சூர்யா என்ற மிகச் சிறந்த நடிகரும் இணையும்போது இயல்பாக ஏற்படுகின்ற எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் படத்தை எடுத்திருக்கிறீர்கள். "அது யார்னு தெரியுதா" "எது" "அந்த வயசான ஆளு" "தெரியலையே" "அது சூர்யா..." "சூர்யாவா????!!!" பக்கத்து இருக்கையில் நான் கேட்ட டயலாக் இது. அங்கு தொடங்கியது உங்கள் அதிரடி ஆட்டம். நீங்கள் தைரியசாலிதான். சூர்யாவை துவக்க சீன்களிலேயே சாகடிக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்....நீங்கள் கிரிக்கெட் நன்றாக விளையாடுவீர்கள் என்று நினைக்கிறேன். தற்காப்பு ஆட்டமும், அதிரடி ஆட்டமும் சேர்ந்த கலவையாக அமைந்திருக்கிறது 'வாரணம் ஆயிரம்'.

படத்தை 10 segments ஆக பிரித்துச் செதுக்கி இருக்கிறீர்கள். ஒரு சிறுகதைத் தொகுப்பு மாதிரி என்று சொல்லலாம். ஒவ்வொரு segmentற்கும் ஒரு துவக்கம், ஒரு சிக்கல், ஒரு முடிவு. அந்த ·பார்முலாவை அடுத்தவர் அடையாளம் காண முடியாதபடி முடிச்சவிழ்த்திருக்கும் உங்கள் திறமை வியக்க வைக்கிறது. 1. முதியவர் சூர்யாவின் மரணத்திற்கு முந்திய நிமிடங்கள் 2. அவரது இளமைக் காலத் தருணங்கள் 3. மகன் சூர்யாவின் இளமை + கல்லூரி கால வாழ்க்கை 4. சமீரா ரெட்டியின் வருகையும், நீட்சியும் 5. சமீரா, சூர்யா - அமெரிக்க நினைவுகள் 6. சமிராவின் இழப்பும், சூர்யாவின் போதைத் தவிப்பும் 7. காஷ்மீரத் தேடல் + மோதல் 8. மேஜர் சூர்யா and his rescue operation 9. சூர்யா வாழ்க்கையில் வரும் மாற்றுப் பெண் 10. ஒரு மரணமும், ஜனனமும். பல சிறுகதைகள் பிரமாதம். சில சுமார் ரகம். ஒரு சில ஏதோ இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், பெற்றிருக்கும் மதிப்பெண்கள் கெளரவமாகத்தான் இருக்கின்றன.

சமீரா ரெட்டி - சூர்யா ஜோடி is a sweet cameo. திரும்பத் திரும்ப மெளனராகம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கார்த்திக் attack is the best form of defense என்று நடித்திருப்பார்; But Surya has shown controlled aggression. அடுத்து அதிகம் ஈர்த்தது - அப்பா சூர்யா. குறிப்பாக மரணத்திற்கு முந்திய மாதங்கள். யாருக்கும் பாரமாகி விடக்கூடாது என்ற தவிப்பு. மகன் மேல் காட்டும் கடைசி நேரக் கரிசனம். நடிப்பில் இன்னும் சில படிகள் உயர்ந்திருக்கிறார் சூர்யா. 'You are my hero daddy' 'i am in love with u' என்று உணர்ச்சியற்ற அல்லது உணர்ச்சி குன்றிய குரலில் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தைகள், தெருவில் கரைந்துவிடும் ராப்பிச்சைகாரனின் வார்த்தைகளாய் சிதறி விடுகின்றன.

ஹாரிஸ் ஜெயராஜைப் பிரிகிறீர்களா? நிச்சயம் அது ஒரு இழப்புதான் எல்லோருக்கும். பின்னணி இசையில் அவர் செலுத்தியிருக்கும் செல்லுவாய்ட் கவனம் பிரமாதம் என்ற வார்த்தையில் அடக்க முடியாதது. கேமராமேன் ரத்னவேல் வழி நெடுக கவிதைகளைத் தவழ விட்டிருக்கிறார். ஆனால், ஒரு ஹைவேயில் பெருத்த இரைச்சலோடு பயணம் செய்திருக்க வேண்டிய படம், சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிச்சலில் சிக்கி, பிரேக்கில் கால் வைத்தபடி பயணம் செய்திருப்பதன் காரணம் என்ன... சென்னையில் இன்னொரு மழைக்காலம் வரும் முன் இந்தக் கேள்விக்கான பதிலை கண்டுபிடித்து விடுவீர்கள் என்று நம்பும்... ஒரு தமிழ் நண்பன்!