Saturday, March 25, 2006

கதையல்ல : கற்பனையுமல்ல : அப்படியென்றால்...

(சில சமயங்களில் சில விஷயங்கள் மறுபடியும் பார்வையில் படுவதும், அதன் மீது, நமது நினைவுகளின் நிழல் மறுபடியும் விழுவதும் - நம்மையும் மீறி நடந்தே விடுகின்றன )

எதேட்சையாக இணையத்தில் சந்தித்துக் கொண்ட ஒரு சிங்கப்பூர் தமிழ் இளைஞனும்,இன்னொரு தேச தமிழ் பெண்ணும் பேசித் தொடங்கினார்கள். பேசித் தொடர்ந்தார்கள்.
இனி - அவர்கள் பேசியது!


"ஹாய்...டு யு லைக் டு சாட் வித் அன் இண்டியன் கைய் ·பிரம் சிங்கப்பூர்?""தாராளமாக. எனக்கும் தூக்கம் வரவில்லை. பேசலாம்."

"நீங்கள்?"

"நான் வித்யா. ஒரு நிறுவனத்தில் நிர்வாகியாக வேலை செய்கிறேன். வயது முப்பத்திஎட்டு. என் பெயரை வைத்து நானும் ஒரு இந்தியப் பெண் என்பதை யூகித்திருப்பீர்கள்"

"ஆச்சரியம்...நான் இணையத்தில் இந்தியப் பெண்களிடம் பேசியது மிகக் குறைவு.உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி. நான் வல்லாளதேவன். நீங்கள் என்னை தேவன் என்றுகூப்பிடலாம்."

"அழகான பெயர். உங்களைப் பற்றி மேலும் சொல்லுங்கள் தேவன்..."

"அப்பா இறந்து விட்டார். அம்மாவும் நானும் மட்டும்தான் இந்த வீட்டில் இருக்கிறோம்.ஒரு கட்டுமான நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்கிறேன். எனக்கு முப்பது வயதாகிறது."

"நிம்மதியான வாழ்க்கை. அது சரி, பார்க்க எப்படி - கமலஹாசன் மாதிரி இருப்பீர்களா?"

"அய்யோ... அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஒரு சராசரி இந்திய இளைஞன்தான்.ஐந்தடி ஒன்பதங்குல உயரத்தில், எழுபது கிலோ எடையில்..."

"இப்படி அடக்கமாகப் பேசும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள்இதுவரை எந்தப் பெண்ணின் வலையிலும் மாட்டவில்லையா?"

"உண்மையைச் சொல்வதென்றால், 'முன்பு' எனக்கொரு காதலி இருந்தார்.இப்போது இல்லை.அது கிடக்கட்டும்...நீங்கள் உங்களைப் பற்றி சொல்லுங்களேன்.."

"என்னைப் பற்றி...நான், அம்மா, அண்ணா என்று சிறிய குடும்பம். தங்கை கணவரோடு அமெரிக்காவில் இருக்கிறாள். மூத்தவளான எனக்கு இன்னும் திருமணமாகவில்லை.ஆனால் கனடாவில் எனக்கொரு காதலன் இருக்கிறார். நாங்கள் சீக்கிரமே திருமணம்செய்யப் போகிறோம்."

"உங்கள் காதலர் வெள்ளைக்காரராக இருக்க வேண்டும் என்பது என் யூகம்..."

"உங்கள் யூகம் சரிதான்"

"ஆக, இந்தியப் பெண்ணான நீங்கள் ஒரு வெள்ளைக்காரரை மணக்கிறீர்கள் ?"

"வெள்ளைக்காரர் என்பதை விட, ஒரு மனிதரை மணக்கிறேன் என்று சொல்லலாம். இனம், மதம். தேசம், மொழி என்பதெல்லாம் நாம் ஏற்படுத்திக் கொண்டதுதானே?இது இன்டெர்னெட் யுகம். இந்த யுகத்தின் இன்னும் சில வருடங்களில் நாடுகளும்,எல்லைகளும் இல்லாமல் போய் விடலாம். அப்போது அமெரிக்கர்கள், ஆப்பிரிக்கர்கள்,ஆசியர்கள் என தனியாக யாரும் இருக்கப் போவதில்லை. உலகம் முழுவதும் நல்லமனிதர்கள், கெட்ட மனிதர்கள் என்று இரண்டு பிரிவினர் மட்டுமே இருக்கப் போகிறார்கள்."

"ஆழமாக சிந்திக்கிறீர்கள் வித்யா. உங்கள் காதலரை இணையத்தின் மூலம்தான்சந்தித்தீர்களா?"

"ஆமாம். நாகரிகமான, அன்பான அவரது பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. புகைப்படங்களை பறிமாறிக் கொண்டோம். தொலைபேசியில் பேசிக் கொண்டோம். மெல்ல மெல்லதான் எங்கள் காதல் வளர்ந்தது."

"அவரை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?"

"போன வருடம் ராபர்ட் இங்கு வந்து ஒருமாதம் என்னோடு தங்கி இருந்தார். அந்தசந்திப்பு எங்கள் காதலை மேலும் வளர்த்தது. இப்போது என் மனம் முழுக்க அவர் மீதுகாதல் மட்டுமே நிரம்பிக் கிடக்கிறது."

"நீங்கள் சொல்வது சரிதான். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் காதல்தான் முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம்தான். நீங்கள் தப்பாக நினைக்காவிட்டால், நான் ஒன்று கேட்கட்டுமா ?"

"நாம் முகம் தெரியாத நண்பர்கள். தயங்காமல் கேளுங்கள்"

"நமக்கு - இந்தியர்களுக்கென்று சில ஒழுக்க வரையறைகள் இருக்கிறது. மேல்நாட்டவர்களுக்கு அப்படிக் கிடையாது."

"உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது. ராபர்ட் என்னோடு ஒருமாதம் தங்கி இருந்தாலும்இந்தியப் பண்புகளை நான் இழந்து விடவில்லை. எங்களுக்கிடையில் காதலும், காமமும்இருக்கத்தான் செய்தது. ஆனால், நாங்கள் எல்லை மீறிவிடவில்லை."

"ஆச்சரியமாக இருக்கிறது..."

"உண்மைதான் தேவன். நான் ஒரு இளைஞனை காதலித்திருந்தால், அவனது எதிர்பார்ப்புகள் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், என் ஐம்பத்தி இரண்டு வயது காதலரிடம் முதிர்ந்த கனிவுதான் இருக்கிறது."

"ஐம்பத்தி இரண்டா... வயது வித்தியாசம் அதிகமாகப் படவில்லை?"

"இல்லை. இரு கரைகளுக்கிடையில் அடங்கி ஓடும் ஆறு மாதிரி ஒரு கட்டுப்பாடான துள்ளலைதான் நான் ராபர்ட்டிடம் பார்க்கிறேன்."

"கவிதையாகப் பேசுகிறீர்கள் வித்யா. இதையெல்லாம் கேட்கும்போது, உங்கள் இருவரதுபுகைப்படத்தையும் பார்க்கவேண்டுமென்ற ஆசை வருகிறது..."

"ம்...நீங்கள் நல்லவர் என்று உள்மனம் சொல்கிறது. நான் உங்களை நம்பலாமா தேவன்?"

"நம்புங்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை?"

"ஓ.கே. நான் உங்களை நம்புகிறேன்.இதோ, நான் தருகிற முகவரியில் போய் பாருங்கள்.நான், ராபர்ட் உட்பட நிறைய புகைப்படங்கள் இருக்கிறது. ஆனால் நீங்களும் உங்களதுபுகைப்படத்தை இப்போதே எனக்கு அனுப்ப வேண்டும். அதுதான் நியாயம்."

"பிரச்சனையில்லை. இதோ அனுப்புகிறேன்"

"............"

"............"

"வித்யா, நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள். ஒரு சாயலில் நடிகை பானுப்பிரியாவைப்போல் இருக்கிறீர்கள்."

"பொய். இதே வசனத்தை இதுவரை எத்தனை பேரிடம் சொல்லி இருக்கிறீர்கள்?"

"நான் சொல்வது நிஜம். ராபர்ட் கூட இளமையாக, அழகாக இருக்கிறார்."

"நீங்களும்தான் தேவன். கைகட்டி, கராத்தே வீரரைப் போல் கம்பீரமாய் நிற்கிறீர்கள்"

"நன்றி வித்யா."

"தேவன்...உங்களது சினேகமான முகத்தில் களங்கமில்லா நட்பும், ஏதோ ஒருவித கவர்ச்சியும் தெரிகிறது."

"பாருங்கள்... நீங்களும் பொய் பேசுகிறீர்கள்...."

"ஹஹஹா... தேவன், நான் உங்களோடு பேசிக் கொண்டிருந்ததில் என் காதலருக்கு·போன் செய்ய மறந்துவிட்டேன். நாம் மீண்டும் பேசுவோம். இப்போது என்னை உங்கள்நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். நானும் அப்படியே செய்கிறேன்"

"ஆகட்டும் வித்யா"

________________________________________________


"ஹாய் தேவன்... என்ன நீண்டநாளாக ஆளையே காணவில்லை?"

"ஒரு பயிற்சிக்குப் போயிருந்தேன் வித்யா.அதுதான் காரணம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். உங்கள் ராபர்ட் எப்படி இருக்கிறார்?"

"ராபர்ட் நன்றாகத்தான் இருக்கிறார். ஆனால் எனக்குதான் இரண்டு நாள் சளி, காய்ச்சல்."

"அடடா....தூரத்தில் இருக்கிறீர்கள். பக்கத்தில் இருந்தாலாவது மருந்து கொடுத்துதைலம் தேய்த்து, கஞ்சியும் வைத்து கொடுத்திருப்பேன்"

"ஆஹா...எவ்வளவு அக்கறையான மனிதர்! அம்மாவும் அண்ணாவும் வெளியூர் திருமணத்திற்குப் போயிருக்கிறார்கள். பக்கத்தில் யாராவது இருந்து கவனித்துக் கொண்டால் நல்லது என்றுதான் தோன்றுகிறது."

"நாம் விளையாட்டாக பேசிக் கொண்டிருக்கிறோம். யார் கண்டது...ஒருநாள் நிஜத்தில்நாம் சந்தித்தாலும் சந்திக்கலாம். அது உங்கள் திருமணமாகக் கூட இருக்கலாம்"

"என் திருமணத்தில் என்னை சந்திப்பதென்றால் நீங்கள் கனடா வரவேண்டியிருக்கும்.வருவீர்களா?"

"ஆஹா...கனடாவிற்கு என்னால் வர முடியாது. ஆனால், கட்டாயம் ஒரு வாழ்த்து அட்டைஅனுப்ப முடியும்."

"இது நேர்மையான பதில். ஆனால் நம் இந்திய இளைஞர்கள் பலருக்கு இந்த நேர்மைஇருப்பதில்லையே தேவன்...அது ஏன்?"
"எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?"


"நான் சந்தித்த இளைஞர்களை வைத்து... ஒரு சில கயவர்களை வைத்து..."

"நீங்கள் யாராலோ காயப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கே தெரியும். ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை."

"புண்பட்டது ஒரு பக்கம் இருக்கட்டும். பொதுவாகவே இந்திய இளைஞர்களைப் பற்றிஎனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. அவர்களில் பலர் ஒரு பெண்ணின் ஆடையைத்திறக்கத் தவிப்பார்களே தவிர, அவளது மனதைப் பற்றி நினைப்பதேயில்லை."

"கசப்பான அனுபவங்கள் உங்களைப் புண்படுத்தி, இப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி இருப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் அதுதான் உண்மையாக இருக்க வேண்டுமென்றஅவசியமில்லை."

"என் அனுபவங்கள் தவிர, சக பெண்களின் அனுபவங்களை நிறைய கேட்டிருப்பதால்சொல்கிறேன்...நம்புங்கள் தேவன், இதுதான் உண்மை."

"சரி, நீங்கள் உங்களது முடிவில் இவ்வளவு தீர்க்கமாக இருப்பதால் சொல்கிறேன்...சென்ற வாரம் நான் நேரில் சந்தித்த இணையத்தோழியின் என்னைச்சார்ந்த அனுபவம்நீங்கள் நினைப்பதற்கு நேர்மாறானது."

"புரியவில்லை...கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் தேவன்"

"இதே சிங்கப்பூரில், நானும், ஒரு பிலிப்பைன் தேசத்துப்பெண்ணும் நீண்ட நாள் இணையநண்பர்கள். நாங்கள் நேரில் சந்தித்தது கிடையாது. அவள் ஒரு சிங்கப்பூரியனை மணந்துகொண்டிருக்கிறாள். சமீப காலமாக அவளது திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள்."

"ம்...அப்புறம்?"

"குடியுரிமை இல்லாததால், மூன்று மாதங்களுக்கு ஒர் முறையாவது சிங்கப்பூரை விட்டு வெளியேருவது அவளது வழக்கம். பெரும்பாலும் பக்கத்திலிருக்கும் மலேசியாவின்ஜோகூர்பாருவிற்கு கணவனோடு சென்றுவிட்டு, மறுநாளே சிங்கப்பூர் திரும்பி விடுவாள்.இந்த முறை அவளது கணவன் அப்படி வர மறுத்து விட்டான்."

"அடடா.."

"நானும் அப்படித்தான் பரிதாபப் பட்டேன். அவளோடு ஜோகூர் வருமாறு என்னைஅழைத்தாள். ஒப்புக் கொண்டேன். வாழ்க்கையில் முதல் முறையாக அவளும் நானும்ஜோகூர் பாருவில் சந்தித்தோம். இயல்பாக இருந்தோம். ஹோட்டலில்தான் பிரச்சனைவந்தது. எங்களுக்குக் கிடைத்தது ஒரே ஒரு இரட்டையறை மட்டும்தான்..."

"சுவரஸ்யம் !"

"இயற்கையாகவே பெண்களுக்கு ஆண்களிடம் உள்ள பயம், அவளுக்கும் என்னிடம்இருந்தது. மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகுதான் அவள் என்னோடு ஒரே அறையில் தங்கஒப்புக்கொண்டாள்."

"தைரியசாலிதான்..."

"அறையில் கட்டிலின் ஒரு ஓரத்தில் நான் படுத்துக் கொள்ள, அதன் மறு ஓரம் அவள்உட்கார்ந்து கொண்டாள். அசதியில் அப்படியே தூங்கி விட்டேன். மறுநாள் சூரியன்உதித்த பிறகுதான் எழுந்தேன். பார்த்தால்...கட்டிலின் ஓரத்தில், அதே இடத்தில் செய்தித்தாள் படித்தபடி அவள். தூங்கவே இல்லையா என்று கேட்டேன். இல்லை என்றாள். ஏன், என் மீது நம்பிக்கை இல்லையா என்று கேட்டேன். அப்படியில்லை...பக்கத்தில் ஒரு மனிதன் பன்றி மாதிரி குறட்டைவிட்டுத் தூங்கும்போது எனக்கு எப்படிதூக்கம் வரும் என்று சொல்லி சிரித்தாள்"

"ஹஹஹா..."

"இப்போது சொல்லுங்கள்...இந்த அனுபவத்திற்குப்பின், இந்திய இளைஞர்களைப்பற்றிய அவளது கணிப்பு என்னவாக இருந்திருக்கும்?"

"நீங்கள் சொன்னது சுவாரஸ்யமான சம்பவம் தேவன். ஆனால், நம்ப முடியவில்லை.இப்படி ஒரு சம்பவம் நிகழ இரண்டே காரணங்கள்தான் இருக்க முடியும்."

"என்ன அது?"

"ஒன்று அந்தப் பெண் கொஞ்சம்கூட அழகில்லாதவளாக இருக்க வேண்டும்...அல்லது...கோபித்துக் கொள்ளாதீர்கள்...உங்கள் ஆண்மை பற்றி சந்தேகம் வரும்."

"ஹஹஹா...இரண்டுமே தவறான கணிப்பு வித்யா... என்னைப்பற்றி எனக்குத் தெரியும்.அவள் அழகானவள் மட்டுமல்ல...பல ஆண்களை எளிதில் வீழ்த்தி விடும் கவர்ச்சி மிக்கவளும் கூட. என்னைப் பொருத்தவரை இப்படிப்பட்ட சம்பவம் நிகழ ஒன்றேஒன்று போதும். அது - கட்டுப்பாடு."

"என்னதான் சொல்லுங்கள்...நீங்கள் சொல்வதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.ஆனால் தேவன்...ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சம்,கனடா போவதற்கு முன் ஒருமுறை நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்."

"எதற்கு...என்னை சோதிப்பதற்கா?"

"அப்படியில்லை தேவன். ஒரு பெண்ணின் உடலை மட்டும் பார்க்காமல், அவளதுஉள்ளத்தையும் பார்க்கக்கூடிய, மதிப்பற்குரிய ஒரு இளைஞனை என் வாழ்க்கையில்சந்தித்தேன் என்ற திருப்தியோடு கனடா போவேனில்லையா...அதற்காக!"

"என்னை மகான் ஆக்காதீர்கள் வித்யா. நான் சராசரி மனிதன்தான். ஆனால்...நாளைநடப்பதை யாரரிவார்.? ஒருவேளை நீங்கள் சொன்னது மாதிரி, நாம் நேரில் சந்திக்கநேரலாம். நல்லது...மனம் திரந்து நிறைய பேசிவிட்டோம்...இது எனக்கு உறங்கும் நேரம். அடுத்த முறை உங்களோடு இன்னும் நிறையப்பேச ஆசை. உங்களுக்கு சம்மதமா வித்யா?"

"நிச்சயமாக!"

_____________________________________________________

"ஹலோ தேவன்...உங்களை மறுபடியும் இவ்வளவு சீக்கிரம் இணையத்தில் சந்திப்பேனென்று எதிர்பார்க்கவில்லை."

"நானும்தான் வித்யா..."

"போனமுறை உங்களோடு பேசி முடித்ததும் என்னால் வெகுநேரம் தூங்கவே முடியவில்லை. மனம் முழுவதும் ஏதேதோ சிந்தனைகள்."

"நான் நன்றாகத் தூங்கிவிட்டேன். எனக்குள் இருந்த சின்ன ரகசியத்தை உங்களோடுபகிர்ந்துகொண்ட திருப்திகூட அதற்குக்காரணமாக இருக்கலாம்."

"என்னை நம்பி உங்கள் ரகசியத்தை என்னோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தேவன்.நானும் ராபர்ட்டும் தனித்திருந்தவேளையில் உணர்வுகள் எங்களை எப்படி தத்தளிக்க வைத்தது என்பதை அனுபவத்தால் உணர்ந்தவள் நான். அதனால்தான் நீங்கள் சொன்னவிஷயத்தை நம்பக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன்.மேலும், இந்திய ஆண்களைப்பற்றியஎன் அனுபவங்களும் அப்படி..."

"நீங்கள் சொன்ன உணர்வுத் தூண்டல்கள் எதுவும் எனக்கும் அந்தப்பென்ணுக்கும்இடையில் நடக்கவே இல்லையே வித்யா...அப்படி ஏதும் நடந்திருந்தால் அதன் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்.ஆனால், ராபர்ட்டோடு ஒரு மாதகாலம் நீங்கள் கட்டுப்பாடாக இருந்ததுதான் எனக்கு ஆச்சரியம்."

"நான் ஒரு விஷயம் சொல்கிறேன். தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்."

"சொல்லுங்கள்"

"ஒருவேளை உங்களைப் போன்ற ஒரு இந்திய இளைஞனை என் வாழ்க்கையில்முன்பே சந்தித்திருந்தால் நான் கனடா போகவேண்டிய அவசியமே வந்திருக்காது."

"அவசரமாக அனுமானிக்கிறீர்கள். நானும் சராசரி இளைஞன்தான். எனக்கும் பல,பலஹீனங்கள் உண்டு. ஒரு இரவு முழுவதும் ஒரு அழகான பெண்ணோடு எந்தத்தவறும் செய்யாமல் தனித்திருந்தேன் என்பதற்காக என்னை மகாத்மாவாக ஆக்கிவிடாதீர்கள். அவ்வளவு ஏன்...ஒருவேளை நீங்களும் நானும் இதேபோல் தனித்திருக்கநேர்ந்தால், நான் விடிய விடிய உறங்குவேனென்று சொல்ல முடியாது."

"ஏன் அப்படி?"

"பல காரணங்கள். காலகாலமாக நமது ஜீன்களில் நமக்குள் இருக்கும் ஈர்ப்பு. காதல்பற்றி, அதன் அடுத்த நிலை பற்றி இவ்வளவு ஆழமாக நீண்டு விட்ட நமது பேச்சு...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்."

"நீங்கள் ஒரு வாதத்திற்காக அப்படிச் சொல்கிறீர்கள் தேவன். யோசித்துப்பார்த்தால்...நாம் இருவரும் தனிமையில் சந்தித்தாலும் கட்டுப்பாடோடு எல்லை மீறாமல் இருப்பது சாத்தியம் என்றே எனக்குப்படுகிறது. ம்...தேவன்...ஒரு சவாலுக்காக, நாம் ஏன் உண்மையில் அப்படி சந்திக்கக்கூடாது?"

"எப்படி...ஒரு ஹோட்டலில், தனியறையில், இரவு முழுவதும் தனியாகவா?"

"ஆமாம்."

"விளையாடாதீர்கள் வித்யா..."

"விளையாட்டில்லை தேவன்..ஒரு சவால்! நாம் இருவருமே ஜெயிக்க வாய்ப்பிருக்கிறசவால். இங்கு பக்கத்து நகரில், ஒரு பிரபல ஹோட்டலின் உச்சதளத்தில் நான் ஒருமுறை தங்கியிருக்கிறேன். பெரிய ஜன்னல்கள். அங்கு நின்று பார்த்தால், இரவுநேரம் ஊர் முழுக்க விளக்குகளால் அற்புதமாய் மின்னும். அப்படி ஒரு அறையின் ஜன்னலோரம் நின்று, நல்ல நண்பர்களாக, விடிய விடிய பேசிக்கொண்டிருக்க என்னால் முடியும்...உங்களாலும் முடியும்!"

"உண்மைதான்....முடியலாம்தான்...விமானம் ஏறினால் விரைவில் தொட்டுவிடக்கூடியதூரத்தில்தான் நீங்கள் இருகிறீர்கள்.ஆனால்...ஆனால்...வேண்டாம் வித்யா!"

"மறுக்காதீர்கள் தேவன்.நான் பார்க்க விரும்புவதெல்லாம், கட்டுப்பாடுமிக்க 'அந்த'உங்களைத்தான். ஒருவேளை, இந்திய இளைஞர்களைப் பற்றிய எனது எண்ணங்கள்தவறு என்று உங்களால் நிருபிக்க முடிந்தால், அது நீங்கள் எனக்குத்தரும் திருமணப்பரிசென்று நினைத்துக்கொள்வேன்."

"குதிரையின் கண்களுக்கு முன்னால் கட்டித்தொங்க விடப்படும் கேரட் போன்ற இந்தசவாலை ஏற்றுக் கொள்ள எனக்கும் ஆசைதான். ஆனால் பின்விளைவுகளைப் பற்றிபயப்படுகிறேன் வித்யா."

"அதிகம் யோசிக்காதீர்கள். உங்களால் இதில் ஜெயிக்க முடியும்."
"ம்..சரி..நீங்கள் இவ்வளவு சொல்வதால் ஒப்புக்கொள்கிறேன்.ஆனால் இது ஒரு அபாயகரமான அல்லது அபத்தமான பரிசோதனை என்று எனக்குப்படுகிறது. இருந்தாலும்...சந்திப்போம்! எப்போது என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள்!"


"சந்திப்பது என்று முடிவான பிறகு, நாட்களைத் தள்ளிப்போட வேண்டாம். வரும் சனிக்கிழமை இரவு, நான் சொன்ன அதே ஹோட்டலில் சந்திப்போம். எனது தொலைபேசி எண்ணை குறித்துக் கொள்ளுங்கள்.உங்களுடையதை எனக்குக் கொடுங்கள்."

"சரி வித்யா..."


______________________________________________________

"ஹாய் தேவன்..."

"........................."

"தேவன், இருக்கிறீர்களா?"

"........................."

"தயவுசெய்து பேசுங்கள் தேவன்...."

"சொல்லுங்கள் வித்யா."

"உங்கள்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன், ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள்?"

"தவறுதான்...என்னை மன்னித்து விடுங்கள்."

"எப்படி தேவன்...விமானமேறி அவ்வளவு தூரம் வந்து, ஹோட்டல் வரவேற்பறையில் உஙளுக்காக் காத்திருந்த என்னைப் பார்த்தபிறகும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல்டெக்ஸியில் ஏறி ஓடிப்போக உங்களுக்கு எப்படி மனம் வந்தது?"

"எனக்கு வேறு வழி தெரியவில்லை வித்யா...நீங்கள் என் மீது வைத்தது எவ்வளவுபெரிய நம்பிக்கை? என்னால் எப்படி அந்த நம்பிக்கையை உடைக்க முடியும்?"

"என்ன சொல்கிறீர்கள் தேவன்?"

"உண்மையைச் சொல்கிறேன் வித்யா...ஹோட்டல் வாசலில் ஒரு தேவதை மாதிரிநின்ற உங்களைப் பார்த்ததும், சூழ்நிலை நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. அதனால்தான்..."

"ஆக நீங்களும் ஒரு சராசரி இந்திய இளைஞர்தானா? நீங்கள் சொன்ன மாதிரிஒழுக்கம்மிக்க ஒரு இளைஞனை நான் என் வாழ்க்கையில் சந்திக்கவே முடியாதா?"

"உண்மையில் அப்படிப்பட்ட ஒருவரை என்னில் நீங்கள் சந்தித்துவிட்டீர்கள் வித்யா..."

"என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் ஓடிப்போன உங்களிலா?"

""யோசித்துப்பாருங்கள்...எப்போது நீங்கள் என்னை சந்திக்கத் துடித்தீர்களோ,அப்போதே நாம் உங்களை ஏதோ ஒருவகையில் பலவீனப்படுத்தியிருப்பதை புரிந்துகொண்டேன். நாம் சந்திக்கும்போது எல்லைகள் மீறி தவறுகள் நிகழ்ந்தாலும் ஏற்றுக்கொள்ள நாம் மனரீதியாக தயாராகி விட்டதும் எனக்குப் புரிந்தது."

"................."

"நான் என்னைப்பற்றி சொன்ன விஷயங்கள் உங்களிடம் ஏற்படுத்திய பிம்பம் அப்படி.வாழ்க்கையில் நீங்கள் சந்திக்க காத்துக் கொண்டிருந்த ஒரு கதாநாயக பிம்பம்.இப்படிப்பட்ட ஏங்கித் தவிக்காத ஒழுக்கமுள்ள இளைஞனுக்காகத்தான் இதனை நாள்காத்திருந்தேன், இவனிடம் ஒருநாள் வசமிழந்தாலும், வாழ்ந்துவிட்டுப் போனாலும் தப்பில்லை என்று நீங்கள் நினைப்பதாகக் கூட எனக்குத் தோன்றியது. என் கணிப்பு தவறா வித்யா?"

"இந்த கேள்விக்கு என்னிடம் உடனடி பதிலில்லை தேவன். நீங்கள் நினைத்ததைசொல்லுங்கள்..."

"ஒருவேளை உங்களைப் பற்றிய எனது கணிப்புகள் தவறாக இருக்கலாம்...தவறாகஇருக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறேன்.அனால், இப்போது மனம் திறந்து ஒருஉண்மையை உங்களிடம் ஒப்புக்கொள்கிறேன் வித்யா..."

"................."

"ஹோட்டல் வாசலில், சேலை கட்டி,செதுக்கிய சிற்பம் மாதிரி நின்ற உங்களைப்பார்த்த விநாடி...நான் சலனப்பட்டேன்.அந்தநாள் முழுவதையும் உங்களுடனே கழித்துவிட வேண்டுமென்று சபலப்பட்டேன்."

"இதுதான்... உங்களின் இந்த நேர்மைதான் ... எப்படிச் சொல்வது? எத்தனை பேரால்இப்படி உண்மையையை ஒப்புக்கொள்ள முடியும் சொல்லுங்கள்?"

"இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு வெட்கமில்லை.ஆனால், நாம் சந்தித்து, எல்லை மீறிஏதாவது நடந்திருந்தால், நீங்கள் சந்தித்த சராசரி மனிதர்களின் பட்டியலில் நானும் சேர்ந்திருப்பேன்."

".................."

"அப்படி ஏதும் நிகழ்ந்து, நீங்கள் என்மீது வைத்திருக்கும் உயரமான நம்பிக்கைகளைதகர்த்துவிட வாய்ப்பு தராமல், டெக்ஸியில் ஏறிய அந்த விநாடியில் 'கட்டுப்பாடுமிக்க'ஒரு இளைஞனை என்னில் நீங்கள் சந்தித்தீர்கள். இது சுய தம்பட்டமாகத் தெரியலாம்.ஆனால், உண்மை."

".................."

"எந்த வகையிலும் உங்களை ஏமாற்றுவது என் நோக்கமல்ல. நான் அப்படி நடந்துகொண்டதால் நாம் இருவருமே சில இழப்புகளைத் தவிர்த்திருக்கிறோம். எனக்குத்தெரியும், உங்களை சந்திக்காமல் திரும்பியதால், நான் உங்களை காயப்படுத்தி இருக்கிறேன். இன்னும் தொடரப்போகும் குற்ற உணர்வில்லாத நமது நட்பு அதற்குமருந்தாக அமையும். மீண்டும் ஒருமுறை நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.நாம் என்றுமே நல்ல நண்பர்களாக, எந்த விஷயத்தையும் எழுத்தில், பேச்சில் பகிர்ந்துகொள்ளக் கூடியவர்களாக இருப்போம். நான் முன்பு நான் சொன்ன மாதிரி, உங்கள்திருமணத்திற்கு என் வாழ்த்துமடல் கனடா வந்து சேரும். மீண்டும் இணையத்தில் சந்திப்போம். பை வித்யா!"

________________________________

Thursday, March 23, 2006

கண்கள்,கண்ணாடிகள்!!!

சில வாரங்களாக
அந்தக் கிழவரைக் காணவில்லை.
கறுப்புக் கண்ணாடியும்
கை தள்ளு வண்டியில் அமர்ந்த அவருமற்று
வெறுமையாய்த் தெரிகிறது எனது தளம்.

வண்டியைத் தள்ளிச் செல்லும் பணிப்பெண்
சப்தமெழுப்பிச் செல்லும் சப்பாத்தோடு
இன்னும் நடந்தபடிதான் இருக்கிறாள்

லிஃப்டிற்காக
ஒருசேர காத்திருக்கையில் ஓரவிழிகளில்
அந்த கருப்புக் கண்ணாடிக்குப்
பின்னிருக்கும் விழிகளின் உணர்வுகளை
கற்பனை செய்ய வாய்ப்பற்ற காலைகள்
வெறுமையளிக்கின்றன.

ஏதேனும் ஒரு மகன் / மகள்
நாட்களுக்கு அழைத்திருக்கலாம்…
வாரங்கள்?

சிலநாட்களில்
பணிபெண்ணையும்
காணவில்லை.

வாரங்கள் சில முன்
புளோக் தாழ்வாரத்தில் கூடிய கூட்டமும்
உறக்கமற்ற அவர்களின் இரவுப் பேச்சும்
உதித்து மறைந்த தற்காலிக கழிப்பிடங்களும்
அந்த கறுப்புக் கண்ணாடிக்காரரின்
இறப்பைச்சொன்னது இப்போது புரிகிறது.

மாநகரங்களில் -
பக்கத்து வீட்டுக்காரரின் மரணம்கூட
வாரங்களுக்குப்பின் தான் அறிய முடிகிறது…

இப்போதும்
லிஃப்ட் எனது தளம்வரும் அவகாசநேரத்தில்
கறுப்புக் கண்ணாடிக்குப்பின் பார்த்திராதவிழிகளை
கற்பனையில் பார்த்திருக்கிறேன்…

கண்களற்ற உலகத்திற்கு
இழுத்துச் செல்ல
வந்து விடுகின்றன
லிஃப்டுகள்!