Friday, February 24, 2006

கதவின் சில ஜன்னல்கள்


சில நிமிடங்களுக்கு ஒருமுறை
வந்துபோகும்
ரெயிலென
வந்துபோகும் உன் நினைவுகள்....

ஒவ்வொரு முறையும்
நீ இறங்கிக் கொள்கிறாய்
நான் ஏறிக்கொள்கிறேன்.

உட்கார்ந்தோ, நின்றோ...
கர்ப்பிணிப் பெண் அல்லது
முதியோருக்கு இடம் தந்தோ...

சமமாக சாலைகளில் ஓடி
ஏதாவது நிறுத்தத்தில்
தேங்கிப்போகும் வாகனங்களை
பார்வையால் பிசைந்தபடியோ...

அப்பயணம் நிகழ்ந்து விடுகிறது.

இன்னும் சிறிது நேரத்தில்
ஏதேனும் ஆங்கிலக் குரலில்
வந்துவிடலாம்
நானிறங்கும் 'அடுத்த நிறுத்தம்'.

இம்முறை
வழக்கம் போல்
நீ இறங்கிக்கொள்வாய்
வழக்கம் மாறி
நானும் இறங்கிக் கொள்வேன்...

போகும் ரெயிலின்
மூடிய கதவுகளுக்குப்பின்
போகும் நம்மை பார்த்தபடி
நடந்து போகலாம் நாம்!

Thursday, February 23, 2006

நனைவு நினைவுகள்

ஞாபத்தில் ஒட்டுவதில்
வெயிலை வென்று விடுகிறது
மழை.

எத்தனையோ
மழை ஞாபகங்கள்...
வெயில் ஞாபகங்கள்
வெகு சிலவே.

இன்று மழை நாள்.

நீர் விரல்கள்
ஞாபகம் கிளறியது.

புத்தகப்பை தோள்வலிக்க
நீர் தொட்டுப் பார்த்திருந்த
பள்ளிகால மழை...

குடைகீழ் நான் நடக்க
ஓரளவு நனைந்தபடி
வார்த்தைகளோடு
உடன் நடந்த தந்தை...

எதிரெதிர் நிறுத்தங்களில்
நானும் அவளும்.
மழையிடம் மட்டும்
காதலைச் சொல்லியபடி
நான்...

அடந்த ரத்தம் மெலிந்து பரவ
தெருவோர மழையில்
பிணமாய்ப் போன
யார் பெற்ற மகனோ...

ஞாபத்தில் ஒட்டுவதில்
வெயிலை வென்று விடுகிறது
மழை.

குடை மறந்த என்னை
ஜன்னல் -
மழை பார் என்றது.

நனைவதென முடிவு.
அப்புறம் எதற்குக் குடை?

இந்த மழையில்
நடைபாதைப் புற்களே
முளைக்காத போது
முளைக்கவா முடியும் நான்?

நனைவதே நல்லது...
முளைக்கலாம்
சில நினைவுகள்!

Sunday, February 19, 2006

வேறானவனின் நாளை

எல்லோரும்
எதிரியாவதும்

எதிர் வருவதெல்லாம்
அன்பாவதும்


கனக்கும் சிறுகற்கள்
கன மலையில்
காற்றாவதும்

முறிந்த சிறகாவதும்
நானே சிறகாவதும்

நேற்று நானானதும்
இன்று வேறானதும்

வேறெது நிகழ்த்தும்
வேர்பிடிக்கும் காதலன்றி?

அல்ல அவளென் காதலி...
என் நாளையின் நம்பிக்கை!