Sunday, April 09, 2006

இந்திய கிரிக்கெட் அணி : யாரும் இங்கு நிரந்தரமில்லை!


இங்கிலாந்திற்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்ட இந்திய அணிக்கு முதலில் வணக்கம் சொல்லி விடுவோம்! அந்த வணக்கத்திற்கு அவர்கள் தகுதியான வர்கள்தான். இந்த வெற்றிகளின் பிண்ணனியாக பயிற்றுவிப்பாளர் கிரேக் சேப்பலின் திட்டமிடலும், ராகுல் திராவிடின் திறன்மிக்க தலைமைத்துவமும் இருப்பது நாமறிந்த விஷயம்தான்.

தொடரை கைப்பற்றி விட்டதால், புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்போம் என்று காரணம் சொல்லி,வீரேந்திர சேவாக்கை தலைவராக்கி இருக்கிறார்கள். ராகுல் திராவிடின் இடத்தில், இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளராகக் கருதப்படுகிற வி.ஆர்.பி.சிங் சேர்க்கப்பட்டிருக்கிறார். நல்ல விஷயம்தான். ஆனால், இந்த இரண்டு பேருமே அவர்களுக்கு தரப்பட்டிருக்கும் வாய்ப்பை நியாயப்படுத்த வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.

தேவை : கொஞ்சம் ஓய்வு!

கடந்த 30 ஒருநாள் போட்டிகளில் ஒரே ஒரு முறை மட்டுமே அரைச் சதமடித்திருக்கிறார் சேவாக். மற்ற ஆட்டக்காரர்களாய் இருந்தால் இந்நேரம் கதவு சாத்தப்பட்டிருக்கும். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 அடித்த ஒரே இந்திய ஆட்டக்காரரான சேவாக்கை அப்படி நடத்த முடியுமா? முடியாது. இந்த விஷயம் சேவாக்கிற்கும் தெரியும் என்பதால் "எனக்கென்ன ஆச்சு" என்று அவர் போக்கில் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை புதிதாக கொடுக்கப் பட்டிருக்கும் தலைமைத்துவம் அவரை சதமடிக்க வைக்கலாம். அது நடக்கு மென்றால், இந்திய ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால் இந்த 3 போட்டிகளிலும் சேவாக் சரியாக விளையாடவில்லை என்றால், இந்தியத் தேர்வாளர்கள் அவருக்கு கொஞ்சநாள் "கட்டாய ஓய்வு" கொடுக்கத் தயங்கக்கூடாது.

வேகமும், விவேகமும்

இந்திய அணியின் உடனடித்தேவை மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய புஜபலமிக்க ஆசாமிகள் என்கிறார் கிரேக் சேப்பல். வி.ஆர்.பி.சிங் அதிவேகமாக பந்து வீசுவதாகச் சொல்கிறார்கள். வேகப்பந்து வீச்சில் ஒரு அபாயம் இருக்கிறது. 10 ஓவர்களில் 50ல் இருந்து 60 ரன்வரை தாரை வார்த்துவிடும் அபாயம். வி.ஆர்.பி.சிங்கும் அப்படி தாரை வார்க்கக் கூடும். அப்படி ஒரு சூழலில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து, தன்னம்பிக்கையும் கொடுக்கக்கூடிய அனுபவசாலி கிரேக் சேப்பல். பல வருடமாக வாய்ப்புக் கொடுத்தும் தனது திறனை முழுவதும் வெளிப்படுத்தாத அகர்கார் போன்றவர்களுக்கே இன்னும் வாய்ப்பு கொடுக்கிறபோது, வி.ஆர்.பி.சிங் போன்றவர்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுப்பது அவசியம்.

போதும் இந்தப் பொறுமை

இந்திய அணிக்கு,நாடு முழுவதுமுள்ள மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்து விவசாயி மாதிரி இருக்கிற முனா·ப் படேல் அதற்கு ஒரு உதாரணம். இந்த நிலையில் அகர்கார் போன்றவர்கள் "வாழு அல்லது வாழவிடு" என்ற மூலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். பதானை முதல் ஆட்டக்காரராக களமிறக்கியபோது, போராடி ஜெயித்துக் காட்டினார்.அதே மாதிரி அகர்காரையும் முதல் நிலையில் களமிறக்கிப் பார்க்க வேண்டும். அகர்கார் விஷயத்தில் மட்டும் இந்திய தேர்வாளர்கள் தொடர்ந்து காட்டிவரும் "அளவிற்கு மீறிய பொறுமை" ஒரு முடிவிற்கு வருவது அவசியம்.

இன்னொரு சேவாக்?

துவக்க ஆட்டக்காரராக கர்நாடக இளைஞர் ராபின் உத்தப்பா களமிறங்குவார் என்று தோன்றுகிறது. இவரும் சேவாக் மாதிரிதான். "அடிப்பதற்குதான் மட்டை.. அடி வாங்கத்தான் பந்து" என்ற கொள்கையுள்ளவர். கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி ராபின் ஒரு சதமடித்து விட்டால் இந்திய அணியிலுள்ள மற்ற மட்டையாளர்கள் கட்டை போடாமல், முட்டை போடாமல் தரமாக ஆடத் துவங்குவார்கள். என்ன செய்யப் போக்கிறது இந்திய அணி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தலைக்கு மேல் போய்விட்டால்...

ஏற்கனவே ஒருநாள் போட்டித் தொடரை தோற்றுவிட்டதால் இங்கிலாந்தைப் பொறுத்தவரை, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. "எங்கள் மேலிருந்த அழுத்தமெல்லாம் போய்விட்டது" என்று சொல்லியிருக்கிறார் நட்சத்திர ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன். இனிவரும் போட்டிகளில் இங்கிலாந்து அணி 'தலைக்கு மேல் போய்விட்டது, இனி ஜான் போனாலென்ன, முழம் போனாலாலென்ன' என்ற மனநிலையோடு அதிரடி ஆட்டத்தில் இறங்கும் வாய்ப்புகள் அதிகம். அதை இந்திய அணி எப்படி எதிர்க்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்புதான் இனிவரும் மூன்று போட்டிகளையும் சுவாரஸ்யமாக்குகிறது.

இன்னும் இருக்கும் பரபரப்பு

டெஸ்ட் போட்டிகளில் தங்கள் சக்தியை எல்லாம் கொடுத்து விளையாடி விட்டதால், தற்போது சக்தியற்ற சக்கை மாதிரி இங்கிலாந்து வீரர்கள் தோற்றமளிக்கிறார்கள். "உற்சாகத்தின் சேமிப்புக் கிடங்கு" மாதிரி கொப்பளித்துக் கொண்டிருக்கும் ·பிளின்டாப் கூட, எப்போது ஊருக்குப் போவோமென்று காத்திருப்பவர் மாதிரி தோன்றுகிறார். இந்திய வம்சாவளி வீரரான விக்ரம் சோலங்கி போன்ற சில புதிய வீரர்கள்தான் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறார்கள். மொத்தத்தில் - இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நினைப்பில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களுக்கும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற நினைப்பில் விளையாடும் இளம் இந்திய வீரர்களுக்கும் இடையிலான இந்த மூன்று போட்டிகளிலும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது.