Thursday, July 03, 2008

சீக்கிரமே சிங்கப்பூர் வரும் எழுத்தாளர் எஸ்.ராமக்கிருஷ்ணன் சார்ந்து...

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் "வாசிப்போம்! சிங்கப்பூர் '08" திட்ட அதிகாரி திரு.மணியத்திடமிருந்து இன்றொரு மின்னஞ்சல் வந்தது. எழுத்தாளர் எஸ்.ராமக்கிருஷ்ணன் "வாசிப்போம் சிங்கப்பூர் 2008" சம்பந்தமாக சிங்கப்பூர் வருகிறார் : அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன : அவசியம் கலந்து கொள்ளுங்கள்" என்பதே அதன் சாராம்சம்.

இன்றைய தமிழ் இலக்கிய உலகில் பெரிதாக பெயர் பதித்திருக்கும் எஸ்.ராமக்கிருஷ்ணனைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனந்த விகடனில் வெளிவந்த "கதாவிலாசம்" மூலம்தான் அவரது விலாசத்தைக் கொஞ்சமாவது அறிந்து கொண்டேன்.

பல நல்ல தமிழ் எழுத்தாளர்களைப்பற்றிய குட்டிக்குட்டி அறிமுகங்களோடு ஒரு சினமா டிரைலர் மாதிரி சுவாரஸ்மாக இருந்த தொடர் அது. சினிமா தயாரிப்பதைக் காட்டிலும், அதன் சாரம் பிழிந்து டிரைலர் தயாரிப்பது இன்னும் அதிக சிரமமான வேலையாகத்தான் இருக்க வேண்டும். பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கையில் இலக்கியத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கும் வாசகனுக்கான A short referesher course மாதிரியும் அது தோன்றியது.

ஒரு வெப்பம் மிகுந்த கோடை நாளில் வீட்டுக் கதவைத் தட்டிய பெண்விற்பனைப் பிரதிநிதியின் வாழ்க்கைச் சோகங்களை அவர் பிரதியெடுத்த விதம் கோடை வியர்வையின் பிசுபிசுப்போடும், ஒரு கோயிலில் யானைக்கு சோறூட்டும் வயதான பெண்மணியின் வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொண்ட விதம் ஒரு புது மழைக்குப்பின் வரும் மண்வாசனையின் அழுத்தமான நெடியோடும் எனக்குள் பதிந்தது.

ஞாபக மறதிக்காரனான எனக்குள்ளும் சில ஞாபகங்களை விட்டுச் செல்வது ஒரு நல்ல எழுத்தாளனால் மட்டுமே சாத்தியம் என்று எப்போதுமே நம்பிக் கொண்டிருக்கிறேன். எஸ்.ராமக்கிருஷ்ணனின் ஒரு புத்தகமே சில ஞாபங்கங்களை என்னுள் விட்டுச் சென்றிருக்கிறது.

அதற்குப்பின் அவரது எழுத்துக்களை அதிகம் படிக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும், இன்ன பிற விஷயங்கள் என்னை இழுத்துக்கொள்ள, அவருடைய 2 புத்தகங்களைக்கூட இன்றுவரை நான் முழுமையாகப் படிக்கவில்லை என்ற நிலையில் இப்படி ஒரு அழைப்பு.

நான் மட்டும்தான் இப்படி இருக்க வேண்டும். எஸ்.ராமக்கிருஷ்ணனின் எழுத்துக்களைத் தீவிரமாகத் தேடிப் படிக்கும் ஒரு பெரிய கூட்டம் சிங்கப்பூரில் இருக்கிறது என்பதுதான் உண்மை. ஒரு எழுத்தாளன் தன்னைப் பற்றி, தனது எழுத்துக்களைப்பற்றிப் பேச வரும் ஒரு தளத்தில் அந்த எழுத்தாளனைப் பற்றி ஓரளவு மட்டுமே தெரிந்த, ஓரளவு கூடத் தெரியாத, அல்லது ஒன்றுமே தெரியாத (வாசகர்) கூட்டம் 90 சதவீதம் இருந்து, அவர்கள் மத்தியில் அந்த எழுத்தாளன் பேச நேர்வது துர்பாக்கியம்.அது நிச்சயம் எஸ்.ராமக்கிருஷ்ணனுக்கு நேராது.

கவிஞர் மனுஷ்யபுத்திரனை சிங்கப்பூர் கவிதைப் பயிலரங்கிற்குக் கூட்டிக் கொண்டு வந்தபோது, 'மனுஷ்யபுத்திரனா? அப்படிப்பட்ட பெயரில் ஒரு கவிஞரா?' என்று கேட்ட ஒரு தமிழ் அமைப்பின் முக்கிய உறுப்பினருக்கு மத்தியிலும் மனுஷ்யபுத்திரன் தெளிவாக உரையாற்றினார். நவீனத் தமிழ் இலக்கியம் போகிற திசை பற்றிய அழுத்தமான கருத்துகளை, செய்திகளை முரட்டுதனமிக்க ஆண்மையோடு அவர் சிங்கப்பூர் மண்ணில் விட்டுச் சென்றது இந்த மின்னஞ்சலைப் பார்த்ததும் ஞாபகத்திற்கு வந்தது.

ஆனால் இந்தமுறை, நவீனத் தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றி அத்தனை ஆவேசத்தோடு சொல்ல வேண்டிய அவசியம் எஸ்.ராமக்கிருஷ்ணனுக்கு இருக்காது என்றே நினைக்கிறேன். மனுஷ்யபுத்திரன் வந்துபோய் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. பல அமைப்புகள், குழுக்கள், தனிமனிதர்கள் எடுத்த முயற்சிகளால் நவீனத் தமிழ் இலக்கியதோடு சிங்கப்பூர் வாசகர்களுக்கான பரிட்சயமும், பழக்கமும் அதிகமாகி இருக்கின்றன.

இதையெல்லாம் விட, எஸ்.ராமக்கிருஷ்ணன் சண்டக்கோழி, பீமா போன்ற பிரபலமான வர்த்தகப் படங்களுக்கு வசனம் எழுதியிருப்பதால், அவரை ஒரு நவீனத்தமிழ் எழுத்தாளராகப் பார்த்து பயப்படுவதோ, கூச்சப்படுதலோ, சராசரி வாசகனுக்கு நேர்வது சாத்தியமில்லை என்று சொல்லலாம். அவர் பேசுகிற மொழி நமக்குப் புரியும், அவருக்குப் புரிகிற மொழியில் நம்மால் கேள்வி கேட்க முடியும் என்ற உணர்வே எஸ்.ராமக்கிருஷ்ணனை ஒரு சராசரி வாசகனிடமிருந்து மறைக்கிற மாயத்திரையை எடுத்து விடக்கூடும்.

அதுதான் முக்கியம் - ஒப்பனைகளற்ற, தயக்கங்களற்ற, எதிர்பார்ப்புகளற்ற ஒரு கலந்துரையாடல். எஸ்.ராமக்கிருஷ்ணனிடம் அதை சிங்கப்பூர் வாசகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

எஸ்.ராமக்கிருஷ்ணன் சிங்கப்பூர் வர இன்னும் ஒரு வாரம் இருப்பதால், நூலகத்திலிருந்து அவரது நூல்களை இரவல் பெற்று படிப்பதன் மூலம், அறியாதவர்களும் அவரது எழுத்தை அறியலாம். நானும் சில நூல்களைப் படிக்க வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறேன். முடியவில்லையென்றால், குறைந்தபட்சம், சண்டக்கோழி, பீமா போன்ற படங்களையாவது DVDயில் பார்த்து விடுவேன் என்பது உறுதி.

ஆகவே, சிங்கப்பூர்த் தமிழ் மக்களே... ஜூலை 12, 13ந் தேதிகளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சிகள் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விளக்கங்கள் தேவையெனில் தயங்காமல் திரு.மணியத்திடம் 63424416 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். இந்தப் பதிவு பற்றி ஏதேனும் குறைகளோ, நிறைகளோ இருந்தால் அதை நீங்கள் என்னிடம் இந்த நிகழ்ச்சிகளின் போது நேரிலேயே சொல்லி விடலாம். See You all There!

இந்தத் தமிழ் நிகழ்ச்சியைப் பற்றிய ஆங்கில அறிவிப்பைக் கீழே காணலாம்.

In conjunction with READ! Singapore 08, the National Library Board is organising meet-the-author sessions with Mr S. Ramakrishnan, eminent Indian writer and *Tamil film dialogue writer. The National Library Board would like to invite you and your family to attend these sessions:

Saturday July 12, 6.30 -8.00 pm, Multi-Purpose Room, Central Lending Library
Mr S. Ramakrishnan will cover the following topics:
His views on the book and his other works.
His current and future projects.

Sunday July 13, 4.30 -6.00pm, Programme Zone, Ang Mo Kio Community Library
Mr S. Ramakrishnan will cover the following topics:
How he became a writer.
His love for Tamil.
His role as a dialogue writer in Tamil Cinema.*He worked as a dialogue writer in films like ‘Baba’, ‘Sandakozhi’, and ‘Bheemaa’.
Following his talks there will be Q & A.

Admission is Free. All are Welcome.

If you keen to read his book: the call no is: TAMIL RAM
For information about the author : http://www.sramakrishnan.com/