Saturday, December 27, 2008

ந.வீ.சத்தியமூர்த்தி என்ற கவிதை சிந்துபாத் (நாலுவார்த்தை-27)

புயல் - பலத்த ஆரவாரத்தோடுதான் கடந்து போகிறது. வழியில் அது கழற்றிப் போட்டு விடும் வீடுகள் பல. தென்றல் எப்போதும் மென்மையாகத்தான் வீசுகிறது.... பெரும்பான்மையான நேரங்களில் அதன் இருப்பை நாம் உணர்வதில்லை. சிங்கப்பூர் கவிஞரான ந.வீ.சத்தியமூர்த்தி தென்றல் மாதிரிதான். தனது இருப்பை அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை அல்லது மற்றவர்கள் அவரது இருப்பை உணர்வதில்லை. ஆனால், தேவையான நேரங்களில், தேவையானவர்களுக்கு தென்றலாய் வீசிக் கொண்டுதான் இருக்கிறார் அவர் . 50களில் இருக்கும் இந்தக் கவிஞர் பழகுவதெல்லாம் 30க்குக் கீழ் உள்ள இளைஞர்களிடம்தான். தமிழகக் கவிதைகள் நவீனம், பின்நவீனம் என்று நகர்ந்து விட்ட நிலையில், இன்னும் மரபுக் கவிதை, புதுக்கவிதை என்று மாரடித்துக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் தமிழ்ச்சுழலில், வடிவங்களைப் பற்றி கவலைப்படாமல் கவிதைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர் ந.வீ.சத்தியமூர்த்தி. அவரது சமீபத்தியக் கவிதைத் தொகுப்பு 'தூரத்து மின்னல்'. வழி நெடுக புதுமை வாசனையும், மரபு நெடியும் அடிக்க... நம்மை மயக்குகிறது இந்தக் கவிதைத் தொகுப்பு.

"உண்மையில் / உங்களில் / யாருக்கு உவமையாக்குவேன் / யாரை.. " என்று 'இமை' பற்றிய கவிதைக் கேள்வியோடு வெடிக்கத் துவங்குகின்றன சத்தியமூர்த்தியின் கவிதைகள். கணவன், மனைவியைப் பற்றி பேசும்போதோ சரவெடியாகின்றன. "கணவன் - தொலைபேசியில் / 'அலோ' ஒரு முறையும் / 'சரி' பல முறையும் / திருப்பச் செல்லும் / அப்பாவி அப்பிராணி " என்று முதல் வெடியைக் கொளுத்திப் போட்டு, அதன் வெடிச்சத்தம் அடங்குவதற்குள், "மனைவி - கற்றைக் குழல் முடித்து / சற்றே தலை சாய்த்து... / ஒற்றைப் பார்வையில் / உதறல் தரச் செய்யும்.. / ஒசாமா பின் லேடி." என்று அணுகுண்டை அடுத்து வீசுகிறார். நகைச்சுவை இழையோடும் கவிதைகள் மனதின் வழியாக நினைவை ஆக்கிரமித்துக் கொள்ளும் திறன் வாய்ந்தவை. நகைச்சுவை இயல்பாகவே இவரது கவிதை நரம்புகளில் ஓடுகிறது.சத்தியமூர்த்தி என்ற கவிதை விவசாயி நீளமாகவும், பல கவிதைகளில் ஆழமாகவும் உழுதிருக்கிறார்.

"இப்போதெல்லாம் / காலம் கரையக் கரைய... / கனவுகளின் / முகங்களில் கூட / முதுமைச் சுருக்கங்கள்." என்ற ஆழமான பார்வை நம்முள் அதிர்வலையை எழுப்புகின்றன. வயது கூடக் கூட, வயது கூடும் கனவுகள் என்ற நிதர்சனம் அதிர்வலைகளை எழுப்புவது இயல்புதானே? ஒட்டடை அடிப்பவர்கள் இனி வரும் வரிகளைப் படிக்கும்போது, ஒரு நிமிடம் யோசிக்கக் கூடும்.."தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராத / விக்கிரமாதித்த சிலந்தி ஒன்று / கதவிடுக்கில் கால் பரப்பி / வாய்க்கரங்களால் / தன் அடுத்த வேளை உணவுக்கு / செய்து கொண்டிருந்தது, / மறுநடவு!" தவறிய தாய்மையை கூண்டிலேற்றி விசாரிக்கும் வழக்கறிஞர் கவிதைகளையும் வாசிக்க முடிகிறது. "இணையப் பக்கம் போனால் அருகமர்ந்து கவனிக்கிறாய் / உற்றுற்றுப் பார்த்தென்னை தாயே / நீயா... மணவிலக்கு கேட்டு மனுப்போட்டாய் அப்பாவுக்கு?" இப்படி மனித உறவுகளை, இயற்கையை, உணர்வுகளை சிக்கிமுக்கி கல்லாகி தீமூட்டிப் பார்க்கின்றன சத்தியமூர்த்தியின் கவிதைக் கரங்கள்.

கவிதையின் வடிவத்தை தீர்மானிப்பவன் கவிஞனல்ல; ஒவ்வொரு கவிதையும் தனக்கான வடிவத்தைத் தானே தீர்மானித்துக் கொள்கிறது. மீறி, தானே தீர்மானிக்க முற்படுபவனின் கவிதைக் குழந்தைகள் சிதைவுற்றுப் பிறக்கின்றன. பூமியை புதிதாக மாற்றி விடும் முனைப்பில் இன்றைய கவிதைகள் பிறப்பதில்லை. அவை, அழுத்ததில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் ஆயுதமாகவும், விடுபட்ட அழுத்தங்களை வேடிக்க பார்க்கும் களமாகவும் இருக்கின்றன. விட்டு விடுபட்ட கவிதைகளில் கவிஞனின் கடந்த காலம் விழுந்து கிடக்கிறது ; அனுபவங்கள் அடர்ந்து கிடக்கிறது. அவன் அனுபவங்களைப் பதிவாக விட்டுச் செல்ல முனைபடும் தருணங்களாகின்றன கவிதைகள். அழுத தருணங்கள் ; அழகிய தருணங்கள் ; ஆராதித்த தருணங்கள். உண்மையில், கவிதைகளும், வாழ்க்கையும் தருணங்களின் தொகுப்பாகும். முற்றும் என்ற சொல்லை என்றுமே எட்டாத கன்னித்தீவுதான், பேனாமுனை என்கிறார் சத்திய மூர்த்தி என்ற கவிதை சிந்துபாத். எந்தத் தீவிலும் இறங்கிவிடாமல் போய்க் கொண்டே இருக்கட்டும் இவரது எழுத்துக் கப்பல்!

Friday, December 26, 2008

ஆசியாவின் முதல் மில்லியன் டாலர் மேன் - In Golf! (நாலுவார்த்தை-026)

Flying Sikh மில்கா சிங், பழைய மற்றும் புதிய தலைமுறை இந்தியர்களுக்கும் நன்கு அறிமுகமான பெயர். ஒலிம்பிக்ஸில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மயிரிழையில் பதக்கத்தைத் தவற விட்டவர். அன்று அவர் தவற விட்டது தவற விட்டதுதான். அவருக்கப்புறம் இன்று வரை எந்த இந்தியரும் ஒலிம்பிக்ஸில் அத்லெட்டிக்ஸில் பதக்கம் பெறவேயில்லை. அவருடைய புத்திரர் ஜீவ் மில்கா சிங். அப்பா மாதிரி, வருமானமும், அங்கீகாரமும் இல்லாத அத்லெட்டிக்ஸில் கால் பதிக்காமல், கோல்·பைத் தேர்ந்தெடுத்து இந்தியாவின் பெயரை உலக விளையாட்டு அரங்கில் முன்னெடுத்துச் செல்கிறார். சமீபத்தில் நடந்த சிங்கப்பூர் ஒபன் கோல்ப் போட்டியில் வெற்றி பெற்று, முதல்பரிசான 792,500 அமெரிக்க வெள்ளியையையும் தட்டிச் சென்றிருக்கிறார். இந்தப்போட்டியில், உலகப் புகழ்பெற்ற வீரர்களான Ernie Els, Padraig Harrington போன்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, ஜீவ் வெற்றி பெற்ற விதம் அவரது மனஉறுதிக்குக் கிடைத்த பரிசு. இந்த வெற்றிகளைப் பெற அவர் பல ஆண்டுகாலம் கடுமையாக உழைத்திருக்கிறார். வாழ்க்கையில் எதுதான் எளிதாகக் கிடைக்கிறது?

உலக கோல்·ப் அரங்கில் வெற்றி பெற, மூன்று அடுக்குகளைத் தாண்ட வேண்டிய நிர்பந்தம் ஜீவ் மில்கா சிங்கிற்கு. இந்தியச் சுற்று, ஆசியச் சுற்று, அமெரிக்க தகுதிச் சுற்று என நீண்டது அந்தப் பயணம்.1990களின் துவக்கத்தில் அவர் ஆசிய சுற்று கோல்·ப் போட்டிகளில் விளையாடத் துவங்கியபோது அந்தப் பயணம் மிகத் தனிமையானதாக இருந்தது. உடன் எந்த இந்தியரும் இல்லை. ஏற்க்குறைய எவரெஸ்ட்டை முதல்முறை ஏறும்போது உணரும் தனிமை போன்ற தனிமை அது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பெற்ற வெற்றிகள் மட்டுமே அவரது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தன. 1999 வரை ஜீவ் பெற்ற வெற்றிகளும் , கிடைத்த வருமானமும் ஏதோ போதுமானதாக இருந்தது. ஆனால், 2000 முதல் 2004 வரை காயங்களும், தன்னம்பிக்கையின்மையும் அவரது விளையாட்டைக் கடுமையாகப் பாதித்தன. 1999-ம் ஆண்டிற்குப் பிறகு, ஏழு ஆண்டுகள் அவரால் எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. தொடர்ந்து கடுமையான பயிற்சியும், தன்னம்பிக்கை தரும் புத்தகங்களைப் படித்ததும் அந்த கடுமையான காலகட்டத்தை கடக்க உதவியது என்கிறார் ஜீவ்.


2006-ம் ஆண்டு Volvo China Open-ல் பெற்ற வெற்றியோடு துவங்கியது ஒரு புதுப்பயணம். அந்த வருடம் ஜப்பான், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் வெற்றிகளைக் குவித்தார் ஜீவ் மில்கா சிங். 2007-ம் ஆண்டு பெரும்பாலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மட்டுமே விளையாடினார், குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றார். ஜப்பானும் அவரது பிரியத்திற்குரிய இடமாகியது. அர்ஜூன் அட்வால், ஜோதி ரந்தாவா, ஷிவ் கபூர் போன்ற புதிய தலைமுறை இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடத்துவங்கியதும், அவர்களும் அந்தப் பயணத்தில் ஜீவோடு சேர்ந்து கொண்டதும் அவரது சூழலைச் சற்று சுலபமாக்கியது.


2008 - ஜீவ் மில்கா சிங்கின் வாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றிகளைக் கொண்டு வந்த ஆண்டு. ஆஸ்திரியா, ஜப்பானில் பெற்ற வெற்றிகளோடு சிங்கப்பூர் வெற்றியும் சேர்ந்து கொண்டது. சிங்கப்பூரில் பெற்ற வெற்றி Asian Tour's Order of Merit என்ற ஆசியச் சாம்பியன் பட்டத்தைக் கொண்டு வந்து சேர்த்தது. ஆசியச் சுற்றுப் போட்டிகளில் ஒரே ஆண்டில் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் சம்பாதித்த முதல் ஆசியர் என்ற பெருமையும் அவருக்குப் போய் சேர்ந்திருக்கிறது. அதோடு இந்த ஆண்டு US PGA Championship-ல் 9தாவது இடத்தைப் பிடித்த பெருமையும் கிடைத்திருக்கிறது. "அடுத்த வருஷம் போட்டிகள் துவங்குவதற்கு முன்னால், எடையைக் குறைக்கணும் பாஸ்..." என்கிறார் ஜீவ். தினமும் ஓடுவதை வழக்கமாக வைத்திருந்த இவர், கால் ஆபரேஷனுக்குப் பிறகு ஓட முடியாமல் போனது. அதை மாற்ற வேண்டுமென்பதை அடுத்த வருட ஆசையாக வைத்திருக்கிறார் ஜீவ் மில்கா சிங். ஓடுங்க பாஸ்... உங்களைப் பின்பற்றி, உங்களுக்குப் பின்னால் ஒரு நூறாயிரம் இந்திய இளைஞர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்!

Thursday, December 25, 2008

தொடர்பற்ற மூன்று விஷயங்களின் தொடர்பு (நாலு வார்த்தை-025)

நேற்று முன்தினம் என் வாழ்வில் மூன்று விஷயங்கள் நிகழ்ந்தன. அவை எந்தவிதத்திலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. அவையாவன : 1.BCA Academy-யில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட course-ல் கலந்து கொண்டேன். 2. Singapore Flyer இயந்திரக் கோளாறினால் நின்றுவிட, அதிலிருந்த 173 பேரும் ஆறு மணி நேரத்துக்கு மேல் சிக்கி சிரமப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டேன் 3.சாருநிவேதிதாவின் இணையப்பக்கத்தில் தீராநதிக்கு அவரளித்த பேட்டியைப் படித்தேன். தொடர்பற்ற இந்த மூன்று விஷயங்களில் இருந்த தொடர்பு நேற்றுதான் மனதில் தைத்தது.

இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து சிங்கப்பூரில் புதிய கட்டுமானத்துறை வரையறைகள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. அதுபற்றிய 4 நாள் course ஒன்றின் இரண்டாம் நாள் வகுப்பில் நேற்று முந்தினம் கலந்து கொண்டேன். எந்த ஒரு விபத்தும் நமக்கு நிகழாதவரை அது மிகவும் துக்ககரமானது என்ற விஷயம் நமக்கு உரைப்பதில்லை. ஆனால் அத்தகைய விபத்துகளின் வலி எனக்குத் தெரியும். அதை இரண்டு முறை அனுபவித்ததுண்டு. 1992-ம் வருடம் காசிக்குப் பக்கத்திலுள்ளஅன்பாராவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, உடன் பணியாற்றிய நண்பனொருவன் 15 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு உடல் செயலிழந்து போனான். அதே இடத்தில் பணியாற்றிய இன்னொரு நண்பன், சில வருடங்களுக்குப் பிறகு, வேறொரு கட்டுமானப் பணி விபத்தில் உயிரிழந்ததாகக் கேள்விப்பட்டேன். நிகழவே நிகழாது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது நிகழ்ந்து விடுபவைதான் - விபத்துகள்! நேற்று முந்தினம் ஒரு சீன விரிவுரையாளர் confined space பற்றி பாடம் எடுத்தார். காற்றோட்டமற்ற பூட்டிய அறை கூட confined spaceதான் என்றார். அப்போதுதான் பாடம் நடந்து கொண்டிருந்த அறையை உற்றுப் பார்த்தேன். ஜன்னல்களே இல்லாத, False ceiling போடப்பட்ட அறை. ஜன்னல்கள் இல்லை என்பதை அந்த நொடிவரை நான் உணரவில்லை. "இந்த அறையின் கதவைப் பாருங்கள். அது half hour rated fire door" என்றார் விவுரையாளர். அதாவது அந்த அறைக்குள் நெருப்பு ஏற்பட்டால் அது வெளியே பரவாமலும்,வெளியில் ஏற்படும் தீ உள்ளே வராமலும் தடுத்து விடும் சக்தி வாய்ந்தது அந்தக் கதவு.இவை ஏன் என் பார்வையில் பட்டு மனதில் பதியவில்லை? நம்மைச் சுற்றியிருக்கும் பல விஷயங்களைப் பற்றி நமக்குள் இருக்கும் அலட்சிய மனோபாவத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் 'சிங்கப்பூர் ·பிளையரைப்' பற்றிய செய்தியும் வந்து சேர்ந்தது.

சிங்கப்பூர் ·பிளையர் மாலை 4 மணியளவில் திடீரென்று நின்று விட்டதென்றும், அதில் 173 பேர் உள்ளனர் என்றும் சொன்னது வானொலி. சிங்கப்பூர் பெருமை கொள்ளும் கட்டமைப்புகளில் ஒன்று சிங்கப்பூர் ·பிளையர். லண்டனின் புகழ்பெற்ற Londen Eye-யை விடப் பெரியது. இந்த வருடம் மார்ச் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து விடப்பட்டது. 15 மீட்டர் உயர கட்டிடத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் இந்த giant wheel-ன் சுற்றளவு 150 மீட்டர். 28 பேர் பயணம் செய்யக்கூடிய 28 அறைகள் கொண்டது இந்த ·பிளையர். இந்த அறைகள் capsules வடிவில் இருப்பதால், அந்தப் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. ஒரு சுற்று சுற்றிவர 30 நிமிடம் தேவைப்படும். அதன் உள்ளிருந்து சிங்கப்பூரின் அழகை இரவு விளக்கொளியில் ரசிப்பது அற்புதமான அனுபவமாக அமையக்கூடும்...சீக்கிரமே போய்ப் பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இப்படியொரு கோளாறு. ஏற்கனவே இரண்டு முறை இப்படிப்பட்ட பிரச்சனைகள் நேர்ந்து அவை சீக்கிரமே சரி செய்யப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். இந்த முறை அதிலிருந்தவர்கள் 6 மணி நேரம் அந்த capsulesகளுக்குள் சிக்கிக் கொண்டார்கள். எனக்கு சட்டென்று அந்த capsules-ம் ஒரு confined space-தானே என்று தோன்றியது. அந்த வீல் சுற்றுவதை நிறுத்தி விட்டாலும், ஏ.சி, இண்டர்காம் போன்ற மற்ற சேவைகள் முறையாக செயல்பட்டதாக செய்திகள் குறிப்பிட்டன. அப்பாடா, தப்பித்தார்கள் மக்கள். இந்த செய்திகளை இணையத்தில் படித்தபடியே சாருநிவேதாவின் இணையப்பக்கத்தில் போய் நின்றேன்.

வலைப்பூவில் சூடாக விவாதிக்கப்படும் மனிதராக சாரு இருப்பதால், ஏன் அந்தச் சூடு என்று அறிந்துகொள்ளும் முகமாக நிகழ்த்தப்பட்ட வருகை அது. சாருவின் எழுத்துக்களை அவ்வப்போது படித்ததுண்டு. ஆனால், எதையும் முழுமையாக படித்ததில்லை. அவர் எழுத்தின் சுவாராஸ்யம் அதற்குக் காரணமில்லை. ஏதாவது ஒரு கவனச்சிதறல் எப்படியாவது நிகழ்ந்து கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முன் சாரு சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கு வந்திருந்தார். அப்போதும் பார்க்க வாய்க்கவில்லை. ஆனால், சிங்கப்பூர் தேசிய நூலக அதிகாரி புஷ்பலதா அவரைப் பற்றி நல்ல படியாகச் சொன்னார். சாருவின் இணையத்தளத்தில் அவரது பேட்டிகளைத்தான் படித்தேன். தீராநதியின் பேட்டி தீராத சுவாஸ்யத்தோடு நீண்டது. அந்தப் பேட்டியைப் படிக்கும்போது வடிவேலின் 'கைப்புள்ள' கேரக்டர் மனதுக்குள் வந்து வந்து போனதன் காரணம் தெரியலில்லை. அவர் தன்னை ஒரு குழந்தை மாதிரி என்று சொல்லியிருந்தார். ஆனால், அவரது பதில்களில் கூடுதல் பட்சம் நேர்மையிருந்ததாகத் தோன்றியது. அவரது தர்க்கங்களில் உண்மையிருக்கிறதோ இல்லையோ, ஒருவித அப்பாவித்தனமும், புத்திசாலித்தனமும் இருப்பதாகவும் தோன்றியது. ஓரிடத்தில் அரண்மனைகளைப் பற்றிச் சொல்லும்போது "அங்கு பல் துலக்கும் இடம் , உப்பரிகை , நீச்சல் குளம் , குளியலறை எல்லாம் இருக்கும். ஆக்ரா கோட்டையில் மீன்காரன் ஒருவன் அரண்மனைக்குள்ளாகவே யமுனை நதியோடு மீன் கொண்டுவர ஒரு இடம் இருக்கிறது. ஓடிப்பிடித்து விளையாட , இசைக் கச்சேரிகள் நடத்த இப்படி பல இடங்கள் இருக்கிறது. ஆனால் , எங்கும் கக்கூஸ் மட்டும் இல்லை " என்று எழுதியிருந்தார். அடக் கொடுமையே, வகுப்பறையின் ஜன்னல்களைக் கவனிக்காத மாதிரி, அரண்மனைகளில் இதையும் கவனிக்காமல் விட்டு விட்டோமே என்று தோன்றியது. சட்டென்று யோசனை சிங்கப்பூர் ·பிளையருக்கு மாறியது. அங்கும் அதே பிரச்சனைதானே இருந்திருக்கும்... ஆறு மணிநேரம் என்பது குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கும் எவ்வளவு சிரமத்தைத் தந்திருக்கும்...ஒரு capsule-லில் சிக்கிக் கொள்பவர்களின் இயற்கை உபாதைகள் பற்றி எந்த பாதுகாப்பு விதிமுறைகள் கவலைப்பட்டிருக்கப் போகிறது - அந்த விதிமுறையின் பெயர் சாருநிவேதிதா என்று இல்லாத பட்சத்தில்! தொடர்பில்லாத மூன்று விஷயங்களுக்குள் ஏதோ ஒரு தொடர்பு இருக்க முடியும் என்பதை யோசிக்க ஆச்சரியமாக இருந்தது. அன்றிரவு பதிவு போடாமலே தூங்கி விட்டேன்!

Wednesday, December 24, 2008

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்ற மாமனிதர் (நாலு வார்த்தை-024)

பல தன்முனைப்புப் புத்தகங்கள். அவை மாற்றியமைத்த பல்லாயிரம் வாழ்க்கைகள். டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியை உலகத் தமிழர்கள் இப்படித்தான் அடையாளம் காண்கிறார்கள். அந்தப் புத்தகங்களைப் படிப்பவர்களின் மனதையும், அதன் நீட்சியாக அவர்களது வாழ்வையும் தொடுபவையாக இருந்து வருகின்றன டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எழுத்துக் கரங்கள். ஒரு முறை, "ஊழலை யாரால் ஒழிக்க முடியும்?" என்ற கேள்விக்கு, "அது பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் மட்டுமே முடியும்" என்று பதிலளித்தார் டாக்டர் அப்துல்கலாம். ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்களை மாற்றிக் கொள்வதன் மூலம், அவர்களோடு பெரும்பான்மையான நேரம் தொடர்பிலிருக்கும் இளைய தலைமுறையை மாற்றி அமைக்க முடியும் என்ற பொருள் பதிந்த பதில் அது. எல்லா சமூக மாற்றங்களும் தனிமனிதர்களிடமிருந்தே துவங்குகின்றன என்பதை வலியுறுத்தும் பதிலாகவும் அது அமைந்தது. தனிமனித வாழ்க்கையையும், அவர்கள் வாழும் சமூகத்தையும் மாற்றி அமைக்கும் காரணிகளாக அமைந்திருக்கின்றன டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எழுத்துக்கள்.

என் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தார் அவர். அந்த மாற்றம் நிகழ்ந்த ஆண்டு 1983. அப்போது நான் தேனி மாவட்டம் இராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி ஹாஸ்டலில் தங்கி பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். பரிட்சைக்கு பத்து நாட்களுக்கு முன்பு படிக்கத்துவங்கி 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்து, வகுப்பின் 10 ரேங்கிற்குள் தன்னைப் பொருத்திக் கொள்ளும் சராசரி மாணவன். யாரும் புகழவோ, இகழவோ முடியாத பாதுகாப்பான வாழ்க்கையது. அந்த வாழ்க்கையை மாற்றியது...பள்ளி நூலகத்தில் தற்செயலாகப் பார்த்த 'எண்ணங்கள்' என்ற நூல்! அந்த நூல் விவரித்த உலகம் அதுவரை பார்த்திராதது. அதில் சொல்லப்பட்ட விஷயங்கள் புதிய உலகிற்கு இட்டுச் சென்றன. அதுவரை படித்திருந்த சரித்திர, சமூக நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது 'எண்ணங்கள்'.

சிறுவயதில் ஒருமுறை பேராசிரியர் அன்பழகனைப் பார்க்க அழைத்துச் சென்றார் என் தந்தை. அப்பாவின் டைரியில் அவரிடம் ஆட்டோகிரா·ப் வாங்கினேன். அதில் அவர், 'அறிவே அனைத்திற்கும் அடிப்படை' என்று எழுதிக் கையெழுத்திட்டார் . அதுதான் உண்மையென்று நீண்ட நாட்கள் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், 'மனமே அனைத்திற்கும் அடிப்படை' என்று சொன்னது 'எண்ணங்கள்'. மனம் எதை நம்புகிறதோ, எதை ஆசைப்படுகிறதோ அதை அடைந்து விடுகிறது என்ற கருத்து, புதிய எண்ணக் கதவுகளைத் திறந்தது. சின்னச்சின்ன நம்பக்கூடிய சம்பவங்களின் வழி மனதின் மகத்தான சக்தியைப் பற்றி விளக்கி இருந்தார் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி. அவற்றுள், 'உங்கள் லட்சியங்களை எட்டக்கூடியதாக வைத்துக் கொள்ளுங்கள்' என்ற வரியே அதிசய மாற்றங்களை நிகழ்த்தியது. அந்த அறிவுரையை வாழ்க்கையில் செயல்படுத்திப் பார்த்தாலென்ன என்றொரு கேள்வி உள்ளுக்குள் எழுந்தது.

கால் வருடத் தேர்வில் 325 மதிபெண்கள், அரைவருடத் தேர்வில் 350 மதிபெண்கள் என்பது முதல் இலக்கானது. இலக்கை இலக்காக வைத்துப் படித்ததில் அதை விடக் கொஞ்சம் அதிகமாகவே மதிப்பெண் வாங்க முடிந்தது. 3 revision test-களிலும் 400 மதிப்பெண்களுக்கு மேல் என்பது அடுத்த இலக்கு. ஒவ்வொன்றிலும் 425க்கு மேலே எட்ட முடிந்தது. இறுதித் தேர்வில் 400 மதிபெண்களுக்கு மேல் என்பதே உச்ச இலக்கு. மற்றவர்கள் என்ன மதிப்பெண் வாங்குகிறார்கள், என்ன ரேங்க் வாங்குகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத லாடம் கட்டிய பயணம். இறுதித் தேர்வில் 418 மதிப்பெண்கள் வாங்கி பள்ளியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். பிடித்தது நானல்ல - டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் எண்ணங்கள்! நான் அங்கு ஒரு சோதனைக் கருவியாக மட்டுமே இருந்தேன். அந்த வருடமும், அந்த நூலும் என் வாழ்க்கையை முற்றிலும் புதிதாக மாற்றி அமைத்தன.இதே போல், 'தலைவன் ஒரு சிந்தனை', 'பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?', 'உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்' போன்ற டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தகங்களும், அவரது மக்கள் சக்தி இயக்கமும் பல தனி மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்கள் வாழும் சமூகத்தையும் மாற்றி அமைத்தன ; அமைத்துக் கொண்டிருக்கின்றன ; இனி வரும் நூற்றாண்டுகளிலும் மாற்றி அமைக்கும். அதுதான் தமிழகத்திற்குக் கிடைத்த மாபெரும் வரமான டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்ற மாமனிதரின் மகத்தான சக்தி!

Tuesday, December 23, 2008

தூள் கிளப்பிய "தூள்' - Mega Entertainment Show From Singapore (நாலு வார்த்தை-023)

போன வருடம் விஜய் டி.வியில் ஒளிபரப்பான 'தூள்'என்ற சிங்கப்பூர் நடன நிகழ்ச்சியைப் பலரும் பார்த்திருக்கக் கூடும். தரமும், துள்ளலும், கவர்ச்சியும் சமவிகிதத்தில் கலந்து படைக்கப்பட்ட அந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தமிழகத்தில் உள்ள மற்ற Entertainment showகளுக்கு இணையாக, அல்லது அதற்கும் மேலாகச் கூடச் சொல்லலாம் என்பது என் தாழ்மையானக் கருத்து. 6 கோடித் தமிழகத் தமிழர்களில் இருந்து சிறந்த நடனக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு நிகழ்ச்சியை நடத்துவது சுலபம். ஆனால், சிங்கப்பூர் போன்ற ஒரு சிறிய நாட்டில், குறைவான சதவீத இந்தியர்களே உள்ள இடத்திலிருந்து மிகத் தரமான ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தத் தேவைப்படுவது - அளவுக்கு மீறிய உழைப்பு. அந்த உழைப்பைப் போட்டு அப்படிப்பட்ட நிகழ்ச்சியைத் தயாரித்தவர் 'Megastar Productions' என்ற மீடியா நிறுவனத்தை நடத்தி வரும் கலைச்செல்வன். சிங்கப்பூர் மீடியா வட்டாரத்தில் 'கலை' என்ற பெயரில் நன்கு அறிமுகம்.

1995ம் வருடம் முதல் கலை இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதற்கு முன் சிங்கப்பூர் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். அங்கு அவர் பெற்ற அனுபவங்கள்தான் சம்மட்டி அடியாக விழுந்து, விழுந்து இவரைச் செதுக்கி இருக்கின்றன. 'சம்மட்டி' என்ற வார்த்தைப் பிரயோகம் ஏனென்றால், அந்த அனுபவங்களை அப்படித்தான் பார்ப்பதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். எங்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சும்மா politics புகுந்து விளையாடிடும் இல்லெ...அப்படிப்பட்ட அனுபவங்களே இவரைப் புடம் போட்டிருக்கின்றன. இன்று தொலைக்காட்சியில் பெரிதாகப் பெயர் பதித்திருந்தாலும், மனதளவில் தன்னை ஒரு ரேடியோக்காரனாகத்தான் பார்ப்பதாக 1998ல் குறிப்பிட்டிருந்தார். "வானொலியில் பத்து காசு செலவில்லாமல் ஒரு தனிமனிதனால் பிரமாதமான நிகழ்ச்சியைத் தயாரித்து விட முடியும், ஆனால், தொலைக்காட்சியில் அது சாத்தியமில்லை." என்ற காரணத்தை முன் வைக்கிறார். "என்னுடைய மூலதனம் - மிருகத்தனமான உழைப்பு." என்கிறார். 'கலைகிட்டப் போனா அப்படியே பிழிஞ்சு எடுத்துடுவார்.' என்று சிங்கப்பூர் கலைஞர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். He is a perfectionist என்றும் சிலர் சொல்கிறார்கள்.

Think Big எனபது வெற்றியாளர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்'என்று அதையே திருவள்ளுவர் தமிழில் சொல்லியிருக்கிறார். கலைச்செல்வன் தயாரிக்கும் தமிழ் நிகழ்ச்சிகள், சிங்கப்பூர் ஆங்கில, சீன, மலாய் நிகழ்ச்சிகளுக்குக் கூட முன்னுதாரணமாக அமைந்து விடுகின்றன. "நான் இருநூறு சதவீதம் முயற்சி செய்கிறேன். அப்படியே தோற்றுப் போனால் கூட அறுபது சதவீத மதிப்பெண் கட்டாயம் கிடைக்கும்"என்ற இவரது அணுகுமுறையே அந்த வெற்றிகளுக்குக் காரணம். தற்போது இவரது மெகாஸ்டார் நிறுவனம் ரேடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு, கார்பரேட் வீடியோஸ், மொழிபெயர்ப்பு, மேடை நிகழ்ச்சிகள் எனப் பலவற்றிலும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 2008ம் வருட தூள் நடன நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக இருந்தது. இறுதி நிகழ்ச்சிக்கு நடிகை சங்கீதா அழகாக சேலை கட்டி நடுவராக வந்திருந்தார். நிகழ்ச்சியின் பிரமாண்டம் அவரை பிரமிக்க வைத்ததை உணர்ந்தேன். 'ஜோடி நம்பர் 1'ல் கலகலப்பவர், சிங்கப்பூரில் கலகலத்துப்போய் காணப்பட்டார். வாய்ப்புக்கு அழுத்தமாக நன்றி கூறினார். அவரது பிரமிப்பு - கலைச்செல்வனுக்குக் கிடைத்த வெற்றி என்று தோன்றியது.

தற்போது வசந்தம் தொலைக்காட்சியில்'ஒலி,ஒளி' 'இது நம்ம கதை' 'உடலும் உள்ளமும்' 'அரங்கத்தில் இன்று' 'சுட்டீஸ் கிளப்' 'ஹலோ வசந்தம்' என்று 6 நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார் கலைச்செல்வன். 'சிங்கம் சிங்கிளாத்தான் வரும்' என்ற டயலாக் கேட்க நன்றாக இருக்கலாம்; ஆறும், நூறு சதவீத முனைப்போடுதான் தயாரிக்கப் படுகிறது என்பதைப் பார்வையாளர்களை உணர வைக்கத் தேவைப்படுவது - மிருகத்தனமான உழைப்பு. அது - கலைச்செல்வனுக்குக் கைவந்த கலை.

Sunday, December 21, 2008

ஒலி 96.8 என்ற தமிழ்த் தோழன் (நாலு வார்த்தை-022)

சிங்கப்பூர் வானொலி, 'ஒலி 96.8'-ன் நேயர்களின் மனதுக்கு மிகப் பிரியமான படைப்பாளர் குமாரி விமலா சமீபத்தில் திருமதி.விமலாவாக ஆகிவிட்டார். சிம்ரன் மற்றும் ஜோதிகா திருமணம் செய்துகொண்ட பொழுது தமிழக இளைஞர்கள் எப்படித் தவித்துப் போனார்களோ, அதற்கு சற்றேறக்குறைய சமமான அளவில் சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களும் இந்தத் திருமணத்தால் தவித்துப் போனார்கள். அவர்கள் மனதில் ஊதி, ஊதி பெருத்துக் கொண்டிருந்த கனவு பலூன் படாரென்ற சத்தத்தோடு வெடித்து விட்டது. ஏனோ தெரிவதில்லை, சில ஆண்கள் அல்லது சில பெண்களின் திருமணம், சில ஆண்கள் மற்றும் சில பெண்களின் மனதுக்குள் விவரிக்க முடியாத சோகத்தைக் கொண்டு வந்து விடுகிறது. அடர்ந்த சோகத்திலும் 'அம்மா விமலா...நீ எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்மா...நல்லா இருக்கணும்' என்று செவாலியர் சிவாஜி மாதிரி அந்த இளைஞர்கள் மொத்தமாக வாழ்த்தியது, விமலாவின் பிரபலத்தைச் சுட்டுகிறது; அவர் மீது சிங்கப்பூர் நேயர்கள் கொண்டுள்ள அபிமானத்தைக் காட்டுகிறது. விமலா, சிங்கப்பூர் வானொலி மற்றும் சிங்கப்பூர்த் தமிழ் மக்களுக்கிடையில் உள்ள காலகால நெருக்கத்தின் சமீபத்திய அடையாளம். 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் ஒலி 96.8, மக்களின் வாழ்வின் முக்கிய தருணங்களில் ஏதேனும் சிலவற்றில் இடம் பிடித்திருக்கிறது.

சிங்கப்பூர் பற்றிய எனது முதல் ஞாபகத்திலும் ஒலி 96.8-ற்கு முக்கிய இடம் உண்டு. ஒரு 1995ம் வருடத்திய இருட்டில் நான் முதல்முதலாக சிங்கப்பூர் மண்ணில் கால் பதித்தபோது, என்னை தாமான் ஜூரோங்கில் உள்ள குடியிருப்பிற்கு அழைத்துச் செல்ல, கம்பேனிக் கார் காத்திருந்தது. அகன்ற சாலைகள், அதை இரண்டாகப் பிரிக்கும் இரும்புத் தடுப்புகள், அழகான ஒழுங்குபடுத்தப்பட்ட மரங்கள், தலைமுடி வெட்டப்பட்ட செடிகள், உயர்ந்த விளக்குக் கம்பங்கள், அதிலிருந்த வடித்து சாலையை நிறைத்துக் கொண்டிருந்த மஞ்சள் வெளிச்சம், முதுகு முழுக்க சிவப்பு விளக்குகளோடு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள்... நிஜமாக நான் பட்டிக்காட்டான், ஆ..வென்று வாய் பிளந்து பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்திருப்பேன்? வானத்தில் மிதந்து கொண்டிருந்த என்னை பூமிக்குக் கொண்டுவந்தது சிங்கப்பூர் வானொலிதான். காருக்குள் ஏதோ ஒரு திரைப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த இசை, ஸ்டீரியோ எ·பெக்டில் காருக்குள் பரவி என்னுள் நுழைகிறது. அந்த காரில் தூவப்பட்டிருந்த நறுமணம் புலன்களில் சிலிர்க்கிறது...வெளியே ஒரு சொர்க்க பூமி...உள்ளே ஒரு இசை சிம்மாசனம்...ஒரு அரசன் மாதிரி நவீன ரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த அந்த இரவு, பல ஆயிரம் பயணங்களைக் கடந்தும் மனசிலிருக்க, சிங்கப்பூர் வானொலி முக்கிய காரணம். இப்படி சில முக்கியமான தருணங்களை ஒவ்வொரு சிங்கப்பூர் தமிழரின் வாழ்க்கையிலும் தந்திருக்கிறது ஒலி 96.8.

சிறிது காலத்திற்கு முன்புவரை அழகிய பாண்டியன் அதன் தலைவராக இருந்தார். அவரே படைத்த 'வானம் வசப்படுமே' என்ற, சாதனை மனிதர்களைப் பற்றிய தன்முனைப்புத் தொடர், பலரையும் வலுவாகச் சென்று சேர்ந்தது. பின்னர் புத்தக வடிவிலும் வெளிவந்தது. ஒலி 96.8 தற்போது தீபன் மற்றும் கீதாவின் வழிகாட்டலில் வெற்றி நடைபோடுகிறது. பழைய, புதிய முகங்கள் கலந்த கலவையாக இருப்பதே ஒலி 96.8ன் பலம். நிகழ்ச்சிகள் பிரிவு, செய்திப் பிரிவு என்று இரண்டு பிரிவாக இயங்குகிறது ஒலி. நிகழ்ச்சிகள் பிரிவில் தீபன், பாலா, ரெ.சோமசுந்தரம், பிரேமா, மீனாட்சி சபாபதி, பாமா, ர·பி போன்ற முதல் தலைமுறையும், திருச்செல்வி, விமலா, விஜயா என்ற அடுத்த தலைமுறையும் கலந்து, சமூக அக்கறையும், பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்ந்த சுவையான நிகழ்ச்சிகளைப் படைக்கிறார்கள். பல நிகழ்ச்சிகளில் மீனாட்சி சபாபதியின் தமிழுணர்வு பளிச்சென்று வெளிப்படுவதை நேயர்கள் உணர்வதுண்டு. செய்திகள் பிரிவில் செ.பா.பன்னீர் செல்வம், எஸ்.பீட்டர், பொன்.மகாலிங்கம் போன்றோர் சபா.முத்து நடராஜனோடு சேர்ந்து இயங்குகிறார்கள்.

சமையல் செய்தபடி வானொலி கேட்கும் பெண்களும், காரோட்டியபடி வானொலி கேட்போரும், வேலையிடத்தில் வானொலியின் இசைப் பின்னணியில் பணியாற்றுவோரும் ஒலி 96.8ன் நிரந்தர நேயர்கள். மகாபாரத்தை வானொலி நாடகமாக்கிய பெருமையும் 'ஒலி'க்கு உண்டு. பலவருடங்களுக்கு முன் ஒலிபரப்பான மகாபாரதம் இப்போது மறு ஒலிபரப்பாகிறது. Curise பயணம், ஆஸ்திரேலியப் பயணம் போன்ற புதுமையான திட்டங்கள் மூலம் நேயர்களோடு அணுக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது ஒலி. அது புதிய தலைமுறை படைப்பாளர்களைத் தொடர்ந்து உருவாக்கி வரும் விதம் எதிர்காலம் பற்றி நம்பிக்கையளிக்கிறது. தமிழை சிங்கப்பூர் இளையர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ஒலி 96.8ன் பங்கு மிக, மிக முக்கியமானதாகும். "வெறும் சொற்களோடுதான் வேலை செய்கிறோம் என்று சில சமயம் அலுப்பு ஏற்படும். ஆறுதல் தருவது - எல்லாம் முடிந்த பிறகு சொல் மட்டுமே மிஞ்சும் என்று சர்ச்சில் சொன்ன சொல்!" என்று தன்னைப் பற்றிய குறிப்பில், ஒலி 96.8ன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் இந்திரஜித் (தற்போது அவர் ஒலி 96.8லிருந்து வெளியாகி விட்டார்). உண்மையில் ஒலி 96.8 என்பது வெறும் சொல் மட்டுமல்ல, சிங்கப்பூர்த் தமிழர்தம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கம்.

ஒலி 96.8ன் இணையப் பக்க முகவரி :
http://www.oli.sg/

விமலாவின் வலைப்பூ முகவரி :
http://davimcicode.blogspot.com/

சிங்கப்பூர் கவிமாலையும், கவிச்சோலையும் (நாலு வார்த்தை-021)

நடிகர் சிவக்குமார் சிங்கப்பூர் வருகிறார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் கண்ணதாசன் விழாவும் ஒன்று. சின்ன நாடான சிங்கப்பூரில் பல தமிழ் அமைப்புகள் இருக்கின்றன. 30க்கும் மேல் என்று சொல்கிறார்கள். அவற்றில் சில மட்டும்தான் இடைவிடாது இயங்குகின்றன. மற்றவை சில தனிமனிதர்களுக்கு விசிட்டுங் கார்டாக மட்டுமே பயன்படுகின்றன. இடைவிடாது தொடர்ந்து இயங்கும் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளில் முக்கியமானது சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம். கவிஞரேறு அமலதாசனால் வலுவூட்டப்பட்டு, தற்போது நா.ஆண்டியப்பன் தலைமையில் சீராக இயங்கி வருகிறது. அவர்கள் வருடம்தோறும் கண்ணதாசன் விழாவை நடத்துகிறார்கள். ஒவ்வொரு வருடமும் யாராவது ஒரு தமிழக வி.ஐ.பி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். போன வருடம் எஸ்.பி.முத்துராமன் வந்திருந்தார். இந்த வருடம் நடிகர் சிவக்குமார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் கவிச்சோலை என்ற நிகழ்ச்சியை பெக் கியோ சமூக மன்றத்தோடு இணைந்து நடத்தி வருகிறது. கவிச்சோலையில் கவிதையைப் பற்றி பேசுவார்கள். கலந்து கொள்ளும் கவிஞர்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட தலைப்பில் கவிதை எழுதி வந்திருப்பார்கள். அதில் சிறந்த 3 கவிதைகளுக்கு தலா 30 வெள்ளி பரிசு வழங்கப்படும். இதோடு, இலக்கண வகுப்பும் நடக்கிறது.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தோடு எனக்கு கடந்த 12 வருடங்களாக பரிட்சயமுண்டு. அந்த 12 ஆண்டுகளின் துவக்கத்தில் கவிஞரேறு அமலதாசன் தலைவராக இருந்தார்.(கவிஞரேறு அமலதாசனின் பல படங்களில் சில மேலே) மிக எளிமையான மனிதர். தமிழ் மேலும், தமிழினம் மேலும் மனமார்ந்த ஈடுபாடு உள்ளவர். தமிழைப் பற்றியும், தமிழினம் பற்றியும் பேசும்போதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு விடுவார். அந்த நேரங்களில் அவர் கண்கலங்கி நிற்பதை பலமுறை பார்த்ததுண்டு. சிங்கப்பூர் தமிழினத் தந்தை என்று குறிப்பிடத்தக்க தமிழவேள் கோ.சாரங்கபாணி மேல் உள்ள அபிமானத்தில், அவரைப் பற்றி ஒரு கவிதை நூலை எழுதியுள்ளார். செயலாளராக இருந்த நா.ஆண்டியப்பன் தலையெடுத்ததும், தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, தற்போது ஆலோசகராக இருக்கிறார். எனது 'அலையில் பார்த்த முகம்' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கையால் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு வழங்க வைத்தேன். தன்னலமற்ற ஒரு தமிழ்ச் சேவையாளருக்கு அது மட்டுமே என்னால் முடிந்தது. இன்று- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தனக்கென்று சில வரையறைகளை வைத்துக் கொண்டு, அந்த வரையறைக்குள் சிறப்பாக இயங்கி வருகிறது. சமீபத்தில் கூட அதற்கு அரசாங்கத்தால் 25,000 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தால் இன்னும் நிறையவே செய்ய முடியும் என்பது பல வெளிப் பார்வையாளர்களின் கருத்து.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ ஒரு காலத்தில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். திண்டுக்கல் லியோனி குழுவினரை மிகப் பிரபலமடையச் செய்த சிங்கப்பூர் பட்டிமன்றத்தை தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்தபோது, நிகழ்ச்சி அறிவிப்பாளராக செயல்பட்டவர் அவர். அவரோடு நட்பு ஏற்பட்ட நிலையில், பிச்சினிக்காடு இளங்கோவின் 'வியர்வைத் தாவரங்கள்' கவிதைத் தொகுப்பை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் வெளியிட ஏற்பாடு செய்தேன் (1999 என்று ஞாபகம்). எனது நண்பர் பாலகோபாலன் நம்பியார் கோலாலம்பூரில் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். அந்த வெளியீட்டிற்கு அமலதாசன், நா.ஆண்டியப்பன், சுப.அருணாச்சலம், இளங்கோ, நான் என ஒரு பெரிய குழுவாகப் போயிருந்தோம். அற்புதமான சில நாட்கள் அவை. வெளியீடும் வெற்றிகரமாக நடந்தது. ஆனால், பிச்சினிக்காடு இளங்கோ மெல்ல மெல்ல எழுத்தாளர் கழக நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டார். அதற்கான காரணங்கள் இன்றுவரை சரியாகத் தெரியவில்லை. எந்த ஒரு விஷயம் பற்றியும் தனக்குத் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லக்கூடியவர் பிச்சினிகாடு இளங்கோ. அதுவா காரணம் என்றும் தெரியவில்லை. ஆனால், அந்தப் பிரிவு தமிழுக்கு லாபமாக அமைந்தது.

அந்தப் பிரிவிற்குப் பிறகுதான், பிச்சினிக்காடு இளங்கோ கம்போங் கிளாம் சமூக மன்றத்தோடு சேர்ந்து 'கவிமாலை' நிகழ்ச்சியை நடத்தத் துவங்கினார். அவரது நட்பார்ந்த அணுகுமுறை பலரையும் அந்த நிகழ்விற்கு இழுத்தது. 'காதலில் விழுந்தேன்' படத்தில் 'உன் தலைமுடி உதிர்வதைக் கூட' என்ற பாடலை எழுதிய நெப்போலியன் உட்பட பல கவிஞர்களுக்கு உந்துசக்தியாக இருந்தது கவிமாலை. வாசித்த, நேசித்த கவிதைகளைப் பற்றிய பகிர்வு, போட்டிக் கவிதை, சிறப்புச் சொற்பொழிவு என்று தமிழ் மணக்கும் மாலையாக அமைந்தது கவிமாலை. வாய்ப்பு கிடைக்கும் போதேல்லாம் நானும் அதில் கலந்து கொள்வது வழக்கம். கவிமாலையின் வெற்றி, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கவிச்சோலைக்கு வழிவகுத்தது. கவிஞர்களுக்கு கவிமாலை, கவிச்சோலை என்ற இரண்டு குதிரைகளில் பயணம் செய்யும் வாய்ப்பு. ஓவ்வொரு மாத முதல்வார ஞாயிற்றுக்கிழமையில் கவிச்சோலையும், கடைசிவார சனிக்கிழமையிம் கவிமாலையும் நடந்து வருகின்றன. தற்போது பிச்சினிக்காடு இளங்கோ பணிநிமித்தம் சென்னைக்கு சென்று விட்ட நிலையில், கவிஞர் ந.வீ.சத்தியமூர்த்தி போன்றவர்கள் அதை உயிர்ப்புடன் இயக்கி வருகிறார்கள். கவிமாலை தற்போது ஜலான் பஸார் சமூக மன்றத்தின் ஆதரவுடன் நடப்பதையும் குறிப்பிட வேண்டும். சமீபத்தில் தனது 100வது நிகழ்வை நடத்திய கவிமாலை அமைப்பு 'கூடி வாழ்த்தும் குயில்கள்' என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டது. மொத்தத்தில், சிங்கப்பூர் தமிழ்ச்சூழலை துடிப்புடன் வைத்திருப்பதில் கவிமாலையும், கவிச்சோலையும் பெரும் பங்காற்றுகின்றன என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.