Saturday, December 13, 2008

கவிஞர் கருணாகரசின் "தேடலைச் சுவாசி" (நாலு வார்த்தை-013)இரண்டு வருடங்களுக்கு முன்னைய நாளொன்றின் சிங்கப்பூர் ராத்திரி. பெக் கியோ சமூக மன்றத்தின் வாயில். பாலைவனச்சோலை சந்திரசேகரை நகலெடுத்த மாதிரி இருந்த ஒர் ஒடிசலான கருப்பு இளைஞர் தனது கவிதை தொகுப்பொன்றை என்னிடம் நீட்டுகிறார். "தேடலை சுவாசி" என்பது அதன் தலைப்பு. கருணாகரசு அவரது பெயர். பொருளாதார நிமித்தம் சிங்கப்பூர் வந்திருந்தாலும், தன்னையும், தமிழையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர். கவிதைத் தொகுப்பின் பின்பக்கத்தைப் புரட்டிப் பார்க்கிறேன். அதில் இருந்த கவிதை ஒன்று படாரென்று என்னைப் புரட்டிப் போடுகிறது. "உழுதவன் கண்ணீரை / அழுதே துடைக்கிறது / வானம்". என்னை மட்டுமல்ல, பலரையும் பாதித்த கவிதை அது என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.

மூங்கிலாய் நிமிர்ந்திருந்த அந்த கருப்பு இளைஞனுக்குள் ஏதோ ஒரு கோபம் தொடர்ந்து கனன்று கொண்டிருப்பதையும், அது கவிதை நெருப்புத் துண்டுகளாய் விழுவதையும் பக்கத்திலிருப்பவர்கள் உணர்ந்தார்கள். அந்த இளைஞனது கண்களிலோ, எப்போதும் நட்பு வெளிச்சமிருந்தது. அவர் தனது முன்னுரையில் தனது வேர்களைப் பற்றிச் சொல்லும்போது, "தமிழ்ப் பற்றுள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்ததுதான் நான் தமிழ்ப் பிடிப்போடு இருப்பதற்குக் காரணம் என்று எண்ணுகிறேன். பொதுவாக கவிஞர்கள்தான் கவிதை எழுதுவார்கள், ஆனால் ஒரு கவிதைதான் என்னைக் கவிஞாக்கியது" என்று எழுதியிருந்தார் ; அந்தக் கவிதைகளில் அடர்த்தியாய் இருந்த கோபத்தின், சோகத்தின் மூலம் புரிந்தது. "நீங்கள் / அனுசரிக்க வேண்டாம் / அன்னையர் தினத்தை. / மூடினால் போதும் / முதியோர் இல்லங்களை. /" என்று கட்டளையிடும் கவிதைக்கான காரணம் தெரிந்தது. அவள் மற்றும் அவள்கள் இல்லாமல் முழுமையடைந்த தொகுப்பு எது..."அவள் / கசிய விட்டதென்னவோ / ஒரு மெல்லிய / புன்னகையைத்தான் / உடைந்தது / என் மனத் தடாகத்தின் / கரைகள் / அங்கே / தத்தளிக்கின்றன / என் கவிதைகள்." என்றொரு அழகான வாக்குமூலம்.

எமது கிராமங்களில் தமிழ் வாழ்வின் பழைய அடையாளங்களோடு, பகடியும், எள்ளலும் இன்றும் காற்று வெளியிடை கலந்து கிடக்கின்றன. அப்பத்தா ரவிக்கை அணிந்து அவன் பார்த்ததில்லை. அத்தை மகள் அணிந்து பார்த்திருக்கிறான் ; இன்றும் பார்க்கிறான். அட.. அதைப் பார்த்து இந்தக் கவிதை ஏன் இப்படிக் கிழிகிறது? "சன்னல் வழி / அவளைப் பார்த்தேன் அன்று./ சன்னலையே / அவளிடம் பார்த்தேன் / இன்று. /" இந்த கிராமத்துச் சன்னல்தான் நம்பிக்கையை, நம்பிக்கை இன்மையை என்று எத்தனை எத்தனை விஷயங்களை விழிமுன்னால் விரித்து வைக்கிறது. இதழோரம் புன்னகை வழிய, கருணாகரசு இப்படிச் சொல்கிறார்..."நம்பிக்கை இழந்தவனை / நம்பி வாழ்கிறான் / ராசிக்கல் வியாபாரி"

தத்துவத் தளங்களிலும் தத்தளிக்கின்றன கவிதைகள். "நான் கருவறைக்குள் / இருளில்தானே / என்னைத் தொடங்கினேன்./" அறிவுரையாகவும் வழிகின்றன. "எதிரியிடம் / அடிக்கடி சிரித்துவை / அல்லது / அதுபோல் நடித்து வை./ இவை இந்தத் தொகுப்பு முழுவதும் சிதறிக் கிடக்கும் கவிதைகளின் சில துளிகள்தான். சுருக்கமாகச் சொல்வதும், சுருக்கென்று தைக்கும் விதத்தில் சொல்வதும் கருணாகரசுக்கு இயல்பாக வருகிறது. அன்றாட வாழ்க்கையின் அழுத்தத்தில் அமுங்கிப் போய்விடாமல் இவர் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார் பொன்.மகாலிங்கம். நமக்கும் அதே ஆசைதான். நிறைய எழுதுங்கள் கவிஞர் கருணாகரசு.

Friday, December 12, 2008

ஒவ்வொரு வருடமும் வெடிப்பான் ஒரு 'பருத்தி' வீரன்! (நாலு வார்த்தை-012)2008 இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தமிழ்சினிமா செய்த சாதனைகள் மற்றும் எதிர்க்கொண்ட சோதனைகளைப் பற்றிய அலசல் சீக்கிரமே துவங்கி விடும். பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம், சங்கர் போன்ற சாதனையாளர்களைத் தொடர்ந்து ஒரு புதிய தலைமுறை தன்னை வெகு தெளிவாக அடையாளப்படுத்தி இருக்கும் ஆண்டு என்பதால், 2008 தமிழ்ச் சினிமா சரித்திரத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படும். கார்ப்பரேட் கம்பேனிகளின் வருகையால் நேர்ந்த குட்டை குளம்பிய நிலையும் மெல்ல மாறி வருகிறது. இந்தச் சூழலில், திரைப்படங்களை மொத்தமாக விலைக்கு வாங்கி வெளியிடத் துவங்கியிருக்கிறது சன் டி.வி. இதைப் பற்றிய விவாதங்கள் உள்ளும், புறமும் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது எங்கு போய் முடியும் என்ற கேள்விக்கான விடை, 2009-ன் இறுதியில் கிடைக்கலாம்.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இளைய தலைமுறை படைப்பாளிகளின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்திய வரவுகளில், அமீர், வெற்றிமாறன், ராம், வசந்தபாலன், விஷ்ணுவர்த்தன், கெளதம் மேனன், பாலாஜி சக்திவேல், செல்வராகவன், மிஷ்கின், சசிக்குமார், வெங்கட் பிரபு, சிம்புதேவன் போன்றவர்கள் மிகுந்த நம்பிக்கையளிக்கிறார்கள். சமீபத்திய வரவென்றால் - கடந்த 5 அல்லது 6 ஆண்டுக்குள் என்று வைத்துக் கொள்ளலாம்... இவர்களைத் தவிர பாலா, முருகதாஸ், சேரன், சுசி கணேசன், லிங்குசாமி, தங்கர் பச்சன், சசி என்று இன்னொரு முக்கியமான பட்டியலும் இருக்கிறது. இவர்கள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு முன்பு வெளிச்சத்திற்கு வந்தவர்கள்.

இன்றைக்கு படமெடுக்க வருகிற இயக்குனர்கள் பலருக்கும் கலை நுணுக்கமும், வடிவமும் எளிதில் கைவருவதைப் பார்க்கிறோம். ஆனால் அவர்களில் பலருக்கும் கொஞ்சம் கூட சமூக அக்கறை இல்லையே என்ற நியாயமான கவலையோடு இருக்கிறார்கள் தமிழ் மக்கள். 'சமூக அக்கறை, ஆலைச் சக்கரை என்று பேசுபவர்கள் பலரும், திருட்டு வி.சி.டியில் படத்தைப் பார்த்து விட்டு விமர்சிக்கும் ஆட்கள்' என்ற மறுவாதம் படைபாளிகளிடம் இருந்து வரக்கூடும். அதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. இன்றைய சினிமா, ஆயிரமாயிரம் கோடிகள் புரளும் வர்த்தகப் பொருளாகி விட்டது. இந்தியாவைப் பொருத்தவரை Cinena is not an art, but a bussiness என்ற தெளிவு நமக்கு வந்து விட்டால், படைப்பாளிகளைக் குற்றம் சொல்வதைக் குறைத்துக் கொள்ள முடியும்.அதனால்தான், வர்த்தக நிர்பந்தங்களை மீறி,'பருத்திவீரன்','காதல்','வெயில்'
'சுப்ரமணியபுரம்" போன்ற நல்ல படங்கள் வரும்போது, அந்தப் பெருமை முழுவதும் படைப்பாளிக்கும், அதன் தயாரிப்பாளருக்கும் போய்ச் சேருவது அவசியமாகிறது.

2009ம் ஆண்டு தமிழ்ச்சினிமா எப்படி இருக்கும்? உலகப் பொருளாதரச் சிக்கலின் தாக்கம் சினிமாவரைக்கும் நீளுமா என்று தெரியவில்லை. புதுப்படங்களில் கார்பரேட் கம்பேனிகள் மிகவும் யோசித்தே முதலீடு செய்வார்கள் என்று தோன்றுகிறது. சன் டி.வி 10 ~ 15 படங்களையாவது வாங்கி வெளியிடக்கூடும். 'சின்ன பட்ஜெட் படங்கள் மட்டும்' என்ற வியூகத்தை சில கம்பேனிகள் கையில் எடுக்கலாம். அந்தச் சூழலில் 'காதல்' போன்ற கதையம்சமுள்ள படங்கள் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. பல கம்பேனிகள் ஸ்டார் வேல்யூ உள்ள படங்களையே நாடக்கூடும். ஆனால், எல்லா சூழ்நிலைச் சிக்கல்களையும் மீறி, ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பருத்திவீரன் எப்படியாவது வெடித்து முளைத்து விடுவான் என்பதுதான் தமிழ்ச்சினிமா பெற்றிருக்கும் அதிசய வரம்!

நான் கிளீன் போல்டு செய்த இரண்டு டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் (நாலு வார்த்தை-011)

பலத்த பாதுகாப்புகளுக்கிடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா கிரிக்கெட் டெஸ்ட் போட்டி துவங்கி விட்டது. எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திற்கு உலக டெஸ்ட் வரலாற்றில் மிக ஸ்பெஷ்லான இடம் உண்டு. இந்தியா - ஆஸ்திரேலியா Tied Test உட்பட பல சரித்திர சம்பவங்கள் நிகழ்ந்த தளம் அது. பலரும் சேப்பாக்கம் மைதானம் பற்றிய பல நினைவுகளை தங்களுக்குள் தக்க வைத்திருப்பார்கள். எனக்கும் சில நினைவுகள் உண்டு. 1. வாலாஜாபாத் முனையில் தொப்பியைக் கழற்றி விட்டு ரசிகர்களை நோக்கி தலைவணங்கிய மதன்லால் 2. ஒரு உள்ளூர் போட்டியில், விவேக் ரஸ்டான் பந்து வீச, பின்காலில் சென்று எல். சிவராமக்கிருஷ்ணன் அடித்த cover drive 3. இன்னொரு உள்ளூர் போட்டியில், எம்.செந்தில்நாதன் தொடர்ந்து இரண்டு பந்துகளை ஸ்டேடியத்தின் உச்சத்திற்கு அனுப்பி விட்டு, மூன்றாவது பந்தில் ஸ்டம்பிங் ஆனது. இப்படி பல நினைவுகள்.இவை மட்டும்தானா? இன்னும் இருக்கின்றன. இரண்டு பிரசித்தி பெற்ற டெஸ்ட் பிளேயர்களை நான் கிளீன் பொல்ட் செய்த கதையை எப்படி மறக்க முடியும்....சும்மா கதை விடவில்லை. உண்மையில் நடந்த கதை.

1978-ல் வெஸ்ட் இண்டீஸோடு நடந்த டெஸ்ட் போட்டிதான் நான் முதல் முதலாக நேரில் பார்த்தது. அப்போது எனது தந்தை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இப்போதும் மீதமிருக்கும் கிரிக்கெட் ஆர்வம் அவர் ஊட்டியதுதான். பாரிமுனையில் பேரம் பேசி, ஆப்பிள், ஆரஞ்செல்லாம் வாங்கிக் கொண்டு வாலாஜாபாத் சிமெண்ட் படிகளில் போய் உட்கார்ந்து கொண்டோம். அன்று வெஸ்ட் இண்டீஸ்தான் பேட்டிங். மற்றவர்களைப் பற்றி அவ்வளவாக ஞாபகம் இல்லை; ஆனால், இடது கை ஆட்டக்காரர் காளிச்சரண் மட்டும் ஞாபகம் இருக்கிறார். அவர் பவுண்டரிகளாக விளாசித் தள்ளியதும் ஞாபகம் இருக்கிறது. காளிச்சரண் செஞ்சுரியை நெருங்கிக் கொண்டிருந்தபோது வெங்கட்ராகவன் பந்து வீச வந்தார். தலைமுடி எம்பி, எம்பிக் குதித்தபடி வெங்கட் பந்து வீச வர, எல்லோரும் காளிச்சரணின் செஞ்சுரிக்கு கைதட்ட எழுந்து விட்டார்கள். நானும் எழுந்தேன். ஆனால், அது என்னவோ தெரியவில்லை...அந்தப் பந்தில் காளிச்சரண் கிளீன் போல்டு ஆகப் போவதாக எனக்குத் தோன்றியது. அந்த நினைப்பை மெய்யாக்கி,கிளீன் போல்டு ஆகி, ஆத்திரத்தோடு வெளியேறினார் காளிச்சரண்.

அடுத்து 1979-ல் பாகிஸ்தானோடு நடந்த டெஸ்ட் போட்டியையும் சேப்பாக் மைதானத்தில் பார்த்தேன். அது - கபில்தேவ் என்ற இளம்சிங்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த டெஸ்ட் மேட்ச். கபில்தேவின் பந்து வீச்சு சீற்றமாக வெளிப்பட்ட விதம் பிரமிக்க வைத்தது. அதற்கப்புறம், 1982-ம் ஆண்டு இங்கிலாந்தோடு நடந்த டெஸ்ட் போட்டியைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றார் என் தந்தை. முதல்நாள்தான் பாப் வில்லிஸின் பந்தை தொடர்ந்து மூன்று முறை பவுண்டரிக்கு அடித்து, எகிறிப் பாய்ந்த இன்னொரு பந்தில் முகத்தில் அடிபட்டு மருந்துவமனைக்குச் சென்றிருந்தார் வெங்சர்க்கார். நாங்கள் போன தினத்தன்று விஸ்வநாத்தும், யஷ்பால் ஷர்மாவும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். விஸ்வநாத் இரட்டை சதமடித்தார். போத்தம், யஷ்பாலுக்கிடையே கொஞ்சம் gamemanship நிலவியது. யஷ்பால் இரண்டு சிக்ஸர் விளாசிய பிறகுதான் அடங்கினார் போத்தம்.

வழக்கம்போல், பாப் வில்லிஸின் பந்து வீச்சுதான் கொஞ்சம் குழப்பமிக்கதாக இருந்தது. அவர் ஓடி வரும் விதமும், பந்து வீசும் முறையும் அப்படி. ஆனால், பந்து ஆடுகளத்தில் பட்டதும் எகிறும், nip, எப்போதும் அவரது பந்து வீச்சில் இருக்கும். வில்லிஸ், பெவிலியன் முனையிலிருந்து பந்து வீச ஓடி வருகிறார். விஸ்வநாத் 222-ல் பேட்டிங் செய்கிறார். Again, ஏனோ தெரியவில்லை. அந்தப் பந்தில் விஸ்வநாத் கிளீன் போல்டு ஆகப் போகிறார் என்று தோன்றுகிறது. நினைத்த மாதிரியே, விஸ்வநாத் கிளீன் போல்டு. ஒருவேளை நான் ஒன்றுமே நினைக்காமல் கடலைப்பருப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் கூட, அவர் போல்டாகியிருக்கக் கூடும். ஆனால், அன்று நான் நினைத்த போது நடந்து விட்டது. அவ்வளவுதான். என்றாலும், ஏதாவது ஒரு டெஸ்டில், இந்திய அணி பெளலர்கள் நாள் முழுக்க விக்கெட் எடுக்க முடியாமல் திணறும்போது, நான் 'நினைப்பால்' கிளீன் போல்டு செய்த இரண்டு Legendary பேட்ஸ்மேன்கள் ஞாபத்துக்கு வருவார்கள். தயவு தாட்சண்யமின்றி எதிரணி பேட்ஸ்மேன்கள், நமது பெளலர்களை வெளுத்துக் கட்டும் ஒரு சோக தினத்தில், டி.வி முன்னால் உட்கார்ந்திருக்கும் என்னைப் போன்ற சாமானிய இந்தியனால் இதைத் தவிர வேறேன்னங்க செய்ய முடியும் சொல்லுங்கள்?

Thursday, December 11, 2008

உன் தலைமுடி உதிர்வதைக்கூடத் தாங்க முடியாது அன்பே...(நாலு வார்த்தை-010)

இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் நெப்போலியன். காதலின் விழுந்தேன் படத்தில் வரும் இந்தப்பாடல் தமிழக இளைஞர்களின் சமீபகால தேசியகீதம். யார் இந்த நெப்போலியன் என்ற கேள்வியோடு பலரும் புருவம் உயர்த்தி இருக்கும் நிலையில் - அவர் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கவிஞர் நெப்போலியன் எழுதிய பாடல் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர் என்று அவர் வாய்ப்புகளுக்காக முனைப்பாக இருக்க வேண்டுமென்றுதான் ஒரு சராசரி ரசிகர் கற்பனை செய்திருப்பார். ஆனால் அவரது வாழ்க்கை சிங்கப்பூரின் கட்டுமானத் தளங்களில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. ஏன்?

நெப்போலியனை எனக்கு 1998 முதல் தெரியும். ஒரு துடிப்புமிக்க இளைஞராக அவரைப் பலரும் அடையாளம் கண்டார்கள். தொடர்ந்து தமிழ்முரசில் அவரது கவிதைகள் வரும். அந்தக் கவிதைகளின் கோணம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கும். கவிமாலை போன்ற ஏதாவது சில நிகழ்ச்சிகளில் அவ்வப்போது சந்தித்துக் கொள்வோம். நிகழ்ச்சி முடிந்ததும், கூட்டமாக உட்கார்ந்து, கோப்பி சாப்பிட்டபடி கவிதையும், கதையும் பேசுவோம். சுற்றிலும் சீனச் சமையல் வாசனை நெடி மூக்கைத் துளைக்க, சீன, மலாய் மொழிப் பேச்சுக்களின் நெடி காதைத் துளைக்க, தமிழ் பேசியிருக்கும் சுகம் சிங்கப்பூரில் கிடைக்கும். அனுபவிப்போம். நெப்போலியன் தான் எழுதிய கவிதைகளை "நானும் என் கருப்புக் குதிரையும்" என்ற தலைப்பில் தொகுத்து சிறப்பாக வெளியிட்டார். நான் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், சில வருடங்கள் கழித்தும் சில நண்பர்கள் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததால், அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததை உணர முடிந்தது.

அங்மோ கியோ நூலகத்தில் ஒரு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு, எம்.ஆர்.டி நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தபோதுதான் நெப்போலியன் பேச்சோடு பேச்சாகச் சொன்னார், "சென்னைக்குப் போறேன் பாலு, சினிமாவுக்கு பாட்டெழுதத்தான். எப்படியாவது எழுதிடுவேன்னு நினைக்கிறேன்." அவரது குரலில் தெரிந்த உறுதி, 'முடிகிற விஷயமா அது' என்ற என் மனக் கேள்வியை அசைத்துப் பார்த்தது. மெல்ல அசை போட்டதில், அவர் அதுவரை எடுத்து வைத்து வந்திருந்த அடிகள் தெளிவானவை என்பதும் புரிந்தது. "வாழ்த்துக்கள் நெப்போலியன்" என்று நான் அவரிடம் சொன்னபோது அந்தி, இரவுக்குள் நகர்ந்து கொண்டிருந்தது; விளக்கு வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருந்தன சாலைகள். அப்புறம் அவர் சென்னைக்குப் போனார். நாங்கள் அவரை மறந்து போனோம். எந்திரமாய் ஓடும் வாழ்க்கைச் சூழலில் சிலசமயம் அவரவர் வாழ்க்கையே மறந்து விடுகிறது.

அஞ்சப்பர் உணவகம் போகும்போது அவர் நினைவு வரும். அவரது நண்பரிடம் விசாரிப்பேன். "முயற்சி பண்ணிட்டு இருக்காருங்க. எப்படியும் எழுதிருவேன்னு சொல்றாரு" என்பார். ஆழ்கடலில், ஒரு மரத்துண்டை பிடித்தபடி நீந்தும் மனிதனின் பிம்பம் மனதில் வந்து போகும். எத்தனை பேர் மூழ்கிய கடல் இது? எத்தனைபேரை தாகத்தோடு பருகியிருக்கிறது அந்தக் கடல்? 'இருந்த நல்ல வேலையை விட்டுட்டு, ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் வெள்ளியை விட்டுட்டு, எதுக்குங்க இதெல்லாம்' என்று அவரைப் பற்றி கவலைப்பட்டார்கள் சில நண்பர்கள். ஆனால் 2007 ஜனவரி சென்னைப் புத்தகக் கண்காட்சியில் போன ஸ்டாலில் எல்லாம் அவரது கவிதைத் தொகுப்பைப் பார்த்தபோது, நெப்போலியன் சரியான திசையில்தான் போய்க் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். ஒருநாள் விஜய் டி.வியின் "விஜய் டைம்ஸ்" அவரைக் காட்டியது. அதில் அவர், தான் விஜய் ஆண்டனியின் இசைக்கு பாடல் எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். மகிழ்ச்சியாக இருந்தது. நினைத்ததை சாதித்து விட்டார் நண்பர். சில நாட்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் அவரை மறுபடியும் சந்தித்தேன். வேலையில் சேர்ந்து விட்டதாகச் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது "பாட்டு?"... என்றேன். "சம்பாரிக்கணும் பாலு. வாழ்க்கையையும் பார்க்கணும்" என்றார். ஆனால், போனமுறை பார்த்தபோது, 'வாய்ப்புகள் வருகின்றன, சென்னை போகணும்' என்றார். போவார் என்றுதான் தோன்றுகிறது. இசை ஜாம்பவான்களே... இந்த கவிதைப் படகு கரைசேர நீங்கள் துடுப்பாகக் கூடாதா?

Wednesday, December 10, 2008

கவிஞர் நா.முத்துக்குமாரும், சிங்கப்பூர் தேசிய நூலகமும் (நாலு வார்த்தை-009)
"விழி உனக்குச் சொந்தமடி, வேதனைகள் எனக்குச் சொந்தமடி..." என்ற பாடல் வரி தேய்ந்த ரிகார்டு மாதிரி உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது ஓரிரு மாதங்கள். அந்த பாடல் வந்த படம் 7G ரெயின்போ காலனி என்ற விவரம் அறிந்து கொண்டேன். பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் என்றும் தெரிந்து கொண்டேன். "விழி உனக்குச் சொந்தமடி, வேதனைகள் எனக்குச் சொந்தமடி..." என்ற வரி பல கதைகளின் சில சம்பவங்களைக் கண்முன் கொண்டு வந்து காட்டிக் கொண்டிருந்தது. "காட்டிலே காயும் நிலவைக் கண்டு கொள்ள யாருமில்லை" என்ற சோகம் கூட ஒரு இரவில், நீண்ட சாலையின் ஆட்களற்ற தனிமையில் வானம் பார்க்க நிறுத்தியது என்னை. நா.முத்துக்குமாரைப் பார்க்க ஆசைப்பட்டேன்.

செல் நம்பர் வாங்கி, சிங்கப்பூரிலிருந்து நா.முத்துக்குமாரை அழைத்துப் பேசினேன். மிக எளிமையான மனிதராக இருந்தார். அந்த எளிமை இன்னும் பிடித்தது. எப்படியாவது அவரை சிங்கப்பூருக்கு அழைத்து வர வேண்டுமென்று தோன்றியது. சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம், சிங்கைத் தமிழ்ச் சங்கம், பாலு மீடியா என்ற முக்கோண சங்கமத்தில் முத்துக்குமார் சிங்கப்பூர் வருவதென்றும், தேசிய நூலகத்தில் "திரைப்படப் பாடல்களும், இன்றைய தமிழ் இலக்கியமும்" என்ற தலைப்பில் அவர் பேசுவதென்றும் முடிவானது. எல்லா ஏற்பாடுகளும் துரிதகதியில் நடந்தன. விசா ஒரு பிரச்சனையில்லை என்று நம்பினேன். ஆனால் அதுதான் தலைபோகிற பிரச்சனையானது. Chennai Travel agent, on line visa application-ல் முத்துக்குமார் பெயரை எழுத்துப்பிழையோடு கீ இன் செய்து வைக்க, நிகழ்ச்சிக்கு இரண்டு நாள் முன்பாக, விசா rejected. எல்லா விளம்பரங்களும் செய்யப்பட்ட நிலையில், என் மனநிலையை யூகிப்பது மிக சுலபம். அங்கே இங்கே ·போன் பேசியும், தேசிய நூலக அதிகாரி சென்னை சிங்கப்பூர் ஹைக்கமிஷனருக்கு ·பேக்ஸ் அனுப்பியும்- ஒரு வழியாக நிகழ்ச்சிக்கு முதல் நாள் காலையில் விசா வாங்கி, மதியம் ·பிளைட் பிடித்து இரவு சிங்கப்பூர் வந்து சேர்ந்தார் நா.முத்துக்குமார்.

அன்றைய தின இரவு, சிங்கப்பூர் வானொலி 96.8-ல் முத்துக்குமார் கொடுத்த பேட்டி சுவையானதாக இருந்தது. தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு தயக்கம் காட்டவில்லை அவர். தமிழை சரியாக உச்சரிக்காத பாடகர்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்றார். எனக்கும், பேட்டியெடுத்துக் கொண்டிருந்த தீபனுக்கும் தூக்கிவாரிப் போட்டது. அது Live Programme. ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், மறுநாள் தேசிய நூலக நிகழ்ச்சியில் சரியான கூட்டம். அதற்கு அந்த பேச்சுதான் காரணமா என்று தெரியவில்லை. 100 பேருக்கும் மேல் நின்றபடி நிகழ்ச்சியை ரசித்தார்கள். தனது 'தூர்' கவிதை, மனுஷ்யபுத்திரனின் 'கால்கள்' கவிதை போன்றவற்றை மேற்க்கோள்காட்டி எளிமையாக அவர் உரையாற்றிய விதம் எல்லோருக்கும் பிடித்திருந்தது. என்ன, மற்ற நிகழ்ச்சிகள் நேரத்தை சாப்பிட்டுவிட, அவருக்கான நேரம்தான் போதவில்லை.

சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 வருட இறுதியில், ஆண்டின் ஆகச் சிறந்த தமிழ்ப் பாடலைத் தேர்ந்தெடுக்கும். கடந்த 3 வருடங்களாக கவிஞர் நா.முத்துக்குமாரின் பாடல்கள்தான் சிறந்த பாடல்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. கவிஞர் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இதோ.. இந்த வருடமும் 100 பாடல்களை அடையாளம் காட்டி, அதிலிருந்து சிறந்த பாடலை தேர்ந்தெடுக்கச் சொல்லியிருக்கிறது ஒலி 96.8. இந்த முறையும் கவிஞர் நா.முத்துக்குமாரின் பாடல் முதலிடத்தைப் பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். அப்படி அவரது பாடல் முதலிடத்தைப் பிடிக்காவிட்டாலும் நா.முத்துக்குமார் கவலைப் பட காரணமில்லை. ஒரு போட்டியில் எப்போதுமே முதலிடம் என்பது சாத்தியமில்லாத விஷயம். ஆனால், ஓடிக் கொண்டிருப்பது முக்கியம்.கண்ணதாசன் - வைரமுத்து வரிசையில் அடுத்து இடம் பிடிக்க இருக்கும் இளைய தலைமுறைக் கவிஞர் இவர்தான் என்று எப்போதுமே எனக்குள் இருக்கிறது நம்பிக்கை. அதே நம்பிக்கை ஆயிரம், பல்லாயிரம் தமிழ் நேயர்களிடமும் இருப்பதால்தான் அவரது பாடல்கள் சிங்கப்பூர் மண்ணில் ஹாட்ரிக் அடித்திருக்கின்றன.

Tuesday, December 09, 2008

வை.திருநாவுக்கரசு, ஒரு சில நினைவுகள் (நாலு வார்த்தை-008)

வை.திருநாவுக்கரசு என்ற பெயர் சிங்கப்பூர் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான பெயராக இருந்தது. 'இருந்தது' என்று சொல், இப்போது அப்படி இல்லை என்பதையோ அல்லது இப்போது அவர் இல்லை என்பதையோ உணர்ந்த்தியிருக்கும். சில வாரங்களுக்கு முன் தனது 80களில் மறைந்து விட்டார் வி.டி.அரசு. தமிழ்முரசு நாழிதளின் முன்னாள் ஆசிரியர்.

1995-ம் ஆண்டு நான் முதல்முதலாக சிங்கப்பூர் வந்தபோது, தமிழ்முரசு தொடர்ந்து என் எழுத்துக்களை வெளியிட்டது. அப்போது அவர்தான் அதற்கு ஆசிரியர். ஒரு முறை சற்றே சர்ச்சைக்குரிய உண்மைச் சம்பவம் ஒன்றைக் கதையாக்கி அனுப்பியிருந்தேன். அதில் நான் பயன்படுத்தி இருந்த சொற்றொடர் ஒன்றை அப்படியே எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக அவர் ஒரு ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். நல்லவேளை...ஒரு பெரிய blunder-ல் இருந்து தப்பித்தேன். பின்நவீனத்துவம், உடலிலக்கியம் என்ற பேச்செல்லாம் இல்லாத அந்தக் காலத்தில், அந்தக் கதையை type set செய்த பெண் 'உங்க ·பிரெண்ட் என்ன இவ்வளவு அசிங்கமா எழுதுறாரு' என்று என் நண்பனிடம் கேட்டாராம். அதுவே அன்று எனக்குக் கிடைத்த அதிகபட்ச பாராட்டு. இதை ஏன் சொல்கிறேன் என்றால், சவால்மிக்க விஷயங்களை வெளியிடும் துணிச்சல் அவருக்கு இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.

1999-ல் அவரை நேரில் சந்திக்கவும், அவரோடு நெருங்கிப் பழகவும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த வருடம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடந்தது. அதைப் பற்றி தமிழ்முரசில் எழுதலாம் என்ற யோசனை. நேரில் வரச் சொன்னார். சென்றேன். சாந்தமான புன்னகை என்று சொல்வார்களே, அந்தப் புன்னகையோடு வரவேற்றார். அவரிடமிருந்த அதீத சுத்தமும் கவனத்தை ஈர்த்தது. உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்பே அணிகளைப் பற்றிய அலசல், நட்சத்திர விளையாட்டு வீரர்களைப் பற்றிய write up என்று எழுதச் சொன்னார். ராத்திரியெல்லாம் கிரிக்கெட் பார்த்து, காலையில் எழுதி ·பேக்ஸ் செய்து, ஏறக்குறைய 60 நாட்கள் சிரமகதியில் போனது வாழ்க்கை. ஆனால், முடித்து விட்டேன். ·போன் செய்து, வாய்ப்புக்கு நன்றி சொன்னேன். "நான்தான் நன்றி சொல்லனும், ஏன்னா, எந்த ஒரு வேலையும் துவங்குவது சுலபம். இறுதிவரை செய்து முடிப்பதுதான் கடினம்" என்றார் அவர். 1500 சிங்கப்பூர் வெள்ளிக்கான காசோலையையும் அனுப்பி வைத்தார். அதுதான் வை.திருநாவுக்கரசு.

பிறகு சிலமுறை அவரை சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம், சகவயதுத் தோழனிடம் பேசுவதுபோல் சகஜமாகப் பேசுவார். திராவிட இயக்கங்களின் மேல் அவருக்கு இருக்கும் பாசம் அந்தப் பேச்சில் வெளிப்படும். தமிழவேள் கோ.சாரங்கபாணியோடு பழகியது, சிங்கப்பூர் தேசத் தந்தை திரு.லீ.குவான் யூவுடனாக அவரது நட்பு பற்றியெல்லாம் பேசுவார். ஒரு முறை லீ குவான் யூ அவரை அழைத்து, 'இப்போதெல்லாம் இந்தியாவில் காசு கொடுத்து டாக்டர் சீட்டு வாங்கிவிடலாம் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?" என்று கேட்டாராம். இவரும் தயங்கியபடி, "ஆமாம்" என்றாராம். அதற்கு, "அப்படி டாக்டருக்குப் படித்த ஒருவர், நாளை உங்களுக்கோ, எனக்கோ சிகிச்சையளிக்க நேர்ந்தால் நம் கதி என்னாவது?" என்ற மறுகேள்வி பட்டென்று வந்ததாம் திரு.லீ குவான் யூ அவர்களிடமிருந்து.எவ்வளவு நியாமான கேள்வி. அப்படிப்பட்ட தலைவர்களின் பாரட்டைப் பெற்றவர் வை.திருநாவுக்கரசு. அவரது இழப்பு ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கி இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப யாரால் முடியும் என்ற கேள்வி எழுமானால், அதற்கு பதில், இன்றைய நிலையில் வெறும் மெளனமாக மட்டுமே இருக்கும்.

Monday, December 08, 2008

சானியாவிலிருந்து சாய்னாவிற்கு...(நாலு வார்த்தை-007)


சில மாதங்களுக்கு முன்பு வரை, சாய்னா என்ற பெயரைச் சொல்லும்போதெல்லாம் மக்கள் அதை சானியா என்று மொழிமாற்றம் செய்து புரிந்து கொண்டார்கள். இது பழைய நிலை. இன்று சாய்னா நெஹ்வால் என்ற பெயர் மக்களுக்கு நன்றாகத் தெரிகிறது. சமீபத்தில் World Junior Badminton Championships-ஐ வென்றுள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த 18 வயது பேட்மிட்டன் வீராங்கனையைக் கொண்டாடத் தயாராகி வருகிறது இந்தியா.

இந்தியா கிரிக்கெட் பைத்தியம் பிடித்த தேசம். அந்த தேசத்திலிருந்து கிரிக்கெட்டைத் தவிர வேறு விளையாட்டுகளில் சர்வதேசச் சாதனையாளர்கள் உருவாவது அதிசயம், அபூர்வம். அப்படி உருவானாலும், அவர்கள் துருப்பிடித்த விளையாட்டு அமைப்புகளின் உதவி துளியும் இன்றி பெற்றோரின் பல ஆண்டுகால தியாகத்தில் உருவானவர்களாகத்தான் இருக்கிறார்கள். சாய்னாவும் அப்படித்தான். அவரது தந்தை ஹர்விர் சிங் ஒரு விஞ்ஞானி. அவரது சம்பளத்தில்தான் சாய்னாவின் சர்வதேசப் பயணம் துவங்கியது. புகழ்பெற்ற கோச்சான முகமது அரி·பால் சிறுவயதில் பயிற்சியளிக்கப்பட்ட சாய்னாவின் சமீபத்திய வெற்றிகளுக்குக் காரணமாக இருப்பவர் All England Open Badminton Championships பட்டம் வென்ற கோபிசந்த்.

2008 சாய்னாவின் பேட்மிட்டன் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஆண்டு. சர்வதேசப் போட்டிகளில் முக்கியமான வெற்றிகளும், ஊடகங்களின் கவனமும் கிடைத்த ஆண்டு. Chinese Taipai Open போட்டியில் முதல் வெற்றி கிடைத்தது. தொடர்ந்து 2008 Commenwealth Youth Games மற்றும் World Junior Batmitton Championships-ல் வெற்றிகளைப் பெற்றார். ஆனால், பெய்ஜிங் ஒலிப்பிக் போட்டியில் அவர் கால் இறுதிப் போட்டிவரை முன்னேறியதுதான் இந்திய மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. வெண்கலப் பதக்கம் நூலிழையில் தவறியது. அது மட்டும் கிடைத்திருந்தால், சாய்னா இன்னும் பரவலான கவனத்தைப் பெற்றிருப்பார். ஆனால், அவரது தொடர் முன்னேற்றம் உலகின் பெரும் பணக்காரரான மிட்டல் நடத்தும், Mittal Champions Trust-ஆல் கவனிக்கப்பட, அவர்களது பொருளாதார ஆதரவு சாய்னாவிற்குக் கிடைத்திருக்கிறது.

இன்றைய தேதியில், சாய்னா உலகத்தர வரிசையில் 10வது இடத்தைப் பிடித்து விட்டார். இந்த ஆண்டின் துவக்கத்தில் உலகத்தர வரிசையின் Top 25-ல் இடம் பிடிப்பதுதான் அவரது லட்சியமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் தாண்டி அவர், 10வது இடத்தைப் பிடித்திருப்பது அந்தப் பெண்ணின் அயராத உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. சீனர்கள், தென்கொரியர்கள், இந்தோனேசியர்கள், மலேசியர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் பேட்மிட்டனில், ஒரு இந்தியப் பெண் சாதிக்கத் துவங்கியிருப்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். மற்ற 18 வயதுப் பெண்களைப் போல், ஒரு சினிமாவிற்கோ, தோழிகளோடு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கோ நேரமில்லாமல் பேட்மிட்டன், பேட்மிட்டன் என்று ஓடிக் கொண்டிருக்கும் சான்யாவின் அடுத்த இலக்கு Top 5! அதையும் எட்டுவார் ; அதற்கு மேலும் செல்வார் என்று விளையாட்டு வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

Sunday, December 07, 2008

"நாம்" சிங்கப்பூர் காலாண்டிதழ் (நாலு வார்த்தை-006)


சிங்கப்பூர் சிறிய நாடு. இங்கு வாழும் தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், "தமிழ்முரசு" என்ற நாளிதழ் 50 ஆண்டுகளாக இயங்குவதற்கு அது ஒரு தடையாக இருக்கவில்லை. தமிழவேள் கோ.சாரங்கபாணியால் துவங்கப்பட்டது தமிழ்முரசு. தற்போது Singapore Press Holdings (SPH) என்றழைக்கப்படும் பொதுக்குடையின் கீழ், ஆங்கிலம், சீனம், மலாய் மொழி பத்திரிக்கைகளைப் போல் வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் இயங்கி வருகிறது. சினிமா சார்ந்த "இந்தியன் மூவி நியூஸ்" சிங்கப்பூரில் நீண்டநாள் தாக்குப் பிடித்திருக்கும் இன்னொரு தமிழ் மாதப் பத்திரிக்கை. இவற்றைத் தவிர மற்ற பத்திரிக்கைகளால் நிலைத்து நிற்க முடியவில்லை - அவ்வப்போது தோன்றி மறையத்தான் முடிந்தது. இந்திரஜித்தால் துவங்கப்பட்ட "திசைகள்" மாத இதழ் தரமானதாக இருந்தாலும் நிலைக்க முடியாமல் போனதற்கு, தரத்திற்கும் மேல், இன்ன பிற விஷயங்கள் தேவைப்பட்டது காரணமாக இருக்கலாம்.

இன்றைய சிங்கப்பூர்ச் சூழலில் ஒரு தமிழ் காலாண்டிதழ் நடத்துவதற்குக் கூட தொலைநோக்கும், திட்டமிடலும், தளராத மனதிடமும், வலுவான பொருளாதாரமும் தேவைப்படுகிறது. எல்லா செயல்களின் வெற்றிக்குப் பின்னும் இருக்கும் அடிப்படைப் பண்புகள்தான் இவை. பத்திரிக்கையில் அக்கறை கொண்டு தொடர்ந்து பங்களிக்கக் கூடிய திறன்மிக்க எழுத்தாளர்கள், பன்முகத்தன்மை கொண்ட படைப்புகள், ஈர்க்கின்ற வடிவமைப்பு, உள்ளூர் மக்கள் அந்த பத்திரிக்கையோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு, தமிழ் அமைப்புகளின் ஆதரவு, விளம்பரதாரர்களின் அரவணைப்பு, தீவிரமான விநியோகக் கட்டமைப்பு போன்றவற்றின் மீது கட்டப்படுகிறது ஒரு பத்திரிக்கையின் வெற்றி. இந்த வரையறைக்குள் அடங்கும் தமிழ்ப் பத்திரிக்கைகள் சிங்கப்பூரில் இருக்கின்றனவா? அவை வரும் வாய்ப்பிருக்கிறதா? காலத்தின் கைகளில் பதில்.

சின்னபாரதி, பாண்டித்துரை போன்ற இளைஞர்கள் சிங்கப்பூரில் தனிச்சுற்றாக, நண்பர்களுக்காக, "நாம்" என்ற காலாண்டிதழை நடத்துகிறார்கள். மற்றவற்றைப் பற்றி யோசிப்பதற்கு முன்னால், அவர்களது இலக்கியத் துணிச்சலைப் பாராட்டுவது அவசியம். "ஏதேனும் ஒரு இலக்கு அல்லது போக்கிடம் இல்லையென்றால், ஏன் நடக்க வேண்டும்?" என்பது இந்திரஜித்தின் கேள்வி. இலக்கிருக்கிறது - எனவே, இந்த இளைஞர்கள் நடக்கிறார்கள். சிங்கப்பூர், மலேசியா, இந்தியா என்று மூன்று நாடுகளின் பங்களிப்பால், ஒரு Rojak மாதிரி சுவைக்கிறது "நாம்" இதழ். அய்யப்ப மாதவன் போன்ற அனுபவசாலிகளின் எழுத்து அரவணைக்கிறது என்றால், அறிவுநிதி போன்ற இளைஞர்களின் எழுத்து நம்பிக்கையளிக்கிறது. மலேசியத் தமிழ் இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இருப்பவர்களில் மிக முக்கியமானவரான கே.பாலமுருகன் "நாம்" இதழோடு கை கோர்த்திருப்பது ஆரோக்கியமான சூழல்.

நாம் 3வது இதழில் "அவர்கள் தங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் போகும் வழியைப் பார்த்து பிரமிப்புடன் அதைப் பின்பற்ற முயற்சிக்கின்றனர். என்ன செய்ய வேண்டுமென்றால், தான் தானாக இருக்க முயற்சித்தாலே போதுமானது." என்ற வரிகள் இருக்கின்றன. அற்புதமான வரிகள். உண்மைதான்...அவனாக இவனாக இல்லாமல், அவன் வழியில் இவன் வழியில் செல்லாமல், நாம் நாமாக இருப்பதுதானே நமக்கு சுகம்? இவர்கள் வெகுதூரம் செல்வார்கள் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன. நாமும் நீட்டுகிறோம் ஆதரவுக்கரம்!