Saturday, February 19, 2005

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை சீனிவாச பெருமாள் மீது

சமீபத்திய டிசம்பர் மாத காலச்சுவடு இதழுக்கு வழங்கிய பேட்டியில் சிங்கை நண்பர் மூர்த்தி "கனகலதா, இந்திரஜித், போப்பு போன்றவர்கள் சிங்கப்பூரில் இலக்கிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திவருகிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். பலரது பார்வைக்கும் போய் சேரும் கவனத்திற்குரிய ஒரு இதழில் அவர் கூறியிருந்த கருத்துகள் மீதான எனது பார்வையை "காலச்சுவடு" இதழுக்கு அனுப்பினேன். இது பற்றி - இப்போது உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.சிங்கப்பூர் இலக்கிய சூழலை அறிந்தவர்களின் மேலான மேல் கருத்துக்களை அறிய ஆசைப்படுகிறேன்......________________________

· மு.ந.மூர்த்தியைப் பற்றி எனக்குள் ஒரு மதிப்பிருக்கிறது. அந்த மதிப்பை காலச்சுவடு நேர் காணலில் அவர் கூறியிருக்கிற எல்லா கருத்துக்களுக்கும் நீட்டிவிட வாய்ப்பில்லாமல் போனது துரதிர்ஷ்டம். காரணம் - காலச் சுவடு போன்ற கவனிப்பிற்குரிய இதழில் வெளியாகி இருக்கிற இந்த கருத்துகள், இணையத்தின் வழி உலக நாடுகள் அத்தனைக்கும் போய் சேர்ந்து, சிங்கப்பூர் இலக்கியச் சூழல் பற்றி ஒரு 'லாடம் கட்டிய குதிரைப் பார்வை'யை ஏற்படுத்தி விடக் கூடும் என்ற அச்சம்.

· நவீன தமிழ் இலக்கியப் போக்கு பற்றிய பரிட்சய வாய்ப்பு இங்குள்ள வெகு பல படைப்பாளர்களுக்கு இல்லை என்பது நிஜம். பல்வேறு புறக்காரணிகள் வாழ்க்கையை இறுக்கிக் கொண்டிருக்கிற சிங்கப்பூர் சூழலில், கவலை - இலக்கியம் உயிர்ப்புடன் இருக்கிறதா அல்லது மெல்ல,மெல்ல இறக்கிறதா என்பதாகவே இருக்கிறது. இலக்கியம் - மரபுக்கவிதைகளாகவோ, வைரமுத்து பாணியிலான கவிதைகளுடன் உறவு கொண்டவர்களின் படைப்புகளாகவோ வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்பதே இங்குள்ளவர்களின் இலக்கிய ஆதங்கம்.

இன்றைக்கும் சிங்கப்பூர்கணிசமான அளவில் மரபுக் கவிஞர்களையும், மரபுக் கவிதைகளையும் உயிர்ப்புடன் அடைகாத்துவருவது ஊரறிந்த ரகசியம்.

· கனகலதா, இந்திரஜித், போப்பு போன்றவர்கள் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்குபெருமளவில்பங்களித்திருக்கிறார்கள் என்பது சிங்கப்பூர் சிராங்கூன் சாலை சீனிவாச பெருமாள் மீது சத்தியமாக உண்மைதான்...அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்தான் ! ஆனால்,அவர்கள்தான் சிங்கப்பூரில் இலக்கிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள் என்ற மூர்த்தியின் தொணியை ஒப்புக்கொள்ள மேற்குறிப்பிட்ட மூவருமே கூட 'கொஞ்சம் போலாவது' வெட்கப்படுவார்கள் என்று நினைக்கிறேன். இதைப்பற்றி பாஸ்கரன் மற்றும் அரவிந்தன் கருத்தை அறிய ஆவல்.

· கனிமொழி தமிழ்முரசில் பணியாற்றிய காலத்தில், 'போடர்ஸ்' புத்தகக்கடை விவகாரத்தில்இந்தியை தகர்த்து தமிழை இடம் பெறச்செய்தபோது ஏற்படுத்திய மொழிசார்ந்த விழிப்புணர்வை,சிங்கப்பூர் சூழலை உள்வாங்கி படைத்த தரமான கவிதைகளின் மூலம் பெற்ற கவனத்தை, எந்த எடைத்தட்டில் வைத்திருக்கிறார் மூர்த்தி என்பது தெரியவில்லை.

· சகல தளத்தில் இயங்கும் மக்களும் கலந்து கொள்ளும் 'கவிமாலை' என்ற மாதந்திர நிகழ்வைநடத்தி, தொடர்ந்து கவிதைகளை படைத்து வரும் பிச்சினிக்காடு இளங்கோவும், மாதந்தோறும்'கவிச்சோலை' நிகழ்வை நடத்தும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும், இலக்கிய விழிப்புணர்வைஏற்படுத்தவில்லை என்று அதை பார்க்காதவர்கள் அல்லது பங்கேற்காதவர்கள் மட்டுமே கூற முடியும்.

· எப்படி..இலக்கியம் என்பது 'நவீன கவிதைகள்' வட்டத்தை விடப் பெரியதோ, அது மாதிரி சிங்கப்பூரின் தற்கால இலக்கியம் என்பதும், இங்கு இலக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள்,ஏற்படுத்துகிறவர்கள் என்பதும், மூர்த்தி அறிந்ததை விட அல்லது அறியாததை விடப் பெரியது. 'ஆசியான் கவிஞர்' க.து.மு.இக்பாலை விட, கவித்தளத்திலும் சமூக தளத்திலும், பெரியவிழிப்புணர்வை சிங்கப்பூர் இலக்கியச் சூழலில் அமைப்புசாரா தனி மனிதர்கள் எவரும் ஏற்படுத்திவிடவில்லை. ஒரு வட்டத்தை விட்டு வெளியே நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும்.

· கடைசியாக ஒன்று...
சிங்கப்பூரில் கடலில் இருந்து மண்ணெடுத்து கரையில் கொட்டி, நிலப்பரப்பை நீட்டிக்கொண்டேபோகிறார்கள். ஆனால், சிங்கப்பூர் தமிழ் இலக்கிய படைப்பாளிகளோ தீவு தீவாக பிரிந்துகிடக்கிறார்கள். யாராவது நட்பு மண்ணெடுத்துக் கொட்டி, இந்த இலக்கியத்தீவுகளை இணைத்துவிட்டால், எதிர்காலத்தில் இன்னொரு தலைமுறை சுகமாக சுற்றிப்பார்க்க வசதியாக இருக்கும். யார் செய்யப் போகிறார் இந்த காரியத்தை ?

Thursday, February 17, 2005

மெய்லிங்கின் பூனைகள்



அந்த சீனப்பெண் தினமும் இரவு நேரங்களில், வெகு குட்டையான ஷார்ட்ஸ் மற்றும்டி-ஷர்ட் அணிந்து என் புளோக்கின் தாழ்வாரத்தில் பூனைகளுக்கு உணவு தருவதைவெகு நாட்களாக பார்த்து வந்தேன்.எப்போதும் அவளைச் சுற்றி பூனைகள் !

சிங்கப்பூரின் மேற்குப்பகுதியில் நிறைய புளோக்குகள். அந்த புளோக்குகளில் ஆயிரமாயிரம்வீடுகள். அதில் ஒன்று நான் தங்கியிருந்த மூவறை வீடு. வாடகை என்றால்முழு வீடும் அல்ல - ஒரே ஒரு அறை மட்டும். ஒற்றை பிரம்மச்சாரிக்கு எதற்கு முழுவீடு? அந்த வீட்டின் இன்னொரு அறையில், வெகு குண்டான, சற்று திக்கி பேசக்கூடிய, பெரிய கண்ணாடி அணிந்த, முப்பத்தி ஐந்து வயதான, வீட்டு உரிமையாளனான ஜானி என்ற சீனன் தங்கியிருந்தான்.

ஜானி என்றுதான் பெயர் சொன்னான். வாடகை ஒப்பந்தம் போடும்போது அதில் தே லாய்சூன் என்று பெயர் எழுதினான். ஏதோ ஒன்று.பெயரா முக்கியம்? அவன் ஒரு தனிக்கட்டை.நான் ஒரு தனிக்கட்டை. அவன் அறையில் அவன். என் அறையில் நான். இந்தசுதந்திரம்தான் பெரிதாகப்பட்டது.

ஜானியே ஒரு ஹவுசிங் ஏஜெண்ட். இருந்தும், இன்னொரு ஏஜெண்டான அடிலின் மூலம்தான் அவன் வீட்டை அடையாளம் கண்டேன்.புளோக்கின் உச்சத்திலிருந்த வீட்டைப்போய் பார்ப்பதற்கே பெரும்பாடு பட வேண்டியிருந்தது.வீட்டிற்குள் நுழைய முடியாதபடிவழியெங்கும் பூந்தொட்டிகளை வைத்திருந்தான். வாசலில் என்னைப் பார்த்ததும் பெரிதாக புன்னகை செய்தான் - அதில் துளித்துளியாக சினேகம்.

அந்த வீட்டின் ஹால் முழுக்க 'அண்டிக்' ஜாமான்கள். சமையலறைக்குப் போக ஒற்றையடிப்பாதை மாதிரி ஒரு வழி.மற்ற இடம் முழுக்க பொருட்கள் நிரப்பி வைத்திருந்தான் ஜானி.அப்படியே திரும்பிப்போய் விடலாம் என்று தோன்றியது.

அடிலின்தான் 'இந்த ஹாலைப்பார்த்து பயந்துவிடாதீர்கள். உங்கள் அறையை வந்து பாருங்கள்' என்று அழைத்தாள். பார்த்தேன். சிங்கிள் பெட், டிரெஸிங் டேபிள், ஓரமாய்ஒரு கப்போர்ட், ஒரு எக்ஸிக்யூட்டிவ் சேர். அப்பாடா...இந்த அறையையாவது சுத்தமாக வைத்திருக்கிறானே !

'ஜானி மாஸ்டர் ரூமை பயன்படுத்துவான். நீங்கள் இந்த அறையையும்,சமையலறையை ஒட்டிய டாய்லெட்டையும் பயன்படுத்திக் கொள்ளளாம்' என்றாள் அடிலின்.அந்த சமையலறையில் இருந்து ஒரு துர்வாசம் வந்து வயிற்றை பிரட்டியது.டாய்லெட் சுத்தமாக இருந்தது. மிக யோசித்து அந்த அறையை வாடகைக்கு எடுக்க ஒப்புக்கொண்டேன்.

அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று - நான் அப்போது குடியிருந்த வீட்டை உடனே காலிசெய்ய வேண்டிய நிலை. இரண்டு - ஜானி முன்னூறு வெள்ளியை மட்டுமே வாடகையாகக் கேட்டான். அது, வெகு சகாய விலை.

ஒரு நல்ல நாளில் அந்த அறைக்கு குடிபெயர்ந்து வாழ ஆரம்பித்தேன். அப்படி வாழ்ந்து வந்த கால கட்டத்தில்தான் அந்த சீனப்பெண் பூனைகளுக்கு உணவு கொடுப்பதை புளோக்கின் தாழ்வாரத்தில் அடிக்கடி பார்க்க முடிந்தது.

அவளுக்கு என்ன வயதிருக்கும் என்று சரியாக யூகிக்க முடியவில்லை. இருபத்தி ஐந்துமுதல் நாற்பதுவரை எது வேண்டுமானாலும் இருக்கலாம். கழுத்துவரை வெட்டி விடப்பட்டதலைமுடியை மேல்வாரிச் சீவி ரப்பர் பேண்ட் போட்டிருந்தாள். அவளது கால்கள் வனப்பு மிக்கதாகவும், நடை ஒரு திமிர் பிடித்த குதிரையினுடையதைப் போல் மதர்ப்பாகவும் இருந்தது. அவள் அழகானவள் என்பதை அவளும் உணர்ந்தே இருந்தாள் என்று யூகம்.

எட்டு மணி என்பது இரவு சாப்பாட்டு நேரம். பன்னிரண்டாவது தளத்திலிருந்து கீழிறங்கி, ஏதாவது ஒரு ஹாக்காட் சென்டரில் சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்குள் தூங்குவது என்தினசரி வழக்கம். அந்த நேரத்தில்தான் அவளும் பூனைகளுக்கு உணவு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

அவளைப் பற்றி சில கேள்விகள் மனதில் வந்தது. முதல் கேள்வி - பூனைகளுக்கு உணவுதரும் வேலையை ஒரு யாகம் போல் எப்படி தினசரி அவளால் செய்ய முடிகிறது? அவள் ஒருதாய்ப் பூனையோ? இதை அவளிடம் கேட்கவில்லை. அறிமுகமில்லாத அவளிடம் பேச மிகுந்த தயக்கம். இத்தனைக்கும் எதிரில் பார்த்த ஓரிருமுறை அவள் நட்பாக புன்னகை செய்ததுண்டு.

சீக்கிரமே அவளிடம் பேசும்படியான ஒரு சந்தர்ப்பம் இயற்கையில் அமைந்தது.

அந்த நாளில் கை நிறைய தட்டுகளும், கிண்ணங்களுமாக அவள். மீதமாகி பாலிதீன் பைகளில்இருந்த பொருள்களை எப்படி பக்கத்து புளோக்குக்கு தூக்கிக் கொண்டு போவது என்று அவள்திகைத்து நிற்பதை தூரத்திலிருந்தே பார்த்து விட்டேன்.உதவு என்றது மனம். இன்னொரு மனம்தயங்கியது.கடந்து நடந்தேன்.கூப்பிட்டே விட்டாள்.

"ஸோரி, எனக்குக் கொஞ்சம் உதவ முடியுமா? இதை நான் பக்கத்து புளோக்குக்கு கொண்டுபோக வேண்டும்.முடியுமா?"
என்று கெஞ்சலாக கேட்டாள்."அதனாலென்ன..." என்று சொல்லிபொருள் தூக்கி நடந்தேன்."நன்றி" என்றாள்.

"பூனையென்றால் அவ்வளவு பிரியமா?" என்று கேட்டேன்."அப்பாவி ஜீவன்கள்.ராத்திரி எட்டுமணியாகிவிட்டால் போதும், எல்லா பூனைகளும் என்னைத்தேடி இந்த புளோக்கிற்குக் கீழேவந்து விடும்" என்றவள், "நீங்கள் இந்த புளோக்கிற்கு புதிதாக வந்து இருக்கிறீர்களா?" என்றுகேட்டாள்.அவளும் என்னை கவனித்திருக்கிறாள் போல.

"ஆமாம்.பன்னிரெண்டாவது தளம்."
"ஜானியுடனா?"
"ஆமாம். அது உங்களுக்கு எப்படித் தெரியும் ?"
"எனக்கு ஜானியைவெகு நாட்களாக தெரியும்.அவன் தன் வீட்டு அறையை ஒரு இந்திய வாலிபருக்கு வாடகைக்கு விட்டிருப்பதாகச் சொன்னான்.அது நீங்கள்தானா?"

"ஆமாம்"என்றேன்."ஜானி" என்ற பெயரை இன்னொரு முறை சொல்லி புன்னகைத்துக் கொண்டாள்.அந்தப் புன்னகையில் ஜானியைப் பற்றி ஏதோ ஒரு சேதியிருந்தது.அவள் பெயர் மெய்லிங் என்பதை நானும், என் பெயர் ரவி என்பதை அவளும் அறிந்து-பிரிந்தோம்.

இன்னொரு நாள் இரவு பூனைகள் சாப்பிடும் அழகை ரசித்துக் கொண்டிருந்த மெய்லிங் என்னைப் பார்த்ததும் புன்னகையித்தாள். " தினமும் வெளியில்தான் சாப்பாடா? " என்றுகேட்டாள்."ஆமாம்" என்று தலையசைத்தேன்."சீக்கிரமே கல்யாணம் செய்து கொள்ளவேண்டியதுதானே...நல்ல சாப்பாடு கிடைக்கும்" என்றாள்."நல்ல யோசனை" என்று சொல்லிசிரித்தேன்."ஒரு நாள் என் வீட்டுக்கு சாப்பிட வாருங்களேன். சைனீஸ் உணவு ஒ.கேதானே?"என்று அழைத்தாள் மெய்லிங்."உங்கள் கணவர் ஒப்புக் கொள்வாரா? நான் யார் என்பது கூடஅவருக்குத் தெரியாதே" என்று திருப்பிக் கேட்டேன். அவளின் முக பாவனை மாறியது."அப்படி ஒருவர் இருந்தால்தானே கேள்வி கேட்க ...நான் விவாகரத்து வாங்கி எட்டு வருடம்ஆகிறது." என்று பதில் சொன்னாள் மெய்லிங்."ஸோரி"

"அதனாலென்ன..அது முடிந்து போன கதை" என்ற மெய்லிங், தனது பூனை அனுபவங்கள் பலவற்றை பகிர்ந்து கொண்டாள்.அந்த வட்டாரத்திலிருந்த பல பூனைகளுக்கு அவள்தான் 'ஸ்டிரிலைஸ்' செய்து கூட்டி வந்தாளாம்.அப்படி செய்யாத பூனைகளை பிடித்துக் கொண்டு போய் கொன்று விடுவார்கள் என்று கவலைப் பட்டாள்.'ஸ்டிரிலைஸ்' செய்யப்பட்டபூனைகளின் காது மடல்கள் வெட்டப் பட்டிருந்தன.

ஒவ்வொரு மாதமும் பூனைகளுக்கென்றே கணிசமான தொகை செலவாவதாகச் சொன்னவள்திடீரென்று "ஜானி எப்படி இருக்கிறான்?" என்று கேட்டாள்.அதை கேட்கும்போது மறுபடியும்அவளது முகத்தில் அந்த புன்னகையைப் பார்த்தேன்."ஜானியைப் பற்றிப் பேசும் போதெல்லாம்ஏன் இந்த புன்னகை?" என்று கேட்டும் விட்டேன்."வேறொன்றுமில்லை, ஜானி என்னை காதலிக்கிறான்" என்றாள் மெய்லிங். ஜானியா?

என்னால் நம்ப முடியவில்லை.ஜானி காதலிக்கிறானா? அதுவும், மதர்த்த, திமிர் பிடித்த குதிரைபோன்ற இவளையா? "பார்க்க அவனே ஒரு பூனை மாதிரிதான் இருக்கிறான்" என்றேன்."ஆள்பார்க்கத்தான் அப்படி.இதுவரை என்னிடம் பலமுறை தன் காதலைச் சொல்லி விட்டான்"என்றாள் மெய்லிங்.ஜானியைப் பற்றி மேலும் பல விஷயங்களைச் சொன்னவள், தன் கை தொலைபேசி எண்ணை கொடுத்து, ஒரு மாலை தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தாள்.

சிலநாட்களுக்குப் பின் ஓய்ந்திருந்த ஒரு மாலையில்,மெய்லிங்கின் வீட்டிற்குப் போனேன்.வாசற்கதவு துவங்கி, அந்த வீட்டின் ஒவ்வொரு துளியிலும், ரசனையும் அழகும் பிரதிபலித்தது.உபசரித்து சோபாவில் உட்கார வைத்தாள்.எதிரில் அமர்ந்து கொண்டாள்.

"உங்கள் ரசனை மிக உயர்வானது என்பதை இந்த வீட்டின் அழகு சொல்கிறது."
"கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது ரவி. வீடு சுத்தமாக,அழகாக இருப்பதில் கவனமாகஇருப்பேன். இந்த வீட்டுக் கதவில் தொங்கும் மணி கூட 'யுனிக்'கானது.இந்தியாவிலிருந்துநண்பரொருர் வாங்கி வந்தார். என்னிடம் இருக்கிற ஒவ்வொரு பொருளுமே யுனிக்கானதாகஇருக்க வேண்டுமென்று பிரயாசைப் படுவேன்."

அவள் இதைச் சொன்னபோது, என்மனம் ஏனோ ஜானி வீடு வைத்திருக்கும் விதம் பற்றி யோசித்தது. இவ்வளவு ரசனை இடைவெளி கொண்ட இருவர் காதலித்தல் சாத்தியமா? மெய்லிங் வேலை செய்து சம்பாரிப்பவளாகத் தெரியவில்லை.விவாகரத்தானவள் வேறு. வீட்டை வளமாக வைத்துக் கொள்ளவும், சாப்பிடவும், பூனைகளுக்கு உணவிடவும் பணம் எங்கிருந்து வருகிறது? இப்படியும் யோசனை வந்தது. அவள் என் மனதை வாசித்திருக்க வேண்டும்....

"கடந்த நான்கு வருடமாக நான் வேலை செய்யவில்லை ரவி. என் பாய்பிரண்ட் நான் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார்" நான் அவள் முகம் பார்த்தேன்.

"ஓ...எனக்கு பாய்பிரண்ட் இருப்பதை நான் உங்களுக்குச் சொல்லவில்லையே...அவர் ஒரு பிஸினஸ்மேன்.நன்றாக சம்பாதிக்கிறார். நான் கேட்பதற்கு மேலேயே பணம் கொடுக்கிறார்."
"இதெல்லாம் தெரிந்த பிறகுமா ஜானி உங்களை காதலிப்பதாகச் சொல்கிறான்?"
"தெரியும். அதோடு அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவருக்குக் குழந்தைகள் உண்டு என்பதும் அவனுக்குத் தெரியும்.அதனால்தான் அவன் காதலை தைரியமாகச் சொல்ல முடிகிறது."

அது எனக்கு மிக ஆச்சரியமளித்த செய்தி. அழகும் வனப்பும்மிக்க இவள் ஏன் ஒரு திருமணமான ஆணின் ஆசை நாயகியாக இருக்க வேண்டும்?

"இது எனக்கு புது செய்தி மெய்லிங். மிகுந்த அழகோடு மெல்லிய மனம் படைத்தவராக இருக்கிறஉங்களின் வாழ்க்கைப் போராட்டங்களை கேட்ட வருத்தமாக இருக்கிறது." என்று சொன்னேன்.அவ்வளவுதான். அவளது கண்களில் சட்டென நீர் கோர்த்துக் கொண்டது. மெல்லிய குரலில் தன் கதையை சொல்லத் துவங்கினாள்...

சின்ன வயது மெய்லிங் பேரழகி. அவளது அழகு, வேலையிடத்தில், சாப்பாட்டுக் கூடங்களில், மார்க்கெட்டுகளில் ஆர்வமிக்க பார்வைகளையும், காதல் விண்ணப்பங்களையும் வாங்கித் தந்தது. என்றாலும், தன்னுடைய பொருள்கள் 'யுனிக்'காக இருக்க வேண்டுமென்று நினைக்கிற மெய்லிங், அவர்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு,அவளுடன் வேலை செய்த, அவளை நிமிர்ந்தும் பார்க்காத டியோவை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். முதல் வருடமே அழகான ஆண் குழந்தை. வசந்தமெனப் போனது வாழ்க்கை. வருடங்கள் கடந்தது.

ஒருநாள் டியோவின் வெளச்ளைச் சட்டையில் உதட்டு வடிவ லிப்ஸ்டிக் தடத்தை மெய்லிங் பார்த்துவிட, அந்த வாழ்க்கை திசைமாறிப் போனது. மெய்லிங்கின் தன்னம்பிக்கை, அழகைப் பற்றிய கர்வமெல்லாம் அழிந்து போனது. டியோ யுனிக்கானவன் இல்லை என்ற விஷயமே விவாகரத்துக்குக்போதுமான காரணமென்று மெய்லிங் நினைத்தாள். இது நடந்து எட்டு வருடமாகிறதாம்.

"ஒரு பெண் தனித்திருப்பதும், தனியே பிள்ளையை வளர்ப்பதும் சிரமம் ரவி. என் பாய்·பிரண்ட் என்னை நிஜமாகவே நேசிப்பதை புரிந்ததும், அவரது காதலை தவிர்க்க முடியவில்லை. என் கணவர் எனக்கு செய்த அதே துரோகத்தை நான் இன்னொரு பெண்ணுக்கு செய்கிறேன் என்பதுஎனக்குத் தெரியும். பத்தாண்டு கால இடைவெளியும், வாழ்ந்தே ஆக வேண்டுமென்ற கட்டாயமும்எது சரி, எது தவறு என்பது பற்றிய எனது பார்வையை மாற்றிவிட்டது."
"உங்களது மகன் இப்போது ?"
"அது இன்னொரு சோகம். ஒரு பெண் என்னதான் கண்டிப்பாக பிள்ளையை வளர்த்தாலும், சில விஷயங்கள் அவள் பார்வையில் படாமல் பதுங்கிக் கிடந்து திடீரென்று வெடித்து விடுகிறது.நானும் என் பிள்ளை மீது நல்ல நம்பிக்கைகளோடுதான் இருந்தேன். சில மாதங்களுக்கு முன் போலிஸ் என்னை கூப்பிட்ட போதுதான் அந்த நம்பிக்கை உடைந்தது. அவன் ஒரு ரவுடி கும்பலோடு சேர்ந்து அடிதடியில் இறங்கி கைதாகி இருந்தான். நீதிமன்றம் அவனுக்கு ஆறுமாத சிறைதண்டனை வழங்கியிருக்கிறது. இப்போது அவன் ஜெயிலில் இருக்கிறான்"

மெய்லிங்கைப் பார்க்க பாவமாக இருந்தது. இத்தனை சோகங்களை தன்னுள் வைத்துக் கொண்டுஎப்படி இவளால் பூனைகளைத் தேடிப்போய் உணவு தர முடிகிறது?

யோசித்துப் பார்த்தேன்... ஜானி குண்டானவன்தான். அழகற்றவன்தான். ஆனால், நல்லவன். நிறையசம்பாதிக்கிறான். மெய்லிங்கை காதலிக்கிறான். அது போதாதா? அவன் வீடு குப்பையாக இருந்தாலென்ன? அவன் குப்பையாக இல்லாத பட்சம், அவனில் போதுமான மாற்றங்களைமெய்லிங் நிகழ்த்திவிட மாட்டாளா? மெல்ல அவளிடம் கேட்டேன்.

"ஜானியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
"என்ன நினைக்க...நல்லவன்."
"நான் இதை சொல்லலாமா, இல்லையா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். நீங்கள்ஏன் ஜானியின் காதலை ஏற்று அவனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது?"
"உங்கள் அக்கறைக்கு நன்றி ரவி. ஆனால், உங்களுக்கு என் ரசனை தெரியும். ஜானிக்கும், எனக்கும்பொருந்துமா? அவன் நல்லவன்தான். ஆனால் காதல் என்ற ரசாயன மாற்றம் நிகழ, அழகு, கவர்ச்சிபோன்ற மற்ற விஷயங்களும் தேவைப்படுகிறது என்பதுதானே உண்மை?"

அந்த பதிலுக்குப்பின் ஜானியைப்பற்றி மேலும் அவளிடம் பேசத் தோன்றவில்லை.அவளை தற்போதுஆழ ஆட்கொண்டிருக்கும் அந்த அதிசய மனிதன் யாரென்ற கேள்விதான் மனதில் வந்தது.

"உங்கள் பாய்·பிரண்டின் புகைப்படம் இருக்கிறதா மெய்லிங்?"
"ஸோரி...இல்லை ரவி. ஆனால் அவர் அழகானவர்.கம்பீரமானவர். ம்...எப்படிச் சொல்லுவது? சுருக்கமாகசொல்வதென்றால், ஒரு நடிகரைப் போல் அழகானவர்."
"அவர் இங்கு - உங்கள் வீட்டுக்கு வருவாரா?"
"வருவார். ஆனால் அது ஊர் உறங்கிய நள்ளிரவு நேரமாக இருக்கும். இந்த புளோக்கில் யாருமே அவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை."
"அப்படியென்றால் இந்த அழகிய பெண்ணின் அழகான காதலரை யாருமே பார்க்க எனக்கும் வாய்ப்பில்லை." என்று சொல்லி சிரித்தேன். அவளும் அந்த சிரிப்பில் அவளும் சேர்ந்து கொண்டாள். இன்னும் கொஞ்ச நேரம் வேறு விஷயங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவளது உபசரிப்புக்கு நன்றி கூறி வெளியேறினேன்.

அதற்கப்புறம் வாய்ப்பு கிடைக்கும்போது புளோக்கின் தாழ்வாரத்தில் நின்று ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டோம்.அவளது மகன் சேர்த்து வைத்திருக்கிற ஆங்கில வி.சி.டிக்கள் சிலவற்றை என்னிடம்தந்து பார்க்கச் சொல்லி அன்பு பாராட்டினாள் மெய்லிங். அவளது பூனைகளைப் போலவே அவளும் மென்மையானவள் என்று தோன்றியது.

ஒருநாள் சாங்கி சிறைச்சாலை வரை வேலை விஷயமாக போக வேண்டியிருந்தது. நன்பரோடுகிளம்பினேன். சுள்ளென்று வெயிலடித்த காலை பத்து மணி. புது சிறைச் சாலையின் கட்டுமானப் -பணிகள் பழைய சிறைச் சாலையை ஒட்டியே நடந்து கொண்டிருந்தது.

ஐ.டி கார்டை வாங்கி பாஸ் கொடுத்து உள்ளே அனுப்பினார்கள். போன வேலை முடிந்து வெளியேவந்த போது மணி பன்னிரெண்டாகி இருந்தது. பாஸை கொடுத்து ஐ.டி கார்டை வாங்க நிழல்பாதை வழி நடந்து நடந்தோம். சிறைக் கைதிகளை பார்க்க வருவோரும் போவோருமாக அந்தஇடம் பரபரப்பாக இருந்தது.

அங்குதான் மெய்லிங்கைப் பார்த்தேன். அது அவளாக இருக்க முடியாதென்றும் தோன்றியது. இந்த மெய்லிங் முழங்கால் வரை ஸ்கர்ட் அணிந்திருந்தாள். தலைமுடியை விரித்து விட்டிருந்தாள். உற்றுப்பார்த்தபோது அது மெய்லிங்தான் என்பது உறுதியானது. அவள் என்னை நோக்கிதான் நடந்து வந்து கொண்டிருந்தாள். ஆனால் என்னை கவனிக்கவில்லை.

அவளது கைகள் பக்கத்தில் நடந்து வந்த அந்த மனிதரின் கைகளோடு கோர்த்துக் கிடந்தன.அந்த மனிதருக்கு வயது அறுபது இருக்கலாம். தலை வழுக்கை. முகத்தில் சுருக்கங்களும், வழுக்கையும் இருந்தது. உடல் வயோதிகத்தால் ஒடுங்கியும், அதை அலட்சியப்படுத்தி முன் நின்றதொப்பையுடனும் இருந்தது.மெய்லிங்கின் மகன் சிறையிலிருப்பது ஞாபகத்தில் வந்தது. அவனைபார்க்கத்தான் அவள் வந்திருக்க வேண்டும். இதுதான் அவள் சொன்ன நடிகரைப் போன்ற அழகானகாதலனா?

ஒரு பத்தடி தூரத்தில் வரும் போது மெய்லிங் என்னை பார்த்து விட்டாள். அவள் முகத்தில் அதிர்ச்சி அலை ஓடி ஓய்ந்தது. அந்த மனிதரிடமிருந்து அவசரமா தன் கைகளை விடுவித்துக் கொண்டாள். தரை பார்த்தாள். ஏதோ பேசுவது போன்ற பாவனையோடு அந்த மனிதரிடம் பேசியபடி என்னைக் கடந்து நடந்தாள்.

அந்த வினாடியில் மெய்லிங்கைப் பற்றி பல சிந்தனைகள், தர்க்கங்கள், தீர்மானங்கள் மனதுக்குள் வந்து போனது. எப்படி சொல்வது அதை?

ராத்திரியில் மெய்லிங் தரும் உணவிற்காக பசியோடு காத்திருக்கும் பூனைகள் ஞாபகத்திற்கு வந்தது. அழகான பூனைகள்...மென்மையான பூனைகள்...ஆதரவில்லாத பூனைகள்...யாரவது நல்லஉணவு தருவார்களா என்று ஏங்கி நிற்கும் பூனைகள்... மெய்லிங்கும் ஒரு பூனை மாதிரிதானோ ?.






இப்படிக்கு இணையம்....

எதேட்சையாக இணையத்தில் சந்தித்துக் கொண்ட ஒரு சிங்கப்பூர் தமிழ் இளைஞனும்,இன்னொரு தேச தமிழ் பெண்ணும் பேசித் தொடங்கினார்கள். பேசித் தொடர்ந்தார்கள்.

இனி - அவர்கள் பேசியது!

"ஹாய்...டு யு லைக் டு சாட் வித் அன் இண்டியன் கைய் ·பிரம் சிங்கப்பூர்?"
"தாராளமாக. எனக்கும் தூக்கம் வரவில்லை. பேசலாம்."

"நீங்கள்?"

"நான் வித்யா. ஒரு நிறுவனத்தில் நிர்வாகியாக வேலை செய்கிறேன். வயது முப்பத்திஎட்டு. என் பெயரை வைத்து நானும் ஒரு இந்தியப் பெண் என்பதை யூகித்திருப்பீர்கள்"

"ஆச்சரியம்...நான் இணையத்தில் இந்தியப் பெண்களிடம் பேசியது மிகக் குறைவு.உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி. நான் வல்லாளதேவன். நீங்கள் என்னை தேவன் என்றுகூப்பிடலாம்."

"அழகான பெயர். உங்களைப் பற்றி மேலும் சொல்லுங்கள் தேவன்..."

"அப்பா இறந்து விட்டார். அம்மாவும் நானும் மட்டும்தான் இந்த வீட்டில் இருக்கிறோம்.ஒரு கட்டுமான நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்கிறேன். எனக்கு முப்பது வயதாகிறது."

"நிம்மதியான வாழ்க்கை. அது சரி, பார்க்க எப்படி - கமலஹாசன் மாதிரி இருப்பீர்களா?"
"அய்யோ... அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஒரு சராசரி இந்திய இளைஞன்தான்.ஐந்தடி ஒன்பதங்குல உயரத்தில், எழுபது கிலோ எடையில்..."

"இப்படி அடக்கமாகப் பேசும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள்இதுவரை எந்தப் பெண்ணின் வலையிலும் மாட்டவில்லையா?"

"உண்மையைச் சொல்வதென்றால், 'முன்பு' எனக்கொரு காதலி இருந்தார்.இப்போது இல்லை.அது கிடக்கட்டும்...நீங்கள் உங்களைப் பற்றி சொல்லுங்களேன்.."

"என்னைப் பற்றி...நான், அம்மா, அண்ணா என்று சிறிய குடும்பம். தங்கை கணவரோடு அமெரிக்காவில் இருக்கிறாள். மூத்தவளான எனக்கு இன்னும் திருமணமாகவில்லை.ஆனால் கனடாவில் எனக்கொரு காதலன் இருக்கிறார். நாங்கள் சீக்கிரமே திருமணம்செய்யப் போகிறோம்."

"உங்கள் காதலர் வெள்ளைக்காரராக இருக்க வேண்டும் என்பது என் யூகம்..."

"உங்கள் யூகம் சரிதான்"

"ஆக, இந்தியப் பெண்ணான நீங்கள் ஒரு வெள்ளைக்காரரை மணக்கிறீர்கள் ?"

"வெள்ளைக்காரர் என்பதை விட, ஒரு மனிதரை மணக்கிறேன் என்று சொல்லலாம். இனம், மதம். தேசம், மொழி என்பதெல்லாம் நாம் ஏற்படுத்திக் கொண்டதுதானே?இது இன்டெர்னெட் யுகம். இந்த யுகத்தின் இன்னும் சில வருடங்களில் நாடுகளும்,எல்லைகளும் இல்லாமல் போய் விடலாம். அப்போது அமெரிக்கர்கள், ஆப்பிரிக்கர்கள்,ஆசியர்கள் என தனியாக யாரும் இருக்கப் போவதில்லை. உலகம் முழுவதும் நல்லமனிதர்கள், கெட்ட மனிதர்கள் என்று இரண்டு பிரிவினர் மட்டுமே இருக்கப் போகிறார்கள்."

"ஆழமாக சிந்திக்கிறீர்கள் வித்யா. உங்கள் காதலரை இணையத்தின் மூலம்தான்சந்தித்தீர்களா?"

"ஆமாம். நாகரிகமான, அன்பான அவரது பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. புகைப்படங்களை பறிமாறிக் கொண்டோம். தொலைபேசியில் பேசிக் கொண்டோம். மெல்ல மெல்லதான் எங்கள் காதல் வளர்ந்தது."

"அவரை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?"

"போன வருடம் ராபர்ட் இங்கு வந்து ஒருமாதம் என்னோடு தங்கி இருந்தார். அந்தசந்திப்பு எங்கள் காதலை மேலும் வளர்த்தது. இப்போது என் மனம் முழுக்க அவர் மீதுகாதல் மட்டுமே நிரம்பிக் கிடக்கிறது."

"நீங்கள் சொல்வது சரிதான். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் காதல்தான் முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம்தான். நீங்கள் தப்பாக நினைக்காவிட்டால், நான் ஒன்று கேட்கட்டுமா ?"

"நாம் முகம் தெரியாத நண்பர்கள். தயங்காமல் கேளுங்கள்"

"நமக்கு - இந்தியர்களுக்கென்று சில ஒழுக்க வரையறைகள் இருக்கிறது. மேல்நாட்டவர்களுக்கு அப்படிக் கிடையாது."

"உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது. ராபர்ட் என்னோடு ஒருமாதம் தங்கி இருந்தாலும்இந்தியப் பண்புகளை நான் இழந்து விடவில்லை. எங்களுக்கிடையில் காதலும், காமமும்இருக்கத்தான் செய்தது. ஆனால், நாங்கள் எல்லை மீறிவிடவில்லை."

"ஆச்சரியமாக இருக்கிறது..."

"உண்மைதான் தேவன். நான் ஒரு இளைஞனை காதலித்திருந்தால், அவனது எதிர்பார்ப்புகள் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், என் ஐம்பத்தி இரண்டு வயது காதலரிடம் முதிர்ந்த கனிவுதான் இருக்கிறது."

"ஐம்பத்தி இரண்டா... வயது வித்தியாசம் அதிகமாகப் படவில்லை?"

"இல்லை. இரு கரைகளுக்கிடையில் அடங்கி ஓடும் ஆறு மாதிரி ஒரு கட்டுப்பாடான துள்ளலைதான் நான் ராபர்ட்டிடம் பார்க்கிறேன்."

"கவிதையாகப் பேசுகிறீர்கள் வித்யா. இதையெல்லாம் கேட்கும்போது, உங்கள் இருவரதுபுகைப்படத்தையும் பார்க்கவேண்டுமென்ற ஆசை வருகிறது..."

"ம்...நீங்கள் நல்லவர் என்று உள்மனம் சொல்கிறது. நான் உங்களை நம்பலாமா தேவன்?"

"நம்புங்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை?"

"ஓ.கே. நான் உங்களை நம்புகிறேன்.இதோ, நான் தருகிற முகவரியில் போய் பாருங்கள்.நான், ராபர்ட் உட்பட நிறைய புகைப்படங்கள் இருக்கிறது. ஆனால் நீங்களும் உங்களதுபுகைப்படத்தை இப்போதே எனக்கு அனுப்ப வேண்டும். அதுதான் நியாயம்."

"பிரச்சனையில்லை. இதோ அனுப்புகிறேன்"
"............"
"............"
"வித்யா, நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள். ஒரு சாயலில் நடிகை பானுப்பிரியாவைப்போல் இருக்கிறீர்கள்."

"பொய். இதே வசனத்தை இதுவரை எத்தனை பேரிடம் சொல்லி இருக்கிறீர்கள்?"

"நான் சொல்வது நிஜம். ராபர்ட் கூட இளமையாக, அழகாக இருக்கிறார்."

"நீங்களும்தான் தேவன். கைகட்டி, கராத்தே வீரரைப் போல் கம்பீரமாய் நிற்கிறீர்கள்"

"நன்றி வித்யா."

"தேவன்...உங்களது சினேகமான முகத்தில் களங்கமில்லா நட்பும், ஏதோ ஒருவிதகவர்ச்சியும் தெரிகிறது."

"பாருங்கள்... நீங்களும் பொய் பேசுகிறீர்கள்...."

"ஹஹஹா... தேவன், நான் உங்களோடு பேசிக் கொண்டிருந்ததில் என் காதலருக்கு·போன் செய்ய மறந்துவிட்டேன். நாம் மீண்டும் பேசுவோம். இப்போது என்னை உங்கள்நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். நானும் அப்படியே செய்கிறேன்"

"ஆகட்டும் வித்யா"
________________________________________________

"ஹாய் தேவன்... என்ன நீண்டநாளாக ஆளையே காணவில்லை?"

"ஒரு பயிற்சிக்குப் போயிருந்தேன் வித்யா.அதுதான் காரணம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். உங்கள் ராபர்ட் எப்படி இருக்கிறார்?"

"ராபர்ட் நன்றாகத்தான் இருக்கிறார். ஆனால் எனக்குதான் இரண்டு நாள் சளி, காய்ச்சல்."

"அடடா....தூரத்தில் இருக்கிறீர்கள். பக்கத்தில் இருந்தாலாவது மருந்து கொடுத்துதைலம் தேய்த்து, கஞ்சியும் வைத்து கொடுத்திருப்பேன்"

"ஆஹா...எவ்வளவு அக்கறையான மனிதர்! அம்மாவும் அண்ணாவும் வெளியூர் திருமணத்திற்குப் போயிருக்கிறார்கள். பக்கத்தில் யாராவது இருந்து கவனித்துக் கொண்டால் நல்லது என்றுதான் தோன்றுகிறது."

"நாம் விளையாட்டாக பேசிக் கொண்டிருக்கிறோம். யார் கண்டது...ஒருநாள் நிஜத்தில்நாம் சந்தித்தாலும் சந்திக்கலாம். அது உங்கள் திருமணமாகக் கூட இருக்கலாம்"

"என் திருமணத்தில் என்னை சந்திப்பதென்றால் நீங்கள் கனடா வரவேண்டியிருக்கும்.வருவீர்களா?"

"ஆஹா...கனடாவிற்கு என்னால் வர முடியாது. ஆனால், கட்டாயம் ஒரு வாழ்த்து அட்டைஅனுப்ப முடியும்."

"இது நேர்மையான பதில். ஆனால் நம் இந்திய இளைஞர்கள் பலருக்கு இந்த நேர்மைஇருப்பதில்லையே தேவன்...அது ஏன்?"

"எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?"

"நான் சந்தித்த இளைஞர்களை வைத்து... ஒரு சில கயவர்களை வைத்து..."

"நீங்கள் யாராலோ காயப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கே தெரியும். ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை."

"புண்பட்டது ஒரு பக்கம் இருக்கட்டும். பொதுவாகவே இந்திய இளைஞர்களைப் பற்றிஎனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. அவர்களில் பலர் ஒரு பெண்ணின் ஆடையைத்திறக்கத் தவிப்பார்களே தவிர, அவளது மனதைப் பற்றி நினைப்பதேயில்லை."

"கசப்பான அனுபவங்கள் உங்களைப் புண்படுத்தி, இப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி இருப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் அதுதான் உண்மையாக இருக்க வேண்டுமென்றஅவசியமில்லை."

"என் அனுபவங்கள் தவிர, சக பெண்களின் அனுபவங்களை நிறைய கேட்டிருப்பதால்சொல்கிறேன்...நம்புங்கள் தேவன், இதுதான் உண்மை."

"சரி, நீங்கள் உங்களது முடிவில் இவ்வளவு தீர்க்கமாக இருப்பதால் சொல்கிறேன்...சென்ற வாரம் நான் நேரில் சந்தித்த இணையத்தோழியின் என்னைச்சார்ந்த அனுபவம்நீங்கள் நினைப்பதற்கு நேர்மாறானது."

"புரியவில்லை...கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் தேவன்"

"இதே சிங்கப்பூரில், நானும், ஒரு பிலிப்பைன் தேசத்துப்பெண்ணும் நீண்ட நாள் இணையநண்பர்கள். நாங்கள் நேரில் சந்தித்தது கிடையாது. அவள் ஒரு சிங்கப்பூரியனை மணந்துகொண்டிருக்கிறாள். சமீப காலமாக அவளது திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள்."

"ம்...அப்புறம்?"

"குடியுரிமை இல்லாததால், மூன்று மாதங்களுக்கு ஒர் முறையாவது சிங்கப்பூரை விட்டு வெளியேருவது அவளது வழக்கம். பெரும்பாலும் பக்கத்திலிருக்கும் மலேசியாவின்ஜோகூர்பாருவிற்கு கணவனோடு சென்றுவிட்டு, மறுநாளே சிங்கப்பூர் திரும்பி விடுவாள்.இந்த முறை அவளது கணவன் அப்படி வர மறுத்து விட்டான்."

"அடடா.."

"நானும் அப்படித்தான் பரிதாபப் பட்டேன். அவளோடு ஜோகூர் வருமாறு என்னைஅழைத்தாள். ஒப்புக் கொண்டேன். வாழ்க்கையில் முதல் முறையாக அவளும் நானும்ஜோகூர் பாருவில் சந்தித்தோம். இயல்பாக இருந்தோம். ஹோட்டலில்தான் பிரச்சனைவந்தது. எங்களுக்குக் கிடைத்தது ஒரே ஒரு இரட்டையறை மட்டும்தான்..."

"சுவரஸ்யம் !"

"இயற்கையாகவே பெண்களுக்கு ஆண்களிடம் உள்ள பயம், அவளுக்கும் என்னிடம்இருந்தது. மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகுதான் அவள் என்னோடு ஒரே அறையில் தங்கஒப்புக்கொண்டாள்."

"தைரியசாலிதான்..."

"அறையில் கட்டிலின் ஒரு ஓரத்தில் நான் படுத்துக் கொள்ள, அதன் மறு ஓரம் அவள்உட்கார்ந்து கொண்டாள். அசதியில் அப்படியே தூங்கி விட்டேன். மறுநாள் சூரியன்உதித்த பிறகுதான் எழுந்தேன். பார்த்தால்...கட்டிலின் ஓரத்தில், அதே இடத்தில் செய்தித்தாள் படித்தபடி அவள். தூங்கவே இல்லையா என்று கேட்டேன். இல்லை என்றாள். ஏன், என் மீது நம்பிக்கை இல்லையா என்று கேட்டேன். அப்படியில்லை...பக்கத்தில் ஒரு மனிதன் பன்றி மாதிரி குறட்டைவிட்டுத் தூங்கும்போது எனக்கு எப்படிதூக்கம் வரும் என்று சொல்லி சிரித்தாள்"

"ஹஹஹா..."

"இப்போது சொல்லுங்கள்...இந்த அனுபவத்திற்குப்பின், இந்திய இளைஞர்களைப்பற்றிய அவளது கணிப்பு என்னவாக இருந்திருக்கும்?"

"நீங்கள் சொன்னது சுவாரஸ்யமான சம்பவம் தேவன். ஆனால், நம்ப முடியவில்லை.இப்படி ஒரு சம்பவம் நிகழ இரண்டே காரணங்கள்தான் இருக்க முடியும்."

"என்ன அது?"

"ஒன்று அந்தப் பெண் கொஞ்சம்கூட அழகில்லாதவளாக இருக்க வேண்டும்...அல்லது...கோபித்துக் கொள்ளாதீர்கள்...உங்கள் ஆண்மை பற்றி சந்தேகம் வரும்."

"ஹஹஹா...இரண்டுமே தவறான கணிப்பு வித்யா... என்னைப்பற்றி எனக்குத் தெரியும்.அவள் அழகானவள் மட்டுமல்ல...பல ஆண்களை எளிதில் வீழ்த்தி விடும் கவர்ச்சி மிக்கவளும் கூட. என்னைப் பொருத்தவரை இப்படிப்பட்ட சம்பவம் நிகழ ஒன்றேஒன்று போதும். அது - கட்டுப்பாடு."

"என்னதான் சொல்லுங்கள்...நீங்கள் சொல்வதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.ஆனால் தேவன்...ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சம்,கனடா போவதற்கு முன் ஒருமுறை நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்."

"எதற்கு...என்னை சோதிப்பதற்கா?"

"அப்படியில்லை தேவன். ஒரு பெண்ணின் உடலை மட்டும் பார்க்காமல், அவளதுஉள்ளத்தையும் பார்க்கக்கூடிய, மதிப்பற்குரிய ஒரு இளைஞனை என் வாழ்க்கையில்சந்தித்தேன் என்ற திருப்தியோடு கனடா போவேனில்லையா...அதற்காக!"

"என்னை மகான் ஆக்காதீர்கள் வித்யா. நான் சராசரி மனிதன்தான். ஆனால்...நாளைநடப்பதை யாரரிவார்.? ஒருவேளை நீங்கள் சொன்னது மாதிரி, நாம் நேரில் சந்திக்கநேரலாம். நல்லது...மனம் திரந்து நிறைய பேசிவிட்டோம்...இது எனக்கு உறங்கும் நேரம். அடுத்த முறை உங்களோடு இன்னும் நிறையப்பேச ஆசை. உங்களுக்கு சம்மதமா வித்யா?"

"நிச்சயமாக!"
_____________________________________________________

"ஹலோ தேவன்...உங்களை மறுபடியும் இவ்வளவு சீக்கிரம் இணையத்தில் சந்திப்பேனென்று எதிர்பார்க்கவில்லை."

"நானும்தான் வித்யா..."

"போனமுறை உங்களோடு பேசி முடித்ததும் என்னால் வெகுநேரம் தூங்கவே முடியவில்லை. மனம் முழுவதும் ஏதேதோ சிந்தனைகள்."

"நான் நன்றாகத் தூங்கிவிட்டேன். எனக்குள் இருந்த சின்ன ரகசியத்தை உங்களோடுபகிர்ந்துகொண்ட திருப்திகூட அதற்குக்காரணமாக இருக்கலாம்."

"என்னை நம்பி உங்கள் ரகசியத்தை என்னோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தேவன்.நானும் ராபர்ட்டும் தனித்திருந்தவேளையில் உணர்வுகள் எங்களை எப்படி தத்தளிக்க வைத்தது என்பதை அனுபவத்தால் உணர்ந்தவள் நான். அதனால்தான் நீங்கள் சொன்னவிஷயத்தை நம்பக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன்.மேலும், இந்திய ஆண்களைப்பற்றியஎன் அனுபவங்களும் அப்படி..."

"நீங்கள் சொன்ன உணர்வுத் தூண்டல்கள் எதுவும் எனக்கும் அந்தப்பென்ணுக்கும்இடையில் நடக்கவே இல்லையே வித்யா...அப்படி ஏதும் நடந்திருந்தால் அதன் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்.ஆனால், ராபர்ட்டோடு ஒரு மாதகாலம் நீங்கள் கட்டுப்பாடாக இருந்ததுதான் எனக்கு ஆச்சரியம்."

"நான் ஒரு விஷயம் சொல்கிறேன். தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்."

"சொல்லுங்கள்"

"ஒருவேளை உங்களைப் போன்ற ஒரு இந்திய இளைஞனை என் வாழ்க்கையில்முன்பே சந்தித்திருந்தால் நான் கனடா போகவேண்டிய அவசியமே வந்திருக்காது."

"அவசரமாக அனுமானிக்கிறீர்கள். நானும் சராசரி இளைஞன்தான். எனக்கும் பல,பலஹீனங்கள் உண்டு. ஒரு இரவு முழுவதும் ஒரு அழகான பெண்ணோடு எந்தத்தவறும் செய்யாமல் தனித்திருந்தேன் என்பதற்காக என்னை மகாத்மாவாக ஆக்கிவிடாதீர்கள். அவ்வளவு ஏன்...ஒருவேளை நீங்களும் நானும் இதேபோல் தனித்திருக்கநேர்ந்தால், நான் விடிய விடிய உறங்குவேனென்று சொல்ல முடியாது."

"ஏன் அப்படி?"

"பல காரணங்கள். காலகாலமாக நமது ஜீன்களில் நமக்குள் இருக்கும் ஈர்ப்பு. காதல்பற்றி, அதன் அடுத்த நிலை பற்றி இவ்வளவு ஆழமாக நீண்டு விட்ட நமது பேச்சு...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்."

"நீங்கள் ஒரு வாதத்திற்காக அப்படிச் சொல்கிறீர்கள் தேவன். யோசித்துப்பார்த்தால்...நாம் இருவரும் தனிமையில் சந்தித்தாலும் கட்டுப்பாடோடு எல்லை மீறாமல் இருப்பது சாத்தியம் என்றே எனக்குப்படுகிறது. ம்...தேவன்...ஒரு சவாலுக்காக, நாம் ஏன் உண்மையில் அப்படி சந்திக்கக்கூடாது?"

"எப்படி...ஒரு ஹோட்டலில், தனியறையில், இரவு முழுவதும் தனியாகவா?"

"ஆமாம்."

"விளையாடாதீர்கள் வித்யா..."

"விளையாட்டில்லை தேவன்..ஒரு சவால்! நாம் இருவருமே ஜெயிக்க வாய்ப்பிருக்கிறசவால். இங்கு பக்கத்து நகரில், ஒரு பிரபல ஹோட்டலின் உச்சதளத்தில் நான் ஒருமுறை தங்கியிருக்கிறேன். பெரிய ஜன்னல்கள். அங்கு நின்று பார்த்தால், இரவுநேரம் ஊர் முழுக்க விளக்குகளால் அற்புதமாய் மின்னும். அப்படி ஒரு அறையின் ஜன்னலோரம் நின்று, நல்ல நண்பர்களாக, விடிய விடிய பேசிக்கொண்டிருக்க என்னால் முடியும்...உங்களாலும் முடியும்!"

"உண்மைதான்....முடியலாம்தான்...விமானம் ஏறினால் விரைவில் தொட்டுவிடக்கூடியதூரத்தில்தான் நீங்கள் இருகிறீர்கள்.ஆனால்...ஆனால்...வேண்டாம் வித்யா!"

"மறுக்காதீர்கள் தேவன்.நான் பார்க்க விரும்புவதெல்லாம், கட்டுப்பாடுமிக்க 'அந்த'உங்களைத்தான். ஒருவேளை, இந்திய இளைஞர்களைப் பற்றிய எனது எண்ணங்கள்தவறு என்று உங்களால் நிருபிக்க முடிந்தால், அது நீங்கள் எனக்குத்தரும் திருமணப்பரிசென்று நினைத்துக்கொள்வேன்."

"குதிரையின் கண்களுக்கு முன்னால் கட்டித்தொங்க விடப்படும் கேரட் போன்ற இந்தசவாலை ஏற்றுக் கொள்ள எனக்கும் ஆசைதான். ஆனால் பின்விளைவுகளைப் பற்றிபயப்படுகிறேன் வித்யா."

"அதிகம் யோசிக்காதீர்கள். உங்களால் இதில் ஜெயிக்க முடியும்."

"ம்..சரி..நீங்கள் இவ்வளவு சொல்வதால் ஒப்புக்கொள்கிறேன்.ஆனால் இது ஒரு அபாயகரமான அல்லது அபத்தமான பரிசோதனை என்று எனக்குப்படுகிறது. இருந்தாலும்...சந்திப்போம்! எப்போது என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள்!"

"சந்திப்பது என்று முடிவான பிறகு, நாட்களைத் தள்ளிப்போட வேண்டாம். வரும் சனிக்கிழமை இரவு, நான் சொன்ன அதே ஹோட்டலில் சந்திப்போம். எனது தொலைபேசிஎண்ணை குறித்துக் கொள்ளுங்கள்.உங்களுடையதை எனக்குக் கொடுங்கள்."

"சரி வித்யா..."

______________________________________________________
"ஹாய் தேவன்..."
"........................."
"தேவன், இருக்கிறீர்களா?"

"........................."

"தயவுசெய்து பேசுங்கள் தேவன்...."

"சொல்லுங்கள் வித்யா."

"உங்கள்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன், ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள்?"

"தவறுதான்...என்னை மன்னித்து விடுங்கள்."

"எப்படி தேவன்...விமானமேறி அவ்வளவு தூரம் வந்து, ஹோட்டல் வரவேற்பறையில் உஙளுக்காக் காத்திருந்த என்னைப் பார்த்தபிறகும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல்டெக்ஸியில் ஏறி ஓடிப்போக உங்களுக்கு எப்படி மனம் வந்தது?"

"எனக்கு வேறு வழி தெரியவில்லை வித்யா...நீங்கள் என் மீது வைத்தது எவ்வளவுபெரிய நம்பிக்கை? என்னால் எப்படி அந்த நம்பிக்கையை உடைக்க முடியும்?"

"என்ன சொல்கிறீர்கள் தேவன்?"

"உண்மையைச் சொல்கிறேன் வித்யா...ஹோட்டல் வாசலில் ஒரு தேவதை மாதிரிநின்ற உங்களைப் பார்த்ததும், சூழ்நிலை நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. அதனால்தான்..."

"ஆக நீங்களும் ஒரு சராசரி இந்திய இளைஞர்தானா? நீங்கள் சொன்ன மாதிரிஒழுக்கம்மிக்க ஒரு இளைஞனை நான் என் வாழ்க்கையில் சந்திக்கவே முடியாதா?"

"உண்மையில் அப்படிப்பட்ட ஒருவரை என்னில் நீங்கள் சந்தித்துவிட்டீர்கள் வித்யா..."

"என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் ஓடிப்போன உங்களிலா?"

""யோசித்துப்பாருங்கள்...எப்போது நீங்கள் என்னை சந்திக்கத் துடித்தீர்களோ,அப்போதே நாம் உங்களை ஏதோ ஒருவகையில் பலவீனப்படுத்தியிருப்பதை புரிந்துகொண்டேன். நாம் சந்திக்கும்போது எல்லைகள் மீறி தவறுகள் நிகழ்ந்தாலும் ஏற்றுக்கொள்ள நாம் மனரீதியாக தயாராகி விட்டதும் எனக்குப் புரிந்தது."

"................."

"நான் என்னைப்பற்றி சொன்ன விஷயங்கள் உங்களிடம் ஏற்படுத்திய பிம்பம் அப்படி.வாழ்க்கையில் நீங்கள் சந்திக்க காத்துக் கொண்டிருந்த ஒரு கதாநாயக பிம்பம்.இப்படிப்பட்ட ஏங்கித் தவிக்காத ஒழுக்கமுள்ள இளைஞனுக்காகத்தான் இதனை நாள்காத்திருந்தேன், இவனிடம் ஒருநாள் வசமிழந்தாலும், வாழ்ந்துவிட்டுப் போனாலும் தப்பில்லை என்று நீங்கள் நினைப்பதாகக் கூட எனக்குத் தோன்றியது. என் கணிப்பு தவறா வித்யா?"

"இந்த கேள்விக்கு என்னிடம் உடனடி பதிலில்லை தேவன். நீங்கள் நினைத்ததைசொல்லுங்கள்..."

"ஒருவேளை உங்களைப் பற்றிய எனது கணிப்புகள் தவறாக இருக்கலாம்...தவறாகஇருக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறேன்.அனால், இப்போது மனம் திறந்து ஒருஉண்மையை உங்களிடம் ஒப்புக்கொள்கிறேன் வித்யா..."

"................."

"ஹோட்டல் வாசலில், சேலை கட்டி,செதுக்கிய சிற்பம் மாதிரி நின்ற உங்களைப்பார்த்த விநாடி...நான் சலனப்பட்டேன்.அந்தநாள் முழுவதையும் உங்களுடனே கழித்துவிட வேண்டுமென்று சபலப்பட்டேன்."

"இதுதான்... உங்களின் இந்த நேர்மைதான் ... எப்படிச் சொல்வது? எத்தனை பேரால்இப்படி உண்மையையை ஒப்புக்கொள்ள முடியும் சொல்லுங்கள்?"

"இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு வெட்கமில்லை.ஆனால், நாம் சந்தித்து, எல்லை மீறிஏதாவது நடந்திருந்தால், நீங்கள் சந்தித்த சராசரி மனிதர்களின் பட்டியலில் நானும் சேர்ந்திருப்பேன்."

".................."

"அப்படி ஏதும் நிகழ்ந்து, நீங்கள் என்மீது வைத்திருக்கும் உயரமான நம்பிக்கைகளைதகர்த்துவிட வாய்ப்பு தராமல், டெக்ஸியில் ஏறிய அந்த விநாடியில் 'கட்டுப்பாடுமிக்க'ஒரு இளைஞனை என்னில் நீங்கள் சந்தித்தீர்கள். இது சுய தம்பட்டமாகத் தெரியலாம்.ஆனால், உண்மை."

".................."

"எந்த வகையிலும் உங்களை ஏமாற்றுவது என் நோக்கமல்ல. நான் அப்படி நடந்துகொண்டதால் நாம் இருவருமே சில இழப்புகளைத் தவிர்த்திருக்கிறோம். எனக்குத்தெரியும், உங்களை சந்திக்காமல் திரும்பியதால், நான் உங்களை காயப்படுத்தி இருக்கிறேன். இன்னும் தொடரப்போகும் குற்ற உணர்வில்லாத நமது நட்பு அதற்குமருந்தாக அமையும். மீண்டும் ஒருமுறை நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.நாம் என்றுமே நல்ல நண்பர்களாக, எந்த விஷயத்தையும் எழுத்தில், பேச்சில் பகிர்ந்துகொள்ளக் கூடியவர்களாக இருப்போம். நான் முன்பு நான் சொன்ன மாதிரி, உங்கள்திருமணத்திற்கு என் வாழ்த்துமடல் கனடா வந்து சேரும். மீண்டும் இணையத்தில் சந்திப்போம். பை வித்யா!"
________________________________