Friday, February 25, 2005

சுனை விடும் மூச்சு - ஒரு சிங்கப்பூர் கவிதைத் தொகுப்பு

பழகிப்பார்த்தவர்களுக்கு தெரியும்...வாசித்தல் என்பது ஒரு சுகானுபவம்! வாசிக்கிற புத்தகம் நேசிக்கிற மாதிரி இருந்து விட்டாலோ, ஆஹா...இன்னும் சுகம்!

சில புத்தகங்கள் வாசிப்பு என்ற நிலை தாண்டி யோசிப்பு என்ற நிலைக்கு நம்மை இட்டுச்சென்று விடும்.அப்படிப்பட்டவை காலம் கடந்தும் நம் நெஞ்சில் நிலைத்து நின்று விடுகின்றன...காற்றில் சலனப்படும் அலையாக மனசுக்குள் அவை எழுப்பிவிடும் சிந்தனைகள் காலத்தின் ஓட்டத்தில் ஓய்வதேயில்லை...சமீபத்தில் அப்படியொரு புத்தகம் படிக்கும் வாய்ப்புக்கிடைத்தது.புத்தகத்தலைப்பு -சுனை விடும் மூச்சு! எழுதியவர் - இந்திரஜித் என்ற சிங்கப்பூரர்! இது ஒரு கவிதைத்தொகுப்பு.

வழக்கமான கவிதை தொகுப்புகளுக்கு இருக்கும் பளபளப்பு இல்லாமல், ஒப்பனைஇல்லாதபெண் போன்ற எளிமையான அட்டைப்படம்...கதவு இல்லாத வீடு மாதிரி முன்னுரையோ,முகவுரையோ இல்லாமல் கவிதைகள் சட்டென துவங்கிவிட..நமக்கு ஆச்சரியம்! வாசகரோடு தான் பேசுவது தவறு...தனது கவிதைகள் மட்டும்தான் பேசவேண்டும் என்ற கவிஞரின் நினைப்பு நமக்கு புரிகிறது...

நமது வாழ்க்கையில் தினமும் பார்க்கின்ற பொருள்கள் கூட இந்தக்கவிஞனின் பார்வையில் புதுப்புது அர்த்தங்களோடு தம்மை வெளிப்படுத்திக்கொள்கிறபோது...அட! என்று ஆச்சரியப்பட்டு நிமிர்ந்து உட்காருகிறது மனசு!

குறுக்குப் பாலமாய்
புளோக்குகளூக்கு
இடையில் தொங்கும் வயரில் -

ஆடைகள் குத்தி மாட்டப்பட்ட
மூங்கில் கம்புகளில்

ஏதோ சொல்ல நினைத்து
கொஞ்சம் தயங்கியபின்
விருட்டென்று
பறக்கிறது ....

அந்த
ஒற்றைக்கால் மைனா.

இந்தக்கவிதை அந்த இனத்தில் சேர்த்தி. மைனாவின் கால்களை முடமாக்கிய கவிஞர்,எந்திரத்தனத்தால் முடமாகிப்போன நமது வாழ்க்கையின் கால்களுக்கு கவிதைமருந்திட்டிருப்பது சுகமான சோகம்...இந்தக்கவிதை எழுத்தாளர் சுஜாதாவையும் பாதிக்க..கனையாழியின்கடைசிப்பக்கத்தில் பாராட்டியிருக்கிறார். காதலைப்பாடாதவன் கவிஞனா? காதல் இந்தக்கவிஞரையும் பாடாய் படுத்தியிருப்பதைபார்க்க முடிகிறது.

காரை விற்றவன்
பழைய ஞாபகத்தில்
சாவியைத் தேடுவது போல!
என்னுள் அந்த அலை
எழுந்து கொண்டே இருக்கிறது.

என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்.

பிழைப்பா,காதலா என்ற கேள்வி வரும்போது,பிழைப்பை நோக்கி ஓடோ ஓடென்றுஓடி விட்டு,பின்னர் கவிதையாகப் பெருமூச்சு விடும் ஏக்கத்தின் அடையாளங்கள் இந்தக்கவிதையில் ஏராளம்...

தாயை மகள் பிரிவதும்
தந்தையை மகன் பிரிவதும்
நண்பர்கள் பிரிய நேர்வதும்
ஏதோ ஒரு பிழைப்பைத் தேடிதான்!

அன்பே
உன் பிழைப்பு
எப்படி இருக்கிறது?

என்று கவிஞர் கேட்கும்போது...அதிர்ச்சி! 'உன் பிழைப்பு' என்ற வார்த்தை அந்தக்காதலை,அந்தக்காதலியை கொச்சைப்படுத்தி விட்டதோ என்ற நெருடல்.

மூளையை முன்வைக்கும்வாழ்க்கை வியாபாரத்தில்இதயம் இழக்கப்படுகிறது.
என அடுத்துவரும் வரிகள்...இதயத்தை இழந்துவிட்டால் இப்படியெல்லாம் பேசுவதுஇயல்புதானே என நினைக்கவைத்து நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன.

நகரமும்,நாகரிகமும் வாழ்க்கை வசதிகளை பெருக்கி, மனதின் வசதிகளை சுருக்கிவிட்டசோகத்தை சொல்லாமல் சொல்கிறது இவரது இன்னொரு கவிதை...

துருவங்கள்
எப்படி சந்திப்பது
புருவங்களே
சந்தித்துக் கொள்ளாதபோது ?

அதே நகரம், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கையை அதன் போக்கில் அப்படியேஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் அவனுக்குக் கொடுத்துவிட்டதை ஆயிரம் பிரச்சனைகளுக்கு நடுவிலும் "அதோ ஒரு கிழவன் டைம்ஸ் நாளிதழை ஒரு வரி விடாமல் படித்துக் கொண்டிருக்கிறான்" என்ற வரிகள் படமாக்கி மனதில் பதியவைத்தும் விடுகிறது.

ஒரு மழை நாளில், புத்தகநிலைய வாசலில் தனியாக மாட்டிக்கொண்ட அனுபவம் கூடஇவரிடம் கவிதையாகி இருக்கிறது.

படிப்பதற்கு ஒன்றும் இல்லாமல்
நூல் நிலைய வாசலில்
ஒரு மனிதனால்
என்ன செய்ய முடியும்?

இங்கே ஒருத்தியை எவனாவது
கற்பழித்தால் கூட
கையில் புத்தகத்தை
வைத்திருக்கும் மனிதனால்
அலறும் மழைக்குள்
என்ன செய்ய முடியும்?

சுயநலத்தால் நனைந்து போன மனிதன் இயலாமை இதழ் பிரித்தால் இப்படித்தானேபேசமுடியும்?மனிதனை இப்படியெல்லாம் கிண்டல் செய்வதில் இதில் வரும் கவிதைகள்சுகம் காண்கின்றன.

அங்கதச்சுவை இந்தக்கவிதைகளில் தூக்கலாக இருப்பதோடு,அவற்றை கை தூக்கியும் விடுகின்றன...

எவனாவது
எழுதி விடுவானோ
என்ற பயத்தில்
நிலா வாழைமரப் புதரில்.

மீ கடைக்கார
முதலாளியின்
வேட்டிக்கும் கைலிக்கும்
வெளுக்க நேரம் வரும்போது
எனக்கா வராது?

நேற்றைய மரம் எதுவென்று
தேடித்தவிக்கும் நாய்.

என்பதெல்லாம் சில உதாரணங்கள்.

இதுதான் என்றில்லாமல் எல்லா திசைகளிலும் பறக்கும் பட்டம் மாதிரி கண்ட திசைகளில்பறக்காமல் ஏதோ இலக்கைத்தேடி பறந்திருக்கிறது இந்திரஜித்தின் கவிதைகள்.

ஏதோ போக்கிடம்
ஏதோ இலக்கு
இல்லாவிட்டால்
ஏன் நடக்க வேண்டும்?

என்பது கவிஞரின் கேள்வி.

தமிழகம் தாண்டி பறந்துகிடக்கும் தமிழ்கவிதைகளில் தரமான கவிதைகள் பல உண்டுஎன்பதற்கு இந்த சிங்கப்பூர் கவிதை தொகுப்பு ஒரு உதாரணம்.இது விமர்சனக்கத்திகொண்டு கீறிப்பார்க்கும் எத்தனிப்பல்ல,வாசகநிலையில் இருந்து வீசப்பட்டிருக்கும்சாமரம்.உலகை சுருக்கிக்கொண்டிருக்கும் விஞ்ஞானத்தின் வீச்சில் தமிழ் கவிதைகள்மட்டும் விடுபடுவது நியாயமா?சிக்க வைப்போம்...

ஒரு கிணற்றுக்குள்
வீசப்படும் வாளி
திரும்பி வரும்போது
ஒரு தவளைக்கு
விடுதலை கிடைக்கலாம்...என்று முடிந்திருக்கிறது இந்திரஜித்தின் முத்தாய்ப்புக்கவிதை.

இந்த கவிதைத்தொகுப்பு நம் மனதுக்குள் இருந்தும் சில நினைவுகளுக்கு விடுதலை தரத்தவறவில்லை!வாசித்துப்பாருங்கள்...உங்களுக்கும் அந்த அனுபவம்வாய்க்கலாம்!!

Thursday, February 24, 2005

திட்டமிடல் (Planning) என்ற கெட்ட வார்த்தை

சமீபத்தில் நடந்த சிங்கப்பூர் இணைய நண்பர்கள் சந்திப்பைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, அதை ஒருங்கிணைத்த எம்கே குமாரின் முயற்சியும், திட்டமிடலும் மனதுக்குள் அடிக்கடி வந்து போனது. கூடவே - திட்டமிடல் எந்த அளவு அவசியம்..எதற்கெல்லாம் அவசியம் என்ற கேள்வியும்!

யோசித்துப் பார்த்தால், நாம் வாழ்க்கையின் பெரும்பாலான நிகழ்வுகளை தெரிந்தோ தெரியாமலோ திட்டமிட்டே வாழ்ந்து வருகிறோம் என்ற உண்மை புரிகிறது. 'பையனை இஞ்சினியராக்க வேண்டும்...பெண்ணை டாக்டராக்க வேண்டும்..' என்று திட்டமிட்டு காய் நகர்த்தும் காய் நகர்த்தும் பெற்றோர் துவங்கி, 'அடுத்த valentines dayக்குள்ள அஜிதாவை எப்படியாவது மடக்கணும் மச்சி ( காதலில்தான்! )..' என்ற லட்சிய நோக்கோடு செயல்படும் கத்திவாக்கம் கார்த்திக் வரை ஏதோ ஒருவகையில் திட்டமிட்டே வாழ்ந்து வருகிறார்கள். அந்த திட்டமிடலின் ஆழத்தை, அகலத்தை, உயிர்தோய்ந்த ஈடுபாட்டைப் பொறுத்து வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப் படுகின்றன.

திட்டமிடல் (Planning) என்ற வார்த்தைக்கு சரியான உதாரணம் சிங்கப்பூர். 1965ல் மலேசியாவை விட்டு வெளியேற்றப்பட்டபோது, பெற்றோரால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பிள்ளையின் தவிப்புதான் இங்கும். பலருக்கும் எதிர்காலம் என்பது குழப்பமானதாகவும், அவநம்பிக்கையூட்டுவதாகவுமே இருந்தது.

லீ குவான் யூ என்ற மாமனிதரின் மனதிலோ வேறு திட்டங்கள். அவருக்கு சிங்கப்பூரின் பல, பலவீனங்களைப் பற்றிய தெளிவிருந்தது; உடனடியாக செய்ய வேண்டிய காரியம் என்ன.. பத்து வருடங்களுக்குப்பின் செய்ய வேண்டிய காரியம் என்ன என்பது பற்றி தீர்க்கமான முடிவிருந்தது; சின்னஞ் சிறிய சிங்கப்பூரை உலகே வியக்கும் நாடாக மாற்றுவதற்கான செயல் திட்டமும் இருந்தது (action plan). இன்று பல பில்லியன் டாலர் அன்னியச் செலாவணி கையிருபோடு, எந்த சோதனையையும் எதிர்கொள்ளூம் தைரியத்தோடு நிமிர்ந்து நிற்கிறது சிங்கப்பூர். All credits goes to honourable Minister Mentor Mr. Lee Kwan yew !

1965ல் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் இதுவரை சாதித்ததை 1947ல் சுதந்திரம் பெற்ற இந்தியாவால் இதுவரை சாதிக்க முடியாதது ஏன்? பதில் வெகு சுலபமானதுதான்...சுதந்திரத்திற்குப்பிறகு இன்றைய தேதிவரை தொலைநோக்கும், திட்டமிடலும், தன்னலமற்ற தலைமையும் ஒருங்கே அமையப்பெற்ற தலைமைத்துவம் உருவாகவில்லை என்பதே அது.
சஞ்ஞய்காந்தியின் மரணம்தான் இந்தியாவிற்கு நேர்ந்த மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்று சில சமயங்களில் தோன்றுவதுண்டு. அவரது நடவடிக்கைகளில் ஒருவித dictatorship தொனியிருந்தாலும், இந்தியாவைப் போன்ற பரந்த, பல்வேறு கலாச்சார, சிந்தனை, பொருளாதார ஏற்ற தாழ்வுள்ள நாட்டிற்கு, அந்தத் 'தொனி', பெருமளவு பயன்பட்டிருக்கக்கூடும். இந்தியாவில் பின்பற்றப்படுகிற அதிகபட்ச ஜனநாயகம் தன் கைகளைக் கொண்டே தன் குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கிறது.

பொது இடங்களில் நினைத்த மாத்திரத்தில், பேன்ட் ஜிப்பை கீழிறக்கி ஏதாவது ஒரு சுவரில் 'சர்ர்ரடிக்கிற' சுதந்திரத்தைத் தரும் ஜனநாயகத்தால், அந்தப் பக்கம் போனால் நாறும் என்பதைத் தவிர, என்ன பயன்? இதைவிட, "இந்த லி·ட் CCTVயால் கண்காணிக்கப்படுகிறது.மீறி சிறுநீர் கழிப்பவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்" என்று எச்சரிக்கிற, தனிமனித சுதந்திரம் - பொதுமனித அத்துமீறலாக மாறாமல் பார்த்துக் கொள்கிற, சிங்கப்பூர் ஜனநாயகம் எவ்வளவோ மேலில்லையா?

இந்தியாவில், அதிகாரத்திலுள்ள சக்திவாய்ந்த மனிதர்களுக்கு 'திட்டமிடல்' என்ற வார்த்தையோடு சரியான பரிட்சயமில்லை. அது இருந்திருந்தால், மற்ற நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் இந்தியா இத்தனை ஆண்டுகள் பின்தங்கி இருக்காது.

1998ல் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னும், வாவாசான் 2020 திட்டத்தின் மூலம், கிபி 2020-ற்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறிவிட முனைப்புடன் முயன்று வருகிறது மலேசியா.அங்கும் லஞ்ச லாவன்யம் இருக்கத்தான் செய்கிறது.தேனெடுப்பவர்கள் கையை நக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்தியாவிலோ தேன்கூடே திருடு போய்விடுகிற அவலநிலை.

சரி நாட்டை விட்டுவிடுவோம்... நம்மைப் பொருத்தவரை தனிமனித திட்டமிடல் எந்த அளவு இருக்கிறது? சுருங்கச் சொன்னால், நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. சிலருக்கு, 'திட்டமிடல்' என்பது ஒரு கெட்ட வார்த்தையாகத் தெரிந்தாலும், பலரும், படிப்பு, வேலை, திருமணம், பிள்ளைப்பேறு, வீடு, கார் என வாழ்க்கையை திட்டமிட்டே வாழ்கிறோம். அந்த திட்டமிடல் ஆழமிக்கதாக் இருக்கிறதா என்பதுதான் சிந்தனைக்குரிய விஷயம்.

சிங்கப்பூரில் துவாஸ் என்ற இடத்தில் புதிய மின்நிலைய கட்டுமானப்பணி நடக்கிறது.375 மெகாவாட் தயாரிக்கும் இரண்டு யூனிட்களை கட்டும் கான்ட்ராக்ட் MHI என்ற ஜப்பானிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அங்குதான் நிஷிகாமி ( Nishigami ) என்ற ஜப்பானிய அதிசயத்தை சந்தித்தேன். அவர்தான் புதிய மின்நிலையத்தின் மொத்த கட்டுமானப்பணியின் திட்டமிடலுக்கும் பொறுப்பாளர்.

அவர் செய்த முதல் வேலை மின்நிலைய கட்டுமானப்பணியில் உள்ள A to Z வரையிலான எல்லா வேலைகளையும் பட்டியலிட்டு, ஒவ்வொரு வேலைக்கும் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டது. அப்படி அடையாளம் காணப்பட்டவர்களிடம் அவர் செய்யச்சொன்ன முதல் வேலை PPSS தயாரிப்பது. Procees Procedure Schedule Sheet என்பதன் சுருக்கமே PPSS. அதில் நீங்கள் செய்யப்போகும் எல்லா வேலைகளையும் வரிசைப்படுத்தி, ஒரு விஷயம் கூட விடாமல், துவக்கம் முதல் கடசிவரை, ஒரு கதை மாதிரி எழுத வேண்டும். ஒரு வேலையை முடிக்க எவ்வளவு நாளாகும், எத்தனை ஆட்கள் + பொருட்கள் + எந்திரங்கள் தேவை, என்னென்ன இடஞ்சல்கள் வரலாம், அப்படி வந்தால் எப்படி சமாளிப்பது - இப்படி எல்லா விவரங்களையும் Excel spread sheetல் ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதி தயாரிக்க வேண்டும். அதை நிஷிகாமி ரிவியூ செய்து, கேள்வி மேல் கேள்விகள் கேட்பார்.

உதாரணத்திற்கு, ஒரு போல்ட் பயன்படுத்துவதாக எழுதியிருப்போம். அதன் நீளமென்ன, குறுக்களவு என்ன, GI materialலா அல்லது stainless steelலா, பொருத்தும் முறை என்ன, டிரில்லிங் மெஷின் பயன்படுத்துகிறோமா, எங்கிருந்து மின்தொடர்பை பெறுகிறோம்... இப்படி பல கேள்விகளை நிஷிகாமி கேட்பார். சம்பந்தப்பட்ட எஞ்சினியர் பதில் சொல்ல வேண்டும். ஒரு PPSS மீண்டும், மீண்டும் திருத்தப்படும். ஆகக்கடைசியில், நிஷிகாமி ஒரு PPSSற்கு ஒப்புதல் அளிப்பத்ற்குள் சம்பந்தப்பட்ட எஞ்சினியர் பல உறக்கமற்ற இரவுகளை கழிக்க வேண்டியிருக்கும்.

இதற்கான பலன் - ஒரு வேலை துவங்குவதற்குமுன்பே அதற்கான எஞ்சினியர், தேவையான எல்லா விவரங்களையும் விரல் நுணியில் வைத்திருப்பார். தனக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு விளக்கிச் சொல்லிவிடுவார். கடைசி உதவியாளருக்குக்கூட தனது வேலையைப்பற்றி ஒரு தெளிவு வந்துவிடும். இதுதான் திட்டமிடல்.பல ஆயிரம் எந்திரங்கள் இருக்கக்கூடிய இடத்தில், ஒரு சின்ன ஆணியை பொருத்துவது எப்படி என்றுகூட சிந்தித்துப்பார்க்கிற ஆழமான திட்டமிடல். இதோ...சாதனை நாட்களில் நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கிறது துவாஸ் மின்நிலைய கட்டுமானப் பணி. ஆழமான திட்டமிடலின் மூலம்,இந்த சாதனைக்கான ஆதார விதையை விதைத்தவர் நிஷிகாமி.

தொலைநோக்கோடு யோசித்து சரியாக திட்டமிடக்கூடிய, திட்டமிட்டபடி செயல்படக்கூடிய, இடையில் தென்படும் தவறுகளை திருத்திக்கொள்ளக்கூடிய, இவரைப்போன்ற தலைவர்கள்தான் இந்திய தேசத்தின் இன்றைய தேவை. தலைவர்கள் கிடக்கட்டும்...ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன் வாழ்க்கையை சரியாக திட்டமிட்டு வாழ்ந்தாலே போதும், தானாக முன்னேறிவிடும் இந்தியா என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Monday, February 21, 2005

சிங்கப்பூர் கடற்கரைச் சாலையில் கவிமாலை

பிச்சினிக்காடு இளங்கோவுடனான என் முதல் சந்திப்பு எந்த காரணத்திற்காக நிகழ்ந்தது என்று ஞாபகம் இல்லை.சிங்கப்பூர் புகிஸ் எம் ஆர் டிக்கு அருகில் ஒரு கேஎ·ப்சி உணவகத்தில் நிகழ்ந்தது என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது. BSc(Agri) படித்துவிட்டு கவிதைப்பயிர் செய்வதை தவமாக்கிக் கொண்டிருந்த அவரை ஆச்சரியத்தோடு பார்த்தேன். மொழி என்ற தலைப்பில் எழுதிய கவிதையை வாசித்துக் காட்டினார். ' வங்கி நீ .. வாங்கியவன் நான்.. ' என்ற வரிகள் இன்னும் ஞாபத்தில் இருக்கிறது. அதற்கப்புறம் நிறைய சந்திப்புகள்....

பிச்சினிக்காடு இளங்கோவின் ' வியர்வைத்தாவரங்கள்' என்ற கவிதைத் தொகுப்பு வெளியாகியிருந்த காலம் அது. அப்போது இளங்கோ சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தில் ஏதோ பொறுப்பிலிருந்தார். ஒரு நல்ல படைப்பாளியை மலேசிய மக்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டுமென்று ஆசைப்பட்டேன். எனது நண்பரும், கிள்ளான் வாசகர் வட்டத்தலைவருமான பாலகோபாலன் நம்பியாரிடம் ' இளங்கோவின் புத்தக வெளியீட்டை கோலாலம்பூரில் நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா?' என்று கேட்டேன். பிச்சினிக்காடு இளங்கோ யாரென்று அவருக்குத் தெரியாது என்றாலும், நட்புக்காகவும், தமிழுக்காகவும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். கோலாலம்பூர், செந்தூல், செட்டியார்கள் மண்டபத்தில் 'வியர்வைத்தாவரங்கள்' வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. சிங்கப்பூரிலிருந்து எழுத்தாளர் கழகத்தலைவர் அமலதாசன், செயலாளர் ஆண்டியப்பன், சுப. அருணாச்சலம் உட்பட பலரும் போயிருந்தோம்.

சிங்கப்பூரிலிருந்து நாங்கள் போனது பஸ்ஸில். மலேசியாவின் அகன்ற நெடுஞ்சாலையின் ஓரத்தில் விரைந்தோடும் சோடியம் விளக்குகளையும், இருட்டிலிருந்த செம்பனை மரங்களையும் பார்த்தபடி, நானும், பிச்சினிக்காடு இளங்கோவும் விடியவிடிய பேசிக்கொண்டே சென்றோம்.தனது கடந்தகால வாழ்க்கையின் பல வேதனைமிக்க சம்பாவங்களைச் சொல்லும்போது, அவரையும் மீறி அவர் கண்களில் கண்ணீர் வடிவதைப் பார்த்தேன். ரணப்படுத்திய அந்த சோகங்களின் ஆழத்தையும், அந்த கவிஞனின் மெல்லிய மனதையும் அந்த இரவில் வெளிச்சம் போட்டுக் காட்டிய கண்ணீர் அது.

பின்னாளில் ஏதேதோ காரணங்களுக்காக இளங்கோ, சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்திலிருந்து விலகி நின்றார். கம்போங் கிளாங் என்ற சமூக மன்றத்தின் உதவியுடன் ' கடற்கரைச் சாலையில் கவிமாலை' என்ற மாதாந்திர கவிதை நிகழ்ச்சியையும் துவங்கினார். 2000 ஆண்டு கண்ணதாசன் பிறந்த நாளன்று முதல் நிகழ்ச்சி நடந்தது.

துவக்க கால நிகழ்ச்சிகளில் நானும் கலந்து கொண்டேன். கவியரங்கம், ஏதேனும் ஒரு பொதுத்தலைப்பில் கவிதை, அதை சிறப்பாக எழுதும் மூன்று பேருக்குப் பரிசு, வாசித்த நேசித்த கவிதைகளை பகிர்ந்து கொள்வது என்று மிக பயனுள்ளதாக அமைந்த நிகழ்ச்சி அது.

வேலைப்பளுவின் காரணமாக என்னால் அதில் தொடர்ந்து கலந்து கொள்ளமுடியாமல் போனது துரதிர்ஷ்டம்.மறுபடியும் சமீப மாதங்களாகத்தான் கலந்து கொள்கிறேன்.இந்த இடைப்பட்டக் காலத்தில் 'கடற்கரைச்சாலையில் கவிமாலை' நிகழ்ச்சி பிரமிக்கிற அளவு வளர்ந்திருந்ததது. கவிஞர்கள், பார்வையாளர்கள், புதிய அங்கங்கள் என தானும் வளர்ந்து, மற்றவர்களையும் வளர்த்திருந்தார் இளங்கோ. அங்கிருந்தவர்கள் பலருக்கு நான்தான் புதியவனாகிப் போனேன்....

நான் பங்கேற்க்காத சிலவருடங்களில் நடந்தவை என நான் அறிந்தவை இவை.....

1) கவிக்கோ அப்துல்ரஹ்மான், ஈரோடு தமிழன்பன், நாஞ்சில் சம்பத், இளசை சுந்தரம், நாகூர் ரூமி, கனடா சேரன், தஞ்சைவாணன், சிங்கை உதுமான்கனி, சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியின் தலைவர் முகம்மது அலி என பலரும் பலந்து கொண்டு தமது கவிதை அனுபவங்களை பகிர்ந்து கொண்டது.

2) சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்கு நீண்ட நாட்களாக பங்களித்து வரும் மூத்த இலக்கியவாதிகளுக்கு கணையாழி விருதும், மோதிரமும் அளித்து வருவது . ( திரு. பி. கிருஷ்ணனும், கவிஞர் இக்குவனமும் கடந்த வருடங்களில் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள் )

3) சிங்கப்பூர் கடற்கரையில் நட்சத்திரங்களை துணைக்கு வைத்துக் கொண்டு, விடிய விடிய நடந்திய - கவிராத்திரி.

4) சிங்கப்பூரை ஒட்டியுள்ள பூலா உபின், St.John's தீவு போன்ற தீவுகளில் நடந்திய கவிமாலை நிகழ்ச்சிகள்.

கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இதையெல்லாம் விட அதிக மகிழ்ச்சியளித்த இன்னொரு விஷயம் - புதுக்கவிஞர்கள் பலர் ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால் அளித்த பயிற்சியால், முறையான இலக்கணத்தோடு மரபுக்கவிதை எழுதத் துவங்கியிருந்ததுதான். எங்கள் நோக்கு கவிதைதான்... அது புதுசாகவும் இருக்கலாம், பழசாகவும் இருக்கலாம் என்று சொல்லாமல் சொல்கிற செயல் - இதைத் தவிர வேறென்ன இருக்க முடியும் ?

சிங்கப்பூரிலிருந்து இணையத்தில் எழுதுகிற யாரவது கவிமாலையில் கலந்து கொள்கிறார்களா என்று பார்த்தேன். ம்ஹீம்... யாருமில்லை. அப்படியென்றால் பனசை நடராஜன், வீரமணி இளங்கோ, நெப்போலியன் போன்றவர்கள் ? அவர்களெல்லாம் கவிமாலை இணையத்திற்கு வழங்கிய கொடையாகவே தெரிகிறது.போன மாதம் எம்கே குமார் வந்திருந்தார். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியவிதம், அழகு நிறைந்த, எளிமையான, ஒப்பனையற்ற கிராமத்துப் பெண்ணை ஞாபகப்படுத்தியது. கவிமாலை கவிஞர் கருணாகரசு 'மழை' பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்....

உழுதவன் கண்ணீரை
அழுதே துடைக்கிறது வானம்.

இவரைப்போன்ற நல்ல கவிஞர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள்.

வரும் 26 பிப்ரவரி சிங்கப்பூர் Beach Road-ல் உள்ள Kampong Klang Community Centre-ல் மாலை 7.00 மணிக்கு அடுத்த கவிமாலை நடக்கிறது. மலேசியாவிலிருந்து பிரபல எழுத்தாளர் சை.பீர்முகம்மது, தென்றல் வார இதழ் ஆசிரியர் வித்யாசாகரை சிறப்பு அழைப்பாளர்களாக கூப்பிடலாமே என்றேன் இளங்கோவிடம். ' தாராளமாக' என்றார் அவர். கூப்பிட்டிருக்கிறோம். அவர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் 99.99 உண்டு. இருவரும் ரொம்ம்ம்ப நல்ல பேச்சாளர்கள்... நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேட்டுப் பாருங்கள்... நான் சொன்னது 99.99 சதவீதம் உண்மை என்பது புரியும் !