Thursday, June 21, 2007


கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் தவறவிட்டு
நழுவிக் கொண்டிருக்கிற வாழ்வின் கவலை
திராட்சை ரசமென வடிகிறது

முடிவுறாத பாதையின்
துயர் விளிம்பில் நின்று
இன்னும் கொஞ்சம் சோகம் சிந்தியவேளை
இளமையை கொத்திக் கொத்தித் தின்றன
முக வரிகள்

ஆறுதல்களால் திரும்பப்பெற முடியாததாகவே
இருக்கிற இளமை : முடியுமென்றால்
இருள் சூழ் விந்தென இருக்கக்கூடும்

ஒரு பாத்திரத்தின் உணவெடுத்து
இன்னொன்றுக்கு பிச்சையிடுபவர்களின்
தர்மம் மீதான வருத்தங்களிலிருந்தும்
முடிந்த நிகழ்வுகளினின்று
மீண்டுவிட்ட தெளிவுகளோடும்
நீளும் ஓர் பாதை

எல்லா திசைகளும் கிழக்காவோ மேற்காகவோ
இருத்தல் சாத்தியமற்ற திசைகளின் கரைகளில்
முளைத்து தலையசைக்கும்
நம்பிக்கை நாணல்காடு !

Sunday, June 17, 2007

அப்படி ஒன்றும் மோசமில்லை


இன்னும்
பறவைகளின் கூடுகளுக்கு
மறுப்பு சொல்லுவதில்லை மரங்கள்

எவரும் தம்மை எண்ணிமுடிக்காத
கோபத்தில் உச்சியில் விழுந்த
நட்சத்திரங்கள் உண்டா?

பக்கத்தில் இருப்பவனின்
உறக்கம் கெடுக்காமல் தொலைபேசும்
கருணைக்குரல்கள் காண்பீர் தினம்

எதிர்வரும்போது
அறிமுகமற்றவரிடமும் புன்னகைக்கும்
கிழவிகளற்ற வீதிகள் ஏதும் இல்லை

இருபது வருட பழையவிசிறியின்
விழாத நம்பிக்கை மீது
உறக்கமும் வண்ணக்கனவுகளும்
சாத்தியமாகிறது

தெருப்பூனைகள் யாரோ இடும் உணவில்
வெட்டுண்ட காதின் உயிர்ப்போடு
உலா வருகின்றன

ஒரு கவிதை படிக்கும்
உங்களால் உலகம்
ஒழுங்காகவே இருக்கிறது

Tuesday, June 12, 2007

சிங்கப்பூர்-மலேசிய இலக்கிய நிகழ்வின் புகைப்படங்கள்

( பின்புலத்தில் அந்திசாய, புன்னகையோடு பார்வையாளர்கள்)

( பல மனம், ஒவ்வொன்றிலும் ஓடும் சிந்தனைகளோ ஒவ்வொரு விதம்)

(பச்சைநிற சேலையில் இருப்பவர் : தேசிய நூலக அதிகாரி திருமதி புஷ்பலதா)

( திரு.செ.ப.பன்னீர்செல்வம் - சிங்கப்பூரின் நேற்றைய தமிழ் இலக்கியம்)

(திரு.சை.பீர்முகம்மது - மலேசியாவின் நேற்றைய தமிழ் இலக்கியம்)

(டாக்டர் சீதாலட்சுமி - சிங்கப்பூரின் இன்றைய தமிழ் இலக்கியம்)

(டாக்டர் கிருஷ்ணன் மணியம் - மலேசியாவின் இன்றைய தமிழ் இலக்கியம்)

(திரு.சுப்பிரமணியன் ரமேஷ் - சிங்கப்பூரின் நாளைய தமிழ் இலக்கியம்)

(திரு.வித்யாசாகர்- மலேசியாவின் நாளைய தமிழ் இலக்கியம்)

Wednesday, June 06, 2007

சை.பீர்முகமது என்ற எழுத்தாளரும், அவர் சார்ந்த நிலவெளியும்


மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமதின் "திசைகள் நோக்கிய பயணம்" பற்றிய முனைவர் ரெ.கார்த்திகேசுவின் கட்டுரையை காலச்சுவட்டில் படிக்க நேர்ந்தபோது, சை.பீர்முகம்மது பற்றியும் அவர் சார்ந்த நிலவெளி பற்றியும் வெகுவாக சலனங்கள் எழுந்தன.


தமிழகத்திலிருந்து பணிநிமித்தமாக மலேசியா சென்றிருந்த 1996-ல்தான் சை.பீர்முகமது என்ற எழுத்தாளரை, அவருக்குள் இருந்த ஒப்பனையற்ற நல்ல மனிதரை எனக்கு இனங்காண வாய்த்தது.


பீர்முகமதின் பெண்குதிரை நாவலுக்கு நான் எழுதியிருந்த விமர்சன வரிகளின் கையெழுத்துப் பிரதியை பார்த்துவிட்டு தொலைபேசியில் கூப்பிட்டு பாரட்டியவர் அந்த நூல் வெளியீட்டு விழா மேடையிலும் உட்கார வைத்தார்.ஒருவரது ஆதி அந்தம் தெரியாமல், எழுத்து மதிப்பீட்டின் அடிப்படையில் ஆதிகுமணன், ரெ.கார்த்திகேசு, பூபாலன் போன்ற மலேசிய இலக்கிய ஜாம்பவான்கள் நிறைந்த ஒரு மேடையில் "ஊர்க்காரப் பையனை" உட்கார வைக்கிற இலக்கிய தைரியம் பீர்முகமதிற்கு மட்டுமே சாத்தியம்.
அதற்குப்பின் நிகழ்ந்த சம்பவங்கள் பீர்முகமதின் மீதான மதிப்பை இன்னும் கூட்டின.


மலேசியாவில் நானும் எனது நண்பர் தண்ணீர்மலையும் நாங்கள் பணியாற்றிய காப்பார் என்ற இடத்தில் ஒரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்தினோம். அதன் சார்பில் நடந்த ஒரு நிகழ்வில் பீர்முகமது வாசகர்களை கடுமையாக தாக்கி பேச, அதன் எதிர்வினை மலேசிய நாழிதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் எதிரொலித்தது. அவரை தாக்கியும், தூக்கியும் வாசகர் கடிதங்கள் வாரம்தோறும் வந்தன.


அதற்கெல்லாம் அசராத சை.பீர்முகமதால், அவர் அப்போது எழுதிக் கொண்டிருந்த மண்ணும் மனிதர்களும் தொடரின் நகலின்மை குறித்த கேள்வி எழுப்பிய தண்ணீர்மலையின் கடிதத்தை தாங்க முடியாமல் போனது. எழுத்து வனவாசம் போவதாகவும், இனி இந்த ராமன் எழுத்து அயோத்திக்கு வரமாட்டான் என்றும் அறிவித்தார். பலரையும் அதிர வைத்த அறிவிப்பு அது.

பின்னர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்த ஆதிகுமணன் '"வரலாறை நூறு பேர் எழுதினாலும் அதையேதான் எழுத முடியும். மாற்றியா எழுத முடியும். நீங்கள் எழுதுங்க பீர்" என்று சமாதானம் சொல்லி, வற்புறுத்தி அவரது வனவாசத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் .(இனிமேல் காப்பார்காரர்கள் இருக்கும் இடத்தில் பல்வலிக்குக் கூட வாயைத் திறக்க மாட்டேன் என்று சை.பீர் நகைச்சுவையாக குறிப்பிட்டது பின்னர் நிகழ்ந்தது)


சுங்கைப்பட்டாணியில் நடந்த கோ.புண்ணியவானின் சிறுகதை நூல் வெளியீட்டில் கலந்து கொள்ள கோலாலம்பூரிலிருந்து கவிஞர் இளமணி, பி.ஆர்.ராஜனுடன் என்னையும் சை.பீர் அவரது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் (அந்த ரகக் காரை வாங்கிய முதல் தமிழ் எழுத்தாளர் இவராகத்தான் இருக்க வேண்டும்) கூட்டிப்போயிருந்த சில நாட்களில் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் அதிக இடைவெளி இல்லாத அவரது இயல்பை இன்னும் கூடுதலாக தெரிந்து கொள்ள முடிந்தது.


புத்தக வெளியீட்டிற்கு முந்திய இரவு உணவு நேரத்தில் சிறுகதை எழுத்தளர் எம்.ஏ.இளஞ்செல்வனும், சை.பீரும் விடிய விடிய தங்களது இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, நாங்கள் ரசித்துக் கொண்டிருக்க, உணவு பறிமாறிய சீனப் பெண்ணோ புரியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள். பேச்சு முடிந்ததும் இளஞ்செல்வனும் பீர்முகமதும் போட்டி போட்டுக் கொண்டு அந்தச் சீனப் பெண்ணுக்கு கைரேகை ஜோசியம் பார்த்ததால், அவளது சாபத்திலிருந்து மற்ற நாங்களும் ஒரு வழியாக தப்பித்தோம். குழந்தை மனம் கொண்ட, ஒப்பனைகளற்ற இளஞ்செல்வனின் திடீர் மரணம் பெரிய சோகம். மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் உந்துகோலாக இருந்த ஆதிகுமணனின் மறைவு இன்னொரு சோகம்.


சிங்கப்பூரிலிருந்து மலேசியா போயிருந்த ஒரு பயணத்தில் எனது பாஸ்போர்ட் தொலைந்துபோக, புது பாஸ்போர்டிற்காக என்னோடு சை.பீரும் அலைந்தது நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வுதரும் இலக்கியம் சாராத தனிமனித அனுபவம்


வெண்மணல் சிறுகதைத் தொகுப்பிற்குப் பிறகு இதயம் தொடும் சிறுகதைகளை பீர்முகமது படைக்கவில்லை என்பது என்னைப் போன்ற தூரத்து பார்வையாளர்களின் ஆதங்கம். கட்டுரைகள், கவிதைகள், நெடுங்கதைகள் என அவரது பாதை வேறுதிசைகளில் விரிந்தது அதற்கான ஆதார காரணமாக இருக்கக்கூடும். பீர்முகமது என்ற இலக்கிய ஒருங்கிணைப்பாளர், பீர்முகமது என்ற எழுத்தாளரை பின்னுக்குத் தள்ள நேர்ந்தது மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு நிகழ்ந்த வரமா சாபமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்.


ஒரு சின்னப்பையன் மாதிரி தேடித் தேடி சை.பீர்முகமது தன்னை புதுப்பித்துக் கொண்டிருப்பது பலரும் வியக்கும் விஷயம். அவர் மைக் பிடித்துவிட்டால் குளிர்பதனம் செய்யப்பட்ட அறைகள் கூட சூடாகிப் போவதை பலமுறை பார்த்திருக்கிறேன். அது மலேசியத் தமிழ் இலக்கியம், உலகத்தமிழ் இலக்கியத்திலிருந்து எந்த விதத்திலும் பின்தங்கி விடக்கூடாது என தகிக்கும் மனமொன்றின் வெளிப்பாடென்பதை நெருங்கியவர்கள் அறிவார்கள்.


தங்களது எழுத்திற்கான அங்கீகாரம் பேட்டிகளின் பரிசுதானென்று நினைக்கும் மனோபாவமுள்ள ஒரு மூத்த எழுத்துத் தலைமுறை, பரிசுகளைப்பற்றி கவலைப்படாத இளைய தலைமுறை மலேசிய எழுத்துகளுக்கு மெல்ல மெல்ல வழிவிட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் - ஜாசின் தேவராஜன், பா.அ.சிவம், ம.நவின் போன்ற இளையமுறையின் கைகளில், சை.பீர்முகமது, ரெ.கார்த்திகேசு போன்றவர்கள் முன்னெடுத்துச் சென்ற மலேசியத்தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பத்திரமாகவே இருக்கிறது என்பதை அருகிருந்து பார்ப்பவர்களால் உணர முடிகிறது

Tuesday, June 05, 2007

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் இலக்கியக் கருத்தரங்கம்சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் (விக்டோரியா ஸ்டிரீட்) ஐந்தாவது தளத்தில், வரும் ஜூன் 9ம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு " சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் - நேற்று, இன்று, நாளை " என்ற தலைப்பில் கருத்தரங்கமும், கலந்துரையாடலும் நடைபெறுகிறது.

சிங்கப்பூர், மலேசியாவின் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய ஆதரவில், சிங்கைத் தமிழ்ச் சங்க ஏற்பாட்டில் நடைபெறும் இந் நிகழ்வு பாலு மீடியாவால் ஒருங்கிணைக்கப் படுகிறது.

சிங்கப்பூர் தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றி ஒலி 96.8 செய்திப்பிரிவின் மூத்த செய்தி ஆசிரியர் செ.ப.பன்னீர்செல்வம், தேசிய கல்விக்கழகத்தின் முனைவர் சீதாலட்சுமி, எழுத்தாளர் சுப்பிரமணியன் ரமேஷ் ஆகியோர் கட்டுரை படைக்கிறார்கள்.

தமிழ் உலகம் நன்கறிந்த எழுத்தாளர் சை.பீர்முகம்மது, மலேயாப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷணன் மணியம், மலேசியாவின் புகழ் பெற்ற வார இதழான "தென்றலின்" ஆசிரியர் வித்யாசாகர் போன்றோர் மலேசிய இலக்கிய சூழல் பற்றிய செய்திகளை சிங்கப்பூர் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

வாசகர்கள் - எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் சித்தார்த்தன் தலைமை வகிக்க கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ கலந்துரையாடலை வழி நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம்!!

மேல் விவரம் வேண்டுவோர் பாலு மணிமாறனோடு 90753234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Sunday, June 03, 2007

கனிமொழி பற்றி ஒரு மீள்பதிவு

கனிமொழி ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்ற பதிவை ஒரு வருடத்திற்கு முன் எழுதியபோது, "சங்கமம்" உட்பட எந்த அரசியல் வெளிச்சமும் அவர் மீது விழுந்திருக்கவில்லை.

சிங்கப்பூரில் அந்தப் பதிவைப் படித்துவிட்டு, கனிமொழிக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் " எதுக்கு இந்த வீண் வேலை. அவர் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை" என்று கருத்துரைத்தார்கள்.

எனினும் கனிமொழியின் அரசியல் பிரவேசம் என்பது தாமதப்படும் ஒரு நிச்சயம் என்ற எண்ணம் எனக்குள் (பலரையும் போல்) இருந்தது. கனிமொழியைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது அவசியம் என்ற பேராசையின் வெளிப்படாகவும் அப்பதிவு இருந்தது.

இன்று - அரசியலுக்கான கனிமொழியின் கதவு படாரென்று திறந்து கொண்டது மட்டுமில்லாமல், அவரை ஒரு மாயக்கரம் யாரும் எதிர்பாராத தொலைவுகளுக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கும் நிலையில், "கனிமொழி ஏன் அரசியலுக்கு வரவேண்டும் - 10 காரணங்கள்" என்ற 2006 வருட மார்ச் மாதத்திய பதிவை மீள்பதிவு செய்கிறேன்.


1. இன்றைய தமிழக, இந்திய அரசியலுக்கு புரையோடிப்போன பழைய சிந்தனைகளில் இருந்து விடுபட்ட புதிய சிந்தனையாளர்கள் தேவை. கனிமொழி - புதுச்சிந்தனையாளர்

2. அரசியலுக்கு வரச் சரியான, இளமையின் உச்ச வயது அவருக்கு. இளமையின் வேகமும், இதுவரை பெற்ற அனுபவங்கள் தந்த விவேகமும் சரி விகிதம் கலந்த வயதில் இருக்கிறார். இதுவே சரியான சமயம்.

3. இந்தியப் பொருளாதாரம் புதுப் பாய்ச்சலில் போகத் துவங்கியிருக்கும் இன்றைய சூழலில், திறன்மிக்க நிர்வாகிகளைக் கொண்ட மாநிலங்களையே உலக நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றன. கனிமொழிக்கு சிறந்த நிர்வாகியாகின்ற தகுதிகள் இருக்கிறது.

4. கனிமொழியை தங்களது உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக, புதுச்சிந்தனை சார் இளம் பெண்கள் பார்க்கிறார்கள். பெரியவர்களும் மதிக்கிறார்கள்.

5. கல்வியும், கவிதாச் சிந்தனையும், அடக்கமான பொருள் பொதிந்த பேச்சும், செயலும் வழக்கமான ஆரவார அரசியல்வாதிகளில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

6. அரசியல்வாதிகள் நிறைந்த குடும்பச் சூழலில் வளர்ந்திருப்பது, அவரது பலம். சிலர் அதை பலவீனமாகக் கருதலாம். ஆனால், அரசியல் செல்வாக்கை தனது சுயஆதாயத்திற்காக பயன்படுத்தினதாகச் சொல்லும் எந்த சுட்டுவிரலும் அவரை நோக்கி இல்லை.

7. அடக்கமானவர்தான், அமைதியானவர்தான். ஆனால் பலமற்றவரல்ல என்பதை கலைஞர் கருணாநிதி கைது சம்பவத்தின்போது உலகம் உணர்ந்து கொண்டது. தனது கருத்துகளுக்காக போராடும் போர்க்குணம் கனிமொழிக்கு இருக்கிறது.

8. வானில் பறப்பதற்க்கான வாய்பிருந்தும், தரையில் காலூன்றி நிற்கும் கனிமொழியின் இயல்பு, ஊழலற்ற நிர்வாகத்திற்குத் தேவையான அடிப்படை குணம். அது அவரால் ஊழலற்ற நிர்வாகத்திற்கு அடித்தளமிட முடியும் என்று உறுதியளிக்கிறது.

9. சில ஆண்டு சிங்கப்பூர் நிரந்தரவாசம், அவருக்கு உலகின் புதிய கதவுகளை திறந்து காட்டியிருக்கிறது. ஒரு தலைவன் திறமையானவனாக, திடமானவனாக இருத்துவிட்டால் எதுவெல்லாம் சாத்தியம் என்பதை கண்கூடாக பார்த்திருப்பதால், அது அவரது அரசியலில் எதிரொலிக்கும்.

10. ஒரு புகழ் பெற்ற தலைவரின் மகளாக இருந்தும், கனிமொழிக்கென்று ஒரு சுயம் இருக்கிறது. சுயம் உள்ளவர்களே வெற்றிகரமான தலைவராக விளங்கினாரகள், விளங்குகிறார்கள் என்பது சரித்திரம். வாய்ப்பிருந்தால், கனிமொழியும் ஒரு சரித்திரமாகலாம்!

Wednesday, March 28, 2007

குடிகாரர்களுக்கு மட்டும்
அதிகாலை மது மாதிரி
விருப்பும்போது குடிக்கலாம்
விரும்பாவிட்டால் தவிர்க்கலாம்

அதிகாலை மது மாதிரி
நாம் கூச்சல் போடாதவரை
அது அமைதியாகத்தான் இருக்கிறது


அதிகாலை மது மாதிரி
எப்போதும் தன் வாசனையை
மூடிகளுக்குப்பின் ஒளித்தே
வைத்திருக்கிறது

அதிகாலை மது மாதிரி
காலம் குடிக்கக் குடிக்க
தான் காலியாகிறது

அதிகாலை மது மாதிரி
அதை அருத்துபவர்கள் மட்டுமே
பறவைகள் ஆடுவதை
பார்க்க முடியும்


போதையுற்றதால் சொல்கிறேன்

அதிகாலை மது மாதிரி
விரும்பினால் குடிக்கலாம்
விரும்பாதவர்கள் தவிர்க்கலாம்

Sunday, March 25, 2007

இந்தியா தோற்றதற்கான பத்து காரணங்கள்

1. சரியான தயாரிப்பில்லை

மற்ற நாடுகளின் கிரிக்கெட் அணிகள் உலகக்கோப்பைக்குத் தங்களை முழுமையாக தயார் செய்து களமிறங்கிய நிலையில், இந்திய அணி கடைசி நிமிடம் வரை பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. "எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் திறனை வளர்க்கிறோம்" என்று காரணம் சொன்னார் சேப்பல். அப்படி வளர்த்தத் திறன், பங்களாதேஷை தோற்கடிக்கக்கூட பயன்படவில்லை என்பது பெரிய சோகம்.

2. எதிரணியை குறைத்து மதிப்பிட்ட குற்றம்

இந்த உலகக்கோப்பையில் பங்களாதேஷ் ஒரு அபாயகரமான அணியாக இருக்கும் என்பதை பலரும் உணர்ந்திருந்தார்கள். ஆனால்,"பங்களாதேஷ்தானே..ஜெயித்து விடலாம்" என்ற ஏளன மனப்போக்கு அனுபவமிக்க இந்தியா பேட்ஸ்மேன்களிடம் இருந்தது. அதற்கு அவர்கள் கொடுத்த மிகப்பெரிய விலை - தோல்வி!

3. அள்ளி வழங்கிய உபரி ரன்கள்

நூறு போட்டியில் விளையாடிய அனுபவம், இருநூறு போட்டியில் விளையாடிய அனுபவம் என்று பெருமைப்பட்டு என்ன பயன்? இலங்கைக்கு எதிரான முக்கியமான போட்டியில் 16 உபரி ரன்களை வாரி வழங்கினார்கள் இந்திய பந்து வீச்சாளர்கள். அதை கட்டுப்படுத்தியிருந்தால், 220 ரன்களில் இலங்கை அணியை சுருட்டி இருக்க முடியும்.

4. டெண்டுல்கர் என்ற கேள்விக்குறி

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் டெண்டுல்கரா? அல்லது லாராவா ? என்ற கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால் தயங்காமல் சொல்லுங்கள் - லாரா என்று. தனது அணி ஜெயிக்க வேண்டிய அல்லது தோல்வியை தவிர்க்க வேண்டிய சூழலில் சிறப்பாக விளையாடுபவர்தான் சிறந்த பேட்ஸ்மேன். டிராவிட், இன்சமாம், வாவ், லாரா போன்றவர்கள் இந்த இனத்தில் சேர்த்தி. யோசித்துப் பாருங்கள் - டெண்டுல்கர் ஜெயித்துத் தந்த முக்கிய போட்டிகள் எத்தனை?

5. உத்தப்பா என்ற பலவீனம்

உலகக் கிரிக்கெட்டில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்புத் திறமைகள் இல்லாதவர்கள் கூட பெயர் போட்டுவிட முடியும். ஆனால் பலவீனமுள்ளவர்களால் அது முடியாது.அவர்களது பலவீனத்தை எதிரணிகள் இரக்கமே இல்லாமல் தொடர்ந்து தாக்கி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுவதே அதற்குக் காரணம். உத்தப்பாவின் பலவீனம் விக்கெட்டுக்கு சற்று வெளியே விழுந்து எகிறும் பந்து.

6. செத்த பாம்பை அடிப்பது வீரமா?

கடந்த சில மாதங்களாகவே இந்திய அணிக்குப் பெரிய தலைவலியாக இருந்தவர் வீரேந்திர சேவாக். இந்த உலகக்கோப்பையிலும் அந்தத் தலைவலி தீர்ந்த பாடில்லை. அதுதான் பெர்மூடா அணிக்கு எதிராக சதம் அடித்தாரே என்றால், அதே சதத்தை இலங்கை அல்லது பங்களாதேஷிற்கு எதிராக அடித்திருக்க வேண்டியதுதானே? செத்த பாம்பை அடிப்பதா வீரம்?

7. தோல்வியைப் பற்றிய வெட்கமில்லை

இலங்கைக்கு எதிரான வாழ்வா சாவா போட்டி. இந்தியா டாஸ் ஜெயிக்க வேண்டுமென்று படபடக்கிறார் சிவராமக்கிருஷ்ணன். அதிசயிக்கிற மாதிரி ஒரு கேட்ச் அல்லது அதிசயிக்கிற மாதிரி ஒரு ரன் அவுட் என நூறுசதத்திற்கும் மேற்பட்ட திறனோடு இந்தியா விளையாட வேண்டுமென்று சொல்கிறார் ஆஸ்திரேலியரான டீன் ஜோன்ஸ். ஆனால் இந்திய அணியோ, பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று என்ற தொனியில் விளையாடியது. மிகப்பல வீரர்களிடம், வேகமில்லை, ஜெயிக்க வேண்டுமென்ற வெறியில்லை, தோற்றால் அவமானமே என்ற கவலையுமில்லை. தோற்றதில் கவலையில்லை, தோற்றவிதம்தான் அவமானமாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் வெங்கட்ராகவன்.

8. துணி அழுக்காகி விடுமா?

ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இளைஞர்களின் விளையாட்டு. இதில் பந்தடிப்பது, பந்து வீசுவது போன்றே, பந்தைத் தடுப்பதும் முக்கியம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிறைந்த இந்திய அணியின் ·பீல்டிங் திறன் மிகப்பரிதாபமாக இருந்தது. ரன்களை தடுப்பதைக் காட்டிலும், கீழே விழுந்தால் ஆடையில் அழுக்குப் படும் அல்லது கை,கால் பிசகிவிடும் என்ற கவலையிலேயே பலரும் நடமாடியதை பார்க்க முடிந்தது. இந்திய அணியின் எதிர்காலம் என்று கருதப்படும் முனாப், சேவாக் போன்றவர்கள் கூட ·பீல்டிங் திறனற்றவர்களாக இருப்பது உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயம்.

9. கை கொடுக்காத அனுபவம்

கங்குலி, டெண்டுல்கர், சேவாக், அகர்கார் போன்றவர்களது அனுபவம் இந்திய அணியை அடுத்த சுற்றுக்கு எடுத்துச் செல்ல தவறிவிட்ட நிலையில், அதைப் பற்றி பெருமை பேசி பயனில்லை. அகர்கார் போன்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் போதும். அவரைப் போன்றவர்கள் புதியவர்களுக்கு வழிவிடும் நேரம் வந்து விட்டது. கங்குலி இன்னும் ஒரு வருடம் விளையாடலாம். ஆனால், மரியாதைக்குரிய இன்றைய நிலையில் ஓய்வு பெறுவதே அவருக்கு நல்லது. சேவாக்கை குறைந்த பட்சம் ஒரு வருடமாவது உள்ளூர் போட்டிகளில் விளையாட வைத்து, அப்புறம் இந்திய அணிக்குள் கொண்டு வரலாம். ஒரு தேசத்தை விட எந்த வீரரும் உயர்ந்தவரில்லை. டெண்டுல்கரும் அவரது விளையாட்டைப் பற்றி மறு பரிச்சீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதென்றே தோன்றுகிறது. ஆனால் அவரைப் பற்றிய முடிவுகளை அவரிடமே விட்டு விடுவதே டெண்டுல்கருக்குத் தருகிற மரியாதை.

10. திராவிட் மற்றும் சேப்பல்

1995க்குப் பிறகு இந்தியா வெளிநாடுகளில் பெரிய வெற்றிகளைப் பெற்றுவிடவில்லை என்கிறார் சேப்பல். ஆனால் 1983க்குப் பிறகு இந்தியா இவ்வளவு அவமானகரமான தோல்வியை சந்தித்ததில்லை என்பதை அவர் உணர வேண்டும். சிறந்த ஆட்டக்காரர்கள் நிறைந்த இந்திய அணியை சூப்பர் எட்டு சுற்றுக்குக்கூட கொண்டு செல்ல முடியாத யாருமே சிறந்த பயிற்றுவிப்பாளராக இருக்க முடியாது - அது கிரேக் சேப்பலாக இருந்தாலும் கூட! திராவிட் புத்திசாலி கேப்டன். இந்த உலகக் கோப்பையில் அவர் சில தவறுகளை செய்திருக்கிறார் ( உதாரணம் : சேவாக் ). ஆனால் அவர் இன்னும் ஓரிரு வருடங்கள் தொடரலாம். எதுவரை என்றால், மகேந்திரசிங் தோனி முழுமையாகத் தயாராகும் வரை!

உனக்கென பறந்தவை


"எத்தனை அழகு
இந்த சுவரோவியம்..."
என்பதோடு நிறுத்தி இருக்கலாம்

சிரித்து விழி நோக்கினாய்

அருவமாகி விழிநுழைந்து
இருள்வெளி கடந்து
புழுதியின் சிதிலங்களுக்குப் பின்னிருந்து
உனதான ஓவியத்தை எடுத்து வந்தேன்

அதில்
ஒரு பழைய வீட்டைச்சுற்றி
பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன