அந்த நிகழ்வைப்பற்றியும், திரு.சை.பீர்முகம்மது அவர்களைப் பற்றியும் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பையும், கூடவே, சை.பீர்முகம்மது அவர்களைப் பற்றி வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய பதிப்பையும் மறுபடியும் பகிர்விற்குத் தருகிறேன். இந்த வெளியீடு முடிந்ததும் நாலு வார்த்தை எல்லோரோடும் பேச ஆசை! இனி விவரங்கள் :
1
வரும் பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு, விக்டோரியா ஸ்டிரீட்டில் அமைந்துள்ள சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சை.பீர்முகம்மதின் புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா நடைபெறுகிறது. 'பயாஸ்கோப்காரனும், வான்கோழிகளும்' என்ற இந்த நூலை ஜோதி.மாணிக்கவாசகம் அறிமுகம் செய்கிறார்.
எழுத்தாளர் சை.பீர்முகம்மதோடு வாசகர்கள் கலந்துரையாடும் அங்கத்தை முனைவர் இரத்தின வேங்கடேசன் வழிநடத்துகிறார். 'வாசிக்க, நேசிக்கத் தமிழ்' என்ற தலைப்பில் மலேசிய வார இதழ் தென்றலின் ஆசிரியர் வித்யாசாகரின் சிறப்புரை இடம் பெறுகிறது. பிரபல மலேசிய எழுத்தாளர்கள் கோ.புண்ணியவான், கே.பாலமுருகன் உட்பட கலந்து கொள்ளும் இந்த நிகழ்வு தங்கமீன் பதிப்பகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு போக வேண்டுமென்ற பரந்த நோக்கில் அயராது இயங்கி வருபவர் சை.பீர்முகம்மது. 1942-ம் ண்டு கோலாலம்பூரில் பிறந்த இவர், 1959 முதல் சிறுகதை, கவிதை, நாவல், பயணக்கட்டுரை என்று பலதளங்களிலும் பயணித்து வருகிறார்.
1984 -'வெண்மணல்' சிறுகதைகள், 1997-'பெண்குதிரை' நாவல், 1997-'கைதிகள் கண்ட கண்டம்' பயணக்கட்டுரை, 1998-'மண்ணும், மனிதர்களும்' வரலாற்றுப் பயணக் கட்டுரை, 2006-'திசைகள் நோக்கிய பயணம்' கட்டுரைகள் - இவை படைப்பிலக்கியத்திற்கு இவர் இதுவரை அளித்துள்ள பங்களிப்பு. தற்போது 'அக்கினி வளையங்கள்' என்ற நாவல் அச்சில் உள்ளது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் ஐம்பதாண்டுகாலச் சிறுகதைகளை 'வேரும் வாழ்வும்' என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாகத் தொகுத்துள்ளார். அது மலேசிய எழுத்துக்களுக்கு பரவலான உலகப் பார்வையைப் பெற்றுத் தந்தது. 'மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும்' என்ற கட்டுரைத் தொகுப்பும் இவரால் வெளியிடப்பட்டது.
மலேசியா மட்டுமல்லாது, சிங்கப்பூர் உட்பட அயலகத் தமிழ்த் இலக்கியங்களை தொடர்ந்து தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதில் முனைப்போடு செயல்படுவதன் மூலம், இந்த வட்டாரத்தில் இவரது பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
2
சை.பீர்முகமது என்ற எழுத்தாளரும், அவர் சார்ந்த நிலவெளியும்
மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமதின் "திசைகள் நோக்கிய பயணம்" பற்றிய முனைவர் ரெ.கார்த்திகேசுவின் கட்டுரையை காலச்சுவட்டில் படிக்க நேர்ந்தபோது, சை.பீர்முகம்மது பற்றியும் அவர் சார்ந்த நிலவெளி பற்றியும் வெகுவாக சலனங்கள் எழுந்தன.
தமிழகத்திலிருந்து பணிநிமித்தமாக மலேசியா சென்றிருந்த 1996-ல்தான் சை.பீர்முகமது என்ற எழுத்தாளரை, அவருக்குள் இருந்த ஒப்பனையற்ற நல்ல மனிதரை எனக்கு இனங்காண வாய்த்தது.பீர்முகமதின் பெண்குதிரை நாவலுக்கு நான் எழுதியிருந்த விமர்சன வரிகளின் கையெழுத்துப் பிரதியை பார்த்துவிட்டு தொலைபேசியில் கூப்பிட்டு பாரட்டியவர் அந்த நூல் வெளியீட்டு விழா மேடையிலும் உட்கார வைத்தார்.ஒருவரது ஆதி அந்தம் தெரியாமல், எழுத்து மதிப்பீட்டின் அடிப்படையில் ஆதிகுமணன், ரெ.கார்த்திகேசு, பூபாலன் போன்ற மலேசிய இலக்கிய ஜாம்பவான்கள் நிறைந்த ஒரு மேடையில் "ஊர்க்காரப் பையனை" உட்கார வைக்கிற இலக்கிய தைரியம் பீர்முகமதிற்கு மட்டுமே சாத்தியம்.அதற்குப்பின் நிகழ்ந்த சம்பவங்கள் பீர்முகமதின் மீதான மதிப்பை இன்னும் கூட்டின.
மலேசியாவில் நானும் எனது நண்பர் தண்ணீர்மலையும் நாங்கள் பணியாற்றிய காப்பார் என்ற இடத்தில் ஒரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்தினோம். அதன் சார்பில் நடந்த ஒரு நிகழ்வில் பீர்முகமது வாசகர்களை கடுமையாக தாக்கி பேச, அதன் எதிர்வினை மலேசிய நாழிதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் எதிரொலித்தது. அவரை தாக்கியும், தூக்கியும் வாசகர் கடிதங்கள் வாரம்தோறும் வந்தன. அதற்கெல்லாம் அசராத சை.பீர்முகமதால், அவர் அப்போது எழுதிக் கொண்டிருந்த மண்ணும் மனிதர்களும் தொடரின் நகலின்மை குறித்த கேள்வி எழுப்பிய தண்ணீர்மலையின் கடிதத்தை தாங்க முடியாமல் போனது. எழுத்து வனவாசம் போவதாகவும், இனி இந்த ராமன் எழுத்து அயோத்திக்கு வரமாட்டான் என்றும் அறிவித்தார். பலரையும் அதிர வைத்த அறிவிப்பு அது.
பின்னர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்த ஆதிகுமணன் '"வரலாறை நூறு பேர் எழுதினாலும் அதையேதான் எழுத முடியும். மாற்றியா எழுத முடியும். நீங்கள் எழுதுங்க பீர்" என்று சமாதானம் சொல்லி, வற்புறுத்தி அவரது வனவாசத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் .(இனிமேல் காப்பார்காரர்கள் இருக்கும் இடத்தில் பல்வலிக்குக் கூட வாயைத் திறக்க மாட்டேன் என்று சை.பீர் நகைச்சுவையாக குறிப்பிட்டது பின்னர் நிகழ்ந்தது)
சுங்கைப்பட்டாணியில் நடந்த கோ.புண்ணியவானின் சிறுகதை நூல் வெளியீட்டில் கலந்து கொள்ள கோலாலம்பூரிலிருந்து கவிஞர் இளமணி, பி.ஆர்.ராஜனுடன் என்னையும் சை.பீர் அவரது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் (அந்த ரகக் காரை வாங்கிய முதல் தமிழ் எழுத்தாளர் இவராகத்தான் இருக்க வேண்டும்) கூட்டிப்போயிருந்த சில நாட்களில் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் அதிக இடைவெளி இல்லாத அவரது இயல்பை இன்னும் கூடுதலாக தெரிந்து கொள்ள முடிந்தது.புத்தக வெளியீட்டிற்கு முந்திய இரவு உணவு நேரத்தில் சிறுகதை எழுத்தளர் எம்.ஏ.இளஞ்செல்வனும், சை.பீரும் விடிய விடிய தங்களது இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, நாங்கள் ரசித்துக் கொண்டிருக்க, உணவு பறிமாறிய சீனப் பெண்ணோ புரியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.
பேச்சு முடிந்ததும் இளஞ்செல்வனும் பீர்முகமதும் போட்டி போட்டுக் கொண்டு அந்தச் சீனப் பெண்ணுக்கு கைரேகை ஜோசியம் பார்த்ததால், அவளது சாபத்திலிருந்து மற்ற நாங்களும் ஒரு வழியாக தப்பித்தோம். குழந்தை மனம் கொண்ட, ஒப்பனைகளற்ற இளஞ்செல்வனின் திடீர் மரணம் பெரிய சோகம். மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் உந்துகோலாக இருந்த ஆதிகுமணனின் மறைவு இன்னொரு சோகம்.சிங்கப்பூரிலிருந்து மலேசியா போயிருந்த ஒரு பயணத்தில் எனது பாஸ்போர்ட் தொலைந்துபோக, புது பாஸ்போர்டிற்காக என்னோடு சை.பீரும் அலைந்தது நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வுதரும் இலக்கியம் சாராத தனிமனித அனுபவம்
வெண்மணல் சிறுகதைத் தொகுப்பிற்குப் பிறகு இதயம் தொடும் சிறுகதைகளை பீர்முகமது படைக்கவில்லை என்பது என்னைப் போன்ற தூரத்து பார்வையாளர்களின் ஆதங்கம். கட்டுரைகள், கவிதைகள், நெடுங்கதைகள் என அவரது பாதை வேறுதிசைகளில் விரிந்தது அதற்கான ஆதார காரணமாக இருக்கக்கூடும். பீர்முகமது என்ற இலக்கிய ஒருங்கிணைப்பாளர், பீர்முகமது என்ற எழுத்தாளரை பின்னுக்குத் தள்ள நேர்ந்தது மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு நிகழ்ந்த வரமா சாபமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்.ஒரு சின்னப்பையன் மாதிரி தேடித் தேடி சை.பீர்முகமது தன்னை புதுப்பித்துக் கொண்டிருப்பது பலரும் வியக்கும் விஷயம். அவர் மைக் பிடித்துவிட்டால் குளிர்பதனம் செய்யப்பட்ட அறைகள் கூட சூடாகிப் போவதை பலமுறை பார்த்திருக்கிறேன். அது மலேசியத் தமிழ் இலக்கியம், உலகத்தமிழ் இலக்கியத்திலிருந்து எந்த விதத்திலும் பின்தங்கி விடக்கூடாது என தகிக்கும் மனமொன்றின் வெளிப்பாடென்பதை நெருங்கியவர்கள் அறிவார்கள்.
தங்களது எழுத்திற்கான அங்கீகாரம் பேட்டிகளின் பரிசுதானென்று நினைக்கும் மனோபாவமுள்ள ஒரு மூத்த எழுத்துத் தலைமுறை, பரிசுகளைப்பற்றி கவலைப்படாத இளைய தலைமுறை மலேசிய எழுத்துகளுக்கு மெல்ல மெல்ல வழிவிட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் - ஜாசின் தேவராஜன், பா.அ.சிவம், ம.நவின் போன்ற இளையமுறையின் கைகளில், சை.பீர்முகமது, ரெ.கார்த்திகேசு போன்றவர்கள் முன்னெடுத்துச் சென்ற மலேசியத்தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பத்திரமாகவே இருக்கிறது என்பதை அருகிருந்து பார்ப்பவர்களால் உணர முடிகிறது