இழந்து கொண்டிருக்கும் பழைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகி வருகின்றன அத்தகைய திண்ணைகள். பொதுவாக திண்ணைகள், வீதிகளில் வருவோர் போவோருக்கானது. நட்புணர்வு மிக்கவர்கள் வாழும் வீடிது என்று ஊருக்கு உரக்கச் சொல்லும் குறியீடு. சுற்றம், நட்புடன் எப்படியேனும் ஏற்பட்டுவிடும் பிறழ்வுகளை வார்த்தைகளால் சீர் செய்து கொள்ளும் மருத்துவமனைகளாகவும் இயங்கும் அவை. கிராமங்களில் இருந்து நகரங்களுக்கும், நகரங்களில் இருந்து மாநகரங்களுக்கும், அவற்றிலிருந்து வேறு தேசங்களுக்கும் புலம் பெயர்ந்து கொண்டிருக்கும் நாடோடி வாழ்வில் இழந்து வரும் பலவற்றில் திண்ணைகளும் ஒன்றாகி விட்டன. ஏறி, இறங்கும் படிகளோடு வரும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் அடைந்து கொண்ட வாழ்வில் சாண நாற்றத்திற்கும் இடமில்லை, காற்று புகவும் வழியில்லை. அந்த வீட்டின் அறைகள் கோழிகளற்ற காலையில், அலாரங்களின் அலறலில் திடுக்கிட்டுக் கண் விழிக்கின்றன. உழுது திரும்பியபின் கலப்பையை சாய்த்து வைக்கும் திண்ணைகளின் அவசியமற்ற வீடுகள் அவை. ஓய்ந்த மாலைகளில் மடித்து, சுண்ணாம்பு தடவிய இளவெத்தலைகளால் சிவந்த, பெண்களின் உதடுகளும் அவற்றுள் இருப்பதில்லை. அந்த வீட்டின் குழந்தைகள் நினைத்த மாத்திரத்தில் வீதிகளில் இறங்கி விளையாடி விட முடியாது. ஏனெனில், விரும்பிய விளையாட்டுப் பொருள்களை தற்காலிகமாக வைத்துக் கொள்ளும் திண்ணைகள் அங்கு இல்லை. முக்கியமாக, சேர்ந்து விளையாட, இன்னொரு குழந்தை அங்கு இல்லை.
வெயில் நிறைந்த நாளின் திண்ணைகள் நேசத்திற்குரியவை. அவை எப்போதும் நிழலை தம் வசம் வைத்திருக்கின்றன. அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கும், ஒரு சொம்பு குளிர்ந்த குடிநீருக்கும் வாய்ப்பளிக்கின்றன. விரும்பினால், சட்டையைக் கழற்றி ஓரமாக வைத்து விட்டு வியர்வையாற்றியும் கொள்ளலாம். எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவராகவும், சிவாஜியை நடிகர் திலகமாகவும் மாற்றியதில் திண்ணைகளின் பங்கு அதிகம். சிலாகித்தும், அலசி ஆராய்ந்தும், விமர்சித்தும் - மெல்ல, மெல்ல எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் மக்கள் மனதில் ஏற்றுக் கொள்ள வாய்ப்பு தந்தன திண்ணைகள். நீதி மன்றங்களாகி தீர்ப்பு வழங்கின. தேங்கிக் கிடக்காமல் இந்த நீதி மன்றங்களில் தீர்க்கப்பட்ட வழக்குகள்தான் எத்தனை, எத்தனை? திண்ணையில் கிடக்கும் கயிற்றுக் கட்டிலும், மரநாற்காலியும் பல மெளனமான நிமிடங்களின் சாட்சியாகி மெளனத்திருக்கின்றன. இழந்து விட்டோம் இன்று அவற்றை.
இதோ...எம் கிராமத்துப் பிள்ளைகள் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்குக் கூட்டிச் செல்ல வரும் வேனுக்காக திண்ணைகளற்ற வீட்டின் வாசலில் காத்திருக்கிறார்கள். அவர்களைக் கடந்து உழவுக்குச் செல்கிறது டிராக்டர். பக்கத்தில் நின்று பெருமையோடு பிள்ளைகளின் முகம் பார்த்திருக்கிறார்கள் கிராமத்து 'மம்மிகள்'!