Saturday, January 17, 2009

அனைத்துலக அரங்கில் அமீர் (நாலு வார்த்தை-043)

சாங்கி விமான நிலையம். சுவராக நிற்கும் கண்ணாடிகளுக்குப் பின்னால் எஸ்கலேட்டர் தெரிகிறது. அதில் இறங்கி வந்த இயக்குனர் அமீரும், அவரது மூத்த சகோதரர் சுல்தானும் இமிகிரேஷன் கிளியரஸ்ஸிற்காக நிற்கிறார்கள். கண்ணாடிக்கும் இந்தப்புறம் நானும், அமீரின் மதுரை நண்பர்களும் பதட்டத்தோடு காத்திருக்கிறோம். அந்த பதட்டத்திற்குக் காரணம் அவர்களுக்கு இருக்கும் தாடி. செப்டம்பர் 11க்குப் பிறகு மாறி விட்ட உலகின் நியாயமான பதட்டம் அது. எந்த ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் இயல்பாக உண்டாகும் பதட்டம் . ஆனால், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இமிகிரேஷனை விட்டு வெளியே வந்தார்கள் அமீரும் அவரது சகோதரரும். முதல் பார்வையில் மனதில் பதிந்த விஷயம், அமீரின் நடையில் இருந்த springness. அந்த நடை முன்னாள் சர்வதேச வாலிபால் பிளேயரான தமிழகத்தின் சிவராமனை ஞாபகப்படுத்தியது. அடுத்தது - கண்களும் சேர்ந்து சிரிக்கும் நட்பார்ந்த புன்னகை. It makes you feel at home. அன்றுதான் அவரை முதல்முறை நேரில் பார்க்கிறேன். சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பான 'வேறொரு மனவெளி' நூல் வெளியீடு + 'பருத்திவீரன்' படத்திற்கு கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரத்தை பாராட்டும் விதமாகவும் நிகழ்ச்சியொன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்காகத்தான் அமீர் சிங்கப்பூருக்கு முதல்முறையாக வந்திருந்தார்.

முதல்நாள் முஸ்தபா ஷாப்பிங் சென்டருக்கு அருகில் உள்ள நியூ பார்க் ஹோட்டலில் தங்க வைத்தோம். அறை ஜன்னல் கதவுகளைத் திறந்து அந்தி நேர சிங்கப்பூரைப் பார்த்துக் கொண்டிருந்த அமீரின் கண்களில் பட்டென்று பட்டது இந்தியத் தொழிலாளர்கள்தான். எங்கள் பேச்சு அந்தத் தொழிலாளர்களைச் சுற்றி வந்தது ; அவரகளது கனவைச் சுற்றி வந்தது ; இந்தியாவைச் சுற்றி வந்தது; இறுதியில் இந்திய இளைஞர்களில் வந்து நின்றது. 'இந்திய இளைஞர்களின் மீதும், அவர்களால் உருவாகப் போகும் எதிர்கால இந்தியா மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது' என்று சொன்னேன். அமீரின் கண்களில் ஆழ்ந்த சிந்தனையோட்டம் வெளிப்பட்டது. அந்த ஸ்டேட்மென்டை அவர் மனதளவில் அலசி ஆராய்வது புரிந்தது. 'எனக்கு நம்பிக்கை இல்லை சார்' என்றார் அமீர். அதை நான் எதிர்பார்க்கவில்லை. சற்று அதிர்ந்து விட்டேன். ஆனால், அந்த அவநம்பிக்கைக்கான காரணங்களை அவர் பட்டியலிட்டபோது, புரையோடிப்போன அரசியல் சூழல் பற்றிய கவலையே அதில் அதிகம் வெளிப்பட்டது. அதை, அசுத்தமாகி விட்ட, கூவம் போன்றதொரு அரசியல் கட்டமைப்பை மீறி இளைய தலைமுறை என்ன செய்ய முடியும் என்ற கவலையாகவே எடுத்துக் கொண்டேன். நான் நம்பிக்கை கொள்வதற்கான காரணங்களை எடுத்துச் சொன்னேன். கேட்டுக் கொண்டார். அது ஒரு நட்பார்ந்த, ஆரோக்கியமான கலந்துரையாடலாக இருந்தது. மாற்றுக் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் அமீரின் பண்பு, அவர் மீதான மரியாதையைக் கூட்டியது. தற்போது, இந்திய இளைஞர்களைப் பற்றிய அவரது மதிப்பீட்டில் பெரும் மாற்றங்களை காலம் ஏற்படுத்தியுள்ளதையும் பார்க்கிறேன்.

சிங்கப்பூரில் இருந்த அவரது நண்பர்கள், புலம் பெயர்ந்த பெரும்பாலான உலகத் தமிழர்களின் மத்திய தர வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நட்பை-பொருளாதாரம் சார்ந்து விரிவாக்கிக் கொள்ளும் சினிமாச் சூழலில் இருந்தாலும், பால்ய கால நண்பர்களின் ஆத்மார்த்தமான நட்பின் இதமே அவருக்குப் பிடித்திருந்ததைக் கண்டேன். பணத்தை மட்டுமே பெரிதாகக் கொள்ளாத தன்மை, இயற்கையில் ஏற்படுகிற, ரத்தத்தில் இருக்கிற பண்பு. அது கால ஓட்டத்தில் கூடலாம், குறையலாம் ; ஆனால், அழியாது. சினிமா சார்ந்த சில விஷயங்களை எந்தப் போர்வைகளுமற்றுப் பகிர்ந்து கொண்டார் அமீர். சிங்கப்பூரில் இருந்த நாட்களில் அவர் அழகு சூழ் சுற்றுலாத்தளங்களுக்குச் செல்லாதது ஆச்சரியம். தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் லாரியில் ஏறி பயணம் செய்தது அமீருக்கு மிக மகிழ்ச்சியளித்த விஷயமாக இருந்தது இன்னும் ஆச்சரியமளித்தது. சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களைப் பற்றி பேச்சு வந்தபோது, 'நான் கதைகளைப் படித்து விட்டேன். ஆனால், ஒருவரைப் பற்றி குறிப்பிட்டு விட்டு, இன்னொருவரைப் பற்றிச் சொல்லாவிட்டால், அவர்களது மனம் கஷ்டப்படும். என்ன செய்யலாம்?' என்று கேட்டார். 'நீங்கள் சொல்வதும் நியாயம்தான். வேண்டுமானால், பொதுவாக பெண் எழுத்தாளர்களைப் பற்றி பேசுங்கள்.' என்று பதில் சொன்னேன். அப்படித்தான் வெளியீட்டு விழாவில் பேசினார்.

'எழுதுங்கள்...பெண்கள் அதிக அளவில் எழுதுவதே பெருமைக்குரிய விஷயம். அதுவும் சிங்கப்பூரில் 20 பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார். 'நான் அதிகம் படிப்பதில்லை. ஆனால் மனிதர்களைப் படிக்கிறேன்' என்று குறிப்பிட்டார். உண்மைகள் நிறைந்த அந்தப் பேச்சை அப்படியே ஏற்றுக் கொண்டோம். ராம், பருத்திவீரன் போன்ற படங்களின் மூலம், 'அனைத்துலக அரங்கில் அமீர்' என்ற பெருமைக்குரிய விஷயத்தை குறிப்பிட்டு பாராட்டு வழங்கினோம். 'நான் பொதுவாக யாரோடும் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியதில்லை. ஆனால், இந்த 20 சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்' என்று அமீர் சொன்னது, அந்தப் பெண் எழுத்தாளர்களின் மனதில் இன்னும் பலநூறு கதைகளுக்கான கனவை, எழுதமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கக் கூடும். அமீர் சிங்கப்பூர் மண்ணில் விட்டுச் சென்றது நம்பிக்கையையும், நல்லுணர்வையும். விமான நிலையத்தில் அவரை வழியனுப்பியபோது, சர்வதேசத் தரம்மிக்க தமிழ்ப்படங்களைத் தந்தவர் என்பதையும் மீறி, நல்ல நண்பரைப் பிரிகிறோம் என்ற உணர்வே மேலோங்கி நின்றது. அமீர் இன்னும் பல சர்வதேசத் தரமிக்கப் படங்களைத் தருவார் என்ற நம்பிக்கையோடு, 'யோகி' எப்போது வரும் என்று உலகத் தமிழர்களைப் போல, நாங்களும் காத்திருக்கிறோம் சிங்கப்பூரில்!

Friday, January 16, 2009

சுப்பிரமணியன் ரமேஷின் சித்திரங்கள் கரைந்த வெளி! (நாலு வார்த்தை-042)

காற்றினூடாக கரைந்து கிடக்கின்றன சித்திரங்களும், இசைக் குறிப்புகளும். அவை தங்களை வரைய, வாசிக்க இருக்கின்ற கரங்களை தேடியபடி இருக்கின்றன. கண்டடைந்து ஓவியமாகி, இசையாக காற்றினூடாகச் சிரிக்கின்றன. அந்தச் சிரிப்பு மலைமுகடுகளில் எதிரொலித்துக் கிடக்கிறது. பாலைவன வெளிகளில் மணல் மீது விழுந்து கிடக்கிறது. எல்லாப் புலன்களாலும் உணரக்கூடிய ஒன்றாக இருக்குமந்தச் சிரிப்பு. சுப்பிரமணியன் ரமேஷின் 'சித்திரங்கள் கரையும் வெளி'யில் அந்தச் சிரிப்பைக் கண்டேன். அது புகுந்து சிலிர்த்தது புலனுள். ஒரு அகதி வாழ்க்கையின் சுதந்திரநிலைகளில் பிறந்த கவிதைகள் நிறைந்த கவிதைத் தொகுப்பு 'சித்திரங்கள் கரையும் வெளி'.பிறந்த மண்ணை விட்டு வெளியேறி, புதுமண்ணில் முளை விடுவதை விபத்தென்றோ, வீரியமென்றோ, மனித நாடோடி வாழ்வின் இயல்பென்றோ கொள்வது அவரவர் மனநிலை சார்ந்தது. ஒப்பிட்டுப் பார்க்க அடுத்தவரது அனுபவங்கள் கிடைக்குமெனில் ஆறு வித்தியாசங்களுக்கு மேலும் அறிய முடியலாம். மனம் வரையும் எழுதாத கவிதைகளோடு ஒப்பிடக் கவிதைகள் தந்திருக்கிறார் ரமேஷ். பலருக்கும் எளிதில் கிடைக்காத அனுபவங்களும், கவிதாமனமும் ஆகி வந்து அவருக்கு/அதற்குக் கை கொடுக்கின்றன. எழுதி அழித்து, எழுதி அழித்து எழுதிய சித்திரங்களில் நாம் சிக்கிக் கொள்ள, இழுத்துச் செல்லும் பெருவெள்ளமாய் கவிதைகள்.


'ரமேஷ் நல்ல வாசகர்.நல்ல ரசிகர். நல்ல வாசகராகவும், நல்ல ரசிகராகவும் இருக்கிற ஒருவர், நல்ல படைப்பாளியாவது சாத்தியம்தான்' என்கிறார் விக்கிரமாதித்யன். சாத்தியமாதலின் சதவீதங்களே வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. தொண்ணூறு சதவீதம் கவிஞனாக வாய்ப்புள்ளவனின் வாழ்க்கையில் இருக்கும் பத்து சதவீதம் கொலைகாரனாகும் வாய்ப்பு அபாயகரமானது. பத்து சதவீதமா?, தொண்ணூறு சதவீதமா? என்ற ரகசியத்தைக் காலம் தன் கைகளுக்குள் ஒளித்து வைத்துக் கொள்வதே அதற்குக் காரணம். அதிர்ஷ்ட வசமாக, நல்ல சூழல் அவனைத் தத்தெடுத்துக் கொள்ளும்போது, கவிதை அவனைப் பெற்றெடுக்கிறது. சாத்தியமாதலின் சதிராட்டத்தில் சிக்கி, சிதறித் தெரிக்கின்றன கவிதைகள். 'இப்படித்தான் அமைந்து விட்டது வாழ்க்கை / பித்தர்களுக்கும் குடிகாரர்களுக்கும் இடையில்.../ பைத்தியமாகி இருப்பதைத் தொலைப்பதா? / குடிகாரனாகி தொலைந்ததில் இருப்பதா?' என்று கேள்வியோடு ஊசலாடுகிறார் ரமேஷ். எங்கு ஓடினாலும் தொலைக்க முடியாத குடிகாரர்களும், பைத்தியக்காரர்களும் நிறைந்த வாழ்வில், நம்மைப் தொலைப்பதே நடக்கிறது பலமுறை. தொலைக்கிறோம் ; பிறகு தேடிக் கண்டடைகிறோம். 'கரிசனத்தை இழந்து வாழ்வில் / அர்த்தமுள்ளதாய் எதையெல்லாம் பெறுவீர்கள் / புன்னகைக்கும் முகம் பார்க்க ஏங்கும் / என்னை என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள்' இழக்கின்ற கரிசனங்கள் அக்கறையாய் வெளிப்படும் புன்னகைகளில் மட்டுமே காணக் கிடைக்குமென்று கண்டு கொள்கிறார் ரமேஷ்.


தாயாகவும், சேயாகவும் ஒரே சேர சிந்திக்கின்ற மனதின் மறுநிலைகளை துல்லியமாய் வெளிப்படுத்தும் கவிதைகள், மூளையின் செதில்களைக் கிள்ளிப் பார்க்கின்றன. 'தாயாக இருக்கும் நான், ஓர் நாள் சேயாக இருந்தேன், சமயங்களில் மீண்டும் சேயாகிறேன்' என சொல்லிச் சிரிக்கும் கவிதைகளில் முகம் பார்த்துக் கொள்கிறோம். 'நீயும் கை விட்டாய் எனை / சாரில் சாய்ந்து நிற்கும் / என் புகைப்படத்தைப் பார்க்கையில் / அடுத்த மாதம் கட்ட வேண்டிய / காருக்கான தவணைப் பணமோ / வாங்க வேண்டிய / வாகன நிறுத்தக் கூப்பன்களோ / உனக்கேனும் / என்னைப் போல / நினைவுக்கு வராதிருக்கட்டும் / அம்மா' என்று உலகின் கொடூரப் பிழியலிருந்து தப்பித்து தாயின் மடியில் இடம் தேடும் சேயின் தப்பித்தல் மனமும், 'உனக்கேனும்' என்ற அக்கறை விசும்பலும் ஒரு சேர ஒலிக்கும் சமவெளியை காட்டுகிறார் ரமேஷ். 'சீனச்சிறுமியின் / அழகிய புன்னகை / வார்த்தைகளற்ற / கவிதையை வீசிச் செல்லும் / எதையும் யாசிக்கா / நிரந்தர முழுமையுடன்' என வருடும் கவிதை விரல்களில் பிறக்கிறது முடிவற்ற புன்னகை ஊற்று. எத்தனை முறை அள்ளிக் குடித்தும் நீர் தீர்வதில்லை - தாகமும்தான். அங்கே, அர்சுனன் வில் அம்பாக, இனங்கள் கடந்து குவிகிறதோர் தாய்மனம். பிறிதொரு நேரம், தாயின் அன்பை சதா நோக்குமொறு மனம் 'அம்மாவாலும் அதே / அன்பாய் இன்னொரு முறை / ஊட்டி விடமுடியாது' என ஏங்கி வழியும்போது, 'அதே அன்பு', இழந்துவிட்ட எத்தனையோவற்றின் பிரதிநிதியாய் முகம்காட்டி, யாருமற்ற பெருவெளியில் வேதனை விம்மிக் கிடப்பதைப் பார்க்கிறோம். நீந்திக் கடக்க முடியாத இழப்பு நதியல்லவா அது!

'நான் யாருகேனும் எழுதும் / வரிகளில் உனக்கான / வார்த்தைகள் இருக்கும்' எனும் வாக்குமூலத்தோடு துவங்குகின்றன கவிதைகள். யாருக்காகவோ, எதற்காகவோ எழுதப்பட்ட கவிதைகள். எந்தக் கவிதையில் என் பிம்பம் தெரிகிறது என்ற தேடலுக்கு வழிவிடும் கவிதைகள். யாருக்கேனும் நாம் எழுத நினைத்த வரிகளில் வழி நெடுக வழுக்கி விழுகிறோம். ஒரு புள்ளியில் ஒன்றாகும் வாய்ப்பை வழங்கி, வழங்கிச் சிரிக்கிறார் ரமேஷ் கவிதையாக. இந்தக் கவிதைக்கு தோலுரித்துக் கொள்ளும் தன்மை இருப்பதைப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது... 'நான் யாருக்கேனும் வாழும் வாழ்க்கையில் உனக்கான வாழ்க்கை இருக்கும், நான் யாருக்கேனும் பாடும் பாடலில் உனக்கான கீதம் இருக்கும்' - எப்படியும் தோலுரிக்க இயலுகிறதே இதை! நாம் எப்போதுமே ஏதோ ஒன்றின் சாயலாகவே இருக்கிறோம். "அப்பா சாயலில், அம்மா சயலில்...என் சிகையலங்காரம் அவனது சாயலில்... அவளது நடை அசின் சாயலில்... என் தோழியின் இடை சிம்ரன் சாயலில்...அவனைப் போல் படி மகனே.." இப்படி சுயம் என்பதை அறிய வாய்ப்பளிக்காத சாயல்கள். ஆனால் சுயம் எது, சாயல் எது என்று ஆராய்வதில் அழிவதற்கில்லை வாழ்க்கை. அது வாழ்வதற்கு மட்டுமே. சுப்பிரமணியன் ரமேஷின் 'சித்திரம் கரையும் வெளி' - அதை வாசிப்பவர்களுக்கு அவரவர் அடையாளத்தை ஆங்காங்கே காணும் வாய்ப்பை வழங்குகிறது. அது தரும் வியப்பிலும், சுகத்திலும் இருந்து விடுபடுவதற்குள் நாமறியாத, முற்றிலும் புதிதானதோர் அடையாளத்தையும் சட்டென்று நம்முன் அவிழ்த்து வைக்கிறது. அதன் பின்னிருந்து கவிதையாகச் சிரிக்கிறார் சுப்பிரமணியன் ரமேஷ். ஒரு கிராமம், சென்னை, சிங்கப்பூர் என நிலை கொள்ளும் இந்தத் தொகுப்பு, சிங்கப்பூர் கவிச்சூழலில் மிக முக்கியமானதாகும்!

Thursday, January 15, 2009

மலேசியத் தமிழ் வாசகர்கள் - வட்டங்களும் சதுரங்களும்! (நாலு வார்த்தை-041)

மலேசியாவில் நம்பிக்கையளிக்கும் இளையதலைமுறை தமிழ் எழுத்தாளர்கள் பலர் உருவாகி வருகிறார்கள். அவர்களில் சிலர் இன்னும் 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடிக்க இருக்கிறார்கள். இது ஆருடமில்லை. ஏற்கனவே முன் வைக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களின் மேல் எழுப்பப்பட்டு வரும் நம்பிக்கை. இணைய வாசகர்களுக்குப் பரவலாக அறிமுகமான இளைஞர் கே.பாலமுருகன் அவர்களில் ஒருவர். இவரைப் போன்றவர்கள், ஒரு சராசரி வாசகராக உருவாகி, தொடர்ந்த தேடலில் தங்களது மொழித்திறனை மேம்படுத்திக் கொண்டு எழுத்தாளர்களாக உருமாறி இருக்கிறார்கள். வாசகன் என்ற முதல்படியை மிதிப்பதற்கான தளம் அமைத்துத் தர பல நாழிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் மலேசியாவில் இருக்கின்றன. மலேசியத்தமிழ் வாசகர்களை எளிதாக இனம் பிரித்துவிடலாம் என்பது என் அனுபவம். தமிழ்மேல் அளவற்ற ஆர்வமும், மொழி சார்ந்த உறவுகள் மூலம் தமிழ் மொழியை தக்க வைத்துக் கொள்ளும் தீவிரமும் உள்ள சராசரி தமிழ் வாசகர்கள் பெரும்பான்மையான முதல் பிரிவினர். தமிழகச் சிற்றிதழ்களின் தொடர்பும், தீவிர இலக்கிய வாசிப்பும், சதா படைப்புகளின் மேல் விமர்சனப்பார்வை வீசும் மனபோக்கும் உள்ள சிறுபான்மையினரான இரண்டாம் பிரிவினர்.இந்த இரட்டைக் குதிரையில்தான் பயணம் செய்கிறது மலேசியத் தமிழ் இலக்கியம்.

நானறிந்தவரை, மலேசியத்தமிழ் வாசகர் வட்டங்கள் மலேசியா முழுவதும் பரவிக் கிடக்கின்றன.அவற்றுக்கு தன்னலமற்ற, ஆளுமைமிக்க தலைவர்கள் இருக்கிறார்கள். தீவிர இலக்கியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை. தமிழைப் பற்றி மட்டுமே கவலைப் படுகிறார்கள். தமிழ் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பதை பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் உறுதி செய்வது ஒன்றே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. நாடு தழுவிய கட்டமைப்பு அவர்களுக்கென்று இல்லாவிடாலும், மலேசியா முழுவதும் இருக்கிற வாசகர் வட்டங்கள் புரிந்துணர்வும், இணக்கமான செயல்பாடும் இருக்கிறது. வாசகர் வட்ட நிகழ்வுகள் எங்கு நிகழ்ந்தாலும் நாடு முழுவதும் உள்ள வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் தங்கள் குழுவினரோடு காரை எடுத்துக் கொண்டு, டோலில் காசு கட்டி, தேசிய நெடுஞ்சாலையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துப் போய் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்தும் வாசகர் வட்ட பொறுப்பாளர்கள், அப்படி வரும் வெளியூர் வாசகர்களுக்கு வீட்டில் விருந்து சமைத்துப் போடுவதும் உண்டு. இந்த வாசகர் வட்ட நிகழ்ச்சிகள் ஆட்டம், பாட்டம், இலக்கிய உரைகள், புதிர் விளையாட்டுகள் என்று ஒரு திருவிழாவாகவே கலை கட்டுகின்றன. வேறுபட்ட ஆர்வங்கள் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் என எல்லோரையும் திருப்திபடுத்தும் அக்கறையை பெரும்பாலான நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் பார்க்க முடிகிறது. இப்படிப் பட்ட மாதாந்திர வாசகர் வட்ட விழாக்களை துவக்கி வைத்தவர் சூரியன் என்ற மாத இதழின் ஆசிரியர் ராமதாஸ் மனோகரன் என்று நினைக்கிறேன். வாசகர்களுடன் நேரடி தொடர்பு என்ற அவரது அணுகுமுறையை பின்னாளில் 'மன்னன்' மாத இதழ் ஆசிரியர் எஸ்.பி.அருணும், 'தென்றல்' வார இதழ் ஆசிரியர் வித்யாசாகரும் பின்பற்றினார்கள் ; இப்போதும் பின்பற்றி வருகிறார்கள்.

கிள்ளான் பாலகோபாலன் நம்பியார், பூச்சோங் எம்.கே. சுந்தரம், ஜோசப் செபாஸ்டியன் போன்ற பல குறிப்பிடத்தக்க வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி வருவார்கள். சிரம்பான் பகுதியிலிருந்து இயங்கி வரும் விகடகவியும் குறிப்பிடப்பட வேண்டியவர். இது புனைப் பெயர்தான். இதற்கு முன்பு அவரது புனைப்பெயர் உலகமகா துரோகி. அந்தப் புனைப் பெயரைப் பார்த்ததும் கோபப்பட்ட முன்னாள் மலேசிய நண்பன் ஆசிரியர் திரு.ஆதிகுமணன், 'முதலில் நீங்கள் இந்தப் பெயரை மாற்றுங்கள், அதற்குப் பிறகு உங்கள் படைப்புகளை வெளியிடுகிறேன்.' என்று சொல்லி விட்டாராம். மறுவாரமே, பெயரை 'அகில உலக மகா துரோகி' என்று மாற்றிக் கொண்டு படைப்பை அனுப்பினாராம் விகடகவி. அதே போல் அவரது எழுத்துப் பிழைகளும் பத்திரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் பிரபலம். வாவ்! என்று எழுத வேண்டிய இடங்களில் எல்லாம் 'வவ்! வவ்!!' என்று எழுதி அனுப்பி மலேசியத் தமிழ் பத்திரிக்கை ஆசிரியர்களை அலர வைப்பது அவரது வழக்கம். ஆனால், அவரது அன்பான பேச்சும் அணுகுமுறையும் வாசகர்கள் மத்தியில் பிரபலம். கடந்த சில வருடங்களாக 'தென்றல்' இதழ் அலுவலகத்தில் 'விருட்சமாலை' என்ற பெயரில் கவிதைப் பகிர்வு நடந்து வருகிறது. சை.பீர்முகம்மது போன்ற மூத்த எழுத்தாளர்களும் இதில் கலந்து கொண்டு வாசகர்களை கவிஞர்கள் என்ற நிலைக்கு உயர்த்துவதில் அக்கறை காட்டி வருகிறார்கள்.

தீவிர இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வதில் பல ஆண்டுகளாக கெடா மாநிலமே முன் நிற்கிறது. மறைந்த எம்.ஏ.இளஞ்செல்வன், பேராசிரியர் ரெ.கார்த்திகேசு, புண்ணியவான், சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, மனஹரன் போன்றவர்கள் நவீன இலக்கியப் போக்குகளைத் தொடர்ந்து கவனித்து வருவதோடு, அவற்றுக்கு மேலும் ஒரு படி மலேசியத் தமிழ் இலக்கியம் மேம்பட வேண்டுமென்ற மனப்பூர்வமான ஈடுபாடு காட்டியுள்ளார்கள். அவர்களின் அடியொற்றி நம்பிக்கையளிக்கும் புதிய தலைமுறையும் உருவாகி உள்ளது. ஜாசின் தேவராஜன், கே.பாலமுருகன், மஹாத்மன், பா.அ.சிவம், மணிமொழி, ம.நவீன், யுவராஜன், தோழி உட்பட மிக நீண்டதோர் இளையதலைமுறை அது. டாக்டர் மா.சண்முகசிவா அவர்களின் பின்நிற்கும் ஊக்க சக்தியாக இருக்கிறார். அவரது 'கூத்தனின் வருகை சிறுகதையை இன்னும் 50 வருடங்களுக்காவது ஞாபகம் வைத்திருப்பேன். அவ்வளவு அற்புதமான கதை. இளைஞர்கள் சேர்ந்து இழுத்துக் கொண்டிருக்கும் 'வல்லினம்' என்ற காலாண்டிதழ் இன்றைய மலேசிய இலக்கியச் சூழலில் முக்கிய பங்காற்றி வருகிறது. கே.பாலமுருகனின் முயற்சியில் வரத் துவங்கியுள்ள 'அநங்கம்' இதழ் அளிப்பதும் நம்பிக்கையே. ஆக மொத்தத்தில், சராசரி வாசகர்கள், தீவிர வாசகர்கள் என்ற இரட்டைக் குதிரையில்தான் மலேசியத்தமிழ் இலக்கியம் பயணம் செய்கிறது.இதில் எவருடைய பங்கும் எவருக்கும் குறைந்ததில்லை. இதை எல்லோரும் உணர்ந்திருப்பதால், மலேசிய வாசகர்கள் மத்தியில் இருப்பது நம்புக்கையும், நட்புறவும்!

Wednesday, January 14, 2009

இருட்டில் தொலைந்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் (நாலு வார்த்தை-040)

அந்த ஷாட் அப்படியே புகைப்படம் மாதிரி மனதில் இருக்கிறது. அதேபோல் அந்த கேட்சும். மிட் விக்கெட் திசையில் பந்து சிக்ஸரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. டீப் மிட்விக்கெட்டில் பவுண்டரி எல்லையில் நிற்கும் ·பீல்டர் மிகச் சரியாக எம்பிக் குதித்து ஒற்றைக் கையால் பந்தைப் பிடித்து விடுகிறார். இந்த இரண்டிலும் சம்பந்தப்பட்டவர் எல்.சிவராமக்கிருஷ்ணன். அது 90களின் துவக்கம். சேப்பாக்கம் மைதானத்தில் TNCA முதல் டிவிஷன் லீக் போட்டி ஒன்றில் விவேக் ரஸ்டான் பந்து வீச, பின்காலில் சென்று நளினமாக ஒரு ஸ்கொயர் டிரைவ் அடித்தார் சிவா. பந்து, புல்தரையை முத்தமிட்டுக் கொண்டு அவ்வளவு அழகாக ஓடி வந்தது. அதே போன்றதொரு ஷாட்டை அசாரூதீன் அதே மைதானத்தில் அடிக்கக் கண்டேன் பின்னொருநாள். இந்திய கிரிக்கெட் சரித்திரம் எப்போதும் எல்.சிவாவை வீணடிக்கப்பட்ட திறனாளர் என்றே அடையாளம் காட்டும். ஒருமுறை "இவரளவு திறமை இருந்தால், உலகத்தையே என் காலடியில் கொண்டு வந்து விடுவேன்" என்று சொல்லி சிவாவைப் பாராட்டினார் கபில்தேவ். சமீபத்திய பேட்டி ஒன்றில் மனீந்தர்சிக்கும் அதையே குறிப்பிட்டிருந்தார். மனீந்தர்சிங்கும் அதே வரிசையில் வைக்கப்பட வேண்டியவர்தான். இவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட் அணி தவறவிட்ட மாபெரும் திறனாளர்கள். எங்கு தவறு நிகழ்ந்தது?
17 வயதிலேயே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விட்டார் சிவராமக்கிருஷணன். 'நீங்கள்தான் இந்தியாவின் எதிர்காலம்' என்று பலரும் அவரைப் போற்றினார்கள். அந்தப் போற்றுதல் போதையளிக்கக் கூடியது. எல்லாம் எனக்கு எளிதாக வந்துவிடும் என்ற இறுமாப்பைத் தரக்கூடியது. சிவராமாக்கிருஷ்ணனுக்கு அப்படி ஏதும் நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் சில சிகரங்களை, சில வேதனைக்குரிய தாழ்வாரங்களைத் தனது வாழ்க்கையில் சந்திக்கிறார். மனதிடமுள்ளவர்கள் மட்டுமே அந்தத் தாழ்வாரங்களில் இருந்து மீண்டு எழுகிறார்கள். மற்றவர்கள் அவநம்பிக்கையின் மடியில் வீழ்ந்து விடுகிறார்கள்.


எல்.சிவராமக்கிருஷ்ணனுக்கும் அதுதான் நிகழ்ந்தது. 1985ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த World Championship of Cricket போட்டிக்குப் பிறகு, மெல்ல, மெல்ல நிகழ்ந்தது சிவராமக்கிருஷ்ணனின் வீழ்ச்சி. அவர் போதைக்கு அடிமையாகி விட்டதாக, பெண்களிடம் வீழ்ந்து விட்டதாக (ஒருசமயம் குஷ்புவோடு கிசுகிசுக்கப்பட்டார்) பலவாறு வதந்திகள். வதந்திகள் என்றாலே உண்மையற்ற பொய்கள் என்றே அர்த்தப்படுகின்றன. மனீந்தர்சிங்கிற்கும் அதுதான் நிகழ்ந்தது. தனது திறமையைப் பற்றி நம்பிக்கையின்மை. பந்து வீசும்போது தனக்கிருந்த double jump-ஐ இழந்த பிறகு, தான் நம்பிக்கையிழந்துவிட்டதாகக் கூறுகிறார் மனீந்தர். துவக்கத்தில் வெறும் பந்து வீச்சாளராக மட்டும் இருந்த மனீந்தர்,பின்னாளில் தரமான ·பீல்டராகவும், பேட்ஸ்மேனாகவும் உருவெடுத்தார். இருந்தும் என்ன பயன்... இந்திய அணி வாய்ப்புகள் வந்தபாடில்லை. சித்துகூட இப்படி வீணாகி இருக்க வேண்டியவர்தான்...அளவுகடந்த மனஉறுதிதான் அவரைக் காப்பாற்றியது. சென்னையில் அவர் விளையாடிய முதல் கிரிக்கெட் டெஸ்டில், ஒழுங்காக ·பீல்டிங் செய்யத் தெரியாமல், கோழி பிடிப்பதுபோல் பந்தை விரட்டிக் கொண்டிருந்தார். அதே சித்துவின் வலுவான த்தோக்களுக்கு பின்னொரு காலத்தில் ஆஸ்திரேலியர்கள் கூட பயப்பட்டார்கள். இதே காலகட்டத்தில் நட்சத்திரமாக ஜொலித்த சதானந்த் விஸ்வநாத்தின் வீழ்ச்சி காலகாலமாக பேசப்பட்டு வரும் சோகக்கதை.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று வீழ்ந்தவர்கள் இவர்களென்றால், வாய்ப்பு கிடைக்காமலே வீழ்ந்தவர்கள் பலர். இன்று U-19 போட்டிகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. அதில் சிறப்பாக விளையாடும் விராட் கோலி போன்றவர்களுக்கு இந்திய அணியின் கதவுகள் பட்டென்று திறந்து கொள்கின்றன. 80களில், 90களில் கதை அப்படியல்ல. ஒரே ஒரு சச்சின் டெண்டுல்கரைத் தவிர மற்றவர்களுக்கு எல்லாக் கதவுகளும் மூடியே கிடந்தன. முறையான வாய்ப்புகள் இல்லாததால் வீணான திறனாளர் எம்.செந்தில்நாதன் என்ற தமிழக வீரர். அஜய் ஜடேஜா, வெங்கடபதி ராஜு போன்றவர்கள் எல்லாம் இவரது தலைமையில்தான் U-19 விளையாடினார்கள். உடுமலைப்பேட்டை என்ற சின்ன நகரத்தில் இருந்து முளைத்து, தனது திறமையால் உயர்ந்தவர். அந்தக் கால U-19 போட்டிகளில் சதமடிப்பது, இரட்டைச் சதமடிப்பது போன்றவை அவருக்கு சர்வசாதாரணம். இயான் பிஷப் போன்ற வேகப் பந்து வீச்சாளர்களையெல்லாம் 16 வயதிலேயா விளாசித் தள்ளியவர். வயது குறைவென்று தமிழக அணியில் இடம்தரவே மிகவும் யோசித்தார்கள்...சில, பல வருடங்களுக்குப் பிறகு வாய்ப்புகள் வந்தபோது... It was too late. இன்று MRF Pace Foundation பொறுப்பில் இருக்கிறார் செந்தில்நாதன். U-19 போட்டிகளில் பிரகாசித்து, சரியான வாய்ப்புகளின்றி சரிந்துபோன இன்னொரு தமிழக வீரர் முஜிபூர் ரஹ்மான். ஒரு முறை உள்ளூர் போட்டியொன்றில், கபில்தேவ் வீசிய முதல் பந்தையே முஜிபூர் ரஹ்மான் சிக்ஸருக்கு அடிக்க, அசந்துபோன கபில், அவருக்கு ஒரு பேட்டைப் பரிசளித்தாராம். அதுதான் முஜிபூர் பெற்ற அதிகபட்ச பரிசாக இருக்க வேண்டும். காரணம் - அதற்குப்பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்துப் போனது. இந்த இருவரது தோல்விகளுக்கும் , சரியான நேரத்தில் கிடைக்காத வாய்ப்புகளும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாத அவர்களின் lack of killer Instict-ம் தான் காரணம்.

இவையெல்லாம் விபத்துகள். இந்த விபத்துகளில் சிக்கி பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை சீரழிந்து போயிருக்கிறது. ஒரு சிலரை மட்டுமே குற்றம் சொல்ல இயலாத அளவு, பலநூறு காரணங்கள் இதன் பின்னணியில் பின்னிக் கிடக்கின்றன. இன்று நிலைமை மாறி விட்டது. BCCI என்ற பணம் கொழிக்கும் கட்டமைப்பில், கிரிக்கெட் வீரர்களின் பல தேவைகளையும் கவனிக்கும் சிற்றமைப்புகள் பல தோன்றி விட்டன. அவை வீரர்களின் நலனில் அக்கறை காட்டுகின்றன. திறமையுள்ளவர்கள் மறைக்க முடியாதபடி பத்திரிக்கைகள் அவர்கள் மேல் வெளிச்சம் வீசிக் கொண்டே இருக்கின்றன. அபிநவ் முகுந்த என்ற 18 வயது கறுப்பு இளைஞன் ரஞ்சி டிராபியில் எடுக்கும் ரன்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. வாய்ப்புகளும் வருகின்றன. ஒரு கிரிக்கெட் வீரனின் விளையாடில் உள்ள குறைகளை நீக்கி, அவனை முழுமையாக்குவதில் நிஜமான அக்கறை காட்டப்படுகிறது. முனாப் படேலின் ·பீல்டிங் திறனை மேம்படுத்துவதில் ராபின் சிங் காட்டிய அக்கறை அதற்கொரு உதாரணம். இதுபோன்ற சின்னச் சின்ன பல விஷயங்களில் சேர்க்கையால் உலக டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணி என்ற பெரிய இலக்கை நோக்கி வேகமாகப் பயணித்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி.

Tuesday, January 13, 2009

இந்த மானிடக் காதலெல்லாம்... (நாலு வார்த்தை-039)

லட்சுமணன் இறந்து போய் 10 வருடமாவது இருக்கும். அவன் என்னோடு பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் படித்தான். படிக்கும்போது இறக்கவில்லை. படித்து முடித்து நாங்கள் பிழைப்புதேடி பல திசைகளில் பிரிந்தபிறகு ஒரு நாள், ஒரு செய்தியாகவே அந்த மரணம் என் காதுகளை எட்டியது. அந்த செய்தி மனதில் பெரிய அதிர்வை உண்டாக்கியது. ஒரு வித வெட்கம் கலந்த அவனது புன்னகை மறுபடி, மறுபடி மனதில் வந்து,"அதெல்லாம் பொய்ங்க மணி... நம்பாதீங்க" என்றது. லட்சுமணன் என்னை எப்போதும் 'வாங்க, போங்க' என்று மரியாதையாக அழைத்தாலும், நிஜத்தில் எங்களுக்குள் இருந்தது 'அவன், இவன்'னுக்கான நெருக்கம். பாலிடெக்னிக்கின் முதல் வருட படிப்பில் நானும், அவனும் வெவ்வேறு வகுப்புகள். எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை; ஆனால், எங்களுக்கிடையில் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. நாங்கள் பாலிடெக்னிக் விடுதியில், ஒரேயிடத்தில் தங்கிப் படித்தோம் என்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். 1980களில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் ஒரு கல்லூரிக்கான சகல வசதிகளோடும் இருந்தது. மெக்கானிக்கல் லேப்பிற்குப் பக்கத்தில் புகை விடாத நீராவி எஞ்சினை பார்வைக்கு வைத்திருப்பார்கள். தரமான நூலகம் உண்டு. ஒரு கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றியுள்ள கேலரிகளைப் போல் தங்குவதற்கான விடுதியின் அறைகள் இரண்டு தளங்களாக கட்டப்பட்டிருந்தது. இடையிடையே குளியலறைகள் இன்ன பிற. கட்டிடத்தின் மத்தியில் பெரிதாக ஒரு வெட்டவெளி. சாப்பாட்டு மெஸ் விடுதிக்கு வெளியே தனி கட்டிடத்தில் இருந்தது. அங்கு வழங்கப்படும் ஊத்தாப்பத்தை சாப்பிட்டு விட்டு வகுப்பிற்குப் போனால், உறக்கத்திற்கு 100 சதவீத உத்திரவாதம்.

ஆங்கில வகுப்பு நடத்திய ஆசிரியை சற்று அழகாகவும், செழுமையாகவும் இருப்பார்கள். "அழகை ரசிக்கலாம் தப்பில்லை. ஆனால், அடைய ஆசைப்படக் கூடாது" என்று அவர் சொல்லும்போது, பல மாணவர்களுக்கும் அதன் பொருள் புரிந்திருந்ததால், பலமாக தலையை ஆட்டி ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்கள். எலெக்ட்ரானிக்ஸ் எடுத்த இன்னொரு ஆசிரியையோ அப்படியெல்லாம் சொல்ல மாட்டார். அவர் புதிதாக வந்தவர். இளமையானவர். அவர் ஒரு முறை அணிந்த சேலையை, மறுமுறை அணிந்து நாங்கள் யாரும் பார்த்ததில்லை. கடலோரக் கவிதைகள் அப்போதுதான் ரிலீஸாகி இருக்க, நெளிவான கூந்தலுடைய அவர், பலரது கண்ணுக்கும் ரேகாவாகத் தெரிந்ததில் ஆச்சரியமில்லையென்றால், அவரவர் மனதில் அவரவர் சத்யராஜாகிப் போனதும் அதிசயமில்லைதான்.லட்சுமணன் இதிலெல்லாம் மாட்டிக் கொள்ள மாட்டான். அவன் கராத்தேயில் பிளாக் பெல்ட். அவனது உடல் மிக இறுகி கல் போல இருக்கும். சிட் அப்ஸ் ஒரே மூச்சில் 200 கூட எடுப்பான். நாங்கள் சில சிட்டப்ஸில் மூச்சு மட்டும் வாங்குவோம். நாலைந்து நண்பர்களை மொட்டை மாடிக்குக் கூட்டிக் கொண்டு போய் ஆவேசமாக கராத்தே அசைவுகளை செய்து காட்டுவான். அதில் தற்காப்புக் கலைக்கு மேலான ஆவேசம் தென்படும். ஏதோ ஒன்று அவனை ஆட்க் கொண்டதுபோல் தோன்றும். ஏன் அப்படி என்று கேட்கத் தோன்றும். ஆனால், கேட்பதில்லை. என்னிடம் தன் சொந்த வாழ்வில் அந்தரங்கங்களைச் சிலமுறை பகிர்ந்து கொண்டபோது அந்த ஆவேசத்தின் அர்த்தம் புரிந்தது. அவனது தாய், அவனுடைய தந்தைக்கு இரண்டாவது மனைவி. அது அவனை பெரிதாக உறுத்திக் கொண்டே இருந்தது. அந்த உறுத்தலுக்குப் பின்னால் இருந்த சம்பவங்கள் அல்லது காரணங்களை லட்சுமணன் பகிர்ந்து கொண்டதில்லை. அவன் ஒரு பேரன்பிற்காக ஏங்குகிறான் என்று மட்டும் புரிந்து கொண்டேன்.

அங்கு படித்த மாணவ, மாணவிகளுக்கிடையில் அவ்வப்போது காதல்கள் அரும்பிக் கொண்டே இருந்தன. ஒரு ஜோடி பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் நெகமம் எம்.எல்.ஏ ஒருவரின் ஆதரவோடு திருமணம் செய்து கொண்டது. லட்சுமணன் கராத்தே வீரன். கட்டுடல்காரன். சில பெண்களுக்கு அவன் மேல் காதல் பற்றி எரிவதாக செய்திகள் காதில் வந்து விழுந்தன. பாலிடெக்னிக் முடிந்த மாலை நேரமே 'அன்னலும் நோக்கினாள்: அவனும் நோக்கினான்' நிகழும் காலம். பாலிடெக்னிக் காம்பவுண்ட் சுவருக்கு சற்று வெளியே உள்ள பஸ்ஸ்டாண்டில் எதிரெதிரே நின்று கொண்டு பார்வைப் பரிமாற்றங்கள் நிகழும். லட்சுமணன் எப்போதும் என்னையும் அங்கு இழுத்துக் கொண்டு செல்வான். அங்கு நிகழும் கூத்துகளுக்கு சாட்சியாக என்னை பக்கத்தில் வைத்துக் கொள்வான்.'அவ பாக்குறா... இவள் பார்க்கிறாள்' என்ற கூற்றுகளும், 'அவன் அவள் பின்னாடியே பொள்ளாச்சி போயிட்டான். இன்னேரம் ரெண்டு பேரும் மணிஸ்ல உட்காந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு இருப்பாங்க' போன்ற வர்ணனைகளும் கேட்கக் கிடைக்கும். லட்சுமணன் சிரித்தபடி வேடிக்கை பார்ப்பான். பார்ப்பதோடு சரி, மற்றபடி காதல் கீதல் எல்லாம் அவனுக்குள் வந்தபாடில்லை. அப்படி இருந்த அவனையும் ஒரு நாள், ஒரு பெண் சாய்த்து விட்டாள் - அவள் பெயர் அஜிதா. மலையாள மங்கை. கண்ணாடி அணிந்து அமைதியாக வகுப்புக்கு வந்து போகும் பெண். அந்தப் பெண் மேல் லட்சுமணனுக்கு அளவிடமுடியாத காதல் ஏற்பட்டு விட்டது. நான் ஓரளவு கவிதை எழுதுவேன். லட்சுமணன், அஜிதாவைப் பற்றி தானே எழுதிய கவிதையை என்னிடம் படித்துக் காட்டி மகிழ்வான். பலவகையிலும் அவளிடம் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், ஆனால், அவளிடம் ஒரு ரியாக்ஷனும் இல்லை என்றும் சொல்வான். இதுதான் விதி என்பது. பலர் அவன் மேல் காதலுடன் இருக்க, அவனோ சற்றும் நெகிழாத் பெண்ணின் காதலுக்கு அலைந்து கொண்டிருந்தான். கடைசியில், அஜிதா, அவனது காதலை நிராகரித்து விட்டாள்.

அன்றிரவு அவன் செய்த ஆர்பாட்டம் மறக்க முடியாதது. எங்கேயோ போய் எதையோ குடித்து விட்டு வந்து, அமைதியான ராத்திரியில் 'அஜிதா, என்னை ஏமாத்திட்டாடா' என்று பெருங்கூச்சலிட்டான். அத்தனை அறைகளிலும் விளக்குகள் ஒளிர்ந்தன. அவனை சமாதனப் படுத்தும் முயற்சிகள் தோல்வியுற்றன. ஒரு அறையில் வைத்துப் பூட்டினோம். அந்த அறையின் கதவை ஒரே அடியில் உடைத்து விட்டான். கடைசியில் எல்லோரும் சேர்ந்து அவனை தண்ணீர்த் தொட்டியில் போட்டு முக்கியெடுத்து... ஒரு வழியாக உறங்க வைத்தோம். இரண்டு நாள் கழித்து, என் அறை வாசலில் வந்து நின்றான்.'வா மணி... இன்னைக்கு ராத்திரி பழனிக்கு பாதயாத்திரை போவோம்' என்றான்.'ஏன்..எதுக்கு... எனக்கு ஒன்னும் வேண்டுதல் இல்லையே' என்றேன்.'எனக்கு இருக்கு. நீயும் வரணும். நம்ம பிரெண்ட்ஸ் 4 பேரும் வாரங்க.' என்றான். அஜிதாவின் மனம் மாற வேண்டுமென்பதே முருகனிடம் அவன் வைக்கவிருந்த விண்ணப்பம். சகமாணவர்கள் பார்த்திருக்க, பாலிடெக்னிக் முடிந்த ஒரு மாலையில் எங்கள் பாதயாத்திரை துவங்கியது. ஏறக்குறைய 58 கிலோமீட்டர் என்று நினைக்கிறேன். உடுமலைப் பேட்டை எல்லையை நெருங்குவதற்குள் என் கால் கதற ஆரம்பித்து விட்டது. நெஸாக லட்சுமணனுக்குத் தெரியாமல் உடுமலைப்பேட்டையில் பஸ் ஏறி, பழனிக்கு சற்று முன்னால் இறங்கிக் கொண்டு, மறுபடியும் நைஸாக அவன் பின்னால் போய் சேர்ந்து கொண்டோம், நானும், இன்னொரு நண்பனும். எந்தக் கடவுளிடம் வேண்டியும் அஜிதா மனம் மாறவில்லை. ஆனால், அப்போதுதான் புதிதாக அங்கு ஆரம்பிக்கப்பட்டிருந்த குமரகுரு காலேஜ் ஆ·ப் டெக்னாலஜியின் மாணவனொருவனை அவள் காதலிக்கிறாளென்ற செய்தி கிசுகிசுவாகப் பரவியது. அந்தத் தோல்விக்குப் பின் லட்சுமணன் யாரையும் காதலிக்கவில்லை. பாலிடெக்னிக் வாழ்க்கை நிறைவுற்றது. நான் சென்னையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு நாச்சிமுத்து பாலிடெக் நண்பர்கள் சிலரும் வந்து சேர, அவ்வப்போது சந்தித்துப் பேசிக்கொள்வோம். அந்தப் பேச்சில் எப்படியும் லட்சுமணது பெயர் வந்து விடும். கோயம்பத்தூரில் இருக்கும் அவன் எந்த வேலையிலும் நிலைக்க முடியவில்லை என்று கவலையாகச் சொன்னார்கள் நண்பர்கள். ஒரு முறை சென்னை வந்த அவனை சந்திக்க முடியாமல் போனது. அவனுக்கு முற்றிலும் வழுக்கை விழுந்து விட்டது என்றார்கள் நண்பர்கள். அங்கிருந்து நான் வேலை நிமித்தம் சிங்கப்பூர் வந்து விட்டேன். ஒரு வருடத்திற்குப் பிறகு சென்னை சென்றபோது,'லட்சுமணனுக்கு துபாயில் வேலை கிடைச்சிருச்சு. இன்னும் ரெண்டு மாதத்தில் கிளம்புறான்' என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ந்தேன். நிறைய ரணங்கள் நிறைந்த அவனது வாழ்க்கையில் ஒரு பாலைவன வசந்தம். அந்த நினைப்பை உடைத்தது ஒரு நண்பனின் தொலைபேசி அழைப்பு. 'லட்சுமணன் இறந்திட்டான்'. 'என்னது?' 'ஆமாம்.துபாய் போறதை ·பிரெண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டு, ராத்திரி பஸ்ல வர்ரப்போ...அவன் போன பஸ், முன்னாடி போன லாரியில மோதி, ·பிரண்ட் சீட்ல உட்கார்ந்திருந்த லட்சுமணன் ஸ்பாட்லேயே இறந்திட்டான்.' அந்த செய்தி மனதில் பெரிய அதிர்வை உண்டாக்கியது. ஒரு வித வெட்கம் கலந்த அவனது புன்னகை மறுபடி, மறுபடி மனதில் வந்து,"அதெல்லாம் பொய்ங்க மணி... நம்பாதீங்க" என்றது.

Monday, January 12, 2009

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தேடிய மைக்ரோ ·பிலிம் (நாலு வார்த்தை-038)

நா.ஆ.செங்குட்டுவன் மலேசியாவின் மூத்த எழுத்தாளர். பல வருடங்களுக்கு முன்பே மலேசியாவில் முழு நீளத் தமிழ் திரைப்படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். இவற்றிலெல்லாம் முக்கியமான விஷயம் - இவர் இப்போதும் இளமைத் துடிப்போடு எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதுதான். கிள்ளானிலுள்ள நண்பர் பாலகோபாலன் நம்பியார் மூலம்தான் அவர் எனக்கு அறிமுகமானார். சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் அவர் மலேசியாவிலிருந்து தொலைபேசியில் அழைத்து ஒரு உதவி கேட்டார். "1965-ம் வருடம் சிங்கப்பூர் தமிழ்முரசில் ஒரு தொடர்கதை எழுதினேன். அதன் கையெழுத்துப் பிரதியோ, அந்தத் தொடர்கதை வெளியான தமிழ்முரசின் பிரதிகளோ என்னிடம் இல்லை. அது, சிங்கப்பூர் நூலகத்தில் "மைக்ரோ ·பிலிமாக" இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மைதானா என்று சோதித்துப் பார்த்துச் சொல்லுங்களேன். அதை நாவலாக வெளியிட ஆசைப்படுகிறேன்." என்ற அவரது குரலில், கிடைக்குமா என்ற ஆதங்கமும், கிடைக்காமல் போய் விடுமோ என்ற கவலையும் ஒரு சேர ஒலித்தது."கவலைப்படாதீர்கள். அப்படி மைக்ரோ ·பிலிம் இருக்குமென்றால், மொத்தக் கதையும் உங்களிடம் வந்து சேர்ந்துவிடும்" என்று நம்பிக்கையளித்தேன். தேசிய நூலகத்தில் தேடியதில், அந்த முழுத் தொடர்கதையும் (ஓரிரு வாரங்கள் தவிர) மைக்ரோ ·பிலிமாக இருந்தது. நா.ஆ.செங்குட்டுவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை. அந்த ஆனந்தத்தை சாத்தியமாக்கியது, சிங்கப்பூர் தேசிய நூலகம்.

அந்தத் தொடர்கதையைத் தேடிய காலத்தில் சற்றே பழைய கட்டிடத்தில் இருந்த சிங்கப்பூர் தேசிய நூலகம், தற்போது விக்டோரியா ஸ்டிரீட்டில் உள்ள அதிநவீன கட்டிடத்திற்கு இடம் மாறி விட்டது. நூலகம் என்பதைத் தாண்டி, பல கலைகளும் கூடுமிடமாகவும், கருத்துக் கருவூலமாகவும், நகரின் மத்தியில் அமைதியை அடைகாக்கும் இடமாகவும், நவீன கட்டிட வடிவைப்பின் ஆச்சரியமாகவும் உரு கொண்டுள்ளது சிங்கப்பூர் தேசிய நூலகம். பெரும்பாலும் கண்ணாடியால் இழைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகத்திற்கு சமீபத்தில் இந்தியாவிவிருந்து வந்திருந்த உறவினர் ஒருவரை குடுப்பத்தோடு அழைத்துச் சென்றிருந்தேன். 14 அல்லது 15வது மாடி. லி·ப்டை விட்டு வெளியே வந்ததும், முழு உயரக் கண்ணாடித்தடுப்பு, அதற்கு அப்பால் நேர் கீழே அகன்ற பிராஸ் பாசாச் சாலை. அதில் வாகனங்களே எறுப்பாகத் தெரிய, என் உறவினரின் கை, கால்கள் நடுங்குவதை உணர முடிந்தது. சிங்கப்பூரில் இதை விட உயரமான பலநூறு கட்டிடங்கள் உண்டெனினும், 15வது மாடியின் சுவர்களற்ற விளிம்பில் நிற்கும்போது, நடுக்கம் எடுக்கத்தான் செய்யும். மொத்தம் 16 மாடிகள் கொண்ட இரண்டு பிளாக்குகள் உண்டு தேசிய நூலகத்திற்கு. ஒவ்வொரு தளத்திலும் உள்ள Bridge-கள் இரண்டு புளோக்குகளையும் இணைக்கின்றன. புத்தகங்களை இரவல் பெறும் Central Lending Library Basement 1-ல் இருக்கிறது. இங்கிருந்து ஆங்கில, சீன, மலாய் மற்றும் தமிழ் மொழிப் புத்தகங்கள் எது வேண்டுமானலும் தேடி எடுத்துக் கொள்ளலாம். e-kiosk-ல் நீங்கள் தேடும் புத்தகத்தின் / நூலாசிரியரின் பெயரைத் தட்டினால், அந்த நூலின் ஜாதகமே உங்கள் கையில் வந்துவிடும். 7வது தளத்திலிருந்து 13வது தளம் வரை Lee Kong Chian Reference Library இருக்கிறது. இந்தப் பிரிவில் உள்ள பலதரப்பட்ட புத்தகங்களையும் நீங்கள் பார்க்கலாம், ரசிக்கலாம்; ஆனால் வெளியில் எடுத்துச் செல்ல முடியாது.

ஒரு இடைச் செருகலாக, தேசிய நூலகத்தின் 3 ~ 5வது தளங்களை National Arts Council கையகப்படுத்தி, அங்கு உலகத் தரமிக்க நாடக அரங்குகளை அமைத்துள்ளது. நவீனத் தமிழ் நாடகங்களைக் கூட இங்குதான் வசதியாக அரங்கேற்றுகிறார்கள். 5வது தளத்தின் இன்னொரு புளாக்கில் Imagination and Possibility Rooms இருக்கின்றன. ஒவ்வொரு அறையிலும் 100 பேர் உட்காரலாம். தேவைப்பட்டால், இரண்டு அறைகளையும் இணைத்துக் கொள்வதும் சாத்தியமே.அதையொட்டி ஒரு அழகான திறந்தவெளித் தோட்டம் உள்ளது. இந்த இரண்டு அறைகளுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கவிஞர் நா.முத்துக்குமார், கவிஞர் மனுஷ்யபுத்திரன், இயக்குனர் அமீர் உட்பட பலரையும் அழைத்து வந்து தமிழ் நிகழ்வுகளை நடத்தும் வாய்ப்பை எனக்கு வழங்கியவை இந்த அறைகள்தான். அந்த திறந்தவெளி தோட்டத்தில், சூடான அல்வாவோடு, இலக்கியமும் பகிர்ந்து கொள்வது இனிப்பான விஷயமாகவே இருந்து வருகிறது. Reference Library -யில் 79,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பலதுறை சார்ந்தும் இருக்கின்றன. விஞ்ஞானம் தொழில்நுட்பம் சார்ந்த 24,000 புத்தகங்களும் இங்கு உண்டு. இந்த reference library-யில் தமிழ்ப் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தபோது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் உறவினரின் புத்தகத்தையும் தற்செயலாக பார்த்ததில், ஒரு தற்செயல் சந்தோஷத்தையும் ஒரு முறை அனுபவித்தேன். பல அரிய, பழையத் தமிழ்ப் புத்தகங்கள் இங்குண்டு. திராவிடர் கழகம் கி.வீரமணி ஒவ்வொருமுறை சிங்கப்பூர் வரும்போதும், இந்த நூலகத்திற்கு வருவது வழக்கம் என்பது செவி வழிச் செய்தி.

11 மற்றும் 12வது தளங்களில் சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 240,000க்கும் மேற்பட்ட பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. 24,000க்கும் மேற்பட்ட மைக்ரோ ·பிலிம்களும் பயன்படுத்தக் கிடக்கின்றன. இவையெல்லாம் இந்த நூலகத்தின் ஒரு சில சிறப்புகள்தான். இவை தவிர, இந்த சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கு இருக்கும் சிறப்புகள் ஏராளமானவை. தமிழுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் தந்திருக்கும் இத்தகைய நவீன நூலகம் உலகில் வேறெங்கும் இல்லை என்று துணிந்து சொல்லலாம். ஒவ்வொரு வருடமும் சிங்கப்பூரில் நடக்கும் எழுத்தாளர் வாரத்தின் பேச்சுகள் பல இந்த நூலகத்தில்தான் நடக்கின்றன. போன வருடம் எஸ்.ராமக்கிருஷ்ணன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். பலரும் ஆர்வமாக அவரது பேச்சைக் கேட்டார்கள். நடிகர் நாசர் போன்றவர்கள் இங்கு உரை நிகழ்த்தியதும் உண்டு. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் தங்களது நூலகளை வெளியிடும் தளமாகவும் இருந்து தமிழ் வளர்க்கிறது சிங்கப்பூர் தேசிய நூலகம்!