Thursday, January 19, 2006

"பைண்டு" செய்யப்பட்ட வந்தியத்தேவன்கள்



"தன் முகம் தான் காணக் கிடைக்காதது மனித சிருஷ்டிக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரும் சாபம்" என்று எனது "அலையில் பார்த்த முகம்" என்ற கவிதை தொகுப்பிற்கான முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார் சிங்கப்பூர் நண்பர் அ.முகமது அலி.

சாயலற்ற சங்கதியென்று ஏதேனும் உண்டோ பூமியில்? சாயலற்றதாக வாழ்க்கை நகர்தல் சாத்தியமா?

சாயல்களின் அடுக்குகளாகவே தெரிகிறது என் எழுத்து.

தேவாரம் நகராட்சியின் மல்லிங்கர் கோயில் தெரு பாட்டி வீட்டில் எழுத்துக்கான முதல் சாயல் விழுந்ததாக சல்லடை ஞாபகம். மாணிக்கவல்லி அல்லது ஒரு மாதின் மர்மம் என்ற மக்கிய புத்தகத்தின் நாயகனோடு நானும் குதிரை வண்டிகளில் நாயகியின் காதலுக்காக அலைந்திருக்கிறேன்.

மாக்ஸிம் கார்க்கியின் "தாய்" வைத்துக்கொடுத்த தேனீர், கழட்டப்படாத கம்பளி ஆடைகளுக்குப்பின் கதகதப்போடு இறங்க, பனி இறங்கிக் கொண்டிருந்த கண்ணாடி ஜன்னல்களின் வழி தொலைவில் கால் புதைய நடப்பவர்களை கவலையோடு பார்த்தது ஞாபகம் இருக்கிறது.

இன்னும்கூடக் கொஞ்சம் முன்னால் போகலாம் போல் தோன்றுகிறது....

பில்லூர் அணைக்கட்டு துவக்கப்பள்ளி மதியங்களில் குமுதம் வாங்கி சித்தப்பா வீடு வரை படித்தபடியே நடந்த காலத்தில், கண்ணதாசனின் "விளக்கு மட்டுமா சிவப்பு" நாயகிக்காக போலீஸ் மீது புகையான கோபமிருந்ததாக ஞாபகம். அந்த கதை பற்றி விவாதிக்க முற்படும்போதெல்லாம் ஆறு வித்தியாசங்களை மட்டுமே பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டதும் உண்டு.

கம்பம் பல்லத்தாக்குகளின் தோட்டவெளிகளில் "பைண்டு" செய்யப்பட்ட வந்தியத்தேவன்களும், திருமாவளவன்களும், சோளச்சோறு, வெங்காயம் சகிதம் வயிறுக்குள் இறங்கி வாளோடு எதிரிகளை துவம்சம் செய்திருக்கிறார்கள்.

சுப்ரமணிய ராஜூவின் "அவன்" அவளை ஒரு ரயில்வே கம்பார்ட்மெண்ட்டில் "பார்வையால் மல்லாத்திய போது" தண்டவாளத்திலிருந்த என் மேல் ரயிலேறியது.

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று ஆசைப்பட்டபடியே, சைடில் காதலையும் கவனித்துக்கொண்ட பாலகுமாரனின் நாயகன்கள் மேல் பொறாமையிருந்தது. என்னைப்போல் ஆசைப்படும் அவர்களுக்கு மட்டும் எப்படி எனக்கில்லாத காதலி கிடைத்து விடுகிறது?

மேகம் கவிழ்ந்த ஒரு சிங்கப்பூர் ஜனவரியின் காலையில், விமான நிலையம் விட்டு வெளிவந்ததும், நான் மேற்சொன்னவர்களையும், இன்ன பிறரையும் யோசித்துக் கொண்டிருந்தேன்...என் தம்பி லக்கேஜை கார் டிக்கியில் வைத்துக் கொண்டிருந்தான்.

எதன் சாயலுமற்ற ஏதோ ஒன்று காற்று வெளியிடை காணத்தவித்து உச்சத்தில் பறந்து கொண்டிருந்தது ஒரு பறவை....