பீர்முகமதின் பெண்குதிரை நாவலுக்கு நான் எழுதியிருந்த விமர்சன வரிகளின் கையெழுத்துப் பிரதியை பார்த்துவிட்டு தொலைபேசியில் கூப்பிட்டு பாரட்டியவர் அந்த நூல் வெளியீட்டு விழா மேடையிலும் உட்கார வைத்தார்.ஒருவரது ஆதி அந்தம் தெரியாமல், எழுத்து மதிப்பீட்டின் அடிப்படையில் ஆதிகுமணன், ரெ.கார்த்திகேசு, பூபாலன் போன்ற மலேசிய இலக்கிய ஜாம்பவான்கள் நிறைந்த ஒரு மேடையில் "ஊர்க்காரப் பையனை" உட்கார வைக்கிற இலக்கிய தைரியம் பீர்முகமதிற்கு மட்டுமே சாத்தியம்.
அதற்குப்பின் நிகழ்ந்த சம்பவங்கள் பீர்முகமதின் மீதான மதிப்பை இன்னும் கூட்டின.
மலேசியாவில் நானும் எனது நண்பர் தண்ணீர்மலையும் நாங்கள் பணியாற்றிய காப்பார் என்ற இடத்தில் ஒரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்தினோம். அதன் சார்பில் நடந்த ஒரு நிகழ்வில் பீர்முகமது வாசகர்களை கடுமையாக தாக்கி பேச, அதன் எதிர்வினை மலேசிய நாழிதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் எதிரொலித்தது. அவரை தாக்கியும், தூக்கியும் வாசகர் கடிதங்கள் வாரம்தோறும் வந்தன.
சுங்கைப்பட்டாணியில் நடந்த கோ.புண்ணியவானின் சிறுகதை நூல் வெளியீட்டில் கலந்து கொள்ள கோலாலம்பூரிலிருந்து கவிஞர் இளமணி, பி.ஆர்.ராஜனுடன் என்னையும் சை.பீர் அவரது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் (அந்த ரகக் காரை வாங்கிய முதல் தமிழ் எழுத்தாளர் இவராகத்தான் இருக்க வேண்டும்) கூட்டிப்போயிருந்த சில நாட்களில் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் அதிக இடைவெளி இல்லாத அவரது இயல்பை இன்னும் கூடுதலாக தெரிந்து கொள்ள முடிந்தது.
புத்தக வெளியீட்டிற்கு முந்திய இரவு உணவு நேரத்தில் சிறுகதை எழுத்தளர் எம்.ஏ.இளஞ்செல்வனும், சை.பீரும் விடிய விடிய தங்களது இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, நாங்கள் ரசித்துக் கொண்டிருக்க, உணவு பறிமாறிய சீனப் பெண்ணோ புரியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள். பேச்சு முடிந்ததும் இளஞ்செல்வனும் பீர்முகமதும் போட்டி போட்டுக் கொண்டு அந்தச் சீனப் பெண்ணுக்கு கைரேகை ஜோசியம் பார்த்ததால், அவளது சாபத்திலிருந்து மற்ற நாங்களும் ஒரு வழியாக தப்பித்தோம். குழந்தை மனம் கொண்ட, ஒப்பனைகளற்ற இளஞ்செல்வனின் திடீர் மரணம் பெரிய சோகம். மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் உந்துகோலாக இருந்த ஆதிகுமணனின் மறைவு இன்னொரு சோகம்.
சிங்கப்பூரிலிருந்து மலேசியா போயிருந்த ஒரு பயணத்தில் எனது பாஸ்போர்ட் தொலைந்துபோக, புது பாஸ்போர்டிற்காக என்னோடு சை.பீரும் அலைந்தது நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வுதரும் இலக்கியம் சாராத தனிமனித அனுபவம்
வெண்மணல் சிறுகதைத் தொகுப்பிற்குப் பிறகு இதயம் தொடும் சிறுகதைகளை பீர்முகமது படைக்கவில்லை என்பது என்னைப் போன்ற தூரத்து பார்வையாளர்களின் ஆதங்கம். கட்டுரைகள், கவிதைகள், நெடுங்கதைகள் என அவரது பாதை வேறுதிசைகளில் விரிந்தது அதற்கான ஆதார காரணமாக இருக்கக்கூடும். பீர்முகமது என்ற இலக்கிய ஒருங்கிணைப்பாளர், பீர்முகமது என்ற எழுத்தாளரை பின்னுக்குத் தள்ள நேர்ந்தது மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு நிகழ்ந்த வரமா சாபமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்.
ஒரு சின்னப்பையன் மாதிரி தேடித் தேடி சை.பீர்முகமது தன்னை புதுப்பித்துக் கொண்டிருப்பது பலரும் வியக்கும் விஷயம். அவர் மைக் பிடித்துவிட்டால் குளிர்பதனம் செய்யப்பட்ட அறைகள் கூட சூடாகிப் போவதை பலமுறை பார்த்திருக்கிறேன். அது மலேசியத் தமிழ் இலக்கியம், உலகத்தமிழ் இலக்கியத்திலிருந்து எந்த விதத்திலும் பின்தங்கி விடக்கூடாது என தகிக்கும் மனமொன்றின் வெளிப்பாடென்பதை நெருங்கியவர்கள் அறிவார்கள்.
தங்களது எழுத்திற்கான அங்கீகாரம் பேட்டிகளின் பரிசுதானென்று நினைக்கும் மனோபாவமுள்ள ஒரு மூத்த எழுத்துத் தலைமுறை, பரிசுகளைப்பற்றி கவலைப்படாத இளைய தலைமுறை மலேசிய எழுத்துகளுக்கு மெல்ல மெல்ல வழிவிட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் - ஜாசின் தேவராஜன், பா.அ.சிவம், ம.நவின் போன்ற இளையமுறையின் கைகளில், சை.பீர்முகமது, ரெ.கார்த்திகேசு போன்றவர்கள் முன்னெடுத்துச் சென்ற மலேசியத்தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பத்திரமாகவே இருக்கிறது என்பதை அருகிருந்து பார்ப்பவர்களால் உணர முடிகிறது