Saturday, February 11, 2006

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் கவிஞர் நா.முத்துக்குமார்



"பட்டாம்பூச்சி விற்பவன்" என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலக இதயங்களை வாங்கியவர் கவிஞர் நா.முத்துக்குமார்.

வாழ்க்கையை மனசுக்கு மிக அருகில் கொண்டுவந்து நிறுத்தி, நேசிக்கச் செய்யும் படைப்புகளைத் தரும் நேர்த்தி தெரிந்தவராக நாம் இவரை அடையாளம் கண்கிறோம்.

கவியரசு வைரமுத்துவிற்கு அப்புறம் வந்த திரைப்படப் பாடலாசிரியர்களில், எழுதுகிற பாடலெல்லாம் கவிதையாக இருக்க வேண்டுமென்ற கவனம் இவரிடம் அதிகம் இருப்பதைப் பார்க்கலாம்.

சிங்கப்பூரின் ஒரே தமிழ் வானொலியான ஒலி 96.8, 2004,2005ம் ஆண்டுகளின் சிறந்த பாடல்களாக இவரது பாடல்களை தேர்ந்தெடுத்திருப்பது ( மக்கள் வாக்களிப்பின் மூலம் ) அதற்கு அத்தாட்சி.

இம்மாத இறுதியில் சிங்கப்பூர் வருகிறார் நா.முத்துக்குமார். இவரது கவிதை முக அறிமுகத்திற்கு & முதல் அறிமுகத்திற்கு ஆவலோடு காத்திருக்கிறது சிங்கப்பூர்!

Friday, February 10, 2006

வெற்று வெளி

நேற்று மரத்தடியில்
நிழல் மட்டுமே
நின்றது

அம்மர நிழலில்

நீயும் ஓர்நாள்
நின்றிருந்ததாய்
ஒரு கவிதை

ராஜகுமாரக் கனவுகளில்
மெல்ல நீ அழிந்தததாயும்
ஒரு கவிதை

இரண்டு கவிதையிலும்
எழுதியவன் பெயரில்லை

இருந்ததே தெரியாது
அழிந்ததை அறிவேனா?

இன்றும்
அம்மரத்தடியில்
நிற்கிறது நிழல் மட்டும்!

Tuesday, February 07, 2006

எனக்கான ஜன்னல்கள்!




என் முகம் பார்த்து
ஜன்னல்
சாத்தலாம் நீ

உனக்குள் திறந்துவிடும்
எனக்கான
ஜன்னல்கள்!

Monday, February 06, 2006

ஒரு தமிழ் நிகழ்வு



















ஒரு ரயில் வண்டி பயணத்தின்
அவன் முதுகும், அவளின் ஒரு ஓர முகமும்
கதவொட்டிய கண்ணாடி தடுப்பிற்குப் பின்

அமர்ந்து
நின்று
ஓரம் சாய்ந்து
இன்னும் பல நிலைகளில்
பல இன முத்தங்களைப்
பார்க்க வாய்க்கிறது
ரயில் பயணத்தில்

நாளிதழ் பொருளாதாரம் வருடிய
குறும் பை விலக்கி தொலைபேசிய
அவரவர் வாழ்க்கை மத்தியில்

நான் பார்க்க அவள் விழியில்
துளிர்க்கிறது ஒரு துளி நாணம்
நொடியில் நாகரிக விழிகள்
அவள் விலக்கி விளம்பரம் பார்க்க

அந்த ரயில் வண்டியின்
சீரிய ஓட்டத்திற்கிடையில்
நிகழ்ந்து கொண்டிருந்தது
ஒரு 2006ன் தமிழ் முத்தம்!



பிரியங்கா சோப்ராவிடம் ஏன் பேசவில்லை?


சில மாதங்களுக்கு முன் ஒரு நாள்.

சிங்கப்பூரில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் தேசிய நூலகத்திற்கு ஒரு வேலையாகப் போக வேண்டியிருந்தது. போயிருந்தேன்.

அன்று அதன் நுழைவாயிலில் வழக்கத்துக்கு மாறான பரபரப்பு...கூட்டம். ஒரு ராட்சசக் கிரேனும், ரி·ளெட்டர்களும், டிராலிகளும், கேமராக்களும், தொப்பையில் தொப்பி ஆசாமிகளும்...அட, சினிமா ஷ¥ட்டிங்.


நான் சினிமா ஷ¥ட்டிங் பார்த்ததில்லை. அல்லது அதிகம் பார்த்ததில்லை. வந்த வேலையை கொஞ்சம் ஒத்தி வைத்து, ஒரு இந்திய ஆர்வத்தோடு என்ன நடக்குது என்று பார்த்திருந்தேன். என்னை மாதிரியே, சீன, மலாய் ஆண் பெண்களும் பார்த்திருக்க... விசாரித்தேன்.

இந்திப்படமாம். ஹீரோ - ஹிர்த்திக் ரோஷன். ஹீரோயின் - பிரியங்கா சோப்ரா.

வெகு சூடான அந்த தினத்தில் கோட் சூட்டுடன் ஒரு பியானோவை பிரித்து ஹிர்த்திக் மேய்ந்து கொண்டிருக்க, அவரோடு கன்னம் உரசினார் பிரியங்கா. ஒல்லியாக, உயரமாக இருந்தார்.

ஷாட் முடிந்ததும், என் பக்கமாக நடந்து வந்து, ஒரு 5 அடி தூரத்தில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டார். சுற்றி யாருமே இல்லை. எல்லோரும் என்னைப் போலவே அவரை தொலைவில் நின்று பார்த்திருந்தார்களே தவிர, நெருங்கி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்தத் தனிமை பிரியங்காவிற்கே சங்கடமாக இருந்திருக்க வேண்டும். சுற்றி பார்வையை ஓட விட்டார்.

எனக்குள் ஒரு குரல் " அட போப்பா... போய் பேசு" என்கிறது. ஆனால் கால் நகர்ந்தால்தானே? தற்செயலாய் கொண்டு போயிருந்த டிஜிட்டல் கேமராவில் பிரியங்காவை ஒரு படம் கிளிக்கினேன். ·பிளாஷ் வெளிச்சத்திற்கு திரும்பிப் பார்த்தார்.அதற்குள் கைத் தொலைபேசி கிணுகிணுக்க... "ஹலோ" என்று சொல்லி, தொலை பேசியவரிடம் பிரகாசமானார்.அந்தப் பேச்சு 20 நிமிடத்துக்கும் மேல் நீநீண்டது...

எனக்கு என் வேலை காத்திருந்ததது.தொலைவில், பியானோவை தடவிக்கொண்டிருந்த ஹிர்த்திக்கை இன்னொரு முறை பார்த்து விட்டு, நடக்கத் துவங்கினேன்.

ஆனாலும், அன்றைய தின தூக்கத்திற்கு முன், நான் ஏன் பிரியங்காவிடம் குறைந்தபட்சம் ஒரு ஹாயாவது சொல்லியிருக்கக் கூடாது என்ற கேள்வி மனசுக்குள் எழுந்தது. அதானே... ஏன் சொல்லியிருக்கக் கூடாது? எது என்னைத்தடுத்தது ?

இப்படி யோசித்தபடி கொஞ்சநேரத்தில் தூங்கிவிட்டேன்.
இன்னொரு நாள்...இன்னொரு சம்பவம்...ஞாபக அடுக்குகளில் இன்னொரு பக்கம்!

Sunday, February 05, 2006

பாமரர்கள் பேச்சு


புரிதலைப் பற்றி
பேசலாம் வா

புரிதல் ஒரு செயல்..
இதில் பேச என்ன இருக்கிறது?

எல்லாச் செயலும்
புரிந்து விடுகிறதா என்ன?

புரிதல் பற்றி ஒரு தேடல்
தேவையெனத்தானே
சில விஷயங்கள்
புரியாமலிருக்கின்றன...

புரியக்கூடிய சங்கதிகளை
புரியாமல் ஆக்குவது
அப்படியென்ன
அவசியம்?

புரியாதவற்றை
புரிய முனைவதில்
அப்படியென்ன
சோம்பல்?

இது வேக உலகம்
இங்கு தேடலுக்கு நேரமில்லை.

இது தேடல் உலகம்...
பெண்ணை
பொண்ணை
சாமியிடம் ஆசியை
ஜோதிடத்தில் வாழ்க்கையைத்
தேடியபடிதானே இருக்கிறது?

நீ பேசுவது புரியவில்லை

சரி..ஒப்புக் கொள்கிறேன்..
புரிதல் பற்றி
பேசலாம் வா