Saturday, January 10, 2009

தாத்தாக்கள் எப்போதுமே போற்றுதலுக்குரியவர்கள்! (நாலு வார்த்தை-037)

பலரையும் போல், தாத்தாவை எப்போதாவதுதான் நினைக்க முடிகிறது. அந்த நினைப்பு, குதூகலிக்கும் சிரிப்புடன் கூடிய அவரது முகத்தைத்தான் முதலில் கொண்டு வரும். உலகின் கவலைகள் மற்றும் களங்கங்களற்ற வெகுளித்தனமான சிரிப்பு அவருடையது. 90 வயதுக்கு மேல், இறக்கும் காலம்வரையிலும் அந்த சிரிப்பை அவர் தக்க வைத்துக் கொண்டார். அந்த வெகுளித்தனமான, கபடமற்ற குணத்தை ஒரு Charector Flaw-வாகப் பார்த்தவர்களும் உண்டு. அதில் முக்கியமான இருவர் - என்னுடை அப்பா மற்றும் சித்தப்பா. அப்பா நுணுக்கமான வார்த்தைகளால், சிறு பார்வைகளால் அதை வெளிப்படுத்துவார். சித்தப்பா எப்போதும் கோபத்தைக் கையிலெடுப்பார். தாத்தாவினுடைய களங்கமற்ற தன்மை கேள்விக்குள்ளாகும் போதெல்லாம் அவரிடமிருந்து வார்த்தைகள் கோபமாக வெளிப்படும். "ஏம்பா...ஏய்...ஏம்பா இப்படி இருக்க?" என்பார். "யார்டா இவன்... எப்படியிருக்கேன்?" என்ற பதில் கேள்வி தாத்தாவிடமிருந்து வெளிப்படும். அடுத்த நிமிடம், சிறு குழந்தைகளிடம் கிண்டலும், கேலியுமாக விளையாடத் துவங்கி விடுவார். சின்னக் குழந்தைகளிடம் கிண்டலும் கேலியுமாக விளையாடுவது 90 வயதுக்கேற்ற செயலல்ல என்பது சித்தப்பாவின் நினைப்பு. தாத்தா எப்போதுமே தன் வயதை உணர்ந்ததில்லை. அப்படி உணர்ந்திருந்தால், 90 வயதுக்கும் மேல்கூட வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தோட்டத்து வேலைகளைச் செய்திருக்கவும் மாட்டார்; குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடி இருந்திருக்கவும் மாட்டார். முதுமைக் காலம்வரை தன்னிலிருக்கும் அப்பாவித்தனத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு மனிதனை அனுமதிப்பதில்லை இந்தச் சமூகம். அந்த அப்பாவித்தனத்தைக் கொலை செய்ய, வார்த்தை வாள்களோடு ஆவேசமாக அலைந்து கொண்டிருக்கிறது. ஆனால் எந்த வாளாலும் என் தாத்தாவின் வெள்ளேந்தித்தனத்தை அவரது மரணம் வரைக்கும் வெட்ட முடிந்ததில்லை.

விடுதியில் படிக்கும் தனிமை - சமயங்களில் சுவாரஸ்யமானது; சமயங்களில் கொடுமையானது. சகதோழனை உறவினர் பார்க்க வரும் ஞாயிற்றுக் கிழமைகள் நம் மனதுக்குள் துயரத்தைக் கொண்டு வந்து விடும். தூரத்து மைதானத்தில் விளையாடிக் கொண்டோ, வேடிக்கை பார்த்துக் கொண்டோ இருக்கையில், குழாய் ரேடியோவில் ஒலிக்கும், 'ஏம்மா, கருவாட்டு கூடை முன்னாடி போ' என்ற சிட்டுக்குருவிப் படப் பாடல் மனதுக்குள் இறங்கி, சோகக்கூடு கட்டிக் கொள்ளும். அப்பா, அப்பா, சகோதர, சகோதரிகளின் நினைவு கண்ணீராக வடிவாகி விடும். ராயப்பன்பட்டி விடுதியில் தங்கி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இது எனக்கு நேர்ந்தது. அடிக்கடி என்னைத் தேடி வந்து ஆறுதல் தருவது தாத்தாதான். அவரது வருகை எப்போது நிகழும் என்றே கணிக்க முடியாது. திடீரென்று பிரசன்னமாவார். என் சகதோழர்கள் பலருக்கும் அவர் பரிட்சயம். ஓடி வந்து "உன் தாத்தா வந்திருக்கார்" என்று சொல்வார்கள். 9 மணிக்கு மேல் பஸ் ஓடாத அந்தக் காலத்தில் அவர் இரவு 11 மணிக்கு விடுதிக்குள் வந்து சேருவார். நாங்கள் தூங்கிப் போயிருப்போம். நான் உறங்கும் அந்த பெரிய ஹாலின் நுழைவாயிலில் நின்று 'மணி...எங்கப்பா இருக்க' என்று குரல் எழுப்புவார். அங்கு படுத்திருக்கும் அத்தனை பேரும் விழித்துக் கொள்வார்கள். நான் கண்ணைக் கசக்கியபடி எழுந்துபோய் அவரிடம் பேசுவேன்.' எப்படி தாத்தா வந்தே...கடைசி பஸ் 9 மணிக்கே போயிருக்குமே" என்பேன்."உத்தமபாளையத்திலிருந்து நடந்தே வந்தேன்பா" என்பார். மனசுக்குள் பொசுக்கென்று கண்ணீர் பொங்கி விடும். 'சரி தாத்தா...இனிமேல் எப்படி ஊருக்கு போறது... இங்கேயே படுத்துத் தூங்கிட்டு. காலையில கிளம்பிப் போ." என்று சொல்வேன். "அடப் போடா புள்ளாண்டான்... நாலே எட்டுல ஊருக்குப் போயிடுவேன்" என்று சொல்லி, என் கையில் முருக்கு, அதிரசம் என்று எதைவாவது திணித்து விட்டு, விருவிருவென்று கிளம்பிப் போய் விடுவார். அர்த்த ராத்திரியில் நானும் என் நண்பர்களும் அதிரசத்தை தின்று கொண்டிருப்போம். தாத்தாவின் அந்த வெள்ளேந்தியான, முரட்டுத்தனமான பாசத்தைப் பற்றி எந்தச் சூழலிலும், யாரிடமும் நான் வெட்கப்பட்டதில்லை. எப்படியிருந்தாலும், Thats my thaththa!

அவர் அடிப்படையில் விவசாயி. நிலம் அவருக்குத் தாய். பூமிமாதா. படியளப்பவள். ஆடு, மாடுகளைக் கூட அவர், 'வாடி...இந்தப் புல்லை சாப்பிடு.' என்றும், சாப்பிடாவிட்டால், 'பாருடா பேராண்டி... சாப்பிடாம அடம் பிடிக்கிறதை... ரொம்பக் கோபக்காரி இவ' என்று பெண்ணாக உருவகித்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். வெள்ளைக்காரன் ஆட்சியில் 'குற்றப்பரம்பரையினர்' கொடுமைக்கு உள்ளான காலத்திலும் அவரை வெள்ளைக்காரன் மரியாதையோடு நடத்தியதற்குக் காரணமாயிருந்த நேர்மையைப் பற்றி அவருக்குள் எப்போதும் இருக்கும் பெருமிதத்தையும் ஆர்வத்தோடு பார்த்திருக்கிறேன். அவருக்குத் தெரிந்ததெல்லாம் நேர்மையாக இருப்பது, கடுமையாக உழைப்பது, தன்வசமிருந்த வெள்ளேந்தித் தனத்தைக் சேதமில்லாமல் காத்திருப்பது மட்டும்தான். எங்கள் வயல், பெரியாற்றின் கரையோரம் இருக்கிறது. மழைக்காலத்தில் மொத்த வயலும், வெள்ளத்தில் நெல் மூழ்கிவிடும். மணல் நிரம்பி விடும். ஆனால், மறுபடியும் அந்த நிலத்தை சீராக்குவதிலோ, மறுபடியும் நெல் விதைப்பதிலோ, மறுபடியும் ஒரு வெள்ளம் வந்தாலும் சோர்ந்து போகாமல் இருப்பதிலோ, தாத்தா, கவலை கொண்டு கண்டத்தில்லை. "உங்க தாத்தன் ஒரே ஆள் போதும். மம்பட்டிய எடுத்தா மண்ணைப் போட்டு ஆத்தையே மூடீடுவாரு." என்று அவர் வயதையொத்த தோழர்கள் கேலி பேசும் போது அவரிடமிருந்து பளிச்சென்று ஒரு புன்னகைதான் வெளிப்படும். விளக்கற்ற இரவுகளில் அவர் தோட்டப் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும்போது பாம்புகள் கடந்து போகும். நான் அலறுவேன். "பயப்படாதப்ப... நாகராஜன்...நம்ம பய.. ஒண்ணும் செய்ய மாட்டன்.' என்பார். நாகராஜன் நம்ம பயலாகத்தான் இருந்திருக்க வேண்டும். 90 வயதுவரை அந்தத் தோட்டதிற்குள் சுற்றித் திரிந்த அவரை அவன் ஒன்றுமே செய்ததில்லையே...

என் தந்தை சென்னையில் பணியாற்றிய காலத்தில், தாத்தா திடீரென்று வருவார்; ஓரிரு நாள் இருந்து விட்டு, திடீரென்று கிராமத்திற்கேத் திரும்பிப் போய் விடுவார்."அவரால தோட்டம், தொரவை விட்டு சும்மா இருக்க முடியாதுப்பா." என்பார் என் தந்தை. தாத்தாவால் 90 வயதுக்கு மேல் கூட சும்மா இருக்க முடிந்ததில்லை. எந்த மகன் வீட்டிலும் ஓய்வு கொண்டு தங்குவதற்கு அவரது மனம் அனுமதித்ததில்லை."மருமகள்கள் எல்லாம் நான் தோள்ல தூக்கிப் போட்டு வளத்த சொந்தக்காரப் பொண்ணுகதான். என்னை உள்ளங்கையில வச்சு தாங்குவாங்கதான். ஆனால்..." என்று சொல்லி நிறுத்திக் கொள்வார் தாத்தா. அந்த ஆனாலுக்குப் பிறகு வார்த்தைகள் எப்போதும் தொடர்ந்ததில்லை. அவரது உலகத்தில் கலெக்டர்களும், வெள்ளைக்காரர்களும்தான் மிக உயர்ந்தவர்கள் - சாமி கூட அதற்கு அடுத்துதான். யாராவது ஒரு பேரனைப் புகழ வேண்டுமென்றால், "அவன் யாரு...சும்மா கலெக்டர் மாதிரியில்ல" என்றுதான் சொல்லுவார். இல்லையென்றால், “சும்மா.. வெள்ளக்காரன் மாதிரி..." பலரது தாத்தாக்களைப் போலவே, இன்று எனது தாத்தாவும் உயிருடன் இல்லை. அவரது நினைவுகள் மட்டுமே அவ்வப்போது தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. கூளையனூரில் மருத்துவனை கட்ட அவர் இலவசமாகக் கொடுத்த நிலமும், அந்த மருத்துவனையில் இருக்கும் அவர் பெயர் பதித்த கல்லும் உள்ளூர் மக்கள் மருத்துவச் சிகிச்சைக்காக வரும்போது கண்ணில் பட்டபடி இருக்கின்றன. அவரற்ற தோட்டத்தில் நாகராஜன்கள் நடமாடி மக்களிடம் அடிபட்டு இறந்து கொண்டிருக்கிறார்கள். அவரைப் பற்றிய பல விஷயங்கள் மறைந்து விட்டன. இருப்பினும், இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது - கடைசிவரை அவரோடு சேர்ந்திருந்த அந்த வெள்ளேந்தியான வெள்ளை மனம்!

Wednesday, January 07, 2009

நம்பிக்கையளிக்கும் தமிழ் இசையுலகம் 2009 (நாலு வார்த்தை-036)

சென்ற வருடத்தில் சிறந்ததாகக் 'கண்களிரண்டால்' பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் சிங்கப்பூர் ஒலி 96.8ன் நேயர்கள். இன்னும் பல விருதுகளைப் பெறப்போகும் 'சுப்ரமணியபுரம்' படத்தின் ஒரு அங்கமான இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர், புதியவரான ஜேம்ஸ் வசந்தன். தொலைக்காட்சிப் படைப்பாளராகத் தன்னை நிருபித்துவிட்ட ஜேம்ஸ், இந்தப் படத்தின் மூலம் மக்கள் ரசனையறிந்த இசையமைப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல இசையமைப்பாளர்கள் புதிதாக வருகிறார்கள்; போகிறார்கள். அவர்களுள் ஒரு சிலர் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள். அந்த ஒரு சிலரில் ஜேம்ஸ் வசந்தனும் இடம் பிடிப்பார் என்று முனைந்து சொல்வதற்கு, மீடியா உலகில் அவர் பெற்றிருக்கும் பல வருட அனுபவமும் காரணமாகிறது. இப்போது வரும் இசையமைப்பாளர்களும் மெதுவாக அடியெடுத்து வைப்பதில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு ஒரு சில படங்கள் என்பதே அவர்கள் பின்பற்றும் தாரக மந்திரம். ஏ.ஆர்.ரஷ்மான் தொடங்கி வைத்த பாணி அது. Quality movies, rather than quantity என்பது திரையுலகின் ஏறக்குறைய நடைமுறையாக உள்ளது. ஒரு காலத்தில் வருடத்திற்கு 10, 15 படங்கள் நடித்துக் கொண்டிருந்த கமல் ரஜினி உட்பட பலரும் இப்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்று நடிக்கத் துவங்கியுள்ளார்கள்.'நான் கடவுள்' ஆர்யாவைக் கொஞ்ச நாளாக ஆளையேக் காணவில்லை.நிற்க.

என்னதான் மெலோடிப் பாடல்கள் மக்கள் மனதில் முதல் இடத்தைப் பிடித்தாலும், குத்துப் பாடல்களே 'நாக்க முக்க, நாக்க முக்க' என்று மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கின்றன. ஒரு காலத்தில் 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே' என்று கும்மி பாடிய குழந்தைகள், இக்காலப் பள்ளி விழாக்களில், அவிழும் ஆடையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அரக்கப் பரக்க விழித்துக் கொண்டு ' நாக்க முக்க, நாக்க முக்க' என்று முக்குகிறார்கள். இது கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாத காலமாற்றம். 'தோழியா, என் காதலியா' என்று மெலடி போட்டாலும், விஜய் ஆண்டணி என்றதும், 'நாக்க முக்க'தான் ஞாபகம் வருகிறது. சில வருடங்களாகத் தரமான பாடல்களை வழங்கி வந்த விஜய் ஆண்டணி 2008ல்தான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார். பல வருடங்கள் நிலைத்து நிற்பதற்கான அடிப்படை இருக்கிறது அவரிடம். இவரது வரிசையில் தேவிஸ்ரீ பிரசாத்தையும் இணைத்துக் கொள்ளலாம். மிஷ்கினுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் சுந்தர் பாபு, 2008ல் மறுபடியும் has hit the bulls eye with 'கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்ன'. சித்திரம் பேசுதடி வெற்றியைத் தொடர்ந்து பெரிதாக ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரது ஓட்டம், மெதுவோட்டமாக இருப்பதன் காரணம் தெரியவில்லை.

வித்யாசாகரின் வாழ்க்கை வரலாற்றில் 2008 சுமாரான வருடம் என்றே குறிப்பிடப்படும். நல்ல இசைக்கலைஞன். நல்ல தமிழ்ப் பாடல்களைக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வமுள்ள கலைஞன். வித்யாசாகர், பரத்வாஜ் போன்ரவர்கள் நிலைத்திருப்பதும், வெற்றிகரமானவர்களாக இருப்பதும் முக்கியம் - நல்ல இசைக்கும், நல்ல தமிழுக்கும் இவர்களிடம் குறைந்தபட்ச உத்திரவாதம் உண்டு. தமிழ்த் திரையுலகம் என்ற எல்லையை விட்டு ஏ.ஆர்.ரஹ்மான் வெளியேறி வெகு நாட்களாகி விட்டன. அவ்வப்போது வருகிறார்; போகிறார். சக்கரக்கட்டி போன்ற படங்கள் அவரது இசையில் வந்து போயின. ஆனால், மக்களின் நாடி நரம்புகளைத் துடிதுடிக்க வைக்கும் மெல்லிசையோ அல்லது வன்னிசையோ அவரது இசைக் கூடத்தின் இடுக்குகளின் வழி வழிந்துவிடவில்லை. சிவாஜியின் வெற்றி மட்டுமே கொஞ்சம்போல இனிப்பு தடவி விட்டுப் போனது நாக்கில். ஏதோ ஒரு இலக்கை நோக்கித் தளராமல் முன்னேறி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. கொஞ்சம் கொஞ்சமாக தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு, சீக்கிரமே அவர் ஒரு இசைச்சிற்பமாக நம் முன் நிற்கக் கூடும். சமீபத்தியச் சிலம்பாட்டம் வரை அவரது ஆட்டம் சிறப்பானதாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "அடுத்து என்ன மாதிரியான இசை பிரபலமாகப் போகிறது என்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பேன்" என்று குறிப்பிட்டார் யுவன். அந்த கவனம், அந்த வேகம், சில வருடங்களின் ஓட்டத்தில் அவரை legend என்ற நிலைக்கு உயர்த்திவிடும் வாய்ப்பிருக்கிறது. கடந்த சில வருடங்களாக யுவனின் இசைப் பயணம் ஆர்பாட்டமற்ற நதி மாதிரி ஓடிக் கொண்டிருப்பதை உற்றுப் பார்ப்பவர்களால் உணர முடியும்.

2008ன் நம்பர் 1 யாரென்றால், பல விரல்களும் ஹாரிஸ் ஜெயராஜை நோக்கி நீள்கின்றன. சமீபத்திய 'கா·பி வித் அனு' நிகழ்ச்சியில் ஹாரிஸ் ஜெயராஜைப் பாராட்டித் தள்ளினார் 'சொல்லாமலே' சசி. FM ரேடியோக்களில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன ஹாரிஸின் பாடல்கள் என்று சொன்னார். அதுவே பலரது கருத்தாகவும் இருக்கிறது. தரத்தில் எந்த விதத்திலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத பாடல்களாக இருக்கின்றன ஹாரிஸின் பாடல்கள். மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களில் 25% தரமானவை என்றால், ஹாரிஸின் பாடல்கள் 80% தரமானவையாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னால் வந்த அவரது பாடல்களை இன்று கேட்டாலும், அவை ஒரு பூவின் புத்துணர்ச்சியோடு நம்மை நோக்கிப் புன்னக்கைக்கின்றன. எந்தப் பாடலிலும், பாடல் வரிகளை மீறி ஒலிப்பதில்லை இசை. வரிகள் பயணிக்கும் வாகனமாகும் இசை, எப்போதுமே மூழ்கடிக்கும் வெள்ளமாவதில்லை. இரைச்சலோடு ஒலிப்பதில்லை இசைக் கருவிகள் ; இனிமையோடும், அர்த்தங்களோடும் அழுத்தமாக மட்டுமே ஒலிக்கின்றன. அந்த அழுத்தம் நம் மனதில் அழிக்க முடியாத வரிகளாகப் பதிந்தும் விடுகின்றன. ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த கொடை. இனி வரும் வருடங்களும் அதை உண்மையென்று நிருபிக்கும். தமிழ்த் திரையுலகின் இசைக்காலம் 2009ல் எப்படி இருக்கும் என்ற யோசனையே பரவசமளிக்கிறது... கூடவே, நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கிறது!

Tuesday, January 06, 2009

நான் தொலைக்காட்சி நடிகனான கதை (நாலு வார்த்தை-035)

ஒரு நாள் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன். டபுள் டெக்கர் பஸ். அதன் மேல் தளத்தில் உட்கார்ந்து கொண்டு, ஓரமாக நகர்ந்து கொண்டிருந்த கட்டிடங்களைப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது நண்பர் முகமது அலியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. "தொலைக்காட்சி நாடகத்தில் ஒரு சின்ன வேடம் இருக்கு. நடிக்கிறீங்களா?"என்றார். அதைப்பற்றி அவர் ஏற்கனவே பேசி இருந்ததால் அது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. பெருமாள் கோயில் கோவிந்தசாமி பிள்ளை கல்யாண மண்டபத்தில் நடந்த சை.பீர்முகம்மதின் 'திசைகள் நோக்கிய பயணம்' நூல் வெளியீட்டின்போது அதைப் பற்றி என்னிடம் சொன்னார். நான் ஏதோ ஜோக்குக்குத்தான் சொல்கிறார் என்று நினைத்துக்கொண்டு 'நாங்க மதுரக்காரங்கள்ல... நடிச்சிருவோம்ல' என்று வடிவேலு பாணியில் சொல்லி விட்டேன். 'சரி, பார்ப்போம்' என்றார். உண்மையாகவே அழைத்து விட்டார்.'சரி, நாடகத்தில் என் கேரக்டர் எப்படி....' என்று இழுத்தேன்.'அதெல்லாம் நல்ல கேரக்டர்தான். கவலைப்படாதீங்க' என்றார்.'இல்லை...என் இமேஜைப் பாதிக்கிற மாதிரி...' என்று இன்னொரு இழுவை. பட்டென்று 'நீங்க என்ன எம்.ஜி.ஆரா?' என்ற மறுகேள்வி அவரிடமிருந்து வந்தது. நாம் பதில் சொல்வதற்குள் 'கவலைப்படாதீங்க...நல்ல கேரக்டர்தான். மீதி விஷயங்களை டைரக்டர் குமரன் பேசுவார்' என்றார். குமரன் தமிழ்த்திரைப்பட அனுபவமுள்ளவர். மிஷ்கின், சசி போன்றவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். பேசினார்.' சின்ன வேடம்தான் சார். ஒரு 5 வயது குழந்தைக்கு அப்பா. உங்களுக்கு மனைவி வேடத்தில் சோனியா நடிக்கிறாங்க' என்றார். அட... முதல்முறையா நடிக்கும்போதே நமக்கு ஒரு ஹீரோயினா?

Peace Centre-ல் இருக்கும் அலுவலகத்துக்கு அழைத்து ஒரு பக்க வசனத்தைக் கொடுத்தார்கள். ஒரு சீனில் மட்டும்தான் டயலாக். அதுவும் கொஞ்சம் புலம்பல், கொஞ்சம் மனைவியிடம் எரிச்சல் படுவது மாதிரி சீன். அடச்சே... அவ்வளவுதானா...'இல்ல சார்...இன்னும் மூணு சீன் இருக்கு. ஒரு பர்த்டே சீன், ஒரு தீபாவளி சீன், கடைசியில கொஞ்சம் புறாவெல்லாம் செத்துக் கிடக்கும். அதைப்பார்த்து அதிர்ச்சியடையிற மாதிரி இன்னொரு சீன்.ஆனால், அதிலெல்லாம் ரியாக்ஷன் மட்டும் காட்டினால் போதும் சார்' என்றார் இயக்குனர். என் வேடம் எப்படிப்பட்டது என்று புரிந்து விட்டது. பத்தோட பதினொன்னு... அத்தோட இது ஒண்ணு!. ஹீரோயின் சோனியாவும் வந்திருந்தார். அவரைப் பார்க்கிறபோது, என்னுடைய சகோதரியைப் பார்க்கிறமாதிரி இருந்தது. ஆனால் அதை அவரிடம் சொல்லவில்லை. சொன்னா, நடிக்கும்போது கெமிஸ்டரி workout ஆகாதில்ல? 'ஞாயிற்றுக்கிழமை ஷ¥ட்டிங் இருக்கு சார்..காலையில உங்க குழந்தையோட பர்த்டே பார்ட்டி சீன். அதுக்கு கொஞ்சம் ரிச்சா டிரஸ் போட்டுக்கங்க. நீங்க டயலாக் பேசுற சீனுக்கு கொஞ்சம் கேஷ¤வல் டிரெஸ் ஓகே..." என்று சொல்லியனுப்பினார்கள். அந்த ஒரு பக்க டயலாக்கை மனப்பாடம் செய்யவே பெரும்பாடாக இருந்தது. வயசாகிடுச்சில்ல... அந்த டிரஸா, இந்த டிரெஸான்னு யோசிச்சு, யோசிச்சு...ஒரு வழியா நாலைந்து செட் துணிமணிகளை எடுத்துத் திணித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை ஷ¥ட்டிங் நடக்கிற இடத்துக்குப் போய் சேர்ந்தேன்.

நான் போனபோது பர்த்டேக்கு ஏற்றவாறு அந்த இடத்தை அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். நானும் பலூனெல்லாம் ஒட்டினேன். நிறைய குழந்தைகள் தம் அம்மாக்களோடும், சிலர் அப்பாக்களோடும் வந்திருந்தார்கள். எல்லாம் பர்த்டே சீனில் நடிக்கதான். கேக் வெட்டும்போது என் அப்பாவாக நடிப்பவர் ஏதோ சொல்ல, மனைவி என்னை முறைக்க, நான் குற்ற உணர்வோடு தலைகுனிய வேண்டுமென்றார் Executive Producer ஆன முகமது அலி. பதட்டத்தோடு அப்படியே நடித்தேன். ஷாட் முடிந்தது. அடுத்த ஷாட்டிற்குப் போய் விட்டார்கள். நான் ஒழுங்க நடித்தேனா இல்லையா என்று சொல்ல ஆளில்லை. மெதுவாக அலியிடம் 'நான் ஒழுங்கா நடிச்சேனா?' என்று கேட்டேன்.'பிரமாதமா நடிச்சீங்க. குற்ற உணர்ச்சி கொஞ்சம் அதிகமோ?' என்றார் நக்கலாக. 'அவ்வ்வ்வ்' என்று வடிவேலு மாதிரி அழனும்போல இருந்தது. யோவ்... ஏன்யா இப்படித் தாளிக்கிறீங்க... அதற்கப்புறம் அந்த சீன், இந்த சீன், நொந்த சீன், வெந்த சீன் என்று ஏதேதோ சீன்கள் எடுத்துக் கொண்டே இருந்தார்கள். நான் நடிக்க வேண்டிய சீனை மட்டும் எடுக்கிற மாதிரி அறிகுறியே காணோம். மற்றவர்களது சீனை முதலில் எடுப்பதற்கு நிறைய காரனங்கள் இருந்தன - குழந்தைகள் சீக்கிரம் போகணும், அவரு சீனியர்...அவர் சீனை முதல்ல முடிச்சிடலாமே, அவருக்கு 7 மணிக்கு டியூட்டி...இப்படி நிறையக் காரணங்கள். ஒரு வழியாக என்னுடைய சீன் வந்தபோது இரவு மணி 8. நான் நடிக்க வந்து 12 மணிநேரமாகி இருந்தது.

நான் டயலாக் பேசியபடி நடந்து வந்து, கப்போர்டைத் திறந்து எதையோ தேடிவிட்டு, டயலாக் பேசியபடி கேமராவை விட்டு exit ஆக வேண்டும். நடித்தேன்."என்னங்க... கவிதையெல்லாம் எழுதுறீங்க... ஒரு நாலு டயலாக்கைப் பேச முடியலையா...மனைவிகிட்ட கொஞ்சம் டென்ஷனாக பேசுங்க.. இன்னும் கொஞ்சம் கோபம், விரக்தி வேணும்". உண்மையிலேயே 12 மணி நேரம் காத்திருந்ததில், எனக்குள் விரக்தி பொங்கி வழிந்தது. மறுபடியும் நடித்தேன். ஷாட் ஓகே. தயங்கியபடி, "எப்படிங்க நடிச்சேன்?" என்று அலியிடம் கேட்டேன். "உண்மையிலேயே நல்லா நடிச்சீங்க. நானே எதிர்பார்க்கல" என்று பதில் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. ஏதோ ஆறுதலுக்காக சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், அந்த நாடகம் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது நண்பர்கள் பலரும் நடிப்பு இயல்பாக இருப்பதாகச் சொன்னார்கள். ஒரு அனுபவம், ஒரு சில நினைவுகள்! என்றாலும், இனிமேல் நடிப்பு, கிடிப்பு பக்கமெல்லாம் தலைவைத்தே படுப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன். அதாங்க, பெரியவங்களே சொல்லிட்டாங்களே...களவும் கற்று மற - ன்னு!

Sunday, January 04, 2009

ராகுல் டிராவிடின் இடத்திற்கு குறி வைக்கும் ஐவர் அணி! (நாலு வார்த்தை-034)



எல்லா நல்ல விஷயங்களும் ஏதோ ஒரு நாள் முடிவுக்கு வரத்தான் செய்கின்றன. அந்த நல்ல விஷயத்தின் பெயர் ராகுல் டிராவிடாக இருப்பினும் கூட. அநேகமாக நியூஸிலாந்து டெஸ்ட் தொடரே அவர் விளையாடும் இறுதித் தொடராக இருக்கக் கூடும். அதில் சிறப்பாக விளையாடி, கங்குலி மாதிரி மதிப்பு, மரியாதையோடு தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க வேண்டுமென்பதே டிராவிடின் விருப்பமாகவும் இருக்கலாம். பந்து எக்கச்சக்கமாக ஸ்விங் ஆகும் நியுஸிலாந்தில் டிராவிட் எவ்வளவு முக்கியம் என்பதை தோனி வலியுறுத்தி இருப்பதை பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். அந்த தேசத்தில் விளையாட அனுபவசாலிகள் அவசியம். இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் ஒவ்வொரு முறையும் மோசமாக மட்டுமே விளையாடி இருக்கிறது. இந்த முறை அந்த கெட்ட பெயரை போக்க சகல வாய்ப்புகளும் தென்படும் சூழலில், அனுபவமிக்க டிராவிட் மிக, மிக அவசியம் என்பதால்தான் அவரை வைத்திருக்கிறார்கள், இல்லையென்றால், இங்கிலாந்து தொடரோடு அவருக்கு 'டாட்டா' சொல்லியிருப்பார்கள் என்று சொன்னால், டிராவிட் ரசிகர்கள் உதைக்க வருவார்கள் - ஆனால், அதுதானே நிதர்சனம்! அதெல்லாம் இருக்கட்டும் சாமியோவ்... அவருக்கு பதிலா விளையாட யாரு இருக்காங்க சாமியோவ்... என்றால், 5 பேர் கை துக்குகிறார்கள்!

முதல் ஆள் நம்ம சுப்ரமணியம் பத்ரிநாத். ரஞ்சி டிராபி உட்பட எல்லா உள்ளூர்ப் போட்டிகளிலும் கலக்கி வருகிறார். ரன்கள், ரன்கள் மட்டுமே அவருக்கு சிபாரிசு செய்து கொண்டிருந்தன கடந்த 4 வருடமாய். இப்போது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வந்திருக்கிறார். அவரது ஆதரவிருக்குமெனில், பத்ரி, குறைந்தபட்சம் 4 வருடமாவது இந்திய டெஸ்ட் அணியில் இருக்க முடியும். அதற்கான எல்லாத் திறன்களும் அவரிடம் இருக்கின்றன. ஆனால், வழங்கப்படும் ஓரிரு வாய்ப்புகளிலேயே சோபிக்க வேண்டிய நிர்பந்தம் அவர் மேல் இருந்து கொண்டே இருக்கும். அடுத்தவர் - ரோஹித் ஷர்மா. ரவிசாஸ்திரியால் தொடந்து promote செய்யப்படுபவர். திறனாளர்களைச் சரியாக அடையாளம் காண்பதில் வல்லவர் சாஸ்திரி. பெரும்பாலான அவரது கணிப்புகள் சரியாகவே இருக்கின்றன. ரோஹித்திடம் ஒருவித lazy elegance இருக்கிறது. அழகான 30 ரன்களைவிட, கஷ்டப்பட்டு சேகரிக்கும் 100 ரன்களை ஒரு அணி விரும்பும். நின்று, நீண்ட நேரம் விளையாட முடியும் என்று நிருபிக்க வேண்டிய நிலையில் ரோஹித் இருக்கிறார். அவர் இந்திய அணியின் நீண்டகால நம்பிக்கை.

சுரேஷ் ரய்னா கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டும், நன்றாக விளையாடியும் வருகிறார். இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதும், வலுவும் அழகும் இணைந்திருப்பதும் ரய்னாவின் பலம். அற்புதமான ·பீல்டர் என்ற விஷயம் கூடுதலாக சில மதிப்பெண்களைப் பெற்றுத் தருகிறது. நீண்ட இன்னிங்ஸ் விளையாடக் கூடியவர் என்றும் நிருபித்திருக்கிறார். இத்தனை positive-களுக்குப் பிறகும், சுரேஷ் ரய்னா ஒரு நாள் விளையாட்டுப் போட்டிகளுக்கு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுவதன் காரணம் தெரியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டால் பட்டென்று பற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கையளிப்பவர். பெங்கால்காரரான மனோஜ் திவாரி 'அச்சம் என்பது மடமையடா' என்று அடித்து விளையாடக்கூடியத் திறன் உள்ளவர். இவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து செய்தியில் இருந்தாலும் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. IPL போட்டிகளில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு ஏமாற்றினார் திவாரி. அது தற்காலிகமென்பதை சமீபத்திய ரஞ்சிப் போட்டி சதத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். Sweep shot-ஐ கடைசி நொடியில் ஸ்லிப் திசையில் late cutஆக மாற்றியடித்தது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. அந்த ஒரு ஷாட்டே சொல்கிறது - அவர் நீண்ட தூரம் செல்வார். ஆனால் வாய்ப்பு எப்போது வரும்?

இந்தப் பட்டியலில் கொஞ்சம் சர்ப்ரைஸாகச் சேருபவர் முரளி விஜய். திடீரென அடித்தது டெஸ்ட் சான்ஸ். அதில் சரியாக விளையாடி இருக்காவிட்டால், மொத்த கேரியரே தொலைந்து போயிருக்கும். ஆனால், அலட்டிக் கொள்ளாமல் விளையாடினார் விஜய். அவரது அடிகளில் தெரிந்த timing வியப்பளித்தது. எல்லா திசைகளிலும் பந்தடிக்கக்கூடிய திறனுள்ளவர் என்பதை நிருபித்து விட்டார். துவக்க ஆட்டக்காரரான விஜய், மத்தியில் ஆடுமாறு சொல்லப்படலாம், காரணம், நிலையாகிக் கொண்டிருக்கும் துவக்க ஜோடியான சேவாக் - கம்பீர். இந்த ஐவரில் முதல்வர் யார் என்பது அடுத்த புத்தாண்டுக்குள் தெரிந்து விடும். இந்த அலசல் இப்போது தேவையா எனத் தோன்றலாம்... ஆனால், முப்பதைக் கடந்த டெண்டுல்கர், லக்ஷ்மண், டிராவிட்டில், யாராவது ஒருவர் இந்த வருடம் வெளியாகத்தான் வேண்டும். அது அநேகமாக டிராவிடாகத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில்.... இந்த ஐவர் அணி உள்ளே வரத் தயாராக இருக்கிறது!