Saturday, December 06, 2008

இளையராஜா, வைரமுத்து - சில Ifs and Buts! (நாலு வார்த்தை-005)



இளையராஜா. இந்தப் பெயர் புகுந்து வெளியேறாத தமிழ் உதடுகள் இருக்க முடியுமா? முடியும் என்று நீங்கள் சொன்னால், உங்கள் வயது பத்துக்குள்தான் இருக்க வேண்டுமென்று எளிதாகச் சொல்லி விடலாம். 70களில் தவழத் துவங்கிய இந்தத் தென்றல் துயர் வியர்வையை துடைக்கும் இசைச் சாமரமாக வீசிக் கொண்டிருக்கிறது இன்னும். இதுவரை எத்தனை ஆயிரம் பாடல்கள். பொங்கி வழிந்த எத்தனை இசைக்கோர்வைகள். ஒரு நொடி மெளனத்திற்குப் பின், திரையில் பல வயலின்களின் ஒலியோடு எத்தனைமுறை இசையாக வெடித்திருப்பார் இவர்; ஒரு சின்ன புல்லாங்குழலின் ஓசையில் எத்தனைமுறை நம் மனதை பிசைந்திருப்பார். இசையின் சர்வதேசக் கூறுகளை கரைத்துக் குடித்திருக்கும் விமர்சகப்புலிகள் இளையராஜாவை எப்படி வேண்டுமானாலும் உரசிப் பார்த்துக் கொள்ளட்டும். ஒரு தமிழக கிராமத்தில் ஜனித்து, உலக கிராமத்தின் பிரஜையாக பயணித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் தமிழர்களுக்கு அவர் தமிழ் அடையாளம்.

நம் மகிழ்ச்சியில், சோகத்தில், தனிமையில், காதலில் ஒரு ஓரமாக இளையராஜா எப்போதும் இருக்கவே செய்கிறார். சந்தனக்கடத்தல் வீரப்பன் நடமாடிய பில்லூர் அணைக்கட்டு காட்டுப்பகுதியில் "கேட்டேளா இங்கே" என்று சிறுவர்களாக குதித்திருந்ததும், "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" என சப்பாணியாக அலைந்திருந்ததும், "பூங்காற்று திரும்புமா" என்று உருகியிருந்ததும், "இஞ்சி இடுப்பழகி" என்று நெகிழ்ந்திருந்ததும், இளையராஜாவின் இசையால் சாத்தியமாகி இருக்கிறது. மேகமூடமான ஒரு சென்னை நாளில், நண்பர்களோடு கூட்டமாக மோட்டர் சைக்கிளில் மெளண்ட் ரோட்டில் பயணித்து தேவி காம்ப்ளக்ஸில் "தளபதி" பட முதல்காட்சியைப் பார்த்து "ராக்கம்மா கையத் தட்டில்" பலநூறு விசில்களுக்கிடையில் பிரமித்திருந்தது ஒரு வண்ணச்சித்திரமாக இன்னும் மாட்டிக்கிடக்கிறது மனச்சுவர்களில். இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு சித்திரத்தை மாட்டி விட்டிருக்கின்றன இளையராஜாவின் இசைக்கரங்கள்.

பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து என்ற ஜாம்பவான்களின் சேர்க்கை தமிழ்த் திரையுலக வரலாற்றில் அற்புத அத்தியாயம். ஒரு 40 கிலோமீட்டர் சுற்றளவில் ஜனித்த அவர்கள் எட்டிய மைல்கள்கள் எத்தனை..எத்தனை! மற்றவர்களைப் போல், நானும் யோசிப்பதுண்டு. அவர்கள் மட்டும் பிரியாமல் இருந்திருந்தால்? இப்படிப்பட்ட ifs and buts உலக சரித்திரத்தில் ஒரு கோடி உண்டு. அந்த ifs and buts - ல் இவர்களும் சிக்கிக் கொண்டது தமிழகக் கலையுலகிற்கு நேர்ந்த பேரிழப்பு.

பாரதிராஜா, வைரமுத்தை நான் ஒருமுறைக்கு மேல் நேரில் சந்தித்ததுண்டு; பேசியதும் உண்டு. ஆனால், இளையராஜாவை சந்தித்ததில்லை. சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் புதல்வி ஜனனியின் திருமணம் மலேசியாவில் நடந்தபோது அதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.சில அடி தூரத்தில்தான் கவிப்பேரரசு வைரமுத்து நின்று கொண்டிருந்தார். அவரையும் அழைத்து அருகில் நிறுத்திக்கொள்ள ஆசைப்பட்டது மனம். அது நடக்கிற காரியமா? இப்போது யோசிக்கும்போது, முயன்று பார்த்திருக்கலாமே என்று தோன்றுகிறது. ஒருவேளை வைரமுத்து ஒத்துக் கொண்டிருந்தால்... ஆனால், பாருங்கள் - இப்படிப்பட்ட ifs and buts இருப்பதுதானே வாழ்க்கையின் சுவாரஸ்யம்? இளையராஜா இன்னொரு சுற்று வருவாரா, வைரமுத்துடன் இணைவாரா என்பதும்கூட இனிமையான Ifs and buts-தான்!

Friday, December 05, 2008

சுப்ரமணிய ராஜூவும், தனுஷ்கோடி மாமாவும்! (நாலு வார்த்தை-004)

எல்லாம் மங்கலாகத்தான் ஞாபகம் இருக்கிறது. சுப்ரமண்ய ராஜூவின் கதைகள். ஏறக்குறைய 20 - 25 வருடங்களுக்கு முன்பு வாசித்தது. அதை வாசித்தது கம்பத்து தாத்தா வீட்டில். கம்பத்திலிருந்து உத்தமபாளையம் போகும் வழியில் தோட்டத்திற்கு மத்தியில் இருக்கிறது தாத்தா வீடு. அந்தத் தோட்டத்தில் வாழை, கரும்பு, சோளம் என்று காலத்திற்கேற்ப பயிர் செய்யப்படும். தோட்ட மத்தியில் அகன்ற, ஆழமான கிணறு உண்டு. நாலைந்து மாமாமார்களும் உண்டு. மதுரை பாஷையில் சொல்வதென்றால் - ஒவ்வொருத்தரும் பாசக்கார பயலுவ.

தனஷ்கோடி மாமா புத்தகங்களை பைண்டு செய்வதில் வல்லவர். அவர் பைண்டு செய்து வைத்திருந்த சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் புத்தகங்கள் அறிமுகம் செய்த உலகத்தை தோட்டத்து வரப்புகளில் உட்கார்ந்தபடி, காக்காய்களின் இடைவெளிவிட்ட கரைதல் களுக்கிடையில் படிப்பது சுகமான அனுபவமாக இருந்தது. கடலில் பாய்மரக் கப்பல்களில் பயணிப்பதும், எதிரிகளிடம் வாளைச் சுழற்றுவதும், இளவரசியின் வனப்பை தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்து பிரமிப்பதும் சாத்தியமானது. தனஷ்கோடி மாமாவின் கால் சற்று ஊனம். தாங்கித் தாங்கிதான் நடப்பார். அவ்வப்போது வலிப்பு வருமென்று சொல்வார்கள். நான் பார்த்ததில்லை. ஒருநாள் தனுஷ்கோடி மாமா கிணற்றில் விழுந்து இறந்து போனார். யாருமற்ற ஒரு வெயில் நாளில் கிணற்றருகில் நின்று கொண்டிருந்தபோது, வலிப்பு வர, உள்ளே விழுந்தவர் காப்பாற்ற ஆளின்றி இறந்து விட்டாரென்று சொன்னார்கள். அவரது மரணத்தை விட, அந்த மரணம் நேர்ந்த விதம் நீண்டநாள் வலித்தது.

அவரது மரணத்திற்குப்பின் ஒரு விடுமுறை நாளில் அவரது பெட்டியை குடைந்து கொண்டிருந்தபோதுதான் சுப்ரமண்ய ராஜுவின் சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது. சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் புத்தகத்திற்கிடையில் அது எப்படி வந்தது அல்லது ஏன் வந்தது என்ற கேள்வி அந்தக் கதைகளில் பயணித்த தருணங்களின் எழுந்து கொண்டே இருந்ததது. அது வேறு உலகம். சந்தன வாசனையும், வியர்வை வாசனையும் சமவிகிதத்தில் கலந்து நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும் உலகம். நுணுக்கங்களும், நுணுக்க மீறகளை அனுமதிக்கும் விதிகளும் நிறைந்த உலகம். அதை தனுஷ்கோடி மாமா படித்திருப்பாரா என்று வெகுநாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன்.

அதேபோல் - வெகுநாட்களுக்குப் பிறகுதான் தெரிந்து கொண்டேன், சுப்ரமண்ய ராஜூவும் ஒரு ஸ்கூட்டர் விபத்தில் இளம் வயதிலேயே இறந்து விட்டாரென்று.

Thursday, December 04, 2008

ஜொலிப்பார்களா தமிழக கிரிக்கெட் வீரர்கள்? (நாலு வார்த்தை-003)

தமிழக கிரிக்கெட் வீரர்களை துரதிர்ஷ்டம் பல வடிவங்களில் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருப்பது காலகாலமாக நடந்து வருகிறது. சமீபத்திய உதாரணம் சுப்ரமணியன் பத்ரிநாத். வெங்கட்ராகவனும், ஸ்ரீகாந்தும் அதற்கு விதிவிலக்கு. ஓரிரு ஒருநாள் விளையாட்டுப் போட்டிகளோடு பத்ரிநாத் ஓரம் கட்டப் பட்டிருப்பதை துரதிர்ஷ்டம் என்று சொல்லாமல், வேறெப்படிச் சொல்ல? எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் யுவராஜ் விளையாடக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஸ்ரீனிவாசன், எல்.சிவராமக்கிருஷ்ணன், டபிள்யூ.வி.ராமன், வெங்கட்ரமணா, படானி என, ஓரிரு போட்டிகளோடு சரித்திரமாகிவிட்ட தமிழக வீரர்களின் பட்டியல் வெகு நீளமானது.

சமீபத்திய வரவுகளான தினேஷ் கார்த்திக்கும், முரளி விஜய்யும் இன்னும் பல வருடங்களுக்கு விளையாடக் கூடும். தினேஷ் கார்த்திக்கிற்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதும், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது உண்மை. அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. பார்க்கலாம் - இனிமேல் கிடைக்கும் வாய்ப்புகளை என்ன செய்கிறார் என்று. முதுகு சார்ந்த பிரச்ச்னைகளில் இருந்து மீண்டு வந்திருக்கும் பாலாஜியின் சமீபகால பந்து வீச்சு பரவசமளிக்கிறது. இப்படியே பந்து வீசினார் என்றால், சீக்கிரமே அவரை இந்திய அணியில் பார்க்க முடியும்.

தற்போது தமிழக ரஞ்சி அணியில் விளையாடுபவர்களில் 18 வயது துவக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்திற்கும், வலது கை சுழல்பந்து வீச்சாளர் அஷ்வினிற்கும் நல்ல எதிர்காலம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் ஜோசியம் சொல்கிறார்கள். டபிள்யூ.வி.ராமன் தற்போது தமிழக அணியின் கோச்சாக இருக்கிறார். அவர் புத்திசாலி. இடது கை பந்து வீச்சாளராக கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கி, துவக்க ஆட்டக்காரராகத் தன்னை உருமாற்றிக் கொண்டவர். ரஞ்சிக் கோப்பையை வெல்லக் கூடிய அணியாக தமிழக அணியை அவர் உருமாற்றுவாரா? Keep Watching!

மலேசிய மக்கள்ஓசையின் முன்னாள் ஆசிரியர் திரு.குரு (நாலு வார்த்தை-002)

திரு.குருசாமியை எப்போது முதல்முதலாக சந்தித்தேன் என்று ஞாபகமில்லை. சந்தித்தேன். பழகினேன். இருந்த அவர் இல்லாமல் போன வருத்தங்களோடு இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். குருசாமி - மலேசிய வாரஇதழ்களான "வானம்பாடி" "மக்கள் ஓசை" போன்றவற்றின் முன்னாள் ஆசிரியர். சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். சிலர், சில நீக்க முடியாத பிம்பங்களை நம்முள் விட்டுச் செல்வார்கள். அந்த வகையில், குறும்புத்தனம் கலந்த அவரது புன்னகை இன்னும் என்னுள் இருக்கிறது ; இனியும் இருக்கும். அவர் மக்கள் ஓசையில் பணியாற்றிய காலத்தில் எனக்கு "வாரம் ஒரு இளமைக்கதை" எழுதும் வாய்ப்பை வழங்கினார். 15 வாரங்கள் போன அந்த இளமைத் தொடர் "அப்பாவிச் சோழன்" என்ற புனைப்பெயருக்கு மலேசியத் தமிழ் வாசகர்களிடம் பரவலான பார்வையைப் பெற்றுத்தந்தது.

குருசாமி - எழுத்தாளர்களுக்கு வரம்பில்லா சுதந்திரத்தைத் தந்தவர்; வாசகர் கடிதங்களை இலக்கிய தரத்துக்கு உயர்த்தியவர்; எங்கேயும், எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர்; வார்த்தைகள் காயப்படக் கூடாது என்ற கவலைப் பட வைக்கும் தொனியில் பேசுபவர். வழுக்கையில் அவரளவு அழகாக இருந்த வேறு ஒரு ஆண்மகனை நான் இதுவரை சந்திக்கவில்லை. அவரது நகைச்சுவை உணர்வு மிகவும் பிரசித்தம். உதாரணத்திற்கு ஒன்று.

1996ம் வருட ஜூன் மாத மலேசியச் சிறுகதைத் திறனாய்வை காப்பாரில் நானும், நண்பர் தண்ணீர்மலையும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆதிகுமணன் தலைமை தாங்கினார். பல எழுத்தாளர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள். எழுத்தாளர் பீர்முகமதைக் கிண்டலடிப்பதென்றால் குருசாமிக்கு அவ்வளவு ஆசை. குருசாமி மைக்கைப் பிடித்ததும், எதிர்பார்த்தது போலவே அங்கிருந்த சை.பீர்முகமதைப் பற்றி பேசத்துவங்கினார். "ஒரு முறை பீர்முகமது தனது நண்பரைப் பார்க்கப் போனார். அவர்கள் பேசத் துவங்கினார்கள். பீர்முகமது அவரது நண்பரை வாயைத் திறக்க விடவே இல்லை. தானே பேசிக் கொண்டிருந்தார். 'நான் அதை செய்தேன். இதை செய்தேன்' என்று தன்னைப் பற்றியே மணிக்கனக்கில் பேசி நண்பரை தாளித்து விட்டார். பொறுமை இழந்து நண்பர் நெழியத் துவங்கினார். அதைப் பார்த்த பீர் அவரிடம் "ஸாரி, நானே தொடந்து பேசி உங்களை சிரமப்படுத்தி விட்டேன். நீங்கள் வாயைத் திறக்கவே இல்லை. நீங்கள் ஏதாவது பேசுங்கள்" என்று சொல்ல, நண்பர் நிம்மதிப் பெருமூச்சு விட, சை.பீர்முகமது நண்பரிடம் கேட்டாராம், "சரி, சொல்லுங்கள். நீங்கள் என் கதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?".

இனி யார் செய்வார் சை.பீர்முகமதை இப்படிக் கேலி?

Tuesday, December 02, 2008

அதிகாலை அலாரமாய் சன் டி.வி (நாலு வார்த்தை-001)

ஒவ்வொரு நாள் காலையும், காபி, டீ, இல்லாமல் என்னை எழுப்பும் சன் டி.வியின் பாடல்கள். அலாரம் போல் அவஸ்தை தரும் வஸ்து இல்லை. சத்தம் சற்று அதிகமென்றால் குறைத்துக் கொள்ளலாம். முற்றிலுமாக அணைக்க வேண்டிய அவசியமில்லை. பிடித்த பாடலென்றால், ஊர் உறங்கும் அதிகாலையில், பழைய பாடல்கள் எழுப்பி விடும் பழைய நினைவுகளோடு கண் மூடியபடி நாமும் நடக்கலாம்.

இன்று காலையும் சன் டி.விதான் எழுப்பியது. "தேவதாஸ¤ம் நானும் ஒரு ஜாதிதானடி","குயிலப் புடிச்சு கூண்டிலடச்சு" என்று ஒரு காலத்தில் வானொலியிலும் மனதிலும் பலமுறை ஒலித்த பாடல்கள் வரிசை பிடித்து நின்றன. "மைக்" மோகன் கோலோச்சிய 80களின் ஞாபகங்கள் வந்தன. சன் டி.வியில் போடாத ஒரு பாடலின் ஞாபகமும் கூடவே வந்தது. வந்ததன் காரணம் தெரியவில்லை. அதிகாலை - காரணம் தெரியாத பலவற்றை அசை போட ஏதுவான நேரம். பொள்ளாச்சியும், அங்கு பார்த்த "கடலோரக் கவிதைகள்' படமும், குடையோடு நடந்துபோன ரேகா டீச்சரும், சத்யராஜின் சற்று பெரிய பற்களுக்குப் பின் ஒளிர்ந்த சங்கும், அசை போட வாய்த்தது இன்று.

நாளையும் காலை வரும். சன் டி.வி பாடல்கள் வரும். என்னோடு நடக்கும் நினைவுகளும் உடன் வரும்.

Monday, December 01, 2008

கவிதையை ஒளித்த கைகள்




நடந்து செல்வது சுகம்.
நேசத்திற்குரியவர்களோடு
கைகோர்த்து நடப்பது அதிசுகம்!

வாழ்க்கை நெடுக...
கை கொடுக்கின்றன கைகள்

ஏதோ சில கைகள்
நட்ட மரங்களின் நிழல் மடிதான்
வெயிலுக்கு வேடந்தாங்கலாகின்றன.

ஏதோ சில கைகள்
பம்பாயில் சுட்ட குண்டுகள்தான்
ரத்தம் குடிக்கும் ராட்சசப் பற்களாகின.

தடுமாறும்போது தடுத்துப்பிடிக்க
கரங்கள் இல்லையெனில்
காயப்படும் முகங்கள்.

கொடுப்பதற்கு கைகள் வேண்டும்.
ஏதும் இல்லையெனில்
இரப்பதற்கும் கைகள் வேண்டும்.

புகைப்படம் எடுப்பதற்கும் கைகள்.
சுவரில் புகைப்படமானவர்களுக்கு
மாலை இடுவதற்கும் கைகள்.
மாலை தொடுப்பதற்கும் கைகள்.
மலரைப் பறிப்பதற்கும் கைகள்.

மலர்ச்செடி நடுபவையும் கைகள்.
மண்ணைத் தொடுபவையும் கைகள்.
ஆறடி மண்ணில்
ஆடி அடங்கியவனின் குழியில்
கடைசியாக கைபிடி மண்ணை
இடுபவையும் கைகள்.

கல்லை கடவுளாய் வடிப்பவை கைகள்.
வடித்த கடவுளைத் தொழுபவைக் கைகள்.
அளவுக்கு மீறி சோதிக்கும் கடவுளைத்
தூக்கி எறிவதும் அந்தக் கைகளே.

கற்கள் எப்போதும் தங்களைக்
கடவுளாக்கச் சொன்னதில்லை.
காரிகையாக்கவும் சொன்னதில்லை.
உண்மையில் அவை கைகளின்
கட்டளைக்குக் கட்டுப்படும்
அடிமைகள்...
படிக்கட்டுகளாய்
கால்மிதி படுவதற்கும் சம்மதிக்கும்
கடைநிலை அடிமைகள்.

ஞாபகத்திற்கும் கைகள் உண்டு.
பழைய நினைவுகளை அவை ஓயாமல்
அழித்துக் கொண்டே இருக்கின்றன.
கனவுகளுக்கும் கரங்கள் உண்டு.
சிதறிக் கிடக்கும் பழைய நினைவுகளை
சேகரித்து அவை எரித்துக் கொண்டே
இருக்கின்றன!

எல்லா இடங்களையும் எட்டிப் பார்க்க
எந்தக் கைகளாலும் முடிவதில்லை.
அம்மாவின் கைகளில் குழந்தைக் குளியல்.
மணமாகிவிட்டால் மனைவி கையால்
அக்கறைக் குளியல்.
இடைபட்ட காலத்திலோ...
இடது, வலது - இரண்டு கைகளுக்கும்
எட்டாத இடமாகவே இருக்கிறது
முதுகின் மத்தி!

காதல்வயப்பட்டவர்கள் சொல்லும்
பொய்களையெல்லாம் கவிதையாக
வரிசைப்படுத்தும் வகையிலும்..
காதலில், கைகள் முக்கியம்.

உலகத்தில் ஆகச் சிறந்த கைகள் எவை?

அருசுவை உணவு தரும் அந்தக் கைகளா..
அழுகை துடைக்கும் ஆதரவுக் கைகளா...
உடுக்கை இழக்கையில் ஓடிவரும் கைகளா...
கொடுத்துச் சிவந்த வள்ளலின் கைகளா...
உழுது சிவந்த உழவனின் கைகளா...
உறுபிணி அகற்றும் கருணைக் கைகளா...
பேரிடர் துயரில் உதவும் கைகளா...

இப்படி வரிசை கட்டின கைகள்.

இறுதியில் உணர்ந்தேன்...
தன்னலம் மறந்து, பிறர்நலம் காக்க
பட்டென்று நீள்வது எந்தக் கைகளோ
அந்தக் கைகளே உயர்ந்த கைகள்.

உற்றுப் பார்ப்போம்.
எந்தக் கைகள்.. இந்தக் கைகள்?