Saturday, June 28, 2008

"வேறொரு மனவெளி" புத்தகப் பதிப்புரையிலிருந்து ...


சமீபத்தில் சிங்கப்பூர்ப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பான "வேறொரு மனவெளி" சிங்கப்பூரில் இயக்குனர் அமீர் தலைமையில் வெளியீடு கண்டது. அதில் இடம் பெற்ற எனது பதிப்புரை இது:




சிங்கப்பூர் மறு நடவுகள் மிகுந்த மாநகரம்.


இரவு வெற்றாக இருந்த உங்கள் வீட்டு வாசலில், காலை கண்விழிப்பில், சட்டென்று, பூக்களோடு முளைத்து விட்ட புது மரங்களைப் பார்த்து நீங்கள் திகைத்து நிற்பது திகைப்பற்ற வாழ்க்கை முறையாகி விட்டது இங்கு.


இந்த நகரம், வேறு உலகில் முளைவிட்டு வளர்ந்த திறன்மிக்க மனிதர்களையும், தயக்கமின்றி தனது பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொள்கிறது. உலகை ஒரு சிறு கிராமமாக்கிவிடும் எத்தனிப்பில் சிங்கப்பூர் தளராமல் இயங்குவதை அருகிருந்து பார்ப்பவர்கள் உணர முடியும்.அவர்கள் இயல்பாகக் காலூன்றுவதும், வேர்பரப்பிக் கிளை விடுவதும் சிக்கலற்ற வாழ்க்கை நெறியாகி விட்டது.


இலக்கியம் மட்டும் இதன் போக்கிலிருந்து தப்பியா விடும்?
தப்பவில்லை.


இந்த தொகுப்பைப் படித்து முடித்ததும் உங்களுக்குள் அப்படியொன்று தோன்றக்கூடும். தொகுக்கும்போது எனக்கும் தோன்றியது.


வளர்ந்த வாழைமரங்களின் அடியில், அந்த மண்ணின் சத்தை உறுஞ்சி, வளர்ந்து இலை விடும் கன்றுகளை நீங்கள் பார்க்கலாம். அந்த இலைகளை உற்றுப் பாருங்கள். அவை அந்த மண்ணின் வண்ணங்களோடு மிளிர்வது புரியும். இந்தத் தொகுப்பில் அந்த வண்ணங்களோடு நீங்கள் பார்க்கலாம்.


சிங்கப்பூர் வந்திருந்த எழுத்தாளர் பிரபஞ்சனிடம், இருபது பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களை தொகுக்க இருப்பதாகச் சொன்னதும், "இருபதா?" என்றார்.


எனக்கும் அந்த ஆச்சரியம் இருந்தது.


அந்த இருபது பேரும் தற்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு பதிலாகலாம். இன்னும் கூட இருக்கிறார்கள். ஆனால், எங்களின் ஆழ, அகல, தளராத வலைவீச்சில் சிக்கிய மீன்கள் இவ்வளவுதான்.


வெகுசில தரமான கதைகளை மட்டுமே தொகுப்பாக்கி, இங்கிருக்கும் நிலவெளியின் குறுகிய, நிஜமற்றதானதொரு பிம்பத்தை உலமெல்லாம் கொண்டு செல்வதில் உடன்பாடற்ற சிலமனங்களின் சுவாசத்தை இந்த தொகுப்பினூடே நீங்கள் உணர்வீர்கள்.


நாங்கள் இப்படித்தான். இதுதான் எங்கள் முகம். அம்மா, அப்பா, தத்தா, பாட்டி, பேரப்பிள்ளைகள் என எல்லோரும் சேர்ந்தால்தான் குடும்பம் என இவர்கள் உரக்கப் பேசுவது, பெற்றவர்களுக்கு வயதாகி விட்டது என்று ஓய்வு கொடுக்கத் துணியாத ஒரு பாசமிகு பிள்ளையின் மனதை உங்களுக்கு உணர்த்தும்.


கடிதங்கள் குறைந்து விட்ட நவீன வாழ்வில், பேனா முனையால் கிறுக்கி எழுதப்படும் வரிகளுக்குத்தான் நெஞ்சுக்குள் ஈரத்தைக் கசியவிடும் வல்லமை வாய்க்கிறது.


சிங்கப்பூரிலிருந்து உங்களுக்கு வந்த கடிதத்தை உங்கள் அஞ்சல்பெட்டியில் சேர்த்துவிட்ட ஒரு தபால்காரனின் வேலையைத்தான் நான் இங்கு செய்திருக்கிறேன்.


கடிதங்கள் சேர்க்கப்பட வேண்டிய வீடுகள் வீதி நிறைய இன்னும் இருக்கிறன.


என்றும் அன்புடன்
பாலு மணிமாறன்