Saturday, March 11, 2006

எனும் நண்பர்களே.....


எம்.ஆர்.டி பயணங்களில்
உட்கார இடமிருந்தும்
நிற்கும் என்னை
உற்றுப் பார்ப்பதேன்
மனிதர்கள்?
நிற்பது பிடிப்பவர்கள்
நிற்கலாம்தானே?

ஞாயிற்றுக்கிழமைகளில் -
தேக்காவீதிகளை
தேய்ப்பதும்..
ஆர்ச்சர்ட் ரோட்டை
அளப்பதும்..
திரையரங்கு வாசலை
மொய்ப்பதும்தான்..
இளமையின் அடையாளமா?
உறக்கம் பிடிப்பவர்கள்
உறங்கலாம்தானே?

இளமையில் காதல்
அவ்வளவு அவசியமா?
பெண்மீது
பூப்பதுமட்டுமா காதல்?
சன்னலில் கிளைகள் நீட்டும்
இளம்பச்சை மரத்தின் மீது
என்னுள்ளே பூப்பதற்கும்
இந்தப் பெயர்தானே?

நீங்கள் நீங்களாய்
இல்லாமல் இருக்கலாம்...
நான் நானாய்
இருப்பது தவறா
?

Friday, March 10, 2006

மறைந்து, மறைந்து போன ஒரு பதிவு!



இரண்டு, மூன்று தடவை இந்தப்பதிவை வலைப்பூவில் போட்டுவிட்டேன். ஆனால். .. காணாமல், காணமல் போய் விடுகிறது. இந்த முறையாவது, இது இப்படியே இருக்க...எல்லா ஆண்டவர்களும் அருள் புரிவார்களாக!!!!!


இன்றைய திரைப்படப் பாடல்களைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் உண்டு.இருந்தாலும் அவற்றை நாம் நம்மையறியாமல் கேட்ட படியோ,முணுமுணுத்தபடியேதான் இருக்கிறோம்.

அத்தகைய பல பிரபலமான பாடல்களைசமீபத்திய திரைப்படங்களில் எழுதி வரும் இளம் பாடலாசிரியர், கவிஞர்நா.முத்துக்குமார். அவர் கலந்து கொண்ட இலக்கிய பல்சுவை நிகழ்ச்சி சென்ற25/02/06 அன்று மாலை 6.30 மணிக்கு சிங்கப்பூர் விக்டோரியா ஸ்ட்ரீடில்அமைந்துள்ள தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

தேசிய நூலக வாரியம், சிங்கைத் தமிழ்ச் சங்கம் மற்றும் பாலு மீடியாமேனேஜ்மெண்ட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.திரு விஷ்ணு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்நூலக வாரிய மூத்த அதிகாரி திருமதி புஷ்பலதா.

தொடர்ந்து 'சுட்டும் விழிச்சுடரே', 'காதல் யானை வருகிறதே'பாடல்களுக்கும், திரு அமலதாசன் வரிகளுக்கு திரு குணசேகரன் இசையமைத்துநான்கு மொழிகளுள் முதலாவதாக வென்ற "சிங்கப்பூர் என்று சொல்லும் போதிலே"பாடலுக்கும் நிறைவான நடனவிருந்து படைத்தனர் கவிதாகிருஷ்ணன் குழுவினர்.அதன்பின் மாணவர்கள்பங்கேற்ற "திரைப்பட பாடல்களால் சமுதாயத்துக்கு நன்மையா? தீமையா?" என்றகலக்கல் பட்டிமன்றம் நடைபெற்றது.

' நான் ஆணையிட்டால்,' 'தூங்காதே தம்பி தூங்காதே' போன்ற பழைய பாடல்கள்காலம் கடந்து வாழவில்லையா? ' நல்ல பேரைவாங்க வேண்டும் பிள்ளைகளே' போன்ற பாடல்கள் குழந்தைகளுக்கு நன்னெறிகளைபோதிப்பதாகதானே உள்ளது. இன்றைய திரைப்படங்களிலும்,கவித்துவம் நிறைந்த'காதல் கடிதம் தீட்டவே', தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும்'காலையில் தினமும்கண்விழித்தால் நான் கைதொழும்' போன்ற பாடல்கள் நிறைய உள்ளனவே. எனவே அன்பை, கருணையை, மனித நேயத்தை வளர்க்கிறதுதிரைஇசைப் பாடல்கள் என்று வாதிட்டனர் " நன்மையே" என்ற தலைப்பில் பேசிய அணியினர்.

'கட்டிப்புடிக் கட்டிப்புடிடா' போன்ற விரசப் பாடல்களும், 'சோடாபாட்டில்கையில' போன்ற வன்முறைப் பாடல்களுமே அதிகமாகஉள்ளன. ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிப் பாடல்களில் தமிழ்ச்சொற்கள் உண்டா?தமிழ்ப்பாடல்களில்தான் 'கண்ணும் கண்ணும் நோக்கியா?', 'ஷக்கலக்க பேபி',என்றெல்லாம் 'கலப்படம்' செய்கிறார்கள். பரவாயில்லையென்று இவற்றைவிட்டுவிட்டால் நன்னீர் குளத்தில் நஞ்சை கலந்தது போலாகி விடும் என்றுவேடிக்கையாக தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர் "தீமையே" என்றஅணியில் பேசியோர்.

நடு நடுவே தன் நகைச்சுவைப் பேச்சால் கலகலப்பூட்டிய நடுவர் திரு சேவகன்மாணவர்களின் சிறப்பான பேச்சை கேட்டு'சிங்கையில் தமிழ் தழைத்து வாழும் என்ற நம்பிக்கை வலுக்கிறது' என்றார்.மேலும் 'ராக்கம்மா கையத்தட்டு' என்ற துள்ளாலோசைப்பாடலிலும் 'குனித்த புருவமும்' என்ற ஏழாம் நூற்றாண்டு இலக்கியம்இருக்கிறதே! `ஏ குட்டி' போன்ற பாடல்களையும்தமிழ்ப்பாடலைச் சிதைக்கும் தமிழ்த் தெரியாதோர் பாடும் பாடல்களையும்அன்னப்பறவையென ஒதுக்கி விடுங்கள். 'இன்னிசை பாடிவரும்' என்ற பாடலில்'காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை' என்ற அறிவியல் செய்தி,'ஒவ்வொரு பூக்களுமே' என்ற பாடலில் 'மனிதா உன் மனதைக் கீறி விதை போடு' போன்றதத்துவக் கருத்துக்கள் நிறைந்து கிடக்கன்றன. அந்தாதிப் பாடலாக அமைந்த கண்ணதாசனின் 'வசந்தகால நதிகளிலே','கண்ணோடு காண்பதெல்லாம்' போன்றஇலக்கிய நயம் கொணட எண்ணற்ற நல்ல பாடல்களைக் கேளுங்கள்" என்று கூறி"திரைபடப் பாடல்களால் சமுதாயத்துக்குநன்மையே" எனத் தீர்ப்பளித்தார்.

கவிஞர் நா.முத்துக்குமாரைப் பற்றிய அறிமுகஉரை நிகழ்த்தினார்சிவஸ்ரீ.சிங்கையின் தமிழ் வானொலி ஒலி 96.8-ல் 2005-ம் ஆண்டுமுதலிடத்தைப் பிடித்த 'காதல் வளர்த்தேன்' என்ற பாடலையும், 2006-ம் ஆண்டுமுதலிடத்தைப் பிடித்த 'சுட்டும் விழிச்சுடரே' என்ற பாடலையும் எழுதியவர் திரு நா.முத்துக்குமார்.

இவர் எழுதிய 'உனக்கென இருப்பேன்', என்ற பாடல், தான் சென்ற கார் ஓட்டுனரைகண்கலங்க வைத்ததென்றும், தமிழ் சரளமாக பேச முடியாதவர்களும், "உன் கண்கள்வண்டை உண்ணும் பூக்களன்றோ" என்று பாடுவதையும் சுவைபடக் கூறினார்.'காட்டிலே காயும் நிலவை' என்றும் 'அய்யர் பொண்ணு மீன் வாங்க வந்தா'என்றும் எல்லாவிதமான பாடல்களையும் எழுதத் தெரிந்தவர். 'புலி வளர்க்ககாடும் காசும் இல்லாததால் நாங்கள் நாய் வளர்த்தோம்' போன்ற நல்லகவிதைகளையும் படைத்துள்ளார்" என்ற சிவஸ்ரீ இணையம் உட்பட பெரும்பாலும்பாடலாசிரியரின் பெயர்கள் குறிப்பிடப் படுவதில்லை என்ற ஆதங்கத்தையும்வெளிப்படுத்தினார்.

'திரைப்படப் பாடல்களும் இன்றைய தமிழ் இலக்கியமும்' என்ற தலைப்பில் பேசியகவிஞர் நா.முத்துக்குமார் தான் மூன்றாவதுவகுப்பில் படிக்கும் போது கவிதை எழுதியதாகக் கூறினார்."காஞ்சிபுரம்சொந்த ஊர். எனது வீட்டில் சுமார் மூவாயிரம் புத்தகங்கள் இருந்தன. நிறையநேரம் நூல் வாசிப்பதிலேயே செலவிடுவேன். அப்போதும் 'திரைப்படப் பாடல்களால்நன்மையா? தீமையா?' என்ற பட்டிமன்றத்தில் நானும் பேசியிருக்கிறேன்.ஆசிரியர் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய் என்று கேட்டதற்கு'விஞ்ஞானியாவேன்' என்று சொன்னேன். ஆனால் இப்போது எதிர்பாராத விபத்தாகபாடல் எழுத வந்துவிட்டேன்" என்று தனதுநினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

சொந்த மண்ணைப் பிரிந்தவன் பாடுவதுபோல் அமைந்த 'திரைகடல் தாண்டி வந்துதிரவியம் தேடுகின்றோம்' என்ற பாடலில்'செல்லம் கொஞ்சி நம்மைக் கடிக்க வரும் கொசுக்கள்" போன்ற யதார்த்தமும்ஏளனமும் நிறைந்த வரிகளை திரு முத்துக்குமார்வாசிக்கையில் பலத்தக் கைத்தட்டலைப் பெற்றார்.."வேப்பம்பூ மிதக்கும்எங்கள் வீட்டுக் கிணற்றில்' என்ற எனது 'தூர்' கவிதையை கையாண்ட எழுத்தாளர்சுஜாதா, கவிஞர் அறிவுமதி, இயக்குனர் பாலுமகேந்திரா போன்றோர் மறக்கமுடியாதவர்கள்" என்றார்.

நல்ல பாடல்கள் பிறப்பது இயக்குனர் உள்ளிட்டோரின் கைகளிலும் உள்ளது. எழுதசுதந்திரம் கொடுத்ததால்தான் இயக்குனர் பாலாவுக்கு "ஓராயிரம் யானை" என்றபாடலும், இயக்குனர் செல்வராகவனுக்கு "கண்பேசும் வார்த்தைகள்" என்றபாடலும், இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு,"உனக்கென இருப்பேன்" என்றபாடலும் எழுத முடிந்தது. மோசமான பாடல்கள் என்று நீங்கள் நினைப்பதைகேட்காதீர்கள். அவ்வாறு நீங்கள் நிராகரித்தாலே அதுபோன்ற பாடல்கள்வெளிவருவது குறைந்து விடும்.

" வானத்தைப் போல திரைப்படத்தில் வரும் 'எங்கள் வீட்டில் எல்லா நாளும்'என்ற பாடல் மெட்டில் சிறுவன் பாடுகிறான்."எங்கள் வீட்டில் எல்லா நாளும் இட்லிதான்,தொட்டுக் கொள்ள கெட்டுப் போனசட்னிதான்"..இப்படி எல்லோருக்குள்ளுமே ஒருகவிஞன் இருக்கிறான்."மனுஷ்யபுத்திரன், தபூசங்கர் போன்ற பலருடையகவிதைகளையும் பிடிக்கும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான நீண்ட பாரம்பரியம் கொண்ட இலக்கணத்தைபின்பற்றி எழுத வேண்டி உள்ளது. நம் மரபும் வாழ்வும் பாடலோடு இணைந்த மரபுஎன்பதால் திரையிசைப் பாடல்களை அழிக்க முடியாது."என்று நம்பிக்கையூட்டிநிறைவு செய்தார் திரு நா.முத்துக்குமார்.

கவித்துவமிக்க, சுருக்கமான செய்திகளோடு நிகழ்ச்சியை சிறப்பாகவழிநடத்தினார் கவிஞர் பாலு மணிமாறன்.தரமிக்க தமிழ் இலக்கியநிகழ்ச்சிகளுக்கு தங்களது ஆதரவு எப்போதும் உண்டு என்பதை அரங்கு முழுக்கத்திரண்டிருந்த கூட்டம் நிருபித்தது

Thursday, March 09, 2006

ரசிச்ச பாட்டு நாலு

1. " செண்பகமே, செண்பகமே"

........ 80 களில் இறுதியில், எத்தனையோ இரவுகளில் என் இதயம் பிழிந்திருக்கிறது இந்தப் பாடல். " எள்ளுப்பூ நாசிப்பத்திப் பேசிப் பேசித் தீராது...உம் பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது " என்ற வரிகளை உச்சரிக்கையில் மனோவில் குரல் நெகிழ, நெகிழ - கேட்க்கும்போதெல்லாம் - அதில் வழுக்கி, வழுக்கி விழுந்து விடுகிறது மனசு ......


2. " பூங்காற்று திரும்புமா... என் பாட்டை விரும்புமா"

......... பச்சைக்கம்பளம் விரித்த ஒரு கிராமத்து வெளியில் - ஆதரவற்ற அநாதையாக - ஓடைகளில், ஒற்றையடிப் பாதைகளில், சிறகு விரிக்கும் தென்னந்தோப்புகளில், ஓய்ந்திருக்கும் செம்மண் குளக்கரையில் ஓடியபடி இருக்கும் இந்த ஓசை - இன்றும்கூட, என்னை வந்து சேரும்போதெல்லாம்... தன்னைத் தந்து விட்டு என்னை வாங்கிக் சென்று விடுகிறது......


3. "எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்"

......... TMSன் குரலில் சாகா வரம் பெற்ற பாடல்கள் பல்லாயிரம். இந்தப்பாடலின் இடையில் வரும் " உனக்கான என் பாடல் ஒலிக்கின்றது..அதில் ஏதேதோ எண்ணங்கள் இருக்கின்றது " என்ற வார்த்தைகள் எ·கை உருக்கும் தீயாக நம்மை வார்த்து - வடிவமைத்தும் விடுகின்றன. நம் வாழ்வில் இடையிடையே வந்து போகும் ஏதேதோக்களின் சாயலோடு, உறக்கங்களிலும், கனவுகளிலும் கூட ஒலிக்கும் பாடல் இது.


4. "கண்பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை..."

...... உலகக் காதலர்களில் ஏக்கமெல்லாம் சேர்ந்து ஒலித்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல வைக்கிற பாடல் இது. அவள் விழியும், அதனால் வரும் வலியும் ஒவ்வொரு காதலனும் உணர்ந்ததுதான். ஆனால், " விழி உனக்குச் சொந்தமடி... வேதனைகள் எனக்குச் சொந்தமடி" என்ற வரிகளைக் கேட்கும்போதோ...அட, நாம் சொல்ல நினைத்து வார்த்தைகளின்றி தவித்த விஷயத்தை இந்தக் கவிஞன் எப்படி இவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான் என்று வியப்புக்கல் மீது கால் இடறி விழுந்தே விடுகிறோம். விழ்ந்த நம்மை பரிதாபமாகப் பார்த்தபடி கடந்து போய் விடுகின்றன வரிகள்.