Wednesday, March 16, 2005

ஜெயிக்குமா இந்தியா ? தோற்குமா பாகிஸ்தான்?

ஈடன் கார்டன் மைதானத்தில் கொஞ்சம் போல் இருக்கிற புல்லும் மாட்ச் துவங்கும் முன் மொட்டையடிக்கப்படும் என்று தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். கங்குலி கொல்கத்தா 'மண்ணின்ம மைந்தர்'. அவர் சொல் கட்டாயம் அம்பலம் ஏறும். கங்குலிக்கு எப்படிப்பட்ட ஆடுகளம் பிடிக்கும் என்பதை எங்கள் கூளையனூர் பாட்டிகூட சொல்லி விடுவார்.ஈடன் கார்டன் மைதானம் முதல் நாளிலிருந்தே ஸ்பினாகத் துவங்கலாம் என்பதே உண்மை.

மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தப் போவதாகச் சொல்கிறார் கங்குலி. அது கப்ஸா. ரெண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் ( பாலாஜி, பதான் ) ரெண்டு சுழல் பந்து வீச்சாளர்கள் ( கும்ளே, ஹர்பஜன் ) என்பதுதான் இந்திய அணி வியூகமாக இருக்கும்.

பேட்டிங்கில் அதிக மாற்றமிருக்க வாய்ப்பில்லை. கார்த்திக்கின் இடம் மட்டுமே கொஞ்சம் " திக், திக் ".ஒருவேளை அவர் இந்த டெஸ்டில் சதமடித்து பர்திவ் படேல் போன்றவர்களின் வயிற்றில் தீயை வார்க்கலாம். அவரது பேட்டிங்கில் " கிளாஸ்" தெரிகிறது. ஆனால் அதை மட்டும் வைத்து போட்டிமிக்க இந்திய அணியில் குப்பை கொட்டுவது கஷ்டம்.

பாகிஸ்தான் பந்துவீச்சு டேனிஷ் கனிரியாவையே நம்பியிருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் அவரை நொறுக்க முற்படுவார்கள். அவுட்டும் ஆவார்கள். கடைசியில் கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு இந்திய அணிக்கே சாதகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அவர்களது பேட்டிங் தன்னம்பிக்கையின் உச்சத்தில் இருகிறது.அப்துல் ரசாக் மொகாலி டெஸ்டில் போதுமான அளவு கட்டை வைத்து விட்டதால், இந்த முறை விளாசித்தள்ளக் கூடும். இந்தியாவைப் பொறுத்தவரை அவரே ஆபத்தான பேட்ஸ்மேன். பாகிஸ்தானோ சேவக்கைப் பார்த்து பயப்படுகிறது. ஆனால், எனக்கும் ஓரளவு ஜோசியம் சொல்ல முடியுமானால், இந்த டெஸ்டில் லக்ஷ்மண்தான் கதாநாயகனாவார் என்று சொல்வேன். போன டெஸ்டில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஹர்பஜன்சிங்கும் உயிர்ப்புடன் பந்து வீசுவார்.

கொஞ்சம் இழுபறியாக இருந்தாலும், இறுதியில் இந்தியாவே வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. பெறும் என்றே நீங்களும் நினைப்பீர்கள். பாழாப்போன பாகிஸ்தான் அணி என்ன நினைக்கிறதோ? :)))))

Tuesday, March 15, 2005

சொட்டு சொட்டாய் காதல்!

காதல்...எந்த வயதில் முதல் முதலாய் முளைக்கிறது ?

உலக ஜனத்தொகையில் பாதிப் பேர் அது பதின்ம வயதில்தான் முளைக்கிறது என்று சொல்லக்கூடும். உண்மையும் அதுதானா?

செவ்வக சட்டத்தின் உள்விளிம்புகளைத் தொடமுயலும் சுவர்கடிகார முள்ளாய், சில நாட்களாக இந்தக் கேள்வி மனசில் ஊசலாடுகிறது....

காதல் என்றால் - கனிய வேண்டும்: கசிய வேண்டும்: இறக்க வேண்டும்: பிறக்க வேண்டும்: பசியும், பசியின்மையும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டும்: இதயத்தில் வடியும் வேதனை ரத்ததிலும் சுகம் உணர வேண்டும்: இப்படிப்பட்டவர்களைத் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கைச் சாலையின் ஓரத்திலும் தினம் தினம் சந்தித்தே வருகிறோம்.

காதலைப் பொறுத்தவரை உலகில் ரெண்டே ரெண்டு ஜாதிதான் இருப்பதாகப்படுகிறது. வாழ்க்கையைத் தேடித்தேடி காதலைத் தொலைத்தவர்கள் ஒரு ஜாதி: காதலைத் தேடித்தேடி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் இன்னொரு ஜாதி.

சரி... காதலையும் வாழ்க்கையையும் சேர்த்தே ஜெயித்தவர்கள்? அப்படிப்பட்டவர்கள் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்களாகத்தானே இருக்க முடியும்? :)))

பொள்ளாச்சியில் படித்த காலத்தில், வாடகைக்கு அறையெடுத்து தங்கியிருந்தேன். வீட்டு உரிமையாளரான அந்தச் சகோதரி, பல வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்த ஒரு சந்திப்பில் கேட்டார்...

" ஏன் தம்பி... நீங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதலிக்கவில்லையா "

" இல்லை அக்கா "

" ஏன் தம்பி "

" கல்லூரிக்காதல் மேல் எனக்கு நம்பிக்கையில்லை அக்கா "

" ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்...உங்கள் நண்பர்கள் யாரும் காதலிக்கவில்லையா? "

" ஆமாம். காதலித்தார்கள்... "

" கல்யாணம் செய்து கொண்டார்களா? "

" செய்து கொண்டார்கள்... "

" அப்புறம் ஏன் கல்லூரிக்காதல் மேல் நம்பிக்கை இல்லை என்று சொல்கிறீர்கள்? "

" காதலித்தார்கள் : கல்யாணம் செய்து கொண்டார்கள் : ஆனால் அவன் கல்யாணம் செய்து கொண்டது வேறொருத்தியை ... அவள் கல்யாணம் செய்து கொண்டது வேறொருவனை ! எப்படி கல்லூரிக் காதல் மேல் நம்பிக்கைவரும் சொல்லுங்கள் ? "

அந்தச் சகோதரி ஏதோ பெரிய ஜோக்கைக் கேட்டது மாதிரி வெகுநேரம் சிரித்தார். அப்புறம் கேள்வியின்றி மொளமாகிப் போனார்.

காதல்...எந்த வயதில் முதல் முதலாய் முளைக்கிறது ?

மலை விழுந்த ஒரு மாலையில், காப்பிக்கடையில், சூடான தேனீரைப் பருகியபடி என் நண்பரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

சிரித்தார்.

" ·பிராய்டு படித்திருக்கிறீர்களா? "

" இல்லை..."

" ம்.... என் முதல் காதல் பத்து வயதில் முளைத்தது என்று நினைக்கிறேன்..."

" அடப்பாவி! "

" பதறாதீர்கள் நண்பரே... அது - அதற்கு முன்னாலும் முளைத்திருக்கலாம்! "

" பத்து வயதில் காதல் என்பதெல்லம் சாத்தியமா? "

" இன்னும் அவள் பெயர்கூட ஞாபகம் இருக்கிறது...'பக்கத்து வீட்டு சாந்தி. உன் அப்பன் பேரு காந்தி' என்று அவளது பாடப்புத்தகத்தில் எழுதியதும் கூட. ஒரு கோயில் திருவிழாவில் விளக்கோடு நடந்த அவள் பின்னால் நான்குமணி நேரம் தொடர்ந்து நடந்தபோது, என் மனதில் சிலிர்த்து, சிலிர்த்து விழுந்த உணர்வுக்குப் பெயர் காதலாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்."

" அது வெறும் கவர்ச்சியாகத்தான் இருக்க முடியும்... "

" இந்த வயதுவரை என் வாழ்க்கைக்குள் சில பெண்கள் வந்து போயிருக்கிறார்கள். அவர்களால் இப்படி நீங்காமல் நிறைந்திருக்கும் சிலிர்ப்புகளை நிரந்தரமாக விட்டுச்செல்ல முடிந்ததே இல்லை "

அந்த விளக்கத்திற்குப் பிறகு நான் மொளனமானேன்.

அது அவரது வாழ்க்கை. அவரது காதல் !

ஒரு நீள இரவில் ஆழ யோசித்துப் பாருங்கள்.... காதல் உங்களுக்குள் முளைத்தது எப்போது என்ற உண்மை உங்களுக்குள் புரியலாம்....

எப்போது வருகிறதென்பது முக்கியமில்லை. ஆனால், எப்படியாவது, எங்காவது அது வர வேண்டும்.

இதுவரை உங்களுக்குள் அது முளைத்திருந்தால்... யாராவது ஒருவர் உங்களை காதலித்திருந்தால்... நீங்கள் ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்!

" அட போங்க சார்... காதலைப்பற்றி தெரியும் முன்பே எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது " என்று அலுத்துக் கொள்ளும் கணவர்களே... மனைவிகளே....
நோயின் தாக்கத்தில் எழ முடியாதபடி படுத்தபடுக்கையாக கட்டிலில் கிடந்த ஒருநாளில், நமது வாழ்க்கைத்துணை சுடிநீர் ஒற்றிய துணியில் முகம் துடைத்து மார்துடைத்து கண்ணோடு கண்பார்த்து, கடைசியில் நெற்றியில் கனிவோடு முத்தமிடும்போது... நம் விழியோரம் கசிந்து காதோரம் வழியுமே கண்ணீர்....
அது கண்ணீரா? இல்லை. சொட்டு சொட்டாய் காதல்!


Monday, March 14, 2005

பாலாஜி என்ற கறுப்புப்புயல்

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து முடிந்த மொகாலி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தன் முழுத்திறனையும் வெளிப்படுத்தி இந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்த்த கள்வனாகியிருக்கிறார் லக்ஷ்மிபதி பாலாஜி.

கறுத்த நிறம், ஒல்லியான தேகம், அழகென்று சொல்லிவிட முடியாத ஓட்டம், கையை விசுக்கென்று சுற்றி பந்து வீசும் திறம் - இப்படி பாலாஜி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கியபோது, 'இன்னும் எத்தனை நாளைக்கோ..' என்ற சந்தேகக்கண்ணோடு பார்த்தவர்கள்தான் நிறையப்பேர். அதற்கேற்ற மாதிரி, மேற்கிந்தியத்தீவு அணி வீரர்கள் அவரது பந்து வீச்சை விளாசித் தள்ளிவிட, ' ரஞ்சி டிராபிப் போட்டியில் புலி மாதிரி பந்து வீசுபவர்கள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எலி மாதிரி பந்து வீசுகிறார்கள்' என்று கிண்டலடித்தார் அமித் மதூர் என்ற விமர்சகர்.

பலரும் இனி பாலாஜி அவ்வளவுதான் என்று முடிவு செய்திருக்க, ' குறித்துக் கொள்ளுங்கள்...இவர் இன்னும் பல வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடுவார்' என்று ஆருடம் கூறினார் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத். இன்று - பாலாஜி அவரது நினைப்பை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பாலாஜி,4 ஓவர்களில் 44 ரன்களைத் தந்ததும் ஏறக்குறைய ஒருவருடம் இந்திய அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். இந்த ஒரு வருடத்தில் இர்பான் பதானின் இடதுகை பந்துவீச்சும், அவரது இளமையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துக் கொள்ள, சென்னையின் ஒரு மூலையில், ஆரவாரமின்றி தனது திறனை கூராக்கிக் கொண்டிருந்தார் பாலாஜி.

ஸ்ரீநாதின் பந்துவீச்சை மாதிரியே, ஆடுகளத்தில் பட்டு உள்திரும்பி, விக்கெட்டைநோக்கி சீறிப்பாயும் பந்துகளே பாலாஜியின் பலம். ஆனால் 2004ல் பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் கிரிக்கெட் உலகம் ஒரு புதிய பாலாஜியைப் பார்த்தது. விக்கெட்டைவிட்டு விலகிச்செல்லும் பந்துகளை அநாயசமாக வீசப் பழகியிருந்தார். அவரது ஓட்டத்தில் ஒழுங்கும், நளினமும் கூடியிருந்தது. பாலாஜியின் மணிக்கட்டை விட்டுவரும் பந்துகள் எப்படித் திரும்பும் - உள்ளேயா அல்லது வெளியேயா என்று பந்தடிப்பவர்கள் திகைத்தார்கள்.

நெஹ்ரா, அகர்கர் போன்ற அனுபவசாலிகள் ஓரமாய் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க, 3 டெஸ்ட் போட்டிகளில் 12 பாகிஸ்தான் விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்லோரும் பயந்து கொண்டிருந்த சோயப் அக்தரை ஆறுக்கு தூக்கியடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது இன்னொரு உபரிச்சம்பவம். இருட்டரையில் விளக்கேற்றியது மாதிரியான பளிச்சென்ற பாலாஜியின் புன்னகைக்கோ பாகிஸ்தான் முழுக்க ஏராளமான ரசிகர்கள்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை...பாகிஸ்தானிலிருந்து திரும்பிய கொஞ்சநாளில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுடன் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்த நாட்களில் இந்தியாவிற்கு விளையாடிய ஜாகிர்கான், பதான், நெஹ்ரா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுமே இடது கைக்காரர்களாக இருக்க, பாலாஜியின் வலதுகைப் பந்துவீச்சின் இழப்பை உணர்ந்தது இந்திய அணி, - குறிப்பாக கேப்டன் கங்குலி.

கங்குலிக்கு பாலாஜி மேல் ஏராளமான நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் மொகாலி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாலாஜிக்கு இடம் வாங்கித் தந்தது. அதில் அவர் எடுத்த 9 விக்கெட்டுகளும், 34 ஓட்டங்களும் அந்த நம்பிக்கை சரிதான் என்று நிருபித்திருந்தாலும், 'அந்த' ஐந்தாம் நாள் காலையில் மட்டும் பாலாஜி இன்னும் "ஒரே ஒரு " விக்கெட்டை எடுத்திருந்தால், இந்த நிமிடம் - அவர்தான் ஹீரோ! மேடும் பள்ளமும் நிறைந்ததுதானே வாழ்க்கை?

எது எப்படியோ, மொகாலி கிரிக்கெட் டெஸ்டில் பக்க வாத்தியமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாலாஜி, முழுக்கச்சேரியும் நடத்தியிருப்பது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை, குறிப்பாகத் தமிழ் கிரிக்கெட் ரசிகர்களை "ஓ" போட வைத்திருக்கிறது. மொத்தத்தில் பாலாஜியின் பந்து வீச்சைப் பற்றி இப்படித்தான் சொல்ல வேண்டும்... இது முடிவல்ல, ஆரம்பம் !