Saturday, February 19, 2005

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை சீனிவாச பெருமாள் மீது

சமீபத்திய டிசம்பர் மாத காலச்சுவடு இதழுக்கு வழங்கிய பேட்டியில் சிங்கை நண்பர் மூர்த்தி "கனகலதா, இந்திரஜித், போப்பு போன்றவர்கள் சிங்கப்பூரில் இலக்கிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திவருகிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். பலரது பார்வைக்கும் போய் சேரும் கவனத்திற்குரிய ஒரு இதழில் அவர் கூறியிருந்த கருத்துகள் மீதான எனது பார்வையை "காலச்சுவடு" இதழுக்கு அனுப்பினேன். இது பற்றி - இப்போது உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.சிங்கப்பூர் இலக்கிய சூழலை அறிந்தவர்களின் மேலான மேல் கருத்துக்களை அறிய ஆசைப்படுகிறேன்......________________________

· மு.ந.மூர்த்தியைப் பற்றி எனக்குள் ஒரு மதிப்பிருக்கிறது. அந்த மதிப்பை காலச்சுவடு நேர் காணலில் அவர் கூறியிருக்கிற எல்லா கருத்துக்களுக்கும் நீட்டிவிட வாய்ப்பில்லாமல் போனது துரதிர்ஷ்டம். காரணம் - காலச் சுவடு போன்ற கவனிப்பிற்குரிய இதழில் வெளியாகி இருக்கிற இந்த கருத்துகள், இணையத்தின் வழி உலக நாடுகள் அத்தனைக்கும் போய் சேர்ந்து, சிங்கப்பூர் இலக்கியச் சூழல் பற்றி ஒரு 'லாடம் கட்டிய குதிரைப் பார்வை'யை ஏற்படுத்தி விடக் கூடும் என்ற அச்சம்.

· நவீன தமிழ் இலக்கியப் போக்கு பற்றிய பரிட்சய வாய்ப்பு இங்குள்ள வெகு பல படைப்பாளர்களுக்கு இல்லை என்பது நிஜம். பல்வேறு புறக்காரணிகள் வாழ்க்கையை இறுக்கிக் கொண்டிருக்கிற சிங்கப்பூர் சூழலில், கவலை - இலக்கியம் உயிர்ப்புடன் இருக்கிறதா அல்லது மெல்ல,மெல்ல இறக்கிறதா என்பதாகவே இருக்கிறது. இலக்கியம் - மரபுக்கவிதைகளாகவோ, வைரமுத்து பாணியிலான கவிதைகளுடன் உறவு கொண்டவர்களின் படைப்புகளாகவோ வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்பதே இங்குள்ளவர்களின் இலக்கிய ஆதங்கம்.

இன்றைக்கும் சிங்கப்பூர்கணிசமான அளவில் மரபுக் கவிஞர்களையும், மரபுக் கவிதைகளையும் உயிர்ப்புடன் அடைகாத்துவருவது ஊரறிந்த ரகசியம்.

· கனகலதா, இந்திரஜித், போப்பு போன்றவர்கள் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்குபெருமளவில்பங்களித்திருக்கிறார்கள் என்பது சிங்கப்பூர் சிராங்கூன் சாலை சீனிவாச பெருமாள் மீது சத்தியமாக உண்மைதான்...அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்தான் ! ஆனால்,அவர்கள்தான் சிங்கப்பூரில் இலக்கிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள் என்ற மூர்த்தியின் தொணியை ஒப்புக்கொள்ள மேற்குறிப்பிட்ட மூவருமே கூட 'கொஞ்சம் போலாவது' வெட்கப்படுவார்கள் என்று நினைக்கிறேன். இதைப்பற்றி பாஸ்கரன் மற்றும் அரவிந்தன் கருத்தை அறிய ஆவல்.

· கனிமொழி தமிழ்முரசில் பணியாற்றிய காலத்தில், 'போடர்ஸ்' புத்தகக்கடை விவகாரத்தில்இந்தியை தகர்த்து தமிழை இடம் பெறச்செய்தபோது ஏற்படுத்திய மொழிசார்ந்த விழிப்புணர்வை,சிங்கப்பூர் சூழலை உள்வாங்கி படைத்த தரமான கவிதைகளின் மூலம் பெற்ற கவனத்தை, எந்த எடைத்தட்டில் வைத்திருக்கிறார் மூர்த்தி என்பது தெரியவில்லை.

· சகல தளத்தில் இயங்கும் மக்களும் கலந்து கொள்ளும் 'கவிமாலை' என்ற மாதந்திர நிகழ்வைநடத்தி, தொடர்ந்து கவிதைகளை படைத்து வரும் பிச்சினிக்காடு இளங்கோவும், மாதந்தோறும்'கவிச்சோலை' நிகழ்வை நடத்தும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும், இலக்கிய விழிப்புணர்வைஏற்படுத்தவில்லை என்று அதை பார்க்காதவர்கள் அல்லது பங்கேற்காதவர்கள் மட்டுமே கூற முடியும்.

· எப்படி..இலக்கியம் என்பது 'நவீன கவிதைகள்' வட்டத்தை விடப் பெரியதோ, அது மாதிரி சிங்கப்பூரின் தற்கால இலக்கியம் என்பதும், இங்கு இலக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள்,ஏற்படுத்துகிறவர்கள் என்பதும், மூர்த்தி அறிந்ததை விட அல்லது அறியாததை விடப் பெரியது. 'ஆசியான் கவிஞர்' க.து.மு.இக்பாலை விட, கவித்தளத்திலும் சமூக தளத்திலும், பெரியவிழிப்புணர்வை சிங்கப்பூர் இலக்கியச் சூழலில் அமைப்புசாரா தனி மனிதர்கள் எவரும் ஏற்படுத்திவிடவில்லை. ஒரு வட்டத்தை விட்டு வெளியே நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும்.

· கடைசியாக ஒன்று...
சிங்கப்பூரில் கடலில் இருந்து மண்ணெடுத்து கரையில் கொட்டி, நிலப்பரப்பை நீட்டிக்கொண்டேபோகிறார்கள். ஆனால், சிங்கப்பூர் தமிழ் இலக்கிய படைப்பாளிகளோ தீவு தீவாக பிரிந்துகிடக்கிறார்கள். யாராவது நட்பு மண்ணெடுத்துக் கொட்டி, இந்த இலக்கியத்தீவுகளை இணைத்துவிட்டால், எதிர்காலத்தில் இன்னொரு தலைமுறை சுகமாக சுற்றிப்பார்க்க வசதியாக இருக்கும். யார் செய்யப் போகிறார் இந்த காரியத்தை ?

No comments: