Friday, February 25, 2005

சுனை விடும் மூச்சு - ஒரு சிங்கப்பூர் கவிதைத் தொகுப்பு

பழகிப்பார்த்தவர்களுக்கு தெரியும்...வாசித்தல் என்பது ஒரு சுகானுபவம்! வாசிக்கிற புத்தகம் நேசிக்கிற மாதிரி இருந்து விட்டாலோ, ஆஹா...இன்னும் சுகம்!

சில புத்தகங்கள் வாசிப்பு என்ற நிலை தாண்டி யோசிப்பு என்ற நிலைக்கு நம்மை இட்டுச்சென்று விடும்.அப்படிப்பட்டவை காலம் கடந்தும் நம் நெஞ்சில் நிலைத்து நின்று விடுகின்றன...காற்றில் சலனப்படும் அலையாக மனசுக்குள் அவை எழுப்பிவிடும் சிந்தனைகள் காலத்தின் ஓட்டத்தில் ஓய்வதேயில்லை...சமீபத்தில் அப்படியொரு புத்தகம் படிக்கும் வாய்ப்புக்கிடைத்தது.புத்தகத்தலைப்பு -சுனை விடும் மூச்சு! எழுதியவர் - இந்திரஜித் என்ற சிங்கப்பூரர்! இது ஒரு கவிதைத்தொகுப்பு.

வழக்கமான கவிதை தொகுப்புகளுக்கு இருக்கும் பளபளப்பு இல்லாமல், ஒப்பனைஇல்லாதபெண் போன்ற எளிமையான அட்டைப்படம்...கதவு இல்லாத வீடு மாதிரி முன்னுரையோ,முகவுரையோ இல்லாமல் கவிதைகள் சட்டென துவங்கிவிட..நமக்கு ஆச்சரியம்! வாசகரோடு தான் பேசுவது தவறு...தனது கவிதைகள் மட்டும்தான் பேசவேண்டும் என்ற கவிஞரின் நினைப்பு நமக்கு புரிகிறது...

நமது வாழ்க்கையில் தினமும் பார்க்கின்ற பொருள்கள் கூட இந்தக்கவிஞனின் பார்வையில் புதுப்புது அர்த்தங்களோடு தம்மை வெளிப்படுத்திக்கொள்கிறபோது...அட! என்று ஆச்சரியப்பட்டு நிமிர்ந்து உட்காருகிறது மனசு!

குறுக்குப் பாலமாய்
புளோக்குகளூக்கு
இடையில் தொங்கும் வயரில் -

ஆடைகள் குத்தி மாட்டப்பட்ட
மூங்கில் கம்புகளில்

ஏதோ சொல்ல நினைத்து
கொஞ்சம் தயங்கியபின்
விருட்டென்று
பறக்கிறது ....

அந்த
ஒற்றைக்கால் மைனா.

இந்தக்கவிதை அந்த இனத்தில் சேர்த்தி. மைனாவின் கால்களை முடமாக்கிய கவிஞர்,எந்திரத்தனத்தால் முடமாகிப்போன நமது வாழ்க்கையின் கால்களுக்கு கவிதைமருந்திட்டிருப்பது சுகமான சோகம்...இந்தக்கவிதை எழுத்தாளர் சுஜாதாவையும் பாதிக்க..கனையாழியின்கடைசிப்பக்கத்தில் பாராட்டியிருக்கிறார். காதலைப்பாடாதவன் கவிஞனா? காதல் இந்தக்கவிஞரையும் பாடாய் படுத்தியிருப்பதைபார்க்க முடிகிறது.

காரை விற்றவன்
பழைய ஞாபகத்தில்
சாவியைத் தேடுவது போல!
என்னுள் அந்த அலை
எழுந்து கொண்டே இருக்கிறது.

என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்.

பிழைப்பா,காதலா என்ற கேள்வி வரும்போது,பிழைப்பை நோக்கி ஓடோ ஓடென்றுஓடி விட்டு,பின்னர் கவிதையாகப் பெருமூச்சு விடும் ஏக்கத்தின் அடையாளங்கள் இந்தக்கவிதையில் ஏராளம்...

தாயை மகள் பிரிவதும்
தந்தையை மகன் பிரிவதும்
நண்பர்கள் பிரிய நேர்வதும்
ஏதோ ஒரு பிழைப்பைத் தேடிதான்!

அன்பே
உன் பிழைப்பு
எப்படி இருக்கிறது?

என்று கவிஞர் கேட்கும்போது...அதிர்ச்சி! 'உன் பிழைப்பு' என்ற வார்த்தை அந்தக்காதலை,அந்தக்காதலியை கொச்சைப்படுத்தி விட்டதோ என்ற நெருடல்.

மூளையை முன்வைக்கும்வாழ்க்கை வியாபாரத்தில்இதயம் இழக்கப்படுகிறது.
என அடுத்துவரும் வரிகள்...இதயத்தை இழந்துவிட்டால் இப்படியெல்லாம் பேசுவதுஇயல்புதானே என நினைக்கவைத்து நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன.

நகரமும்,நாகரிகமும் வாழ்க்கை வசதிகளை பெருக்கி, மனதின் வசதிகளை சுருக்கிவிட்டசோகத்தை சொல்லாமல் சொல்கிறது இவரது இன்னொரு கவிதை...

துருவங்கள்
எப்படி சந்திப்பது
புருவங்களே
சந்தித்துக் கொள்ளாதபோது ?

அதே நகரம், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கையை அதன் போக்கில் அப்படியேஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் அவனுக்குக் கொடுத்துவிட்டதை ஆயிரம் பிரச்சனைகளுக்கு நடுவிலும் "அதோ ஒரு கிழவன் டைம்ஸ் நாளிதழை ஒரு வரி விடாமல் படித்துக் கொண்டிருக்கிறான்" என்ற வரிகள் படமாக்கி மனதில் பதியவைத்தும் விடுகிறது.

ஒரு மழை நாளில், புத்தகநிலைய வாசலில் தனியாக மாட்டிக்கொண்ட அனுபவம் கூடஇவரிடம் கவிதையாகி இருக்கிறது.

படிப்பதற்கு ஒன்றும் இல்லாமல்
நூல் நிலைய வாசலில்
ஒரு மனிதனால்
என்ன செய்ய முடியும்?

இங்கே ஒருத்தியை எவனாவது
கற்பழித்தால் கூட
கையில் புத்தகத்தை
வைத்திருக்கும் மனிதனால்
அலறும் மழைக்குள்
என்ன செய்ய முடியும்?

சுயநலத்தால் நனைந்து போன மனிதன் இயலாமை இதழ் பிரித்தால் இப்படித்தானேபேசமுடியும்?மனிதனை இப்படியெல்லாம் கிண்டல் செய்வதில் இதில் வரும் கவிதைகள்சுகம் காண்கின்றன.

அங்கதச்சுவை இந்தக்கவிதைகளில் தூக்கலாக இருப்பதோடு,அவற்றை கை தூக்கியும் விடுகின்றன...

எவனாவது
எழுதி விடுவானோ
என்ற பயத்தில்
நிலா வாழைமரப் புதரில்.

மீ கடைக்கார
முதலாளியின்
வேட்டிக்கும் கைலிக்கும்
வெளுக்க நேரம் வரும்போது
எனக்கா வராது?

நேற்றைய மரம் எதுவென்று
தேடித்தவிக்கும் நாய்.

என்பதெல்லாம் சில உதாரணங்கள்.

இதுதான் என்றில்லாமல் எல்லா திசைகளிலும் பறக்கும் பட்டம் மாதிரி கண்ட திசைகளில்பறக்காமல் ஏதோ இலக்கைத்தேடி பறந்திருக்கிறது இந்திரஜித்தின் கவிதைகள்.

ஏதோ போக்கிடம்
ஏதோ இலக்கு
இல்லாவிட்டால்
ஏன் நடக்க வேண்டும்?

என்பது கவிஞரின் கேள்வி.

தமிழகம் தாண்டி பறந்துகிடக்கும் தமிழ்கவிதைகளில் தரமான கவிதைகள் பல உண்டுஎன்பதற்கு இந்த சிங்கப்பூர் கவிதை தொகுப்பு ஒரு உதாரணம்.இது விமர்சனக்கத்திகொண்டு கீறிப்பார்க்கும் எத்தனிப்பல்ல,வாசகநிலையில் இருந்து வீசப்பட்டிருக்கும்சாமரம்.உலகை சுருக்கிக்கொண்டிருக்கும் விஞ்ஞானத்தின் வீச்சில் தமிழ் கவிதைகள்மட்டும் விடுபடுவது நியாயமா?சிக்க வைப்போம்...

ஒரு கிணற்றுக்குள்
வீசப்படும் வாளி
திரும்பி வரும்போது
ஒரு தவளைக்கு
விடுதலை கிடைக்கலாம்...என்று முடிந்திருக்கிறது இந்திரஜித்தின் முத்தாய்ப்புக்கவிதை.

இந்த கவிதைத்தொகுப்பு நம் மனதுக்குள் இருந்தும் சில நினைவுகளுக்கு விடுதலை தரத்தவறவில்லை!வாசித்துப்பாருங்கள்...உங்களுக்கும் அந்த அனுபவம்வாய்க்கலாம்!!

1 comment:

Thangamani said...

நல்ல பதிவு, பாலு!