Monday, March 14, 2005

பாலாஜி என்ற கறுப்புப்புயல்

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து முடிந்த மொகாலி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தன் முழுத்திறனையும் வெளிப்படுத்தி இந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்த்த கள்வனாகியிருக்கிறார் லக்ஷ்மிபதி பாலாஜி.

கறுத்த நிறம், ஒல்லியான தேகம், அழகென்று சொல்லிவிட முடியாத ஓட்டம், கையை விசுக்கென்று சுற்றி பந்து வீசும் திறம் - இப்படி பாலாஜி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கியபோது, 'இன்னும் எத்தனை நாளைக்கோ..' என்ற சந்தேகக்கண்ணோடு பார்த்தவர்கள்தான் நிறையப்பேர். அதற்கேற்ற மாதிரி, மேற்கிந்தியத்தீவு அணி வீரர்கள் அவரது பந்து வீச்சை விளாசித் தள்ளிவிட, ' ரஞ்சி டிராபிப் போட்டியில் புலி மாதிரி பந்து வீசுபவர்கள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எலி மாதிரி பந்து வீசுகிறார்கள்' என்று கிண்டலடித்தார் அமித் மதூர் என்ற விமர்சகர்.

பலரும் இனி பாலாஜி அவ்வளவுதான் என்று முடிவு செய்திருக்க, ' குறித்துக் கொள்ளுங்கள்...இவர் இன்னும் பல வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடுவார்' என்று ஆருடம் கூறினார் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத். இன்று - பாலாஜி அவரது நினைப்பை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பாலாஜி,4 ஓவர்களில் 44 ரன்களைத் தந்ததும் ஏறக்குறைய ஒருவருடம் இந்திய அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். இந்த ஒரு வருடத்தில் இர்பான் பதானின் இடதுகை பந்துவீச்சும், அவரது இளமையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துக் கொள்ள, சென்னையின் ஒரு மூலையில், ஆரவாரமின்றி தனது திறனை கூராக்கிக் கொண்டிருந்தார் பாலாஜி.

ஸ்ரீநாதின் பந்துவீச்சை மாதிரியே, ஆடுகளத்தில் பட்டு உள்திரும்பி, விக்கெட்டைநோக்கி சீறிப்பாயும் பந்துகளே பாலாஜியின் பலம். ஆனால் 2004ல் பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் கிரிக்கெட் உலகம் ஒரு புதிய பாலாஜியைப் பார்த்தது. விக்கெட்டைவிட்டு விலகிச்செல்லும் பந்துகளை அநாயசமாக வீசப் பழகியிருந்தார். அவரது ஓட்டத்தில் ஒழுங்கும், நளினமும் கூடியிருந்தது. பாலாஜியின் மணிக்கட்டை விட்டுவரும் பந்துகள் எப்படித் திரும்பும் - உள்ளேயா அல்லது வெளியேயா என்று பந்தடிப்பவர்கள் திகைத்தார்கள்.

நெஹ்ரா, அகர்கர் போன்ற அனுபவசாலிகள் ஓரமாய் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க, 3 டெஸ்ட் போட்டிகளில் 12 பாகிஸ்தான் விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்லோரும் பயந்து கொண்டிருந்த சோயப் அக்தரை ஆறுக்கு தூக்கியடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது இன்னொரு உபரிச்சம்பவம். இருட்டரையில் விளக்கேற்றியது மாதிரியான பளிச்சென்ற பாலாஜியின் புன்னகைக்கோ பாகிஸ்தான் முழுக்க ஏராளமான ரசிகர்கள்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை...பாகிஸ்தானிலிருந்து திரும்பிய கொஞ்சநாளில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுடன் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்த நாட்களில் இந்தியாவிற்கு விளையாடிய ஜாகிர்கான், பதான், நெஹ்ரா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுமே இடது கைக்காரர்களாக இருக்க, பாலாஜியின் வலதுகைப் பந்துவீச்சின் இழப்பை உணர்ந்தது இந்திய அணி, - குறிப்பாக கேப்டன் கங்குலி.

கங்குலிக்கு பாலாஜி மேல் ஏராளமான நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் மொகாலி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாலாஜிக்கு இடம் வாங்கித் தந்தது. அதில் அவர் எடுத்த 9 விக்கெட்டுகளும், 34 ஓட்டங்களும் அந்த நம்பிக்கை சரிதான் என்று நிருபித்திருந்தாலும், 'அந்த' ஐந்தாம் நாள் காலையில் மட்டும் பாலாஜி இன்னும் "ஒரே ஒரு " விக்கெட்டை எடுத்திருந்தால், இந்த நிமிடம் - அவர்தான் ஹீரோ! மேடும் பள்ளமும் நிறைந்ததுதானே வாழ்க்கை?

எது எப்படியோ, மொகாலி கிரிக்கெட் டெஸ்டில் பக்க வாத்தியமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாலாஜி, முழுக்கச்சேரியும் நடத்தியிருப்பது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை, குறிப்பாகத் தமிழ் கிரிக்கெட் ரசிகர்களை "ஓ" போட வைத்திருக்கிறது. மொத்தத்தில் பாலாஜியின் பந்து வீச்சைப் பற்றி இப்படித்தான் சொல்ல வேண்டும்... இது முடிவல்ல, ஆரம்பம் !

No comments: