Monday, March 21, 2005

வீட்டுக்கு அனுப்பீடாதீங்க சாமிகளா!

போன பதிவான 'ஜெயிக்குமா இந்தியா, தோற்குமா பாகிஸ்தான்" பற்றி - 'ரெண்டுமே ஒன்றுதானே, குழப்பம் ஏன்? ' என்று கேட்டார் வசந்தன். விளக்கினேன். அந்த விளக்கத்தின்படி பார்த்தால், கொல்கத்தா டெஸ்டில் இந்தியா வென்றிருக்கிறது.

கொல்கத்தா டெஸ்டின் நிஜ ஹீரோ யாரென்றால் - ஒரு விநாடிகூட யோசிக்காமல், தினேஷ் கார்த்திக்கை நோக்கி விரல் நீட்டுவேன். இந்த டெஸ்டின் துவக்க தினத்தன்று, இந்திய அணியில் கார்த்திக்கின் நிலை என்பது 'திக்,திக்' சங்கதிதான். ஒருவேளை கார்த்திக் இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன் அடித்து இந்திய அணி தோற்றுமிருந்தால், இந்த நிமிடம் அவரை தயவு தாட்சண்யமின்றி தூக்கியிருப்பார்கள். பாவம், பார்திவ் படேலும் எவ்வளவு நாள்தான் மூட்டை முடிச்சுகளோடு வீட்டில் காத்திருப்பார். தன் மீது திணிக்கப்பட்ட pressure-ஐ கார்த்திக் என்ற பதின்ம வயது இளைஞன் சமாளித்த விதம்தான் அவரை ஹீரோ என்று விரல் சுட்ட வைக்கிறது.

கொல்கத்தா டெஸ்டில் எடுத்த 93 ரன்கள் மூலம், தோல்வி பயமில்லாத, ஹர்பஜன் சிங், கயி·ப், யுவராஜ்சிங், சேவாக் போன்ற இளைய தலைமுறை இந்திய கிரிக்கெட்டர்கள் வரிசைசயில் கார்த்திக்கும் சேர்ந்திருக்கிறார். You can't keep a goodman down என்று சொல்லுவார்கள். கார்த்திக் அந்த ஜாதி. எல்லா கிரிக்கெட் ஷாட்ஸீம் அவருக்கு எளிதாக கை வருகிறது. பார்க்க சலிப்பில்லாத அழகும் நளினமும் நிறைந்த பேட்டிங். இன்றையதினம் கார்த்திக்கின் confidence உச்சத்திலிருப்பதற்கு, யூனுஸ்கானை அவர் ஸ்டெம்பிங் செய்த விதமே சாட்சி. Welldone Kaarthick!

லக்ஷ்னண் ஏமாற்றமளித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில், விழியை ஒட்டி அடிபட்டு வீங்கிய முகத்துடன், இந்திய அணியின் வெற்றிக்காக அடித்தாடி ரன் எடுத்த சுயநலமற்ற லக்ஷ்மணை இந்திய அணியை விட்டு drop செய்யக்கூடாது என்று தேர்வுக்குழுவை சலாம் வைத்து கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது. ஆண்மையோ, பெண்மையோ அற்ற ரெண்டும் கெட்டான் மைதானங்களில் சதமடித்து என்ன பயன்? நீங்கள் எடுக்கும் ரன்கள் அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். திராவிட் எடுத்த 2 சதங்களைப்போல, லக்ஷ்மண் எடுக்கும் ரன்கள் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கவோ அல்லது வெற்றி பெற வைக்கவோ எப்போதும் உதவியிருக்கின்றன.

உலகக் கிரிக்கெட்டில் இரண்டு Robotsகள் தற்போது உபயோகத்தில் இருக்கின்றன. ஒன்றின் பெயர் - கிளன் மெக்ரத். இன்னொன்று ... நம்ம அனில் கும்ளே. ராத்திரி 12 மணிக்கு தூக்கத்தில் எழுப்பி, ' அழகா ஒரு flipper போடுங்க சார் ' என்று கேட்டால், போட்டே விடுவார் ஆசாமி. முடிந்தால் விக்கட்டும் எடுத்து விடுவார். இந்த 34 வயது இளைஞரின் பந்து வீசும் திறன் ஆண்டுகளின் ஓட்டத்தில் கூராகி, உச்சம் தொட்டிருக்கிறது. இன்னும் 3 வருடமாவது அவர் இந்திய அணிக்காக உருப்படியாக விளையாட முடியும். ' யோவ்... உனக்கு வயசாயிருச்சு...இளைஞர்களுக்கு வழிவிடு...போய் வேற வேலையப் பாரு ' என்று ஏதாவது ஒரு தேர்வுக்குழு வீட்டுக்கு அனுப்பாமல் இருக்க, ஆண்டவன் அருள் புரியட்டும்.

கொல்கத்தா டெஸ்டின் கடைசி மதியம்தான் ஹர்பஜனின் பந்துவீச்சில் பழைய சூட்டைப் பார்க்க முடிந்தது.பெங்களூர் கிரிக்கெட் டெஸ்டில் இவர் முழுமையாக ஜொலிக்கக் கூடும். ஆனால் எனக்கென்னவோ, சமீபகாலமாக கட்டை மன்னராகி இருக்கும் டெண்டுல்கர் அதிரடிக்கப் போவதும், பாலாஜி மறுபடியும் பாகிஸ்தானை முடக்கப் போவதும் நடக்கப் போவதாகத் தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க ?

3 comments:

Unknown said...

//சமீபகாலமாக கட்டை மன்னராகி இருக்கும் டெண்டுல்கர் அதிரடிக்கப் போவதும், பாலாஜி மறுபடியும் பாகிஸ்தானை முடக்கப் போவதும் நடக்கப் போவதாகத் தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க ?//

உங்க வாய் முகுர்த்தம் பலிக்கட்டும் அண்ணாச்சி, ஒரு வாய் சர்க்கரை போடுறேன் :-).

Narain Rajagopalan said...

பாலாஜியை வேண்டுமானால் ஒத்துக் கொள்கிறேன். தெண்டுல்கர் ஹூம் ...ஹும்ம் எனக்கென்னவோ நம்பிக்கையில்லை.

பாலு மணிமாறன் said...

I am watching test cricket from 1979...Mostly my gut feelings were proved right over the years...

If it can be proved right again... hope - we all are going to be happy Mr.KVR & Mr.Narain : )))