நேற்று சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி வசந்தம் சென்ட்ரலில் "அக்னி" என்றொரு தொடர் ஒளிபரப்பானது. மீசையில்லாத ஜெய்கணேஷ் என்ற இளைஞர் ஆண், பெண் என்று எல்லோரிடமும் மைக்கை நீட்டி " ஆண்களுக்கு மீசை அவசியமா? " என்று கேட்டுக் கொண்டிருந்தார். பதில்களை சுவாரஸ்யமாக கவனித்தேன் - முக்கியமாக பெண்களின்!
அவர்களின் பதில்கள் வெவ்வேறாக இருந்தது.
ஒருவர் பெண் சொன்னார் - ' மீசை என்பது ஆண்களுக்கு அவசியம். மீசை வைத்த ஆண்கள்தான் பார்க்க manly-யாக இருப்பாங்க. அவங்களைப் பார்க்கும்போதுதான் ஓ.கே. இந்த ஆள் நமக்கு பாதுகாப்பாக இருப்பார்னு ஒரு secured feeling வரும்" என்று. மீசை வைத்தவர்கள்தான் man மீசையில்லாதவர்கள் boys என்று கொசுறாக இன்னொரு விளக்கமும் சொன்னார். ஏனோ எனக்கு புஷ்ஷ¤ம், சதாமும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.
மீசை இல்லாமல் இருப்பதுதான் இன்றைய fashion. ஆண்கள் மீசை இல்லாமல் இருப்பதே better. என்பது ஒரு பதின்ம வயது அம்மணியின் கருத்து.
ஆண்களின் கருத்தும் வெவ்வேறாகத்தன் இருந்தது.
பெரும்பாலான இளையர்கள் " அப்பா, மீசை வச்சாதான் இந்திய ஆணுக்கு அழகுன்னு சொல்றார். அது அந்தக்காலம் ... எங்களுக்கு மீசை இல்லாமல் இருக்கத்தான் பிடிக்குது " என்று மீசையில்லாமல் சொன்னார்கள்.
ஒருவர் மட்டும் மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான் பரம்பரையின் மிச்சம் மீதி மாதிரி, கடைசிவரை எக்காரணம் கொண்டும் மீசையை விட்டுதரவே மாட்டேன் என்று சொல்ல, பேட்டியெடுத்த ஜெய்கணேஷ் " மீசையை எடுக்கா விட்டால் வேலையே காலிங்கிற சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வீங்க " என்று கேட்க, " வேலையை விட்டுடுவேன். இன்னொரு வேலை கிடைக்காதா என்ன ? என்று திருப்பிக் கேட்டார் கூலாக. அதைக்கேட்டதும் எனக்கு மெய்யும் சிலிர்த்தது, கூடவே மீசையும் சிலிர்த்தது.
மீசை பற்றிய எனது அனுபவங்கள் பலவிதம். பதின்ம வயதில் ஒருமுறை மொட்டையடித்து, மீசையெடுத்துவிட்டு வீட்டுக்குப் போக, என் தங்கைகள் பயமின்றி என்னுடன் பேச 2 வாரம் ஆச்சு. சிங்கப்பூருக்கு வந்த பிறகு மீசையோடு சிலவருடங்கள், மீசையின்றி சில வருடங்கள் என்று இருந்து பழகியதில் ஒரு விஷயம் தெரிந்தது - சீனர்கள், ஜப்பானியர்கள் போன்ற மாற்று இனத்தவர்கள் மீசையில்லாத இந்தியர்களையே அதிகம் விரும்புகிறார்கள். முத்து படத்தில் நடித்த மீனாவை ஜப்பானியர்களுக்கு பிடித்ததற்கு அதுதான் காரணம்.:))
சிங்கப்பூர், மலேசியாவில் இருக்கிற மலாய், சீன இனப் பெண்களுக்கு ஷாருக்கான், அமீர்கான் போன்ற ஆசாமிகள் மீது இருக்கும் லயிப்புக்கு மீசையற்ற அவர்களது மொழுக் முகமும் ஒரு காரணம் என்று உணர முடிகிறது. இந்த இரண்டு நாடுகளிலும் அரசியலில் இருக்கிற நம்ம ஆட்கள் மீசை என்ற விஷயத்தை வெகு ஜாக்கிரதையாக தவிர்க்கிறார்கள். மீசை நம்மை மற்ற இனத்தவரிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிற அதே வேளை, அந்நியப்படுத்தியும் விடுகிறது என்ற யதார்த்தமே அதற்குக் காரணம்.
அதே சமயம் மலேசியாவில் இருக்கிற நமது தமிழ் இளைஞர்கள் மீசையை இழந்துவிடாமல் ஆசையாய் அதை வளர்ப்பதை அதிசயித்து பார்த்திருக்கிறேன். " அது எப்பிடிலா மைக் மீசையை எடுக்கிறது...அதானே நம்ம அடையாளம் " என்பது அவர்களில் பலரது எண்ணம். மீசை இங்கு ஒரு இனத்தின் முகவரியாக இருக்கிறது.
வெளிநாட்டுச்சூழலை விடுங்க... இந்தியாவில்?
முன்னாடியெல்லாம், குமுதம், ஆனந்த விகடனில் கல்லூரி மாணவர்கள் குரூப் ·போட்டோ வரும் போது அதில் மீசையில்லாத தமிழ்க்குடி மகனை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேட வேண்டும். இப்போ? நீங்களே சமீபகால குமுதம், ஆனந்த விகடனை எடுத்துப் பாருங்களேன்....
சரி... " இன்றைய இந்திய ஆண்களுக்கு மீசை தேவையா, இல்லையா ?" உங்களை சாலமன் பாப்பையாவாக நினைத்துக் கொண்டு, சொல்லுங்கள் பார்ப்போம் தீர்ப்பை !
5 comments:
உங்கட பதிவப் பாத்ததும் உடன ஓடிப்போய் மீசய எடுத்திட்டு வந்துதான் பதிலே எழுதிறன் எண்டாப் பாருங்கோவன்.
உலக ஆண் இனத்தில் 90% சதவீதம் மீசை இல்லாம தான் அலையுதுக. உம்மா கொடுக்கும் போது கன்னம் பஞ்சர் ஆகிவிடுவதாலோ என்னமோ வீர மறத்தமிழச்சிகளைத் தவிர வேறு எந்தப் பெண்களும் மீசையை விரும்புவதில்லையோ என்னமோ. வீரத்தில் விளைநிலமாக இருந்த வாய்க்கும் மூக்கும் இடைப்பட்ட பகுதி நிறைய பேருக்கு எம்டியாக(empty) இருக்கிறது.
மீசையிருந்தால் அசௌகரியங்கள் ஜாஸ்தி. மெய்டனஸ் காஸ்ட் வேற ஜாஸ்தி தலீவா. காலையில எழுந்திரிச்சி அங்க வெட்டி இங்க வெட்டி சரி பண்ணி ஒரு லுக்குக்கு கொண்டுவரதுக்குள்ள நாக்கு தள்ளி வெளியே வந்துருது.தொங்கு மீசை கொண்டுவர ட்ரை பண்ண பாதி நேரம் ஹிட்லர் மீசை ஆகிறுது. ஹிம்ம்... ஆம்பிளைங்க கஷ்டம் ஆம்பிளைங்களுக்கு.
நிறைய பொண்ணுங்க என்னை பார்த்து லுக்கே விடலே டீன் - ஏஜ்ல. ஏன்னு பார்த்த முன்னாடி தூக்கிட்டுருக்கிற ரெண்டு பல்லை சரி பண்றதுக்கு மீசை வளர்க்க ஆரம்பிச்சேன். அது வளர்ந்து முடிக்கிறதுக்குள்ள பொறுமையில்ல. பாமாயில், கோகனட் ஆயில், அஸ்வினி கேசவர்தினி தைலம் எல்லாம் போட்டு வளர்த்தாலும் ஒரு ரேஞ்சுக்கு மேல போகல.ஒரளவு வளர்ந்த மீசையை பொறாமைக் கொண்டு காலேஜ் நண்பர்களின் கைங்கரியத்திலிருந்து காப்பாற்ற நான் பட்டபாடு அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.ஏனென்றால் ஒரு இரவு என் மீசையை பிளேடு கொண்டு சிரைத்து விடுவதாக சபதம் கொண்டிருந்தனர்.
சிங்கப்பூர் வந்த பிறகும் பேபி மாதிரி இருக்கும் சீன பெண் மேலாளர், நான் ஒரு நாள் சேவ் செய்யாமல் வந்தாலும், ஏன் சேவ் செய்யலைன்னு கேட்டுக்கிட்டே மீசைய தான் பார்ப்பாள். இன்னிக்கு திங்கள் கிழமை. இந்தியாவில சேவ் பண்ணக்கூடாத நாள்ன்னு சொல்லி சமாளிப்பேன்.
இப்படியே என் மீசைக் கதையை சொல்லிக் கொண்டே போகலாம். அது ஒரு பெருங்கதை Vs காவியம்.
//சீனர்கள், ஜப்பானியர்கள் போன்ற மாற்று இனத்தவர்கள் மீசையில்லாத இந்தியர்களையே அதிகம் விரும்புகிறார்கள். முத்து படத்தில் நடித்த மீனாவை ஜப்பானியர்களுக்கு பிடித்ததற்கு அதுதான் காரணம்.:))//
இதென்ன வம்பா இருக்கு. மீனாவுக்கு மீசை இருந்த ரஜினிக்கு மீசையிருந்திருக்காது. ஹா ஹா... அப்புறம் மீனா, மீனப்பன் ஆகியிருப்பார்.
வசந்தன்... நீங்கள் எந்த நாட்டில் இப்போது இருக்கிறீர்கள் என்பது தெரியாததால், நீங்கள் மீசை எடுத்ததன் நோக்கத்தை சரியாக ஊகிக்க முடியல... : )))
விஜய்..உங்க பின்னூட்டமே காவியமா இருக்கு... சீக்கிரமே அந்த மகாகாவியத்தை எழுதி விடுங்க...
உங்கள் இந்த பதிவு மட்டும் ஃபையர் ஃபாக்ஸில் சரியாக தெரியவில்லையே!
Post a Comment