நடுவிலிருந்து
கடைசியிலிருந்து
எப்படியிருந்தோ
துவங்கிவிடுகின்றன
அவனுக்கான
அவனது கவிதைகள்.
அவனைக் கேட்காமலே
தம்மைத் தாமே
எழுதியும் கொள்கின்றன.
அவன் உடுத்தி விடும்
ஆடைகளையெல்லாம்
கழற்றி எறிந்துவிட்டு
ஒரு குழந்தை மாதிரி அவை
நிர்வாணமாய் சிரிக்கின்றன.
சில நடக்கும்,
சில நடனமிடும்
சின்ன சில்மிஷங்களோடு
ஓய்ந்து போகும் சில.
ஒரு வரியோடு
படுத்தே கிடப்பதுண்டு
சில சோம்பேறிக் கவிதைகள்.
வந்த சுவடின்றி வந்துவிட்டு
வனப்புக் காட்டி, உயிர்ப்பித்து
சதையோடும், வளைவோடும் சரசமாடி
கலந்துவிட்டுப் போகும் சில
காமுகிக் கவிதைகள்.
அறைவதும் உண்டு சில.
தெளிய சில நாள் பிடிக்கும்.
தெளிந்ததாய் நினைக்கையில்
மறுபடியும்
உச்சிமயிர் பிடித்து உலுக்கும்.
இப்படித்தான் என்றில்லை...
நடுவிலிருந்து
கடைசியிலிருந்து
எப்படியிருந்தோ
துவங்கிவிடுகின்றன
அவனுக்கான
அவனது கவிதைகள்.
Thanks to : " Thinnai "
2 comments:
நண்பரே,
மிகவும் நல்ல கவிதை.
கடைசி பத்தியில் முதல் வரிகள் வருவதை தவிர்த்திருக்கலாம்.
அன்புடன்
ராஜ்குமார்
ம்ம்ம்... யோசித்தேன். கடைசிபத்தியை மாற்றி எழுதுவது நல்ல யோசனை என்றே படுகிறது. நன்றி ராஜ்குமார்
Post a Comment