Tuesday, December 20, 2005

அன்புச்செல்வன் என்ற மலேசிய எழுத்தாளர்
இடமிருந்து வலமாக - அன்புச்செல்வன், புரவலர் போப் ராஜ், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், நான்

(கடந்த 18 டிசம்பர் 2005 அன்று சிங்கப்பூரில் நடந்த அன்புச்செல்வனின் " திரைப்படங்களின் தாக்கங்கள் " என்ற நூல் வெளியீட்டு விழாவில் இடம் பெற்ற எனது உரை )

அது 90களின் இறுதி வருடங்கள். குறிப்பாகச் சொல்வதென்றால் 1996-97.

பணியின் காரணமாக நான் மலேசியாவில் இருந்தபோது - மலேசிய இலக்கியமும் , இலக்கியவாதிகளும் மெல்ல,மெல்ல அறிமுகமானார்கள். அப்படி எழுத்தின் மூலம் அறிமுகமாகி, ஆற்றல்மிக்க ஒரு இலக்கியவாதியாகவும், ஆடம்பரமற்ற, அன்புமிக்க ஒரு எளிய மனிதராகவும் என்னை ஈர்த்தவர் எழுத்தாளர் அன்புச்செல்வன்.

பால் மரக்காடுகளும், செம்பனைத்தோட்டங்களும் நிறைந்த மலேசிய மண், மனித வாழ்வின் சகல தளங்களிலும் மனிதனை நிறுத்தி, அவனுக்கு வாழ்க்கை நெடுக அனுபவங்களை வழங்கி, முழுமையாக்கித்தான் முடிக்கிறது.
ஒரு இந்தியத் தமிழரோ, இலங்கைத்தமிழரோ அல்லது சிங்கப்பூர் தமிழரோ சந்திக்க முடியாத பிரத்தியேகமான வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியதாகவும் மலேசியத் தமிழரது வாழ்க்கை இருக்கிறது. அவற்றை முறையாக பதிவு செய்வது வரலாற்று அவசியம். அந்தப்பணியை செய்கிற கடமையுள்ளவர்களாக இலக்கியவாதிகள் இருக்கிறார்கள்.

அதிர்ஷ்டவசமாக அத்தகைய பதிவுகளைச்செய்யும் ஆற்றல்மிக்க தமிழ் இலக்கியவாதிகள் மலேசியமண்ணில் இன்றும் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களில் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என சகல முனைகளிலும் ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி, மலேசியத்தமிழ் இலக்கியத்திற்கும், அதன் மூலம் உலகத்தமிழ் இலக்கியத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருப்பவர் அன்புச்செல்வன்.

ஒரு எழுத்தாளன் - பல படைப்புகளின், படைப்பாளிகளின் பாதிப்பில் உருவாகி, வருடங்களில் ஓட்டத்தில் மெதுவாக உருமாறி, இறுதியில் தனக்கென ஒரு சுயத்தை உருவாக்கிக் கொள்கிறான். அப்படி உருவாகிற சுயம், அந்த எழுத்தாளனது சிந்தனை முறையை, சதா உள்ளோடிக் கொண்டிருக்கும் உணர்வுகளை, அவற்றின் பிம்பத்தை வாசகனது முன்னிறுத்துகிறது.

அந்த எழுத்தும் அவனும் வேறு வேறல்ல. அதுதான் அவன்: அவன்தான் அது.

அப்படி ஒரு சுயம் அன்புச்செல்வனது எழுத்துக்கும் இருக்கிறது. அதில் மிக மகிழ்ச்சியான விஷயம் - அந்த எழுத்து பல விஷயங்களிலும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. குறிப்பாக அவரது சிறுகதைகளை படிக்கிற யாருமே அந்த ஆச்சரியதிற்கு உட்படாமல் தப்பிக்க முடியாது. அவருக்கு நடக்கிற, அல்லது அவரைச்சுற்றி நடக்கிற விஷயங்களை அதை விட்டு விலகி நின்று, கிண்டலும்,கேலியுமாக விமர்சனப்பார்வை பார்க்கிற கலை அன்புச்செல்வனது மிகப்பெரிய பலம்.

ஒரு சிறுகதையில் இருதயத்தையும், நுரையீரலையும் காதலிக்கும் மனைவிக்கும் ஒப்பிடுகிறார்:

" இருதயம் காதலி மாதிரி. அடிக்கடி கோவிச்சுக்கிட்டு ஒரு சின்ன இடைஞ்சல் வந்தாலும் எச்சரிக்கை செய்துக்கிட்டே இருக்கும். ஆனா, லிவர் அந்த டைப் இல்ல. அது தாலி கட்டிய மனைவி மாதிரி. தாங்கிற வரைக்கும் சத்தம் போடாம பொறுமையா இருக்கும். ஒரு நிலைமைக்கு மேல போனால் அவ்வளவுதான் "

குறிப்பாக மரணம் பற்றிய பயம் அல்லது எதிர்பார்ப்பு, சற்று வயது முதிர்ந்த எழுத்தாளர்களின் எழுத்தில் எதிரொலிப்பது இயற்கை. ஆனால், மரணத்தை அல்லது மரணமடைந்தவர்களைப் பற்றி எழுதுகிறபோதோ இவரது எழுத்துகளில் "ஒரு சிட்டிகை" நகைச்சுவை உணர்வுவே அதிகமாக வெளிப்படுகிறது.

" கட்டையோடு கட்டையாய் படுத்துக்கிடந்த ராமசாமி வெட்டியானை ரொம்பவும் சோதனை செய்து கொண்டிருந்தான்.1971 வெள்ளத்திலேயே முக்கால் டின் மண்ணெண்ணையில் கதையை முடித்துவிடும் சாமார்த்தியம் படைத்த அனுபவசாலிக்கு இன்றைக்கு எரிச்சலாய் இருந்தது.வேறொரு ஆசாமியாய் இருந்திருந்தால் அடித்துக்கொண்டிருக்கும் இந்த வெயிலிலேயே கருகிப்போயிருப்பான்.இந்த ராமசாமி மூடியிருந்த பெட்டியையும் சாப்பிட்டுவிட்டு வானத்தை நோக்கி சிரித்துக் கொண்டிருந்தான்."

இறந்து, எமலோகத்திற்குப் போன அவனைப்பற்றி சொல்கிறபோது - " செத்துப் போய் விட்டோமே என்ற சோக ரேகையே முகத்தில் படர்ந்திருக்கவில்லை. ஏதோ அடிக்கடி அங்கே வந்து போய்க்கொண்டிருப்பவர் போல மிகவும் தெளிவாக இருந்தார் " என்று குறிப்பிடுகிறார்.

கடந்த 20 ~ 25 ஆண்டுகளில் மனித இனம் மிகப்பெரிய சமூக, கலாச்சார, இன மொழி மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. கனவு என்றால் என்னவென்று தெரியாத பிள்ளைகளுக்கு dreams என்று மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டிய அவலத்தை கால ஓட்டத்தில் நடக்கிற மாற்றமாக ஏற்று வாழ கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த வருத்தத்தை அன்புச்செல்வன் அவரது எழுத்தில் கதையாக, கவிதையாக, கட்டுரையாக அழுத்தமாக பதிவு செய்து வருகிறார்.

நல்ல மனிதர்களின் படைப்புகள் நல்ல இலக்கியமாக மலர்கிறது. அன்புச்செல்வன் படைப்பதெல்லாம் நல்ல இலக்கியமாக இருப்பதன் ரகசியம், அடிப்படையில் அவர் ஒரு நல்ல மனிதர் என்பதுதான். இதை பல சந்தர்ப்பங்களில் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

"விழித்திருக்கும் ஈயக்குட்டைகள்" என்ற இவரது திகில் கதைகள் ,தொடராக மக்கள்ஓசை வார இதழில் வெளிவந்த சமயம், நானும், எனது நண்பர் தண்ணீர்மலையும் அதை கடுமையாக விமர்சனம் செய்தோம். அன்புச்செல்வன் அந்த விமர்சனங்களை தைரியமாக எதிர்கொண்டார். எழுத்தாளர் புண்ணியவான் போன்றவர்கள் அன்புச்செல்வன் எழுதுவது திகில் கதைதான் என்று ஆதரித்தார்கள்.

நானும் என் விமர்சனத்தில் " ஆமாம். இவர் எழுதுவது திகில் கதைதான். ஆனால் யாராவது அதை திகில் கதை இல்லை என்று சொல்லாமல் இருக்க வேண்டுமானால் கதை நடுவே ஆங்காங்கே "திகில், திகில்" என்று போட்டு விடுங்கள். அப்புறம் யாரும் அதை திகில் கதை இல்லையென்று சொல்ல முடியாது. அதையும் மீறி, இல்லையென்று யாராவது சொன்னால், உங்களை ஆதரிக்க ஏதாவது ஒரு புண்ணியவான் இல்லாமலா போய் விடுவார்.." என்று சொல்லி வைத்தேன்.


கொஞ்ச நாட்களுக்கு முன் அந்த புத்தகத்தை நூல் வடிவில் பார்த்தபோது, எனது "அந்த" விமர்சனத்தையும் அன்புச்செல்வன் அவரது நூலில் சேர்த்திருந்ததை பார்த்தேன். அதுதான் அன்புச்செல்வன். அந்த நேர்மைக்கும், எழுத்து ஆண்மைக்குமான வணக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

அன்புச்செல்வனது கதையோ, கட்டுரையோ - எதை படித்தாலும், அதை நீங்கள் முழுமையாக படித்து முடிப்பதற்குள் ஏதாவது ஓரிடத்தில் உங்கள் இதழோரத்தில் மெல்ல ஒரு புன்னகை அரும்புவதை தவிர்க்கவே முடியாது. அத்தகைய அனுபவம் சுஜாதாவின் எழுத்துக்களை, அன்புச்செல்வனது எழுத்துக்களை படிக்கும்போது மட்டுமே எனக்கு நேர்ந்திருக்கிறது. நீங்கள் படித்தால், அந்த அனுபவம் உங்களுக்கும் நேரக்கூடும்.

இன்று வெளியாகும் திரைப்படத் தாக்கங்கள் பற்றிய நூல் அன்புச்செல்வனது எழுத்துப்பயணத்தில் இன்னொரு எல்லைக்கல். இன்னும் அவர் எட்டக்கூடிய எல்லைகள் எவ்வளவோ இருக்கிறது.

குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளில் மலேசியப் பொருளாதரத்தில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களால் மலேசியத்தமிழரது வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களை மையமாக வைத்து அவர் ஒரு நாவலை எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து, இத்தகைய நிகழ்வுகள் மூலம் உலகம் தழுவிய தமிழ் இலக்கியப்பாலத்தை ஏற்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் முயற்சிகள் போற்றத்தக்கது என்பதை தெரிவித்து அமர்கிறேன்.

பாலு மணிமாறன்
18 டிசம்பர் 2005.

8 comments:

ramachandranusha(உஷா) said...

தகவலுக்கு நன்றி. ஒரு சிறு சந்தேகம். வலைப்பதிவுகளில் "அன்பு" என்று எழுதுபவரும் அன்புச்செல்வனும் ஒருவரேவா? அன்பு
சிங்கையில் இருக்கிறார். உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

அன்பு said...

வணக்கம் பாலு. வாரயிறுதியில் நிகழ்ச்சி பற்றி ஒலி-யில் கேள்விப்பட்டேன், இருந்தாலும் வர இயலவில்லை. திரு. அன்புச்செல்வன் அவர்கள் பற்றிய நல்லதொரு அறிமுகத்துக்கு நன்றி.

உஷா...
நீங்கள் சிங்கை-யிலிருப்பவரிடமே கேட்டிருக்கலாம். பாவம் பாலு!
இருந்தாலும் இவ்ளோ நம்பிக்கையா எம்மேல வைக்கிறது..!? அவ்ளோ அடக்கமாவா நான் நடந்திருக்கிறேன். டூ மச்... என்னுடைய பெயர் இதுவரை கல்யாணப் பத்திரிக்கையிலும், குப்பையிலும் மட்டுமே வந்திருக்கிறது.

என் முழுப்பெயர்: அன்புச் செழியன்.

ramachandranusha(உஷா) said...

அன்பு, இந்த பதிவைப் பார்த்ததும் கொஞ்சம் ஆடிப் போயிட்டேன், பாலு மணிமாறன் மட்டும் ஆமாம் என்றிருந்தால் ...., பெரிய சண்டைக்கு போடலாம் என்று தயாராய் இருந்தேன் :-)

அன்புச் செல்வன், பதிவு வைத்திருக்காரா?

பாலு மணிமாறன் said...

அன்பு, உஷா இருவருக்கும் நன்றி !

உஷா.. இந்த அன்பு இல்லைங்க அந்த அன்பு! இவர் சிங்கப்பூர், அவர் மலேசியா ! இவர் அமைதி, அவர் கலகல ! இவர் சண்டை போடமாட்டார், அவர் போடுவார் !

ஆனால் அவருக்கு வலைப்பூ கிடையாது. நீங்கள் எது வேண்டுமானாலும் இங்க திட்டுங்க... நான் அவருக்கு ·போன் செய்து சொல்லி விடுகிறேன் - அவர் திருப்பித் திட்டினால் அதையும்தான்! :))

Anonymous said...

Mani, tried checking your blog after a long time but i am unable to view the blog becos of some font issues can you please let me know where i can get the font downloaded

regards
J.Vijay
(Venkates machan)

Anonymous said...

sorry forgot to leave my id.its vijaa@hotmail.com

regards
J.Vijay

meenamuthu said...

அன்புச் செல்வனை பற்றி நீங்கள் எழுதியிருப்பது
படித்து மிகவும் பெருமிதமாக இருக்கிறது!

உங்களின் எல்லா பதிவுகளுமே மிக நன்றாக இருக்கிறது!மிகமிக தாமதமாக வந்து இன்றுதான் எல்லாமும் படித்தேன்!


நன்றி
மீனா.

பாலு மணிமாறன் said...

நன்றிங்க மீனா...
அவ்வப்போது வந்துவிட்டு மறைந்து விடுகிறீர்கள். தொடர்ந்து வாருங்கள்!