Monday, February 27, 2006

விசிட்டிங் கார்டு மாதிரி கவிதை புஸ்தகம் தந்த கதைசிங்கப்பூர் வரவிருந்த கவிஞர் நா.முத்துக்குமார் பற்றி அறிந்து கொள்வதற்காக அவரது புத்தகங்களை சிங்கப்பூர் நூலகத்தில் இருந்து இரவல் வாங்கி படித்துக் கொண்டிருந்தேன். "நியூட்டனின் மூன்றாவது விதி" என்ற கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் - நா.முத்துக்குமாரின் முந்தைய தொகுப்பான " பட்டாம் பூச்சி விற்பவனில்" தன்னை பாதித்த வரிகள் என்று கந்தர்வன் கீழ்வரும் வரிகளைக் குறிப்பிட்டிருந்தார்....

"பொண்டாட்டி தாலியை
அடகு வச்சு
புஸ்தகம் போட்டேன்
தாயோளி
விசிட்டிங் கார்டு மாதிரி
ஓசியில் தர வேண்டியிருக்கு "

பட்டென்று நிறுத்தி முகத்தில் அறைந்த வரிகள்.

இதை படித்துவிட்டு வலி தாங்காமல் கந்தர்வன் ஐம்பது ரூபாய் அனுப்பி வைத்தாராம். நானோ "பட்டாம் பூச்சி விற்பவனை" நூலகத்தில் இருந்து எடுத்துப் படிக்கக்கூடாது என்றும், எங்காவது காசு கொடுத்து வாங்கிப்படிக்க வேண்டுமென்று முடிவு செய்து கொண்டேன்.

சிங்கப்பூர் வானொலி 96.8ன் நேர்காணல் முடித்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு ராத்திரியின் 11 மணியில் அந்தக் கவிதை பற்றி முத்துக்குமாரிடம் கேட்டேன். மெலிதாக சிரித்தபடி பாலச்சந்தர் அதைப் படித்துவிட்டு 500 ரூபாய் அனுப்பி வைத்த கதையைச் சொன்னார்.

புகழ் பெற்ற அவரது "தூர்" கவிதையை அவரது குரலில் கேட்க வாய்த்தது. ஒரு ஆழ் கிணற்றிலிருந்து மேல் எழும்பி வருவது மாதிரியான குரலில் அந்தக் கவிதை சோடியம் விளக்குகளின் ஓட்டதின் மத்தியில் நெஞ்சில் சோகம் அப்பிச் சென்றது.

மறுநாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்த பெரிய கூட்டத்தில் தரமான தமிழ் மற்றும் உலகக் கவிதைகளை அடையாளம் காட்டி அற்புதமாகப் பேசினார் கவிஞர் நா.முத்துக்குமார்.

கூட்ட முடிவில், நண்பர் பனசை நடராஜன் அருகில் வந்து என் காதில் கிசுகிசுத்தார் ...

" நா.முத்துக்குமார் கொண்டு வந்த புஸ்தகமெல்லாம் விற்றுப் போச்சாம். இன்னும் ஏதாவது புஸ்தகம் இருக்கா?"

10 comments:

சாணக்கியன் said...

நா.முத்துக்குமாரின் கவிதைகள் எளிமையான வசீகரம் கொண்டவை. அவர் திரைத்துறையில் புகழ் பெரும் முன்னரே ஆனந்தவிகடனில் படித்த ஓர் கவிதை அவர் பெயரை என் நினைவில் நிறுத்தியது..

நள்ளிரவில் அண்ணா சாலை
நியான் விளக்குகளை ரசிக்க முடியவில்லை
பஞ்சரான வண்டியுடன் நான் !

- யெஸ்.பாலபாரதி said...

போதாது... மணி... போதாது...
நா.முத்துக்குமாரின் நிகழ்வு குறித்து இன்னும் விரிவாய் எதிர்பார்த்தேன்.

:-(

பாலு மணிமாறன் said...

சமீபத்தில் சிங்கப்பூரில் நிகழ்ந்த எந்த தமிழ் நிகழ்வுக்கும் இல்லாத அளவு பெரிய கூட்டம் என்பதை மட்டும் இப்போது சொல்ல முடிகிறது பாலா. 100 முதல் 200 பேர் வரை நிகழ்ச்சி முழுக்க நின்று கொண்டே பார்த்தார்கள். அதைப்பற்றிய விரிவான பதிவை, புகைப்படங்களுடன் விரைவில் தருகிறேன்.

நேற்று மலேசியாவின் கிள்ளான் நகரில் நமது வேண்டுகோளை ஏற்று நண்பர் பாலகோபாலன் நம்பியார் கவிஞருக்கு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் நிறைவாகவும், நெகிழ்வாகவும் இருந்ததாகதொலைபேசி வழி சொன்னார் நா.முத்துக்குமார். இன்றும் கோலாலம்பூர் டத்தோ சோமா அரங்கில் கவிஞருக்கு ஒரு கூட்டம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர், நண்பர், ராஜேந்திரன் ஏற்பாட்டில் நடக்கிறது.

நல்ல கவிஞர்களை, மனிதர்களை, உலகம் முழுவதும் அடையாளப்படுத்திக் கொண்டே இருப்பது அவசியம். சிங்கப்பூர், மலேசியாவில் அது, நம்மால் முடிந்தது. ஆனால், தமிழ் உலகம் அதையும் தாண்டி விரிந்து கிடக்கிறது....

பாலு மணிமாறன் said...

நன்றி சாணக்கியன்.

நா.முத்துக்குமாரும் கூட, எளிமையான, பக்கத்து வீட்டுக்கவிதை மாதிரிதான் இருக்கிறார். அதுதான் அவரது பலம் என்று நினைக்கிறேன்.

ஜோ/Joe said...

பாலு,
முத்துக்குமாரை அழைத்து வந்ததற்கு நன்றி.ஆனால் 2.30 மணி நேரம் நிகழ்ச்சி நடத்தி விட்டு ,ஏதோ கல்யாணத்துக்கு கடைசி நிமிடத்தில் அவரச தாலி கட்டுன மாதிரி வெறும் கடைசி 35 நிமிடம் மட்டும் அவசர கோலத்தில் அவரை பேச வைத்தது மிகுந்த ஏமாற்றத்தை மட்டுமல்ல ,எரிச்சலையும் கொடுத்தது .நிறைய சொல்ல நினைக்கிறேன் .பரவாயில்லை .அடுத்த முறை இது போன்ற நிகழ்ச்சிகளை இன்னும் திட்டமிட்டு செய்ய வேண்டுகிறேன்.

Unknown said...

இன்றைய பாடலாசிரியர் நா.முத்துகுமாரை ஒரு கல்லூரி மாணவனாய் சில வருடங்களுக்கு முன அதாவது 1996 - 1999 காலக்கட்டத்தில் பலக் கவியரங்குகளில் அருகிலிருந்துப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததுண்டு....
இன்று அவர் தமிழ் உலகம் போற்றும் ஒரு கவிஞராய் இருப்பது மிக்க மகிழ்ச்சி.
1996 அல்லது 1997 என்று நினைக்கிறேன்... சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரி கவியரங்கில்
முழு அரங்கமும் பெண்களால் நிரம்பி வழிய....
முத்துக்குமார் தன் வழக்கமான பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம் சொல்லி தன் கவிதையை வாசிக்க ஆரம்ம்பிக்கும் தருணத்தில்....அரங்கம் மொத்தமும் 'ஓ' போட....
கவிஞர் கொஞ்சமும் அசராமல் அந்த 'ஓ' விற்கு ஓன்மோர் கேட்டது இன்னும் என் ஞாபகப் பக்கங்களில் பசுமையாக உள்ளது....

பாலு மணிமாறன் said...

Nice memories DEV... I too saw Naa. Muthukumar as a man confident about himself.

I am sure that he will end up as one of the legends of Tamil Movies ( it may sound ambitious - But , he has got that talent and passion to acheive it )

பாலு மணிமாறன் said...

I do agree with you JO.... its a mistake on my part... some times you have to be strong and strict with people as an organizer...

It looks i am soft hearted : ))))

பாலு மணிமாறன் said...

I do agree with you JO.... its a mistake on my part... some times you have to be strong and strict with people as an organizer...

It looks i am soft hearted : ))))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நா. முத்துகுமார் அருமையான கவிஞர் என்பதில் எந்த அளவிலும் சந்தேகமில்லை நண்பா..

ஆரம்பநிலை கவிஞர்களின் முதல் நிலை இப்படித்தான் இருக்கின்றது. பின்னர்தான் தன்னுடைய கவித்திறமையைக் கொண்டு அவரவர்கள் முன்னுக்கு வரவேண்டிதுதான்.

நா.முத்துக்குமார் எழுதிய அந்த வரிகளை நானும் படித்துவிட்டு மனம் வருத்தப்பட்டிருக்கின்றேன். அந்த வரிகளில் டினக்கு கவித்துவம் தெரியவில்லை..மனதில் உள்ள வலியை அப்படியே காகிதத்தில் எடுத்து வைத்திருக்கிறார்.

ஆனால் பொதுவான பார்வைக்கு வருகின்ற பொழுது இதுபோன்ற வரிகளை தவிர்த்திருக்க வேண்டும். அவரது காயத்தை சொல்லுகிறார் சரிதான். ஆனால் வார்த்தைகள் மட்டுமல்ல அந்த வரிகளில் தமிழும் - முத்துக்குமாரும் அசிங்கப்பட்டு நிற்கின்றனர்.
அன்புடன்

ரசிகவ் ஞானியார்