Wednesday, February 15, 2006

மத்தியப் பார்வைகள்

மதிய நேரத்தில்
புளோக் தாண்டி
எட்டு வைப்பவர்களை
விட்டு வைக்குமா வெப்பம்?

தாய்லாந்து தொப்பிக்காரனின்
இயல்புக்கை எந்திரக்கையாகி
ஓசையிட்டாலும்
அண்ணாந்து பார்த்திருக்கும்
சிரச்சேதப் புற்களிடம்
காந்திய மெளனம்.

வியர்த்த
வியட்னாமிய இளைஞனுக்கு
எஸ்பிஎஸ் பஸ்ஸின்
இதமான குளிரிலிருந்து
பரிவுப்பார்வை நீட்டல்
சாத்தியமாகிறது.

புளோக் தாழ்வாரத்தில்
முழங்கால் நீவும்
சீனக்கிழவியின் பார்வையில்
இன்னும் சாதிக்க
ஏதோ ஒரு இலக்கு!

தூரத்து உணவகத்தில்
பீர்போத்தல் தனிமையில்
அருகில் கார் கழுவும்
இந்தோனேசியப் பணிப்பெண்ணின்
வெளுத்த கால்களைப்
பார்வையில் கழுபவன்
கிழவனா?
தெரியவில்லை.

மதிய நேரத்தில்
புளோக் தாண்டி
எட்டு வைத்தவர்களை
சுட்டு வைத்தது வெப்பம்!

6 comments:

குழலி / Kuzhali said...

இரண்டு நாட்களாக அதிகமாக அடிக்கும் வெப்பம் கவிதை எழுத வைத்துள்ளது போல இருக்கு..

பாலு மணிமாறன் said...

அதெப்படி கண்டுபிடிச்சீங்க? :)))

இது - ரெண்டு வருஷத்துக்கு முன்னால் அடிச்ச ஒரு பெரு வெயிலின் மதியத்தில் புலம்பியது !!!! : )))

Unknown said...

பாலு அங்கிட்டு வெயில் அதிகமா?
கவிதையோட இணைய முடியவில்லை.. காரணம் வேற்று சுழல். ஆனால் அதையும் மீறி வாசித்த நொடிகளில் ஏசி அறைக்குள்ளும் லேசா வியர்ர்த்துப் போச்சுங்கோ

Anonymous said...

குழலி சொன்ன நேரம் இப்போ மேனமூட்டமா, இடி இடிக்கிற மாதிரி இருக்கே :)

பாலு மணிமாறன் said...

தேவ்...உங்கள் உணர்வு புரிகிறது.

ஆனால் சில சமயம், தாய்லாந்துக்காரர்கள், வியட்னாமியர், இந்தோனேஷியர்கள், மலேசியர்கள் என நாங்களிருக்கும் பல் இன கலாச்சாரச்சூழல் இப்படிப்பட்ட தமிழ்ப்பதிவுகளை தேர்ந்தெடுத்து விடுகிறது.

உலகம் சுருங்கி வரும் தற்காலச்சூழலில், நம் சூழலுக்கு அந்நியப்பட்டு நிற்கும் கவிதைகளை, பதிவுகளை படிக்கிற அல்லது பார்க்கிற வாய்ப்புகள் உங்களுக்கு இனி அடிக்கடி நிகழக்கூடும்!!!

எதற்கும் தயாராயிருங்கள் : ))

பாலு மணிமாறன் said...

Mr. or Ms.Anonymous ...


:)))